காவலர் தினம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2024
பார்வையிட்டோர்: 80 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தொப்பையில்லாத போலீஸ்காரரைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம், மீசையில்லாதப் போலீசைப் பார்த்திருக்கிறீர்களா?

நான் பார்த்தேன்!

கோடம்பாக்கம் மேம்பாலத்தின் தொடக்கத்தில், சாலையோரமாய் நின்றிருந்த அந்தப் போலீஸ்காரரிடம் இன்னொரு விசேஷம், அவருக்குத் தொப்பை கூட இல்லை!

சிகப்பாய், பளபள முகத்தோடு வாட்டசாட்டமாய் சினிமா ஹீரோ மாதிரி & அதாவது, ஹிந்தி ஹீரோ மாதிரியான தோற்றத்திலிருந்த வித்யாசமான அந்தப் போலீஸ்காரர் கன்னாபின்னாவென்று என் கவனத்தை ஈர்த்தார். க்ளோஸ் அப்பில் அவரைப் பார்க்க வேண்டும், ரெண்டு வார்த்தை அவரோடு பேச வேண்டுமென்று ஆசை எழுந்தது.

ரா மாதிரியான தோற்றத்

பாலத்துக்குப் பக்கவாட்டுச் சந்தில் பாதுகாப்பாய் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, மெல்ல அவரைச் சமீபித்தேன். உரையாடலை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, போலீஸ்காரர் என் பக்கம் திரும்பினார். மேலும் கீழும் என்னைப் பார்த்துவிட்டு, “சார், இங்க நிக்கக் கூடாது. நடந்துக்கிட்டே இருங்க. ஸி எம் வர்ற நேரம்” என்றார்.

ஆரம்பமே சரியில்லை. சரி, அதற்காக மனந்தளர்ந்து விடுவதா? “எத்தன மணிக்கி சார் வர்றாங்க ஸி எம்?” என்றேன்.

உன் கேள்விக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டவனில்லை என்பது போலத் திரும்பவும் என்னை ஒரு பார்வை பார்த்தார். பிறகு பார்வையைத் திருப்பிக் கொண்டார்.பலப் பல விநாடிகள் கடந்த பின்னாலும் நான் நகராமல் நின்று கொண்டிருக்க, திரும்பவும் அவர் பார்வையை என்மேல் ஓடவிட்டார்.

“ஸி எம் பத்து மணிக்கி வருவாங்க சார், இன்னும் ஒரு அவர் இருக்கு. அது வரைக்கும் நீங்க இங்கேயே நின்னுட்டிருக்கப் போறீங்களா சார்?”

“நீங்க தனியா நிக்கறீங்க, நா கம்ப்பெனி குடுக்கறேனே சார்” வேறயொரு மாமூல் போலீஸ்காரராயிருந்தால் என்னுடைய இந்த விதண்டாவாதத்துக்கு எரிச்சலடைந்திருப்பார்.

ஆனால் இவர் ஒரு விசேஷமான போலீஸ்காரர் என்று நான் உணர்ந்ததால், இவரிடம் உரிமை எடுத்துக் கொள்ளலாம் என்று என் அந்தராத்மா சொல்லிக் கொண்டிருந்தது. நான் உணர்ந்தது சரிதான். போலீஸ்காரர் சிரித்தார்.

“எனக்குத்தான் தலையெழுத்து, ஒரு அவரா நிக்கிறேன். இன்னும் ஒரு அவரோ ரெண்டு அவரோ நின்னுதான் ஆகணும். ஒங்களுக்கென்ன சார் தலையெழுத்து? இப்ப ஏஸி வருவார் சார், மூவ் பண்ணுங்க, ப்ளீஸ்.”

நான் அசராமல் ஒரு துருப்புச் சீட்டை எடுத்து விட்டேன். “ஒங்க ஏஸிய எனக்குத் தெரியும் சார், கவலையே படாதீங்க. என்னப் பாத்தா விஷ் பண்ணிட்டு அவர் போய்க்கினே இருப்பார்.”

இந்த முறை நான் சொன்னதை அவர் ரசித்த மாதிரியிருந்தது. கண்களில் பிரகாசம் தெரிந்தது. “வெயில்ல காயணும்னு ஒங்களுக்கும் இன்னிக்கி விதிச்சிருந்தா யார் என்ன செய்ய முடியும்! நில்லுங்க. ஜீப் ஏதும் கண்ணுல பட்டா மட்டும் கொஞ்சம் நகந்துக்குங்க சார், நல்லாயிருப்பீங்க.”

“ஒங்கள சங்கடப்படுத்த மாட்டேன். ஒண்ணுமில்ல சார், இந்த வழியா ஸ்கூட்டர்ல போய்ட்டிருந்தேனா, நீங்க கண்ணுல பட்டீங்க. தொப்பையில்லாம, மீசையில்லாம கவர்ச்சியா, ஒரு இம்போர்ட்டட் கான்ஸ்டபிள் மாதிரித் தெரிஞ்சீங்க. ஸோ, ஒங்களப் பாக்கணும், பேசணும் போல இருந்தது.”

“எக்ஸஸ்ஸைஸ் பாடி சார் இது. எல்லாக் கான்ஸ்டபிள்களும் ஆரம்பத்துல என்னப் போல ட்ரிம்மாதான் இருப்பாங்க. அப்பறம் ஒடம்ப கவனிக்காம விட்டிர்றாங்க.”

“நம்ம நாட்லதான் சார் இப்படி. பத்திரிகைல போலீஸ்காரங்கப் படம் போடற போதெல்லாம் தொப்பையத் தள்ளிக்கிட்டுத்தான் கிண்டலாப் போடறான். அப்பவும் இவங்களுக்கு ரோஷம் வர்றதில்ல பாருங்க. ஐ.பி.எஸ். அதிகாரிங்களெல்லாம் ஸ்மார்ட்டாத்தான் இருக்காங்க. இன்ஸ்பெக்டருக்குக் கீழ தான் இப்படி. அஸிஸ்ட்டன்ட் கமிஷனர் சைலேந்திரபாபு எங்க ரோட்டரி கிளப்புக்கு வந்தப்ப அவர்ட்டயே நான் இதச் சொன்னேன்.”

“நெஜம்மாவே ஏஸிய ஒங்களுக்குத் தெரியுமா சார்?”

“அட! அத வுடுங்க. இன்னிக்கி ஒரு ஸ்மார்ட்டான கான்ஸ்ட்ட பிளப் பாத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். இன்னொரு விஷயம், கேட்டாத் தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே சார். தொப்பையில்லாத வித்யாசமான கான்ஸ்டபிளா இருக்கீங்க சரி. மீசையில்லாம இன்னும் வித்யாசமான கான்ஸ்டபிளா இருக்கீங்களே?”

மீசையைப்பற்றி நான் கேட்டவுடன் அவருடைய முகத்தில் இருந்த பிரகாசம் குன்றிப் போனது.

“ஸாரி சார், நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே வயசுதான் இருப்போம். அதனால கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டேன், ஸாரி” என்று சமாளித்தேன்.

“நீங்க கேட்டதுல ஒண்ணும் தப்பேயில்ல சார். மீசையப் பத்திச் சொன்னதும் என் தங்கச்சி ஞாபகம் வந்துருச்சு. இன்னிக்கி அவளுக்கு இஞ்ஜினியரிங் கவுன்ஸிலிங். பத்தர மணிக்கி அண்ணா யுனிவர்ஸிடில இருக்கணும். அதுக்காக இன்னிக்கி பர்மிஷன் போட்டேன். திடீர்னு பர்மிஷன் கான்ஸல் ஆயிருச்சு. போலீஸ்காரன் பொழப்பு எப்படி இருக்கு பாருங்க!”

அவருடைய வருத்தம் என்னையும் பாதித்தது. “ஸிஸ்டரக் கூட்டிட்டுப் போறதுக்கு வீட்ல வேற யாரும் இல்லியா சார்” என்று கேட்டேன். “ஒங்க அப்பா, அண்ணன் யாராவது?”

“அண்ணனெல்லாம் கெடயாது சார். நா ஒரே பையன். அப்பாவால நடமாட முடியாது. அப்பாவுக்குத் தொணையா என் சம்சாரம் வீட்ல இருக்கணும். எங்கப்பா ரயில்வே போர்ட்டரா இருந்தார். அடுத்த தலைமுறை நா போலீஸ் கான்ஸ்ட்ட பிள். எனக்கு அடுத்த தலைமுறை என்னோட தங்கச்சி. அவள இஞ்ஜினியராக்கணுங்கறது என்னோட லட்சியம்.”

“ஒங்கத் தங்கச்சியும் நீங்களும் ஒரே தலைமுறைதானே சார்.”

“அப்படி இல்ல சார். சின்ன வயசுலயே அம்மா போய்ட்டாங்க. அப்பாவாயும் அம்மாவாயும் இருந்து வளத்தேன். என் தங்கச்சி எனக்குக் கொழந்த. ஒங்கள மாதிரி எனக்கும் மீசை மேல ஆசை உண்டு. ஆனா, என் ஸிஸ்டர் இஞ்ஜினியர் ஆக்கிட்டுத்தான் மீசை வச்சிக்கிறதுன்னு ஒரு சபதம் எடுத்துருக்கேன். என்ன சபதம் எடுத்து என்ன சார், என் நெலமையப் பாத்திங்களா சார்? ப்ளஸ் ட்டூ வரைக்கும் வெற்றிகரமாய் படிக்க வச்சிட்டுக் கடைசில காலேஜ் லெவல்ல கோட்ட விட்டுட்டேன். ஃபுட் பால் மாட்ச்ல ஒரு ப்ளேயர் கோல் போஸ்ட்லயிருந்து பல தடைகளக் கடந்து பந்தக் கடத்திக்கிட்டு வருவான். எதிரி கோல் போஸ்ட்டுக்குள்ள பந்த அடிக்கப் போற போது கோட்ட விட்டுருவான். அந்த மாதிரிதான் இது.”

“அப்படி இல்ல சார் இது” என்று மறுப்புத் தெரிவித்தேன், ஒரு உறுதியான முடிவுக்கு வந்திருந்த நான்.”அந்த ப்ளேயர் பந்தக் கோட்ட விட்டுட்டதா நெனச்சிட்டிருக்கறப்ப எங்கேயிருந்தோ பாஞ்சு வருவார் ஒரு பத்தாம் நம்பர் மரடோனா. வந்து, பந்தக் கைப்பத்தி, அல்லது கால்பத்தி, டமால்னு கோல் அடிப்பார். சார், இப்ப நாந்தான் ஒங்களுக்கு மரடோனா. நீங்க சரின்னு சொல்லுங்க. அட்ரஸ் குடுங்க. நா போய் ஸிஸ்டரப் பிக்அப் பண்ணிக்கிட்டு கவுன்ஸிலிங்குக்குக் கூட்டிட்டுப் போறேன். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.”

“சார், நெஜம்மாவா சொல்றீங்க!” என்று என் கைகளைப் பற்றிக் கொண்டார்.

“நீங்க யார்னு எனக்குத் தெரியாது, நா யார்னு ஒங்களுக்குத் தெரியாது.”

“இனிமே தெரிஞ்சுக்குவோம் சார். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க, அட்ரஸக் குடுங்க.”

பரபரப்போடு தன்னுடைய டைரியிலிருந்த ஒரு தாளைக் கிழிந்தார். தாளின் ஒரு பக்கத்தில் முகவரியும், மறுபக்கத்தில் தன் தங்கைக்கு ஒரு குறிப்பும் அவசரமாய் எழுதி என் கையில் வைத்துப் பொத்தியபோது அவருடைய கண்கள் ஈரத்தால் பளபளத்தன.

சுறுசுறுப்பாய் செயல்பட்டேன் நான். முகவரியை நெட்டுரு போட்டுக்கொண்டு ஸ்கூட்டரைக் கிளப்பிக் கொண்டு வீட்டைக் கண்டுபிடித்து விஷயத்தைச் சொன்னது, சோர்வாயிருந்த அந்த வீட்டு மூவர் முகத்திலும் மலர்ச்சியைத் தந்தது.

அண்ணனை எந்த நேரத்திலும் எதிர்பார்த்திருந்து, அவர் வராது நேரம் கழியக் கழியக் கலவரத்திலிருந்த தங்கை, அவருடைய குறிப்பைப் படித்துவிட்டு என்னை நோக்கிக் கை கூப்பினாள்.

“தெய்வம் மாதிரி வந்திருக்கீங்க சார். ரொம்ப நன்றி சார்.”

“இந்த சார், மோர் எல்லாம் வேண்டாம். நானும் ஒரு அண்ணன் தான். கௌம்புங்க, டைம் ஆச்சு.”

அவள் ஸ்கூட்டரின் பின்னால் தொற்றிக் கொள்ள, த்ராட்டிலை முறுக்கோ முறுக்கென்று முறுக்கி, சரியான நேரத்தில் பல்கலைக் கழகத்தை அடைந்தோம்.

அங்கே …. இழுஇழுவென்று இழுத்த கவுன்ஸிலிங் ஒரு முடிவுக்கு வர மூணு மணி ஆகிவிட்டது. அங்கே காத்திருந்த மக்களெல்லாம் கான்ட்டீனில் என்னென்னமோ வாங்கித் தின்றார்கள்.

இன்றைக்கு ஒரு புண்ணிய காரியம் பண்ணியிருக்கிறோம் என்கிற இறுமாப்பில் எனக்குப் பசியே தெரியவில்லை.

கவுன்சிலிங் முடிந்து சிரித்த முகத்தோடு வெளியே வந்தவள், “நா கேட்ட காலேஜ் கெடச்சிருச்சி சார். ஒங்களுக்குத்தான் சார் தாங்ஸ் சொல்லணும்.” என்று கரங்குவித்தாள்.

“ஐயையோ, எவ்வளவு லேட் ஆயிருச்சு சார். என்ன விட்டுட்டு நீங்க போயிருக்கலாமே சார்.”

“இப்படி வார்த்தக்கி வார்த்த சார் போட்டுப் பேசினீங்கன்னா ஸிஸ்டர், இப்படியே விட்டுட்டு நா போயிருவேன்.”

“ஐ”ம் ஸாரி சார். ஐ மீன், ஐ”ம் ஸாரி அண்ணா” முகம் மலர்ந்து சிரித்தாள்.

கான்ட்டீனில் ஏதாவது சாப்பிடலாமா என்றால், வேண்டாம் அண்ணியும் அப்பாவும் காத்திருப்பார்கள் வீட்டுக்குப் போய்விடலாம் என்றாள்.

வீட்டில், ஊட்டி விடாத குறையாய் உபசரிப்பு எனக்கு. அடிக்கடி வந்து போக வேண்டுமென்றார்கள். குடும்பத்தோடு வரவேண்டும் என்றார்கள். அட்ரஸும் ஃபோன் நம்பரும் வாங்கிக் கொண்டார்கள். அண்ணனுக்கு ஓய்வு கிடைக்கிற போது எல்லோரும் அண்ணா நகருக்கு, என் வீட்டுக்கு வருவதாய்ச் சொன்னார்கள். நீங்க கோடியில் ஒருத்தர் என்று சொல்லி என்னை சங்கடப்படுத்தினார்கள்.

அவர்களிடமிருந்து ஒரு வழியாய் விடுபட்டு, ஸ்கூட்டரைக் கிளப்பினேன். இன்றைய நிகழ்ச்சிகளை நம்ம வீட்டுக்காரம்மாவிடம் சொன்னால், புளகாங்கிதத்தில் திக்குமுக்காடிப் போவாள். வீட்டை அடைந்த போது என்னமோ சம்திங் ராங் என்கிற மாதிரி நெருடியது.

ஸ்கூட்டர் சத்தம் கேட்டதும் வரவேற்க வாசலுக்கு வருகிறவள் இன்றைக்கு மிஸ்ஸிங். கதவு திறப்பது தெரிந்தது. திறந்து விட்டு விட்டு, மெல்ல உள்ளே போய்விட்டாள். மூளை முழுக்கப் புதிர்களோடு உள்ளே பிரவேசித்தேன். என்னமோ கோபமாயிருக்கிறாள். பனிக்கட்டி ஆயுதத்தைப் பிரயோகிக்கலாம்.

“டாளிங்!”

“ம்ம்.”

“வீட்ல இன்னிக்கி என்னமோ விசேஷம் போலத் தெரியுதே?”

“விசேஷந்தான், இன்னிக்கி என்ன நாள்?”

“செவ்வாக் கெழம்.”

“தேதி?”

“இருவத்தி நாலு. ஏன்?”

“இன்னிக்கி நீங்க ஆஃபீஸ்க்குப் போகலியா?”

“இன்னிக்கி லீவ் போட்ருக்கேன்ல?”

“எதுக்காக சார் லீவ் போட்டீங்க?”

“எதுக். யேய், இன்னிக்கி நம்ம குட்டிப் பயலுக்கு எல்.கே.ஜி. அட்மிஷன்ல? ஐயையோ டைம் என்ன இப்போ?”

“ம்? ஸ்கூல் மூடற டைம். அட்மிஷன்லாம் முடிஞ்சி போச்சு. ஒங்கள நம்பிட்டிருந்தா அம்போதான். எங்க போய்ட்டு இந்நேரத்துக்கு வர்றீங்க. யார் யாரோ செல்ஃபோன் வச்சிருக்காங்க, நீங்க ஒரு செல்ஃபோன் வாங்கிக்கக் கூடாதா? நா இன்னிக்கி எவ்வளவு தவிச்சிப் போய்ட்டேன் தெரியுமா?”

“ஐயையோ, ரொம்ப ரொம்ப ஸாரிம்மா. எப்படி நா மறந்தேன்னே தெரியல. ஆனா, நா இன்னிக்கி ஒரு ரொம்ப நல்ல காரியம் பண்ணிட்டு வந்திருக்கேன், கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவ. அத அப்பறம் சொல்றேன். நீ எப்படி சமாளிச்ச சொல்லு. கோச்சுக்காம சொல்லு.”

“ஒங்களக் கோச்சுக்க முடியுமா, நீங்க என்னோட ப்ரின்ஸ் ச்சாமிங் இல்லியா! இன்னிக்கி நா ஒரு அட்வெஞ்ச்சர் பண்ணியி ருக்கேன் தெரியுமா?”

“நீயுமா?”

“கேட்டா ஆச்சரியப்பட்டுப் போவீங்க.”

“சொல்லு சொல்லு.”

“மூணு மணிக்கி ஸ்கூல்ல இருக்கணும். மணி ஒண்ணாச்சு, ஒண்ணரையாச்சு, ரெண்டாச்சு, ரெண்டரையாச்சு, ரெண்டே முக்காலும் ஆயிருச்சு, நீங்க வரல. சரி இனிமே லேட் பண்ண முடியாதுன்னு, இவனயும் கூட்டிக்கிட்டு, வீட்டப் பூட்டிக்கிட்டு கௌம்பிட்டேன். பஸ்ல போக டைம் இல்ல. அவசரத்துக்கு ஒரு ஆட்டோவும் கெடக்கல. என்னடா செய்யறதுன்னு தடுமாறிட்டு ரோட்ல நிக்கிறேன். அப்ப அந்த வழியா வந்தது ஒரு போலீஸ் ஜீப். வர்றது வரட்டும்னு கைய நீட்டினேன். ஜீப் நின்னுச்சு. விஷயத்தச் சொன்னேன். வண்டி அந்த வழியாப் போனா என்னயும் என் ஸன்னயும் டிராப் பண்ண முடியுமான்னு கேட்டேன். ஏறுங்கன்னாங்க. கரெக்ட்டா மூணு மணிக்கி ஸ்கூலுக்குப் போய்ச் சேந்தாச்சு.”

“ஆச்சர்யமா இருக்கும்மா!”

“ஆச்சர்யம் இன்னும் இருக்கு, கேளுங்க. வேல முடிஞ்சி நாங்க வெளிய வர்றோம், வாசல்ல அதே ஜீப் நிக்கிது. ஏறிக்குங்க ஸிஸ்டர்ன்னார் அந்த இன்ஸ்பெக்டர். வந்து, நம்ம வீட்டுக்கு வாசல்ல எறக்கி விட்டுட்டுப் போனாங்க. ஒங்கக் குட்டிப் பயலுக்கு ஒரு காட்பரீஸ் சாக்லட் வேற! அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப நல்ல டைப்ங்க. நீங்க ஸ்டேஷன்ல போய் அவரக் கட்டாயம் பாருங்க.”

கண்களை மூடியபடி நான் சோஃபாவில் சரிந்திருந்தேன். நானும் என்னவளும் சம்பந்தப்பட்ட இரு வேறு நிகழ்ச்சி களுக்கிடையே இருக்கிற அதிசயமான தொடர்பினை நினைத்துச் சிலிர்த்துச் சரிந்திருந்தேன். உழைக்கிறவனின் வியர்வை உலரும் முன் கூலியைக் கொடு என்று முஹம்மது நபி சொன்னதாய்ப் படித்திருக்கிறேன். ஆனால், வியர்வை சுரக்க ஆரம்பிக்கு முன்பே பல மடங்காய்க் கூலியைக் கொடுக்க எல்லாம் வல்ல அவனால் மட்டுந்தானே முடியும்!

“என்னங்க தூங்கிட்டீங்களா” என்றாள்.

“இல்ல” என்றேன்.

“ஒங்க கதை என்ன, சொல்லுங்க” என்றாள்.

“ரெண்டும் ஒரே கதை தான்” என்றேன்.

– கவிதை உறவு – ஆண்டுமலர், ஜூன் 2006.

– ஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் (பகுதி-1). முதற் பதிப்பு: டிசம்பர் 2012, நிலாச்சாரல் லிமிடெட், சென்னை.

திருநெல்வேலிக்காரரான ஏ.ஏ.ஹெச்.கே.கோரி இப்போது வசிப்பது சென்னையில். ஜனரஞ்சகப் பத்திரிகைகளிலும், இலக்கியப் பத்திரிகைகளிலுமாக இதுவரை 200 ப்ளஸ் சிறுகதைகள் பிரசுரம் கண்டிருக்கின்றன. ஐந்து சிறுகதைத் தொகுதிகள். மெய்ன் காட் கேட் என்கிற சிறுகதைத் தொகுதியும், காதில் மெல்ல காதல் சொல்ல என்கிற நாவலும் 2009ல் வெளியாயின. மாம்பழ சாலை என்கிற ஆறாவது சிறுகதைத் தொகுதியும், சிரிக்கும் நாளே திருநாள் என்கிற நாவலும் 2011ல் வெளியாகவிருக்கின்றன. 2009ம் வருஷம் கல்கி மற்றும் கலைமகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *