காவற்காரர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 152 
 
 

(1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுப்பன் இந்தப் பக்கம், குப்பன் அந்தப் பக்கம்; இடுப்பில் வாளுடன், கையில் வேலுடன். உள்ளே ராஜாதிராஜ ராஜ மார்த்தாண்ட மகாராஜா சயனம். ஒரு தேவியுடனோ இல்லையோ என்பது சுப்பனுக்கும் குப்பனுக்கும் தெரியாது. இவர்கள் ராஜாவுக்குக் காவலே தவிர அவன் செய்வது எல்லாவற்றிற்குமல்ல.

சுப்பன் இந்த இரவு வேளையில் காவல் நேரத்தில் தன்னுடைய நாலாவது பிள்ளையைப் பெற்றெடுக்க…இல்லை ஈன்றெடுக்கப் போயிருக்கிற தன் பெண்சாதியைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருக்கிறான். நேரவேளை யாதொன்றும் தெரியாமல் இந்த நேரத்தில் அவன் முதுகில் ஓர் எறும்பு அரிக்கிறது. வேலை எறிந்துவிட்டு முதுகு சொறிய வேண்டும் போல இருக்கிறது. காவல் நேரத்தில் சுண்டுவிரலைத்தானும் அசைக்க முடியாதே!

எதிரில் நிற்கும் குப்பன் ஒரு கட்டைப் பிரம்மச்சாரி. ஆனதால், கடமை அல்லது வேலைதான் இந்த உலகத்திலேயே மிகப் பிரதானமானது; விறைப்பாக நிற்கிறான். “இந்தச் சுப்பனைப் பார், கண்ணை அடிக்கடி திறந்து, மூடிக்கொண்டு நிற்கிறான். ராஜ விசுவாசமில்லாத பயல்….” என்று மனதில் சுப்பனைத் திட்டிக்கொண்டு நிற்கிறான்.

மற்றது, இது சாதாரண சமயமில்லை . இந்தக் கோட் டைக்கு வெளியே இன்னொரு ராஜாதிராஜ ராஜமார்த் தாண்ட மகாராஜா கூடாரத்தில் சயனம். சதுர்யுக படை வீரர்களுடன். அவனுக்கும் இரண்டு பேர் காவல்; இடுப்பில் வாளுடன், கையில் வேலுடன். இந்த ராஜா அந்த ராஜாவின் எதிரி. படையெடுத்துக்கொண்டு வந்திருக்கிறான். தனக்குப் பிற்காலத்தில் பேராசிரிர்கள் பல பேர் – அதிலும் விசேஷமாக கலாநிதி 1ம் கலாநிதி 2ம் தன்னைப் பற்றிச் சண்டை பிடிப்பார்கள் என்று அவனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால்…

இந்தக் கலாநிதிகளுக்குக் குப்பனைப் பற்றியோ அல்லது சுப்பனைப் பற்றியோ ஒன்றும் தெரியாது. தெரிய வேண்டிய தில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கலாநிதி 2 இந்த மன்னர்களின் காவற்படை வீரர்களைப் பற்றி – அவர்கள் எவ்வாறு தெரியப்பட்டார்கள்? – என்ன சாதி?- மாதத்திற்கு எத்தனை அவணம் நெல்? – என்பவை களைப் பற்றியெல்லாம் விஸ்தாரமாக ஒரு சரித்திர ஏட்டில் நிரவல் பண்ணியிருக்கிறார். இருந்தாலும் குப்பனைப் பற்றியோ சுப்பனைப் பற்றியோ ஒன்றுமே சொல்லவில்லை. கலாநிதி இன் ஆராய்ச்சி விஷயங்களுக்குள் காவற்படை வீரர்களே இன்னும் விழவில்லை. குப்பனும் சுப்பனும் எப்படி விழுவார்கள்?

அது கிடக்க, சுப்பனுடைய இந்தக் கணத்து யோசனை…. “சே! என்ன இழவு ! இந்த நாசமாய்ப்போன எறும்பு முதுகு பூரா ஊர்கிறது. வைத்தியன் என்ன இழவை அவளுக்குக் கொடுக்கிறானோ…?”

பிள்ளைகள் தன் வயதான தாயைப் பிய்த்துப்பிடுங்கும் ஒரு காட்சியும் மனதில் ஓடுகிறது.

“… அரிசி ஒரு மணிகூட இல்லை . நாசமாய்ப் போன தேசம், இதற்கு நாசமாய்ப் போன ஒரு ராஜா. நாசமாய்ப் போன ஒரு காவற்படைத் தலைவன்…”

ஏன் இரண்டு, இரண்டு பேராய்க் காவலுக்கு விடுகிறார் கள் என்பது இப்போதுதான் அவனுக்கு விளங்கியது.

“… தனியே இருந்தால் ராஜாவைத் தொலைத்துவிடமாட்டேனா …?”

பல்லைக் கடிக்க வாயெடுத்தவன், அந்த ‘மடையன்’ குப்பனைப் பார்த்து – அவன் தன்னைப் பார்க்கும் கொடூரப் பார்வையைப் பார்த்து அடக்கிக்கொண்டான்.

“முதலில் இவனைக் கொல்ல வேண்டும்….”

சுப்பனுக்கும் குப்பனுக்கும் நெடுகவே தகராறு. குப்பனுக்குத் தான் ஓர் அசாத்திய ராஜவிசுவாசி என்கிற இறுமாப்பு உண்டு. மற்ற சேவகர்களைப் பார்த்து, ‘என்ன கடமை செய்கிறீர்கள்?’ என்ற நோக்குடனும் பேச்சுடனுமே நடப்பான். இதை மற்ற சேவகர்கள் கிண்டல்’ பண்ணுவார்கள். ஆனால், சுப்பனுக்கு இந்த மாதிரியாகக் குப்பனைக் கிண்டல் பண்ணும் மனநிலை இல்லை. “இந்த மடையனுக்கு மற்றவர்கள் கஷ்டம் தெரிந்தால் தானே” என்று குப்பனைத் திட்டிக்கொள்வான்.

சுப்பன் வீட்டில் பெரும் திண்டாட்டந்தான். இந்த லக்ஷணத்தில் அவன் மனைவியும் ஒரு ராஜாங்க சேவகி சேனாதிபதி மாளிகையில் எடுபிடி வேலை. பேர்தான் ராஜாங்க சேவகமே தவிர, சுப்பனின் வயது போன தாய், தந்தை, அவன் குழந்தை என்று பல பேர், பல எதிர்பார்ப்பு களுடன் ‘சீவியத்தை நடத்துவதில் அவன் பாடு பெரும் திண்டாட்டம். நெல் மட்டுமட்டாக இருக்கிற நேரத்தில் போரும் வந்து தொலைந்துவிட்டது. காவற்படைத் தலைவன் நெல்லைக் கொடுக்க மெத்தப் பிணக்குப்படுவதனாலும், காய்கறி வரத்துக் குறைந்துவிட்டதனாலும் நெருக்கடி வயிறுவரை வந்துவிட்டது. குழந்தைகள் சுருண்டு படுத்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில்…. இவள் பிள்ளை பெறப்போகிறாள். அந்த வைத்தியன் ஒரு காற்பொன்னைக் கண்டால் தான் தன் பெட்டகத்தைத் திறப்பான். மற்ற வைத்தியர்கள் என்றால், இவன் பார்க்கிற ராஜாங்க உத்தியோகத்திற்கு மரியாதை பண்ணிக் கொடுப்பதை வாங்கிக் கொள்வார்கள். இவன் ராஜாங்க வைத்தியன். அவனுக்குத் தெரியாதா சுப்பனின் சேவகம்? அதையும் யோசித்துக்கொண்டான் சுப்பன்.

“எல்லாக் காவற்காரர்களும் ஒன்றுசேர்ந்தால் ராஜாங் கத்தை ஒரு நொடியில் தொலைத்துவிடலாம். சேருவார்களா.. மாட்டார்களே! ஏன்? இந்த மடையன் குப்பனை மாற்ற முடியுமா…? ராஜ விசுவாசமாம்… இவன், காவற்காரர்கள் ஒன்றுசேர்ந்து என்ன செய்தாலும் வரமாட்டான். ராஜாவுக்கு அடுத்தபடியோ அல்லது சமமோ என்கிற யோசனை மடைய னுக்கு. மந்திரி வீட்டில் பகலில் வேலை. இரவு காவல். நேரத்திற்குச் சாப்பாடு. பிள்ளையா – குட்டியா…? காவற்படைத் தலைவன் நெல்லைத் தருமட்டும் பார்த்துச் சீவிப்பது பற்றி இவனுக்கென்ன தெரியும்…? இவனை மாதிரி அநேகம் பேர் முழு மடையர்கள் இருக்கிறார்கள்…. எல்லோருக்கும் பிள்ளை குட்டிகள் இருந்து என்னை மாதிரிக் கஷ்டப்பட்டால் தெரியும்….. அந்தக்காலத்தில் என் பாட்டனின் பாட்டனும் இதே வேலைதான். சந்தோஷமாகத்தான் செய்து வந்திருக் கிறார்கள். ஹ – அந்தக் காலத்தில் ஓரவணம் நெல்லைக் கொடுத்து என்னென்ன வாங்கலாம்…..? சே! … போர் தொடங்குகிறது என்றாலே விலை ஏறிவிடுகிறது. போர் முடிந்து விலை இறங்க ஒரு மாமாங்கமாகிறது. விலை ஒருவழியாய் இறங்கி முடியத் திரும்பவும் போர் தொடங்குகிறது. இந்த வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து மறைமுகமாய் நின்று போரை நடத்து கிறார்களோ…? இழவு. எறும்பு கழுத்தில் ஊர்கிறது. இந்த நாசமாய்ப் போன குப்பன் எதிரில் இல்லாது போனால் எறும்பை எடுத்துத் தொலைத்துவிடலாம்…”

யோசித்துக்கொண்டே அரைக்கண்ணால் மண்டபத்தின் மூலையில் வாள், வேல் இவற்றுடன் காவலுக்கு நிற்கிற நாகனையும் வேலனையும் பார்த்துக்கொண்டான்.

“…நாகனும் வேலனும் அசல் ஆசாமிகள். விறைப்பாக நிற்கிறதில் குறைவைக்கவே மாட்டார்கள். ஒருத்தன் ஓடி வந்தால் போதும். இருக்கிறதை அப்படியே போட்டுவிட்டு ஓடுகிற வீரர்கள். தலைவனுக்கு அதை இதைக் கொடுத்து நாலு அவணம் கூடவே தட்டிக்கொண்டு போகிற சூரர்கள். அங்கே….! இரண்டு பேரும் காவல் நேரத்தில் வெற்றிலை போட்டுக்கொண்டு பாக்கைக் கடிக்கிற சத்தம் இங்கு மட்டும் கேட்கிறது… இங்கே என்னை வெற்றிலை போடக் குப்பன் விடமாட்டான். தலைவனிடம் சொல்லிக் கொடுத்துவிடுவான், நாசமாய்ப் போனவன். இவன் கொஞ்சம் விட்டுக்கொடுத்தால் எறும்பைத் தட்டி விடலாம். இடம் மாறும் போது பார்த்துக் கொள்வோம்…”

எறும்பு திரும்பவும் முதுகுப் பிரதேசத்தின் நட்டநடுப் பகுதியில் போய்ச் சேர்ந்துவிட்டது.

“நாளைக் காலை தலைவனிடம் கொஞ்சம் நெல்லைக் கேட்டுப்பார்க்க வேண்டும்….. அவள் என்ன செய்கிறாளோ?” இதற்கு அப்பால் அவனால் தெளிவாகச் சிந்திக்க முடிய வில்லை . நாகனும் வேலனும் தன் மனைவி சேனாதிபதி மாளிகைக்கு வேலைக்குப் போவதைப் பற்றிக் கொஞ்சம் இளக்காரமாகவே ஒருநாள் பேசியதை நினைவில் மீட்டுக் கொண்டான்.

“ஈனப்பிழைப்புக்காரர்கள்..” என்று திட்டிக்கொண்டான். “..இருந்தாலும் உதவி செய்வார்கள். இந்த இழவெடுத்த குப்பன் மாதிரியா..?”

இந்த நேரத்தில் மாமியார்க்காரியின் நினைவு வந்துவிட்டது. “ராசாத்தி மகளாம் தன் மகள். இங்கே எனக்கு வாழ்க்கைப் பட்டதில் அவலப் பிழைப்பாம். அங்கே கிராமத்தில் பண்ணையா ருக்குக் கால் கழுவுகிறது பாழ்போகிறது. இந்த லக்ஷணத்தில் எனக்குச் சொல்கிறாள். இங்கே நெல்லை நேரத்திற்குக் கொடுத் தால் என்னை வெல்ல யாரிருக்கிறார்கள்…? ஆ. எறும்பு இல்லை எறும்புகள்… மூலைத் தீவட்டியிலிருந்து பூச்சிகளும் என்னை நோக்கித்தான் பார்க்கின்றன. என் கஷ்டகாலத்திற்குத் தீவட்டி என்னருகில். குப்பனுக்கு இது விளங்குமா? தூரத்தில் நாகனும் வேலனும் வாயசைப்பது தெரிந்தது. வெற்றிலைதான்.”

குறைந்து கூடி எரிகிற தீவட்டி வெளிச்சத்தில் எதிரில் குப்பனின் கண்கள் பயங்கரமாக விழிக்கின்றன. அந்தக் கண் களைப் பார்க்கப் பயமாகவும் வெறுப்பாகவும் கோபமாகவும் இருந்தது, சுப்பனுக்கு. திரும்பவும் அவன் மனைவியைப் பற்றி யோசித்துக்கொண்டான். மனைவியை அந்த மாமியார்க் கிழவியைக் கூட்டிக்கொண்டு வைத்தியரிடம் போகச் சொன்னது மனதில் மின்னியது.

“சே! குப்பனின் கண்கள் என்ன கொடூரத்தைக் கொட்டுகின்றன!”

எறும்புகள் இடது விலாப்புறத்தில் நின்று மேய்கின்றன.

“நாளைக்குக் காலை கஞ்சி வடிக்க அரிசி இல்லை. புழுங்கல் தானும் இல்லை. காவல்முறைக்கு விடியற்காலை ஆள் வந்தவுடன் அரிசிக்கு ஓட வேண்டும். இந்தப் போர்க் கஷ்டம் பெரிய கஷ்டமாக இருக்கிறது…. எந்த இழவெடுத்த ராஜா ஆண்டாலென்ன, நாளைக்கு அரிசி கிடைக்குமா எனக்கு? இந்த ராஜா ….. எங்களையெல்லாம் ஆளப்பிறந்தவன் கட்டிலில் சயனம். எனக்கிருக்கும் கஷ்டமோ – சே என்னை மாதிரி எத்தனை ஆயிரம் பேர் இருக்கிறார்கள் – அவர்கள் கஷ்டத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். இவனுக்குத் தெரியுமா? தூங்குகிறான்.. இவன் சண்டைபிடிப்பது தனக்காகத்தான்; தனக்காக வேதான். தான் ஆளவேண்டுமென்றுதான். இதற்கு எத்தனை பேர் சாகிறார்கள்…!”

இப்போது அவனை எறும்பு கடித்தே விட்டது. மின்னல் மாதிரி ஆத்திரம் மனவெளியில் பரவிப் பாய்ந்தது.

ஒரு கையால் வேலைப் பிடித்துக்கொண்டு மறுகையால் சடாரென்று முதுகைச் சொறிந்து கொண்டான்.

குப்பனுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. “காவல் நேரத்தில் இவன் செய்வதைப் பார்…”

குப்பன் விழிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் சுப்பன் முதுகைச் சொறிந்து கொண்டான்.

குப்பனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சுப்பனை அதட்டினால் ராஜா எழும்பி விடுவான் என்கிற யோசனையில் குப்பனால் அதட்ட முடியவில்லை. தன் இடைவாளில் கைவைத்தான். இந்தக் கணத்தில் எறும்பு சுப்பனின் முதுகில் எட்டாத தூரத்தில் போய்விட்டது. சுப்பன், குப்பனின் கண்களை யும் அவன் இடைவாளில் கைவைப்பதையும் பார்த்தான்.

கோடானுகோடித் தீ நாக்குகள் சுப்பனின் மனத்தைத் தாக்கியிருக்க வேண்டும். ஒரு கணந்தான்.

“அடே பழிகாரா…” என்று அலறியபடி தன் வேலைத் தூக்கி ஓங்கினான். ஒரிமைப்பொழுதில் குப்பன் பயங்கர அலறலுடன் நிலத்தில் சரிந்தான். தூரத்தில் நின்ற நாகனுக்கும் வேலனுக்கும் என்ன நடக்கிறது என்பது புரிய எடுத்த அந்தக் கொஞ்ச நேர இடைவெளிக்குள், உள்ளேயிருந்த ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜமகாராஜா தூக்கக் கலக்கத்துடன் வெளியே வந்தார். சுப்பன் ஆக்ரோஷத்துடன் குப்பனின் உடலிலிருந்து வேலைத் திரும்ப இழுத்து எடுக்கவும் சரியாக இருந்தது. சுப்பனின் மனத்தில் தீ அணையவில்லை . என்ன செய்கிறோம் என்பதும் தெரியவில்லை. ராஜா வருவதை அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும். வேலை ஓங்கி ராஜாவை நோக்கி வீச்சுடன் எறிந்தான்.

ராஜா ஒரு சுத்த வீரன். ஒரு சத்தமுமில்லை. நிலத்தில் உயிரற்றுச் சரிந்தான்.

இப்போது பல பக்கங்களிலிருந்தும் தடதடவென்று வீரர்கள் ஓடி வந்தார்கள். நாகனும் வேலனும் ஏதோ குழறினார்கள். கொஞ்ச நேரத்தில் சுப்பனின் அலறல் வானை எட்டியது.

அரண்மனைக்குள் ஒரே கலவரம்.

அந்த, வெளியே கூடாரத்தில் இருந்த, மற்ற ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜமகாராஜாவுக்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா? தன் படை பரிவாரங்களுடன் எளிதாகக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்.

அடுத்த நாள் உள்ளே இந்த ராஜாதிராஜ ராஜமார்த் தாண்ட ராஜமகாராஜா சயனம். கந்தன் இந்தப் பக்கம். நந்தன் அந்தப் பக்கம். இடுப்பில் வாளுடன், கையில் வேலுடன். ஒரு தேவியுடனோ இல்லையோ என்பது கந்தனுக்கும் நந்தனுக்கும் தெரியாது. அவர்கள் காவல் செய்வது எல்லாவற்றிற்குமல்ல.

ஒரு பிற்குறிப்பு: கலாநிதி 1 எழுதிக்கொண்டிருக்கிறார். “… கல்வெட்டுச் சாசனங்களின்படி ராஜா 2இடம் 7,000 குதிரைகளும், 400 யானைகளும், 36,000 போர்வீரர்களும் இருந் தார்கள். ராஜா இடம் 6,500 குதிரைகளும், 350 யானைகளும், 35,000 போர்வீரர்களும் இருந்தார்கள். ராஜா 2, இருபத்திநாலு நாள் கடும் சண்டைக்குப் பிறகு ராஜா 1ஐக் கொன்று … அரி யாசனமேறினான் என்பது இப்போது தெரியவருகிறது.”

கலாநிதி 2 எழுதிக்கொண்டிருக்கிறார்.

“…ராஜா 2, ராஜா 1ஐ ஒரு மல்யுத்தத்தில் கொன்றான் என்பது இப்போது தெரியவருகிறது.”

கலாநிதி 1 இந்தப் பக்கம். கலாநிதி 2 அந்தப் பக்கம். இடுப்பில் கையுடன், கையில் பேனையுடன். உள்ளே நிலத்தினடியில் ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜமகாராஜாக்கள் நிலத்துடன் நிலமே சயனம். இவர்கள் ராஜாக்களுக்குக் காவலே தவிர அவர்கள் செய்தது எல்லாவற்றிற்குமல்ல.

– அலை – 25, 1976

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *