காளிமுத்துவின் பிரஜாஉரிமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 11,738 
 
 

(1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத சேவைகள் புரிந்துவிட்டதாக அப்படி ஒன்றும் பிரமாதப்படுத்தவில்லை. அதனால் இலங்கையின் கௌரவப் பிரஜையாக அரசாங்கம் அவனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாகத்தான் இலங்கை மண்ணில் அவன் வாழ்ந்தான்.

காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையல்ல, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மலைநாட்டை வாழவைத்தது. அந்த மூதாதைகளின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகிரித் தோட்டம் கம்பீரத்தோற்றங்கொண்டு குளு குளுவென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன்னாலென்ன, மலைநாடு இன்றைக்கெல்லாம் மலைபோல நிமிர்ந்து நிற்பது இந்தியப்பாட்டாளிகளின் உழைப்பின்மீதுதான்.

பிரிட்டிஷ்காரன் இலங்கையில் கோப்பிச்செடி பயிரிட்டு அதில் தோல்வி கண்டு மறுபடி அதற்குப் பதில் தேயிலை பயிரிடத் தொடங்கிய காலத்திலேயே காளிமுத்துவின் முற்சந்ததிகள் தோட்டத் தொழிலாளிகளாக இலங்கையில் குடியேறினார்கள்.

இலங்கைப் பிரஜாவுரிமைபற்றிய பேச்சு ஊரில் அடிபட்ட போது ராஜகிரித் தோட்டத்தை இலங்கை அரசாங்கம் எடுத்துக் கொள்ளப் போகிறதென்றும் இலங்கைப் பிரஜைகளாயுள்ளவர்களை மட்டுமே அது வேலைக்கமர்த்துமென்றும், பிரஜாவுரிமை பெறாத இந்தியர்களை இந்தியாவுக்கே அனுப்பிவிடப்போகிறதென்றும், ஆகவே தோட்டத் தொழிலாளர்கள் ஆகவேண்டிய அத்தாட்சிகள் காட்டி தங்களை இலங்கைப் pபரஜைகளாகப் பதிவு செய்துகொள்ள வேண்டுமென்றும் காளிமுத்துவுக்குத் தகவல் கிடைத்தது.

தேர்தலுக்கு நிற்பதற்கோ அல்லது வேறு ஏதாவது அரசியல் கூத்தடிப்பதற்கோ அவன் பிரஜாவுரிமைக்கு ஆசைப்படவில்லை. அவன் கவலைப்பட்டதெல்லாம் வருங்காலச் சந்ததிகளாக விளங்கவிருக்கும் அவனது பிள்ளை குட்டிகள் எண்ணித்தான்.

காளிமுத்துவுக்கு ஒரு மனைவியும் ஒரு தாயும் மூன்று பிள்ளைகளுமுண்டு. குளுகுளுவென்ற மலைச்சுவாத்தியத்திலே முனசிங்காவுக்கும் அப்புஹாமிக்கும் பிறந்த குழந்தைகளைப் போலக் குவா குவா என்று கத்திக்கொண்டுதான் அவைகளும் பிறந்தன. உடலின் வலுவைப்பிழிந்து உழைத்த இத்தனை காலத்திலும் காளிமுத்துவுக்கு மிஞ்சிய தோட்டம், சம்பாத்தியம் இதுதான் – ஐந்து ஜீவன்கள் கொண்டதொரு பெரிய குடும்பம்.

இந்தக் குடும்ப பளுவோடும் தளர்வடைந்த கைகளோடும் இனிமேல் இந்தியாக் கரைக்குப்போய் அவனால் என்ன செய்ய முடியும்? பிள்ளைகுட்டிகளின் வருங்காலத்துக்குத்தான் அங்கு எந்த வழியை அவன் வகுப்பது?
ஆகவே, பிரஜாவுரிமை பெறுவதற்கான மார்க்கத்தை காளிமுத்து தேடத் தொடங்கினான். இதற்காக அங்குமிங்கும் போய் வந்துகொண்டிருந்தபோது அவனுக்கு எத்தனையோ சிந்தனைகளும் ஆசைகளும் உண்டாயின. தேயிலைக் காட்டுக்குள்ளே உரிமையற்ற அனாமதேயமாக அவனது பிரேதம் புதைக்கப்படுவதை நினைத்தாலும் அவனது மனம் சற்றே வேதனைப் படத்தான் செய்தது. இத்தகை காலமாக வாழையடி வாழையாய் வாழ்ந்து பாடுபட்டபின் சாகும் பொழுதாவர் வாயில்லாப் பூச்சியாகச் சாகாமல் வாக்குரிமை பெற்றுச்சாகக் கூடாதா? என்று ஒரு ஆசை அவன் மனத்தில் ஒரு மூலையில் இல்லாமல் போகவில்லை. ஆனால், அதை அவன் வெளியே சொல்லுவானா? ஒரு தோட்டத் தொழிலாளியின் ஆசைக்குப் பெறுமதி-?

காளிமுத்து படி ஏறிய இடங்களில் பிரஜாவுரிமை கிடைப்பதற்குப் போதிய அத்தாட்சிகள் காட்ட வேணுமென்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘’அங்கே அவரைப் போய்க் காணு; இங்கே இந்தத் துரையைக் கண்டு பேசு” என்று அங்குமிங்குமாய் பலதடவை அவனை அலைக்கழித்தார்கள். இலங்கை வரும் இந்தியர்கள் இப்படியான நிலைமைகளில் அபூர்வமான சகிப்புத்தன்மையோடு நடந்துகொள்ள மண்டபம் கேம்பிலேயே பழகிக்கொண்டு விடுகிறார்களாதலால் காளிமுத்து பொறுமையோடு அங்குமிங்கும் போய் அவரையும் இவரையும் பதினாறு தடவைக்கு மேல் பார்த்தான். பார்த்துப் பயனென்ன?

“அத்தாட்சி வேண்டும்; பிறப்புப் பத்திரங்கள் காட்ட வேண்டும்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். வெள்ளைக்காரத் தோட்ட சூப்ரண்டன் ஆட்சியிலே அவன் அத்தாட்சிக்கு எங்கு போவான்? பிறப்புப் பத்திரங்களுக்குத்தான் எங்கு போவான்?

“ஐயா, எனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கு கருப்பையா என்று பெயர் வச்சிருக்கோம்: எழுதிக்கொள்ளுங்கோ, எஜமான்” என்று தோட்ட சூப்ரண்டன் கந்தோரில் போய் ஆசையோடு சொல்லும்போதே, அங்கிருக்கும் யாழ்ப்பாணத்துக் கிளார்க்துடை “என்னடா ‘அது, கருப்பு ஐயா? அப்போடா ஐயாவானே? சின்னகாளிமுத்து என்று சொல்லடா” என்று அதட்டி ‘சி.கா’ மட்டும் போட்டு விஷயத்தை முடித்துவிடுவான். இந்த நிர்வாக லட்சணத்தில் அங்கே பிறப்புப் பத்திரங ;களா இருக்கும். ஆனால் பதிவு உத்தியோகத்தர்கள் என்னமோ பிறப்புப்பத்திரங்களைக் கேட்கத்தான் கேட்டார்கள். அத்தாட்சி கொண்டுவா என்று கூச்சல் போடத்தான் போட்டார்கள்.

“கைப்பூணுக்கு கண்ணாடியிலா அத்தாட்சி காட்ட வேணும் ஐயா? அதோ பாருங்கள், எங்கள் கைபட்டு எங்களது சொந்த வியர்வையும் இரத்தமும் பாய்ச்சி சந்ததி சந்ததியாக நாங்கள் பண்படுத்தி வந்த தோட்டங்களை!” என்று சொன்னால் அது செவியில் ஏறமாட்டார்.

‘அதற்கு அத்தாட்சி……?’

காளிமுத்து சோர்வடைந்தான்.

கடல் கடந்த இந்தியர்pன் உழைப்பைத்தான் அரசாங்கம் காட்டில் எறிந்த நிலவைப் போல இம்மாதிரி ஒதுக்கிவிடுகிறதென்றால், அவரின் பகலுமிரவும் வெயிலும் மழையும் காடும் மயலயம் பார்க்காமல் பாடுகட்டதெல்லாம்தான் தண்ணீர்pல் கரைத்த புளிபோலப் போய்விடுகிறதென்றால், அந்த துர்ப்பாக்கியசாலிகள் பிறப்பு, இறப்பு இல்லாத அசேதனப் பொருள்களாகவும் ஆகிவிட்டார்கள் என்று காளிமுத்துவின் நெஞ்சம் கலங்கியது.

“வாருங்கள், அத்தாட்சி காட்டுகிறேன்” என்று வாக்குப் பதிவு உத்தியோகஸ்தர்களை காளிமுத்து ஒரு தினம் வீட்டின் பின்பக்கமாய் தேயிலைக் காட்டுக்குள்ளே அழைத்துச் சென்றான்.

தழைத்து வளர்ந்த அரசங்கன்று ஒன்று அங்கே நின்றது. அதைச் சுற்றிவர உத்தியோகஸ்தர்களை நிற்கும்படி கேட்டுக்கொண்டு காளிமுத்து கையோடு எடுத்துச் சென்ற கோடரியைக் கொண்டு அதை வெட்டத் தொடங்கினான்.

காளிமுத்து உணர்ச்சி வசப்பட்டிருந்தானென்பது அவனுடைய ஒவ்வொரு காரியங்களிலும் தென்பட்ட பதட்டத்திலிருந்து தெரிந்தது. உத்தியோகஸ்தர்களுக்கு கோடரியையும், காளிமுத்துவின் பதட்டத்தையும் பார்க்க கொஞ்சம் யோசனைதான். என்றாலும், பேசாமல் நின்றார்கள்.

அரசங்கன்றை அடி மரத்தோடு வெட்டி வீழ்த்திவிட்டு மண்ணுக்குக் கீழே புதையுண்டிருந்த மரத்தின் வேர்ப்பாகத்தை அவன் கிளப்பத் தொடங்கினான்.

பதிவு உத்தியோகஸ்தர்களுக்கு இதெல்லாம் விசித்திரமாகத் தோன்றிற்று. ஆனாலும் முடிவு என்ன வென்பதை அறியும் ஆவலில் பேசாமல் நின்றார்கள். பிறப்புப் பத்திரங்கை ஒரு சமயம் மண்ணுக்குள்ளே புதைத்து வைத்திருக்கிறானோ, பைத்தியக்காரன் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

அரசமரத்தின் அடிப்பாகமும் வெளியே கொண்டுவரப்பட்டாயிற்று. நிலத்தில் மூன்றுமுழு ஆழத்துக்குமேலே காளிமுத்து கிடங்கு தோண்டி விட்டான். மேலும் தோண்டிக் கொண்டே போனான். பதிவு உத்தியோகத்தர்கள் சற்றே பொறுமை இழந்தார்க்ள. ‘யாருக்கப்பா குழிதோண்டுகிறாய்’ என்று கிண்டல் பண்ணினார்கள்.

“இன்னும் சற்று நேரம் பொறுத்திருங்கள், துரைமார்களே” என்று காளிமுத்து கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். கிடங்கு இப்பொழுது அவன் கழுத்தை மழைத்தது.

மண்வெட்டியில் ஏதோ ஒரு கடினமான பொருள் தட்டுப்படவே காளிமுத்து பரபரப்பாகவே குனிந்து மண்ணைக்கிளறி அதை எடுத்தான். அது ஒரு கல்லு. “இது என்ன சனியன் இதுக்குள்ளே” என்று வெறுப்போடு தலையைக் கழட்டி மேலே வீசினான். அது மேலே நின்ற உத்தியோகத்தர் ஒருவரர் தலையில் வொடக்கென்று விழுந்தது. “ஏ வெளியே ஆட்கள் நிற்பது தெரியவில்லையா” என்று ஒரு அதட்டல்.

காளிமுத்து மேலும் கிடங்காகத் தோண்டினான். இப்பொழுது மண்ணுக்குள்ளே இன்னொன்று பளிச்சிட்டது. புழுப்போல சுருண்டு போய்க் கிடந்த அதை அவன் எடுத்துக் குலைத்தான். அதைப்பார்த்தபோது அவன் கண்கள் கலங்கின. அது ஒரு வெள்ளி இருப்புக்கொடி. கண்ணிலே ஒற்றிக்கொண்டு மடிக்குள்ளே அதை பத்திரமாகச் சொருகி வைத்தான்.

குழி இப்பொழுது அவன் தலையை மறைத்தது. உத்தியோகஸ்தர்களுக்கு நின்று கால் சோர்ந்து போயிற்று. சற்றே பின்பக்கதாக விலகி வெட்டிவிழுத்திய அரசங்கன்றுக் கிளைகளின் மீது உட்கார்ந்தார்கள்.

இருந்தாற்போலிருந்து காளிமுத்து துள்ளிக் குதித்தான். “இதோ அத்தாட்சி கிடைத்துவிட்டது. நான் இலங்கையின் பிரஜை. அதங்கு இதைவிட இன்னும் என்ன அத்தாட்சி கேட்கிறீர்கள்?” என்று எங்கோ கிணற்றுள் இருந்து வருவது போல அவனது குரல் கேட்டது. அதைக் தொடர்ந்தாற்போல மண் பிடித்த பொருளொன்று வெளியே உத்தியோகஸ்தர் முன்பாக வந்து விழுந்தது.

அவர்கள் ஆவலோடு ஓடிப்போய் அதை எடுத்துப் பார்த்தார்க்.

அது ஒரு மனித பிரேதத்தின் கை எலும்பு.

“ஐயா துரைமார்களே, அது என் பாட்டனாரின் கை எலும்பு. எத்தனையோ வருஷங்களுக்கு முன்னே அவர் இங்கு புதைக்கப்பட்டவர் என்னை இலங்கைப் பிரஜையாக்க உங்களுக்கு இந்த அத்தாட்சி போதவில்லையென்றால் – என்னை இந்தக் குழியிலே வைத்து உங்கள் கையினாலேயே மண் தள்ளிவிட்டு புதையுங்கள்” – என்று காளிமுத்து மறுபடியும் சத்தம் வைத்தான்.

காளிமுத்துவின் பாட்டனின் கை எலும்பை உத்தியோகஸ்தர்கள் கையிலெடுத்தபோது அவர்களுக்கு ரோமம் புல்லரித்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

“பாவம், அவனுக்குப் பைத்தியதான் பிடித்திருக்கிறது” என்று அவர்களில் ஒருவன் சொல்லிக்கொண்டு வெளியேறினான். மாட்டுக்குப் பின் வால் போல சக உத்தியோகஸ்தர்கள் அவனைப் பின் தொடர்ந்தார்கள்.

வெட்டி வீழ்த்திய அரசமரத்தின் இலைகள் அப்போது வீசிய மலைக்காற்றுக்குச் சலசலக்கவில்லை. அவை வாடிப்போய்விட்டன.

– ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள், முதற் பதிப்பு: ஜூலை 1973, முன்னோடிகள் கலை இலக்கிய விமர்சகர் குழு.

Print Friendly, PDF & Email

அ.செ.மு. என்ற அ.செ. முருகானந்தன் ஈழத்துச் சிறுகதை இலக்கியத்திற்கு பெருமை கூட்டிய எழுத்தாளர். இரண்டாம் பரம்பரை எழுத்தாளர். ஈழகேசரி பண்ணையைச் சேர்ந்தவர். ஈழகேசரியின் ஆசிரியராகப் பணியாற்றியவர். மறு மலர்ச்சி இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவர். மறுமலர்ச்சியின் இணை யாசிரியராகவும் எரிமலை என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் விளங்கியவர். வீரகேசரி, ஈழநாடு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியப்பீடங்களில் பணியாற்றி யவர். பல்வேறு புனைபெயர்களில் நிறைய எழுதியவர். அவரது சிறுகதைகள் யாழ்ப்பாண சமூககளத்தில் மட்டுமன்றி மலையக்திலும் மண்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *