கால்வாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2022
பார்வையிட்டோர்: 5,147 
 
 

முதலிலேயே சொல்லி விடுகிறேன், இந்த கதையெல்லாம் நம்பமுடியாது என்று. அதை பற்றி கவலை இல்லாமல் இந்த கதையை சொல்லத்தான் போகிறேன்.

வீட்டை விட்டு ஓடிப்போக தயாராகி விட்டான் கோபால். உடனே காதல் அது என்று நினைத்து கொள்ளாதீர்கள். அவனை பொறுத்தவரை ஒரு வேலை, அது கிடைக்கவே மாட்டேனென்று அடம் பிடிக்கிறது. இதற்கும் பொறியியல் பட்டதாரி இவன். இந்த நாட்டில் இஞ்சீனியர்களுக்கே தேவையில்லாமல் போய் விட்டதா? எத்தனை நாள் வீட்டில் உட்கார்ந்தே சாப்பிடுவது.

யாரும் எதுவும் சொல்லவில்லை என்றாலும் வீட்டில் அக்கா, தங்கை, தம்பி மூவரும் போதாதற்கு அப்பா, இவர்கள் இவனை ஒரு மாதரியாக பார்க்கிறார்களோ என்று மனது அடித்துக்கொண்டுதான் இருக்கிறது.

காதை கொடுங்கள் ஒரு இரகசியம், பாவம் அந்த ஆத்மாக்கள், இவன் மனசு கஷ்டப்படுமே என்றுதான் கவலைப்படுகிறார்களே தவிர மற்றபடி இவன் நினைத்து கொள்வது போல் இல்லை.

ஆனால் அவன் அம்மாதான் ‘பெட்டர்’ என்று நினைத்து கொண்டிருக்கிறான். உண்மையில் அம்மாதான் இந்த வீட்டில் அவனை பற்றி குறை சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

தடிமாடாட்டம் வளர்ந்துட்டான், படிக்க வச்சுட்டோம், ஏதோ ஒரு வேலைய புடிச்சுக்க துப்பில்லை, இப்படி இந்த குடும்பத்துக்குள் அவன் இல்லாதபோது புலம்புவாள்.

இங்கும் ஒரு உளவியல் இருக்கிறது நன்கு கவனியுங்கள், தன்னுடைய மகனை இவர்கள் யாரும் குறை சொல்லிவிட கூடாது, அதற்கு முன்னால் தான் முந்தி அவனை அடிக்கடி குறை சொல்லிவிட்டால், மற்றவர்கள் அவன் மீது பரிதாபம் மட்டும் படுவார்கள். இப்படி அவனை பெற்றவளின் எண்ணம்.

கோபாலுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. எங்கு போனாலும் தோல்விதான், சிபாரிசு என்று யாரிடம்தான் போவது? முடிவு செய்து விட்டான், கண் காணாத ஊருக்கு போய்விடுவது, அங்கேயே மலை உச்சி இருந்தால் அதில் விழுந்து உயிர் விடுவது?

இவனோ சென்னையில் இருப்பவன். எங்கு போகலாம்? யோசித்து யோசித்து நம் மாநிலத்திலத்திலேயே வேண்டாம், அடுத்த மாநிலத்துக்கு போய்விடலாம்.

கோபால் இறங்கி நடந்து கொண்டிருக்கிறான். மழை பெய்து கொண்டிருந்தது, குளிர் வேறு வாட்டி எடுத்தது.

தோளில் ஒரு “தோல்பை” அவ்வளவுதான், கையில் ஆயிரம் ரூபாய் இருக்கலாம், அதுவும் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்திருக்கிறான். அக்கா பர்சிலிருந்து எடுத்து வந்திருக்கிறான்.

அவளுக்கு தெரிந்தால்…! கண்டு கொள்ளமாட்டாள், வீட்டில் அம்மாவோ, அப்பாவோ தேவைக்கு எடுத்திருப்பார்கள் என்று நினைத்துக்கொள்வாள். கேட்கமாட்டாள், சங்கடம் வருமே. வங்கியில் நல்ல சம்பளம், ஆயிரம் ரூபாய்க்கு பெரிய சண்டை போட மாட்டாள்.

இப்படி அக்காவை பற்றி எண்ணியவுடன், அக்கா, அக்கா,, பாசம் கண்ணில் நீராக வெளி வந்தது. தப்பு பண்ணி விட்டோமோ? இன்னும் கொஞ்ச நாள் முயற்சி செய்து பார்த்திருக்கலாமோ?

சட்டென இந்த நினைவுகளை உதறினான்.வேண்டாம், இனிமேல் இதை பற்றி எல்லாம் நினைக்க கூடாது. பார்க்கலாம்.

மலைசரிவில் அமைந்திருந்தது அந்த ஊர், இவன் நடந்து செல்வதை ஊரின் ஒதுக்கு புறமாய் அமைந்திருந்த சிறு ஓட்டலில் டீ குடித்து கொண்டிருந்தவர்கள் கவனித்து கொண்டிருந்தனர்.

இவன் யார்?

ஹேய் ஹேய்..குரல் கேட்க திரும்பி பார்த்தான், ஒருவர் அவனை கூப்பிட்டார், கையில் ஒரு கம்பு வைத்திருந்தார். அவரை சுற்றி ஆடுகள் நின்று கொண்டிருந்தன.

இவனுக்கு சட்டென்று கோபம், ஆடு மேய்க்கறவன் கை தட்டி கூப்பிடறானே? ஒரு கணம் நினைத்தாலும் சே நாம் வந்திருக்கறது மனசு வெறுத்து, இங்கு எதற்கு சண்டை.

மெதுவாக அவர் அருகில் சென்றான்.

யாரு நீ? இவனுக்கு புரியவில்லை, கன்னடத்தில் கேட்கிறார் என்பது மட்டும் புரிந்தது. இதற்கு பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை. இவன் பெங்களூர் வரை இரயிலில் வந்து அங்கிருந்து ஏதோ ஒரு பஸ்ஸில் ஏறி கண்டக்டரிடம் கடைசி ஸ்டாப்பிங்கில் இறக்கி விட சொல்லி இருந்தான். அது எழுபது கிலோமீட்டர் பயணம் செய்து கடைசியில் அவனை இறக்கிவிட்டு சென்றிருந்தது.

எப்படி அவரிடம் தமிழில் சொல்வது, அதுவும் என்ன சொல்வது? வேலை தேடி வந்தேன் என்றால் இந்த மலைக்காட்டுக்கா? இப்படி கேட்டால்..!

தடுமாறினாலும், தமிழில் சொன்னான், சென்னையில் இருந்து வந்திருப்பதாக,

சென்னை..! அது மட்டும் புரிந்தது போல் தலையாட்டினார்.

எதுக்கு..?

யோசித்தான், நோ வொர்க், கொஞ்சம் ஆங்கியம் கலந்து ‘தங்கிலீசாக’ பேசினான்.

வொர்க்..வொர்க்…

ஆம் தலையசைத்தான்..

வா என்னுடன் கை ஆட்டி முன்னால் நடந்தார்.

இவனுக்கு அவரின் செய்கை ஆத்திரத்தை கிளப்பினாலும் வேறு வழியின்றி அவர் பின்னால் நடந்தான், உடன் ஆடுகளுடன்.

யாரோ அவரிடம் கன்னடத்தில் யார் இந்த பையன்? விசாரிக்க..

இவர் சாவகாசமாய் கன்னடத்தில் ஏதோ சொன்னார், இவனுக்கு வேலை தேடி என்பது மட்டும் புரிந்தது. இந்த ஆள் என் மானத்தை வாங்கிவிட்டுத்தான் ஓய்வான், மனதுக்குள் நினைத்தான்.

அதற்கு தகுந்தாற்போல அந்த ஆள் வாய் விட்டு இவனை பார்த்து சிரிக்க, இவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

அப்படியே மண் பாதை வழியாக சிறிது தூரம் போனவர் பரந்து கிடந்த நிலபரப்பில் நடுவில் ஒரு ஓலை குடிசைக்கு அழைத்து சென்றார்.

பொம்மினி பொம்மினி,, அழைக்க வெளியே எட்டி பார்த்த நடுத்தர வயது பெண் கன்னடத்தில் அவரிடம் ஏதோ கேட்டாள், இவனை பார்த்தபடி.

அதற்கு அவர் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, மேலும் கீழும் பார்த்தாள், சின்ன பையன் இவனால முடியுமா? தமிழில் முணங்கினாள்.

ஆஹா தமிழ், தமிழ்..சந்தோசமாக உணர்ந்தான். என்ன சொல்றாருங்க, உங்க வீட்டுக்காரரு?

அந்த பெண் இவன் தமிழில் பேசியது கண்டு வியந்தவள், தம்பி எங்கிருந்து வர்றீங்க?

சென்னை.

படிச்ச பையனா இருக்கறீங்க? எங்க வூட்டுக்காரர் உங்களை வேலைக்கு கூட்டிட்டு வந்திருக்காறே?

வேலைக்கா? நான் அவர்கிட்ட வேலை தேடி வந்திருக்கேன்னுதான் சொன்னேன், அவருதான் என்னை இங்க கூட்டிட்டு வந்திருக்காரு.

அந்த பெண் கன்னடத்தில் அவரிடம் பேச, அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை, இரு உள்ளே சென்றவள் இருவருக்கும் இரு குவளைகளில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள்.

இவன் அந்த மழையில் மோர் குடிப்பதா? சளி பிடிக்குமே என்று நினைத்தாலும் கொடுப்பதை குறை சொல்ல கூடாது என்று வாங்கி குடித்தான்.

அவர் மனைவியிடம் ஏதோ சொல்ல அவள் தமிழில் தம்பி உன் பை எல்லாம் இங்க வச்சுட்டு அவர் உன்னை கூட்டிட்டு போற இடத்துக்கு போவியாம், என்னையும் வர சொல்றாரு, இரு வர்றேன்.

அவள் ஆடுகளை எல்லாம் கொட்டடியில் அடைத்து விட்டு கிளம்பினாள்.

மூவரும் அந்த பொட்டல் வெளியில் சுமார் முக்கால் மணி நேரம் நடந்தனர்.

இந்த இடம் பூரா எங்களோடதுதான், பக்கத்துல எங்க உறவுக்காரங்களோடது.

ஏன் இப்படி காஞ்சு போய் கிடக்குது?

தண்ணி கிடையாது.

அவர்கள் மூவரும் நடந்து நடந்து ஒரு மலை அடிவாரத்தில் சென்று நின்றனர்.

கோபால் அண்ணாந்து பார்த்தான்.

பொழுது சாய்ந்து போயிருந்த நேரமாதலால் மலை பச்சை இருட்டுடன் அடர்த்தியாய் கழுத்து வலிக்கும் அளவுக்கு உயர்ந்து நின்றது.

பெரியவர் அந்த மலையை பார்த்து ஏதோ சொன்னார். இவன் அவரை ஒன்றும் அறியாமல் பார்த்தான்.

இவர் மலையப்பனிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

மலையிடம் பேசிக்கொண்டிருக்கிறாரா?

பின்ன என்ன பண்ணறது தம்பி? இவ்வளவு பெரிய மலை எங்களுக்கு கொஞ்சம் கண்ணு காண்பிச்சா பின்னாடி திரும்பி பாரு எங்க ஊரு நிலம் மட்டுமல்ல, அதுக்கடுத்த ஊரெல்லாம் செழிப்பாயிடும். ஆனா மலையப்பன் மனசு வைக்கணுமே.

புரியாமல் அந்த பெண்ணிடம் கேட்டான், எனக்கு ஒண்ணும் புரியலைங்க, மலையப்பன் அப்படீங்கறீங்க, அது மனசு வைக்கணும்ங்கறீங்க.

அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கும்போது அவர் தடுத்து போலாம், கையசைத்து திரும்ப சொன்னார்.

ஆமாங்க தம்பி சீக்கிரம் கிளம்பணும், இல்லையின்னா மலையில இருந்து யானை கீழிறங்க ஆரம்பிச்சிடும், அது வரலையின்னா வேற மிருகங்கள் இறங்க ஆரம்பிச்சிடும்.

இரவு “கேப்பங்களியும்” தொட்டுக்கொள்ள “கீரை குழம்பும்” செய்து போட்டார்கள். இவன் இதை முன்னே பின்னே சாப்பிட்டதில்லை. இருந்தாலும் கஷ்டப்பட்டு சாப்பிட்டு முடித்தான்.

அவனுக்கு அந்த குடிசைக்குள்ளேயே ஒரு கயிற்று கட்டிலை காட்டி அதில் படுத்துக்கொள்ள சொன்னார்கள்.

இரவு கோபாலுக்கு தூக்கம் என்பது சுத்தமாக வரவில்லை. இது என்ன ஊர்? ஏன் இவ்வளவு வறட்சி? அது சரி, நாம எத்தனை நாள் இங்க இருக்கறது? முன்னே பின்னே தெரியாத ஊர்ல..!

காலை நேரத்தில் எழும்பிவிட்டான். காரணம் ஆடு கத்தும் ஓசையும் அதை அவர்கள் விரட்டும் சத்தமும், மாடு கத்துவதும் இவனை எழும்பி உட்கார கட்டாயப்படுத்தி விட்டது.

அவர் இல்லீங்களா? வெளியே வந்து அந்த பெண்ணிடம் கேட்க, அவர் காட்டுக்கு போயிட்டாரு, வந்தா வர சொன்னாரு.

விடியல் இருட்டில் நடந்து கொண்டிருந்தான். தான் என்ன செய்கிறோம்? பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்த சென்னையில் தூங்கி எழும்பவே சூரியன் தலைக்கு மேல் வந்துவிடுவான், அப்படி சுகவாசியான நாம் விடிந்தும் விடியாத பொழுதில் இப்படி காட்டுக்குள் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம்.

இருவரும் வீட்டுக்கு திரும்பி வரும்போது காலை ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. அந்த நேரத்திலேயே வெயில் சுள்ளென்று அடித்தது.

ஆடுகளை எல்லாம் பக்கத்து காட்டுக்காரரிடம் பார்த்து கொள்ள சொல்லிவிட்டு இவர் இவனுடன் திரும்ப வந்து கொண்டிருந்தார்.

மூவரும் சாப்பிட்டு முடித்து வெளியில் கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருந்தார்கள். அந்த பெண் தம்பி என்ன செய்ய உத்தேசம்? எங்க வீட்டுக்காரரு உங்களுக்கு ஒரு வேலை தர்றதுக்கு தயாராய் இருக்கறாரு. நீங்க என்ன நினைக்கறீங்கன்னு முடிவு பண்ணி சொல்லுங்க.

இவன் விழித்தான், இவரு எனக்கு வேலை தர்றாரா? நான் ஒரு பொறியியல் பட்டதாரி, எனக்கு இந்த ஆடு மேய்ப்பவர் என்ன வேலை தரப்போகிறார்?

தம்பி, நாங்க உங்களுக்கு வேலை தர்றோம், ஆனா எங்கனால அதிகமா சம்பளம் கொடுக்க முடியாது, அதுமட்டுமில்லை, இந்த வேலையே எங்க ஊர் நன்மைக்காக.. நீங்க என்ன படிச்சிருக்கீங்க, அப்படீங்கறதை பத்தி எங்களுக்கு கவலை இல்லை, ஆனா நாங்க கொடுக்கிற வேலைய நீங்க ஒத்துக்கிறேன்னு சொன்னா மேற்கொண்டு நாங்க உங்களோட பேசறோம். முடியாதுன்னு சொன்னாலும் நாங்க கோபிச்சுக்க மாட்டோம்,

கோபாலுக்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை, நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை, வேலை என்னன்னா தெரியாம எப்படி முடியும், முடியாதுன்னு சொல்ல முடியும்?

இல்லை, இது கொஞ்சம் இரகசியமான வேலைன்னு கூட வச்சுக்குங்க, எங்களுக்கு வேற வழி தெரியலை.

என்னங்க என்னன்னமோ சொல்லி பயமுறுத்தறீங்க.

அது நீங்க சரி சொன்ன பின்னால பயப்படறீங்களான்னு பார்க்கலாம். இப்ப வாங்க சாப்பிட போலாம்.

இதுவரை அவர் கன்னடத்திலும், இவன் தமிழிலும்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாகத்தான் இருந்தது, மனம் ஒன்றுபட்டு பேச ஆரம்பித்தால் நாம் பேசும் மொழி மற்றவர்களுக்கு புரிந்து விடுமோ என்னவோ?

இரவு முழுக்க யோசித்தான், குழம்பினான், என்ன வேலை? என்ன வேலை?

காலையில என்னவென்றுதான் பார்த்து விடுவோமே, அவரிடம் சென்று சரி என்று தலையசைத்தான்.

மகிழ்ச்சியுடன் அவனை அணைத்து கொண்டவர், தப்பா நினைச்சுக்காதே, இந்த வேலைய எங்க ஊர் ஆளுங்க வேலை செய்ய தயாரா இருக்காங்க, ஆனா படிச்ச ஒருத்தர் எங்களுக்கு வழிகாட்டியா இருந்தா நல்லதுன்னு நினைக்கிறோம்.

இன்னுமே இவனுக்கு புரியாமல்தான் இருந்தது, இவர் என்னதான் சொல்ல வருகிறார்?

கோபாலும், அவரும், கூட அந்த ஊர்க்காரர்கள் சிலரும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

தம்பி நீங்க எங்களுக்கு வேலை செய்யறதா ஒத்துகிட்டதால இப்ப நாம இந்த மலையப்பனை சுத்தி அந்தப்பக்கமா போகப்போறோம்.

வாங்க போகலாம், அவனை கூட்டிக்கொண்டு மலைமேல் சிறிது தூரம் ஏறி வலது பக்கமாய் சுற்றி நடக்க ஆரம்பித்தனர். நடக்க நடக்க காடு அடர்த்தியாகிக்கொண்டே வந்தது. கோபாலுக்கு அந்த காடு பெரும் அச்சத்தையும் உயிர் பயத்தையும் கொடுத்தது.

கடவுளே என்னதான் நடக்குது, எதுவுமே புரியவில்லையே..! மனதுக்குள் புலம்பினாலும் வெளிகாட்டாமல் அவர்களுடன் நடந்து கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவர்கள் நடந்திருப்பார்கள். சற்று தூரத்தில் “ஹோவென்ற” பேரிரைச்சல் கேட்டது.

முதலில் புரியாமல் பயந்து நின்றான் கோபால்.பெரியவர் அவனை தட்டி கொடுத்து பயப்படாதீங்க, பக்கத்துல வந்துட்டோம், வாங்க.

பக்கம் செல்ல செல்ல பிரமாண்டமான நீர் வீழ்ச்சி ஒன்று கீழ்ப்புறமாய் விழுந்து கொண்டிருந்தது.

பிரமிப்பாய் இருந்தது இவனுக்கு இந்த மலையில் இப்படி ஒரு நீர் வீழ்ச்சியா? அருகில் சென்றார்கள். தண்ணீர் இவர்கள் பக்கம் விழுந்து வழிந்து மீண்டும் கீழே இறங்கி கொண்டே இருந்தது.

ஐந்து நிமிடம் அப்படியே நின்றார்கள். தம்பி நாங்க சொன்ன வேலை இதுதான். இங்க விழுகுது பாருங்க இந்த தண்ணி மொத்தமும் அதோ அங்க தெரியுது பாருங்க ஒரு அணை. அங்க போய் சேர்ந்து அங்கிருந்து பாசனத்துக்கு போகுது.

நாங்க பல முறை இந்த தண்ணியில இந்த பக்கமா விழுகற தண்ணிய திருப்பி மலைக்கு மறுபக்கமா கொண்டு வந்து எங்க ஊர் வழியா கொண்டு போய் குளம் குட்டைக்கு விட்டா செழிப்பா இருக்கும்னு எத்தனை முறை அரசுக்கு எழுதி போட்டும், சொல்லி பார்த்தும் ஓய்ஞ்சு போயிட்டோம்.

அதுனால நாங்களா ஒரு முடிவு எடுத்திட்டோம். ஏன் நாமளே இங்கிருந்து கால்வாயை வெட்டி அந்த பக்கம் தண்ணிய கொண்டு போக கூடாது.

நான் யோசிச்சு, யோசிச்சு அஞ்சாறு வருஷமா காலத்தை ஓட்டிட்டேன். உன்னைய அன்னைக்கு பார்க்கறப்ப எனக்கு சட்டுன்னு ஒரு யோசனை வந்துச்சு, அதனாலதான் உங்கிட்டே இந்த யோசனையை சொன்னேன்.

வீட்டுக்கு போய் யோசனை பண்ணு, சரின்னா மேற்கொண்டு எங்க ஊர் ஆளுக உனக்கு எல்லா உதவியும் செய்வாங்க. அரசு ஏதாவது சொல்லும்னு பயப்படாதே, வக்கீல்களை புடிச்சு, ஏற்பாடு பண்ணிக்கலாம்.

அது வரைக்கும் போகாம சத்தமில்லாம நாம வேலைய ஆரம்பிச்சிடலாம். என்ன சொல்றீங்க.

திரும்பி இவர்கள் இங்கு வரும்வரை பிரமிப்பில் இருந்தான் கோபால். அடேயப்பா கிட்டத்தட்ட பத்து மைல் அளவுக்கு கால்வாயை வெட்டி கொண்டு வர முடியுமா? இவ்வளவு அடர்த்தியான காட்டில் சத்தமில்லாமல் வேலை செய்ய முடியுமா?

இரவு முழுக்க யோசித்தான். காலையில ஐயா நான் இந்த வேலைய ஒத்துக்கறேன். அதுக்கு முன்னாடி என்னோட நண்பர்களை கலந்து என்ன பண்ணறதுன்னு ஒரு பிளான் பண்ணிட்டு அப்புறமா வேலைய ஆரம்பிக்கலாம். அதுக்கு இரண்டு மூணு பேரை இந்த ஊருக்கு கூப்பிட்டு வரணும். உங்க அனுமதியும் கொஞ்சம் செலவும் ஆகும், முடியுமா?

கண்டிப்பா முடியும் தம்பி.

கோபால் அவன் நண்பர்களுடன் மீண்டும் அந்த மலையில் ஏறி காட்டு வழியாக நடந்து நீர் வீழ்ச்சியை அடைந்தான்.

ஊர் மக்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி அதை ஊருக்குள் கொண்டு செலவது, மூவரும் பேசினர், பேசினர், இடைவிடாமல் பேசினர்.

அடுத்து அந்த ஊர் மக்களை அழைத்து வாய்க்கால் அளவு எப்படியிருக்கும்? அதன் ஆழம், வாட்டம், இவைகளை பற்றி விவரித்தனர். அடுத்து நீர் வீழ்ச்சியின் சம தளத்தில் தண்ணீர் வாட்டம் குறைவாகவே கிடைக்கும் என்பதையும் எடுத்து சொன்னவர்கள், நீர் வீழ்ச்சி அருகே சற்று மேலே இருந்து தண்ணீர் கீழ்வந்து கால்வாயின் வழியாக ஊருக்குள் நுழைவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்பதையும் சொன்னார்கள்.

ஊர் மக்கள் நாங்கள் எங்கள் உழைப்பை தருகிறோம், நீங்கள் என்ன செய்தாலும் சரி என்று உறுதி மொழி கொடுத்தது இவர்களுக்கு இன்னும் ஊக்கத்தை தந்தது.

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் விடாமல் வேலை செய்தனர். மலையின் பெரும் பகுதி மண் சார்ந்து இருந்ததால், கல்லை உடைப்பது வெடி வெடிப்பது போன்ற தேவைகள் இல்லாமல் இருந்தது.

மண்வெட்டி, சட்டி இவைகளுடன் அந்த ஊர் மக்கள் மாறி மாறி வந்து செய்து கொடுத்தனர்.

அடுத்த காரியமாக புறம்போக்கு நிலங்கள் எவை எவை என கண்டு பிடித்து அதனை இணைத்து பெரிய ஏரி ஒன்றை உருவாக்கினர்.

கோபால் மட்டும் நிரந்தரமாய் அங்கு இருக்க, அடிக்கடி வந்து உதவிகள் செய்து சென்றனர் அவன் நண்பர்கள்.

இரண்டு வருடங்கள் முழுமையாக முடிந்த பொழுது ஏரியில் தண்ணீர் நிறைந்து வழிந்து கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

அவர்கள் ஊர் மக்களின் இந்த முயற்சி வெளி உலகிற்கு தெரிய வர இந்தியா முழுக்க தலைப்பு செய்திகளாய், தொலைக்காட்சிகள் முழுவதும் இதைப்பற்றியே பேச்சாக இருந்தது.

கோபால் அகில இந்திய பிரபலவானவனாக ஆகியிருந்தான். தூங்குவதற்கு நேரமில்லாமல் அலைந்து கொண்டிருந்தான்.

இப்பொழுது கூட பாருங்கள் நல்ல தூக்கத்தில் உறங்கி கொண்டிருந்தவனை எழுப்பி கொண்டிருந்தார்கள்.

தட்டி தட்டி அவனை எழுப்ப சலிப்புடன் கண்ணை திறந்து என்னங்க கொஞ்ச நேரம் தூங்க கூட முடியாம தொந்தரவு பண்ணிகிட்டிருக்கீங்க.

தொந்தரவா? மணி என்னாச்சு தெரியுமா? ஒன்பது மணியிருக்கும். எல்லாரும் கிளம்பி போயாச்சு, நீ இன்னும் தூங்கி எழுந்திருக்கலை. என்னமோ போ, படிச்சு முடிச்சு இப்படி தூங்கி வழியற பையனை இப்பத்தான் பார்க்கறேன்.

அலுத்து கொண்டே அம்மா சமையலைறைக்குள் நுழைய..

இவன் திடுக்கிட்டு விழித்து நாம எப்படி இங்க வந்தோம்..! கால்வாய், ஏரி, குளம்..இதெல்லாம்…

இந்த கதையை வாசிக்கும் வாசகருக்கு வாசிக்கும் போதே “கனவாய்” இருக்கும் என்று துளி அளவு எண்ணம் வந்திருந்தால், கூட அவர்களுக்கு ஒரு கை தட்டி வாழ்த்து சொல்லி விடுவோம்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *