கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 25,867 
 
 

அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6

பாண்ட்லுக்களின் மலைச் சரிவில் உள்ள குகைகளை விட்டு நீங்கிய பின் ஒரு நாள் இரவில் ஒரு பாதுகாப்பான குகையில் நெருப்பிற்கு முன் நாங்கள் அமர்ந்திருந்தோம். அப்போது சோ-ஆல் ஒரு கேள்வி கேட்டாள் அதற்கு முன் எனக்கே அஜோரிடம் கேட்கத் தோன்றியிராத அந்தக் கேள்வியை. அவள் ஏன் தன் இன மக்களை விட்டுத் தெற்கில் ஆலுக்கள் இருக்கும் இடத்திற்கு இவ்வளவு தூரம் நான் அவளைக் கண்ட இடத்திற்கு வந்தாள் என்று கேட்டாள்.

முதலில் அஜோர் பதில் சொல்லத் தயங்கினாள். இறுதியில் அவள் பேச ஆரம்பித்தாள். முதன் முறையாக நானும் அவளது தோற்றம் குறித்த கதையைத் தெரிந்து கொண்டேன். எனக்காக, நான் கேஸ்பக் மனிதனாக இல்லை என்பதால், அவள் நீண்ட நெடிய விவரங்களுடன் விவரிக்க ஆரம்பித்தாள்.

“நான் ஒரு கோஸ்-ஆட்டா-லோ” என்று ஆரம்பித்து என்னை நோக்கித் திரும்பினாள். “கோஸ்-ஆட்டா-லோ என்பது முட்டையில் இருந்து வராத ஒரு பெண், அதனால் ஆதியில் இருந்து இருப்பவள் (கோர்-ஸ்வ-ஜோ). நான் எனது தாயின் மார்பில் இருந்து வந்த குழந்தை. காலுக்களுக்கு மட்டும்தான் இப்படி நடக்கும் எப்போதாவது. வியரூ பெரும்பாலானவர்களைக் கூட்டிச் சென்று விடும். ஆனால் என் அம்மா என்னை மறைத்து வைத்தார்கள் ஆதியில் இருந்து வந்தவர்கள் போல் தோற்றம் வரும் வரை. அதனால் வியரூவிற்கு அடையாளம் தெரியவில்லை. எனக்கு என் தாய் தந்தை இருவரையும் தெரியும். என் தந்தை காலுக்களின் தலைவராக இருந்தார். அவரது பெயர் ஜோர். அவரும் என் தாயும் ஆதியில் இருந்து வந்தவர்கள். அதில் ஒருவர், என் தாயாக இருக்கும் என்று நினைக்கிறேன், ஏழு சுழற்சியையும் சந்தித்து விட்டார்கள் (கிட்டத்தட்ட எழுநூறு வருடங்கள்). அதனால் அவர்களின் குழந்தைகள் கோஸ்-ஆட்டா-லோவாக இருக்கலாம். அதாவது நீ சொன்ன கூற்றுப்படி உங்கள் இனக் குழந்தைகள் பிறப்பது போல் நானும் பிறந்தேன். அதனால் மற்றவர்கள் போல் இல்லாமல் என் குழந்தைகளும் என்னைப் போலவே இருப்பார்கள். பரிணாமத்தின் உயர்ந்த இடத்தில. அதனால் என் இன ஆண்கள் என்னை அடைய விரும்பினர். ஆனால் யாரையும் எனக்குப் பிடிக்கவில்லை. அதில் விடாப்பிடியாக இருந்தவன் து-சீன். அவன் மிகப் பெரும் போராளி. அவனைப் பார்த்து என் தந்தையே நடுங்குவார். ஏனெனில் அவன் என் தந்தையிடம் இருந்து தலைவர் பதவியையும் பிடுங்கி விடுவான் என்று அவர் நினைத்தார். புதிதாக வந்த காலுக்கள் நிறைய பேர் அவனை ஆதரித்தார்கள். க்ரோலு இனத்தில் இருந்து புதிதாக காலுவாகி வந்தவர்கள் அனைவரும் அவன் பின்னால் சென்றனர். அவர்கள் எண்ணிக்கை பழைய முதிய காலுக்களை விட அதிகம் என்பதால் து-சீனின் ஆசைக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. அதனால் எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி என் தந்தையிடம் இருந்து தலைவர் பதவியைப் பறிக்க நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவன் என்னை விரும்பியதால் சிக்கல் இன்னும் அதிகமானது. நான் அவனைச் சிறிதும் விரும்பவில்லை. இப்படி இருக்கும் போது ஒரு நாள் என் அப்பாவின் காதுகளுக்கு ஒரு செய்தி வந்து சேர்ந்தது. அவன் வியரூவுடன் தொடர்பில் இருக்கிறான் என்று. ஒரு வேட்டுவன் காட்டில் இருந்து இரவில் வெகு தாமதமாக திரும்பி வந்து கொண்டிருந்த அவன் வியரூவுடன் து-சீன் ஆளரவம் இல்லாத தனி இடத்தில் கிராமத்தில் இருந்து வெகு தூரத்தில் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறான். அவர்கள் பேசியது இவன் காதுகளுக்கு தெளிவாகக் கேட்டிருக்கிறது. “நீ எனக்கு உதவி செய்தால் நான் உனக்கு உதவி செய்வேன். காலுக்கள் மத்தியில் இருக்கும் அனைத்துக் கோஸ்-ஆட்டா-லோக்களையும் உன்னிடம் இப்போதும் எதிர்காலத்திலும் ஒப்படைக்கிறேன். ஆனால் அதற்குப் பதில் நீ எங்கள் தலைவர் ஜோரைக் கொன்று அவனைப் பின்பற்றும் அனைவரிடத்திலும் ஒரு பயத்தைக் குழப்பத்தை உண்டு பண்ண வேண்டும்”

“என் தந்தை இதைக் கேட்டதும் மிகவும் கோபம் கொண்டார். ஆனால் அவர் என்னை நினைத்தும் பயப்பட்டார். நான் ஒரு கோஸ்-ஆட்ட-லோவாக இருந்ததால். அதனால் அவர் கேள்விப்பட்டதை என்னிடம் சொன்னார். து-சீனிடம் இருந்து தப்பிப்பதற்கு இரு வழிகள் உள்ளன என்றார். ஒன்று நீ து-சீனுடன் செல்ல வேண்டும். அதன் பின் அவன் உன்னை வியரூவிடம் கொடுக்க விரும்ப மாட்டான். குரூரமான அந்த உடன்படிக்கையைத் தொடர விரும்ப மாட்டான். அப்படிச் செய்தால் அவன் வம்சமும் அழியும். மற்றோர் வழி, நீ தப்பிச் செல்ல வேண்டும், அவன் தண்டிக்கப்படும் வரை. அதனால் நான் இரண்டாவது உபாயத்தைத் தேர்ந்தெடுத்தேன். தெற்கு நோக்கித் தப்பி ஓடினேன். காலுவின் நாட்டில் இருந்து சென்று விட்டால் வியரூவின் தொந்தரவும் இருக்காது. அவர் காலுக்களில் மேலானவர்களை மட்டுமே விரும்புவார். இதற்கு இரண்டு அருமையான காரணங்கள் உள்ளன. ஒன்று, ஆரம்பத்தில் இருந்தே வியரூ மற்றும் காலுக்களுக்கு நடுவில் பொறாமை இருந்திருக்க வேண்டும் யார் உலகை ஆள்வது என்று. பொதுவான அபிப்ராயம் என்னவென்றால் பரிணாமத்தில் எந்தவொரு இனம் தன் வம்சத்தின் இரு பாலாரையும் உருவாக்கிக் கொள்ளும் ஆற்றல் பெறும் இடத்திற்கு முதலில் வந்து சேருகிறதோ அந்த இனம்தான் மற்ற அனைத்து உயிரினங்களையும் ஆளும். வியரூதான் முதலில் தன் இனத்தின் பிள்ளைகளை உருவாக்கியது. அதன் பின் காலுவில் இருந்து வியரூவாவது குறைந்து மறைந்து போனது என்ன காரணம் என்றே தெரியாமல். ஆனால் வியரூ ஆண் பிள்ளைகளை மட்டுமே பெற்றது. அதனால்தான் எங்களிடம் இருந்து பெண்களைத் திருடிக் கொண்டு செல்கின்றனர். மேலும் கோஸ்-ஆட்டா-லோக்களைத் திருடிச் சென்றால் தாங்களும் இரு பாலினத்தவரையும் பெறும் ஆற்றல் கிடைக்கும் அதே நேரத்தில் எங்கள் இனத்தின் ஆற்றலும் பறி போகும். ஏற்கெனவே காலுக்கள் ஆண் பெண் இரு பால் பிள்ளைகளையும் பெறுகிறோம். ஆனால் வியரூ எங்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருவதால் சில குழந்தைகளே வளர்ந்து வாலிபப் பருவம் அடைகின்றனர். பெண் குழந்தைகளும் வெகு சிலரே திருடப்படாமல் இருக்கின்றனர். இது மிகவும் வினோதமான ஒரு சூழல். எங்களது பரம எதிரி எங்கள் இனம் மொத்தத்தையும் அழிக்க விரும்பவில்லை. ஏனெனில் அப்படி அழித்தால் அவர்களும் அழிந்து போக நேரும்.”

“எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து அனைத்து கோஸ்-ஆட்டா-லோக்களும் வளர்ச்சி அடைந்திருந்தால் நாங்கள் இவ்வுலகில் ஒரு வலிமையான இனமாக மாறி இருப்போம். எங்களுக்கு முன் அனைவரும் மண்டி இட்டு வணங்கி இருப்பர்.”

அஜோர் எப்போதும் கேஸ்பக் தாண்டி வேறெதுவும் இல்லாதது போலவே பேசுவாள். நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை இன்னும் அவள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. அதே போல் இந்தச் செங்குத்தான மலைப்பாறைகள் தாண்டியும் பல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதும் அவளுக்குப் புரியவில்லை. நான் வேறு ஒரு உலகில் இருந்து வந்திருக்கிறேன் என்றே அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அது எங்கு இருக்கிறது அங்கிருந்து நான் இங்கு எப்படி வந்தேன் என்பதைப் பற்றியெல்லாம் அவளது அழகான தலை சிந்திக்க மறுக்கிறது.

“அதனால் நான் ஓடி வந்து ஒளிந்து கொண்டேன். மலைச் சரிவு தாண்டி

காலு நாட்டில் இருந்து தெற்கு நோக்கி க்ரோலு நாட்டில் வந்து தங்கி இருக்கிறேன். இது மிகவும் ஆபத்தானதுதான். இருந்தாலும் வேறு வழி இல்லை.”

“மூன்றாம் நாள் இரவு எனது நாட்டிற்கு அருகில் உள்ள மலைக் குகையில் தங்கி இருந்தேன். அதன் மறு நாள் க்ரோலு நாட்டிற்குள் நுழைவதாக எண்ணி இருந்தேன் அங்குதான் வியரூவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம் என்று எண்ணி. ஆனால் அதை விட மிகப் பயங்கரமான விலங்குகள் மிகுந்த ஆபத்துக்களை விளைவித்தன. இருந்தாலும் ஒரு கோஸ்-ஆட்டா-லோவிற்கு எந்தவொரு விதியும் சிறந்ததே வியரூவின் பிடியை விட. ஏனெனில் அங்கு சென்றவர்கள் யாரும் திரும்பியதில்லை.”

“நான் வெகு நேரம் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சிறு சத்தம் கேட்டு விழிக்க நேர்ந்தது. நிலா நல்ல வெளிச்சமாய் வாசலை ஒளிரச் செய்து கொண்டிருந்தது. அங்கே வியரூவின் நிழலைக் கண்டேன். அங்கிருந்து வெளியேற வழியேதும் இல்லை. குகை குறுகலாக இருந்தது. நுழை வாயிலும் குறுகலாகவே இருந்தது. நான் அப்படியே அமைதியாய் இருந்தேன். அது இங்கே ஓய்வெடுக்கவே வந்திருக்கிறது நிச்சயம் அதன் பின் சென்று விடும் என்று நம்பிக்கை மேல் நம்பிக்கை வைத்து இருந்தேன். என்ன இருந்தாலும் அது என்னைத்தான் தேடி வந்திருக்கிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது.”

“நான் மூச்சு விடாமல் காத்திருந்தேன். அது மெதுவாக ஊர்ந்து என்னருகில் வருவதைக் கவனித்தபடி. குகையின் இருட்டின் நடுவில் அதன் பெரிய கண்கள் ஒளிர்ந்தன. இறுதியில் அதன் கண்கள் என்னை நோக்கியே இருப்பது புரிந்தது. ஏனெனில் வியரூவின் கண்களுக்கு இருட்டில் சிங்கம் புலியை விடக் கூர்மையான பார்வை உண்டு. ஒரு சில அடிகள்தான் இருக்கும். அப்போது வியரூவை நோக்கி ஒரு பைத்தியம் போல் கத்திக் கொண்டே அதன் மேல் பாய்ந்து எப்படியாவது வெளியேறி விட வேண்டும் என்று எண்ணினேன். அது சுத்த பைத்தியக்காரத்தனம்தான். தற்காலிகமாக நான் வெற்றி அடைந்திருந்தாலும் வியரூ நிச்சயம் மேலிருந்து என்னைப் பின் தொடர்ந்து வந்து நிச்சயம் கைப்பற்றி இருக்கும். ஆனால் அது முன்னேறி வந்து சட்டென்று என்னைப் பிடித்து விட்டது. நான் கொஞ்சம் திமிறினாலும் அது என்னைக் கட்டுப்படுத்தி விட்டது. அந்தச் சண்டையில் அதன் வெள்ளை உடை கிழிந்து விட்டது. அதனால் அதற்கு பெரும் கோபம் வந்து விட்டது. அதனால் ஆத்திரத்தில் அதன் இறக்கைகளை வேகமாக அசைத்தது.

“அது என் பெயரைக் கேட்டது. ஆனால் நான் பதில் சொல்லவில்லை. அதனால் அதன் கோபம் தலைக்கேறியது. இறுதியில் அது என்னைக் குகை வாசலுக்குத் தரதரவென்று இழுத்துச் சென்று என்னைக் கைகளில் எடுத்துக் கொண்டு தனது பெரிய இறக்கைகளை விரித்து அந்த அகால நேரத்தில் வானத்தில் பறந்தது. நிலவொளியில் ஒளிர்ந்த நிலப்பரப்பு என்னை விட்டு விலகுவதை நான் பார்த்துக் கொண்டே சென்றேன். அதன் பின் கடல் கடந்து வியரூவின் நாடான ஊவோவிற்குச் சென்றோம்.”

ஊவோவின் மங்கலான நிலப்பரப்பு கொஞ்சம் கொஞ்சமாக கண் முன்னே விரிய ஆரம்பித்தது. அப்போது எனக்கு மேல் விர்ரென்று இறக்கை அடிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது. அந்த வியரூவும் நானும் ஒரே நேரத்தில் மேலே பார்த்தோம். அங்கே இரண்டு பிரமாண்டமான ஜோவூக்கள் (பறக்கும் ஊர்வன விலங்குகள், டெரோடாக்ட்டில்) எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தன. வியரூ சட்டென்று வளைந்து செல்லும் போது கிட்டத்தட்ட கடல்மட்டத்தைத் தொட்டு விட்டது. அதன் பின் வேகமாகத் தெற்கு திசையை நோக்கிச் சென்றது அவைகளிடம் இருந்து தப்பிப்பதற்காக. அந்தப் பெரும் விலங்குகளும் எவ்வளவு பெரிதாக இருக்கின்றனவோ அந்தளவு வேகமாகவும் பறந்தன. ஆனால் வியரூக்கள் அவைகளை விட வேகமானவை. எனது எடையையும் சேர்த்தே அது மிக வேகமாக பறந்து அவைகளை முந்திச் சென்றது. இருந்தாலும் அதை விட வேகமாக அதனால் பறக்க முடியவில்லை. வேகமாக வீசும் காற்றை விட வேகமாக நாங்கள் தென் திசையில் கடல் கரையை ஒட்டிப் பறந்தோம். சில நேரம் நாங்கள் வெகு உயரத்திற்குப் பறந்தோம். அங்கே காற்று மிகவும் குளிராக இருந்தது. கீழே இருக்கும் உலகம் மங்கிய கோடுகள் போல் தெரிந்தன. ஆனாலும் அந்த விலங்குகள் எங்கள் பின்னாலேயே தொடர்ந்தன.”

“நாங்கள் வெகு தூரம் பயணித்து விட்டோம் என்று நன்றாகத் தெரியும். என் முகத்தில் அறையும் காற்றின் வேகமே சொல்லி விட்டது நாங்கள் எவ்வளவு வேகமாகச் செல்கிறோம் என்று. ஆனால் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு கட்டத்தில் வியரூ தன் பலம் குறைவதை உணர்ந்தேன். ஒரு ஜோவூ கிட்டத்தட்ட எங்களை நெருங்கி விட்டது. அதனால் அந்த வியரூ சட்டென்று திரும்பி மேற்குப் பக்கம் வளைந்தது. மேலும் மேலும் அவைகள் இடப் பக்கம் திருப்பிக் கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் அது கீழே இறங்கிக் கொண்டே இருந்தது. அதன் மூச்சும் பயங்கரமான சத்தத்துடன் கேட்டது. அதன் வலிமையான சிறகுகளும் இப்பொழுது மிகவும் பலமிழந்தது. நாங்கள் தரையில் இருந்து கிட்டத்தட்ட பத்து அடி இருந்திருப்போம். அப்போது அவைகள் எங்களை வளைத்து விட்டன. அது காட்டின் விளிம்புப் பகுதி. ஒரு ஜோவூ வியரூவின் வலது சிறகைப் பிடித்தது. அது தன்னை விடுவிக்க வேண்டி என்னை விட்டுவிட்டது. அதனால் நான் நிலத்தில் விழுந்து விட்டேன். பயத்துடன் நான் காட்டை நோக்கி ஓடினேன் ஒரு நல்ல மறைவிடம் தேடி. அங்கே இவைகளில் யாரும் என்னருகில் வரவே முடியாது. என்னைக் கவரவும் இயலாது. பிறகு நான் திரும்பிப் பார்க்கும் வேளை அந்த இரண்டு ஊர்வன விலங்குகளும் அந்த வியரூவைக் கிழித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன.

“நான் தப்பித்தேன். இருந்தாலும் தொலைந்து விட்டேன் என்பதை உணர்ந்தேன். காலுவின் நாட்டில் இருந்து எவ்வளவு தொலைவில் இருக்கிறேன் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. அதன் பின் பாதுகாப்பாக என் நாட்டிற்குத் திரும்ப முடியுமா என்று கூட நான் அறிந்திருக்கவில்லை”

“மறு நாள் காலை பொழுது புலர்ந்தது. வெகு விரைவில் விலங்குகள் தங்கள் பசிக்கு வேட்டையாடக் கிளம்பி விடும். என்னிடம் ஒரே ஒரு கத்தி மட்டுமே இருந்தது. என்னைச் சுற்றி வினோதமான நிலம் இருந்தது. பூக்களும் செடி கொடிகளும் மரங்களும் புற்களும் கூட என் வட நாட்டை விட மிகவும் வித்தியாசமாக இருந்தன. இப்போது எனக்கு முன்னால் அந்த வியரூவை விடக் கொடூரமான ஒரு விலங்கு இருந்தது. உடம்பு முழுவதும் முடியுடன் நேராக நிற்கவே சிரமப்படும் ஒரு விலங்கு நின்றது. அதைப் பார்த்து பயந்து நான் ஓட்டம் எடுத்தேன். பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் எனது முன்னோர்கள் சந்தித்த மறைவான ஆபத்துக்களில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள நான் ஓடினேன். என்னை விடாமல் அந்தக் காட்டு விலங்கு துரத்திக் கொண்டே வந்தது. அதன் பின் அதே போன்று இன்னும் சில விலங்குகளும் என்னைத் துரத்த ஆரம்பித்தன. அவர்கள் பேசாத மனிதர்களான ஆலுக்கள். அவர்களிடம் இருந்துதான் நீ என்னைக் காப்பாற்றினாய், டாம். அதன் பின் உனக்கு நான் செய்த சாகசங்கள் பற்றியெல்லாம் தெரியும். அதை எல்லாம் திரும்பவும் உனக்காகச் செய்வதற்கு சித்தமாய் இருக்கிறேன். ஏனெனில் அது என்னை உன்னிடம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதால்.”

அவள் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்காக நான் அவளைப் பாராட்டுகிறேன். அவள் ஒரு வலிமையான சிறு பெண் என்று எனக்கு நன்றாகப் புரிந்தது. யாரும் அவளுடைய நட்பை மிகவும் விரும்புவார்கள். ஆனால் அவள் என்னைத் தொடும் போது அவளது சாகசங்கள் என்னைக் கிளர்ச்சி அடையச் செய்யக் கூடாது என்று வேண்டிக் கொண்டேன். அது மிகவும் அசவுகர்யமாக இருந்தது. ஏனெனில் அது காதலை நினைவூட்டியது. எனக்குத் தெரியும் இது போன்ற ஒரு அரை வேக்காட்டுக் காட்டு மிராண்டியை நான் காதலிக்க முடியாது என்பது. அவள் வியரூவைப் பற்றிச் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது. ஏனெனில் இன்று வரை அது ஒரு புராணக் கதையில் வரும் பாத்திரம் என்று நினைத்திருந்தேன். அஜோர் அதைப் பற்றி முதலில் சொல்லும்போது மிகவும் பயந்தாள். அதனால் அவளிடம் அதைப் பற்றி நான் மேலும் பேசவில்லை. இருந்தாலும் வியரூ என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே இருந்தது.

வியரூவைப் பற்றி நான் அதிகம் தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன். இருந்தாலும் அதைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை இப்போது. ஏனெனில் நாங்கள் விழித்திருக்கும் நேரமெல்லாம் எங்களின் வாழ்வைப் பாதுகாப்பதிலேயே சென்று விடுகிறது. கேஸ்பக்கின் உயிரினங்களின் முக்கிய தொழிலே அதுதான், வாழ்வதற்கான தொடர்ச்சியான போர். தோமரும் சோ-ஆலும் க்ரோலு நாட்டிற்குச் செல்லத் தயாராகி விட்டனர். அதனால் அவர்களை நாங்கள் நீங்கும் நேரம் வந்து விட்டது. அவர்களுடன் சென்றால் இன்னும் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியது வரும். அவர்களையும் அது பேராபத்தில் இட்டுச் சென்று விடலாம். ஆனால் அனைவரும் எப்போதும் நண்பர்களாக இருப்பதாகவே வாக்களித்தோம். யாருக்காவது உதவி தேவை என்றால் கேட்க வேண்டும் அவ்வளவே. அவர்களின் விசுவாசத்தை என்றும் சந்தேகிக்கவே முடியாது அவர்களை மிகவும் பத்திரமாகக் க்ரோலு கிராமத்திற்கு நாங்கள் அழைத்து வந்து விட்டதால்.

இன்றுதான் நாங்கள் அனைவரும் சேர்ந்திருக்கும் கடைசி நாள். இன்று மத்தியானம் நாங்கள் பிரிய வேண்டும். தோமாரும் சோ-ஆலும் க்ரோலு நாட்டிற்குச் சென்று விடுவார்கள். நானும் அஜோரும் திரும்பிச் செல்ல வேண்டும் அம்பு விடும் அந்த கூட்டத்தினரின் கண்களில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால். அவர்கள் இருவரும் மிகவும் பதட்டமாக இருந்தனர் புதிய மனிதர்களைச் சந்திக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதால். இருந்தாலும் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தனர். ஒரு கூட்டத்தில் சேர்வதை எப்போதும் அவர்கள் வரவேற்பதால் தங்களுக்கு ஒரு பிரச்சினையும் நேராது என்று கூறினர். முதலில் இருந்த இடத்தைத் தாண்டிச் செல்லச் செல்ல மக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே செல்வதும் ஒரு காரணமாய் இருக்கலாம். தென் முனையில் ஹோலு அல்லது மனிதக் குரங்குகள் வசிக்கின்றன. அதன் பின் ஆலுக்கள். அவர்கள் ஹோலுக்களை விட எண்ணிக்கையில் குறைவு. அதே போல் போலுக்கள் ஆலுக்களை விடக் குறைவு. ஸ்தோலுக்கள் போலுக்களை விடக் குறைவு. அப்படியே சென்றால் க்ரோலுக்கள் எல்லோரையும் விடக் குறைவு. இங்கிருந்து இந்த விதி மாறுகிறது. காலுக்கள் க்ரோலுக்களை விட அதிகம். அஜோர் என்னிடம் விவரித்தது போல் இதன் காரணம் என்னவென்றால் பரிணாமம் காலுக்களுடன் முடிவடைகிறது. அவர்களுக்கு நடுவில் வளர்ச்சி குன்றியவர்கள் இல்லை. கோஸ்-ஆட்டா-லோக்களும் காலுக்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களும் சேர்ந்தே இருக்கிறார்கள். காலுக்கள் மேற்கு மற்றும் கிழக்கு கடற்கரை முழுவதும் இருக்கிறார்கள். மாமிசம் உண்ணும் ஊர்வன விலங்குகளும் வட திசையில் மிகவும் கம்மியே. தென் கோடியில் பலரைக் கொடூரமாகக் கொல்லும் அதி பயங்கரமான பூனை இன விலங்குகளும் குறைவுதான்.

இப்போது கிட்டத்தட்ட கேஸ்பக்கின் பரிணாம தத்துவம் பற்றி ஓரளவு எனக்குப் புரிந்து விட்டது. இவர்களுக்கு நடுவில் குழந்தைகள் ஏன் இல்லை என்பதற்கான காரணமும் ஓரளவு தெரிந்து விட்டது. ஆதியில் இருந்து வந்த பின் கேஸ்பக்கின் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் பரிணாமத்தின் ஒவ்வொரு படியிலும் செல்ல நேர்கிறது. அந்தப் படி நிலைகளில்தான் முதலில் தோன்றிய உயிரில் இருந்து இந்த பூமியில் தோன்றிய மனிதர்கள் வரை அனைவரும் பல யுகங்களாய்ப் பயணித்து வந்திருந்தனர். ஆனால் ஒரே ஒரு கேள்விதான் இன்னும் புதிராகவே இருக்கிறது. எது ஆதியில், கோர்-ஸ்வ-ஜோவில் உயிரைப் படைக்கிறது.

நான் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன். ஆலுக்களின் நாட்டில் இருந்து வடக்கு நோக்கி செல்லச் செல்ல நிலம் சிறிது சிறிதாக மேலேறிக் கொண்டே செல்கிறது. இப்போது நாங்கள் கிட்டத்தட்ட கடல் மட்டத்தில் இருந்து ஒரு நூறடி உயரத்திலாவது இருப்போம். காலுக்களின் நாடு இன்னும் உயரமாய் குளிராய் இருக்கும் என்று அஜோர் சொன்னாள். அதனால்தான் அங்கு ஊர்வன விலங்குகள் கம்மியாக உள்ளன. கீழ்நிலை விலங்குகளின் வகைகள் மற்றும் தோற்றங்களில் இருக்கும் மாற்றங்கள் மனிதனின் பரிணாம நிலைகளைக் காட்டிலும் அதிகமாய் இருந்தன. குள்ளமான குதிரை கடினமான தோல்களுடன் வலிமையுள்ள மட்டக் குதிரையாக இருக்கிறது க்ரோலு நாட்டில். நான் சிறு சிங்கம் மற்றும் புலிகளை அதிகமாகக் கண்டிருக்கிறேன். பெரியதும் இன்னும் இருக்கின்றன. முடிகள் அதிகம் கொண்ட காட்டு யானைகளும் நிறைய உள்ளன. அதே போல் புதிர்நெறிப் பற்கள் கொண்ட விலங்குகளின் வகைகளும் மிக அதிகமாக இருந்தன. இந்த விலங்குகள், இவைகளிடம் இருந்து என்னைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும், தென் கோடியில் இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் அவைகள் க்ரோலு காலு நாடுகளில் விவரிக்கவே இயலாத காரணங்களால் அவைகளின் பெரிய உருவங்களை எப்படியோ புகுத்தி விட்டன. இருந்தாலும் அவைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவே. அவைகள் ஆரம்ப நிலை உயிர்களாக இருக்க வேண்டும். கேஸ்பக்கில் அவைகள் கிட்டத்தட்ட அழிந்து விடும் சூழலில் இருக்கின்றன. ஆனால் அவைகள் எங்கிருந்தாலும் எல்லாவித உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன.

அப்போது நண்பகல் இருக்கும். தோமரும் சோ-ஆலும் விடை பெற்றுக் கொண்டிருந்தனர். நாங்கள் க்ரோலு கிராமத்தில் இருந்து வெகு தூரத்தில் இல்லை. ஒரு வகையில் நாங்கள் நினைத்ததை விட அருகில் சென்று விட்டோம். இப்பொழுது அஜோரும் நானும் கடற்கரையை நோக்கித் திரும்பிச் செல்ல வேண்டும். எனது நண்பர்கள் இருவரும் நேரடியாக க்ரோலு நாட்டின் அதிபதியைக் காணச் செல்ல வேண்டும்.

அஜோரும் நானும் ஓரிரண்டு மைல் தூரம் சென்றிருப்போம். அடர்ந்த காட்டில் இருந்து கிட்டத்தட்ட வெளியே சென்று விட இருந்தோம். அப்போது நான் கண்ட காட்சி என்னைச் சட்டென்று பின் வாங்கி மறைவிடம் நோக்கி இழுத்தது. அதே நேரத்தில் அஜோரையும் இழுத்துக் கொண்டேன். அங்கே பாண்ட்லு வீரர்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். பெரிய கடுமையான முகம் கொண்டவர்கள். அவர்கள் நடந்து சென்று கொண்டிருக்கும் திசையைப் பார்த்தால் அவர்கள் தங்கள் குகைக்குத் திரும்பி கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றியது. நாங்கள் இருந்த இடத்தில் நின்று கொண்டிருந்தால் நிச்சயம் எங்களை அவர்கள் பார்க்காமலேயே கடந்து சென்று விடக் கூடும்.

இப்போது அஜோர் என்னை இடித்தாள். “அவர்களிடம் ஒரு கைதி இருக்கிறான்” என்று கிசுகிசுத்தாள். “அவன் ஒரு க்ரோலு”

அதன் பின் நான் அவனைப் பார்த்தேன். நான் பார்த்ததிலேயே முழுதாக வளர்ந்திருந்த முதல் க்ரோலு அவன். பார்ப்பதற்கு அருமையாய் இருந்த ஒரு காட்டுமிராண்டி அவன். உயரமாய் நேராய் ஒரு அரச குடும்பத்தைப் போல் இருந்தான். தோமரும் அழகானவன்தான். ஆனால் இவனது உடம்பின் ஒவ்வொரு அங்கமும் பரிணாமத்தில் ஒரு படி மேலே இருந்தன. தோமர் இப்பொழுதுதான் க்ரோலுவாகப் போகிறான். ஆனால் இவன் பரிணாமத்தின் அடுத்த கட்டத்தில் இருந்தான் கிட்டத்தட்ட ஒரு காலுவாக.

“அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள்” என்று நான் அஜோரிடம் முணுமுணுத்தேன்.

“மரணத்தின் நடனம்” என்று பதில் சொன்னாள். அதைக் கேட்டு என் உள்ளமே குலுங்கியது. இப்பொழுதுதான் நான் அதில் இருந்து தப்பிப் பிழைத்து இருக்கிறேன். மிகவும் பாதுகாப்பாக பயங்கரமான அனைத்துக் கட்டங்களையும் தாண்டி வந்த ஒரு மனிதன் இப்படி அநியாயமாக அதே இலக்கின் காலடியிலேயே உயிரை விடுவதென்பதே ஒரு கொடூரம். நான் எனது துப்பாக்கியை எடுத்து அதில் ஒரு பாண்ட்லுவை நோக்கிக் குறி வைத்தேன். அவனைச் சுட்டால் இன்னொருவனும் சாவான். ஏனெனில் அவனுக்கு நேர் பின்னாடி இன்னொருவன் இருந்தான்.

அஜோர் எனது கையைத் தொட்டாள். “என்ன செய்யப் போகிறாய். அவர்கள் அனைவருமே நம் எதிரிகள்” என்றாள் அவள்.

“நான் அவனை மரணத்தின் நடனத்தில் இருந்து காப்பாற்றப் போகிறேன். எதிரியோ இல்லையோ.” என்று பதில் அளித்தபடியே துப்பாக்கி விசையை அழுத்தினேன். உடன் அந்த இரு பாண்ட்லுக்களும் குப்புற விழுந்தார்கள். அஜோரிடம் சுழல் துப்பாக்கியைக் கொடுத்து விட்டு எனது கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு குழம்பிப் போய் இருந்த கூட்டத்தை நோக்கிச் சென்றேன். அவர்கள் எங்கும் ஓடவில்லை கேஸ்பக்கின் சில கீழ்நிலை மனிதர்களைப் போல இல்லாமல். என்னைப் பார்த்ததும் பேய் போல் கூச்சலிட்டுத் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் தலைகளுக்கு மேல் சுழற்றிக் கொண்டே என்னை நோக்கி வந்தார்கள்.

அந்த க்ரோலு அமைதியாக நின்று நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தான். அவன் தப்பிப்பதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. அவனது கால்கள் கட்டப்படவில்லை. அவன் பக்கத்திலும் வேறெந்த பாண்ட்லுக்களும் காவல் நிற்கவில்லை. ஒரு பத்து பாண்ட்லுக்கள் என்னை நோக்கி வந்தனர். ஒரு மனிதன் மூன்று எண்ணுவதற்குள் நான் மூன்று பேரைச் சுட்டு வீழ்த்தினேன். அதன் பின் எனது சுழல் துப்பாக்கி இடது தோள்பட்டைக்கருகில் பேசியது. அப்போது ஒருவன் பல்டி அடித்து உருண்டு உருண்டு விழுந்தான். துணிவான பெண் அஜோர்! அவள் அதற்கு முன் எப்போது துப்பாக்கியால் தன் வாழ்நாளில் சுட்டதில்லை, நான் அவளுக்குக் குறி பார்த்து விசையை இழுக்காமல் எவ்வாறு நெருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருந்த போதிலும். அவள் அதைப் பலமுறை பயிற்சி செய்திருந்தாலும் இவ்வளவு அருமையான குறிவல்லவளாக இவ்வளவு சீக்கிரம் தேறுவாள் என்று நான் நினைக்கவில்லை.

ஆறு பேரை எளிதாகச் சாய்த்து விட்டோம். மீதி இருந்த ஆறு பேரும் சிறு புதர்களுக்குள் சென்று பதுங்கிக் கொண்டு அடுத்து எப்படித் தாக்குவது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அப்படியே சென்று விட வேண்டும் என்று நான் வேண்டிக் கொண்டேன். ஏனெனில் எனது குண்டுகளை நான் வீணடிக்க விரும்பவில்லை. அவர்கள் யாராவது திரும்பத் தாக்க வந்து விடுவார்கள் என்றும் பயமாகத்தான் இருந்தது. ஏனெனில் அவர்கள் ஏற்கெனவே மிகவும் அருகில்தான் இருந்தார்கள். ஒருவன் திடீரென்று தனது ஈட்டியை எறிந்தான். அதன் வேகம் நான் பார்த்ததிலேயே அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. அவன் அப்போது முழுவதும் நேராக நின்று கூட அதை எறிந்திருக்கவில்லை. அந்த ஆயுதம் பாதி வழியில் இருக்கும் போது நேராக ஒரு அம்பு போல் அஜோரை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தது. அவள் உயிருக்கு ஆபத்து இருக்கும்போது நான் என் வாழ்க்கையில் சிறந்த சூட்டை நிகழ்த்தினேன். நான் சற்றும் குறி பார்க்கவில்லை. தற்காப்பை விடச் சிறந்த ஒரு உணர்ச்சியில் என்னையும் அறியாமல் என் கை சுட்டது. அஜோர் ஆபத்தில் இருக்கிறாள்! அதே நேரத்தில் எனது துப்பாக்கி சரியான கோணத்தில் இருக்க அதில் இருந்து கிளம்பிய வெடி மருந்து தீப்பொறி கக்கிக் கொண்டு துப்பாக்கிக் குழலில் இருந்து குண்டு செல்லும் திசையைக் காட்டிக் கொண்டே சென்றது. ஈட்டியின் முனை சிதறியதால் அது தன் பாதையில் இருந்து விலகியது. ஏமாற்றத்தினால் பெரிதாகக் குரைத்து விட்டு அவர்கள் அனைவரும் தெற்கு நோக்கி மறைவிடத்தில் இருந்து எழுந்து ஓடி விட்டனர்.

நான் அஜோரைப் பார்த்தேன். அவள் கண்கள் விரிய முகம் வெளிறிப் போய் இருந்தது. மரணத்தின் கோரப் பிடி அவளைப் பிடித்து விலகியது. அதன் பின் ஒரு சிறிய புன்னகை உதட்டில் தோன்றியது. அவள் கண்களில் ஒரு பெருமிதம் குடி கொண்டது. “என் டாம்” என்று சொல்லி என் கைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் “என் டாம்” என்று மட்டுமே சொன்னாள். பின் சற்று என் கைகளை அழுத்தினாள். அவளது டாம்! எனது நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று சுழன்றது. இது மகிழ்ச்சியா இல்லை பீதியா. இருக்கவே முடியாது. நான் உடனே என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன் முரட்டுத்தனமாக.

“வா!” என்று அவளை அழைத்துக் கொண்டு க்ரோலு கைதியை நோக்கிச் சென்றேன்.

அந்தக் க்ரோலு எங்களை அலட்சியமாகப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான். நாங்கள் அவனைக் கொன்று விடுவோம் என்று நினைத்திருப்பான். அப்படியே நினைத்திருந்தாலும் அவன் பயப்பட்டது போல் தோன்றவில்லை. அவனது கண்கள் எனது கைத்துப்பாக்கியையும் அஜோர் வைத்திருந்த சூழல் துப்பாக்கியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. அவனது கைக் கட்டுகளை நான் அவிழ்த்தேன். அப்படிச் செய்யும் போது அவனது முகத்தில் ஆச்சர்யம் ததும்பியது. அவன் புதிராக என்னைப் பார்த்தான்.

“நீங்கள் என்னை என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டான்.

“உன்னை விடுதலை செய்கிறேன்.” என்று பதில் அளித்தேன். “விரும்பினால் உன் வீட்டிற்கு நீ செல்லலாம்”

“ஏன் நீ என்னைக் கொல்லவில்லை?” என்று கேட்டான். “என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை.”

“நான் ஏன் உன்னைக் கொல்ல வேண்டும்? நான் எனது மற்றும் இந்த இளையவளின் உயிரைப் பணயம் வைத்து உன்னைக் காப்பாற்றி இருக்கிறேன். ஏன் நான் அதைத் திரும்ப எடுக்க வேண்டும்?” நிச்சயம் நான் இளையவள் என்று அவளைச் சொல்லவில்லை. ஏனெனில் கேஸ்பக் மொழியில் அதற்கு நிகரான சொல்லே இல்லை. அதனால் அதை மொழி பெயர்க்கும் போது எனக்கான முழு சுதந்திரத்தையும் நான் வழங்கிக் கொண்டேன். ஒரு அழகான இளம் பெண்ணை எப்போதும் “அவள்” என்ற பதத்தால் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அது அந்தளவு பொருத்தமாக இருக்காது.

அந்தக் க்ரோலு என்னையே உறுத்துப் பார்த்தான் ஒரு நிமிடம். அதன் பின் பேச ஆரம்பித்தான்.

“வித்தியாசமான தோல் உடைய மனிதனே, நீ யார்?” என்று கேட்டான். “உனது அவள் ஒரு காலு. ஆனால் நீ காலுவும் அல்ல, க்ரோலு பாண்ட்லு போன்றவர்களும் அல்ல. உன்னைப் போல் ஒருவனை இதுவரை நான் பார்த்ததும் இல்லை. வீரத்தில் வலிமையானவனாகவும் எதிரியில் கருணை நிரம்பியவனாகவும் இருக்கிறாய்”

“அது ஒரு பெரிய கதை” என்று நான் பதில் அளித்தேன். “இருந்தாலும் சுருக்கமாக சொல்வதென்றால், நான் கேஸ்பக் மனிதன் அல்ல. நான் இந்த மண்ணுக்குப் புதியவன். மேலும் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கெல்லாம் எதிரியும் அல்ல. நான் இங்குள்ள மனிதர்கள் யாருக்கும் எதிரியாக இருக்க விரும்பவில்லை ஒருவனைத் தவிர. அவன் து-சீன்.”

“து-சீன்” என்று அவன் ஆச்சர்யத்தோடு உச்சரித்தான். “நீ து-சீனின் எதிரியா. எப்படி”

“ஏனெனில் அவன் அஜோரைத் தொந்தரவு செய்கிறான்.” என்று பதில் அளித்தேன். பின் “அவனை உனக்குத் தெரியுமா” என்று வினவினேன்.

“அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை” என்று அஜோர் பதில் அளித்தாள். “து-சீன் க்ரோலுவிடம் இருந்து வெகு காலத்திற்கு முன்பே பிரிந்து விட்டான் வேறு ஒரு பெயருடன். வேறொரு இனத்திற்குள் செல்லும் முன் இப்படித்தான் எல்லோரும் செய்வார்கள். அவனுக்குத் து-சீன் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் க்ரோலு காலுக்கள் நடுவில் எந்தவித ஒட்டுறவும் கிடையாது.”

அந்த வீரன் புன்னகைத்தான். “து-சீன் சென்று வெகு காலம் ஆகி விடவில்லை” என்றான். “அவனை நான் மறப்பதற்கு. கேஸ்பக்கின் பழங்காலச் சட்டங்களை எல்லாம் உடைத்தெறிவதற்கு அவனே புறப்பட்டு விட்டான். அவன் ஒரு க்ரோலு பெண்ணிடம் உறவு வைத்திருக்கிறான். அவன் காலுக்களின் தலைவனாக ஆகி விடலாம். ஆனால் அவன் க்ரோலுக்களிடம் உதவி கேட்டு வந்தான்”

அஜோர் வெளிறிப் போய் விட்டாள். அது நம்பவே முடியாததாக இருந்தது. க்ரோலு காலுக்கள் எப்போதும் நட்புடன் பழகியதில்லை. கேஸ்பக்கின் காட்டுச் சட்ட திட்டங்களில் அவர்கள் எப்போதும் முரட்டுத்தனமான எதிரிகளாகவே இருந்தார்கள். அனைத்து இனங்களும் அப்படித்தான் அங்கு தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.

“க்ரோலு அவனிடம் சேர்ந்து கொள்வார்களா?” என்று அஜோர் கேட்டாள். “அவர்கள் என் தந்தையான ஜோரின் நாட்டின் மீது போர் தொடுப்பார்களா?”

“க்ரோலுவின் இளையவர்கள் எல்லாம் அதை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.” என்று பதில் சொன்னான் அந்த வீரன். “ஏனெனில் அப்பொழுதுதான் அவர்கள் விரைவில் காலுவாகி விட முடியும் என்று நம்புகிறார்கள். சாதாரணமாக பல ஆண்டுகள் பொறுமையாய்க் காத்திருப்பதை விட ஒரே அடியில் அங்கு சென்று விட விரும்புகிறார்கள். முதியவர்களான நாங்கள் அவர்களுக்கு எடுத்துச் சொன்னோம். நீங்கள் அவர்களது இடத்திற்குச் சென்று அந்தத் தங்க மனிதர்களின் ஆடை அணிகலன்களை அணிந்தாலும் அதற்கான பருவம் வரும் வரை காலுவாகி விட முடியாது என்பதை உணர்த்தினோம். அப்படியே இருந்தாலும் அவர்கள் ஒரு முழுமையான உண்மையான காலு இனமாகி விட முடியாது. ஏனெனில் அவர்களில் சில பேர் என்றுமே எழுந்து விடும் வாய்ப்பும் கிட்டாமல் போகலாம். காலுவின் நாட்டை எப்போதாவது சென்று கொள்ளை அடித்து வாழலாம். ஆனால் அதைப் பிடித்து வைத்துக் கொண்டு பாதுகாக்க நினைப்பது முட்டாள்தனம். என்னைப் பொறுத்தவரை அந்த அழைப்பு வரும் வரை நிம்மதிதான். அனால் அது எந்நேரம் வேண்டுமானாலும் வரலாம்.”

“உன் பெயரென்ன?” என்று அஜோர் கேட்டாள்.

“சால்-ஆஸ்” என்றான் அந்த மனிதன்.

“நீதான் க்ரோலுக்களின் தலைவனா?” என்று தொடர்ந்தாள்.

“இல்லை. அது ஆல்-டான். அவன்தான் கிழக்குப்புறம் இருக்கும் க்ரோலுக்களின் தலைவன்.” என்று பதில் அளித்தான் சால்-ஆஸ்.

“அவன் எனது தந்தையின் நாட்டைக் கைப்பற்ற எதிர்ப்பு தெரிவிக்கிறான். இல்லையா?”

“துரதிர்ஷ்டவசமாக அவன் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறான்.” என்று பதில் அளித்தான் அவன். “அவன் தன்னை ஒரு பாட்டுவாகத்தான் இன்னும் நினைக்கிறான். நான் பாண்ட்லு இனத்தில் இருந்து வந்ததில் இருந்தே அவன் தலைவனாய் இருக்கிறான். இவ்வளவு ஆண்டுகளாய் அவனிடம் எந்தவித மாற்றத்தையும் நான் காணவில்லை. அவன் இன்னும் பாண்ட்லுவாகத்தான் இருக்கிறான், க்ரோலுவாக மாறிவிடவில்லை. இருந்தாலும் அவன் நல்ல தலைவன். பலசாலியான வீரன். து-சீன் அவனைத் தன் வயப் படுத்தி விட்டால் காலுக்கள் ஒரு க்ரோலுவின் தலைமையின் கீழ்தான் வாழ வேண்டி இருக்கும். ஏனெனில் ஆல்-டான் தலைமைக்கு கீழே எந்தவித பதவியையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அதனால் வெற்றிகரமாக அங்கு அவன் கால் பதித்து விட்டால் லேசில் பின் வாங்க மாட்டான்.”

நான் அவனிடம் பாட்டுவென்றால் என்னவென்று கேட்டேன். இதற்கு முன் அந்தச் சொல்லைக் கேள்விப்படவில்லையென்பதால் கேட்டேன். அதை அப்படியே மொழியாக்கம் செய்தால், அதன் அர்த்தம் ஆனது, முடிந்து விட்டது, கடந்து விட்டது, இனி எதுவும் செய்ய இயலாது, என்று பொருள் படும். கேஸ்பக்கில் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைக் குறிக்க அந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருந்து ஒரு உண்மையும் புலனாகிறது. எல்லோரும் தங்கள் இனத்தில் இருந்து காலுவாகி விடவும் முடியாது. சிலர் ஆலுவையே தாண்டுவதில்லை. மற்றும் சிலர் போலுக்களாகவும் ஸ்தோலுக்களாகவும் பாண்ட்லூக்களாகவும் க்ரோலுக்களாகவும் தங்கள் வாழ்க்கையை முடித்து விடுகிறார்கள். ஹோலுவின் முதல் தலைமுறையினர் ஆலுவாக முடியும். ஆலுவின் இரண்டாம் தலைமுறையினர் போலுவாகலாம். போலுக்கள் பாண்டலு ஆவதற்கு மூன்று தலைமுறைகள் தேவைப்படும். இப்படியே பார்த்தோமானால் க்ரோலுக்களின் பெற்றோர்கள் ஆறாம் தலைமுறையினராய் இருப்பார்கள்.

இவ்வளவு தூரம் விளக்கிய பின்னும் எனக்கு இன்னும் அது முற்றிலும் விளங்கவில்லை. ஏனெனில் குழந்தைகளே இல்லாமல் எப்படி ஒரு இனத்தில் பல தலைமுறைகள் இருக்க முடியும். இருந்தாலும் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக கேஸ்பக்கின் பரிணாம வளர்ச்சியையும் இனப்பரவுதலையும் கட்டுப்படுத்தும் வினோதமான சட்டங்கள் பற்றிய வெளிச்சக்கீற்று என்னுள் பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு காட்டு இன மக்களின் வசிப்பிடங்களில் எப்போதும் அருகில் இருக்கும் வெது வெதுப்பான குட்டைகளுக்குக் கேஸ்பக்கின் பரிணாம வளர்ச்சியோடு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று எனக்கே ஏற்கெனவே நன்றாகத் தெரியும். எதோ ஒரு இயற்கை விதிக்கு உட்பட்டு அந்தக் கொழ கொழப்பான பச்சை நிற நீரில் தினமும் நீராடும் பெண்களுக்கு அதில் எந்தவிதமான மகிழ்ச்சியோ உடல் தூய்மையோ கிடைத்து விடப்போவதில்லை. இருந்தாலும் ஒருவித மத அடையாளமாகவே அதை அவர்கள் செய்கிறார்கள். இருந்தபோதும் அப்பொழுது நான் கடலில் இருந்தேன். அஜோரும் எனக்கு விவரிக்க முடியவில்லை. ஏனெனில் அவள் பயன்படுத்திய சொற்கள் எனக்குப் புரியவில்லை. அவளால் அதற்கு மேல் விவரிக்கவும் இயலவில்லை.

நாங்கள் அப்படி நின்று பேசிக் கொண்டிருக்கும் போது எங்களுக்கு அருகில் இருந்த புதரின் அசைவிலும் அருகில் இருந்த மரங்களுக்கு அருகில் ஏற்பட்ட ஒலியினாலும் நாங்கள் திகைத்துத் திரும்பினோம். அங்கே ஒரு நூறு க்ரோலு வீரர்கள் எங்களைச் சுற்றி வளைத்து விட்டனர். அவர்கள் சால்-ஆசை நோக்கிச் சரமாரியாகக் கேள்வி கேட்ட வண்ணம் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தனர். அவர்களது கனமான விற்களில் நீண்ட கூரிய அம்புகள் பூட்டப்பட்டிருந்தன. அவர்கள் என்னையும் அஜோரையும் பார்த்த பார்வையில் முதலில் ஒரு ஆவல் தெரிந்தது. பின்னர் ஒரு சந்தேகமும் படர்ந்தது. ஆனால் சால்-ஆசின் கதையைக் கேட்ட பின் எங்களிடம் நட்பாய்ப் பழகினார்கள். ஒரு பெரிய காட்டுமிராண்டிதான் அனைத்தையும் பேசினான். அவன் ஒரு பெரிய மலை போன்று இருந்தாலும், சரியான அளவெடுத்துத் தைத்தது போல் இருந்தான்.

“இவர்தான் ஆல்-டான், எங்களது தலைவர்” என்று அறிமுகப் படுத்தினான் சால்-ஆஸ். அதன் பின் அவன் எனது கதையைக் கூறினான். ஆல்-டான் நான் எங்கிருந்து வருகிறேன் என்றும் அந்த நிலத்தைப் பற்றியும் அடுக்கடுக்காய்க் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தான். அந்த வீரர்களும் எங்களது பதிலைக் கேட்பதற்கு அருகில் குழுமி விட்டனர். பலவிதமான அவநம்பிக்கையான குரல்கள் எழும்பின அவர்களைப் பொறுத்தவரை வேறோர் உலகமான ஒன்றைப் பற்றி நான் பேசும்போதும், பெருங்கடலைத் தாண்ட படகைப் பயன்படுத்தியது பற்றிப் பேசும்போதும், ஜோ-ஊவைப் போன்ற ஒரு விமானத்தில் ஏறி செங்குத்தான மலைப்பாறைகளைத் தாண்டியது பற்றிப் பேசும்போதும். நீரிலும் செல்லும் விமானத்தைப் பற்றி நான் குறிப்பிட்டவுடனே பலத்த சந்தேகங்களைக் கிளப்பினார்கள். அப்பொழுதுதான் அஜோர் எனக்கு உதவி புரிந்தாள்.

“நான் எனது இரு கண்களால் அதைப் பார்த்தேன்!” என்று சொன்னாள். “அவர் ஜோ-வூவுடன் அதில் பறந்து சண்டை போடுவதை நான் பார்த்தேன். ஆலுக்கள் என்னைத் துரத்தி வந்தனர். இதைப் பார்த்ததும் பயந்து ஓடி விட்டனர்.”

“யார் இவள்.” என்று ஆல்-டான் திடீரென்று கேட்டான். அவனது கண்கள் அஜோரைக் கோபமாய்ப் பார்த்தன.

ஒரு கணம் அங்கே ஒரு அமைதி நிலவியது. அஜோர் என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் கேள்வி தொக்கி நின்றது. மனதில் ஏற்பட்ட ஒருவித வலியோடு என்னைப் பார்த்தாள். “யாருடைய அவள்” என்று திரும்பவும் கேட்டான்.

“அவள் என்னவள்” என்று பதில் சொன்னேன். எந்தவொரு விசை என்னை அப்படிச் சொல்லத் தூண்டியது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு நிமிடம் கழித்து அப்படிச் சொன்னதற்காக நான் மகிழ்ந்தேன். ஏனெனில் அஜோரின் மகிழ்ச்சியான மற்றும் பெருமிதமான முகமே எனக்கொரு வெகுமதி கொடுத்தது போல் இருந்தது.

ஆல்-டான் அவளையே சிறிது நேரம் பார்த்து விட்டு என்னிடம் திரும்பினான். “உன்னால் அவளை வைத்துக் கொள்ள முடியுமா?” என்று கேட்டான். அவன் குரலில் ஒருவித ஏளனம் தொற்றிக் கொண்டிருந்தது.

நான் எனது உள்ளங்கையில் துப்பாக்கியை எடுத்துக் கொண்டே சொன்னேன் என்னால் முடியும் என்று. அவன் எனது நடவடிக்கையைக் கவனித்தான். உறையில் இருந்து துருத்திக் கொண்டிருந்த அந்தத் தானியங்கித் துப்பாக்கியை நான் ஏந்தி இருப்பதைக் கவனித்தவன் மெல்லப் புன்னகைத்தான். பின் தன் தலையைத் திருப்பி கர்வத்தோடு வில்லைத் தூக்கி அம்பைப் பொருத்தி நாணை வெகு தூரம் இழுத்தான். அவனது வீரர்களின் முகங்கள் ஆணவப் புன்னகை பூத்திருந்தன. அவனை அமைதியாக அனைத்துக் கண்களும் நோக்கின. அவனது வில்தான் அவர்களிடையே மிகவும் பெரிது. வலிமையானதும் கூட. அதை வளைப்பதற்கும் அவனை விட்டால் வலிமையானவனும் அங்கு இல்லை. ஆல்-டான் அவனது இடது கையின் சுட்டு விரலை அம்பின் கல்லால் ஆன கூரிய நுனி தொடும் வரை வில்லை வளைத்தான். அது அவனுக்கு அவ்வளவு எளிமையான விஷயமாக இருந்தது. அதன் பின் அதைத் தனது வலது கண்ணுக்கு நேராக வைத்து ஒரு கணம் குறி பார்த்து விட்டு அம்பை எய்தான். அது பாய்ந்து நின்ற நேரம் ஒரு ஐம்பதடி தூரத்தில் இருந்த மரத்தினைத் துளைத்துப் பாதி மரத்தின் மறுபுறம் வெளியே நின்றது. ஆல்-டானின் வீரர்கள் மனம் நிறைய பெரும் நிறைவோடு என்னைப் பார்த்தார்கள். அதன் பின் அந்தத் தலைவன் இங்கும் அங்கும் ஓடினான். தனது கரங்களை மடக்கிப் பலம் காண்பித்தான். கடற்கரை விளையாட்டில் பரிசுக்காகப் போராடும் வீரன் ஒருவனைப் போல் இந்த உலகத்திற்குத் தன் வீரத்தைப் பறைசாற்றினான். அஜோருக்கு அது ஒரு சிறிய பொழுது போக்காக இருந்திருக்கும்.

அதற்கு உடனே ஒரு பதிலடி தேவைப்பட்டது. அதனால் ஒரே மூச்சில் நான் எனது துப்பாக்கியை எடுத்தேன். எடுத்தவுடன் சட்டென்று இன்னும் ஆடிக் கொண்டிருந்த அந்த அம்பை நோக்கிச் சுட்டேன். வெடிச் சத்தம் கேட்டவுடன் அந்த க்ரோலு வீரர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைத் தூக்கினார்கள். ஆனால் நான் சிரித்துக் கொண்டே இருந்ததால் அவர்கள் நிலைமை புரிந்து உள்ளே வைத்தனர். பின் எனது கண்கள் நோக்கும் திசையில் அந்த மரத்தை உற்று அவர்கள் கவனித்தனர். அங்கே அம்பைக் காணவில்லை. மரத்தில் ஒரு ஓட்டைதான் இருந்தது எனது குண்டு சென்ற பாதையைக் காட்டிக் கொண்டு. என்னைக் கேட்டால் அது மிகவும் அருமையான சுடல் என்றுதான் சொல்வேன். இல்லையெனில் தேவைதான் அந்த குண்டைச் சரியாகப் பயணிக்க வைத்திருக்கிறது. எனக்கு அப்போது ஒரு நல்ல சுடல் தேவையாய் இருந்தது. எனது மேன்மையைப் போருக்குத் தயாரான இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்திற்கு நடுவில் நான் நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயம். அதன் பலன் உடனடியாகத் தெரிய ஆரம்பித்தது. ஆனால் அது எனக்குச் சாதகமாக இருக்குமா என்பதுதான் புரியவில்லை. நான் அவனுக்குத் தொந்திரவு தராத ஒரு உயிர் என்று போனால் போகிறதென்று என்னை விட்டு விடுவான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் முக பாவங்கள் எனக்குச் சாதகமாக இல்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கும் ஒன்றுமில்லை. ஏனெனில் அவனது இடத்திற்கே வந்து அவனது வீரர்களுக்கு முன் அவனது வித்தையிலேயே அவனைத் தோற்கடித்ததை யாரால்தான் ஏற்றுக் கொள்ள முடியும். அப்படி ஒரு அகம்பாவத்தை எந்த ஒரு மன்னன், காட்டுமிராண்டி அல்லது ஒரு நாகரிக மனிதன்தான் மன்னித்து ஏற்றுக் கொள்வான். அவன் கோபத்தில் கொப்பளித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு அவனுடனான நட்பைத் துண்டித்து அஜோருக்காகவாவது அப்படியே என் வழியில் சென்று விடலாம் என்று நினைத்தேன். அப்படிச் செய்தபோது அவன் கைகளைக் குறுக்கே மறித்துத் தடுத்தான். பின் அவனது வீரர்களும் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“இதுக்கு என்ன அர்த்தம்” என்று கேட்டேன். ஆல்-டான் பதில் சொல்வதற்குள் எங்களுக்காக சால்-ஆஸ் தனது குரலை உயர்த்திப் பரிந்து பேசினான்.

“இதுதான் க்ரோலு இனத் தலைவன் ஆல்-டானின் நன்றி உணர்ச்சியா?” என்று கேட்டான். “உனது வீரர்களில் ஒருவனை பாண்ட்லு மக்களின் மரண நடனத்தில் இருந்து காப்பாற்றியதற்கு இது தான் நீ கொடுக்கும் பரிசா?”

ஆல்-டான் ஒரு கணம் அமைதியாக இருந்தான். பின் அவனது இமைகள் இயல்பு நிலைக்கு வந்தன. கஷ்டப்பட்டு ஒரு புன்னகையைத் தவழ விட்டுச் சொன்னான். “இந்தப் புதியவனுக்கு எந்தவித அசம்பாவிதமும் நேராது. அவன் நமது கிராமத்தில் இன்று தங்கி விருந்து சாப்பிட்டுச் செல்ல வேண்டும் என்பதைச் சொல்லத்தான் நான் தடுத்தேன். நாளைக் காலை அவன் இங்கிருந்து செல்லலாம். ஆல்-டான் அவனைத் தடுக்க மாட்டான்.”

எனக்குத் திருப்திகரமாகவே இல்லை. இருந்தாலும் க்ரோலு கிராமம் உள்ளே எப்படி இருக்கிறதென்று பார்க்க எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது. ஆல்-டான் ஏமாற்றுக்காரனாக இருந்திருந்தாலும் இன்றைக்குக் காலையில் நான் இருந்த நிலையை விட இது ஒன்றும் பெரிதில்லை. சொல்லப் போனால் கிராமத்தில் இருந்து இன்றிரவு அஜோருடன் தப்ப வேறு எதாவது வழிகளும் கிடைக்கலாம். இப்பொழுது எங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் போர் வீரர்களிடம் இருந்து சேதப்படாமல் தப்பிப்பதும் சுலபமல்ல. அதனால் அவனது நேர்மையைச் சந்தேகிப்பது அவனுக்குத் தெரியக் கூடாது என்பதற்காக அவனது அழைப்பைக் கண்ணியமாகச் சரியான தருணத்தில் நான் ஏற்றுக் கொண்டேன். அவனது மன நிறைவு அவனைப் பார்த்தாலே தெரிந்தது. நாங்கள் அவனது கிராமத்தை நோக்கிச் செல்லும்போது அவன் எனது அருகிலேயே வந்தான். எனது நாட்டைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தான். மக்கள் எப்படி இருப்பார்கள் அவர்களது பழக்க வழக்கங்கள் எப்படி என்று. நாங்கள் மிருகங்களின் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகப் பகலிலும் இரவிலும் தெருவில் நடந்து போக முடியும் என்று சொன்னதே அவனுக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. வெறுமனே மனிதர்களைக் கொல்வதற்கு நாங்கள் பெரும் ராணுவம் வைத்திருக்கிறோம் என்று சொன்னதை அவனது எளிமையான மனத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறது” என்றான். “உங்களைப் போன்ற ஒரு கொடூரமான உலகில் வாழவில்லை என்று. இங்கே கேஸ்பக்கில் ஆண்கள் வேறு ஒரு இனத்தின் ஆண்களைச் சந்திக்கும் போது மட்டுமே சண்டை இடுவோம். அவர்களது ஆயுதங்கள் முதலில் மிருகங்களை வேட்டை ஆடுவதற்கும் தற்காப்பிற்கும் மட்டுமே பயன்படுத்துவோம். உங்கள் மனிதர்களைப் போல் மனிதர்களைக் கொல்வதற்கென்றே ஆயுதங்கள் தயாரிப்பதில்லை நாங்கள். உங்கள் நாடு உண்மையில் ஒரு காட்டுமிராண்டித்தனமான நாடாகத் தான் இருக்க வேண்டும். அதில் இருந்து நீ தப்பித்துப் பாதுகாப்பான கேஸ்பக்கிற்கு வந்தது உனது நல்வினைதான்”

இது முற்றிலும் ஒரு புதுமையான நிறைவான கண்ணோட்டமாக இருந்தது. ஆல்-டானிடம் நான் கிளம்புவதற்கு முன் இரண்டு ஆண்டுகளாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் போரைப் பற்றிச் சொன்ன பின் அது தவறாகவே தெரியவில்லை.

நாங்கள் க்ரோலு கிராமத்திற்குச் செல்லும் வழியெல்லாம் மிருகங்களின் தொந்திரவு தொடர்ந்தது. அதி பயங்கரமான விலங்குகள் எங்களைப் பயமுறுத்தின. ஆல்-டான்தான் ஒவ்வொரு விலங்கையும் கவனித்துக் கொண்டான் என்பதைச் சொல்லவே தேவை இல்லை. நீட்டிய ஈட்டியை எடுத்துக் கொண்டு ஓடுவதாகட்டும் பெரிய அகலமான கம்பை எடுத்து மிருகங்களைக் குத்துவதாகட்டும் எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்து கொண்டே இருந்தது. அதெல்லாம் எங்கள் உரையாடலைப் பாதிக்கவே இல்லை. இருமுறை அவனது கூட்டாளிகள் காயம்பட்டனர் ஒரு முறை ஒரு மிகப்பெரிய காண்டாமிருகத்தால் அவனது வீரன் ஒருவன் கொல்லப்பட்டான். அது நடந்து முடிந்ததும் ஏதும் நடக்காதது போல் நாங்கள் தொடர்ந்தோம். இறந்த மனிதன் உடலில் இருந்து ஆயுதங்கள் அகற்றப்பட்டதும் அவனை அப்படையே விட்டு விட்டுச் சென்று விட்டோம் மாமிசம் உண்ணும் விலங்குகள் அவனைக் கவனித்துக் கொள்ளும் என்பதால். ஒரு ஆங்கிலேய வேட்டைக்காரனைப் பொறாமையால் கன்னம் சிவக்கும் அளவுக்கு அந்த விலங்குகள் இவர்களுக்கு விருந்து படைத்தன. உண்மையில் அவர்கள் அந்தக் காண்டாமிருகத்தின் கறியைத் தேவையான அளவு வெட்டி எடுத்து வீட்டிற்குக் கொண்டு சென்றனர். அந்த வேட்டையில் அவர்கள் மிகவும் களைப்புற்று இருந்தாலும் காண்டாமிருகத்தின் கறி மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்கள் என்பதால் அப்படிச் செய்தார்கள்.

அதன் தோலையும் வெட்டி எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டனர். ஏனெனில் அதை வைத்து அவர்கள் செருப்பு தைக்கவும் கேடயங்கள் மற்றும் கத்திகளுக்கான உறையாகவும் மேலும் பலவிதத்தில் கடினமான தோல்கள் தேவைப்படும் அனைத்து உபயோகங்களுக்காகவும் அதனைப் பயன்படுத்துகின்றனர். அவர்களின் கேடயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அதிலும் அன்று அவர்கள் பட்டாக்கத்திப் புலியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அதனைப் பயன்படுத்திய விதத்தைப் பார்த்ததில் இருந்துதான். அந்தப் பெரிய உருவம் புதர்களுக்கு நடுவில் இருந்து திடீரென்று எந்தவித அறிவிப்பும் இல்லாமல் எங்களை நோக்கிப் பாய்ந்து வந்தது. அது அப்போதுதான் சாப்பிட்டுவிட்டு அங்கே படுத்திருந்திருக்க வேண்டும். உடன் அந்த வீரர்கள் எய்த ஈட்டிகள் அதன் மேல் அவ்வளவு வேகமாக மழை போல் பொழிந்தன. எய்த வேகத்தில் அவைகள் அந்தப் புலியின் உடலைக் கிழித்து வெளியே வந்தன. மேலும் அந்தப் புலியே பல்டி அடித்து உருண்டு விழுந்தது. மிகவும் அருகாமையில் இருந்ததால் ஈட்டியை எறிய வேண்டியதாய் இருந்தது அம்புகளுக்குப் பதில். புலி வீழ்ந்த பின் அதன் மேல் அம்புகளைச் சரமாரியாக எய்தனர். அந்த மிருகம் அவ்வளவு வலி வேதனையிலும் சால்-ஆஸை நோக்கிப் பாய்ந்தது. நான் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடியே பார்த்திருந்தேன். ஏனெனில் அதைச் சுற்றி வளைத்த வீரன் ஒருவன் நடுவில் இருந்ததால் எனது துப்பாக்கியை எடுத்துச் சுடவும் முடியவில்லை. ஆனால் சால்-ஆஸ் தயாராக இருந்தான். அவனது வில்லைத் தூர எறிந்து விட்டுப் பெரிய நீள் வட்ட வடிவிலான கேடயத்தை எடுத்து அதனுள் தன் உடம்பைக் குறுக்கிக் கொண்டான். அதன் நடுவில் ஆறு இன்ச் அளவிற்கு ஒரு சிறிய ஓட்டை இருந்தது. இடது புறத்தில் கைப்பிடியும் வலது புறத்தில் கத்தியையும் ஏந்திக் கொண்டிருந்தான். ஈட்டி மற்றும் அம்புகள் ஏற்படுத்திய பெரும் காயங்களுடன் அந்தப் பெரிய உருவம் அவனை நோக்கி வந்தது. அவன் அப்படியே பின் புறமாகப் படுத்து தன்னை முழுவதுமாக மூடிக் கொண்டான். அது அவனருகில் வந்து அந்த காண்டாமிருகத் தோலால் செய்யப்பட்ட அந்தக் கேடயத்தைக் கடித்தது. பிராண்டியது. சால்-ஆஸ் அந்த ஓட்டை வழியாகக் கத்தியை நுழைத்து அந்தக் காட்டு விலங்கின் முக்கியமான உறுப்புகளைக் குதறினான். நான் நடுவில் புகாமல் இருந்திருந்தாலும் அந்தச் சண்டை அவனிடம் நிச்சயம் போயிருக்கும். ஆனால் யாருமில்லாத ஒரு அருமையான திறந்த வெளி கிடைத்தவுடன் நான் அந்த மிருகத்தைச் சுட்டுக் கொன்றேன்.

சால்-ஆஸ் எழுந்த போது மேலே கையைக் காட்டி மழை வரப் போகிறது என்று சைகை செய்தான். மற்ற அனைவரும் ஏற்கெனவே கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டனர். அந்தச் சண்டை முடிந்து விட்டது. எதோ ஒரு இனம் புரியாத காரணத்தினால் எனக்கு எனது நண்பன் ஒருவன் தனது வீட்டின் தோட்டத்தில் ஒரு பூனையைச் சுட்ட சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. மூன்று வாரங்கள் தொடர்ந்து அதைத் தவிர வேறு எதுவும் அவன் பேசவில்லை.

நாங்கள் கிராமத்தை அடைந்த போது கிட்டத்தட்ட இரவு சூழ்ந்து விட்டிருந்தது. அந்தக் கிராமம் பெரிய தடுப்பு வேலிகள் சூழ்ந்த இலைகளால் தைக்கப்பட்ட இரண்டில் இருந்து ஏழு வரை ஒரே இடத்தில் அமைந்த கூரை வீடுகளைக் கொண்டிருந்தது. அறுகோண வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தன அந்தக் குடிசைகள். மொத்தமாக இருந்த குடிசைகள் தேனீக் கூடுகள் போல் இருந்தன. ஒரு குடிசை ஒரு வீரனுக்கும் அவனது மனைவிக்கும். பல குடிசைகள் சேர்ந்து இருந்தால் அவைகள் ஒவ்வொன்றும் ஒரு வீரனது ஒவ்வொரு மனைவிக்கும் என்று பொருள். கிராமத்தைச் சுற்றி இருந்த வேலிகள் மரத்தாலான தடியான தூண்கள் போல் இருந்தன. அவைகளை உறுதியான சுவர்கள் போலாக்க அதன் கீழே காட்டுக் கொடிகள் நட்டு வைக்கப்பட்டு அவைகள் வளர வளர முன்னும் பின்னும் அந்த மரத் தூண்களுடன் பிணைக்கப்பட்டிருந்தன. அந்த மரங்களும் 30 பாகை வெளிப்புறமாகச் சாய்ந்திருந்தன. அதற்குச் செங்குத்தாகச் சிறு மரக் கட்டைகள் முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தன. வெளியின் மேல் பல கோணங்களில் சிறு சிறு கம்புகள் குத்தி வைக்கப்பட்டு இருந்தன.

கிராமத்தில் நுழைய ஒரே ஒரு வாயில்தான் இருந்தது. அது மூன்றடி உயரம் மூன்றடி அகலம். அந்த ஓட்டை உள்ளிருந்து மூடப்பட்ட கதவினால் ஆனது. அதன் கதவுகளில் ஆறு அடி நீளமுள்ள கனமான கட்டைகள் நீள வாக்கில் ஒன்றன் மேல் ஒன்றாக பதிக்கப்பட்டிருந்தது.

நாங்கள் உள்ளே நுழைந்தபோது எங்களை அவ்வளவு விரோதமில்லாத வீரர்களும் பெண்களும் வரவேற்றனர். அவர்களிடம் சால்-ஆஸ் நாங்கள் அவனுக்குச் செய்த உதவியைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அதன் பின் அவர்கள் எங்களிடம் பாச மழை பொழிந்தனர். சால்-ஆஸ் அந்த ஊரில் பெருமை வாய்ந்தவனாக இருந்திருக்க வேண்டும். சிங்கம் மற்றும் புலிகளின் பற்களால் ஆன மாலைகள் உலர்ந்த மாமிசத் துண்டுகள் அழகாகப் பதப்படுத்தப்பட்ட விலங்கின் தோல்கள் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மண் பாண்டங்கள் அனைத்தும் எங்கள் கைகளில் திணித்தார்கள். அவ்வளவு நேரமும் ஆல்-டான் எங்களையே கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சால்-ஆஸுக்கு நாங்கள் உதவியதால் எங்களுக்குக் கிடைத்த பாராட்டுக்களைக் கண்டு பொறாமையோடு கவனித்துக் கொண்டிருந்தான்.

இறுதியில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட குடிசைக்கு வந்தோம். அங்கே எங்களுக்காகச் சில இறைச்சியைச் சமைத்தோம். அந்தப் பெண்கள் கொண்டு வந்த காய் கறியையும் சமைத்தோம். பசுக்களில் இருந்து கிடைத்த பாலினைச் சுவைத்தோம். அதுதான் கேஸ்பக்கில் முதன் முதலாக நான் சாப்பிட்டது. காட்டு ஆடுகளின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பாலாடைக் கட்டிகள் தேன் அவர்கள் கைகளால் திரிக்கப்பட்ட கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட மெலிதான ரொட்டித் துண்டுகள் திராட்சை மற்றும் திராட்சை ரசங்கள் அனைத்தும் உண்டோம். தொரியாதோரில் இருந்து கிளம்பிய பின் எனக்குக் கிடைத்த அருமையான உணவு அது. தொரியாதோரில் போவனின் சமையல்காரர் பன்றிக்கறியை கோழிக்கறி போல மாற்றும் திறமை படைத்தவர். கோழிக்கறியை சுவர்க்கமாக மாற்றவும் வித்தை கற்று வைத்திருப்பவர்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *