மணல், மணல், மணல், பாலைவனம். பல யோஜனை தூரம் ஒரே மட்டமாமக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம்
அவ்வனத்தில் வழியே ஒட்டகங்களின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தார் போகிறார்கள்.
வாயு, சண்டனாகி வந்துவிட்டான்.
பாலை வனத்து மணல்களெல்லாம் இடை வானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யமவாதனை; வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது.
வாயு கொடியவன். அவன் ருத்ரன், அவனுடைய ஓசை அச்சந்தருவது.
அவன் செயல்கள் கொடியன. அவனை வாழ்த்துகின்றோம்.
வீமனும் அனுமானும், காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும்.
உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம்.
உயிர்தான் காற்று.
பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சுத்தான் பூமிக்காற்று.
காற்றே உயிர், உயிர்களை அழிப்பவனும் அவனே.
காற்றே உயிர். எனவே உயிர்கள் அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது.
மரணமில்லை.
அகிலவுலகமும் உயிர் நிலையே.
தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல் எல்லாம் உயிர்ச் செயல்.
உயிரை வாழ்த்துகின்றோம்.
காற்றே, வா.
மகரந்தத் தூளைச் சுமந்து கொண்டு, மனதை மயக்கும் இனிய வாசனையுடன் வா.
இலைகளின் மீதும் நீர் நிலைகளின் மீதும் உராய்ந்து மிகுந்த ப்ராண-ரஸத்தை எங்களுக்குக் கொண்டு வந்து கொடு.
காற்றே வா.
எமது உயிர் நெருப்பு நீடித்து நின்று நல்ல ஒளிதரும் வண்ணம், நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய் அதனை அவித்து விடாதே.
பேய் போல வீசி அதை மடித்து விடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன் நெடுங்காலம் நின்று வீசுக்கொண்டிரு.
உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம்.
உன்னை வாழ்த்துகிறோம்.
சிற்றெறும்பைப் பார். எத்தனை சிறியது! அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர்? மஹாசக்தி.
அந்த உறுப்புக்களெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன.
எறும்பு உண்ணுகிறது. உறங்குகிறது. மணம் புரிகின்றது. குழந்தை பெறுகிறது, ஓடுகிறது. தேடுகிறது. போர் செய்கிறது. நாடு காக்கிறது.
இதற்கெல்லாம் காற்றுதான் ஆதாரம்.
மகாசக்தி காற்றைக் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகிறாள்.
காற்றைப் பாடுகிறோம்.
அதே அறிவிலே துணிவாக நிற்பது.
உள்ளத்திலே சலனமாவது.
உயிரில் உயிர், உடம்பில் வலிமை.
வெளியுலகத்தில் அதன் செய்கையை அறியாதார் யார்? அறிவார் யார்? காற்றுத் தேவன் வாழ்க.
மழைக்காலம், மாலைநேரம், குளிர்ந்த காற்று வருகிறது.
நோயாளி உடம்பை மூடிக் கொள்ளுகிறான், பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது.
உயிர் காற்றின் அதற்கஞ்சி வாழ்வதுண்டோ? காற்று நம் மீது வீசுக.
அது நம்மை நோயின்றிக் காத்திடுக.
மாலைக்காற்று நல்லது. கடற்காற்று மருந்து. ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கி விடுகின்றனர்.
அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழி படுவதில்லை.
அதனால், காற்றுத் தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான்.
காற்றுத் தேவனை வணங்குவோம்.
அவன் வரும் வழியிலே சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது அழுகின பண்டங்கள் போடலாகாது. புழுதி படித்திருக்கலாகாது.
எவ்விதமான அசுத்தமும் கூடாது.
காற்று வருகிறான்.
அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம்.
அவன் வரும் வழியிலே சோலைகளும் பூந்தோட்டங்களும் செய்து வைப்போம்.
அவன் வழியிலே கற்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம்.
அவன் நல்ல மருந்தாகி வருக.
அவன் நமக்கு உயிராகி வருக.
அமுதமாகி வருக.
காற்றை வழிபடுகின்றோம்.
அவன் சக்தி குமாரன்.
மஹாராணியின் மைந்தன்.
அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம்.
அவன் வாழ்க.
II
ஒரு வீட்டு மாடியிலே ஒரு பந்தல், ஓலைப் பந்தல், தென்னோலை; குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கில் கழிகளை சாதாரணக் கயிற்றினால் கட்டி, மேலே தென்னோலைகளை விரித்திருக்கிறது.
ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது, ஒரு சாண் கயிறு.
இந்தக் கயிறு ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
சில சமயங்களில் அசையால் “உம்” மென்றிருக்கும். கூப்பிட்டால்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லை. “குஷால்” வழியிலிருந்தது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.
“கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?”
பேசிப் பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்து விடும்; பெண்களைப் போல.
எது எப்படி இருந்தாலும் இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமேயில்லை.
ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறுண்டு.
ஒன்று ஒரு சாண். மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண், மற்றொன்று பெண், கணவனும், மனைவியும்.
அவை யிரண்டும் ஒன்றை யொன்று மோகப் பார்வைகள் பார்த்துக் கொண்டும், புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும் வேடிக்கைப் பேச்சுப் பேசிக் கொண்டும் ரசப் போக்கிலே இருந்தன.
அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண் கயிற்றுக்குக் கந்தன் எனப் பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் “வள்ளியம்மை”.
கந்தன் வள்ளியம்மை மீது கையைப் போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.
“என்ன கந்தா, சௌக்கியந்தானா? ஒரு வேளை நான் சந்தர்ப்பம் தவறி வந்துட்டேனோ என்னவோ? போய் மற்றொருமுறை வரலாமா?” என்று கேட்டேன்.
அதற்குக் கந்தன்: “அட போடா, வைதிக மனுஷன்! உன் முன்னே கூட லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?” என்றது.
“சரி, சரி, என்னிடம் ஒன்றும் கேட்க வேண்டாம்” என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன் கடகடவென்று சிரித்து, கை தட்டிக் குதித்து நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளியம்மையைக் கட்டிக் கொண்டது.
வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்குச் சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்குச் சந்தோஷந்தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கு மிகவும் திருப்திதான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்? இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டு விட்டது.
சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.
மறுபடியும் கூச்சல்; மறுபடியும் விடுதல், மறுபடியும் தழுவல், மறுபடியும் கூச்சல், இப்படியாக நடந்து கொண்டே வந்தது.
“என்ன கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தை கூடச் சொல்லமாட்டேனென்கிறாயே? வேறொரு சமயம் வருகிறேன். போகட்டுமா?” என்றேன்.
“அடபோடா! வைதீகம்! வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறாய்: இன்னும் சிறிதுநேரம் நின்று கொண்டிரு. இவளிடம் சில விவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம் என்றிருக்கிறேன். போய்விடாதே இரு” என்றது.
நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிது நேரம் கழிந்தவுடன் பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நின்றதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது.
உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ண மெட்டு, இரண்டே ‘சங்கதி’ பின்பு மற்றொரு பாட்டு.
கந்தன் பாடி முடிந்தவுடன் வள்ளி, இது முடிந்தவுடன் அது, மாறி, மாறிப் பாடி-கோலாகலம்.
சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக் கொண்டே யிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும். அது தழுவிக் கொள்ள வரும். இது ஓடும்-கோலாகலம்!
இங்ஙனம் நெடும் பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன். நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.
நான் திரும்பி வந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக் கொண்டிருந்தது. கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது. என்னைக் கண்டவுடன், “எங்கடா போயிருந்தாய்? வைதீகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே” என்றது.
“அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே?” என்று கேட்டேன்.
ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்! காற்றுத் தேவன் தோன்றினான். அவன் உடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன்.
வயிர ஊசிபோல ஒளிவடிவமாக இருந்தது.
“நமஸ்தே வாயோ, த்வமேவப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி”
காற்றே போற்றி. நீயே கண்கண்ட பிரமம்.
அவன் தோன்றிய பொழுதிலே வான முழுதும் பிராண சக்தி நிரம்பிக் கனல் வீசிக் கொண்டிருந்தது. ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.
காற்றுத் தேவன் சொல்வதாயினன்: “மகனே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்று கேட்கிறாயா? இல்லை, அது செத்துப்போய் விட்டது. நான் பிராண சக்தி. என்னுடன் உறவு கொண்ட உடல் இயங்கும். என் உறவில்லாதது சவம். நான் பிராணன். என்னாலே தான் அச்சிறு கயிறு உயிர்த்திருந்து சுகம் பெற்றது. சிறிது களைப்பெய்தியவுடனே அதை உறங்க-இறக்க-விட்டு விடுவேன். துயிலும் சாவுதான். சாவும் துயிலே. நான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன். அது மறுபடி பிழைத்து விடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன் என்னை வணங்கி வாழ்க” என்றான்.
”நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி; த்வ மேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி”
– கதைக் கொத்து (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1967, பாரதி பிரசுராலயம், சென்னை.
நன்றி: https://www.projectmadurai.org