சாகுலை கண்டிப்பாக நான் சென்னை விமான நிலையத்தில் எதிர் பார்க்கவில்லை. அவன் கடவுச்சீட்டு சரி பார்க்கும் வரிசையில் எனக்கு முன் மூன்றாவது ஆளாக நின்று கொண்டிருந்தான்.
‘சத்தம் போட்டுக்கூப்பிடலாமா?’ என்று நினைத்தேன். அநாகரீகமாக இருக்கும் என்று உணர்ந்து கொண்டு பின்னால் நின்றவரிடம் “ஒரு நிமிடம். என் நண்பரை பார்த்து விட்டு வருகிறேன்” என்றுசொல்லி விட்டு முன்னால் வந்து “என்ன சாகுல் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.
சாகுலும் என்னை எதிர்பார்க்கவில்லை என்பது அவர் முகத்தில் ஏற்பட்ட ஆச்சரிய குறியே எனக்கு காட்டித்தந்தது. “என்ன பவுல் எப்படி இருக்கீங்க? என்ன இந்தப்பக்கம்?” என்றார்.
“சாகுல் நான் கேட்க வேண்டிய கேள்வியை நீங்கள் கேட்கிறீர்கள்?”
அவர் கையைப்பிடித்துக் குலுக்கியவாறு புன்னகைத்தேன்.
“அது தானே பார்த்தேன். உங்கள் சிரிப்பே தனி தானே. அதைக் காணவில்லை என்று நினைக்கு முன்னே சிரித்து விட்டீர்கள்..”
அவனும் சிரித்துக்கொண்டே சொன்னான்.
“கண்டிப்பாக சினிமாவில் ஜெயிக்காமல் ஊருக்கு போக மாட்டேன் என்றீர்கள். இப்போது திரும்ப அபுதாபி பயணமா?”
கொஞ்சம் கேலி கலந்தே கேட்டேன்.
என் கேலியை உணர்ந்த சாகுல்,”பவுல். நான் சொன்னதற்கு என்றுமே பின் வாங்கியதில்லை. எனக்கு ஒரு நண்பர் கொஞ்சம் பணம் தர வேண்டியதிருக்கிறது, அதற்காகத் தான் இந்த பயணம். மற்றபடி, நான் எடுத்த முடிவில் என்றுமே பின் வாங்கவில்லை”.
“ஆறு மாதமிருக்குமில்லையா?. இங்கே அபுதாயில் இவ்வளவு நல்ல வேலையை விட்டு விட்டு திரை இசைப்பாடல் எழுத ..எடுத்த முயற்சி எல்லாம்… நன்றாகத்தான் … போய்க்கொண்டிருக்கிறது.. நாம்விமானத்தில் சந்திக்கலாமா?” என்று சொல்லி விட்டு முன்னே வரிசையில் சென்றான்.
எனக்கு அவன் சொன்னத் தொனியில் உள்ள நம்பிக்கை எவ்வளவு அழுத்தமாக இருந்தது என்று ஆச்சரியமாக இருந்தது.
எவ்வளவு பேசியிருப்போம்… இன்னும் சினிமா பாடலாசிரியராகப் போகிறேன் என்கிறானே… தலையைச் சிலிர்த்துக் கொண்டே வரிசையில் நகர்ந்தேன்.
அந்த விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையை இன்னும் மறக்கமுடியவில்லை.
***
அபுதாபியின் ஒரு பகுதியில் இருந்த அங்குள்ள ஒரு அழகிய தீவிற்கு அந்த விடுமுறை நாளில் சென்றிருந்தோம்.
உணவு வேளைக்கு முன், இரண்டு பேர், வெள்ளரிக்காய் வெட்டிக்கொண்டிருக்க, அங்கே நடந்த வாதத்தில் சூடாகிப் போய்விட்ட நான், “சாகுல் உங்ககிட்டே ஏற்கனெவே சொல்லியிருக்கேன். என் நண்பனின் அண்ணன் ஒருவர் திரைத்துறையில் உயராமல் ஊருக்குத்திரும்பமாட்டேன் என்று சென்னைக்கு சென்றவர், கல்யாணம் கூட கட்டிக்கொள்ளாமல், இளமையை இழந்து நரை தட்டி…இன்னும் கோடம்பாக்கத்தில் அலைந்து கொண்டு….
இவ்வளவு நல்ல சம்பளம்… நல்ல வேலை.. பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்… இதை விட்டு விட்டு… இப்போ போய் சினிமாவிலே பாட்டுஎழுதப் போகிறேன்…என்கிறீர்கள்..” என்றேன்
சாகுல், என்னை பேச விடாமல், “பவுல், எத்தனை முறை சினிமா பார்க்கும்போது, பாடல்கள் யார் எழுதியிருக்கிறார்கள் என்று முதலில் எழுத்து (டைட்டில்) போடும்போது பார்த்திருக்கிறோம் அதிலே ‘பாடல்கள் வசந்த சாகுல்’ என்று வர வேண்டாமா? அப்படி வரும்போது… எப்படி இருக்கும். யோசித்துப் பாருங்கள். சாதாரணமா ஒருக்கா தினமலர் வாரமலரிலே கவிதை வந்ததற்கே நான் எப்படி வானத்தில் பறந்தேன் என்பது உங்களுக்குத் தெரியாததா? அந்த ஆத்ம திருப்தி… இந்த ரெண்டு லட்ச சம்பளத்திலே வருமா?”
சிரித்தான் சாகுல்.
“ஆமா.. நீங்க போனவுடனே உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிச்சி ‘வா ராஜா. என் படத்துக்கு எல்லா பாட்டும் நீயே எழுது!’ என்று தூக்கி கொடுத்து உங்களை பாட்டு எழுதச்சொல்லப் போகிறார்களாக்கும்” என சாதாரண கேலி கலந்தே சொன்னேன்.
சிரித்துக்கொண்டே “ நீங்கள் இந்த வேலைக்கு வருவதற்கு எத்தனை முயற்சிகள் எடுத்தீர்கள்?” என்று கேட்டான் சாகுல்
“இந்த வேலைக்கு வேறு யார் வருவதும் மிக்க எளிது சாகுல். திரைத்துறை அப்படிப் பட்டதல்ல என்பது என்னை விட அதிகமாகவே உங்களுக்குத்தெரியும்”
”பவுல். சினிமாவிற்கு வருவதற்கு… அங்கே பாட்டெழுதுவதற்கு கண்ணதாசன், வாலி, நம்ம தாமரை மேடம், முத்துக்குமார் என்று ஒரு வரிசையே சொல்லிகிட்டே போனாலும் அவர்களிடம் ஆரம்ப நாட்களிலே இருந்த வலிகளின் ஓசைகளை நானும் நெறய வாசிச்சிருக்கேன் சார்”
”ஒரு முறை நம்ம சிவகாசி படம் பார்க்கும் போது டைரக்டர் பேரரசே எல்லா பாடலையும் எழுதியிருக்கிறார்னு நீங்களே சொல்லியிருக்கீங்க. அப்படியிருக்கும் போது….”
“என்ன இழுக்கிறீங்க… என்ன நான் கோடம்பாக்கத்திலே நின்று பிச்சை எடுக்கப் போற மாதிரிப் பேசறீங்க..”
“ஆமாம். சாகுல். அது தான் உண்மை.. ஆனால் உங்க ஆத்ம திருப்திக்காக உங்க குடும்பம்…”
“நடுத்தெருவிலே நிக்கும் என்கிறீர்களா?” அவன் வார்த்தைகளில் கொஞ்சம் சூடேறியது
இடையில் வந்த கண்ணன் “ஏய்.. பிக்னிக் வந்தோமா? சண்டை போட வந்தமா? ஒழுங்கா சாப்பாட்டை பாருங்கப்பா” என்றான்
“நாம் ஏற்கனெவே நிறைய தடவை இதைப் பற்றி பேசியாகி விட்டது. பவுல் நீங்க என் மேல் எவ்வளவு பாசம் வச்சிருந்தா என் வருங்காலத்திற்காக இவ்வளவு பேசுகிறீர்கள் என்று எனக்கு புரிகிறது.. சரி விடுங்க.. எனக்குள்ளே எரிகிற தழலைப் பற்றி உங்களுக்குப் புரியாது” என்றான் உணவு பரிமாறிக்கொண்டே..
மறு நாள், அடுத்த நாள் என்று பல முறை சொல்லிப்பார்த்தேன்.
அவன் வேலையை விட்டு விட்டு சென்னைக்கு கிளம்பி விட்டான்
***
என்னுடைய பாஸ்போர்ட், விசா எமிகிரேசன் எல்லாம் முடித்து விட்டு லாஞ்சுக்குள்ளே வந்த போது “வாங்க பவுல் சார்” என்று வரவேற்றான்.
‘சாகுல் கண்டிப்பாக நம்மை பார்க்க விரும்பாமல் ஓடியிருப்பான்’ என்று தான் எண்ணியிருந்தேன். அவன் என்னை எதிர்கொண்டு அழைத்து காபி கடைக்குள் (கப்புசின் காபி க்ஷாப்) கூட்டிப் போய் அமர்த்தி, “பவுல் உங்களுக்கு விருப்பமான காபி” என்று வாங்கி என் முன் வைத்து விட்டு அவனும் பருக ஆரம்பித்தான்.
‘சாகுல் பேசட்டும்’ என்று அமைதியாக அவன் முகம் பார்த்துக் கொண்டே காபியை இரசித்தேன்.
“என்ன அமைதியாகிட்டீங்க?” என்றான் சாகுல்.
“சொல்லுங்கள் சாகுல். எந்த அளவிற்கு வந்திருக்கீங்க? நீங்கள் விரும்பினால் இன்னும் நம்ம கம்பெனியிலே உங்களுக்காக கேட்டுப்பார்க்கிறேன்”
“நாலு ஆல்பம் போட்டாச்சு.. கையிலே இருந்த பணம் காலியானாலும் என் வீட்டுக்காரி எனக்கு முழு உதவியாக இருக்காங்க…”
”ம்..ம்… அப்புறம்?”
”ஒரு படத்திலே ஒரு பாட்டு எழுதி இசையமைச்சாச்சு… இனி சினிமாவிலே எப்படி வருதுண்ணு எதிர் பார்த்துகிட்டே இருக்கேன். அடுத்தாலே ஒரு சினிமாவிலே வாய்ப்பு தர்றதா சொல்லியிருக்காங்க..”
“எனக்கேன்னவோ சாகுல்…” என்று நான் சொல்லி முடிப்பதற்குள்
“கவலையே படாதீங்க… பவுல் அடுத்த முறை நாம் சந்திக்கும் போது கண்டிப்பாக… நீங்க எதிபார்க்கின்ற வெற்றிபெற்ற ’வசந்த சாகுலா’ தான் பார்ப்பீங்க. வேணும்ணா பாருங்க..அடுத்த முறை துபாய்த் தமிழ்த்தேர் நிகழ்விற்கு கூட என்னை முக்கிய விருந்தினர்களில் ஒருத்தரா அழைக்கத்தான் போறீங்க…” என் தோளில் தட்டிச் சொன்னான்
விமானத்திற்கான அழைப்பு அறிவிக்கப் பட.. அவனுடைய அசாதரரண நம்பிக்கையைக் கண்டு, அசந்து போய், “வாழ்த்துக்கள்” என்று அவனைக்கட்டிப்பிடித்து வாழ்த்துச்சொல்லி விட்டு பையை எடுத்துக் கொண்டு விமானத்தை நோக்கி கிளம்பினேன்.
‘அவனுடைய அசாதாரண நம்பிக்கை எப்படியிருக்கிறது’ என்று எனக்கே இன்னும் விரிந்த வியப்புடன் கூடிய ஆச்சரியாமாக இருந்தது.