காற்றுக்கென்ன வேலி ?

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 4,940 
 
 

நிலவொளியோ சூரிய வெளிச்சமோ நாங்க மாளிகக்குள்ள மட்டும்தான் நுழைவோம்னு சொல்றதில்லெ! பாரபட்சமில்லாம குடிசையில இருந்து கோபுரம் வரைக்கும் எல்லா இடத்துலயும் ஒளி வீசுது.

சுந்தர் தன்னுடைய வெற்றிகரமான 75-வது இண்டர்வ்யூவிற்கு வந்திருந்தான். வழக்கம் போல ஒரு காலியிடத்திற்கு ஆண்களும் பெண்களுமாக 27பேர் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே அவனுக்கு தலை சுற்றியது. போதாக்குறைக்கு அதில் இருவர் சிபாரிசுக் கடிதத்தோடு வந்திருந்தார்கள். அதனால் அந்த வேலை தங்களில் ஒருவருக்குதான் என்பது போல் அனைவரையும் துச்சமாகப் பார்த்துக் கொண்டு தங்களுக்குள் சத்தமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ‘ஹ்ம்ம்… இந்த வேலையும் நமக்கில்ல!’என்று விரக்தியானான் சுந்தர். மறுபடி ஒரு முறை தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். அப்போதுதான் அந்த இளைஞனைக் கவனித்தான். அத்தனை பேரின் பரபரப்பிலிருந்து மாறுபட்டு மிகவும் அமைதியோடு ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். மாநிறமானாலும் களையான முகம், கருப்பு பேண்ட், உஜாலா விளம்பரம் போல வெள்ளை வெளேரென்று வெளுத்திருந்த சட்டை, முகத்தில் நிரந்தரமாக ஒரு குட்டிப் புன்னகை – ஒரு ஒளி என்று கூடச் சொல்லலாம், எனத் தனியாகத் தெரிந்தான். யாரிடமும் அவனாகச் சென்று பேசவுமில்லை, யாரையும் அலட்சியப்படுத்தவும் இல்லை. ஏனோ சுந்தர் அவனால் கவரப்பட்டு அவன் பக்கத்தில் போய் அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

‘ஹலோ! என் பெயர் சுந்தர், நீங்கள்….’ பதிலுக்கு ஒரு ட்ரேட் மார்க் புன்னகையுடன் ‘ஹலோ! நான் ரவிக்குமார், நண்பர்களுக்கு சுருக்கமாக ரவி!’ என்றான். ‘இது உங்களுக்கு எத்தனையாவது இன்டர்வியூ?’ பேச்சு தொடர்ந்தது. ‘கணக்கு வெச்சிக்கல, கண்டிப்பா முப்பது இன்டர்வியூவாவது அட்டெண்ட் பண்ணி இருப்பேன்னு நினைக்கறேன்.’

‘ஹ்ம்ம்ம் அப்போ உங்க கிட்ட இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கும். எனக்கு இது எழுபத்தைந்தாவது இன்டர்வியூ! ஒவ்வொரு இன்டர்வியூவுக்கும் தயார் பண்ணிக்கிட்டு போறதுல ஒண்ணும் குறையில்ல, ஆனா யாராவது ஒருத்தர் சிபாரிசு கடிதத்தோட வந்துடறாங்க. எங்க போனாலும் போட்டி, பொறாமை, போதாக்குறைக்கு லேடீஸ் வேலைக்கு வர ஆரம்பிச்சதுல இருந்து நமக்கு வேலை கிடைக்கறது இன்னும் கஷ்டமாப் போச்சி. இந்த வேலையும் கிடைக்கும்னு நம்பிக்கை இல்லை! பாருங்களேன் அந்த ரெண்டு பேரையும், ஆல்ரெடி வேலை கிடைச்சிட்ட மாதிரியே நடந்துக்கறாங்க. அப்போ அவ்வளவு பலமான சிபாரிசாத்தானே இருக்கும். ஹ்ம்ம்ம்ம்… இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படி கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கப்போறேனோ! எனக்கு என்னிக்குமே அதிர்ஷ்டம் கிடையாது. ப்ளஸ் டூ-வில கம்ப்யூட்டர் சைன்ஸ் க்ரூப் எடுக்கணும்னு ஆசைப்பட்டேன், வெறும் ப்ளஸ் டூவோட போகாது. அதுக்கப்புறம் காலேஜ்ல அதே க்ரூப்ல சேர்க்கணும், அதுக்கு நிறைய செலவாகும், உனக்கு அடுத்து ரெண்டு தங்கைகள் படிக்கணும் அதனால உனக்கு மட்டுமே செலவு செய்ய முடியாதுன்னுட்டாங்க அப்பா! வேற வழியில்லாம காமர்ஸ் க்ரூப் எடுத்து படிச்சேன். அதுலயும் 80% வாங்கி இருக்கேன். கல்லூரியில விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி எல்லாத்துலயும் பார்டிசிபேட் பண்ணி இருக்கேன். இருந்தாலும் 3 வருஷமா வேலை தேடிக்கிட்டேதான் இருக்கேன்’ நொந்து கொண்டான் சுந்தர்.

‘கவலைப்படாதீங்க சுந்தர்! சிபாரிசு எல்லா இடத்துலயும் செல்லுபடியாறதில்லெ. அதே சமயம் போட்டி அதிகமா இருக்கறதால எல்லாருமே அவங்க அவங்க தகுதியை உயர்திக்கப் பார்க்கறாங்க. சோ, யாருக்கு அதிக தகுதி இருக்கோ அவங்களுக்கு வேலை கிடைக்கும்தானே! அதனால நமக்கு தகுதி குறைவுன்னோ, இல்லெ நம்பளை விட அவங்க எந்த விதத்தில உயர்ந்தவங்க, அவங்களுக்குப்போய் வேலை அந்த வேலை கிடைச்சிருக்குன்னோ நினைக்கறது தவறு. அது அனாவசியமான காம்ப்ளெக்ஸதான் உருவாக்கும். எந்த நிலையிலயும் நம்பளை நாம தாழ்வா நினைக்கவே கூடாது. நம்மோட எல்லாத்தகுதிகளோட தன்னம்பிக்கையும், சலிப்பில்லாத உழைப்பும் சேர்ந்தாதான் உயர முடியும். நீங்க மனசு விட்டுடாதீங்க. யார் கண்டா! இந்த வேலையே கூட உங்களுக்கு கிடைக்கலாம். ஆல் தி பெஸ்ட்!’

‘ரொம்ப தாங்க்ஸ் ரவி! உங்க கூட பேசினதே எனக்கு நம்பிக்கையை குடுக்குது. எங்க அப்பா கவர்ன்மெண்ட் ஆபீஸ்ல கிளார்க்கா இருக்கார். அவர் கூடப் பிறந்தவங்களுக்கெல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சதுல அவருக்கு இத்தனை வருஷத்துல கடன்தான் மிச்சம். அத்தைங்களை எல்லாம் நல்ல இடத்துலதான் கட்டிக் கொடுத்திருக்கு. ஆனா டச் வெச்சிகிட்டா எங்க ஏதாவது உதவின்னு வந்து நின்னுடுவாங்களேன்னு யாரும் வரதே இல்ல. அம்மா ஒரு அப்பாவி, அப்பாவோட குறை சம்பளத்துல வீட்டை நடத்திகிட்டு, தங்கைங்க கல்யாணத்துக்காக அப்பளம், வத்தல், ஊறுகாய் எல்லாம் போட்டு வித்து அந்த காசை சேர்த்துகிட்டு வராங்க. ஒரு தங்கை ப்ளஸ்டூ முடிச்சிட்டு மேல படிக்கறதை விட தையல் கிளாசுக்கு போனா சீக்கிரம் சம்பாதிக்கலாம், அம்மாவுக்கும் வீட்டிலிருந்தே உதவலாம்னு முடிவு பண்ணிகிட்டு காலேஜ் போக மாட்டேன்னுட்டா. இன்னொரு தங்கை இப்பொதான் பத்தாவது படிக்கறா! இதுல யாருக்கும் யார் கிட்டயும் நின்னு பேச நேரம் கிடைக்கிறதே அபூர்வம், அந்த வறுமை, தனிமை எல்லாம்தான் சேர்ந்து என்னை நம்பிக்கை இழக்க வெச்சிடுச்சி. ஆனா ஒரு விஷயத்துல நான் ரொம்பக் கொடுத்து வெச்சவன். என்னோட இன்டர்வியூ செலவுகளுக்கு பணம் குடுக்கத் தயங்கினதோ, தண்டச்சோறுன்னு ஒரு வார்த்தை சொன்னதோ இல்லை. அதுவே இன்னும் கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு. இவங்க கஷ்டம் தீரவாவது நமக்கு சீக்கிரமே ஒரு வேலை கிடைக்கக் கூடாதான்னு! கண் கலங்கினான் சுந்தர்.

மறுபடி ஒரு புன்னகையோடு அவனைத் தட்டிக் கொடுத்தான் ரவி. ‘கவலைப்படாதீங்க சுந்தர். இந்த வேலை இல்லாட்டா கூட கூடிய சீக்கிரமே இன்னோரு வேலை கிடைக்கும். நம்பிக்கையோட இருங்க’ சொல்லிக்கொண்டிருக்கும்போதெ ரவிக்கான அழைப்பு வந்தது. இண்டர்வியூ முடிந்து வெளியே வரும்போதும் ரவியின் முகம் அதே புன்னகையோடும் தெளிவோடும் இருந்தது. ‘என்ன ஆச்சு? ஆவலுடன் கேட்டான் சுந்தர்’ ‘நம்பிக்கைதான் வாழ்க்கை’ என்று புன்னகைத்தான் ரவி. அடுத்து சுந்தரைக் கூப்பிடவே, ‘ஓகே சுந்தர், நாம மறுபடி மீட் பண்ணலாம். உங்களுக்கு நேரம் கிடைச்சா எனக்கு போன் பண்ணுங்க’ எனத் தன்னுடைய போன் நம்பரை எழுதிக் கொடுத்தான்.

சுந்தரின் இண்டர்வியூ முடிந்து ‘மயிலாப்பூர் வக்கீல் மாமியாத்துல கல்யாணத்துக்காக ஐநூறு அப்பளம் கேட்டிருந்தா! கொஞ்சம் சிரமம் பார்க்காம கொடுத்திட்டு வந்திடுப்பா, நான் சீதா மாமியாத்துல பட்சணம் பண்ணப் போக வேண்டியிருக்கு’ என அம்மா வேண்டிக்கொண்டதற்கிணங்கி வக்கீல் மாமி வீட்டில் அப்பளங்களை கொடுத்து விட்டு சுட்டெரிக்கும் வெயிலில் பஸ்ஸ¤க்காகக் காத்திருந்தான். மதிய 1.30 மணி வேளையில் பஸ் எதுவும் வராமல் போக்குக் காட்டியது. சரி, சில்லென்று ஒரு லெமன் ஜூஸாவது குடிக்கலாமென்று சற்று தூரத்திலிருந்த கூல்டிரிங்க் ஸ்டாலுக்கு போனான். அங்கேயே ஒரு ஸெராக்ஸ் மிஷின், PCO என்று அந்தக்கடை all-in-one ஆக இருந்ததை ரசித்துக்கொண்டே ஒரு லெமன் ஜூசுக்கு ஆர்டர் செய்தான். ‘இந்தாங்க சுந்தர்’ என்ற குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான். தனக்கேயுரிய புன்னகையுடன் ரவி!

‘ரவி, நீங்களா! இவ்வளவு சீக்கிரம் மறுபடி சந்திப்போம்னு நினைக்கவேயில்லை. அது சரி, நீங்க என்ன வேலையே கிடைக்காதுங்கற முடிவுக்கு வந்துட்டீங்களா, இது என்ன இந்தக் கடையில?’

‘உங்களுக்கு அவசரமில்லைன்னா இப்படி உட்காருங்க சுந்தர், உங்க கிட்ட பேசணும்’. ‘எனக்கொண்ணும் அவசரமில்லை, அப்படியே நான் அவசரப்பட்டாலும் அதுக்காக இந்த லன்ச் டைம்ல உடனெ பஸ் வந்துடப் போறதுமில்லை’ எனப் புன்னகையுடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான் சுந்தர்.

‘முதல்ல உங்களுக்கு ஒரு நல்ல நியூஸ்! எனக்கு இந்த வேலை கிடைச்சிடுச்சி. இப்போதான் போன் பண்ணிக் கன்பர்ம் பண்ணாங்க.’ அப்படியா! ஆச்சரியப்பட்ட சுந்தர் முகத்தில் உண்மையான சந்தோஷம், அதோடு கண்களில் சிறிய ஏக்கமும்!

‘ஆமாம். இந்தக்கடையில எங்க வந்தேன்னு கேட்டீங்க இல்லை! இது என்னோட கடைதான். நானும் காலேஜ் முடிச்சி 2 வருஷமாச்சி. முதல் ஆறு மாசத்துக்கு வேலை தேடறதே என் வேலையா இருந்துச்சி. வேலை கிடைக்கலைன்னதும் உங்களை மாதிரிதான் நானும் விரக்தியானேன். எங்க அப்பாதான் சரியான சமயத்துல வழிகாட்டி நம்பிக்கையூட்டினார்.’

‘ரவி, ஏன் நம்பிக்கை இழக்கறே, வேலை கிடைக்கறபோது கிடைக்கட்டும். அதுக்காக கவலைப்பட்டு உன்னைத் தொலைச்சிடாதெ! வேலை கிடைக்கற வரைக்கும் உன் கைச்செலவுக்கு ஆற மாதிரி சின்னதா ஏதாவது பிசினஸ் பண்ண முடியுமான்னு பாரு, ஒவ்வொண்ணுத்துக்கும் என் கிட்ட கேட்கறதுன்னா உனக்கு தயக்கமா கூட இருக்கலாம். இது முழுக்க முழுக்க உன் இஷ்டம்தான். வெறுமனே வேலை மட்டுமே தேடறதுன்னாலும் நான் கவலைப்பட மாட்டென், நீ என் பிள்ளை! உனக்கு செய்ய வேண்டிய கடமையும் உரிமையும் எனக்கு இருக்கு, யோசிச்சி சொல்லு’.

அப்பா சொன்னதை அசை போட ஆரம்பித்தான் ரவி. ‘அப்பா சொல்வதும் சரிதானே! எதற்கு வீணாகப் பொழுது போக்க வேண்டும். நிரந்தரமாக இல்லையென்றாலும் வேலை கிடைக்கும்வரை ஏதாவது செய்யலாமே’ என்று யோசிக்க ஆரம்பித்தான். ஒண்ணரை வருஷத்துக்கு முன்னாடி இந்த இடத்துல பஸ் ஸ்டாப் தவிர அக்கம் பக்கத்துல வேற கடைகளே இல்லாம இருந்துச்சி. அதனால சின்னதா ஒரு ஜுஸ் கடை ஆரம்பிச்சா என்னன்னு தோணிச்சி. பெரிய முதலும் தேவையில்லை. கடையை மூடறதுன்னாலும் நஷ்டமில்லைன்னு ஆரம்பிச்சதுதான் இந்தக் கடை. அதுக்கப்புறம் தேவைக்கேற்றபடி வாங்கிப்போட்டதுதன் இந்த ஸெராக்ஸ் மிஷினும், PCO-ம். உதவிக்கும் ஒரு நாணயமான பையனை வெச்சிகிட்டேன். அதே சமயம் நான் கடையில சும்மா இருக்கல. போட்டி வளர வளர நம்மை எந்த விதத்துல உயர்த்திகிட்டா வேலை கிடைக்கறது சுலபமாகும்னு யோசிச்சி இந்த கடையில கிடைச்ச வருமானத்துல கம்ப்யூட்டர் படிச்சேன், ஒரு டிப்ளோமா முடிச்சேன். இப்போ இந்தக் கடையிலயே மாதம் ரூ5000 வருது. சொந்த இடம்கறதால வாடகையும் கிடையாது. அதனாலதான் என் மனசுக்கும், தகுதிக்கும் ஏற்ற வேலை கிடைக்கற வரைக்கும் பொறுமையா காத்திருக்க முடிஞ்சிது. எனக்கு வேலை கிடைச்சதும் வேலை தேடிக்கிட்டிருக்கற என் நண்பர்கள் யாரையாவது இந்தக் கடையை பார்த்துக்கச் சொல்லலாம்னுதன் ப்ளான். ஆனா இதையே என் ப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னப்போ, சே! என்னடா இது! டிகிரி முடிச்சிட்டு யாராவது ஜூஸ் கடையில உட்காருவாங்களா? என்னை இன்சல்ட் பண்ணாதேடான்னு சொல்லிட்டாங்க. என்னைப்பொறுத்த வரைக்கும், வாழ்க்கையை அதன் போக்குல, அதே சமயம் பாசிடிவ் சிந்தனைகளோட எதிர் கொள்ளணும். யாராலயும் நான் இப்படித்தான் இருப்பேன்னு முடிவு பண்ணி அப்படியே வாழ முடியாது. காற்று நான் இந்த திசையிலதான் வீசுவேன்னு முடிவு பண்ணிக்கறதில்லெ, எல்லா திசையிலயும் வீசுது. நிலவொளியோ சூரிய வெளிச்சமோ நாங்க மாளிகக்குள்ள மட்டும்தான் நுழைவோம்னு சொல்றதில்லெ! பாரபட்சமில்லாம குடிசையில இருந்து கோபுரம் வரைக்கும் எல்லா இடத்துலயும் ஒளி வீசுது. மனுஷனுக்கு மட்டும்தான் ரெஸ்டிரிக்ஷன்ஸ்! நான் இப்படித்தான் இருப்பேன், இந்த வேலைக்குத்தான் போவேன்னு.. அதை விட்டுட்டு பிடிச்சி வைக்கற பாத்திரத்துக்குத் தகுந்தாப்பல தண்ணி நிறையற மாதிரி சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னைத் தாழ்த்திக்காம, தவறு வழி செல்லாம வாழறதுல தப்பே இல்லை. என் ப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டதே தான் உங்க கிட்டயும் கேட்கறேன். உங்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை கிடைக்கற வரைக்கும் இந்த கடையைப் பார்த்துக்கத் தயாரா? இந்தக் கடையில இருந்து இனிமே பெரிசா லாபத்தை எதிர் பார்க்க வேண்டிய தேவை இல்லை. சோ, என்னால உங்களுக்கு மாதம் ரூ2,500 தர முடியும். பக்கத்துல ரெஜிஸ்ட்ரார் ஆபிஸ் வந்துட்டதால இப்போ இருக்கற ஸெராக்ஸ் மிஷினும், PCO=வும் பத்தலை. இன்னோரு மிஷினும், PCO லைனும் வாங்கலாம்னு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன். அதனால அடுத்த மாசத்துல இருந்து வருமானம் கண்டிப்பா 30-40% அதிகமாகும். அப்போ உங்களுக்கு ஓரளவு சம்பளத்தை உயர்த்தித் தரவும் முடியும். என்ன சொல்றீங்க?’

‘ஹாங்… இன்ணொண்ணு கூடப் பண்ணாலாம் சுந்தர். கடையை ஒட்டி ஒரு டேபிள் போட்டு உங்க அம்மா செய்யற அப்பளம், வத்தல், ஊறுகாய் எல்லாம் பாக் பண்ணி டிஸ்ப்ளே பண்ணலாம். எப்படி போகுதுன்னு பார்த்துட்டு அதுக்கு நிரந்தரமா ஒரு இடம் ஏற்பாடு பண்ணலாம்’ என்று மேலும் ஒரு ஐடியா கொடுத்தான்.

அவனது நீண்ட பேச்சைப் பிரமிப்போடு பார்த்துக்கொண்டிருந்த சுந்தர் வாயைத் திறந்தான். ‘நீங்க சொல்றதுலே தப்பே இல்லை ரவி! எனக்கு இப்படி எல்லாம் தோணாமப் போச்சேன்னுதான் இருக்கு. அப்பா கிட்ட சொல்லி இருந்தா கடனோட கடனா ஏதாவது ஏற்பாடு பண்ணிக் கொடுத்திருப்பார். அதனால என்ன? இப்பொ மேற்கொண்டு கடனும் வாங்காம வேற நல்ல வேலை கிடைக்கற வரைக்கும் செய்யறதுக்கு ஒரு உருப்படியான வேலை குடுக்கும்போது நான் மாட்டென்னா சொல்லுவேன்? கண்டிப்பா நாளைக்கே வந்துடறேன் ரவி’ என ரவியின் கையைப் பிடித்துக்கொண்டு நெகிழ்ந்த்தான் சுந்தர்.

– ஸ்ரீ [kalpagam.r@gmail.com]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *