கார்த்திகைச் சொக்கப்பனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 876 
 
 

வெளியில் உலவி விட்டுத் தெருவில் நுழைந்தேன். கார்த்திகை மாதம் வீடுகளில் திண்ணைகளிலும், வாயிற்படிகளிலும், மாடப்பிறைகளிலும் பொல்லென்று பூத்த நட்சத்திரப் பூக்களைப் போல அகல் விளக்குகள் மினுமினுத்துக் கொண்டிருந்தன. “ஆகா! இந்தச் சின்னஞ் சிறிய அகல் விளக்குகளின் ஒளிக் கலவையில் என் இதயத்தைக் கவரும்படியாக அப்படி என்னதான் அடங்கியிருக்கிறது? எத்தனையோ பல நிறங்களில், எத்தனையோ பல விதங்களில், எரிகின்ற இந்த மின்சார விளக்குகளில் அந்தக் கவர்ச்சி எனக்குத் தென்படவில்லையே!”

தீபம் ஒளியின் உயிருள்ள சக்தி; மின்சாரம் ஒளியின் உடலைச் சிதைத்து வடித்துப் பெருக விட்ட இரத்தம்.அதனால்தான் தீபங்களின் ஒளியிலுள்ள கவர்ச்சி மின்சாரத்தில் ஏற்படுவதில்லை. இப்படி ஏதேதோ சிந்தனைகள் மனத்தில் கிளர்ந்தன.

“என்ன ஐயா? பராக்குப் பார்த்துக் கொண்டே எதிரே வருகிறவனைக் கவனிக்காமல் போகிறீரே?”

இப்படிக் கேட்டது யார் என்று நிமிர்ந்து பார்த்தேன். புன்முறுவல் பூத்த முகத்துடன் திருவாளர் திருவடியாப் பிள்ளையவர்கள் எதிரே வந்து கொண்டிருந்தார். “அடடே! வாருங்கள் ஏதோ சிந்தனையோடு நடந்து கொண்டிருந்தேன். நீங்கள் எதிரே வருவதைக் கவனிக்கவில்லை.”

“நீங்கள் கவனிக்கா விட்டால் என்ன? நான்தான் கவனித்து விட்டேனே? அது சரி; கோவில் பக்கமாகப் போய் விட்டு வரலாம்! வருகிறீர்களா?”

“போகலாம். கோவிலில் இன்றைக்கு என்ன?”

“இன்றைக்குக் கார்த்திகை இல்லையா? சொக்கப்பனை கொளுத்தப் போகிறார்கள். போய்ப் பார்த்து விட்டு வருவோமே” என்றார் அவர்.

“சரி வாருங்கள், போவோம்” என்று அவரோடு திரும்பி நடந்தேன். அது மலையடிவாரத்து ஊராகையினால் தெரு, வில்லின் முதுகுப்புறம் போல நடுவில் மேடாகவும், இரு முனைகளிலும் பள்ளமாகவும் கிழக்கு மேற்காக அமைந்திருந்தது. தெருவின் மேற்குக் கோடியில் சேது நாராயணப் பெருமாள்கோவில். பள்ளத்திலிருந்து தலையை நீட்டி நிமிர்ந்து நின்ற அந்தக் கோவிலின் கோபுரம் தெருவின் மறுகோடியிலிருந்து பார்க்கும் போது அடிவானத்தில் முளைத்தெழுந்த அதிசயம் போல் தோன்றியது. கார்த்திகைக்காக ஏற்றப்பட்டிருந்த தீபங்கள் அந்த அதிசயத்தில் ஒளிப் பூக்களாக மினுக்கிக் கொண்டிருந்தன.

கோவிலுக்கு முன்னால் தரையில் குழி வெட்டி ஒரு பனைமரக் கம்பம் நடப்பட்டிருந்தது.கம்பத்தைச் சுற்றிலும் நன்றாகக் காய்ந்த ஒலைகளை அடர்த்தியாக வேய்ந்திருந்தார்கள். பெருமாள் கோவிலிலிருந்து புறப்பாடாகி வந்ததும், அதை முறைப்படிக் கொளுத்துவது வழக்கம். அதற்குத்தான் சொக்கப்பனை என்று பெயர்.

எனது குழந்தைப் பருவத்திலிருந்து இந்தக் கார்த்திகைச் சொக்கப்பனை கொளுத்தும் அதிசயத்தை எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம் சிறு வயதிலிருந்தே உண்டு.

சமூகப் பழக்க வழக்கங்களிலோ, தெய்வீகத் தொடர்புடைய காரியங்களிலோ, நம்முடைய முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கும் எந்த ஒரு முறைக்கும் ஏதாவது அர்த்தம் இருக்கவேண்டும், அல்லது நிச்சயமாக இருக்க முடியும் என்று நம்புகிறவன் நான்.

கார்த்திகையன்று கோவில் வாசலில் பெருமாளுக்கு முன்பாகப் பனைமரக் கம்பத்தில் காய்ந்த ஒலைகளைக் கட்டிக் கொளுத்துவதிலும், அதற்குச் சொக்கப்பனை என்று பெயர் வைத்திருப்பதிலும் என்ன அர்த்தம் இருக்க முடியுமென்று புரியவில்லை எனக்கு.

புரியாவிட்டாலும் தெரிந்தவர்களிடம் கேட்டுப்புரிந்து கொள்ளவேண்டுமென்ற ஆசை உண்டு. இந்தக் காலத்தில் படிப்பையும், நாகரிகத்தையும், தங்களுக்கே சொந்தமென்று உரிமை கொண்டாடுகிற சிலர், தங்களுக்குப் புரியாதது எதுவும் உண்மையாக இருக்க முடியாதென்று சாதிக்கிறார்களே அவ்வளவு தன்னம்பிக்கை அடியேனுக்கு இல்லை.

யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று பல காலமாக நினைத்துக்கொண்டிருந்தும் இன்றுவரை அந்த வாய்ப்பு நேரவே இல்லை. இன்றைக்குத் திருவடியாப் பிள்ளையோடு சொக்கப்பனை பார்ப்பதற்குக் கிளம்பவே, அவரிடமே கேட்டுவிடலாமா என்று நினைத்தேன்.

இந்த மனிதர் திருவடியாப்பிள்ளைக்குப் பிறருடைய மனத்திலிருக்கும் நினைவை அறிகிற மந்திர வித்தை ஏதாவது தெரியுமோ, என்னவோ?

“சொக்கப்பனை கொளுத்தும் விழாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதிகமாகத் தண்ணிர் பெருக்கெடுத்து ஒடுவதையோ, அதிகமாக நெருப்புப் பிடித்து எரிவதையோ, வேடிக்கை பார்க்கும் மனநிலை சிறுவர்களுக்குத்தான் உண்டு! கடவுளுக்குக் கூட இந்த விளையாட்டு ஆசைகள் உண்டா?” என்று ஆராய்ச்சியுணர்வைக் கிளறிவிடும் நோக்கத்தில் கேட்பவர்போல் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“ஐயா! இதே கேள்வியை வேறு யாரிடமாவது கேட்கவேண்டுமென்று எனக்குப் பலநாட்களாக ஆவல் இருந்துவருகின்றது. நீங்களே விளக்கமாக விடைகூறிவிட்டால் நன்றாயிருக்கும்” என்றேன். பேசிக்கொண்டே இருவரும் கோவில் வாசலை நெருங்கிவிட்டோம். கோவில் வாசலில் முன் மண்டபத்துக் குறட்டில் உட்கார்ந்தோம். பெருமாள் வீதி ஊர்வலம் புறப்படுவதற்கு இன்னும் நிறைய நேரமிருந்தது. அதுவரை எதைப் பற்றியாவது பேசிப் பொழுதைக் கழிக்க வேண்டுமே? சொக்கப்பனை கொளுத்துவது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். நண்பர் திருவடியாப் பிள்ளை இருந்தாற் போலிருந்து, “உண்மையின் ஆற்றலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்.

“உண்மை அழிவதில்லை. நெருப்பைப் போலத் தன்னை அழிக்க முயலும் பொய்யைத் தான் அழித்துவிட்டு நிற்கிறது.”

“ஆ! அப்படிச் சொல்லுங்கள். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே கார்த்திகை நாளில் இந்தக் கோவில் வாசலில் காயாம்பூ அம்பலக்காரன் இதேபோல் தான் கூறினான். ஆனால், அப்போது இந்த ஊர் முழுவதும் அவனை நம்பவில்லை.”

“காயாம்பூ அம்பலக்காரனா? யார் அவன்? இப்படி முன்பின் தொடர்பில்லாமல் மொட்டையாகக் கூறினால், எனக்கென்ன தெரியும்?” நான் கேட்டேன். என்னுடைய கேள்விக்குக் கிடைத்த விடை சுவாரஸ்யமானது.

“இந்த ஊரில் இந்தப் பெருமாள் கோவிலில் நடந்த சம்பவம்தான். கோவில் நந்தவனத்தில் பூக்களைக் கொய்து மாலை கட்டிக் கொடுக்கும் பண்டாரமாக இருந்தான் காயாம்பூ. அந்தக் காலத்தில் பெருமாள் கோவிலில் பண்டாரத்துக்குச் சில தனிப்பட்ட மரியாதைகள் உண்டு. அந்த மரியாதைகளையும், சிறப்புக்களையும் ஏற்றுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு மட்டும்தான்.

அவற்றில் திருக்கார்த்திகையன்றைக்குப் பெருமாளுக்கு முன் சொக்கப்பனை கொளுத்தும் மரியாதையும் ஒன்று. அர்ச்சகர் கையால் பண்டாரத்துக்கு மாலை, பரிவட்டம் முதலிய மரியாதைகளைச் செய்தபின், அகல் விளக்கைப் பொருத்தி, முறைப்படி அந்தச் சொக்கப்பனையைக் கொளுத்தும் உரிமை பண்டாரத்தைச் சேர்ந்தது. காயாம்பூவுக்கு இந்தத் திருக்கார்த்திகை மரியாதை தனக்குக் கிடைப்பதில் தனிப்பெருமை. சொக்கப்பனை எரியும் காட்சியைப் பார்ப்பதற்காக ஊரே கோவில் வாசலில் கூடியிருக்கும் சமயத்தில், ஊருக்கு முதல்வரான பெருமாளுக்கு முன்னால் அந்தக் காரியத்தைச் செய்பவன் பெருமைப்பட வேண்டியதுதானே?

வருடம் தவறாமல் காயாம்பூ அம்பலக்காரனுக்குக் கிடைத்து வந்த இந்தப் பெருமை, அந்த வருடம் சிறுமையாக முடிந்துவிட்டது. சந்தர்ப்பத்தின் கோளாறோ, அல்லது அவனுடைய பொல்லாத வேளையோ, எதிர்பாராத விதத்தில் அப்படி ஒரு விபரீத நிகழ்ச்சி நடந்துவிட்டது. ஒருவரா? இருவரா? அல்லது நாலைந்து பேர்களா? ஊர் முழுவதுமே ஒரே குரலாக அந்தப் பழியைக் காயாம்பூவின் மேல்தான் சுமத்தியது.

நடந்தது இதுதான். வழக்கம்போல் அந்தத் திருக்கார்த்திகையின் போதும் பெருமாள் புறப்பாடாகி நான்கு மாட வீதிகளையும் சுற்றிவிட்டுக் கோவில் வாசலில் சொக்கப்பனைக்கு முன்வந்து நின்றார். முன்பெல்லாம் இப்போது போடுவதைவிடப் பெரிய சொக்கப்பனையாகப் போட்டிருப்பார்கள். கிட்டத்தட்ட ஒரு கோபுரம் தரையிலிருந்து எழுப்பப்பட்டது போல இருக்கும். பனையின் உச்சிவரை ஏறிச் செல்லுவதற்கு வசதியாக உட்புறத்தில் மூங்கில் சட்டங்கள் கொடுத்துக் கட்டியிருப்பார்கள். சொக்கப்பனையைக் கொளுத்துவதற்கு முன்னால் பண்டாரம் பனை மரத்து உச்சியில் ஏறித் தீபத்தை வைத்துவிட்டு வரவேண்டும். அவன் கீழே இறங்கி வந்தபின்புதான் சொக்கப்பனையின் அடிப்பாகத்தில் கொளுத்துவார்கள். அந்த வருடம் காயாம்பூவின் சத்தியத்தைச் சோதிப்பதுபோல் அது நடந்துவிட்டது.

ஒவ்வொரு நாள் காலையிலும் குடலையில் புதிய பூ மாலைகளைக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு, அதே குடலையில் பழைய மாலைகளைக் கழித்து வாங்கி வருவான் காயாம்பூ. விடிவதற்கு முன்பே பூக்களை எடுத்துத் தொடுத்துத் திருப்பள்ளியெழுச்சியின்போதே கொண்டுபோய்ச் சந்நிதியில் மாலைகளைக் கொடுத்துவிடுவான். திருக்கார்த்திகை அன்றைக்குக் காலையிலும் வழக்கப்படியே சந்நிதியில் மாலையைக் கொடுத்துவிட்டுப் பழைய மாலைகளோடு திருப்பிக் கிடைக்கும் பூக்குடலைக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

அந்த நாளில் கோவில்களுக்குள்ளே மின்சார விளக்கு ஏது? எண்ணெய்த் தீபங்களின் மங்கிய ஒளிதான். அர்ச்சகர் காயாம்பூவின் பூக்குடலைக்குள் பழைய மாலையைக் கழற்றி வைக்கும்போது பெருமாளின் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பதக்கம் ஒன்றும் சேர்ந்து, குடலைக்குள் இடம் பெற்றுவிட்டது. வேலை அவசரத்தில் அர்ச்சகர் அதைக் கவனிக்கவில்லை. காயாம்பூவும் பூக்குடலையை வாங்கிக் கொண்டு நந்தவனத்துக்குத் திரும்பிவிட்டான்.

பெருமாளுக்குச் சார்த்திக் கழித்த பழைய மாலைகளை யார் காலிலும் மிதிபடாமல் நந்தவனத்தின் மூலையிலுள்ள பள்ளத்தில் போட்டுவிடுவது வழக்கம். காயாம்பூ,பழைய மாலையைத் திருப்பிக்கொண்டு வந்ததும் அவன் மூத்த மகன் நாகலிங்கம்தான் குடலையை எடுத்துப்போய்ப்பள்ளத்தில் கவிழ்த்துவிட்டு வருவான்.

அன்று பழைய மாலையைப் பள்ளத்தில் கொட்டியதும் மாலையோடு சேர்ந்து ஏதோ மினுமினுப்பதைக் கண்டு சிறிது தயங்கி நின்றான் நாகலிங்கம். வழக்கமாக மாலையில் வைத்துக் கட்டும் ஜிகினாப்பட்டையாக இருக்கும் என்று முதலில் அலட்சியமாகப் பார்த்தவன், கண்களை அகல விரித்தான். பள்ளத்திற்குள் இறங்கி மாலையில் சிக்கிக் கொண்டிருந்த அந்தப் பொருளைத் தனியே பிரித்தெடுத்தான். பெருமாளின் தங்கப்பதக்கம் மின்னல் துணுக்கெனப் பிரகாசித்தது அவன் கையில் பெருமாளுக்குச்சார்த்தும் பூமாலை, பச்சைக் கற்பூரம், சந்தனம், பன்னீர் ஆகியவற்றின் வாசனை அந்தத் தங்கப் பதக்கத்தையும் சார்ந்திருந்ததால், மணம் அவன் நாசியைத் துளைத்தது.

ஊர்ச் சாவடியில் மூன்று சீட்டு விளையாடுவதும் நாளொன்றுக்கு எத்தனை காட்சி உள்ளுர் சினிமாக் கொட்டகையில் உண்டோ, அத்தனை காட்சிகளையும் பார்த்து விடுவதும்தான் நாகலிங்கத்தின் அன்றாடச்செயல்கள். அந்த இருபத்திரண்டு வயது விடலைப் பையனின் கையில் பெருமாளின் விலை மதிப்பற்ற தங்கப்பதக்கம் மின்னியது.

இந்த மாதிரிக் காரியங்களுக்கெல்லாம் இரத்தினப் பத்தர்தான் சரியான ஆள்! காதும் காதும் வைத்தாற்போலக் கொடுக்கிற சாமானை வாங்கிக் கொண்டு பணத்தை எண்ணிக் கீழே வைத்துவிடுவார். அவரிடம்தான் இதைக்கொண்டு போகவேண்டும் என்று தனக்குள் மெதுவாகச் சொல்லிக்கொண்டு, அதைக் கைக்குட்டையில் சுற்றிச் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான் நாகலிங்கம்.

சிறிது நேரம் கழித்து அவன் இரத்தினப் பத்தரைக் காண்பதற்குப் புறப்பட்டபோது,“அடேநாகு இன்றைக்கு நீ வெளியிலே எங்கேயும் போக முடியாது. திருக்கார்த்திகை வேலை சுமந்து கிடக்கிறது. ஆறு மணிவரை இரண்டு பேருமாகச் சேர்ந்து வேலை செய்தால்தான் அத்தனை மாலைகளையும் கட்டி முடிக்கலாம். அப்புறம் எங்கே வேண்டுமானாலும் போ” என்றான் காயாம்பூ.

“சும்மா இந்தப் பக்கத்துத் தெருவரையில் போய்விட்டு ஒரு நொடியில் திரும்பி விடுகிறேன் அப்பா” என்று தட்டிக் கழித்துவிட்டுக் கிளம்பப் பார்த்தான் பையன். “அதெல்லாம் முடியாது. என்ன காரியமானாலும் ஆறு மணிக்கு மேலே வைத்துக் கொள். வருடத்திற்கு ஒரு நாள். சாமி காரியம்! அதைக் குறைவு வராமல் செய்துவிட வேண்டும்” என்று பையனை வற்புறுத்தி, உட்கார வைத்துவிட்டான் காயாம்பூ.

கோவிலில் முக்கியமான ஒரு பெரிய திருநாளுக்கு வேண்டிய மாலை, உதிரிச்சரம், செண்டு இவ்வளவும் முடிப்பதென்றால், இலேசுப்பட்ட காரியமா? நாகலிங்கம் ஆறேகால் மணிக்குத்தான் நந்தவனத்திலிருந்து கிளம்ப முடிந்தது. காயாம்பூ இரண்டாந்தடவை நீராடி மடியாக ஈர வேஷ்டியுடன் மாலைகளும், சரங்களும் நிறைந்த பூக்குடலைகளோடு கோவிலுக்குப் புறப்பட்டான். அன்றைக்குக் கோவில் மரியாதையைப் பெற்றுக்கொண்டு சொக்கப்பனை கொளுத்தவேண்டிய கடமையும் அவனுக்கு இருந்ததே!

நாகலிங்கம் இரத்தினப் பத்தரைச் சந்திக்கும்போது ஆறேமுக்கால் மணி. அவர் அவசர அவசரமாக நகைப்பட்டறையை மூடிவிட்டு, எங்கோ கிளம்புவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

“வா அப்பா நாகலிங்கம் என்ன சங்கதி?” என்று அவனை வரவேற்றார் இரத்தினப் பத்தர்.

“சும்மா! இப்படி உங்களைத்தான் பார்த்துவிட்டு வரச் சொல்லி அப்பா அனுப்பினார்” என்று பொய்யைக் கலந்தான் நாகலிங்கம். பத்தரிடத்தில் தன் தகப்பனார் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தானாக எதையும் சாதித்துக் கொள்ள முடியாதென்று அவனுக்குத் தெரியும்.

“என்ன காரியம்? இப்படிவாயேன்” என்று பட்டறைக்குள் ஒதுக்குப்புறமான ஒரு இடத்துக்கு அவனைக் கூட்டிக்கொண்டு போனார் பத்தர். நகை ஈட்டின்பேரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் லேவாதேவித் தொழிலையும் பத்தர் செய்து வந்தார். காயாம்பூ அடிக்கடி அவரிடம் கடன்வாங்கிக் கொடுக்கும் வாடிக்கையான ஆள்.மகன் மூலம் ஏதாவது வட்டிப் பணம் – பாக்கி கொடுத்தனுப்பியிருப்பான் என்றெண்ணிக் கொண்டுதான் பத்தர், நாகலிங்கத்தைத் தனியே அழைத்துச் சென்றார்.

“பத்தரே! அப்பா இதை உங்களிடம் கொடுத்துப் பணமாக மாற்றிக் கொண்டு வரச் சொன்னார், அவசரமாகச் செலவுக்கு வேண்டும்” என்று சொல்லி, அந்தப் பையன் நாகலிங்கம் எடுத்துநீட்டியபொருளைப் பார்த்தபோது, அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அதைக் கையில் வாங்கி விளக்கு வெளிச்சத்தில் கொண்டுபோய் மேலும் கீழுமாகப் புரட்டினார். உற்றுப் பார்த்தார். இரத்தினப் பத்தரின் கைவிரல்கள் நடுங்கின. “தம்பீ! நாகு இதை உன் தகப்பனார்தான் கொடுத்துவிட்டாரா?” மனக் கலக்கத்தின் சாயையும், சந்தேகமும், பத்தரின் குரலில் தொனித்தன. அவர் விழிகளை இமைக்காமல் நாகலிங்கத்தைக் கூர்ந்து நோக்கினார். நாகலிங்கத்திற்குச் சரியாகப் பதில் சொல்ல வரவில்லை. உளறிக் குழறி வார்த்தைகளைப் பூசி மெழுகினான்.

“பரவாயில்லை தம்பீ! இங்கேயே இருங்க. வீட்டு வரை போய்ப் பணம் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறேன்” என்று நாகலிங்கத்தை அங்கே உட்கார வைத்துவிட்டுப் பட்டறையிலிருந்து இறங்கித் தெருவில் நடந்தார் இரத்தினப் பத்தர்.

நாகலிங்கத்திற்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. பத்தர் கையோடு பதக்கத்தையும் கொண்டு போயிருந்தார். ‘பத்தருக்கு அது கோவில் நகை என்று தெரிந்திருக்குமோ?’ என்று அவன் மனத்தில் ஒரு பயப்பிரமை ஏற்பட்டது. ‘இரத்தினப் பத்தர் இளமையிலேயே மதம் மாறியவர். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தபின், அவர் பெருமாள் கோவிலுக்கு வந்திருக்கக் காரணமில்லை. அதனால் பெருமாளின் நகைகளைப்பற்றி அவருக்குத் தெரிந்திருக்க முடியாது!’ தனக்குத்தானே சமாதானமும் செய்துகொண்டான் நாகலிங்கம்.

இரத்தினப் பத்தர் போனவர், போனவர்தான். ஆள் திரும்பி வரவே இல்லை. ஆறேமுக்கால் மணிக்கு நகைப்பட்டறைக்குள் நுழைந்த நாகலிங்கம், ஏழே முக்கால் மணி வரை காத்திருந்தான். அதற்கு மேலும் அங்கே காத்திருக்கப் பொறுமை இல்லை அவனுக்கு ‘பத்தர் எங்கே ஒடிப்போய்விடப் போகிறார்? நாளைக்கு வந்து பணத்தை வாங்கிக் கொண்டால் போயிற்று.இங்கிருப்பவர்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம்’ என்று நினைத்துக் கொண்டு பட்டறையிலிருந்த வேலைக்காரனிடம், “பத்தர் ஐயா வந்தால், நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன் என்று சொல்லுங்கள்” என்று கூறிவிட்டுக் கிளம்பினான் நாகலிங்கம்.

நாகலிங்கம் இரத்தினப் பத்தரின் பட்டறையிலிருந்து புறப்பட்ட அதே நேரத்திற்குக் கோவில் வாசலில் சொக்கப்பனை விழாவைப் பார்ப்பதற்காகக் கோலாகலத்தோடு மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.

தரையில் உதித்த நட்சத்திரங்களைப் போல வரிசையாகத் தீபங்கள்; அவற்றிற்கு நடுவே ‘ஒளிகளுக்கெல்லாம் பேரொளியாயிருப்பவன் நான்’ என்று சொல்வதுபோல் நான்கு வீதிகளிலும் திருஉலாவை முடித்துக் கொண்டு பெருமாளின் பல்லக்கு வந்து நின்றது. இதோ சொக்கப்பனையைக் கொளுத்திவிடப் போகின்றார்கள். கூடியிருந்த மக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற ஆவலில், ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னால் வர முயன்றனர்.

‘அப்பப்பா! நெருப்பு எரிவதைப் பார்ப்பதில் இந்த மனிதர்களுக்கு ஏன்தான் இவ்வளவு ஆர்வமோ? எதுவும் தன்னை பாதிக்காத வரையில் மற்றவர்களுக்கு வேடிக்கையாகத்தான் தோன்றும் ஒரு வீடு பற்றி எரிந்தால் இப்படி வேடிக்கையாகப் பார்க்கத் தோன்றுமா?’

சொக்கப்பனையைக் கொளுத்துவதற்காகக் காயாம்பூ அம்பலக்காரன் அடக்க ஒடுக்கமாகப் பயபக்தியோடு பெருமாளின் பல்லக்குக்கு முன் வந்து நின்றான்.

தர்மகர்த்தாவும், உள்ளூர்ப் பெரியதனக்காரர்களும், பல்லக்கின் கீழே மிடுக்காக நின்றுகொண்டிருந்தனர். காயாம்பூ முறைப்படி அவர்களை வணங்கினான். அர்ச்சகர் அவன் கழுத்தில் மாலை போட்டுப் பரிவட்டம் கட்டினார். அவன் வணக்கத்தோடு அவற்றை ஏற்றுக்கொண்டு, பனைமரத்தில் ஏறுவதற்குத் தயாராக வேஷ்டியை வரிந்து கச்சை கட்டிக் கொண்டான். ஒரு வெண்கலத் தாம்பாளத்தில் அகல்விளக்கைப் பொருத்திவைத்து, மரியாதையாக அவன் கையில் கொடுத்தார் அர்ச்சகர்.

காயாம்பூ ஒரு கையில் விளக்கு வைத்த தாம்பாளத்தை ஏந்திக் கொண்டு சொக்கப்பனை மரத்தில் ஏறத் தயாரான போது, இரத்தினப் பத்தரும், இரண்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தனர். பத்தர் தர்மகர்த்தாவின் காதருகே வந்து ஏதோ கூறினார். தர்மகர்த்தா பத்தரிடம் பதிலுக்கு ஏதோ கேட்டார். உடனே இரத்தினப் பத்தர் தம் பையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தர்மகர்த்தாவிடம் காண்பித்தார். தர்மகர்த்தா அர்ச்சகரைப் பக்கத்தில் கூப்பிட்டு, அதைக் காட்டி என்னவோ அதட்டிக் கேட்டார். அர்ச்சகர் ‘திருதிரு’ என்று விழித்தார். “காலையில் களைந்து கொடுத்த மாலையோடு சேர்ந்து போயிருக்கிறது. நான் இதுவரை பெருமாள் திருமேனியில் இது இல்லாததைக் கவனிக்கவே இல்லை. இந்தப் பண்டாரப் பயல் அப்போதே என்னிடம் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டாமோ? இவன் மோசம் செய்திருக்கிறான்” என்று தர்மகர்த்தாவிடம் அர்ச்சகர் கதறினார். தர்மகர்த்தாவின் மீசை துடித்தது. கண்கள் சிவந்தன.

“அடேய் காயாம்பூ தடிப்பயலே விளக்கைக் கீழே வைத்துவிட்டு வா இங்கே!” என்று கூப்பாடு போட்டார். காயாம்பூ அம்பலக்காரன் விளக்கைத் தாம்பாளத்தோடு சொக்கப்பனைக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, அரண்டுபோய் என்னவோ, ஏதோ என்று புரியாமல் தர்மகர்த்தாவுக்கு முன்னால் வந்து நின்றான். அவர் ஏன் அத்தனை பேருக்கு முன்னால் தன்னை அப்படி மரியாதையில்லாமல் கூப்பாடு போடுகிறார் என்பதே அவனுக்கு விளங்கவில்லை.

போலீஸ்காரர்களைப் பார்த்ததும் அவன் மனத்தில் என்னென்னவோ எண்ணங்கள் தோன்றின. தன் அருமை மகன் நாகலிங்கம் எங்காவது ‘திருவிளையாடல்’ புரிந்துவிட்டு, அகப்பட்டுக் கொண்டானோ? அதற்காக ஜாமீனுக்கு வந்திருக்கிறார்களோ என்றுதான் முதலில் அவன் நினைத்தான். “ஏண்டா திருட்டுக் கழுதை சாமி நகையைக் கொண்டு போய் விற்றுச் சாப்பிட வேண்டும் என்கிற அளவுக்கு எப்போதடா உனக்குத் துணிச்சல் வந்தது?” கூப்பாடு போட்டுக் கொண்டே அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவில் காயாம்பூவை அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்துவிட்டார் தர்மகர்த்தா.

“ஆத்திரப்படாதீர்கள்! முதலில் விஷயத்தை இன்னதென்று விசாரியுங்கள்” என்று பக்கத்திலிருந்தவர்கள் குறுக்கிட்டுத் தடுத்திருக்காவிட்டால், அந்த அறை காயாம்பூவின்மேல் விழுந்தே இருக்கும்.

இரத்தினப் பத்தர் முன்னால் வந்து காயாம்பூ அம்பலக்காரனிடம் விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.“ஐயா! நான் ஒரு பாவமும் அறியேன். குடலைக் குள்ளிருந்த பழைய மாலைகளை நந்தவனத்திற்குப் போனதும் என் மகனிடம் கொடுத்துப் பூங்கிடங்கில் கொட்டி வரச் செய்தேன். அந்தப் பயல் போக்குச் சரியில்லை. விடலைத்தனமாக ஏதோ செய்திருக்கிறான். எனக்குத் தெரிந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்கவிட்டிருக்க மாட்டேன். உடனே ஒடிவந்து அர்ச்சகரிடம் கொடுத்திருப்பேன்” என்று பதறிக் கூறினான் காயாம்பூ.

“சரிதான் அப்பா யாரிடம் கதை அளக்கிறாய் நீ? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் நீயே இந்தப் பதக்கத்தை உன் மகனிடம் கொடுத்து, என்னிடம் விற்றுப் பணம் வாங்கிக்கொண்டு வரச் சொன்னதாக உன் மகன் வந்து சொன்னான். நீ அதற்குள் உனக்கு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடி என்னிடம் மறைக்கிறாயே! இந்த ஏமாற்று வேலை எல்லாம் இங்கே பலிக்காது” என்று பத்தர் கொதிப்போடு கூறினார்.

“ஐயா! சாமி சாட்சியாகச் சொல்கிறேன். உண்மையில் எனக்கு இது தெரியவே தெரியாது” என்று அழமாட்டாக் குறையாகக் கெஞ்சினான் காயாம்பூ.

“சீ! அயோக்கியப் பயலே வேஷமா போடறே” தர்மகர்த்தா பளிரென்று அவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.

அவ்வளவு பெரிய கூட்டத்துக்கு நடுவே அடிபட்ட காயாம்பூ, “இந்தச் சாமிக்கு கண் இருந்தால், இந்த நெருப்பு நெருப்பாக இருந்தால், உண்மையைக் காண்பிக்கவேனும்” என்று ரோஷம் பீறிட இரைந்து சப்தமிட்டான்.

அதற்குமேல் காயாம்பூவை அங்கே நிற்கவிடாமல் போலீஸ்காரர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டனர். “திருட்டுத் தடியன்! இப்படிப்பட்ட ஆட்களெல்லாம் கோவிலில் வேலை செய்தால் கோவில் உருப்பட்டாற் போலத்தான்” என்று தர்மகர்த்தா காயாம்பூவைப் போலீஸார் பிடித்துக்கொண்டு போன பின்பும் ஆத்திரம் அடங்காமல் உறுமினார்.

இப்படி அந்த வருடம் சொக்கப்பனை உற்சவம் அலங்கோலமாக முடிந்து விட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஜாமீன் கொடுத்துவிட்டு ஓடி வந்தான் காயாம்பூ, ஆயிரமிருந்தாலும் பெருமாளுக்கு வழக்கமாகத் தான் செய்யும் கைங்கரியத்தைச் செய்யாமல் விட மனமில்லை அவனுக்கு. ஆனால், அவன் இன்ஸ்பெக்டரிடம் வாதாடி ஏற்ற நபர் மூலம் ஜாமீன் கொடுத்துவிட்டு வருவதற்குள் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு விட்டது. உரிமையையும் மரியாதையையும் இழந்ததோடல்லாமல், திருடாமலே திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட அவன் மனம் குமுறியது.

“ஆண்டவனே! நியாய தேவதைக்குக் கண் அவிந்து விடவில்லையானால், என் முறையீட்டுக்கு நியாயம் கிடைக்கட்டும். நான் திருடவில்லை என்பது உண்மையானால், இனி இந்த இடத்தில் எந்த வருடம் சொக்கப்பனை கட்டி நிறுத்தினாலும், அது எரியவே கூடாது.என் சத்தியத்துக்கு அது அடையாளம்” என்று கோவிலை நோக்கித் தெருப் புழுதியை வாரி இறைத்துவிட்டு, எரிந்துகொண்டிருந்த சொக்கப்பனை நெருப்பிற்குள் பாய்ந்துவிட்டான், காயாம்பூ.

அவனைத் தடுப்பதற்கு அங்கு நின்ற யாருக்கும் தோன்றவில்லை.“ஐயோ, அம்மா” என்று பயமும் திகைப்புமாகக் கூச்சலிட்டார்களே ஒழியத் தீக்குள் புகுந்து அவனை மீட்க யாரும் முன்வரவில்லை. கடைசியில் சொக்கப்பனையின் ஜுவாலைகள் வேகம் அடங்கித் தணிந்த போதுதான் காயாம்பூவின் உடலை வெளியேற்ற முடிந்தது. அந்த உடல்? அது வெறும் உடலாகத்தான் இருந்தது. மறுநாள் அப்பனைச் சுடுகாட்டில் அடக்கம் செய்துவிட்டு வந்த பின், நாகலிங்கம் உண்மையை வெளியிட்டுக் கதறினான். ஆனால், அப்போது அந்த உண்மை வெளி வந்துதான் என்ன பயன்? ஒரு நல்ல மானஸ்தனை அவமானப்படுத்திக் கொல்வதற்கு முன், அது வெளிவந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்?

“ஆமாம். காயாம்பூ ஏதோ சாபம்கொடுத்தான் என்றீர்களே? அந்தச்சாபத்திற்குப் பிறகு சொக்கப்பனை எரியவே இல்லையா?” என்று கேட்டேன் நான்.

“அதையேன் கேட்கிறீர்கள்? அவன் இறந்த வருஷத்திற்கு அடுத்த வருஷம் திருக்கார்த்திகையன்று ஒரே அடை மழை சொக்கப்பனை வெள்ளத்தில் மிதந்தது. அதற்கடுத்த வருடம் பனையில் தீபம் வைப்பதற்கு ஏறியவன், உச்சியிலிருந்து கீழே விழுந்து சொக்கப்பனை கொளுத்தப்படாமலே அமங்கலமாக முடிந்தது. மூன்றாம் வருஷம் காற்றுச் சகிக்க முடியாமல் வீசிக் கட்டி வைத்திருந்த சொக்கப்பனை மரத்தையே கீழே சாய்த்துவிட்டது”.

“அப்படியானால் இப்போது எரிகிறதே?” என்று குறுக்கிட்டுக் கேட்டேன்.

“இதுவா? இது வேறு இடம் முன்பு சொக்கப்பனை கொளுத்திய இடத்திலிருந்து இருபதடி தள்ளிப் பனை நிறுத்தி, இப்போது சில வருஷங்களாகக் கொளுத்தி வருகிறார்கள். அந்தப் பழைய இடத்தில் கொளுத்த முயன்றால், கடைசி விநாடியிலாவது ஏதேனும் அபசகுனம் ஏற்பட்டு நின்று போகிறது” என்றார் திருவாடியாப் பிள்ளை.

“பிள்ளை அவர்களே உண்மை நிகழ்ச்சிகள் காலப்போக்கில் அழிந்து விடுகின்றன. இன்னும் சிலவோ காலத்தின் போக்கையே அழித்துவிடுகின்றன. உங்கள் காயாம்பூ இரண்டாவது வகையில் இடம் பிடித்துவிட்டான்” என்று பெருமிதத்தோடு சொன்னேன் நான்.

– 1963-க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *