கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 8, 2024
பார்வையிட்டோர்: 824 
 
 

5. வாரும் வழியும் | 6. மனிதப்பற்று | 7. அழைப்பு

சென்ற டிசம்பரிலே குளிரின் கொடுமையால் ஜான் தார்ன்டனுடைய கால்கள் உறைந்து போய் நோயுற்றன. வெள்ளாற்றின் மேற்பகுதிக்குப் புறப்பட்ட அவனுடைய கூட்டாளிகள் அவனை அங்கேயே விட்டுச்சென்றார்கள். ஓய்வு பெற்று அவன் குணமடைய வேண்டுமென்பது அவர்களுடைய எண்ணம். வெள்ளாற்றின் மேற்பகுதியிலிருந்து அறுப்பு மரங்களை ஓடத்தில் ஏற்றிக்கொண்டு அங்கே வந்து பிறகு அம்மரங்களை விற்க டாஸனுக்கு ஓரிடத்திலேயே செல்வார்கள். பக்கைக் காப்பாற்ற வந்த சமயத்திலும் தார்ன்டன் கொஞ்சம் நொண்டிக் கொண்டு தானிருந்தான். ஆனால் குளிர் நீங்கி வெப்பம் சற்று அதிகரிக்கவே அவன் முற்றிலும் குணமடைந்தான். வசந்தகாலத்தின் நீண்ட பகற்பொழுதிலே ஆற்றின் கரையில் படுத்துக்கொண்டு ஓடும் தண்ணீரின் வனப்பையும், பறவைகளின் கீதத்தையும், இயற்கையின் இனிமையையும் பக் பருகிக்கொண்டிருந்தது. அதனால் அது மீண்டும் தன் பழைய வலிமையைப் பெற்றது.

மூவாயிரம் மைல்கள் பிரயாணம் செய்த பிறகு கிடைக்கும் ஓய்வின் சுகமே சுகம். வேலையொன்றுமின்றி பக் சுற்றித்திரிந்தது. அதன் காயங்கள் ஆறின; அதன் தசைநார்கள் புடைத்தெழுந்தன; உடம்பிலே எலும்பை மறைத்துச் சதைப்பற்று மிகுந்தது. தார்ன்டனோடு பக்கும், ஸ்கீட்டும், நிகும் உல்லாசமாக உலாவின. அறுப்பு மரங்களோடு ஓடம் அங்கு வந்து சேர்ந்ததும் டாஸனுக்குப் புறப்படத் தார்ன்டன் தயாராய் இருந்தான். ஸ்கீட் என்பது அயர்லாந்து நாட்டுச் சிறிய நாய். அது பக்கினிடம் அன்போடு பழக முன்வந்தது. சாகப் போவது போலக் கிடந்த பக் அதை எதிர்த்துப் பயமுறுத்தவில்லை. நோயால் துன்புறுகின்ற நாய்களுக்கு உதவி செய்யும் தன்மை ஒரு சில நாய்களுக்கு உண்டு. பூனை தனது குட்டிகளை நாவினால் நச்கிச் சுத்தப்படுத்துவது போல, பெண் நாயான ஸ்கீட் பக்கின் காயங்களை நாவினால் நக்கிச் சுத்தப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் பக் தனது காலை உணவை முடிக்கும் சமயத்தில் ஸ்கீட் அதனிடம் வந்து இந்தப் பணியைச் செய்யும், தார்ன்டனுடைய உதவியை எதிர்பார்ப்பது போலவே சில நாட்களில் ஸ்கீட்டின் உதவியையும் பக் எதிர்பார்க்கலாயிற்று. நிக் வேட்டைநாய் இனத்தைச் சேர்ந்தது. அது கருமை நிறம் வாய்ந்தது. அதன் கண்களைப் பார்த்தாலே அது மிக நல்ல சுபாவமுடைய நாய் என்று தெரியும். அதுவும் பக்கினிடம் அன்போடிருந்தது.

அந்த நாய்கள் இரண்டும் தன்னிடம் பொறாமை கொள்ளாததைக் கண்டு பக் ஆச்சரியம் அடைந்தது. ஜான் தார்ன்டனைப்போலவே அவைகளும் பரந்த மனப்பான்மையும் அன்பும் உடையனவாகத் தோன்றின. பக்கின் உடம்பிலே பலம் ஏற ஏற அந்த நாய்கள் அதனுடன் பல வகையாக விளையாடின. தார்ன்டனும் அந்த விளையாட்டில் சேர்ந்து கொள்ளுவான். இவ்வாறாக பிணியெல்லாம் தீர்ந்து பக் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாயிற்று. முதல் முறையாக இப்பொழுதுதான் அதன் உள்ளத்திலே ஆழ்ந்த அன்பு தோன்றியது. கதிரவன் ஒளி கொஞ்சும் சான்டாகிளாராவில் நீதிபதி மில்லரின் மாளிகையில் இருந்தபொழுதும் அதற்கு இத்தகைய அன்பு பிறக்கவில்லை. நீதிபதியின் புத்திரர்களோடு உலாவித் திரிந்தபோதும், வேட்டைக்குச் சென்ற போதும் கூட்டாளிகளோடு சேர்ந்து வேலை செய்வது போன்றே அது நடந்து கொண்டது. நீதிபதியின் பெயர்களுக்கு அது காப்பாளன் போலிருந்தது. நீதிபதியினுடனும் அது ஒரு வகையான பெருமித நட்பே கொண்டிருந்தது. காய்ச்சலாய்க் காயும் காதல் அவர்களிடம் அதற்கு உண்டாகவில்லை. பக்திப்பித்து என்று கூறும்படியான அவ்வளவு ஆழ்ந்த அன்பை எழுப்ப ஜான் தார்ன்டன் வேண்டியிருந்தது.

அவன் அதன் உயிரைக் காப்பாற்றினான். அதுவே ஒரு விஷயம். மேலும் அவன் எஜமானனாக இருக்க எல்லா வகைகளிலும் தகுதி பெற்றிருந்தான். தங்கள் சொந்தக்காரியத்தின் பொருட்டும், ஒரு கடமையாய்க் கருதியும் மற்றவர்கள் தாங்கள் வைத்திருக்கும் நாய்களின் நலத்தைக் கவனித்தார்கள். ஆனால் தார்ன்டன் தனது குழந்தைகளைக் கவனிப்பது போல, நாய்களைக் கவனித்தான். அவன் நாய்களோடு உற்சாகமாகவும், அன்பாகவும் வம்பு பேசுவதில் தவறவே மாட்டான்; அப்படிப் பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தான். அவன் தனது கைகளுக்கிடையே பக்கின் தலையை நன்கு அழுத்திப்பிடித்துக்கொண்டு அதன் மேல் தன் தலையை வைத்து முன்னும் பின்னும் அசைந்தாடுவான்; அதே சமயத்தில் பக்கை வைவது போலப் பேசுவான். அந்தப் பேச்சில் உள்ள அன்பைப் பக் உணர்ந்து கொண்டது. கைகளால் அழுத்தி அணைத்துக் கொண்டிருப்பதாலும், செல்லமாகத் திட்டிப் பேசுவதாலும், முன்னும் பின்னும் அசைந்தாடுவதாலும் பக் மிகப்பெரிய உவகை அடைந்தது. அந்தப் பேருவகையால் அதன் உள்ளமே வெடித்து விடுமோவென்று தோன்றியது. அணைப்பிலிருந்து அவன் விட்டவுடன் அது தாவி எழுந்து நிற்கும். அதன் வாயிலே சிரிப்புடன் குறி தோன்றும். கண்களிலே அதன் அன்பு முழுவதும் வெளியாகும். அதன் குரல்வளையிலே பேச்சொலியாக உருவெடுக்காத அன்புணர்ச்சிகள் ததும்பும். அந்த உணர்ச்சிப்பெருக்கால் அது அசையாமல் நின்று கொண்டிருக்கும். அதைக் கண்டு ஜான் தார்ன்டன், கடவுளே! உனக்குப் பேசத்தான் முடியவில்லை” என்று பயபக்தியோடு கூறுவான்.

தார்ன்டனுடைய கையைக் கடிப்பதைப்போல பக் வாயினால் கௌவிப்பிடிக்கும். அன்பை வெளியிடுவதற்கு அதையே அது சிறந்த வழியாகக் கொண்டது. அது நன்றாகக் கவ்விப்பிடிப்பதால் கையிலே பல் பதிந்தது போல அடையாளம் தென்படும். தார்ன்டன் திட்டிப் பேசுவதை அவனுடைய கொஞ்சலாகப் பக் கருதியது போலவே, பக்கின் இத்தகைய போலிக்கடியைத் தார்ன்டன் அதன் அன்பின் அரவணைப்பாக உணர்ந்து கொண்டான்.

தார்ன்டன் அதைத் தொடும் போதும், அல்லது அதனுடன் பேசும் போதும் அது பெருமகிழ்ச்ச்சியிலே மூழ்கித்திளைத்த தென்றாலும், தார்ன்டன் இவ்வாறு தன்னிடம் அன்பு காட்ட வேண்டு மென்று அது நாடவில்லை. தார்ன்டனுடைய கையின் அடியிலே ஸ்கீட் தனது மூக்கை வைத்துக்கொண்டு, கையைத் தள்ளித் தள்ளிக் காண்பிக்கும். தன்னைத் தடவிக்கொடுக்க வேண்டுமென்று அது அவ்வாறு செய்யும். தார்ன்டனுடைய முழங்காலின் மேல் நிக் தனது பெரிய தலையை வைத்துக்கொள்ள ஆசைப்படும். ஆனால் பக் இவ்வாறெல்லாம் செய்யாமல் தூரத்திலே தள்ளி நின்று தார்ன்டனை அன்போடு பார்த்துப் போற்றுவதில் திருப்தி அடையும். தார்ன்டனுடைய பாதங்களுக்கு அருகில் ஆவலோடும், ஆர்வத்தோடும் மணிக்கணக்காக அது படுத்திருக்கும். அப்படிப் படுத்துக்கொண்டு அவன் முகத்தையே பார்க்கும்; பார்த்து அதில் தோன்றுகின்ற ஒவ்வோர் உணர்ச்சியையும் மாறுதலையும் மிகக் கூர்ந்து கவனிக்கும்; சில வேளைகளில் அவனுக்குப் பக்கத்திலோ அல்லது பின்னாலோ சற்று தூரத்தில் படுத்துக்கொண்டு அவனுடைய உடம்பின் ஒவ்வோர் அசைவையும் கவனித்துக்கொண்டிருக்கும்.

இவ்வாறு பக் மிகக் கூர்ந்து அவனைக் கவனிப்பதால், தார்ன்டன் தானாகவே பல சமயங்களில் தன் தலையைத் திருப்பி அதை நோக்குவான். அவ்வளவு நெருங்கிய தொடர்பு பக்குக்கும் அவனுக்கும் ஏற்பட்டிருந்தது. அவன் நோக்கும் போது பக்கின் அன்புள்ளம் அதன் கண்களில் வெளிப்பட்டு பிரகாசித்தது போலவே, அவனுடைய உள்ளமும் அவனுடைய கண்களில் வெளியாயிற்று.

தார்ன்டன் தன்னைக் காப்பாற்றியதிலிருந்து பல நாட்கள் வரையில் அவன் தனது பார்வையை விட்டு விலகியிருப்பதைப் பக் விரும்பவில்லை. கூடாரத்தைவிட்டு அவன் வெளியில் புறப்பட்டுப்போவது முதல் திரும்பி வரும் வரையில் பக் அவனைப் பின்தொடர்ந்தே செல்லும். வடக்குப்பிரதேசத்திற்கு வந்ததிலிருந்து பல எஜமானர்கள் அதைவிட்டுப் பிரிந்ததால், எந்த எஜமானனும் நிரந்தரமாக இருக்கமாட்டான் என்ற பயம் அதற்கு ஏற்பட்டது. பெரோல்ட்டும் பிரான்சுவாவும், ஸ்காச்சு இனத்தவனும் தன் வாழ்க்கையிலிருந்து பிரிந்தது போலத்தார்ன்டனும் பிரிந்துவிடுவானோ என்று அது அஞ்சிற்று. இரவு நேரங்களிலும், கனவிலும் இந்த அச்சம் அதைப் பீடித்தது. அந்த வேளைகளில் அது உறக்கம் கலைந்து எழுந்து மெதுவாகக் கூடாரத்திற்கு அருகில் சென்று தார்ன்டன் மூச்சுவிடும் சப்தத்தை உற்றுக்கேட்கும்.

வாழ்க்கையைப் பண்படுத்தும் இந்தப் பெரிய அன்பு ஏற்பட்டிருந்தபோதிலும் வடக்குப் பிரதேச அனுபவங்கள் அதன் உள்ளத்திலே எழும்பிய பூர்வீக வாழ்க்கையின் உணர்ச்சியும் மேலோங்கி நின்றது. கூரையின் கீழ் தீயருகிலே வாழ்ந்த வாழ்க்கையால் அதற்கு விசுவாசம் ஏற்பட்டிருந்தது. அதே சமயத்தில் காட்டு வாழ்க்கையின் கொடுமையும், தந்திரமும் குடி கொண்டிருந்தன. நாகரிகமடைந்த பல தலைமுறைகளின் பண்பாட்டைக் கொண்டுள்ள தெற்குப்பிரதேச நாயாக அதைக் கருதுவதைக் காட்டிலும் ஜான்தார்ன்டன் வளர்த்த நெருப்பின் அருகே அமர்ந்திருக்க வந்துள்ள காட்டு விலங்காகவே அதைக் கருத வேண்டும். தார்ன்டனிடம்தான் கொண்டுள்ள பேரன்பின் காரணமாக அவனிடத்திலிருந்து எதையும் அது திருடாது. ஆனால் வேறொரு முகாமில், பிறரிடமிருந்து எதையும் திருடுவதற்கு அது ஒரு கணமும் தயங்காது. மிகத் தந்திரமாகத் திருடுவதால் யாரும் அதைக் கண்டுபிடிக்கவும் முடியாது.

பல நாய்களின் பற்கள் பட்டு அதன் முகத்திலும் உடம்பிலும் தழும்புகள் இருந்தன. பக் முன்போலவே மூர்க்கமாகவும் முன்னைவிட சாமர்த்தியமாகவும் சண்டையிடலாயிற்று. ஸ்கீட்டும், நிகும் மிக நல்ல சுபாவம் உடையவையாகையால், அவை சண்டையிடா. மேலும் அவையும் ஜான் தார்ன்டனுடைய நாய்களே. ஆனால் மிகுந்த தைரியமும், மிக நல்ல இனத்தைச் சேர்ந்ததுமான நாய் எதிர்ப்பட்டாலும் அது விரைவில் பக்குக்குப் பணிந்து விடும். அப்படியில்லாவிட்டால், அதன் உயிருக்கே ஆபத்துதான். பக் சிறிதும் இரக்கம் காட்டாது. கோரைப்பல் குறுந்தடி ஆட்சியை அது நன்கு கற்றுக்கொண்டிருந்தது. சாகடிக்க முனைந்த பின் ஒரு விரோதியை அது விடவேவிடாது. ஸ்பிட்ஸ், போலீஸ் நாய்கள், தபால் நாய்கள் ஆகியவற்றிடமிருந்து அது நிறையக் கற்றுக்கொண்டிருந்தது. அரைகுறையாக எதையும் விட்டுவிடக் கூடாதென்று அது தெரிந்து கொண்டிருந்தது. தான் வெல்ல வேண்டும் அல்லது தோற்க வேண்டும். இரக்கம் காட்டுவது பலவீனம். கொடுமையான காட்டு வாழ்க்கையிலே இரக்கம் என்பது இல்லவேயில்லை. இரக்கம் தோன்றினால் அது அச்சத்தின் அறிகுறியாகக் கொள்ளப்படும். அது சாவிலே கொண்டு வந்து சேர்க்கும். கொல்லல் அல்லது கொல்லப்படுதல்; தின்னல் அல்லது தீனியாதல் – இதுவே விதி. அனாதிகாலமாய் ஆணை செலுத்தும் இந்த விதியை அது பின்பற்றியது.

இந்த உடலைவிட அதன் பூர்வீக அனுபவம் நீண்டதாக இருந்தது. அந்த நீண்ட இறந்தகாலத்தைப் பக் நிகழ்காலத்துடன் பிணைத்தது. கடலில் ஏற்றவற்றங்களும், பருவக்காலங்களும் மாறி மாறி வருவது போல பக்கின் மூலமாக அந்த அனாதிகாலம் துடித்துத் தாளமிட்டுக் கொந்தளித்தது. அகன்ற மார்பு, செறிந்த உரோமம், வெண்மையான கோரைப்பல் – இவற்றுடன் அது தார்ன்டன் வளர்த்த தீக்கருகில் படுத்திருந்தது. ஆனால், அதற்குப் பின்னணியில் எத்தனையோ வகையான நாய்களின் நிழல்கள் நின்றன. அவற்றுள் இடைவெட்டுக்களும், கொடிய ஓநாய்களும் இருந்தன. அவற்றின் உணர்ச்சிகள் பக்கின் உள்ளத்தை உந்தின. அது உண்ணும் உணவை அவை சுவைத்தன; அது குடிக்கும் தண்ணீரை அவை விழைந்தன; அதனுடன் சேர்ந்த காற்றை மோப்பம் பிடித்தன; காட்டிலுள்ள கொடிய விலங்குகள் உண்டாக்கும் ஓசைகளை அதற்கு அறிவுறுத்தின; அதன் மனத்தைச் செலுத்தின; செயல்களை நடத்தின; அது படுக்கும் போது அதனுடனே படுத்து உறங்கின; அதனுடன் சேர்ந்து கனவு கண்டன; அதன் கனவின் கதையாய் மாறின.

இந்த நிழல்கள் ஆதிக்கத்தோடு அதை அழைத்தமையால் நாளாக நாளாக மனித இனமும், அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் பக்கைவிட்டு மறையலாயின. கானகத்தின் மத்தியிலிருந்து அதை ஒரு குரல் அழைத்தது. மர்மமாய் ஒலித்து, தன் உள்ளத்தை ஈர்த்த அந்தக் குரலைக் கேட்கும் போதெல்லாம் அது தீயையும் மிதிப்பட்ட தரையையும் புறக்கணித்து விட்டுக் கானகத்திற்குள்ளே புகுந்து சுத்தலாயிற்று. எங்கு செல்வதென்றே அதற்குத் தெரியாது; ஏன் செல்ல வேண்டும் என்பதும் தெரியாது. அவற்றைப் பற்றி கேள்வியும் எழவில்லை. கானகத்தின் மத்தியிலிருந்து தன் மீது ஏகாதிபத்தியம் செலுத்தும் அந்தக் குரலொன்றையே கேட்டது. ஆனால், கானகத்திற்குள் புகுந்து அதன் மிருதுவான மண்ணையும் பசுமை இருளையும் அடையுந்தோறும் அதற்கு ஜான் தார்ன்டனுடைய நினைவு தோன்றும். அவன் மேலுள்ள அன்பின் வலிமை அதை மீண்டும் கூடாரத்திற்கு இழுத்துவிடும்.

தார்ன்டன்தான் அதைக் கட்டிவைத்திருந்தான். அவனைத் தவிர மற்ற மனித இனத்தை அது பொருட்படுத்தவில்லை. அந்தப் பக்கமாக வருகின்ற பிரயாணிகள் அதனிடம் அன்பு காட்டலாம்; அதைத் தடவிக் கொடுக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் அது மதிக்கவில்லை. மிக ஆர்வத்தோடு எவரும் அதை அணுகினால் அது எழுந்து அப்பால் சென்றுவிடும். தார்ன்டனின் கூட்டாளிகளான ஹான்ஸும், பீட்டும் பல நாட்களுக்குப்பிறகு படகிலே திரும்பி வந்தபோது அவர்களைப் பக் கண்ணெடுத்துப் பார்க்கவேயில்லை; அவர்கள் தார்ன்டனுக்கு வேண்டியவர்கள் என்று தெரிந்த பிறகுதான் அவர்களை ஓரளவு சகித்துக்கொண்டது; அவர்கள் கொடுக்கும் பண்டங்களை ஏற்றுக்கொண்டது. அவர்களும் தார்ன்டனைப் போலவே மண்ணுக்கு அணுக்கர்; எளிய சிந்தனையும், தெளிவான நோக்கமும் உடையவர்கள். டாஸனில் உள்ள மர அறுப்பு எந்திர சாலைக்குப் பக்கத்திலே ஓடத்தைச் செலுத்தி நிறுத்துவதற்குள் அவர்கள் பக்கைப் பற்றியும், அதன் இயல்பைப் பற்றியும் அறிந்து கொண்டார்கள்; அதனால் ஸ்கீட், நிக் ஆகிய நாய்களோடு நெருங்கிப்பழகுவதுபோல அதனுடன் பழக முனையவில்லை.

தார்ன்டன் மீது உள்ள அன்பு மட்டும் பக்கின் உள்ளத்திலே வளர்ந்து கொண்டேயிருந்தது. கோடைகாலத்தில் பிரயாணம் செய்யும்பொழுது அவன் ஒருவனால் தான் பக்கின் முதுகின் மேல்சுமை ஏற்றமுடியும். தார்ன்டன் ஆணையிட்டால் பக் எதையும் செய்யத் தயாராக இருக்கும். ஓரிடத்தில் கொண்டு வந்த மரங்களுக்காகக் கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் டாஸனை விட்டு டனானாவின் முகத்துவாரத்திற்குச் சென்றார்கள். ஒருநாள் அவர்கள் ஒரு குன்றின் உச்சியில் நாய்களோடு அமர்ந்திருந்தார்கள். அந்த உச்சியின் ஒருபுறம் முந்நூறு அடி உயரத்திற்கு ஒரே செங்குத்தாக இருந்தது. ஜான் தார்ன்டன் அந்தச் செங்குத்தான பகுதிக்கருகில் உட்கார்ந்திருந்தான். அவன் தோளருகில் பக் நின்றது. தார்ன்டனுக்கு ஒரு விளையாட்டான எண்ணம் உதித்தது. அந்த எண்ணத்தை பரிசோதிக்கும் முன், அவன் ஹான்ஸையும், பீட்டையும் தான் செய்யப் போவதைக் கவனிக்கும்படி செய்தான். பக்கை நோக்கி, தன் கையை வீசி, ஆழ்ந்த பள்ளத்தைக் காட்டி, பக், அங்கே குதி பார்க்கலாம்’ என்று கட்டளையிட்டான். அடுத்தகணத்திலே அவன் பக்கை இழுத்துப் பிடித்து நிறுத்த வேண்டியதாயிற்று. அந்தப் பாதாளத்தின் விளிம்பிலே பக்கைத் தடுத்து நிறுத்த அவன் திணறிக் கொண்டிருந்தான். ஹான்ஸும், பீட்டும் சேர்ந்து பெருமுயற்சி செய்து தார்ன்டனும், பக்கும் படுகுழியில் வீழ்ந்து மடியாமல் காப்பாற்றினார்கள்.

கொஞ்ச நேரம் யாராலும் பேச முடியவில்லை. பிறகு பீட், “இப்படியுமா செய்யும்!” என்று கூறினான்.

தார்ன்டன் தலையை ஆட்டினான். ‘இல்லை; இது அற்புதம் மட்டுமில்லை; பயங்கரமும்தான். பக்கின் விசுவாசத்தை நினைத்தால் எனக்குச் சில சமயங்களில் பயம் உண்டாகிறது” என்றான் அவன்.

“அது பக்கத்தில் இருக்கும் பொழுது உன் மேல் கை வைக்கிற பேர்வழி நான் இல்லை , அப்பா” என்று தீர்மானமாகக் கூறிக் கொண்டே பக்கைப்பார்த்துத் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

‘அது நானும் இல்லேடா, அப்பா!” என்று ஹான்ஸும் கூறினான். பீட் பயந்தது சரியேயென்று அந்த ஆண்டு முடிவதற்குள்ளாகவே வெளியாயிற்று. அவர்கள் சர்க்கிள் சிடி என்னும் இடத்திற்குச் சென்றிருந்தனர். அங்கே பார்ட்டன் என்ற தீயவன் ஒரு மதுபானக்கடையிலே ஓர் அப்பாவியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். தார்ன்டன் குறுக்கிட்டு சமாதானப்படுத்த முயன்றான். ஒரு மூலையில் பக் தனது முன்னங்கால்களின் மேல் தலையை வைத்துப் படுத்துத் தார்ன்டனையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக திடீரென்று பர்ட்டன் தார்ன்டன் மேல் மோதி அடித்தான். தடுமாறிக் கீழே விழப் போனான் தார்ன்டன். ஆனால், நல்ல வேளையாக ஒரு கம்பத்தைப் பிடித்துக்கொண்டு அவன் கீழே விழாமல் சமாளித்து நின்றான்.

அங்கிருந்தவர்கள் காதிலே, நாய் குரைக்கும் குரலில்லை, சிம்ம கர்ஜனை ஒலித்தது. பக்தாவி எழுந்து பார்ட்டனின் கழுத்தை நோக்கிப் பாய்வதையும் அவர்கள் பார்த்தனர். பர்ட்டன் தன் கைகளை நீட்டி நாயைத் தடுக்க முயன்றான். அந்த முயற்சியிலே அவன் மல்லாந்து கீழே விழுந்தான். பக் அவன் மேலே ஏறி நின்றது. கைகளிலும் கழுத்திலும் மாறி மாறி அது கடித்தது. அவன் தொண்டை கிழிந்து போயிற்று. அதற்குள் அங்கிருந்தவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து பக்கைப் பிடித்து இழுத்துத் துரத்தி விட்டார்கள். ரண வைத்தியன் ஒருவன் காயங்களிலிருந்து ரத்தம் ஒழுகாதவாறு சிகிச்சை புரிந்தான். பக் சீறிக்கொண்டும் உறுமிக்கொண்டும் மீண்டும் மீண்டும் கடைக்குள்ளே நுழைய முயன்றது. பலர் தடிகளை வீசிக்கொண்டு தடுத்ததால்தான் அது உள்ளே வராமல் நின்றது. சுரங்கக்காரர்களின் கூட்டம் ஒன்று உடனே அங்கே கூடியது. எஜமானனைத் தாக்கியதால்தான் பக் கோபமடைந்து பர்ட்டன் மேல் பாய்ந்தது என்றும், அதன் மேல் தவறில்லை என்றும் கூட்டத்தில் தீர்மானித்தார்கள். பக்கின் கீர்த்தி அன்று முதல் ஓங்கியது. அலாஸ்காவில் உள்ள ஒவ்வொரு முகாமிலும் பக்கைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள்.

அந்த ஆண்டின் இலையுதிர் காலத்திலே தார்ன்டனுடைய உயிரைப் பக் வேறொரு வகையில் காப்பாற்றியது. வேகம் மிக அதிகமாகவுள்ள ஓர் ஆற்றுப்பகுதியிலே ஒரு நீண்ட படகைச் செலுத்த வேண்டியிருந்தது. படகில் கட்டியிருந்த ஒரு கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஹான்ஸும் பீட்டும் தரையின் மேல் சென்றனர். பக்கத்திலுள்ள மரங்களோடு கயிற்றைச் சேர்த்துப் பிடித்துப் படகின் வேகத்தை அவர்கள் குறைக்க முயன்றார்கள். தார்ன்டன் படகிலிருந்து கொண்டு ஒரு கம்பின் உதவியால் அதை ஒழுங்காகச் செலுத்திக் கொண்டிருந்தான். கரையில் வருகின்ற கூட்டாளிகள் என்ன செய்யவேண்டுமென்றும் அவன் உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தான். படகுக்கு நேராகவே பக் கரையில் நடந்துவந்தது. தார்ன்டனுக்கு ஆபத்து நேரக்கூடாதென்று அதற்குக் கவலை ; அதனால் அவனையே பார்த்துக்கொண்டு நடந்தது.

ஓரிடத்திலே பல பாறைகள் கறையிலிருந்து ஆற்றுக்குள் துருத்திக்கொண்டு நீர்மட்டத்திற்கு மேலாக நின்றன. அதனால் ஹான்ஸும் பீட்டும் கயிற்றைத் தளர்த்திவிட்டு விட்டார்கள். தார்ன்டன் தன் கையிலுள்ள கோலால் படகைச் செலுத்தினான். அந்தப் பாறைகளை கடந்ததும் ஆற்றுவெள்ளம் மிகப் பயங்கரமாகப் பாய்ந்தது. அந்தப் பகுதிக்குப் படகு வந்ததும் ஹான்ஸும் பீட்டும் மறுபடியும் கயிற்றால் அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தத் திடீரென்று முயன்றனர். அதனால் படகின் வேகம் சட்டென்று குறையவே தார்ன்டன் படகிலிருந்து வெள்ளத்தில் விழுந்தான். வெள்ளத்தின் இழுப்பு அதிவேகமாக உள்ள பகுதியை அவன் அடைந்துவிட்டான். அந்தப் பகுதியிலே நீந்தி உயிரோடு கரை சேருவதென்பது இயலாத காரியம்.

பக் வெள்ளத்திலே தாவிப்பாய்ந்தது. கொந்தளித்துச் சுழித்தோடும் வெள்ளத்திலே முந்நூறு கஜம் நீந்தி அது தார்ன்டனை அடைந்தது. தார்ன்டன் அதன் வாலைப் பிடித்தான். உடனே பக் கரையை நோக்கி தன் முழு பலத்தோடு நீந்தலாயிற்று. ஆனால் கரையை நோக்கிக் கொஞ்ச தூரம் போவதற்குள் வெள்ளம் வெகுதூரம் கீழே அடித்துச் சென்றது. கீழே கொஞ்ச தூரத்திலே பலமான அரவம் கேட்டது. அங்கே பல பாறைகள் நீர்மட்டத்திற்கு மேலே தலையை நீட்டிக் கொண்டிருந்தன. அவற்றிலே வெள்ளம் வேகமாக மோதுவதால் பெரிய ஓசை எழுந்தது. வெள்ளத்தை எதிர்த்து நீந்திக் கரை சேருவதென்பது இயலாத காரியமென்று தார்ன்டன் கண்டுகொண்டான். அதனால் அவன் ஒரு பாறையைப் பிடித்து அதன் மேல் ஏற முயன்றான். ஆனால் அதைப்பிடிக்க முடியவில்லை. வெள்ளம் அவனை மற்றொரு பாதையில் மோதிற்று; பிறகு வேறொரு பாறையிலும் சாடி மேலெல்லாம் காயப்படுத்தியது. அந்தப் பாறை வழுக்கலாக இருந்தாலும் அதை எப்படியோ பிடித்துக்கொண்டு தார்ன்டன் பக்கின் வாலை விட்டான். சாடி மோதும் வெள்ளத்தின் சப்தத்திற்கு மேலாக அவன் குரலெழுப்பி, “பக் , கரைக்குப் போ, போ கரைக்கு’ என்று கட்டளையிட்டான்.

வெள்ளம் பக்கை அடித்துக்கொண்டு போயிற்று. பக்கால் நீந்தித் தார்ன்டனை அடைய முடியவில்லை. அதைக் கரைக்குப் போகுமாறு தார்ன்டன் திருப்பித் திருப்பிக் கூவவே பக் அவன் கட்டளையைப் பணிவோடு ஏற்றுக்கொண்டு அவனை ஒருமுறை – கடைசி
முறையாய் – ஏறெடுத்துப் பார்த்துவிட்டு கரையை நோக்கி நீந்திற்று. வெள்ளம் பயங்கரமாக மோதும் இடத்தை அடைவதற்கு முன்னால் அது கரையோரத்தை நெருங்கிவிட்டது. ஹான்ஸும் பீட்டும் அதைப்பிடித்து இழுத்துக் கரையேற்றினார்கள்.

வழுக்கலான பாறையைப் பிடித்துக்கொண்டு அந்த வெள்ளத்திலே வெகு நேரம் நிற்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தார்ன்ட னுக்கு உதவி புரியக் கரையோரமாக ஓடினார்கள். அங்கிருந்து கொண்டு பக்கின் கழுத்தில் நீண்ட கயிற்றைக்கட்டி அதை ஆற்றுக்குள் போகச் செய்தார்கள். கயிற்றின் ஒரு நுனியை அவர்கள் பிடித்துக் கொண்டனர். பக் வெள்ளத்தில் நீந்தித் தார்ன்டனை அடைந்தால் பிறகு கயிற்றைப் பிடித்துக்கொண்டே அவனும் நாயும் கரை சேர்ந்து விடலாம். இந்த எண்ணத்தோடுதான் அவர்கள் கயிற்றைப் பக்கின் கழுத்தில் கட்டிவிட்டார்கள். பக் அதைப் புரிந்து கொண்டு தைரியமாக நீந்திச் சென்றது. ஆனால், அது ஆற்றின் குறுக்கே நேராகச் செல்லாமல் சற்றுக் கீழ்நோக்கிச் சென்றதால் வெள்ளம் அதைத் தள்ளிக் கொண்டு போன வேகத்தில், அது தார்ன்டனை அடைய முடியாமற் போயிற்று. ஆற்றிலே தார்ன்டனுக்கு நேராக பக் வந்தபோது அதற்கும் தார்ன்டனுக்கும் இடையிலே பல கஜ தூரம் இருந்தது. அங்கிருந்து வெள்ளத்தை எதிர்த்து நீந்தித் தார்ன்டனை அடைவதென்பது முடியாத காரியம்.

ஹான்ஸ் உடனே கயிற்றை இழுத்தான். படகை இழுப்பது போல பக்கையும் இழுத்துக் கரைசேர்க்க அவன் முயன்றான். கயிற்றை இழுத்துப் பிடிக்கவே வெள்ளம் பக்கை அடித்துக்கொண்டு போகாமல் கரையை நோக்கித் தள்ளியது. ஹான்ஸும் பீட்டும் பக்கைக் கரையேற்றுவதற்குள் அதற்குப் பாதி உயிர் போய்விட்டது. அது குடித்திருந்த தண்ணீரையெல்லாம் வெளியேற்றி அது நன்கு சுவாசிக்குமாறு அவர்கள் செய்தார்கள். பக் எழுந்து நிற்க முயன்று தடுமாறி விழுந்தது. தார்ன்டனுடைய குரல் ஆற்று வெள்ளத்தில் மெதுவாகக் கேட்டது. அவன் உயிருக்கு மன்றாடிக்கொண்டிருக்கிறா னென்பது தெளிவாகத் தெரிந்தது. எஜமானனுடைய குரல் பக்கின் செவிகளில் மின்சாரம் போல் புகுந்து பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிற்று. அது தாவி எழுந்து ஆற்றின் எதிராகக் கரையில் ஓடிற்று; கழுத்தில் கயிற்றோடு முன்னால் ஆற்றிற்குள் பாய்ந்த இடத்திற்குச் சென்று நின்றது. ஹான்ஸும் பீட்டும் அதைப் பின்தொடர்ந்து வேகமாக வந்தார்கள்.

மறுபடியும் அதன் கழுத்திலே கயிற்றைக் கட்டினார்கள். பக் வெள்ளத்திலே பாய்ந்தது. இந்தத் தடவை ஆற்றின் குறுக்கே நேராக அது நீந்திச் செல்ல முயன்றது. முன்னால் ஒருமுறை அது தவறிவிட்டது. மறுமுறை தவறுமா? ஹான்ஸ் கயிற்றை விட்டுக் கொண்டே இருந்தான். பீட் சுருணையிலிருந்து கயிற்றை ஒழுங்காகப் பிரித்துவிட்டான். பக் நீந்தி நீந்தித் தார்ன்டன் இருக்குமிடத்திற்கு மேலாகவே சரியாகச் சென்றது. அவனோடு ஒரே நேர்க்கோட்டில் இருப்பதைக் கண்டு பக் மிகுந்த வேகத்துடன் தார்ன்டனை நோக்கி வெள்ளத்தோடேயே சென்றது. தார்ன்டனும் அதைக் கவனித்தான். வெள்ளத்தின் வேகத்தால் பக் தார்ன்டன் மேலேயே மோதிற்று. தார்ன்டன் பாறையை விட்டு விட்டு பக்கின் கழுத்தைத் தன் இரு கைகளினாலும் கோத்து பிடித்துக் கொண்டான். ஹான்ஸ் ஒரு மரத்தில் கயிற்றைச் சுற்றிப்பிடித்தான். அதனால் பக்கையும், தார்ன்டனையும் வெள்ளம் கரையை நோக்கித் தள்ளிற்று. மூச்சுதிணறியும் பாறைகளின் மேல் மோதியும் நாயின் மேல் மனிதனும் மனிதன் மேல் நாயுமாகப் புரண்டும் கடைசியாகத் தார்ன்டனும் பக்கும் கரையை அடைந்தனர். தார்ன்டனை ஒரு பெரிய மரக்கட்டையின் மேல் குப்புறப் படுக்க வைத்து ஹான்ஸும், பீட்டும் முன்னும் பின்னுமாக வேகமாகக் குலுக்கினர். அவனுக்கு நல்லுணர்வு பிறந்ததும் பக்கைப் பற்றித்தான் முதலில் கவனித்தான். அது உயிரற்றது போலக் கிடந்தது. அதைக் கண்டு நிக் ஊளையிட்டது. ஸ்கீட் அதன் முகத்தையும், மூடிய கண்களையும் நாவினால் நக்கிற்று. தார்ன்டனுக்குப் பல இடங்களில் காயமேற்பட்டிருந்தது. அவற்றைப் பொருட்படுத்தாமல் அவன் பக்கின் உடம்பை நன்றாகத் தடவிப்பார்த்தான். அதன் விலா எலும்புகள் மூன்று முறிந்திருந்தன. பிறகு மெதுவாகப் பக் சுய உணர்வு பெற்றது. ‘நாம் கொஞ்ச நாட்களுக்கு இங்கேயே முகாம் போட்டாக வேண்டும்” என்று தார்ன்டன் கூறினான். முறிந்து போன விலா எலும்புகள் மறுபடியும் ஒன்றுகூடி பக் நன்றாகப் பிரயாணம் செய்யக் கூடிய நிலைமையை எய்தும் வரை அவர்கள் அங்கேயே தங்கினார்கள்.

அடுத்த மாரிக்காலத்தில் அவர்கள் டாஸனிலிருந்தபோது பக் மற்றோர் அரிய காரியத்தைச் சாதித்தது. அந்தச் செயல் வீரம் செறிந்ததாக இல்லாவிடினும் பக்குக்கும் மிகுந்த புகழைத் தந்தது. அதனால் மூன்று கூட்டாளிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அதன் மூலமாக அவர்களுடைய நெடுங்கால ஆசை நிறைவேற லாயிற்று. சுரங்கக்கனிகளை நாடி யாரும் இதுவரையில் கிழக்குப் பிரதேசத்திற்குச் செல்லவில்லை. அங்கே போவதற்கு அவர்களுக்கு அதனால் வசதி ஏற்பட்டது.

எல்டராடோ உணவுவிடுதியிலே பல பேர் பேசிக் கொண்டிருந் தார்கள். ஒவ்வொருவரும் தனக்குப் பிடித்தமான நாய்களைப்பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசினர். பக்கைக் குறித்தும் அங்கே பேச்செழுந்தது. தார்ன்டன் அதைப் பெரிதும் ஆதரித்துப் பேசலானான். அரை மணி நேரம் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த பிறகு ஒருவன் தன்னுடைய நாய் ஐநூறு ராத்தல் சுமையோடு சறுக்கு வண்டியை இழுத்துக்கொண்டு போகும் என்று கூறினான். மற்றொருவன் தன்னுடைய நாய் அறுநூறு ராத்தல் சுமையை இழுக்கும் என்று பெருமை அடித்தான். மற்றொருவன் தன்னுடைய நாய் எழுநூறு ராத்தல் சுமையை இழுக்கும் என்றான்.

‘சே, இவ்வளவுதானா? ஆயிரம் ராத்தல் சுமையை வண்டியில் வைத்து நிறுத்தினால் பக் அதை இழுத்துக்கொண்டு போய்விடும்” என்றான் ஜான் தார்ன்டன்.

“நிற்கும் வண்டியை அது அசைத்து நகர்த்திவிடுமா? மேலும் நூறு கஜத்திற்கு அந்த வண்டியை இழுத்துக்கொண்டும் போகுமா?” என்று மத்தேயுஸன் கேட்டான். அவன் ‘பொனான்ஸா’ ராஜா – அவன் தொட்டதெல்லாம் தங்கமாகும். அவன்தான் தன்னுடைய நாய் எழுநூறு ராத்தல் சுைைமயை இழுக்கும் என்று கூறியவன்.

ஓ! நிற்கும் வண்டியை அசைத்து நகர்த்தி நூறு கஜத்திற்கு இழுத்துக் கொண்டு போய்விடும்” என்று ஜான் தார்ன்டன் அமைதியாய்க் கூறினான்.

“அப்படியா? பக் அப்படி இழுக்க முடியாதென்று நான் ஆயிரம் டாலர் பந்தயம் கட்டுகிறேன். இதோ பணம்” என்று மத்தேயுஸன் எல்லோரும் கேட்கும்படியாய் நிதானமாக அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்; அவ்வாறு சொல்லிக்கொண்டே ஒரு சிறிய தங்கத்தூள் மூட்டையை எடுத்து முன்னால் போட்டான்.

யாரும் பேசவில்லை. தார்ன்டன் சொன்னது வெறும் கதைதான். வாயில் வந்தவாறு சற்றும் யோசியாமல் அவன் பேசிவிட்டான். ஆயிரம் ராத்தல் சுமை உடைய வண்டியை இடம்விட்டு நகர்த்தி பக் இழுக்குமா என்று அவனுக்குத் தெரியாது. ஆயிரம் ராத்தல்கள்! அந்தப் பாரத்தை நினைக்கும் போதே அவனுக்குத் திகில் உண்டாயிற்று. பக்கின் வல்லமையில் அவனுக்கு முழு நம்பிக்கை உண்டு. அவ்வளவு பெரிய சுமையையும் அது நகர்த்தி இழுக்கும் என்று அவன் பல தடவை நினைத்ததும் உண்டு. ஆனால், அவ்வளவு பெரிய பளுவை இழுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்று அவன் எதிர்பார்த்த-தில்லை. பத்துப் பன்னிரெண்டுபேர் மௌனமாக நின்று அவனை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும், அவனிடத்திலே ஆயிரம் டாலர்கள் கிடையாது; ஹான்ஸ், பீட் ஆகிய இருவரிடமும் கிடையாது.

“ஐம்பது ராத்தல் நிறைவுள்ள மாவு மூட்டைகள் இருபது என் சறுக்கு வண்டியிலே இருக்கின்றன. வண்டி வெளியே நிற்கிறது. அதனால் அதைப்பற்றி இடைஞ்சல் இல்லை” என்று மத்தேயுஸன் உடைத்துப் பேசினான்.

தார்ன்டன் பதில் கூறவில்லை. அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சிந்தனாசக்தியை இழந்து அதை மறுபடியும் பெறுவதற்கு முயல்கிறவன் போல அவன் ஒவ்வொருவருடைய முகத்தையும் பார்த்தான். மாஸ்டோடன் ராஜாவாகிய ஜிம் ஓப்ரியன் என்பவன் தார்ன்டனுக்குப் பழமையான தோழன். அவன் அங்கே நிற்பதைத் தார்ன்டன் கண்டான். அவனைப் பார்த்த உடனே தார்ன்டனுக்கு என்ன செய்வதென்று உதயமாயிற்று.

“எனக்கு ஆயிரம் டாலர் கடன் கொடுப்பாயா?” என்று அவனிடம் மெதுவாகக் கேட்டான்.

“கட்டாயம் கொடுப்பேன். உன்னுடைய நாய் இந்தக் காரியத்தை செய்ய முடியும் என்ற நம்பிக்கை அதிகம் இல்லாவிட்டாலும் உனக்காகக் கொடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மத்தேயுஸன் வைத்த மூட்டைக்குப் பக்கத்திலே ஓப்ரியனும் ஒரு பருத்த மூட்டையை வைத்தான்.

இந்தப் பந்தயத்தைப் பார்க்க மதுபானக்கடையிலிருந்த அனைவரும் வீதிக்கு விரைந்தார்கள். பல கடைக்காரர்களும், மற்றவர்களும் அங்கே கூடினார்கள். அவர்களுக்குள்ளே பந்தயம் கட்டத் தொடங்கினார்கள். சறுக்குவண்டியைச் சுற்றிலும் கம்பளி உடை அணிந்த நூற்றுக்கணக்கான மக்கள் நின்றனர். இரண்டு மணி நேரமாக மத்தேயுஸனுடைய சறுக்கு வண்டி ஆயிரம் ராத்தல் சுமையோடு வீதியில் நின்றுகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் குளிர் மிக அதிகம். வெப்பமானி பூஜ்யத்திற்கும் கீழே அறுபது டிகிரி காட்டியது. அதனால் வண்டியின் சறுக்கு வட்டைகள் நன்றாக இறுகிவிடவே அவற்றைச் சுற்றியுள்ள பனிக்கட்டிகள் நன்றாக இறுகிவிட்டன. அந்த வண்டியை பக்கால் நகர்த்தவே முடியாது என்று பலர் பந்தயம் கட்டினார்கள். வண்டியை நகர்த்துவதென்றால் பனிக்கட்டியிலிருந்து வட்டைகளை மேலே எடுத்துவிட்ட பிறகா அல்லது பனிக்கட்டியில் பதிந்து இருக்கிற போதே நகர்த்துவதா என்பதைப் பற்றி வாக்குவாதம் ஏற்பட்டது. பனிக்கட்டிகளிலிருந்து வட்டைகளை விடுவித்த பிறகுதான் பக்கை வண்டியில் பூட்டி அதை நகர்த்தி இழுக்கச் செய்ய வேண்டும் என்று ஓப்ரியன் வாதாடினான். வட்டைகள் பனிக்கட்டிகளில் பதிந்திருக்கும் போதே வண்டியை வெளியேற்றக்கூடாது’ என்று மத்தேயுஸன் வற்புறுத்தினான். அங்குக் கூடியிருந்த மக்களில் பெரும்பான்மையோர் மத்தேயுஸன் சார்பாகவே தீர்ப்பளித்தார்கள். அதனால் நிலைமை அவனுக்குச் சாதகமாயிற்று. பக்குக்கு எதிராகப் பந்தயப்பணமும் அதிகமாகத் தொடங்கியது. பக் வெற்றியடையும் என்று யாரும் நினைக்கவில்லை. அதனால் அதன் சார்பாகப் பந்தயம் வைப்பவர்களும் இல்லை. மிகுந்த சந்தேகத்துடனேயே தார்ன்டன் பந்தயத்தில் இறங்கினான். பத்து நாய்கள் பூட்டிய அந்தச் சறுக்கு வண்டியை பார்த்ததும் அதை நகர்த்த முடியாதென்றே அவனுக்குத் தோன்றியது. மத்தேயுஸனுக்கு உற்சாகம் பொங்கிக் கொண்டிருந்தது.

“ஒன்றுக்கு மூன்று – நான் பந்தயம் வைக்கிறேன். இன்னும் ஆயிரம் டாலர் வைக்க நான் தயார் – நீ என்ன சொல்லுகிறாய்?” என்று அவன் தார்ன்டனைக் கேட்டான்.

தார்ன்டனுடைய சந்தேகம் வெட்ட வெளிச்சமாக இருந்தது. அவனுக்கு ரோசம் பிறந்துவிட்டது. தோல்வியைப் பற்றிக் கருதாமல் அவன் பந்தயத்தில் முனையலானான். ஹான்ஸையும், பீட்டையும் அவன் அருகில் வரவழைத்தான். அவர்களிடம் பணம் கொஞ்சந்தான் இருந்தது. மூவரிடமும் உள்ள பணத்தைச் சேர்த்துப் பார்க்க இருநூறு டாலர்கள் கிடைத்தன. அவைதான் அவர்களுடைய மூலதனம். சற்றும் தயங்காமல் அவற்றைப் பணயம் வைத்தார்கள். மத்தேயுஸன்
அறுநூறு டாலர் வைத்தான்.

சறுக்குவண்டியில் பூட்டியிருந்த பத்து நாய்களையும் அவிழ்த்துவிட்டு விட்டு பக்கை அதில் பூட்டினார்கள். அதற்கும் உற்சாகம் பொங்கிற்று; ஜான் தார்ன்டனுக்காகப் பெரியதொரு காரியம் செய்ய வேண்டும் என்று எப்படியோ அது உணர்ந்து கொண்டது. அதன் தோற்றத்தைக் கண்டு எல்லோரும் புகழ்ந்து பேசினார்கள். அந்தச் சமயத்தில் அது நல்ல கட்டுறுதியோடிருந்தது. அதன் உடம்பிலே அனாவசியமான ஊளைச்சதை ஓரிடத்திலும் கிடையாது. அதன் எடை இப்பொழுது நூற்றைம்பது ராத்தல். அந்த எடையிலே வீணாண பகுதி ஒரு சிறிதும் இல்லை. உடம்பு முழுவதும் முறுக்கேறிய தசைநார்களும் சக்தியும் நிறைந்திருந்தன. அதன் உடம்பில் செறிந்திருந்த உரோமம் பட்டு போல் பளபளத்தது. கழுத்திலும் தோள்களிலும் பாதி சிலிர்த்தது போலத் தோன்றிய உரோமவரிசையிலே அதன் சக்தி பொங்கி வழிவது போலக் காணப்பட்டது. அகன்ற மார்பும், உறுதியான முன்னங்கால்களும் அதன் உடம்புக்குத்தக்கவாறு நன்கு அமைந்திருந்தன. எஃகு போன்ற அதன் தசைநார்களைத் தொட்டுப் பார்த்த பிறகு ஒன்றுக்கு மூன்றாக இருந்த பந்தயப் பணம் ஒன்றுக்கு இரண்டாகக் குறையலாயிற்று.

“எண்ணூறு டாலர் விலை கொடுத்து இந்த நாயை நான் வாங்கத் தயார். பந்தயத்திற்கு முன்னாலேயே எனக்குக் கொடுங்கள்” என்று ஸ்கூக்கும் பென்ச்’ ராஜா விலை பேச முன்வந்தான்.

தார்ன்டன் தலையை அசைத்துப் பக்கை விற்க மறுத்தான்; பிறகு பக்கின் அருகிலே சென்றான்.

“நீ தள்ளி நிற்க வேணும்; அதுதான் நியாயம்” என்று மத்தேயுஸன் குறுக்கிட்டான்.

கூட்டம் சற்று விலகி மௌனமாக நின்றது. பணயம் வைக்கிறவர்கள் மட்டும் ஒன்றுக்கு இரண்டு என்று வீணாகக் கூவிக்கொண்டிருந்தனர். பக் மிகவும் வலிமையுள்ள நாய் என்று எல்லோரும் ஒத்துக்கொண்டார்கள்; இருந்தாலும். ஐம்பது ராத்தல் மூட்டைகள் இருப்பதைக் கொண்ட வண்டியை இழுப்பது முடியாத காரியம் என்று அவர்கள் கருதிப் பணயம் வைக்க விரும்பவில்லை.

தார்ன்டன் பக்கின் அருகிற்சென்று முழங்காலிட்டு அமர்ந்தான். இரண்டு கைகளாலும் அதன் தலையைப் பிடித்துக்கொண்டு அதன் கன்னத்தோடு கன்னத்தை வைத்துக்கொண்டான். வழக்கம் போல அவன் தலையைப்பிடித்து ஆட்டவில்லை; செல்லமாகத் திட்டவுமில்லை. ஆனால் ‘என்மேல் உனக்கு அன்புண்டல்லவா? பக், அன்புண்டல்லவா?” என்று காதோடு காதாகக் கேட்டான். அதைக் கேட்டதும் ஆர்வத்தோடு பக் முணுமுணுத்தது.

இதை அங்கு நின்றவர்கள் ஆச்சரியத்தோடு கவனித்தனர். ஏதோ மந்திரம் ஓதுவது அவர்களுக்குத் தோன்றியது. தார்ன்டன் எழுந்து நின்றதும் பக் அவன் கைகளை வாயினாற் கவ்விப்பிடித்தது. பிறகு மெதுவாகக் கையைவிட்டது. இவ்வாறு மெளனமாக அது தன் அன்பை வெளிப்படுத்திற்று. பிறகு தார்ன்டன் எட்டத் தள்ளி நின்று கொண்டான்.

“பக் இனி நீ புறப்பட வேண்டும்’ என்றான் அவன்.

திராஸ்வார்கள் கெட்டியாக நிமிரும்படி பக் முன்னால் சென்று, பிறகு கொஞ்சம் அவற்றைத் தளரவிட்டது. நிற்கும் வண்டியை நகர்த்துவதற்கு அதுதான் நல்ல முறை என்று பக் கண்டிருந்தது.

சுற்றிலும் ஒரே நிசப்தம். அந்த நிசப்தத்தைப் பிளந்து கொண்டு தார்ன்ட னுடைய குரல் ஓங்கி ஒலித்தது. “ஜீ புறப்படு.”

வலது பக்கமாகத் திரும்பி ஒரு புறத்துத் திராஸ்வாரில் மட்டும் தனது முழு பலத்தையும் கொடுத்து பக் முன்னால் தாவிப் பாய்ந்தது. வண்டியிலிருந்த மூட்டைகள் சற்று அசைந்தன. வட்டைகளில் இறுகியிருந்த பனிக்கட்டிகள் உடைந்து நொறுங்கும் அரவம் கேட்டது.

“ஹா” என்று கூவினான் தார்ன்ட ன்.

இப்பொழுது இடது பக்கத்துத் திராஸ்வாரில் தனது சக்தியைச் செலுத்தி மீண்டும் பக் முன்னால் தாவிப்பாய்ந்தது. பனிக்கட்டிகள் மேலும் நொறுங்கின. சறுக்குவட்டைகள் மேலெழுந்தன. இறுகிய பனிக்கட்டிகளை விட்டுவண்டி இடம்பெயர்ந்துவிட்டது. கூடியிருந்த மக்கள் மூச்சு விடாமல் பார்த்திருந்தனர்.

“மஷ், இழு” என்று மேலும் கூவினான் தார்ன்டன்.

துப்பாக்கி வெடிபோல அவனுடைய குரல் ஓங்கி ஒலித்தது. பக் முன்னால் பாய்ந்தது. அதன் உடம்பைக் குறுக்கி நின்று அது பெருமுயற்சி செய்தது. தசைநார்கள் முறுக்கேறின; பளபளப்பான உரோமத்திற்கடியிலே அவைகள் உருண்டு திரண்டன. பக்கின் அகன்ற மார்பு தரையோடு தரையாகப் படிந்தது. கால்கள் பரபரவென்று பனிக்குள்ளே ஊன்றி உந்தின; அவற்றின் வேகத்தால் பெரிய பள்ளங்கள் தோன்றின. சறுக்கு வண்டி ஆடியது. அசைந்தது. முன்னால் நகர்வது போலத் தோன்றியது. பக்கின் ஒரு கால் வழுக்கிவிட்டது. மறுபடியும் அது முயன்றது. யாரோ ஒருவன் திணறிப் பெருமூச்சுவிட்டான். குலுங்கிக் குலுங்கி வண்டி நகரலாயிற்று. அரை அங்குலம்… ஓர் அங்குலம்… இரண்டங்குலம்… இப்படி வண்டி நகர்ந்தது. பிறகு குலுங்கி நகருவது மாறி வண்டி ஒழுங்காக முன்னால் மெதுவாகச் செல்லத் தொடங்கியது. அந்த வேகத்தை விட்டுவிடாமல் பக் வண்டி இழுத்தது. வண்டியும் ஒழுங்காகச் செல்லலாயிற்று.

மூச்சுபேச்சில்லாமல் அங்குக் கூடியிருந்த மக்கள் இப்பொழுது தாராளமாக மூச்சுவிடலாயினர். வண்டியைத் தொடர்ந்து போய்க்கொண்டே தார்ன்டன் பக்குக்கு உற்சாகமளிக்கும் வகையில் ஏதேதோ கூவினான். குறிப்பிட்ட இடத்தை நோக்கி வண்டி செல்லச்செல்ல உற்சாகமான கோஷங்கள் எழுந்தன. நூறு கஜ தூரத்தையும் வண்டி கடந்ததும் ஒரே மூச்சாக எல்லோரும் ஆரவாரம் செய்தனர். ஒவ்வொருவனும் ஆனந்தக் கூத்தாடினான். மத்தேயுஸனும் அந்த உற்சாகத்தில் பங்கு கொண்டான். தொப்பிகள் வானிலே பறந்தன. ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் குலுக்கினார்கள். யார் கையைக் குலுக்குவதென்று கூட யாரும் யோசிக்கவில்லை. அத்தனை உற்சாகம். எங்குப் பார்த்தாலும் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் ; அர்த்தங்கண்டு கொள்ள முடியாத பேச்சொலி.

தார்ன்டன் பக்கின் அருகிலே அமர்ந்தான்; அதன் தலைமேல் தன் தலையை வைத்தான்; அப்படியே அசைந்தாடினான். அவன் பக்கைச் செல்லமாகத் திட்டுவதையும் அருகிலிருந்தவர்கள் கேட்டார்கள்.

‘ஸ்கூக்கும் பென்ச்’ ராஜா மறுபடியும் விலை பேசத் தொடங்கினான். “ஆயிரம் டாலர் – ஐயா ஆயிரம் டாலர். இல்லை , ஆயிரத்து இருநூறு’ என்றான் அவன்.

தார்ன்டன் எழுந்து நின்றான்; அவன் கண்களில் கண்ணீர் நிறைந்து தாரைதாரையாக வழிந்தது. ‘பக்கை விற்க முடியாது; நீ வந்த வழியைப் பார்க்கலாம்” என்று அவன் சொன்னான்.

பக் அவன் கையை வாயில் கவ்விப்பிடித்தது. தார்ன்டன் பக்கோடு சேர்ந்து முன்னும் பின்னும் அசைந்தாடினான். கூடியிருந்தவர்கள் இடம்விட்டு விலகினர். தார்ன்டனுக்கும் பக்குக்கும் உள்ள அன்பிற்கு இடையிலே குறுக்கிட அவர்கள் என்ன மதியற்றவர்களா?

– தொடரும்…

– கானகத்தின் குரல் (நாவல்), ”The Call of the Wild” by Jack London, ஜாக் லண்டன், தமிழில்: பெ.தூரன், முதற் பதிப்பு: 1958, பதிப்பு: 2000, புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *