கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 8, 2024
பார்வையிட்டோர்: 710 
 
 

4. தலைமைப்பதவி | 5. வாரும் வழியும் | 6. மனிதப்பற்று

டாஸனை விட்டுப் புறப்பட்ட முப்பது நாட்களில் தபால் ஸ்காக்வே வந்து சேர்ந்தது. பக்கும் மற்ற நாய்களும் அலுத்துச் சோர்ந்து விட்டன. பக்கின் நூற்று நாற்பது இராத்தல் எடை நூற்றுப் பதினைந்தாக குறைந்து போயிற்று. எடை குறைவாயிருந்த மற்ற நாய்கள் மிக மோசமாக இளைத்து விட்டன. வஞ்சக நெஞ்சுள்ள பக் பல தடவைகளில் தன் காலில் காயம் ஏற்பட்டு விட்டது போல் பாசாங்கு செய்து ஏமாற்றும்; இப்பொழுது அது உண்மையாகவே நொண்டிக்கொண்டிருந்தது. சோலெக்ஸும் நொண்டியது. தோள்பட்டைத் திருகிப்போனதால் டப் துன்பப்பட்டது.

எல்லா நாய்களுக்கும் பாதத்தில் ஒரே வலி. எட்டித்தாவவோ திரும்பிக் குதிக்கவோ அவற்றால் முடியவில்லை. பாதத்தை மெதுவாக எடுத்து வைக்கவும் முடியவில்லை. அதனால் பிரயாணம் செய்வது பெருந்துன்பமாக இருந்தது. மிகவும் அலுத்துப்போனதே இந்த நிலைமைக்குக் காரணம். கொஞ்ச நேரத்தில் அவசரம் அவசரமாக அதிக வேலை செய்வதால் வரும் அலுப்பாயிருந்தால், அது ஒரு சில மணி நேரத்தில் தீர்ந்துவிடும். ஆனால் இதுவோ மாதக்கணக்காக உழைப்பதால் சிறுகச் சிறுகப் பலமெல்லாம் குறைந்து போய் ஏற்படும் பெரிய அலுப்பு. இந்த அலுப்பு நீங்குவதற்கு உடம்பிலே தெம்பில்லை; சக்தியுமில்லை. சக்தியெல்லாம் உழைப்பிலே பயன்பட்டு விட்டது. ஒவ்வொரு தசைநாரும், ஒவ்வோர் இழையும், ஒவ்வோர் உயிரணுவும் களைத்துப்போயிற்று. அதற்குக் காரணம் உண்டு. பிரயாணம் தொடங்கி ஐந்து மாதங்களுக்குள் அவை இரண்டாயிரத்தைந்நூறு மைல்கள் சென்றிருக்கின்றன. கடைசி ஆயிரத்தெண்ணூறு மைல்கள் பிரயாணம் செய்யுங்காலத்தில் அவைகளுக்கு ஐந்து நாட்களே ஓய்வு கிடைத்தது. ஸ்காக்வேயை அடையும் போது அவைகளின் கால்கள் முற்றிலும் ஓய்ந்து போயின. திராஸ் வார்களைத் தளரவிடாமல் நாய்களால் வண்டியை இழுக்க முடியவில்லை. பாதை சரிவாக இருக்கும் போது வண்டி தானாக வேகமாக முன்னால் நகரும்; அந்தச் சமயத்தில் வண்டிக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் முன்னால் ஓடுவதே அவைகளுக்குச் சிரமமாக இருந்தது.

ஸ்காக்வேயின் முக்கியமான வீதியின் வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது வண்டியோட்டி, “போங்கள், போங்கள் இனி உங்களுக்கு ரொம்ப நாள் ஓய்வு கிடைக்கும்” என்று அவற்றை உற்சாகப்படுத்தினான்.

நீண்ட ஓய்வு கிடைக்குமென்றுதான் வண்டியோட்டிகள் நம்பிக்கையோடு எதிர்பார்த்தார்கள். அவர்கள் ஆயிரத்திருநூறு மைல்கள் பிரயாணம் செய்திருக்கிறார்கள்; இடையில் இரண்டே நாட்கள் ஓய்வு கிடைத்தது. அதனால் அவர்கள் உல்லாசமாகச் சுற்றித்திரிந்து அலுப்பைப் போக்கிக்கொள்ளப் பல நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியது நியாயமாகும். ஆனால், எத்தனையோ பேர்கள் கிளாண்டைக் பிரதேசத்துக்குத் தங்கந்தேடி ஓடியிருக்கிறார்கள். அவர்களுடைய காதலிகளும், மனைவிகளும், உற்றார் உறவினரும் அவர்களோடு வரவில்லை. கூட வராதவர்களிடமிருந்து கடிதங்கள் வந்து மலையாகக் குவிந்து கொண்டிருக்கின்றன. அரசாங்க உத்திரவுகளும் பிறந்தன. சோர்ந்து போன நாய்களை நீக்கிவிட்டுப் புதிய ஹட்ஸன்குடா நாய்களைக்கொண்டு வண்டிகள் விரைவில் புறப்பட வேண்டும். பயனற்ற நாய்களை விற்றுவிடலாம். தபால் வருமானத்திற்கு முன்னால் நாய்கள் ஒரு பொருட்டல்ல.

மூன்று நாட்கள் கழிந்தன. பக்கும் மற்ற நாய்களும் களைப்புடனும் பலவீனத்துடனு-மிருந்தன. நான்காம் நாட்காலையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து வந்த இருவர் அவைகளைச் சேணம் முதலியவற்றோடு சேர்த்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் பெயர் ஹால்; மற்றவன் சார்லஸ். சார்லஸ் நடுத்தர வயதுடையவன். அவனுடைய மங்கிய கண்களில் எப்போதும் கண்ணீர் ஒழுகுவது போலத் தோன்றும். அவன் மீசைகளை முறுக்கிவிட்டுக் கொண்டிருந்தான். ஹால் இளைஞன்; அவனுக்குப் பத்தொன்பது இருபது வயதுதானிருக்கும். பெரிய சுழல்துப்பாக்கி ஒன்றையும் வேட்டைக் கத்தி ஒன்றையும் அவன் தன் இடுப்புக்கச்சையில் செருகியிருந்தான். தோட்டாக்கள் கச்சையில் வரிசையாக இருந்தன. அந்தக் கச்சை ஒன்றுதான் அவனிடத்திலே விசேஷமான அம்சம். அவன் அனுபவம் சிறிதுமில்லாதவன் என்பதை அது நன்கு விளம்பரப்படுத்தியது. அவர்கள் இருவரும் தாங்கள் மேற்கொண்டிருக்கும் காரியத்திற்குச் சற்றும் தகுதியற்றவர்கள். அவர்களைப் போன்றவர் ஏன் வடக்குப் பனிப்பிரதேசத்திற்குத் துணிந்து புறப்படுகிறார்கள் என்பது அறிய முடியாத மர்மமாயிருக்கிறது.

அவர்கள் பேரம் பண்ணுவதையும், அரசாங்க அதிகாரியிடம் பணம் கொடுப்பதையும் பக் கவனித்தது. பெரோல்ட், பிரான்சுவா போலவும், அவர்களுக்கு முன்னால் வேறு சிலர் மறைந்தது போலவும், இப்போது தபால்வண்டியோட்டிகளும், ஸ்காச்சு இனத்தவனும் தன் வாழ்க்கையிலிருந்து மறையப்போகிறார்கள் என்பதை அது உணர்ந்தது. பக்கையும் அதன் துணைநாய்களையும் அந்தப் புதுமனிதர்கள் தங்கள் முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே கூடாரம் தாறுமாறாகக் கிடந்தது. தட்டுக்கள் கழுவப்படாமல் கிடந்தன. எதிலும் ஒழுங்கை அங்கே காண முடியவில்லை. அங்கே ஒரு மங்கை இருந்தாள். மெர்ஸிடிஸ் என்று அவளை அழைத்தார்கள். அவள் சார்லஸின் மனைவி. ஹாலின் சகோதரி. ஒரு சிறிய குடும்பமாக அவர்கள் புறப்பட்டிருக்கிறார்கள்.

கூடாரத்தை எடுத்துச் சுருட்டி அவர்கள் வண்டியின் மேல் ஏற்றினார்கள். அதைக் கவனித்த பக்குக்குத் திகில் ஏற்பட்டது. அவர்கள் மிகுந்த பிரயாசை எடுத்துக்கொண்டு காரியம் செய்தார்கள். அனுபவமில்லாததால் அதில் ஒழுங்கேயில்லை. கூடாரத்தைச் சரியாக மடித்துச் சுருட்டத் தெரியாததால் அது மூன்று மடங்கு பெரிய மூட்டையாகக் காட்சி அளித்தது. தகரத்தட்டுகளைக் கழுவாமலேயே கட்டிவைத்தார்கள். வேலை செய்யும் அந்த இரு ஆண்களிடையே மெர்ஸிடிஸ் ஓயாமல் குறுக்கிட்டு எதிர்வாதம் செய்துகொண்டும், ஆலோசனை கூறிக்கொண்டும் இருந்தாள். துணிமூட்டை ஒன்றை அவர்கள் வண்டியின் முன்பகுதியில் வைத்த போது அதைப் பின் பகுதியில்தான் வைக்க வேண்டுமென்று அவள் சொன்னாள். அவள் சொன்னவாறு பின்பகுதியில் வைத்து, அதன் மேல் வேறு இரண்டு மூன்று மூட்டைகளையும் போட்டு விட்டார்கள். இன்னும் சில சாமான்கள் மூட்டையில் சேராமல் விட்டுப்போனதை அந்த சமயத்தில்தான் அவள் கண்டுபிடித்தாள். அந்தத் துணிமூட்டையில் தவிர அவைகளை வேறு எங்கும் போட முடியாது. அதனால் மீண்டும் அவர்கள் மூட்டைகளை எல்லாம் இறக்க வேண்டியதாயிற்று.

அண்டையில் இருந்த மற்றொரு முகாமிலிருந்து மூன்று மனிதர்கள் வெளியே வந்து இங்கு நடப்பதை எல்லாம் பார்த்துச் சிரித்துக் கொண்டும் கண்ணைச் சிமிட்டிக் கொண்டுமிருந்தனர்.

அவர்களில் ஒருவன், ‘உங்கள் வண்டியிலே பாரம் அதிகம். என்னைக் கேட்டால் அந்தக் கூடாரத்தைக்கொண்டு போக வேண்டாம் என்று சொல்வேன்” என்று சொன்னான்.

‘கூடாரமில்லாமல் நான் என்ன செய்ய முடியும்? அதை என்னால் நினைக்கவே முடியவில்லை ” என்று மெர்ஸிடிஸ் தனது அழகிய கைகளை விரித்துக்கொண்டு பேசினாள்.

“இது வசந்த காலம் ; இனிமேல் குளிர் இருக்காது” என்று அவன் பதில் கூறினான்.

அவனுடைய ஆலோசனையை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று மெர்ஸிடிஸ் தலையை அசைத்தாள். மலை போலக் கிடந்த சுமைகளின் மீது சார்லஸும், ஹாலும் அதுவும் இதுவுமாகக் கிடந்த ஏதேதோ சாமான்களைத் தூக்கிப் போட்டார்கள்.

அண்டை முகாமிலிருந்து வந்த ஒருவன் “இந்தச் சுமைகளோடு வண்டி போகுமா?” என்று கேட்டான்.

‘ஏன் போகாது?’ என்று சார்லஸ் சட்டென்று திருப்பிக் கேட்டான்.

“ஓ, அதுசரி, அதுசரி, எனக்கென்னவோ கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. அவ்வளவுதான். தலைப்பாரம் கொஞ்சம் அதிகமென்று எனக்குப் பட்டது” என்று அவன் தாழ்ந்த குரலில் சொன்னான்.

சார்லஸ் மறுபக்கம் திரும்பி வரிகயிறுகளை இறுக்கினான். ஆனால் அவன் சரியாகவே கட்டவில்லை.

“இந்தப் பாரத்தோடு நாள் முழுவதும் நாய்கள் வண்டியை இழுக்குமா?” என்று மற்றொருவன் வினவினான்.

“நிச்சயமாக இழுக்கும்” என்றான் ஹால். அவன் குரலிலே போலி மரியாதை தொனித்தது. அவன் தன் கையிலிருந்த சாட்டையை ஓங்கிக்கொண்டு “மஷ், மஷ்” என்று கூவினான்.

நாய்கள் தங்கள் மார்பைக் கொடுத்துப் பலங்கொண்ட மட்டும் கொஞ்ச நேரம் இழுத்துப் பார்த்தன. பிறகு அந்த முயற்சியைக் கைவிட்டு விட்டன. வண்டியை அவைகளால் அசைக்க முடியவில்லை.

“சோம்பேறிக்கழுதைகள். எப்படி இழுக்க வேண்டும் என்று இப்போது காண்பிக்கிறேன்” என்று அவன் கூவிக்கொண்டே சாட்டையால் அடிக்க முனைந்தான்.

மெர்ஸிடிஸ் குறுக்கிட்டாள். “ஹால் அடிக்காதே” என்று சொல்லி, அவள் சாட்டையை அவன் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டாள். “ஐயோ பாவம், அவற்றைத் துன்புறுத்துவதில்லை என்று எனக்கு நீ வாக்கு கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் நான் கூட வரமாட்டேன்.”

“உனக்கு நாய்களைப் பற்றி என்ன தெரியும்? நீ பேசாமல் இரு. அவைகள் சோம்பேறிகள். அடி கொடுத்தால்தான் ஏதாவது வேலை செய்யும். அவைகளுடைய தன்மை அது. நீ யாரை வேண்டுமானாலும் கேட்டுப்பார். அதோ அந்த மனிதர்களிடம் வேண்டுமானால் கேட்டுப்பார்” என்று தம்பி கூறினான்.

நாய்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ளும் பாவனையில் மெர்ஸிடிஸ் பார்த்தாள். துன்பக்காட்சியைக் காணச் சகிக்காதவள் அவள் என்பதை அவளுடைய அழகிய முகம் தெளிவாகக் காட்டிற்று.

அவைகள் மிகவும் இளைத்துக் கிடக்கின்றன. ஓய்வு அவைகளுக்கு அவசியம்” என்றான் ஒருவன்.

“ஓய்வா? அது நாசமாகப் போகட்டும்” என்றான் ஹால். அதைக் கேட்டு மெர்ஸிடிஸ் மனம் வருந்தினாள்.

ஆனால் அவளுக்கு உறவுப்பற்று அதிகம். அதனால் உடனே தன் தம்பியின் சார்பாகப் பேசலானாள். “அந்த மனிதன் சொல்வதைப் பற்றி நீ பொருட்படுத்த வேண்டாம். நீதான் வண்டியோட்டுகிறாய். உனக்கு எது நல்லதென்று தோன்றுகிறதோ அப்படியே செய்.”

மீண்டும் நாய்களின் மீது சாட்டையடி விழுந்தது. அவை மார்புப் பட்டை வார்களை உந்திக் கால்களைப் பனியில் பதிய வைத்துக்கொண்டு பலங்கொண்ட மட்டும் இழுத்தன. நங்கூரம் பாய்ச்சியது போலச் சறுக்குவண்டி அசையாமலிருந்தது. இரண்டு முறை அவ்வாறு பெருமுயற்சி செய்து இளைப்பெடுத்து நாய்கள் நின்றுவிட்டன. சாட்டையடி பளார் பளாரென்று விழுந்து கொண்டேயிருந்தது. மீண்டும் மெர்ஸிசிடிஸ் குறுக்கிட்டாள். பக்குக்கு முன்னால் அவள் மண்டியிட்டு அமர்ந்து அதன் கழுத்தைத் தன் கைகளால் கட்டி அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

“ஐயோ பாவம், நீங்கள் நன்றாக இழுக்கக்கூடாதா? அப்படி இழுத்தால் இந்தச் சாட்டையடி விழாதே” என்று அவள் அங்கலாய்த்தாள். பக்குக்கு அவளைப் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவள் கைகளிலிருந்து விலக அதற்குப் போதிய பலமில்லை.

இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் இதுவரை மௌனமாகப் பல்லை கடித்துக்கொண்டிருந்தான். அவன் இப்பொழுது பேசலானான்:

‘உங்கள் பாடு எப்படியானாலும் அதைப்பற்றி எனக்குச் சற்றும் அக்கறை இல்லை. இருந்தாலும் அந்த நாய்களுக்காக நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். வண்டியின் சறுக்குவட்டைகள் பனியிலே அழுந்திக் கிடக்கின்றன. சுற்றிலும் பனி உறைந்துவிட்டது. ஒரு கழியால் நெம்பி முதலில் வட்டைகளை மேலே எழுப்புங்கள்.”

மூன்றாவது முறையாக அவர்கள் புறப்பட முயன்றார்கள். அந்த மனிதன் சொன்ன யோசனைப்படி ஹால் முதலில் வட்டைகளைப் பனியிலிருந்து மேலெழச் செய்தான். தாங்க முடியாத சுமைகளோடு சறுக்கு வண்டி புறப்பட்டது. சாட்டைஅடி பொழியப் பொழிய பக்குவமற்ற நாய்களும் முக்கி முக்கி இழுத்தன. நூறு கஜத்திற்கப்புறம் பாதையில் ஒரு திருப்பம் இருந்தது. அந்த இடத்தில் பாதை மிகவும் சரிவாகச் சென்றது. நல்ல அனுபவம் இருந்தால்தான் தலைப்பாரம் அதிகமுள்ள சறுக்கு வண்டியை அந்த இடத்தில் கவிழாமல் ஓட்ட முடியும். ஹாலுக்கு அந்த அனுபவமில்லை. வண்டி திரும்பும் போது குடை கவிழ்ந்து விட்டது. சரியானபடி வரிந்துக்கட்டாததால் வண்டியிலிருந்து மூட்டைகளில் பாதி கீழே விழுந்துவிட்டன. நாய்கள் நிற்காமல் ஓடின. குடை கவிழ்ந்த வண்டியும் கவிழ்ந்தவாறு ஆடிக்குலுங்கிச் சென்றது. பெரிய பாரத்தை வைத்தமையாலும் கொடுமையாக நடத்தினமையாலும் நாய்களுக்குக் கோபம். பக் சீறிக் கொண்டிருந்தது. அது வேகமாக ஓடலாயிற்று. மற்ற நாய்களும் அதைத் தொடர்ந்து ஓடின. ‘ஓ… ஓ…” என்று ஹால் கத்தினான். ஆனால் அவைகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஹால் வண்டிக்கு முன்னால் ஓடி அதை நிறுத்த முயன்றான்; ஆனால் கால் தடுக்கி விழுந்தான். குடை கவிழ்ந்த வண்டி அவன் மேல் ஏறிச்சென்றுவிட்டது. நாய்கள் பெரிய வீதியின் வழியாக ஓடின. மீதியிருந்த சாமான்களும் ஆங்காங்கே சிதறி விழலாயின. ஸ்காக்வே மக்கள் அந்தக் காட்சியைக் கண்டு விழுந்து விழுந்து நகைத்தார்கள்.

இரக்கமுள்ள சில பேர் நாய்களைத் தடுத்து நிறுத்தினர்; சிதறிக்கிடந்த சாமான்களையும் எடுத்து வந்தனர். அவர்கள் நல்ல ஆலோசனையும் கூறினார்கள். டாஸன் போய்ச்சேர வேண்டுமானால் பாதிச்சுமையைக் குறைத்துவிடவேண்டும். அந்த நாய்களைப்போல இன்னும் அத்தனை நாய்களை வண்டியில் பூட்ட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். ஹாலும் அவன் தமக்கையும், அவள் புருஷனும் அவர்கள் கூறுவதை வேண்டாவெறுப்பாகக் கேட்டுக் கொண்டார்கள்; எந்தெந்தச் சாமான்களை எடுத்துவிடலாம் என்று பார்த்தார்கள். டப்பிகளில் அடைத்த உணவுப்பொருள்களை முதலில் தள்ளி வைத்தார்கள். அந்த டப்பிகளைக் கண்டதும் கூடியிருந்த மக்கள் சிரித்தார்கள். ஏனென்றால் பனிப்பாதையில் செல்லுகின்ற யாரும் அவற்றை எடுத்துச் செல்லமாட்டார்கள். சிரித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்ததோடு, இத்தனை கம்பளிகள் எதற்கு? இவற்றில் பாதியே அதிகம். அந்தக் கூடாரத்தையும் எறிந்துவிடுங்கள். அந்தத் தட்டுக்களும் வேண்டாம்; அவற்றை யார் கழுவி வைப்பார்கள்” என்று கூறினான்.

இந்தவிதமாகத் தேவையில்லாத பல சாமான்கள் களைந்தெறியப்பட்டன. தனது துணி மூட்டைகள் தரையில் கிடப்பதைப் பார்த்ததும் மெர்ஸிடிஸ் அழத்தொடங்கினாள். வேண்டாமென்று ஒவ்வொரு சாமானாகத் தள்ளிய போதும் அவள் அழுதுகொண்டே யிருந்தாள்.

அவர்களுடைய நிலையைக் குறித்தே பொதுவாக அவளுக்கு அழுகை வந்துவிட்டது. சாமான் ஒவ்வொன்றைத் தள்ளும்போதும் அதே அழுகைதான். அவள் மனமுடைந்து போய் முழங்கால்களில் கைகளைக் கோத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். பத்துப் பன்னிரண்டு சார்லஸ்கள் சேர்ந்து வேண்டினாலும் தான் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட முடியாதென்று அவள் கூறினாள். இரக்கம் காட்டுமாறு அவள் எல்லோரையும் கேட்டுக்கொண்டாள். கடைசியில் அவள் தன் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். பிறகு அவளே தனக்கு அவசியமான உடைகளையும் வேண்டாமென்று எடுத்தெறியலானாள். அவளுடைய ஆர்வத்திலே தனது உடைகளில் பலவற்றை எறிந்ததுமல்லாமல் தனது கணவன் தம்பி ஆகியவர்களின் துணிகளையும் எடுத்தெறியத் தொடங்கினாள்.

ஒருவாறு சாமான்களில் பாதியைக் குறைத்து விட்டார்கள். மீதியுள்ளவை சரியான சுமைதான். சார்லஸும் ஹாலும் மாலை நேரத்தில் போய் மேலும் ஆறு நாய்கள் வாங்கி வந்தார்கள். பழைய நாய்கள் ஆறு ; டீக், கூனா ஆகிய நாய்கள் இரண்டு; புதியவை ஆறு; ஆகப் பதினாலும் சேர்ந்து ஒரு கோஷ்டியாயின. ஆனால், புதிய நாய்கள் ஆறும் அதிகம் பயனில்லாதவை. அவைகளில் மூன்று நாய்கள் குறுகிய ரோமம் உடையவை. ஒன்று நியூபவுண்டுலாந்து நாய். மற்ற இரண்டும் இனந்தெரியாத கலப்புநாய்கள். அவைகளுக்கு ஒன்றுமே தெரியாது. பக்கும் அதன் துணைநாய்களும் அவற்றை வெறுப்போடு பார்த்தன. அவற்றைப் பழக்க பக் விரைவில் முனைந்தது. என்னவெல்லாம் செய்யக் கூடாதென்பதை அவைகளுக்குக் கற்பிக்க அதனால் முடிந்தது. ஆனால் என்ன செய்யவேண்டும் என்பதை அவைகளுக்குக் கற்பிக்க முடியவில்லை. வண்டியிழுப்பது அவற்றிற்குப் பிடிக்கவில்லை. கலப்பினநாய்கள் இரண்டையும் தவிர, மற்றவை திகைத்துப்போய்விட்டன. குளிர் மிக்க பனிப்பிரதேசச்சூழ்நிலையும், எஜமானர்களின் கொடுமையும் சேர்ந்து அவற்றை உள்ளமுடையச் செய்தன. கலப்பின நாய் இரண்டிற்கும் எவ்வித உற்சாகமும் கிடையாது.

புதிய நாய்கள் பயனற்றவை; தொடர்ந்து செய்த இரண்டாயிரத்து ஐந்நூறுமைல் பிரயாணத்தால் பழைய நாய்கள் அலுத்திருந்தன. அதனால் இந்தப் பிரயாணத்திற்கு உற்சாகம் கொடுக்கக்கூடியதாக ஒன்றுமே அமைந்திருக்கவில்லை. ஆனால் சார்லஸும் ஹாலும் உற்சாகமாக இருந்தார்கள். அவர்களுக்குத் தற்பெருமையும் இருந்தது. பதினான்கு நாய்கள் பூட்டிய வண்டியில் அவர்கள் போகப் போகிறார்கள். டாஸனுக்குப் புறப்படும் வண்டிகள் பலவற்றை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அங்கிருந்து வரும் வண்டிகளையும் பார்த்திருக்கிறார்கள். பதினான்கு நாய்கள் பூட்டிய வண்டி அவற்றில் ஒன்று கூட இல்லை. ஆர்க்டிக் பிரதேசப்பிரயாணத்தில் பதினான்கு நாய்கள் பூட்டிய வண்டி இருக்கக்கூடாது; ஏனென்றால், அந்த வண்டியிலே அத்தனை நாய்களுக்கும் வேண்டிய உணவுகளை ஏற்றிச் செல்ல முடியாது. சார்லஸுக்கும் ஹாலுக்கும் இந்த விஷயம் தெரியாது. அவர்கள் பிரயாணத்திட்டத்தைக் காகிதத்தில் எழுதிக் கணக்கிட்டுப் பார்த்தார்கள். காகிதக் கணக்குச் சரியாக வந்தது. இத்தனை நாய்களுக்கு இத்தனை நாட்களுக்கு இவ்வளவு உணவு வேண்டுமென்று கணக்கு போட்டார்கள். அவர்கள் போட்ட கணக்கை மெர்ஸிடிஸ் ஆமோதித்தாள். எல்லாம் சுலபமாகத் தோன்றியது அவர்களுக்கு.

அடுத்த நாட்காலையில் பக்கின் தலைமையில் அந்த நீண்ட நாய்க் கோஷ்டி புறப்பட்டது. நாய்களுக்கு ஒருவித உற்சாகமும் இல்லை. அலுப்போடு அவர்கள் புறப்பட்டன. அந்த இடத்திற்கும் டாஸனுக்கும் இடையேயுள்ள பாதையின் வழியாக நான்கு முறை பக் பிரயாணம் செய்திருக்கிறது. அலுத்தும் இளைத்தும் இருந்த பக்குக்கு அதே பாதையில் மறுபடியும் பிரயாணம் செய்வது கசப்பாக இருந்தது. அதன் உள்ளம் அந்த வேலையில் ஊன்றவில்லை. மற்ற நாய்களின் உள்ளங்களும் அவ்வாறே இருந்தன. புதிய நாய்கள் மருண்டு கிடந்தன. பழைய நாய்களுக்கு அவற்றின் எஜமானர்களிடத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை.

அந்த மனிதர்களையும், மங்கையையும் நம்பி வேலை செய்ய முடியாது என்று பக் உணர்ந்தது. எப்படிக் காரியம் செய்வதென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அனுபவத்தால் அவர்கள் கற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் என்பதும் நாட்கள் செல்லச் செல்லத் தெளிவாயிற்று. அவர்களிடம் ஒழுங்கோ கட்டுப்பாடோ கிடையாது; எதையும் மெதுவாகச் செய்தார்கள். முகாமிடுவதிலேயே அவர்கள் பாதி இரவைக் கழித்தார்கள். முகாமைக் கலைத்துப் புறப்படுவதற்குக் காலை நேரத்தில் பாதி போய்விடும். வண்டியில் சாமான்களை ஒழுங்கில்லாமல் அடுக்குவதால் அவர்கள் பல தடவை வண்டியை நிறுத்திச் சரிந்துவிழும் சாமான்களை மீண்டும் மீண்டும் நன்கு அடுக்க வேண்டியிருந்தது. சில நாட்கள் அவர்கள் பத்து மைல் கூடப் பிரயாணம் செய்யவில்லை. இன்னும் சில நாட்களில் அவர்களால் பிரயாணத்தைத் தொடங்கவே முடியவில்லை. நாய்களுக்கு வேண்டிய உணவைப் பற்றிக் கணக்கிட்ட பொழுது அவர்கள் தினமும் பிரயாணம் செய்வதாக எதிர்பார்த்த தூரத்தில் பாதிக்குமேல் ஒருநாளும் அவர்களால் செல்ல முடியவில்லை.

அதனால் நாய்களுக்கு வேண்டிய உணவு சுருங்கிவிட்டது. தொடக்கத்தில் நாய்களுக்கு உணவை அதிகமாகக் கொடுத்தும் தீர்த்துவிட்டார்கள். வயிற்றுக்குப் போதிய உணவைக் கொடுக்க முடியாத நிலைமையும் பின்னால் வந்தது. அந்தப் பிரதேசத்து உணவு முறை புதிய நாய்களுக்குப் பழக்கமில்லை. அவைகளுக்கு எப்போதும் அடங்காப்பசி. அலுத்துப்போன எஸ்கிமோ நாய்கள் மெதுவாக இழுப்பதைக் கண்டு வழக்கமாக அங்கு நாய்களுக்குக் கொடுக்கும் உணவின் அளவு போதாதென்று ஹால் தீர்மானித்தான். அந்த அளவைப்போல் இரண்டு மடங்கு உணவை அவன் கொடுத்தான். நாய்களுக்கு இன்னும் அதிகமாகக் கொடுக்கும்படி மெர்ஸிடிஸ் தன் அழகிய கண்களில் நீர் பெருகக் கெஞ்சினாள். மேலும் மேலும் கொடுக்க அவன் ஒப்புக் கொள்ளாதபோது அவளே மீன்களைத் திருட்டுத்தனமாக எடுத்து வந்து நாய்களுக்குப் போட்டாள். பக்குக்கும் எஸ்கிமோ நாய்களுக்கும் வேண்டியது அதிக உணவல்ல; அவைகளுக்கு வேண்டியது ஓய்வு. பிரயாணம் மெதுவாக நடந்தாலும் வண்டியில் பாரம் அதிகமாக இருந்ததால் நாய்கள் அதை இழுத்து, உள்ள சக்தியையும் இழந்துவிட்டன.

பிறகு உணவைக் குறைக்க வேண்டிய நிலைமை வந்தது. நாய்களுக்கான உணவில் பாதி தீர்ந்துவிட்டது. பிரயாணத்தில் கால்பாகம்தான் முடிந்திருக்கிறது. இதை ஹால் ஒருநாள் திடீரென்று கண்டுபிடித்தான். பணம் கொடுத்தோ அல்லது வேறு வகையிலோ நாய்களுக்கு உணவு வாங்கவும் வழியில்லை. அதனால் வழக்கமாக அனைவரும் கொடுக்கும் உணவின் அளவில் பாதியைத்தான் அவன் நாய்களுக்குக் கொடுக்கலானான். அதே சமயத்தில் பிரயாண காலத்தையும் அதிகப்படுத்தினான். அவன் சகோதரியும், சார்லஸும் அவனுடைய ஏற்பாட்டை ஆமோதித்தார்கள். சுமை அதிகமாக இருந்ததாலும், அவர்களுடைய அனுபவக்குறைவாலும் இந்த ஏற்பாட்டில் ஏமாற்றமே உண்டாயிற்று. நாய்களுக்கு உணவைக் குறைப்பது எளிது; ஆனால் அவைகளை அதிக வேகத்தில் ஓடும்படி செய்வது முடியாத காரியம். காலை நேரத்தில் அவர்களால் விரைவில் புறப்பட முடியவில்லையாதலால், அவர்கள் பல மணி நேரம் பிரயாணம் செய்யவும் முடியவில்லை. அவர்களுக்கு நாய்களிடம் வேலை வாங்கவும் தெரியவில்லை. தாங்களும் எப்படி வேலை செய்ய வேண்டுமென்பதும் தெரியவில்லை.

முதலில் டப் பலியாயிற்று. தடுமாறித் தடுமாறி அது காரியங்கள் செய்து அடிக்கடி தண்டனையை பெற்றுக்கொண்டிருந்ததாயினும் வேலை ஒழுங்காகச் செய்து வந்தது. அதன் தோள்பட்டை திருகிப் போய் விட்டதல்லவா? அதற்குச் சிகிச்சையும் நடக்கவில்லை ; ஓய்வும் கிடைக்கவில்லை. அதனால் வலி அதிகமாகிப் பெரிதும் துன்புற்றது. அதன் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தால் கடைசியில் ஹால் அதைத் சுழல்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டான். புதிய நாய்களான வெளிநாட்டு நாய்களுக்கு எஸ்கிமோ நாய்களுக்குக் கொடுக்கும் அந்த உணவைக்கொடுத்தாலே பசி அடங்காது. அப்படியிருக்க, அந்த உணவின் அளவு பாதியாகக் குறைந்ததால், அவைகளெல்லாம் பசி தாங்காமல் இறந்தன. நியூபவுண்டுலாந்து நாய் முதலில் கண்ணை மூடிற்று. குட்டைரோமம் உடைய மூன்று நாய்களும் பிறகு இறந்தன. கலப்பின நாய்கள் இரண்டும் கொஞ்ச நாள் உயிரைப்பிடித்துக் கொண்டிருந்தன. பிறகு மேலும் அவைகளும் இறந்தன.

தென்பிதேசத்து மக்களான அந்த மூன்று பேரிடத்திலும் இருந்த மென்மையும், நயமும் இதற்குள் மறைந்துவிட்டன. ஆர்க்டிக் பயணத்தின் மேலிருந்த ஆர்வமும் உற்சாகமும் போய்விட்டன. அந்தப் பிரயாணம் அவர்களுடைய சக்திக்கு மீறியதாக இருந்தது. நாய்களுக்காக இரக்கப்பட்டு அழுவதை மெர்ஸிடிஸ் நிறுத்தி விட்டாள். தன்னுடைய நிலைமைக்காக அழுவதற்கும், கணவனுடனும், தம்பியுடனும் சச்சரவிட்டுக் கொள்வதற்குமே அவளுக்குச் சரியாக இருந்தது. சண்டையிட்டுக் கொள்வதில் மட்டும் அவர்களுக்குச் சலிப்பே ஏற்படவில்லை. நிலைமையைச் சமாளிக்க முடியாததால், அவர்களுக்குக் கோபமும், எரிச்சலும் அதிகமாகிக் கொண்டே வந்தன. பனிப்பாதையில் சிரமப்பட்டு வேலை செய்வதாலும், பல துன்பங்களை அனுபவிப்பதாலும் ஏற்படுகின்ற தனிப்பொறுமை அவர்களுக்கு ஏற்படவில்லை. அப்படிப்பட்ட பொறுமை அவர்களிடம் கொஞ்சங்கூட இல்லை. அவர்கள் உடம்பில் நோவு; எலும்பில் நோவு; உள்ளத்திலும் நோவு. அதனால் அவர்கள் காரத்தோடு பேசலானார்கள். காலை முதல் இரவு வரையில் கடுஞ்சொற்களே அவர்கள் வாயில் வந்தன.

மெர்ஸிடிஸ் சந்தர்ப்பம் கொடுத்த போதெல்லாம் சார்லஸும் ஹாலும் சச்சரவிட்டுக் கொண்டனர். ஒவ்வொருவனும் தானே அதிகமான வேலை செய்வதாகக் கருதினான். இந்தக் கருத்தை ஒவ்வொரு சமயத்திலும் வெளியிட அவர்கள் இரண்டு பேரும் தயங்கவில்லை. மெர்ஸிடிஸ் சில வேளைகளில் கணவனோடும், சில வேளைகளில் தம்பியோடும் கட்சி சேர்ந்தாள். அதன் விளைவாக ஓயாத குடும்பக்கலவரம். தீ மூட்டுவதற்கு யார் விறகு வெட்டி வருவது என்பது பற்றி வாக்குவாதம் தொடங்கும். அது சார்லஸையும் ஹாலையும் பொறுத்த விஷயம் என்றாலும், அது அவர்களோடு முடியாது. குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மாமன், மைத்துனன், உற்றார், உறவினர் எல்லோரையும் சந்திக்கு இழுத்து விடும். ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ளவர்களும், செத்துப்போனவர்களும் கூடத் தப்ப மாட்டார்கள். தீ மூட்ட நாலைந்து குச்சிகளை வெட்டி வருவதற்கும் கலையைப் பற்றிய ஹாலின் அபிப்பிராயங்களுக்கும் அல்லது அவனுடைய தாய்மாமன் எழுதிய சமூகநாடகங்களுக்கும் என்ன சம்பந்தமென்று யாராலும் தெரிந்து கொள்ளவே முடியாது. இருந்தாலும், விவாதம் அவற்றையெல்லாம் சாடும்; சார்லஸின் அரசியல் விருப்பு வெறுப்புக்களும் சந்திக்கு வரும். யூக்கான் பிரதேசத்தில் தீ மூட்டும் விஷயத்தில் சார்லஸின் தங்கை கோள் மூட்டுவதைப்பற்றிப் பேசுவதற்கும் என்ன பொருத்தமிருக்கிறதென்று மெர்ஸிடிஸுக்குத் தான் தெரியும். அவள் அதைப் பற்றித் தன் உள்ளத்திலே செறிந்து கிடந்த கருத்துக்களையெல்லாம் வெளியே கொட்டிவிட்டாள்; அதே சமயத்தில் தன் கணவனின் குடும்பத்தில் மட்டும் காணும்படியான ஒருசில விரும்பத்தகாத தன்மைகளைப் பற்றியும் குறிப்பிட்டாள். இப்படிச் சச்சரவுதான் நடக்கும்; தீயை யாரும் மூட்டமாட்டார்கள். கூடாரம் பாதி அடித்தது போலக் கிடக்கும். நாய்கள் வயிறு வாடும்.

மெர்ஸிடிஸுக்குத் தான் பெண் என்கிற முறையில் ஒரு தனிக் குறையும் இருந்தது. அவள் அழகும் மென்மையும் வாய்ந்தவள்; இதுவரை அவளை எல்லோரும் அன்புடனும் தனிச்சலுகையுடனும் நடத்தினார்கள். இப்பொழுது அவளுடைய கணவனும் தம்பியும் நடத்தியது அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. தன்னால் இயலாது என்று கூறுவது அவளுக்குச் சகஜம். அதைக் குறித்து இப்பொழுது அவர்கள் குறை கூறினார்கள். பெண்மைக்குத் தனியுரிமையான அந்த இயல்பைப்பற்றி அவர்கள் கண்டிக்கவே அவர்களுடைய வாழ்க்கையைச் சகிக்க முடியாத நரகமாக்கினாள். அவளுக்கு இப்பொழுதெல்லாம் நாய்களைப் பற்றி அனுதாபமே கிடையாது. அவள் மிகவும் களைத்துப்போனதால், வண்டியில் ஏறிச் செல்ல வேண்டுமென்று வற்புறுத்தினாள். அவள் அழகும் மென்மையும் வாய்ந்தவள்தான்; இருந்தாலும், அவள் நூற்றிருபது இராத்தல் ஆயிற்றே! இளைத்தும், பட்டினியாகவும் கிடக்கும் நாய்களுக்கு வண்டியிலுள்ள சுமையே அதிகம். சில நாட்கள் அவள் வண்டியில் சென்றாள். நாய்கள் வண்டியில் பூட்டியவாறே கீழே விழலாயின; கடைசியில் வண்டியே நின்றுவிட்டது. மெர்ஸிடிஸைக் கீழே இறங்கி நடந்து வருமாறு சார்லஸும் ஹாலும் பல வகையாக வேண்டிக்கொண்டார்கள். அவளோ அழுது கொண்டும், அவர்கள் தன்னைக் கொடுமையாக நடத்துவதை எடுத்துச்சொல்லி கடவுளிடத்தே முறையிட்டுக் கொண்டுமிருந்தாள்.

ஒருதடவை அவளை வண்டியிலிருந்து பலவந்தமாகக் கீழே இறக்கிவிட்டார்கள். ஆனால் மறுபடியும் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. பிடிவாதம் பிடிக்கும் செல்லக்குழந்தை போல் அவள் வேண்டுமென்றே கண்டயிடங்களில் காலை இடித்துக் கொண்டு நொண்டலானாள்; பிறகு நடக்க முடியாததென்று பாதையில் உட்கார்ந்து விட்டாள். அவர்கள் அவளைக் கவனியாதவர்கள் போலச் சென்றார்கள். அதைக் கண்டும் அவள் அசையவே இல்லை. மூன்று மைல் தூரம் போன பிறகு அவர்கள் வண்டியை நிறுத்திச் சாமான்களையெல்லாம் இறக்கிவைத்துவிட்டு வெறும் வண்டியோடு அவளிடம் திரும்பி வந்தார்கள்; அவளை வலியத் தூக்கி வண்டியிலே வைத்துக்கொண்டு போனார்கள்.

தாங்கள் படுகின்ற அவஸ்தையின் மிகுதியால் அவர்கள் நாய்களின் துன்பத்தைப்பற்றிக் கருதவேயில்லை. சிரமங்களைச் சகித்துத் திண்மையடைய வேண்டும் என்பது ஹாலின் கொள்கை. அதன் கொள்கையை அவன் மற்றவர்களுக்கும் பிரயோகித்தான்; சகோதரிக்கும், மைத்துனனுக்கும் அதைப் போதிக்கத் தொடங்கினான். அவர்களிடம் அதிலே அவன் வெற்றியடையாமற் போகவே நாய்களுக்கு அதைத் தன் தடியின் மூலம் கற்பிக்கலானான். வழியிலே ஓரிடத்திற்கு வந்து சேருவதற்குள் நாய்களுக்கு வேண்டிய உணவு முழுவதும் தீர்ந்துவிட்டது. பல்லில்லாத கிழவன் ஒருவன் குதிரைத் தோலைப் பனிக்கட்டியிலிட்டு உணவாகப் பதப்படுத்தி வைத்திருந்தான்; ஹாலின் இடுப்பிலே வேட்டைக்கத்தியோடு துணையாகக் காட்சியளித்த சுழல்துப்பாக்கியைக் கொடுத்தால் குதிரைத்தோலில் கொஞ்சம் கொடுப்பதாகக் கூறினான். வயிறு வற்றிக்கிடந்த குதிரைகளின் தோலை எடுத்து அவன் ஆறு மாதங்களுக்கு முன்னால் பக்குவப்படுத்தியிருந்தான். அது பேருக்கு உணவாகுமே அல்லாமல் சரியான உணவாகாது. துத்தநாகம் பூசிய இரும்புத்துண்டு போல அந்தத் தோல் தோன்றியது. நாய்கள் அதனுடன் மல்லுக்கட்டி எப்படியோ மென்று விழுங்கின. ஆனால் அது வயிற்றுக்குள்ளே போய் வார்களாகவும், சிறுசிறு உரோமக் குஞ்சங்கள் போலவும் பிரிந்து சீரணிக்க முடியாமற் போனதோடு வயிற்றுவலியையும் உண்டாக்கிற்று.

இத்தனை அவஸ்தைகளையும் தாங்கிக்கொண்டு, ஏதோ கனவுலகத்திலே போவதுபோல பக் மற்ற நாய்களுக்கு முன்னால் தள்ளாடித் தள்ளாடிச் சென்று கொண்டிருந்தது; இழுக்க முடிந்தபோது இழுத்தது; இழுக்க முடியாத போது நிலத்தில் விழுந்து கிடந்தது. சாட்டையடியும், தடியடியுந்தான் அதை மீண்டும் எழச் செய்தன. உரோமம் அடர்ந்த அதன் உடம்பிலிருந்த பளபளப்பும் கட்டும் மறைந்தன. உரோமம் சடையாகத் தொங்கியது. ஹாலின் தடியடிபட்டுக் காயமான இடங்களில் ரத்தம் ஒழுகி உலர்ந்து கிடந்தது. தசைநார்கள் நலிந்து முடிச்சு விழுந்த கயிறுகள் போலாகிவிட்டன. உடம்பிலிருந்த சதைப்பற்றும் மறைந்தொழிந்தது. தோல் சுருங்கிப் பல இடங்களில் மடிந்திருந்தது. உடம்பிலுள்ள எலும்புகளெல்லாம் சுருங்கிய தோலுக்கடியில் நன்றாகத் தெரிந்தன. பார்ப்பவர்கள் உள்ளமே உடைந்து போகும்படியாக பக் காட்சியளித்தது; ஆனால் அதன் உள்ளம் மட்டும் உடைந்து போகவில்லை. அதன் உள்ளத்தின் திண்மையைச் சிவப்பு மேலங்கிக்காரனே கண்டிக்கிறான்.

பக்கின் நிலைமையைப் போலவே மற்ற நாய்களின் நிலைமையுமிருந்தது. அவைகள் ஊர்ந்து செல்லும் எலும்புக் கூடுகளாக மாறிவிட்டன. பக்கையும் சேர்த்து ஏழு நாய்கள் இருந்தன. பெருந்துன்பம் உழன்ற அவைகள் சாட்டைவீச்சுக்கும் தடியடிக்கும் தடித்துப் போயின. எங்கே அடி விழுந்து வலிக்கிற மாதிரி அவைகளுக்கு மந்தமான உணர்ச்சிதான் ஏற்பட்டது. பார்ப்பனவும் கேட்பனவும் அவ்வாறே மந்தமாகப்புலனாயின. அவைகளுக்கு அரைஉயிர் கூட இல்லை; கால் உயிரும் இல்லையெனலாம். அவைகள் எலும்பு மூட்டைகள்; உயிர்பொறி மங்கலாக ஊசலாடிக்கொண்டிருக்கும் எலும்பு மூட்டைகள். ஏதாவது ஓரிடத்தில் தங்கும் போது அவை வண்டியில் பூட்டியபடியே உயிரற்றவைபோல விழுந்து கிடந்தன. அந்த நிலையிலேயே உயிர்பொறி மங்கி மறைந்து விடும் போலத் தோன்றியது. பிறகு சாட்டையடியோ தடியடியோ விழும்போது அந்தப்பொறி கொஞ்சம் அசைந்து மேலெழும்; நாய்கள் தட்டுத் தடுமாறி எழுந்து நின்று தள்ளாடித் தள்ளாடி முன்செல்லும்.

நல்ல சுபாவமுடைய பில்லியின் இறுதி நாள் வந்தது. அது ஓரிடத்தில் கீழே விழுந்தது; பிறகு அதனால் எழுந்திருக்க முடியவில்லை. சுழல்துப்பாக்கியை விற்றுவிட்டதால், ஹால் கோடரியை எடுத்து அதன் தலையின் மேல் தாக்கினான்; பிணமான பில்லியைப் பிறகுதான் வண்டியிலிருந்து அவிழ்த்து ஒருபுறமாக இழுத்தெறிந்தான். பக் இதைப் பார்த்தது; மற்ற நாய்களும் பார்த்தன. இதே கதி தங்களுக்கு விரைவில் நேரப்போகிறதென்று அவைகள் உணர்ந்து கொண்டன. அடுத்த நாள் கூனாவின் வாழ்க்கை முடிவுற்றது. மீதி ஐந்து நாய்களிருந்தன. நிலைமை மிக மோசமாகி விட்டபடியால், துன்புறுத்தவோ அச்சுறுத்தவோ ஜோவிற்குத் திராணியில்லை. நொண்டியாய்ப்போன பக்குக்குத் தீயவை நினைக்க உணர்ச்சியே இல்லை. ஒற்றைக்கண் சோலெக்ஸ் ஒழுங்காக வண்டியிழுக்க இன்னும் முயன்றதென்றாலும் உடம்பிலே வலுவின்மையால் துக்கப்பட்டது. பனிக்காலத்திலே இந்த முறை டீக் அதிகமாகப் பிரயாணம் செய்யவில்லை. எனவே, அது சற்றுத் துடுக்காக இருந்தது. அதனாலேயே அதற்கு அதிகமாக அடி கிடைத்தது. பக் இன்னும் தலைமைப் பதவியிலேயே முன்னால் சென்றது; என்றாலும் அது மற்ற நாய்கள் ஒழுங்காக வேலை செய்ய வேண்டுமென்பதில் கவனம் செலுத்தவில்லை. பலவீனத்தால் அதன் பார்வை மங்கிற்று. கால்களால் பாதையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே அது சென்றது.

வசந்தகாலம் அழகாகக் காட்சியளித்தது. ஆனால், அதன் அழகை மனித இனத்தைச் சேர்ந்த மூவரும் அறியவில்லை ; நாய்களும் அறிந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு நாட்காலையிலும் கதிரவன் முதல் நாளைவிடச் சற்று முன்னதாகவே உதிக்கத் தொடங்கினான்; மாலையில் அவன் மறையுங்காலமும் பின்தள்ளிக்கொண்டே போயிற்று. காலையில் மூன்று மணிக்கே விடிந்துபோகும். இரவிலே ஒன்பது மணி வரையில் அந்தி ஒளி பரவியிருந்தது. நீண்டிருக்கும் நாள் முழுவதும் பகலவனின் பொற்கிரணங்கள் சுடர்விட்டன. பனிக்காலத்தின் பயங்கர மௌனம் கலைந்து, புதிய உயிர்தோன்றும் வசந்தத்தின் மெல்லொலி எழுந்தது. வாழ்வின் எக்களிப்பும் பொதிந்துள்ள எல்லா நிலப்பகுதிகளிலிருந்தும் இந்தமெல்லொலி கிளம்பிற்று. உறைபனி மூடிய பல நீண்ட மாதங்களாக அசைவின்றி உயிரற்றவை போலக்கிடந்த எல்லாப் பிராணிகளிடமிருந்தும் தாவரங்களிடமிருந்தும் இந்த ஒலி எழுந்தது. பைன் மரங்களில் மீண்டும் உயிர்ச்சத்து மேலெழும்பிப் புதிய உயிர் தந்தது. வில்லோ , ஆஸ்ப்பெண் முதலிய பனிப்பிரதேச மரங்கள் புதிய அரும்புகளையும், முகைகளையும் தாங்கி நின்றன. புதர்களும், திராட்சைக்கொடிகளும் புதியதொரு பசுமை போர்த்தன. இராக்காலங்களிலே பாச்சைகள் அரவமிட்டன. பகல் வேளைகளிலே ஊர்வனவும், நகர்வனவும் சூரிய ஒளியிலே நடமாடின. கௌதாரிகள் உரத்த குரல் கொண்டு கூவின ; மரங்கொத்திகள் கொத்தோசை கானகத்தில் எழுந்தது. அணில்கள் கீச்சிட்டன. பறவைகள் பாடின. தெற்கிலிருந்து கோண வடிவாக வந்த காட்டுத்தாராக்களின் கூவோசை வானிலே மிதந்தது.

மலைச்சரிவுகளிலே மீண்டும் சிற்றருவிகள் பாயத் தொடங்கின; கண்ணுக்குத் தெரியாத அந்த அருவிகளின் இன்னிசை மெல்ல வந்தது. பனிக்கட்டியில் கட்டுண்டு கிடந்த யூக்கான்[1] ஆறு இப்பொழுது அந்தக் கட்டை உடைத்தெறிய முயன்றது. பனிக்கட்டியின் அடிப்பாகத்தை அது தகர்த்தது; கதிரவன் மேல் பாகத்தைத் தகர்த்தான். பனிப்பரப்பில் துண்டங்கள் ஆற்றில் மிதந்து சென்றன. மெல்லிய அரவமெழுப்பும் இளங்காற்றினூடே பொன்னொளி பொங்கும் பகலவனுடைய உதவியால் விழிப்புற்றெழுந்த புதிய உயிர் வாழ்க்கையின் துடிப்பின் மத்தியிலே அந்த இரு ஆடவர்களும் ஒரு மங்கையும் சாவை நோக்கிச்செல்லும் வழிபோக்கர்கள் போலத் தள்ளாடித் தள்ளாடிச் சென்றனர்.

நாய்கள் ஒவ்வொன்றாகத் தடுமாறி விழவும், மெர்ஸிடிஸ் புலம்பிக்கொண்டு வண்டியில் வரவும், ஹால் வீணாகச் சபித்துக் கொண்டிருக்கவும், சார்லஸின் கண்களில் நீர்வடியவும் அவர்கள் தட்டுத்தடுமாறி வெள்ளாற்றின் முகத்துவாரத்தில் ஜான் தார்ன்டன் போட்டிருந்த கூடாரத்தை அடைந்தனர். அடித்துக் கொல்லப் பட்டவை போல நாய்கள் விழுந்தன. மெர்ஸிடிஸ் கண்களைத் துடைத்துக்கொண்டு ஜான் தார்ன்டனை நோக்கினாள். ஒரு மரத்துண்டின் மேல் சார்லஸ் மெதுவாக அமர்ந்தான். அமரும் போது கால்கள் மடக்க முடியாமல் வலியெடுத்தன. ஹால்தான் பேசத் தொடங்கினான். ஜான் தார்ன்டன் தன் கோடரிக்கு ஒரு கைப்பிடி செய்து முடித்துக்கொண்டிருந்தான். வேலை செய்து கொண்டே அவன் ஹாலின் பேச்சைச் செவியில் வாங்கிக்கொண்டான்; ஒரு வார்த்தை இரண்டு வார்த்தைகளில் பதில் கொடுத்தான்; அவனுடைய ஆலோசனையைக் கேட்டபொழுது அதையும் மிகச் சுருக்கமாகவே சொன்னான். ஹாலைப்போன்ற மக்களின் இயல்பை அவன் நன்கறிவான். தான் கூறுகின்ற ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற நிச்சயத்தோடேயே அவன் பேசினான்.

அடிப்பாகம் உருகி இளகிக்கொண்டிருக்கும் பனிக்கட்டியின் மேல் பிரயாணம் செய்வது ஆபத்து என்று தார்ன்டன் எச்சரிக்கை செய்தான். அதைக் கேட்ட ஹால், அங்கேயும் இப்படித்தான் சொன்னார்கள்; பாதையில் படிந்துள்ள பனிக்கட்டியின் அடிப்பாகம் இளகித் தளர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் இப்போது பிரயாணம் செய்யாமல் இருப்பதுதான் நல்லது என்றார்கள்; வெள்ளாற்றை அடைய முடியாது என்றார்கள். ஆனால் இதோ நாங்கள் வெள்ளாறு வந்து சேர்ந்துவிட்டோம்” என்று வெற்றிச் செருக்கோடு வார்த்தையாடினான்.

“அவர்கள் சொன்னதுதான் சரியான யோசனை. ஆற்றின் மேல் படிந்திருந்த பனிக்கட்டியின் அடிப்பாகம் எந்தக் கணத்திலும் இளகித் தண்ணீரில் முழுகிவிடலாம். அடிமுட்டாளாக இருந்தால் தான் இந்தச் சமயத்தில் பிரயாணம் செய்வான். நான் வெளிப்படையாகச் சொல்லுகிறேன், அலாஸ்காவிலுள்ள அத்தனை தங்கமும் கிடைப்பதானாலும் நான் இப்போது பயணம் தொடங்க மாட்டேன்” என்று தார்ன்டன் பதில் கூறினான்.

“ஏனென்றால் நீ அப்படி முட்டாள் அல்ல, அப்படித்தானே? என்றான் ஹால். இருந்தாலும் நாங்கள் டாஸன் போகத்தான் போகிறோம்.”

ஹால் சாட்டையை எடுத்தான். ‘பக், எழு எழு , மஷ் மஷ், புறப்படு.”

தார்ன்டன் கோடரிப்பிடியைச் செதுக்கத் தொடங்கினான். முட்டாளுக்கும் அவனுடைய முட்டாள்தனத்திற்கும் இடையே குறுக்கிடுவது வீண்வேலை என்று அவனுக்கும் தெரியும். உலகத்திலே இரண்டு மூன்று முட்டாள்கள் அதிகமாக இருப்பதனாலோ குறைவாக இருப்பதனாலோ ஒன்றும் மாறிவிடப் போவதில்லை என்பதும் அவனுக்குத் தெரியும்.

ஹாலின் ஆணையைக் கேட்டு நாய்கள் உடனே எழுந்திருக்கவில்லை. அப்போது அவைகளிருந்த நிலைமையில் அடி கொடுத்துத்தான் அவற்றை எழுப்ப முடியும். சாட்டை பளீர் பளீரென்று அங்குமிங்குமாகத் தன் கொடுந்தொழிலை நடத்திற்று. ஜான் தார்ன்டன் உதட்டைக் கடித்தான். முதலில் சோலெக்ஸ் எழுந்து நின்றது. டீக் அதைப் பின்பற்றியது. வலி பொறுக்காமல் கத்திக்கொண்டு ஜோ அதன் பிறகு எழுந்தது. எழுந்து நிற்க பக் பெருமுயற்சி செய்ததது. பாதி எழுந்த நிலையில் அது இருமுறை அப்படியே விழுந்துவிட்டது. மூன்றாவது முயற்சியில் அது எப்படியோ எழுந்தது. பக் எழுந்து நிற்க முயலவே இல்லை. அது படுத்த இடத்திலேயே அசைவற்றுக் கிடந்தது. சாட்டை பளீர் பளீரென்று மீண்டும் மீண்டும் உடம்பில் தாக்கிற்று. பக் கத்தவுமில்லை; எழுந்து நிற்க முயலவும் இல்லை. தார்ன்டன் பல முறை பேச வாயெடுத்தான்; ஆனால் பேசவில்லை. அவன் கண்களில் கண்ணீர் ததும்பிற்று, சாட்டையடி மேலும் தொடர்ந்து விழவே என்ன செய்வதென்று தீர்மானம் செய்ய முடியாமல் அவன் எழுந்து அங்குமிங்கும் நடக்கலானான்.

பக் எழுந்திராமல் கிடந்தது. இதுதான் முதல் தடவை. அதனால் ஹாலுக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. அவன் சாட்டையை எறிந்துவிட்டுத் தடியை எடுத்தான். கொடுமையாகத் தடியடி பொழிந்தபோதிலும் பக் எழுந்து நிற்க மறுத்தது. மற்ற நாய்களைப் போலவே அதற்கும் எழுந்து நிற்கச் சக்தியில்லை. ஆனால் அவை எப்படியோ பெருமுயற்சி செய்து எழுந்து நின்றன. எழுவதில்லையென்றே பக் உறுதியாக இருந்தது. வரப்போகிற பேராபத்தை அது ஒருவாறு உணர்ந்து கொண்டது. ஆற்றின் மேலேயிருந்த பனிப்பாதையை விட்டுக் கரையை வந்தபோதே இந்த உணர்ச்சி அதற்கு நன்கு ஏற்பட்டது; அது இன்னும் நிலைத்திருந்தது. அன்று பயணம் செய்தபோது தன் கால்களுக்கடியிலே பனிக்கட்டி உருகி இளகுவதை அது கண்டது. அதனால் மேற்கொண்டும் அந்தப் பாதையில் போனால் விரைவில் ஆபத்து நேரும் என்று அது தெரிந்து கொண்டது போலும். அது அசைய மறுத்தது. இதுவரையில் அது அனுபவித்த துயரம் மிகப் பெரிது. அந்தத் துயரத்தின் எல்லையிலேயே தடியடி அதற்கு அதிகமான வலியைத் தரவில்லை. தடியடி தொடர்ந்து நடந்தபோது அதன் உயிர் போவதும் வருவதுமாக இருந்தது. பிறகு உயிர்போகும் நிலையே வந்துவிட்டது. பக்குக்கு உணர்வு மங்கலாயிற்று. எங்கே அடி விழுகிறது போல் அதற்குப்பட்டது. வலி என்கிற உணர்ச்சியும் மறையத் தொடங்கியது. புலன் உணர்ச்சியே மங்கலாயிற்று. உடம்பின் மேல் தடி மோதுவது போல மட்டும் செவியில் ஓசை விழுந்தது. அந்த உடம்பும் தன்னுடையதல்ல, அது எங்கோ கிடக்கும் வேறு உடம்பு என்று, இவ்வாறு அதற்கு உணர்ச்சியுண்டாயிற்று.

பிறகு திடீரென்று யாரும் எதிர்பாராதவிதமாக ஜான்தார்ன்டன் ஏதோ ஒரு விலங்கு போலக் கத்திக்கொண்டு ஹாரின் மேல் பாய்ந்தான். அடி சாய்ந்து விழுகின்ற மரத்தினால் மோதுண்டவனைப் போல் ஹால் பின்னால் சாய்ந்தான். மெர்ஸிடிஸ் அலறினாள். நீர் வடியும் கண்களைத் துடைத்துக் கொண்டு சார்லஸ் அமர்ந்திருந்தான்; கால்களில் ஏற்பட்டிருந்த பிடிப்பால் அவன் எழுந்திருக்கவில்லை.

பக்கை மறைத்துக்கொண்டு நின்ற ஜான் தார்ன்டன் தன்னுள்ளே பொங்கிக் குமுறுகின்ற கோபத்தை அடக்க முயன்று கொண்டிருந்தான்.

கடைசியில் ஒருவாறு சமாளித்துக்கொண்டு அவன், “இந்த நாயை மறுபடியும் அடித்தால் உன்னைக் கொன்று தீர்த்து விடுவேன்” என்று கூவினான்.

ஹாலின் வாயிலிருந்து ரத்தம் கசிந்தது. அதைத் துடைத்துக் கொண்டு அவன், அது என்னுடைய நாய். அதைவிட்டு விலகிப்போ; இல்லாவிட்டால் உன்னைப் பலி வாங்கிவிடுவேன். நான் இப்பொழுது டாஸனுக்குப் புறப்பட வேண்டும்” என்றான்.

பக்கைவிட்டுத் தார்ன்டன் விலகுவதாகக் காணோம். ஹால் தனது வேட்டைக்கத்தியை உருவினான். மெர்ஸிடிஸ் அலறினாள்; வீறிட்டாள்; சிரித்தாள்; பேய்பிடித்தவள் போலத் தோன்றினாள். ஜான் தார்ன்டன் கோடரிப் பிடியால் ஹாலின் கைகளின் மேல் தட்டினான். ஹாலின் கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது. அதை அவன் எடுக்க முயன்றபோது மீண்டும் தார்ன்டன் முளிகளின் மேல் அடித்தான். பிறகு அவனே கத்தியை எடுத்து பக்கின் திராஸ்வார்களை அறுத்தெறிந்தான்.

அப்பொழுதிருந்த நிலையில் ஹால் சண்டைக்குத் தயாராக இல்லை. மேலும் அவன் தன் தமக்கையைக் கைகளால் தாங்கிக் கொண்டு அவளைக் கவனிக்க வேண்டியிருந்தது. குற்றுயிராய்க் கிடக்கும் பக்கும் வண்டியிழுக்க இனிப் பயன்படாது. ஆதலால் அதை விட்டுவிட்டு மூவரும் புறப்படலாயினர். ஆற்றின் மேல் படர்ந்திருந்த பனிப்பாதையில் வண்டி சென்றது. பக் தலையைத் தூக்கிப்பார்த்தது. தலைமைப்பதவியில் பைக் சென்றது; அதன் பின்னால் ஜோவும் டீக்கும் சென்றன; நான்காவதாகச் சென்றது சோலெக்ஸ். நெண்டிக்கொண்டும் தடுமாறிக்கொண்டும் அவை எட்டு வைத்தன. மெர்ஸிடிஸ் வண்டியில் அமர்ந்திருந்தாள். ஹால் வண்டியைச் செலுத்தினான்; சார்லஸ் வண்டியின் பின்னால் இடறி இடறிச்சென்றான்.

அவர்களைப் பக் பார்த்துக்கொண்டிருக்கும் போது, தார்ன்டன் அதன் உடம்பைத் தடவிப்பார்த்தான். ஏதாவது எலும்பு முறிந்திருக்கிறதாவென்று அவன் ஆராய்ந்தான். எலும்பு ஒன்றும் முறியவில்லை; காயங்கள்தான் நிறைய இருந்தன. பட்டினியால் பக் துரும்பாக இளைத்துக்கிடந்தது.

கால்மைல் தூரத்திலே வண்டி கண்ணுக்குப் புலனாயிற்று. பனிக்கட்டிகளின் மேல் அது ஊர்ந்து செல்லுவதைப் பக் கவனித்தது தார்ன்டனும் பார்த்தான். வண்டியின் பின்பகுதி குழியில் இறங்கியது போல் திடீரென்று மறைந்தது; அதே சமயத்தில் ஹாலும் பனியினடியில் மறைந்தான். மெர்ஸிடிஸ் வீறிட்டு அலறிய குரல் கேட்டது. சார்லஸ் திரும்பித் தப்பி ஓடக் காலெடுத்து வைத்தான். ஆனால், அந்தச் சமயத்தில் பெரும்பகுதியான பனிக்கட்டிப்பரப்பு ஆற்றுக்குள்ளே அமிழ்ந்துவிட்டது. வண்டியோடும், நாய்களோடும் மூவரும் ஆற்றில் அமிழ்ந்து மறைந்தார்கள். பனிப்பாதையிலே அந்த இடத்தில் ஒரு பெரிய உடைப்புத்தான் தோற்றமளித்தது.

ஜான்தார்ன்டன் பக்கைப் பார்த்தான்; பக் அவனைப் பார்த்தது.

‘ஐயோ, பாவம்” என்றான் தார்ன்டன். பக் அவன் கையை அன்போடு நக்கிற்று.

[1] இது யூக்கான் பிரதேசத்தில் உள்ள ஆறு; பெல்லி, லூயிஸ் என்ற ஆறுகள் சேர்ந்து உண்டாவது.

– தொடரும்…

– கானகத்தின் குரல் (நாவல்), ”The Call of the Wild” by Jack London, ஜாக் லண்டன், தமிழில்: பெ.தூரன், முதற் பதிப்பு: 1958, பதிப்பு: 2000, புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *