1.ஆதிநிலை | 2.கோரைப்பல், குறுந்தடி ஆட்சி | 3.பூர்வீக விலங்குணர்ச்சி
டையே[1] கடற்கரையிலே முதல் நாள் பக்குக்கு வெகு பயங்கரமாகக் கழிந்தது. ஒவ்வொரு மணியிலும் புதிய அதிர்ச்சிகள். நாகரிகத்தின் மத்தியிலிருந்து, அநாகரிக ஆதிநிலையின் மத்தியிலே திடீரென்று பக் தூக்கி எறியப்பட்டுள்ளது. வேலை ஒன்றுமில்லாத கதிரவன் ஒளியிலே சோம்பித் திரியும் வாழ்க்கை இங்கேயில்லை. இங்கே அமைதியோ, ஓய்வோ, பாதுகாப்போ கிடையாது. எல்லாம் குழப்பம் ; எப்போதும் வேலை; ஒவ்வொரு கணமும் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து. இங்கே எப்பொழுதும் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால், இங்கே உள்ள நாய்கள், நகரத்து நாய்கள் போல அல்ல. இங்குள்ள மனிதர்களும் நகரத்து மனிதர்கள் போலிருக்கவில்லை. நாய்கள் கொடியவை; மனிதர்களும் கொடியவர்களே. இங்கு கோரைப்பல்லும் குறுந்தடியும் ஆட்சி புரிந்தன.
இவ்விடத்திலிருந்து ஓநாய் போன்ற நாய்கள் ஒன்றோடொன்று போட்டுக்கொண்டிருந்த சண்டையைப் போலச் சண்டையைப் பக் பார்த்ததே இல்லை. முதல் அனுபவமே என்றும் மறக்க முடியாத படிப்பினையை அதற்குக் கொடுத்தது. அது சொந்த அனுபவமன்று. சொந்த அனுபவமாக இருந்தால் அது உயிரோடிருக்க முடியாது. கர்லிக்கு ஏற்பட்ட அனுபவம் அது. மரக்கட்டைகளை அடுக்கியிருந்த ஒரு கடைக்குப் பக்கத்திலே முகாம் போடப்பட்டிருந்தது. இயல்பான தனது சிநேகபாவத்துடன் கர்லி ஒரு முரட்டு எஸ்கிமோ நாயினருகே சென்றது. அந்த நாய் ஓர் ஓநாயின் அளவிருக்கும்; ஆனால், கர்லியின் பருமனில் பாதி கூட இல்லை. மின்னல் வேகத்தில் அது திடீரென்று கர்லியின் மேல் பாய்ந்தது. நற நறவென்று பல்லால் கடித்தது. மறுகணத்தில் அதே மின்னல் வேகத்தில் அது எட்டித் தாண்டி ஓடிவிட்டது. கர்லி இதை எதிர்பார்க்கவே இல்லை.
தாக்குவதும், தாக்கியவுடன் தாவிக் குதித்தோடுவதுந்தான் ஓநாய்ச் சண்டை. அம்முறையை அந்த நாய் பின்பற்றியது. முப்பது நாற்பது எஸ்கிமோ நாய்கள் ஓடிவந்து சண்டையிட்டுக் கொண்டிருந்த அந்த இரண்டு நாய்களையும் சுற்றி வளைத்துக் கொண்டு மௌனமாக நின்றன. அவைகள் கூர்ந்து கவனிப்பதையும் ஆவலோடு நாவினால் கடைவாயை நக்கிக்கொள்வதையும் பக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதிரியின் மேல் கர்லி பாய்ந்தது; ஆனால் அந்த எஸ்கிமோ நாய் மீண்டும் தாக்கிவிட்டுத் தாவியோடியது. அடுத்ததடவை கர்லி பாய வரும்போது அது தனது மார்பால் தந்திரமாகக் கர்லியைத் தடுத்துக் கீழே விழும்படிச் செய்தது. இதற்குத்தான் மற்ற நாய்கள் காத்திருந்தன. கர்லி கீழே விழுந்ததுதான் தாமதம், சுற்றி நின்ற எஸ்கிமோ நாய்களெல்லாம் அதன் மேல் சீறிக்கொண்டும், குரைத்துக்கொண்டும் விழுந்து தாக்கின. துயரந்தாங்காமல் கர்லி வீறிட்டுக் கத்திற்று.
எதிர்பாராத விதமாக எல்லாம் ஒரு கணத்தில் நடந்துவிட்டது. பக்குக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஸ்பிட்ஸ்[2] சிரிப்பது போலத் தனது சிவந்த நாக்கை நீட்டிக்கொண்டு நின்றது. ஒரு கோடரியை ஓங்கி வீசிக்கொண்டு பிரான்சுவா அந்த நாய்க்கூட்டத்திற்கிடையே குதித்தான். அவனுக்கு உதவியாக மூன்று மனிதர்கள் வந்து அந்த நாய்களைத் தடியால் அடித்து விரட்டினார்கள். கர்லி கீழே விழுந்த இரண்டு நிமிஷங்களுக்குள்ளே அந்த எஸ்கிமோ நாய்களை ஓட்டிவிட்டார்கள். இருந்தாலும் அதற்குள்ளே கர்லி உயிரற்றுப் பிணமாகிவிட்டது. அதன் உடம்பு தாறுமாறாகக் கிழிபட்டு ரத்தம் தோய்ந்த பனியிலே கிடந்தது. இந்தக் காட்சி அடிக்கடி பக்கின் தூக்கத்திலும் தோன்றித் தொல்லை கொடுத்தது. இதுவே இங்கு வாழ்க்கைமுறை. ஞாயம் என்பது கிடையாது. கீழே விழுந்தால் உயிருக்கே ஆபத்து. பக் இதைத் தெரிந்து கொண்டது; கீழே விழுவதில்லை என்றும் தீர்மானித்துக்கொண்டது. ஸ்பிட்ஸ் நாக்கை நீட்டி மறுபடியும் சிரித்தது. அது முதல் பக் அதனிடத்தில் மாறாத வெறுப்பு கொண்டது.
கர்லி உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளிப்பதற்குள் பக்கிற்கு மற்றோர் அதிர்ச்சி உண்டாயிற்று. பிரான்சுவா அதன் முதுகில் தோல்பட்டைகளையும், வார்களையும் இழுத்துக் கட்டினான். குதிரைகளுக்கு இவ்வாறு சேணம் போடுவதை அது கண்டதுண்டு. குதிரைகள் வேலை செய்வது போல இப்பொழுது பக் வேலை செய்ய வேண்டும். பனிக்கட்டியின் மீது வழுக்கி வழுக்கிச் செல்லும் சறுக்கு வண்டியிலே பிரான்சுவாவைக் காட்டிற்கு இழுத்துச் செல்லவேண்டும். அங்கிருந்து விறகுக்கட்டையையும் ஏற்றிக் கொண்டு திரும்ப வேண்டும். இவ்வாறு வண்டியிழுப்பதால் தனது அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்படுவதை பக் உணர்ந்தது. இருந்தாலும் அது எதிர்த்துக் கலகம் செய்யாமல் அடக்கி நடக்கலாயிற்று. தன்னால் இயன்றவரை அது உறுதியோடு சிரமப்பட்டு வண்டி இழுத்தது.
பிரான்சுவா கண்டிப்பானவன். அவன் விருப்பப்படி உடனே நடந்தாக வேண்டும். அப்படி நடக்க வைப்பதற்கு அவன் கையிலிருந்த சாட்டை உதவி செய்தது. சறுக்குவண்டியிழுப்பதில் டேவுக்குப் பழக்கமுண்டு. பக் சரியானபடி பாதையில் போகாத சமயத்திலெல்லாம் அது பக்கின் பின்புறத்திலே கடித்தது. ஸ்பிட்ஸ் தலைமைப்பதவி வகித்து முன்னால் சென்றது. அதற்கு வண்டியிழுத்துப் பழக்கமுண்டு. பக் தவறு செய்யும் போதெல்லாம் அது உறுமிற்று. பக் சுலபமாகப் பழகிக்கொண்டது. அந்த இரண்டு நாய்களின் உதவியாலும் பிரான்சுவாவின் உதவியாலும் அது மிகவும் முன்னேற்றமடைந்தது. ஹோ’ என்றால் நிற்க வேண்டும், ‘மஷ்’ என்றால் போக வேண்டும் என்றும் அது தெரிந்து கொண்டது.
‘மூணும் நல்ல நாய்கள். அந்த பக் இருக்குதே அது பிசாசு மாதிரி இழுக்குது. சட்டென்று எல்லாம் அது பழகிக்கும்” என்று பிரான்சுவா பெரோல்ட்டிடம் தெரிவித்தான்.
கடிதங்களை எடுத்துக்கொண்டு புறப்பட வேண்டும் என்று பெரோல்ட் அவசரப்பட்டான். மாலை நேரத்திற்குள் அவன் பில்லி, ஜோ என்று மேலும் இரண்டு நாய்களைக் கொண்டு வந்தான். அவைகள் இரண்டும் உடன்பிறந்தவை; எஸ்கிமோ நாய்கள். ஒரே தாய்க்குப் பிறந்தவையானாலும் இரவும் பகலும் போல அவை குணத்தில் மாறுபட்டிருந்தன. பில்லி மிக மிக நல்ல சுபாவம் உடையது. ஜோ இதற்கு நேர்மாறானது. அது எப்பொழுதும் வெடுவெடுப்பாக இருக்கும். சதா சீறும். அதன் கண்களில் தீய சிந்தனை குடிகொண்டிருக்கும்.
அந்த இரு நாய்களையும் தோழமை பாராட்டிப் பக் வரவேற்றது; டேவ் அவற்றைக் கவனிக்கவே இல்லை. பிட்ஸ் அவற்றைத் தனித் தனியாகப் பாய்ந்து கடிக்கத் தொடங்கியது. சமாதானத்தை நாடி பில்லை வாலைக்குழைத்தது. அது பயன்படாமற்போகவே ஓட்டம் பிடித்தது. ஸ்பிட்ஸின் கூர்மையான பற்கள் விலாப்புறம் பதியவே கத்தத் தொடங்கியது. ஆனால் ஸ்பிட்ஸின் திறமை ஜோவிடத்தில் பலிக்கவில்லை. அது எத்தனையோ தடவை சோவைச் சுற்றிவந்தது. அப்படி வந்தபோதிலும், ஜோ அதையே ஏறிட்டுப் பார்ப்பதற்கு வசதியாகத் தன் உடம்பை மட்டும் திருப்பிக்கொண்டு ஒரே இடத்திலிருந்தது. அதன் பிடரி மயிர் சிலிர்த்தது. காதுகள் பின்புறமாக மடிந்தன. உதடுகள் நெளிந்தன. பல தடவை வாயைக் கடித்துக்கொண்டு சீறிற்று. பல்லைக் காட்டி உறுமிற்று. பயமே உருவமாக அது தோன்றியது. அதன் தோற்றம் மிகப் பயங்கரமாக இருந்ததால் அதைத் தனக்குப் பணிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்பிட்ஸ் கைவிட வேண்டியதாயிற்று. ஆனால் தனது தோல்வியை மறைப்பதற்காக பில்லியின் மேல் மறுபடியும் பாய்ந்து அதை முகாமின் எல்லைக்கே துரத்திவிட்டது.
மாலை நேரத்திற்குள் பெரோல்ட் மற்றொரு நாயையும் வாங்கிவந்தான். அது வயதான எஸ்கிமோ நாய். ஒல்லியான நீண்ட உடலும், சண்டை தழும்பேறிய முகமும் உடையது. அதற்கு ஒரு கண்தான் தெரியும். அந்தக் கண்ணிலே அதன் வல்லமை ஒளிவிட்டது. அதைப் பார்த்தாலே மற்ற நாய்கள் பயப்படும். அந்த நாயின் பெயர் சோலெக்ஸ். சோலெக்ஸ் என்றால் கோபக்காரன் என்று பொருள். டேவைப் போல் அந்த நாயும் எதையும் எதிர்பார்க்கவில்லை. அது மெதுவாக நாய்களின் மத்தியிலே நடைபோட்டுக்கொண்டு வந்த பொழுது ஸ்பிட்ஸ் கூட மௌனமாக இருந்துவிட்டது. கண்பார்வை இல்லாத பக்கமாக வந்தால் சோலெக்ஸுக்குப் பிடிக்காது. அதைத் தெரிந்து கொள்ளாமல் பக் ஒரு தடவை அந்தப் பக்கமாகச் சென்றுவிட்டது. சோலெக்ஸ் சட்டென்று திரும்பி அதன் மேல் பாய்ந்து அதன் முன் கால் சப்பையில் மூன்றங்குல நீளத்திற்குக் கடித்து வகிர்ந்துவிட்டது. அது முதல் அதன் குருட்டுக்கண் பக்கமாகப் பக் செல்லுவதே இல்லை. எனவே மீண்டும் சோலெக்ஸால் அதற்கு எவ்விதத் தொந்தரவும் ஏற்படவில்லை. டேவைப்போல் அதுவும் தன்னை யாரும் தொந்தரவு செய்யாமல் தனியாக விட்டுவிட வேண்டும் என்று தான் ஆசை கொண்டிருப்பதாக முதலில் தோன்றியது; ஆனால் அந்த இரண்டு நாய்களுக்கும் மற்றொரு முக்கியமான ஆசை இருந்ததென்பதைப் பக் பிற்காலத்தில்தான் அறியலாயிற்று.
அன்றிரவு பக்கிற்கு ஒரு பெரிய பிரச்சினை உண்டாயிற்று. எங்கே உறங்குவது? வெள்ளைப் பனி மூடிய அந்த நிலப்பரப்பிலே கூடாரம் போடப்பட்டிருந்தது. அதற்குள்ளிருந்து மெழுகுவர்த்தியின் ஒளி தோன்றியது. ஆனால் பக் கூடாரத்திற்குள்ளே நுழைந்த போது பெரோல்ட்டும், பிரான்சுவாவும் அதை அதட்டினார்கள். சமையல் வேலைக்கான சில கருவிகளை எடுத்து அதன் மேல் வீசினார்கள். அது பயந்து வெளியே கடுங்குளிருக்குள்ளே ஓட்டமெடுத்தது. குளிர்ந்த காற்று வீசிற்று. பக்கால் அதைத் தாங்க முடியவில்லை. அதன் முன்னங்காலில் ஏற்பட்டிருந்த காயத்தில் குளிர்க்காற்று பட்டுப் பொறுக்க முடியாத வலி எடுத்தது. பனியின் மேல் படுத்து பக் தூங்க முயன்றது. ஆனால் உறைபனி விழுந்து அதை நடுக்கிற்று. கீழே படுக்கவே முடியவில்லை. ஆறாத் துயரத்தோடு அது கூடாரங்களினிடையே சுற்றிச் சுற்றித்திரிந்தது. எந்த இடத்திலும் ஒரே கடுங்குளிர்தான். அங்குமிங்கும் காட்டு நாய்கள் திரிந்தன. அவைகள் பக்கின் மேல் பாயவந்தபோது பக்கினது பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொண்டு சீறிற்று. அப்படி செய்துதான் அவைகளிடமிருந்து தப்ப முடியும் என்று பக் தெரிந்து கொண்டிருந்தது. அந்த உபாயமும் நல்ல பயனளித்தது.
கடைசியில் பக்குக்கு ஓர் எண்ணம் தோன்றியது. தன்னுடன் இருந்த மற்ற நாய்கள் என்ன செய்கின்றன என்று பார்க்கலாமென்று திரும்பி வந்தது. ஆனால் அவைகளில் ஒரு நாயைக் கூடக் காணமுடியவில்லை. எல்லாம் எங்கேயோ மறைந்து விட்டன. கூடாரம் முழுவதும் அவைகளைத் தேடி பக் அலைந்தது. அவைகள் கூடாரத்திற்குள் இருக்கின்றனவா? இருக்க முடியாது. அவை அங்கிருந்தால் பக்கை மட்டும் வெளியில் துரத்தியிருக்க மாட்டார்கள். பிறகு அவை எங்கே இருக்கமுடியும்? வாலை மடித்துக் கொண்டு நடுக்கும் குளிரிலே கூடாரத்தைச் சுற்றிச்சுற்றி ஒரு நோக்கமும் இல்லாமல் பக் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஓரிடத்திலே அது தன் முன்னங்கால்களை வைத்தபோது திடீரென்று கால்கள் தரையில் புதைந்தன. அங்கே பனி இளகியிருந்தது. அதன் கால்களுக்கடியில் ஏதோ ஒரு பிராணி நெளியலாயிற்று. அதைக் கண்டு பயந்து பக் சிலிர்த்துக்கொண்டும் சீறிக்கொண்டும் பின்னால் தாவியது. ஆனால் தரைக்குள்ளிருந்து சினேகபாவத்துடன் ஒரு நாயின் குரல் கேட்கவே அது திரும்பிச் சென்று பார்த்தது. பந்துபோல சுருண்டு அந்தப் பனிக்கடியிலே பில்லி படுத்திருந்தது. பில்லி தனது அன்பைப் பல வகைகளிலே பக்குக்குக் காட்ட முயன்றது.
மற்றொரு படிப்பினை, பனியிலே படுத்துறங்க அதுதான் வழியா? பக் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து எப்படியோ ஒரு குழி தோண்டிக் கொண்டு அதில் படுத்தது. கொஞ்ச நேரத்தில் அதன் உடம்பில் உள்ள உஷ்ணமே அந்தக் குழி முழுவதும் பரவிவிட்டது. பக் உறக்கத்தில் ஆழ்ந்தது. அந்த நாள் முழுவதும் எத்தனையோ சிரமங்கள். ஆகையால் அதற்கு நல்ல தூக்கம் வந்ததென்றாலும், பலவகையான கனவுகளைக் கண்டு தூக்கத்திலேயே உறுமிக் கொண்டும் குரைத்துக்கொண்டு மிருந்தது.
மறுநாட்காலையில் முகாமிலே ஏற்பட்ட ஆரவாரத்தைக் கேட்கும் வரையில் பக் விழிக்கவில்லை. முதலில் அதற்குத் தான் இருக்கும் இடமே தெரியவில்லை. இரவெல்லாம் பனி விழுந்து குழியை நன்றாக மூடிவிட்டது. நான்கு பக்கங்களிலும் பனிச்சுவர்கள் அதன் உடம்பின் மேல் அழுத்தலாயின. வலையில் அகப்பட்டுக் கொண்டது போல் அதற்கு ஒரு பெரிய பயம் பிடித்தது. அது மிகவும் நாகரிகமடைந்த நாய். அதற்கு வலையில் அகப்படும் அனுபவம் ஏற்பட்டதே கிடையாது. இருந்தாலும் அந்த பயம் உண்டாயிற்று. அதற்குள்ளே மறைந்து கிடந்த அதன் மூதாதையர்களின் பயங்கர அனுபவம் எப்படியோ மேலெழுந்து விட்டது. அதன் உடம்பிலுள்ள தசைநார்களெல்லாம் தாமாகவே துடித்தன. அதன் கழுத்திலும் தோள்களிலும் உள்ள ரோமம் சிலிர்த்தது. பக் மூர்க்கமாகச் சீறிக்கொண்டு துள்ளிக் குதித்தது. அதைச் சுற்றியிருந்த உறைபனி நாலாபக்கமும் தெறித்து விழுந்தது.
பக் துள்ளிக்குதித்து நின்றபோது எதிரில் இருந்த முகாம் அதன் கண்ணில் பட்டது. அப்பொழுதுதான் அதற்குத் தான் இருக்குமிடம் எதுவென்று புலனாயிற்று. மானுவெலோடு வெளியே புறப்பட்டது முதல் பனியிலே குழிதோண்டிப் படுத்தது வரை நடந்த நிகழ்ச்சி களெல்லாம் அதன் நினைவிற்கு வந்தன.
பக்கைப் பார்த்ததும் பிரான்சுவா உரக்கக் கூவினான். “இந்தப் பக் சீக்கிரம் எல்லாம் பழகிக்கொள்ளும் என்று நான் சொன்னது சரிதானே?” என்று அவன் பெரோல்ட்டைக் கேட்டான்.
பெரோல்ட் தலையை அசைத்து ஆமோதித்தான். கனடா அரசாங்கத்தின் முக்கியமான கடிதங்களை எடுத்துச்செல்கின்றவன் என்ற முறையிலே நல்ல நாய்களைத் தேடிப்பிடிக்க வேண்டுமென்று அவன் கவலை கொண்டிருந்தான். பக் கிடைத்ததைப் பற்றி அவனுக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி.
ஒருமணி நேரத்திற்குள்ளே மேலும் மூன்று எஸ்கிமோ நாய்கள் அந்தக் கோஷ்டியில் சேர்க்கப்படவே மொத்தம் ஒன்பது நாய்களாயின. கால் மணியிலே அவற்றிற்கெல்லாம் வார்ப்பட்டை களால் சேணம் போட்டாயிற்று. அவைகள் டையேகானன் என்ற இடத்தை நோக்கி உறைபனிப்பாதையிலே சறுக்கு வண்டியை இழுத்துக்கொண்டு புறப்பட்டன. அந்த இடத்தைவிட்டுப் போவதில் பக்குக்கு மகிழ்ச்சிதான். வண்டி இழுப்பது கடினமாக இருந்தாலும் அதை அவ்வளவாக வெறுக்கவில்லை. அந்தக் கோஷ்டியிலிருந்த நாய்களிடையே உற்சாகமும் ஆவலும் காணப்பட்டன; பக்குக்கும் அவை தாமாகவே ஏற்பட்டன. டேவ், ஸோலெக்ஸ் இரண்டும் இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டதைக் கண்டு பக் ஆச்சரியமுற்றது. சேணமணிந்தவுடன் அவை புதுநாய்களாக ஆகிவிட்டன. யாதொரு தொந்தரவுமில்லாமலும், எதையும் கவனிக்காமலும் தனியாகக் கிடக்க வேண்டுமென்ற அவற்றின் விருப்பமெல்லாம் மறைந்துவிட்டது. அவைகளுக்குச் சுறுசுறுப்பும் வேலையில் ஆர்வமும் வந்துவிட்டன. வண்டி இழுப்பதிலே ஏதாவது இடைஞ்சலோ, தாமதமோ ஏற்பட்டால் அவை சினமடையும். உறை பனிப்பாதையிலே சறுக்குவண்டி இழுத்துச்செல்வதுதான் அவற்றின் வாழ்க்கையின் நோக்கம் போலவும், அந்தப் பனியிலேதான் அவற்றிற்கு இன்பம் போலவும் தோன்றின.
சறுக்குவண்டியில் பூட்டியிருந்த வரிசையில் டேவ்தான் எல்லா நாய்களுக்கும் பின்னால் இருந்தது; அதற்கு முன்னால் பக். அதற்கு முன்னால் ஸோலெக்ஸ்; எல்லாவற்றிற்கும் முன்னால் தலைமை ஸ்தானத்தில் ஸ்பிட்ஸ்.
பக்கைப் பழக்குவதற்காகவே டேவுக்கும் ஸோலெக்ஸுக்கும் மத்தியில் அதைப் பூட்டினார்கள். பக் நல்ல மாணவன். டேவும், ஸோலெக்ஸும் கற்றுக்கொடுப்பதில் தேர்ந்தவை. பக் தவறு செய்யும்போதெல்லாம் தமது கூரிய பற்களால் கண்டித்து அவை அதைப் பழக்கின. டேவ் நியாயமுள்ளது; நல்ல அறிவும் வாய்ந்தது. காரணமில்லாமல் அது தண்டிக்காது; அவசியமான இடத்தில் தண்டிக்காமலும் விடாது. டேவிற்குப் பக்கபலமாகப் பிரான்சுவாவின் சாட்டையும் அதன் வேலையைச் செய்தது. ஆதலால் எதிர்த்துப் போராடுவதைவிடத் தன்னைத் திருத்திக் கொள்வதே நல்லது என்று பக் கண்டு கொண்டது. ஒரு தடவை ஓரிடத்திலே சறுக்குவண்டி கொஞ்ச நேரம் தயங்கிய போது வண்டியை இழுக்கப் பயன்படும் அள்ளைவார்களான திராஸ் வார்களில் பக் சிக்கலாக மாட்டிக்கொண்டது. அதனால் புறப்படுவதற்குத் தாமதமாயிற்று. டேவும், ஸோலெக்ஸும் பக்கின் மேல் பாய்ந்து நல்ல தண்டனை வழங்கின. அதனால் இன்னும் சிக்கல் அதிகமாயிற்று. ஆனால் அது முதல் திராஸ் வார்களை ஒழுங்காக வைக்கப் பக் கற்றுக்கொண்டது. அந்த நாள் முடிவதற்குள் பக் தனது பணியை மிக நன்றாகப் பழகிக் கொண்டதால் தண்டனைக்குரிய சந்தர்ப்பங்கள் குறைந்துவிட்டன. பிரான்சுவாவின் சாட்டைவீச்சும் ஓயலாயிற்று. அன்றைய வேலை முடிந்தவுடன் பெரோல்ட் பக்கின் கால்களைத் தூக்கிக் காயமேற்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்துப் பார்த்தான். நன்றாக வேலை செய்யும் நாய்க்குத்தான் இந்த மரியாதை கிடைக்கும்.
நாள் முழுவதும் கடினமான ஓட்டம். உறைந்த ஆறுகளைத் தாண்டியும், காற்றால் உண்டாக்கப்பட்ட பனிக்கட்டித்திடர்களுக்கு இடையிலுமாகச் செல்லவேண்டியிருந்தது. அவிந்து போன எரிமலைகளின் வாய்களில் சங்கிலித்தொடர்போல் ஏற்பட்டிருந்த பல ஏரிகளைக் கடந்து செல்லவேண்டியிருந்தது. இரவாகிப் பல மணி நேரத்திற்குப் பிறகு பென்னட் ஏரியின் அருகிலே ஒரு பெரிய கூடாரம் அமைத்தார்கள். ஆயிரக்கணக்கான தங்கவேட்டைக்காரர்கள் அந்த இடத்தில் வசந்தகாலத்தை எதிர்பார்த்துப் படகுகள் கட்டிக் கொண்டிருந்தார்கள். நல்ல வேலை செய்து களைத்துப்போயிருந்த பக் பனியிலே ஒரு வளை தோண்டிக் கொண்டு படுத்து நிம்மதியாக உறங்கிற்று. ஆனால் அதிகாலையிலேயே இருட்டு பிரியாத முன்பே நாய்களை அதட்டி எழுப்பி அவற்றிற்கு மீண்டும் சேணம் போட்டார்கள்.
பாதை நன்றாக இருந்ததால் அன்று நாற்பது மைல் போக முடிந்தது. ஆனால் அதற்கு அடுத்த நாளும், அதைத் தொடர்ந்து பல நாட்களும் அவ்வாறு போகமுடியவில்லை. பனிக்கட்டியிலே புதிதாகப் பாதை அமைத்துக்கொண்டு செல்லவேண்டியிருந்தது. அதனால் வண்டி இழுப்பதும் சிரமமாயிற்று. சாதாரணமாக நாய்களுக்கு முன்னால் சென்று அவை சுலபமாகச் செல்லுவதற்குத் தகுந்தவாறு பெரோல்ட் பனியை ஒழுங்குபடுத்துவான். பிரான்சுவா சறுக்குவண்டியிலமர்ந்து அதைச் செலுத்துவான். எப்பொழுதாவது ஒரு சில சமயங்களில் அவர்கள் தங்கள் வேலையை மாற்றிக் கொள்வார்கள். விரைந்து செல்ல வேண்டுமென்று பெரோல்ட் அவசரப்பட்டான். பனிக்கட்டியைப் பற்றி தனக்குள்ள அறிவைக் குறித்து அவன் பெருமை கொள்வதுண்டு. இது போன்ற பிராயணத்திற்கு அந்த அறிவு மிக அவசியம். அந்தச் சமயத்தில் லேசாகத்தான் பனிக்கட்டி விழுந்திருந்தது. வேகமாகத் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்குமிடத்தில் பனிக்கட்டியே இல்லை.
முடிவில்லாமல் பல நாட்கள் பக் உழைத்தது. நன்கு இருட்டிய பிறகேதான் முகாம் போட்டுத் தங்குவார்கள். விடியும் அறிகுறிகள் தென்படும் போதே மறுபடியும் வேலை தொடங்கிவிடும். இருட்டிலே கூடாரமடித்த பின்பு நாய்களுக்கு மீன் துண்டுகள் உணவாகக் கிடைக்கும். அவற்றைத் தின்றுவிட்டு அவை பனியிலே வளை தோண்டிப் படுத்துறங்கும். பக்கிற்கு அடக்க முடியாத பசி. சூரிய வெப்பத்தில் உலர்த்திய ஒன்றரை ராத்தல் மீன் அதற்குத் தினமும் உணவாகக் கிடைத்தது. வயிற்றுக்குள்ளே அது மாயமாக மறைந்துவிடும். போதுமான உணவு கிடைக்காததால் அது சதா பசியால் வாடியது. மற்ற நாய்களில் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு ராத்தல் மீன்தான் கிடைத்தது. இருந்தாலும் அந்த நாய்களின் பருமனும் எடையும் குறைவாகையாலும், அந்த மாதிரி வாழ்க்கைக்காகவே அவை பிறந்தவையாகையாலும் அந்த உணவைக் கொண்டே அவை இளைக்காமல் நல்ல நிலையில் இருந்தன.
நாகரிகமாகச் சுவை தேர்ந்து சாப்பிடும் பழைய வழக்கத்தை பக் விரைவில் இழந்துவிட்டது. அது மெதுவாக உணவைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மற்ற நாய்களெல்லாம் விரைவிலே தங்கள் பங்கை முடித்துவிட்டு அதன் பங்கிலே திருடத் தொடங்கின. இதைத் தடுக்க முடியவில்லை. ஏதாவது இரண்டு மூன்று நாய்களோடு சண்டையிட்டுத் துரத்துவதற்குள் மற்ற நாய்கள் அதன் உணவைக் கொள்ளையிட்டுவிடும். அதனால் பக்கும் மற்ற நாய்களைப் போல் வேகமாகச் சாப்பிடலாயிற்று. பசியின் தூண்டுதலால் அதுவும் தனக்குச் சொந்தமில்லாத உணவைத் திருடவும் தயங்கவில்லை. அது மற்ற நாய்களைக் கவனித்துப் பார்த்துப் பழகிக் கொண்டது. புதிய நாய்களில் ஒன்றான பைக் திருடுவதில் சாமர்த்தியமுள்ளது. பெரோல்ட் ஏமாந்திருக்கும் சமயம் பார்த்து அது ஒரு துண்டு பன்றி இறைச்சியைத் தந்திரமாகத் திருடிக்கொண்டதைப் பக் பார்த்தது. அந்த நாயின் வழியைப் பின்பற்றி அடுத்த நாள் பக் ஒரு பெரிய துண்டையே திருடிவிட்டது. அதைக்குறித்து முகாமில் ஒரே அமர்க்களம் ஏற்பட்டது. ஆனால் யாரும் பக்கைச் சந்தேகிக்கவில்லை. டப் என்ற பெயருடைய நாய் தடுமாற்றத்தால் ஏதாவது தவறு செய்து அகப்பட்டுக்கொள்ளும். பக் திருடியதற்காக டப் அன்று தண்டனை பெற்றது.
குளிர் மிகுந்த அந்த வடக்குப் பனிப் பிரதேசத்திலே பிழைப்பதற்குப் பக் தகுதி உடையதுதான் என்பது அதன் முதல் திருட்டிலேயே வெளியாயிற்று. மாறுகின்ற நிலைமைக்குத்தக்கவாறு அனுசரித்து நடந்து கொள்ள அதற்குத் திறமையிருந்தது. அந்தத் திறமையில்லா விட்டால் விரைவிலே சாவு நிச்சயம். ஆனால் அதன் நல்லொழுக்கம் சிதறுண்டது. அந்தக் கொடிய வாழ்க்கைப் போராட்டத்திலே நல்லொழுக்கமே ஒரு குறைபாடாகத் தோன்றியது. பிறருடைய உடைமையை அபகரிக்கக்கூடாது என்பதும், பிறருடைய உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதும் அன்பும் தோழமையும் ஆட்சி செய்யும் தெற்குப்பிரதேசத்திலே சரிப்படும்; ஆனால் கோரைப்பல்லும் குறுந்தடியும் ஆட்சி செலுத்தும் வடக்குப் பனிப் பிரதேசத்திலே அவற்றைக் கருதுபவன் முட்டாளாக வேண்டும்; அவன் முன்னேறி வாழ முடியாது.
பக் இவற்றையெல்லாம் சிந்தித்து முடிவு செய்யவில்லை. தன்னை அறியாமலேயே அது புதுமுறை வாழ்க்கைக்கு ஏற்றவாறு தன்னைத் தகுதியாக்கிக்கொண்டது. வாழ்க்கையிலே அது முன்பெல்லாம் சண்டைக்குப் பயந்து ஓடியதில்லை. ஆனால் சிவப்பு மேலங்கிக்காரனுடைய அடி அதற்குப் புதியதொரு தருமத்தைக் கற்றுத்தந்தது. நாகரிக வாழ்க்கையிலே அது ஞாயத்திற்காகப் போராடி உயிர் விடவும் தயாராக இருக்கும். ஆனால் இப்பொழுது தனக்கேற்படும் துன்பத்தைத் தவிர்ப்பதற்காக அது ஞாயத்தைக் கவனிக்காமல் ஓடத் தயாராக இருந்தது. திருடுவதிலே அதற்கு மகிழ்ச்சியில்லை; ஆனால் அதன் வயிறு காய்ந்தது. வயிற்றின் கொடுமையைத் தாங்க முடியவில்லை. குறுந்தடிக்கும் கோரைப்பல்லுக்கும் அஞ்சி அது வெளிப்படையாகத் திருடாமல், தந்திரமாகவும் ரகசியமாகவும் திருடிற்று. இந்தக் காரியங்களை யெல்லாம் செய்து அங்கு வாழ்வது சுலபம். செய்யாமல் வாழ்வதுதான் கடினம். அதனாலேயே பக் அவற்றில் ஈடுபட்டது.
இப்படியாக பக்கின் முன்னேற்றம் (அல்லது பிற்போக்கு) வேகமாக நடைபெற்றது. அதன் தசைநார்கள் எஃகு போல வலுவடைந்துவிட்டன. சாதாரணமான வலியெல்லாம் அதற்குத் தோன்றாதவாறு அதன் உடம்பு மரத்துப்போய்விட்டது. எதிலும் சிக்கனமாக இருக்க அது தெரிந்து கொண்டது. ஏதாவது ஒரு பண்டம் எத்தனை அருவருக்கத்தக்கதாக இருந்தாலும், ஜீரணிக்க முடியாததாக இருந்தாலும் அது தின்னத் தயங்கவில்லை. அப்படித் தின்றவுடன் அதன் வயிற்றில் சுரக்கும் ஜீரணநீர்கள் எப்படியோ அதிலிருந்து கிடைக்கக் கூடிய ஒருசிறு உணவுச் சத்தையும் விடாமற் கவரலாயின. அந்தச் சத்தை உடம்பின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் கொண்டு சென்றது; உறுதிமிக்க திசுக்கள் உடம்பிலே உருவாயின. பார்வையும் மோப்பம் பிடிக்கும் திறனும் மிகக் கூர்மையாகி விட்டன. உறக்க நிலையிலேகூட மிகச் சிறிய சத்தமும் அதற்குக் கேட்கும்படி செவிப்புலனும் அவ்வளவு நுட்பமாகிவிட்டது. சத்தத்தைக் கேட்கும் பொழுதே அதனால் தீங்கு ஏற்படுமா அல்லது நன்மை விளையுமா என்று கூடக் கண்டு பிடிக்கத் தெரிந்து கொண்டது. கால்விரல்களுக்கிடையிலே பனிக்கட்டி கோர்த்துக் கொள்ளும் போது வாயால் அதைக் கடித்துத் தள்ளவும் அது கற்றுக்கொண்டது. தாகமெடுத்தால் நீர்நிலைக்கு மேலே மூடியுள்ள பனிக்கட்டியைத் தனது முன்னங்கால்களால் இடித்துத் தள்ளிவிட்டுத் தண்ணீர் குடிக்கவும் அது பழகிக்கொண்டது. காற்றை மோப்பம் பிடித்து ஓர் இரவுக்கு முன்னதாகவே பின்னால் ஏற்படும் காலநிலைமையைப் பற்றித் தெரிந்து கொள்ளும் சக்தி அதற்குத் தனிச்சிறப்பாக அமைந்தது. அது இரவு நேரத்திலே எந்த இடத்தில் வளை தோண்டிப் படுத்தாலும் அந்த வளை காற்றடிக்கும் திசையிலிருந்து ஒதுங்கவே இருக்கும். வளை தோண்டும் போது காற்று கொஞ்சம் கூட அடிக்காமலிருந்தாலும் பின்னால் வரப்போகும் காற்றின் திசையை அது சரியாகத் தெரிந்துகொள்ளும்.
அனுபவத்தால் மட்டும் அது எல்லாம் கற்றுக் கொள்ளவில்லை. அதற்குள்ளே மறைந்து போனவை போலக் கிடந்த இயல்பூக்கங்கள் மறுபடியும் உயிர்பெற்றன. மனிதனோடு பழகி நாகரிக வாழ்க்கை நடத்திய அதன் முன்னோர்களின் வாழ்க்கைமுறை அதனிடமிருந்து மறையலாயிற்று. ஆதி காலத்திலே கானகத்திலே கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து தங்கள் இரையைத் தேடிய அந்தக் காட்டு நாய்களின் வாழ்க்கை முறையின் வாசனை மெதுவாக அதற்கு நினைவிற்கு வந்தது. ஓநாய் போலத் தாக்குவதையும், திரும்பி ஓடுவதையும் கற்றுக்கொள்வது அதற்குப் பெரிய காரியமல்ல. மறந்து போன அதன் ஆதிமூதாதைகள் இப்படித்தான் சண்டையிட்டன. பாரம்பரியமாகப் பதிந்திருந்த இந்தப் பழைய வாழ்க்கைமுறையும், பழைய தந்திரங்களும் முயற்சியில்லாமலேயே மேலெழுந்தன. குளிர் மிகுந்த அமைதியான இரவுகளில் நட்சத்திரங்களை நோக்கிக் கொண்டு ஓநாயைப் போலப்பக் ஊளையிடும் போதெல்லாம், பல நூற்றாண்டு களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்து மண்ணாய்ப்போன அதன் மூதாதைகளே அதன் மூலமாக ஊளையிட்டன. அதன் குரலிலே அந்தச் சமயத்தில் தொனிக்கும் உணர்ச்சிகளெல்லாம் அதன் மூதாதைகள் குளிரையும் இருட்டையும் கண்டு பட்ட துன்பத்தின் உணர்ச்சிகளேயாகும்.
வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம் என்பதற்கு அறிகுறியாக பண்டைக்காலப் பழமை உணர்ச்சிகள் அதற்குள்ளே பொங்கி எழுந்தன. பக் பழைய பூர்வீக வாழ்க்கை நிலையை எய்திற்று. வடக்குப் பனிப்பிரதேசத்திலே தங்கம் கிடைப்பதை மக்கள் அறிந்தனர். தோட்டக்காரனுக்கு உதவியாகப் பணி செய்த மானுவெலின் கூலி அவன் மனைவியையும், பிள்ளை குட்டிகளையும் காப்பாற்றப் போதுமானதாக இல்லை. இந்தக் காரணங்களின் விளைவாய் பக்கின் வாழ்க்கையில் இத்தகைய மாறுதல் ஏற்பட்டது.
[1] டையே என்பது ஸ்நாக்வேக்கு வடமேற்கில் உள்ளது. அங்கிருந்துதான் உறைபனிப் பாதையில் டாஸனுக்குப் புறப்படுவார்கள். டாஸனுக்கு வேண்டிய பொருள்களும் அங்கிருந்தே செல்லும்
[2] ஸ்பிட்ஸ்பர்கன் நாய்
– தொடரும்…
– கானகத்தின் குரல் (நாவல்), ”The Call of the Wild” by Jack London, ஜாக் லண்டன், தமிழில்: பெ.தூரன், முதற் பதிப்பு: 1958, பதிப்பு: 2000, புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை.