(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“நாளைக்குத் தீபாவளி” என்று தலையைச் சொரிந்தான் குப்புலிங்கம்.
“ஆமாம், அதற்கென்ன இப்போது?”என்று அன்பையும் அஹிம்ஸையையும் சற்றே மறந்து கேட்டார், காந்திஜியின் படத்திற்கு அருகே விளக்கேற்றி வைத்து விட்டுப் பண்பே உருவாய் நின்றுகொண்டிருந்த தோல் மண்டிதுளசிங்கராயர்.
“ஒன்றுமில்லை…..”
“என்ன ஒன்றுமில்லை? இதோ பாரும் போதுமென்ற மனந்தான் பொன் செய்யும் மருந்து!”
“உண்மைதான்; ஆனால் ஒன்று…..”
“என்ன ஆனால் ஒன்று?”
“வயிறு போதுமென்று சொல்லாதவரை மனம் போதுமென்று சொல்லாது போலிருக்கிறதே!”
“அதற்காகக் கடன்வாங்கித் தீபாவளி கொண்டாட வேண்டுமா, என்ன?”
“இல்லை……”
“இல்லையாவது, கில்லையாவது! வாழ்க்கையில் எளிமை வேண்டும் ஐயா, எளிமை வேண்டும். அதுமட்டும் போதாது மனிதனுக்கு; சொல்லில் சத்தியம் வேண்டும்; செய்கையில் தூய்மை வேண்டும்; நடத்தையில் ஒழுக்கம் வேண்டும்-எல்லாவற்றுக்கும் மேலாக எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி வேண்டும். இதைத்தான்காந்தி மகாத்மா அன்று சொன்னார்; இன்று நான் சொல்கிறேன் – உதாரணத்துக்கு வேண்டுமானால் என்னைப் பாரும்; மேலே ஒரு துண்டு, கீழே ஒரு துண்டு – இவற்றைத் தவிர வேறு ஏதாவது நான் அணிந்திருக்கிறேனா?”
“இல்லை……”
“ஒரே ஒரு கெடில்லாக் காரைத் தவிர வேறு கார் ஏதாவது வைத்துக் கொண்டிருக்கிறேனா?” “இல்லை……”
“உள்ளுரிலும் ஊட்டியிலும் இருக்கும் இரண்டு பங்களாக்களைத் தவிர வேறு பங்களாக்கள் ஏதாவது உண்டா?”
‘ஊஹூம்……”
“வேளைக்கு ஒரு பவுண்டு ஓட்ஸ் சாதம், தாகத்துக்கு நாலே டம்ளர் ஆரஞ்சுஜூஸ், சிற்றுண்டிக்கு கொஞ்சம் நிலக்கடலை, குடிக்க இரண்டே டம்ளர் வெள்ளாட்டுப் பால் இவற்றைத் தவிர வேறு ஆகாரம் ஏதாவது நான் அருந்துவதுண்டா?”
“ஏது?”
“காந்தியடிகளின் ‘பிரம்மசரியத்தை நீருந்தான் படித்தீர்; நானும்தான் படித்தேன்-ஆனால் முதல் தாரம் இறந்ததும் நீர் இரண்டாந்தாரம் கல்யாணம் செய்து கொண்டீர்; நான் அப்படிச் செய்து கொண்டேனா?”
“கிடையாது!”
“உமக்காவது நாலு குழந்தைகள் இருக்கின்றன; எனக்கு ஒரு குழந்தையாவது உண்டா?”
“கிடையவே கிடையாது!”
“அப்படியிருக்கும்போது நீயும் என்னைப் போலவே ஏன் ஐயா, எளிமையாயிருக்கக்கூடாது?”
“இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத்தான் இருக்கிறது; எல்லாவற்றுக்கும் கொடுத்துவைக்க வேண்டுமே!”
“அதென்னய்யா, அது! எளிமையாயிருக்கக் கூடக் கொடுத்துவைக்க வேண்டும், என்ன?”
“அவசியம் கொடுத்துவைக்க வேண்டும். கூத்தாடி வேண்டுமானால் பிழைப்புக்காக ராஜா வேஷம் போடலாம்; ராஜாவே ராஜாவேஷம் போட்டால் நன்றாயிருக்குமா?”நான்தான் பிறக்கும் போதே ஏழையாய்ப் பிறந்து எளிமையிலேயே வளர்ந்துவிட்டேனே!”
“நல்ல ஆளைய்யா, நீர்! எளிமையாயிருக்கக் கூடப் பணக்காரனாய்ப் பிறக்க வேண்டும் என்கிறீரே?…… ம்…… அதையுந்தான் பார்த்து விடுகிறேனே, நாளைக்கு! போய் வாரும்; நீர் ஆடம்பரமாக தீபாவளி கொண்டாட என்னால் ‘அட்வான்ஸ்’ கொடுக்க முடியாது!”
“அதற்கு வரவில்லை……”
“பின் எதற்கு வந்தீர்?”
“தீபாவளிக்குத் தீபாவளி ஊர்க்குழந்தைகளுக்கெல்லாம் பட்டாசு வாங்கிக் கொடுப்பீர்களே என்று வந்தேன்!”
“ஒ, அதுவா இதை முதலிலேயே சொல்லியிருக்கக் கூடாதா? இந்தாரும், இதை எடுத்துக் கொண்டுபோய் வழக்கம் போல் வாங்கவேண்டிய பட்டாசை வாங்கிக் கொண்டு வாரும்!” என்று நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டினார் துளசிங்கராயர்,
குப்புலிங்கம் அதை வாங்கிக் கொண்டு, “நாளைக்கு ஒருவசவு மிச்சம்!” என்ற மகிழ்ச்சியுடன் வெளியே வந்தான். அவனுடைய தலை மறைந்ததும் ராயர் கண்களை இறுக மூடிக்கொண்டு, காந்தி மகான் படத்தை நோக்கிக் கை கூப்பிய வண்ணம்,
“வாழ்க நீ எம்மான், இந்த
வையத்து நாட்டிலெல்லாம்……”
என்று வாய்விட்டுப் பாடி, மனம் விட்டுத் துதிக்க ஆரம்பித்துவிட்டார். தெருமுழுவதும் எதிரொலி செய்த அவருடைய குரலைக்கேட்டுக் காந்திஜீயைப் பற்றி நினைக்க நேரமில்லாதவர்கள் கூட நினைத்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
கான்அப்துல் கபார்கானை ‘எல்லைப் புறகாந்தி’ என்றால் தோல் மண்டி துளசிங்கராயரை ‘எங்கள் ஊர்க்காந்தி’ என்று சொல்ல வேண்டும் அவ்வளவு தூரம் எங்களுடைய அன்புக்குப் பாத்திரமாகியிருந்தார் அவர். அதேமாதிரி நாங்களும் அவருடைய அன்புக்குப் பாத்திரங்களாகியிருந்தோமா என்றால், அதுவேறு விஷயம். அந்த விஷயத்தை விளக்க அவருடைய ‘பொன் மொழி’ ஒன்றை இங்கே சொன்னால் போதுமென்று நினைக்கின்றேன்:
“ஏழைக்கு என்ன ஐயா, கேடு? அவன் ஓசியிலேயே எவ்வளவு அன்பு வேண்டுமானாலும் காட்டி விடலாம். நான் அன்பு காட்ட வேண்டுமென்றால் காசிலல்லவா கை வைக்க வேண்டியிருக்கிறது”
இந்தப் “பொன் மொழி” எங்களில் சிலருக்குப் ‘புன் மொழியாகப் பட்டாலும். அதற்காக எங்களால் அவரைக் கைவிட முடியவில்லை. காரணம், நாங்கள் குடியிருந்த வீடுளெல்லாம் சட்டப்படி-அதாவது, கடவுளுக்கு விரோதமான மனிதனின் சட்டப்படி-அவருடைய அண்ணாவுக்குச் சொந்தமானவையாயும், வேலை செய்து வந்த மில்களெல்லாம் அவருடைய தம்பிக்குச் சொந்தமானவையாயும் இருந்து வந்ததுதான்!
இப்பொழுதாவது தெரிகிறதா? – எங்களுடைய அன்புக்கு அவர் பாத்திரமாகியிருந்தார், அவருடைய அன்புக்கு நாங்கள் ஏன் பாத்திரமாகவில்லை என்று?”
எது எப்படியிருந்தாலும் காந்திமகான் விட்டுச் சென்ற அந்த ‘மோகனப் புன்னகை’ மட்டும் ‘எங்கள் ஊர்க்காந்தி’ யிடந்தான் இருந்தது. அதைக்கொண்டு அறியாமை நிறைந்த இந்த உலகத்தில் அவர் சாதித்துக் கொண்ட காரியங்கள் எத்தனை எத்தனையோ?”
அவற்றில் ஒரே காரியம்தான் எங்களில் யாருக்குமே புரியாமல் இருந்தது. அதாவது கல்லாப்பெட்டிக்கு அருகே உட்கார்ந்திருக்கும் அவர், தம் பார்வையை அடிக்கடி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாகத் திருப்பிக் கொண்டே இருப்பார்; திடீரென்று சிரிப்பார்; சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு வாயின்மேல் விரலைவைத்து, ‘ஸ், ஸ்’ என்று யாரையோ விரட்டுவது போல் விரட்டுவார். இத்தனைக்கும் நாம் பார்க்கும்போது அவருக்கு எதிரேயாரும் இருக்க மாட்டார்கள்!
தாம் விற்கும் தோல்கள்கூட ஆடு மாடுகளைக் கொன்று குவித்து எடுத்த தோல்களல்ல, இயற்கை மரணம் எய்திய பின் எடுத்த தோல்கள் அவை என்று சொல்லும் அந்த உத்தமர், அந்த புண்ணிய புருஷர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று தெரியாமல் நாங்கள் நீண்ட நாட்களாக விழித்துக் கொண்டிருந்தோம்; கடைசியாக ஒரு நாள் குமாஸ்தா குப்புலிங்கத்தை இதற்கென்றே பேட்டி கண்டு விசாரித்தோம்.
“நீங்கள் ஒன்று-அவர் ஈ ஓட்டியிருப்பார்; அதைப் பிரமாதப் படுத்துகிறீர்களே!” என்று அந்த மனுஷன் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டான்.
அப்படிப் பட்டவன், அன்றிரவு நான் வேலையிலிருந்து திரும்பும் போது என்னைத் தானாகவே கூப்பிட்டான். “என்ன குப்புலிங்கம், இந்த வருஷமும் ஊர்க்குழந்தைகளுக்குத் தீபாவளி பட்டாசு உண்டோ, இல்லையோ” என்று கேட்டுக்கொண்டே நான் அவனை நெருங்கினேன்.
“உண்டு, நிச்சயம் உண்டு; ஆனால் ஊர்க் குழந்தைகள் என்று சொன்னிர்களே-அதைத்தான் மாற்றிக் கொள்ள வேண்டும்!” என்று எனக்கு முன்னால் திடீரென்று ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டான் அவன்.
“ஏன், என்ன விஷயம்?”என்று பரபரப்புடன் விசாரித்தேன். அந்தச் சமயத்தில், “ஆமாம் போங்கள் இன்னும் எத்தனை வருஷங்கள்தான் நம் வீட்டுக் குழந்தைகள் ‘ஊர்க்குழந்தை’ களாயிருப்பதாம்?” என்று கொஞ்சும் பெண் குரலொன்று என் காதில் விழுந்தது.
அதைத் தொடர்ந்து, “பெரிய மனுஷன், பண்பாடு மிக்கவன் என்று பெயர் எடுக்க வேண்டுமென்றால் சும்மாவா?”என்ற ஆண் குரலொன்றும் கேட்டது.
நான் திடுக்கிட்டேன்-கலகலவென்ற சிரிப்பொலி எழுந்தது.
ஒன்றும் புரியாமல் குப்புலிங்கத்தைப் பார்த்தேன். திறந்த ஜன்னல் ஒன்றைச் சுட்டிக் காட்டிவிட்டு, அவன் எடுத்தான் ஓட்டம்.
நான் எட்டிப் பார்த்தேன்-என்ன ஆச்சரியம்!உள்ளே ஏழெட்டுப் பெண்களுக்கு நடுவே ‘எங்கள் ஊர்க்காந்தி எழுந்தருளியிருந்தார்; மேலே ஒரு துண்டும் கீழே ஒரு துண்டும் வழக்கமாக இருக்கும் பாருங்கள். அவற்றைக்கூட மறந்து அவர் எளிமையின் உச்சிக்கே போய் வாய்மையையும் தூய்மையையும், பண்பையும் பாரம்பரியத்தையும் அங்கே வளர்த்துக் கொண்டிருந்தார்!
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.