காத்திருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 8,836 
 
 

கடற்கரையில் அலைந்து கொண்டிருந்தேன். எத்தனை காலமாகி விட்டது இப்படி ஏகாந்தமாக கடற்கரையில் அலைவது. எப்படி வந்தேன் இங்கே? எங்கே யார் அழைத்து வந்தார்கள்? ஒன்றும் புரியவில்லை. இதுவரை எவ்வளவு நேரமாயிற்று? ஏன் பசிக்கவே இல்லை? எந்த கேள்விக்கும் விடை தர ஆளில்லை. அவரவர் கடல் அலைகளில் குழந்தைகுட்டிகளுடன் அலையில் கால் நனைத்து விளையாடுகிறார்கள். பார்த்து எத்தனை நாளாயிற்று. எனக்கும் அப்படி வாழத்தான் ஆசையாக இருந்தது. ஹூம் , எல்லாம் விதி. எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லை.

திடீர் என்று காவல் துறை வாகனங்களின் ஒலி. சாலையே பரபரப்பாயிற்று. ஓ. நான் கடற்கரையில் இருப்பது தெரிந்து அழைத்துச் செல்ல வந்திருப்பார்கள். என்னைப் பார்த்தால் குனிந்துபோலியாக பவ்யம் காட்டிக் கும்பிடும் கூட்டத்தை விட்டு விலகி நிற்பது கூட மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் மனிதக் குருதி குடித்த புலி போல அதிகாரத்தைக் குடித்து விட்டதுதான் எல்லாவற்றிற்கும் காரணமாயிற்று. அந்த சுவைக்கு எத்தனை சதிகள், அலைச்சல், துன்பங்கள்.

சரி அங்கே ஒரே கூட்டமாக இருக்கிறதே என்னவென்று பார்ப்போம் என்று நடக்கிறேன். ஏதோ மௌன ஊர்வலம். பெரிய பெரிய கருப்புக் கொடிகள். பலர் முகத்தில் சோகம். சிலர் முகத்தில் சோகத்தை மீறிய மகிழ்ச்சி. பெரிய எழுத்தில் எகப்பட்ட பதாகைகளில் கருப்பு எழுத்துக்கள் கண்ணீர் அஞ்சலி செய்தன. எங்கும் மௌனம். பதாகையை பார்த்ததும் திடுக்கிட்டேன். என்ன இதுஅக்கிரமம்?

நான் இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளாம். என்ன வேடிக்கை இது, இங்கே நான் குத்துக் கல்லாக இருக்க. குரலெடுத்துக் கத்துகிறேன், “அட முட்டாள்களா நான் உயிரோடு இருக்கிறேன்”. என்ன இது, யாரும் என் குரலை கேட்டதாக காட்டிக் கொள்ளவில்லை.

அஞ்சலி நிகழ்வை நடத்துவது யார் என்று பார்த்தால், ஆச்சரியம். என் கூட இருந்தவர்கள்தான். அவர்கள் பேசுவதைக் கேட்க அவர்களுடனேயே நடக்க என்னைப் பற்றிய அவர்கள் எண்ணங்கள் பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஆகா என்னைச் சுற்றி நடப்பது உண்மையா அல்லது கனவா? கிள்ளிப் பார்த்துக் கொள்ள உடலைக் காணவில்லையே. இன்னம் அதிகமாகக் குழப்பம்.

வீட்டிற்குப் போனால்,தெரியும் என்னை எல்லாருக்கும் அடையாளம் தெரியும். எண்ணிய வேகத்தில் வீட்டிற்கு வந்தால், வீட்டில் நான் வளர்த்த நாய்கள் கூட குரைத்துத் துரத்தின. மனிதர்கள், நான் பணியாட்களை விளிக்க யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. ஏதோ மர்மமாக இருக்கிறது என்பது மட்டுமே புரிந்தது. என் தனியறையில் ஆளுயரக் கண்ணாடி ஒன்று இருக்கும் அதில்தான் என்னை தினமும் காண்பேன். அறைக்குள் நுழைந்து கண்ணாடியைப் பார்த்தால், யாரது? இது சத்தியமாக நானில்லை. ஏதோ நிறங்கள் வட்ட வட்டமாய் மாறி மாறித் தெரிகிறதே. கண்ணாடி கூட எனக்கு விசுவாசமாயில்லையா?

எதோ என்னைப் பற்றி யாரோ உரத்த குரலில் பேசுகிறார்கள். எனக்கு நினைவு மண்டபம் கட்ட ஏன் தாமதம் என்று. யாரோ சிலர் வாய் பொத்திச் சிரிக்கிறார்கள். என்ன ஆயிற்று எனக்கு? ஒன்றுமே விளங்கவில்லை.

மீண்டும் கடற்கரைக்கு வந்து காலாற சிந்தித்தபடி நடக்க, என்னது? என் பெயர் போட்டு நினைவிடம் என்று உள்ளதே. அருகே சென்றால் கட்டணம் வசூலித்து உள்ளே அனுப்புகிறார்களே . கையில் காசு வேறு இல்லை. ஆனால் யாரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அருகே வந்தால் எதோ இழுக்க என்னுடல் சவப் பெட்டிக்குள், புதைக்கப்பட்ட நிலையில். சரி. ஒன்று செய்யலாம் உடலுக்குள் நுழைந்து விடலாமா?

முயன்று பார்ப்போம் என்றால் முடியவில்லை. கால் கட்டை விரல்களைச் சேர்த்துக் கட்டி வழியடைத்து விட்டனரே. கண்ணீர் மல்க கடற்கரையில் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தேனோ தெரியவில்லை. எல்லா ஆட்டபாட்டங்களும் அடங்கி இருள் சூழ ஆரம்பித்தது. இப்படி ஒரு தனிமை வாய்த்தது ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் பயமாயிருந்தது.

சுற்றி வைக்கப்பட்ட கயிற்றுக் குன்றில் சாய்ந்தபடி “ஓ” என்று கூச்சலிட்டபடி ஓடி வரும் அலைகளைப் பார்த்தவண்ணம் சிதறிக் கிடந்த நினைவுகளை கோர்வைப் படுத்த ஆரம்பித்தேன். முடியவில்லை. துண்டு துண்டாக தொடர்பு படுத்த முயன்றதில் தோற்றுப் போனேன். அழுகை வந்தது. இடிச் சிரிப்பு, கந்தல் கந்தலாக அழுக்குப் பிடித்த உடை. எண்ணைய் காணாத சடைப்பிடித்த முடி இந்தக் கோலத்தில் வந்த மனிதனை பார்த்த எனக்கு பயமாக இல்லை. சட்டென அவர் மடியில் படுத்து அழ ஆரம்பித்தேன். “அழாதே. இப்போது என்ன நடந்து விட்டது, நீ அழுவதற்கு” என்றவரிடம் என் குழப்பத்தைக் கூற, மீண்டும் இடிச் சிரிப்பு.

“ப்பூ. இவ்வளவுதானா, நீ உன்னை அறிய என்னிடம் வந்தாய் குழந்தாய்”.

“உங்களை எப்படிக் கூப்பிட வேண்டும்”?

“நைனா என்று நான் அன்போடு எல்லோரையும் அழைப்பேன். நீ என்னை விரும்பினால் அப்படியே அழைகலாம் மகளே”

“ நைனா, நான் இறந்து விட்டேனா”?

“ இன்னும் இல்லை என்றுதான் சொல்லுவேன்”

“அப்படியானால், நான் அதிகாரத்தில் இருந்த போது கும்பிட்டுத் தொழுதவர்கள் இப்போது என் இருப்பை உணரவில்லையே”?

“ஓ. அப்படியா. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. ஆன்மா என்ற பொருளில் சொன்னேன் நைனா”

“ நான் பெண்ணல்லவா”?

“ஆன்மாவிற்கு பால் பேதம் இல்லை மகளே”

“சரி. அப்போது என்னை எப்படி நைனா நீங்கள் மகளே என்று சொல்கிறீர்கள்”?

“நல்ல வினா, இதுவரை நம் உரையாடலில் நான் என்றுதானே உன்னை சொல்லிக் கொண்டிருந்தாய். அதை விட்டு விட்டு வந்த பின் உன்னை அப்படிக் கூப்பிட மாட்டேன். முதலில் உன் பழைய நினைவுகளைக் களையலாம். ஆன்மாவிற்கு பாம்பு சட்டையை உரிப்பது போல்தான் பிறப்பு. புதிய பிறப்புக்கு முன் சில செய்திகளை நீ அறிய வேண்டியுள்ளது.என்னுடன் பயணிக்க தயாரா”?

“ சரி. வழிகாட்டுங்கள்”

“என் கையைப் பற்றிக் கொள். எனக்கு அந்த ஈசன் இட்ட பணி செய்யப் போக வேண்டும்”.

அந்த அழுக்கு மேனியிலிருந்தும்,சடைப்பிடித்த தலையிலிருந்தும் இதுவரை அறிந்திராத அபூர்வ நறுமணம் வீசுவதை அனுபவித்துக் கொண்டே வந்தேன்.

“ இந்த இடம் ஏதோ மீனவர் குடியிருப்பு போல இருக்கிறதே நைனா”

“ஆம். நீ பசியாக இருப்பாய். உனது இந்த உடலற்ற சூக்கும நிலையில் பிறர் உண்பதைப் பார்த்தாலே பசி நீங்கி விடும்”.

“ அந்த மண்டபத்தில் உட்கார். நடப்பதைக் கவனி”.

அந்த மண்சட்டியை தன் முன் வைத்து உட்கார்ந்தார். வந்த மீனவப் பெண்மணி, “சாமி, ராவையில் சாப்பிடாமக் கொள்ளாம எங்க பூட்ட. சூடா மீன் கொயம்பு வச்சிருந்தேன். இப்ப சாப்பிடறயா”?

“கொண்டு வா. அந்த சட்டியில் ஊத்திட்டுப் போ நைனா”

“ சாப்பிடாம இருக்கிறவங்களை வரிசையா உட்காரச் சொல்லு”.

“ அடுத்த சிறிது நேரத்தில் கிட்டத்தட்ட ஐம்பது பேர்கள் வந்து விட்டனர்.

“ மற்றொரு பெண்மணியை அழைத்து பழைய சோற்றை மீன் குழம்பில் பிசைந்து அவர்கள் இலையில் பரிமாறச் சொன்னார். வரிசையில் அமர்ந்தவர்கள் இலைகளில் சூடான மீன் குழம்புச் சோறு. வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பிராமணர் மீன் குழம்பு என்பதை உணர்ந்து தயங்க, “நைனா, நீ எதை நினைக்கிறாயோ அதுதான் இலையில் வரும் , நல்லா சாப்பிடு” என்றார்.

அந்த பிராமணர் இலையில் கத்தரிகாய் சாம்பார் சாதம் சுடச்சுட.

என்ன அற்புதம். நம்ப முடியவில்லையே.

“ நைனா, இது புழல் காவாங்கரையில் உள்ள என் ஜீவ சமாதி. என்னை சட்டிச் சித்தர் என்பார்கள். நான் எந்த அற்புதமும் செய்யவில்லை. அந்த ஈசன் இட்ட கட்டளையை நிறைவேற்றுகிறேன். அவ்வளவுதான். இந்தப் பித்தனுக்கு இந்த அட்சய பாத்திரம் சப்த கன்னிகைகள் மூலம் கிடைத்தது. உன் முற் பிறவி ஒன்றில் மணிமேகலை என்ற பெயருடன் காவிரிப் பூம் பட்டிணத்தில் பிறந்து பசிப்பிணி போக்கிய அருந்தவச் செல்வியாக இருந்தாய். கடந்த பிறவியில் அதன் பலனாக அரச வாழ்வு உனக்கு வாய்த்தது. உன் மறுமைக்கு வழிகாட்ட ஈசனின் கட்டளையின் பேரில் சமாதியிலிருந்து வெளிப்பட்டு வழிகாட்ட வந்தேன். இந்த சட்டி வெறும் மண் சட்டியில்லை. அட்சய பாத்திரம். இன்னும் சிறிது காலத்தில் நீ மறுபடி பிறப்பாய். அப்படி பிறக்கும் போது எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்க இந்தப் பாத்திரம் உன்னிடம் வந்து சேரும். அதுவரை காற்றைப் போல் அலைந்து கொண்டுதான் இருக்க வேண்டும். இந்த இடைக்காலம் முடியும் போது வடலூருக்கு சென்று விடு. வள்ளலார் உன் மாயப் பிறவிச் சுழலில் இருந்து மீட்டு உன்னைக் கரை சேர்ப்பார். ஈசனை மனதாற நினைக்கும் போது நான் தோன்றி வழிகாட்டுவேன். சிவாய நமக” என்று அவர் சொல்லி மறையவும், மீண்டும் கடற்கரையில் இலக்கின்றி அலைந்து கொண்டிருக்கிறேன். மறு பிறவிக்கான அழைப்பு இன்னும் வரவில்லை. ஆனால் மனதில் அதிகார மமதையோ, ஆசையோ, குழப்பமோ எதுவும் இல்லை. கீழ் வானில் கதிரவன் வர ஏதோ நினைவு ஊர்வலம் வருகிறது. பதாகையில் என் முற்பிறவிப் படத்துடன் 25 ஆவது ஆண்டு நினைவு நாள் என்று எழுதியிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *