அத்தியாயம்-3 | அத்தியாயம்-4
இதுதான் தியாகம் என்பதா?
அடுத்து என்ன செய்வது என்று அதிகாரிகள், நிபுணர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள். ஒவ்வொருவர் ஒவ்வொரு ஆலோசனை வழங்கினார்கள். வெளியே சிறுவர்களைக் கொண்டு வருவது என்பது இலகுவான காரியமாகத் தெரியவில்லை. சாதகமான பாதகமான எல்லாவற்றையும் குழுவினர் விவாதித்தார்கள். அதன்படி வெளியே அவர்களைக் கொண்டு வருவதற்கு மூன்று விதமான வழிகள் இருந்தன. ஒன்று அவர்களை தண்ணீருக்கடியில் பத்திரமாகக் கவசங்களுடன் மூழ்கச் செய்து வெளியே கொண்டு வருவது. இரண்டாவது தேங்கி நிற்கும் தண்ணீரை விரைவாக வெளியேற்றி அதன் பின் அவர்களை வெளியே கொண்டு வருவது, மூன்றாவது அவர்கள் இருக்கும் இடத்திற்குப் பெரிய துளைபோட்டு அதன் மூலம் அவர்களை வெளியே கொண்டு வருவது. பருவமழை தொடர்ந்தும் பெய்வதால் இவர்களைக் காப்பாற்றுவதில் பெரிய தடங்கள் இருப்பதாகத் தெரிந்தது. பதின் மூன்று பேரும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற செய்தி சர்வதேசத்திற்கும் அறிவிக்கப்பட்டதால், விரைவாகவும் அதே நேரத்தில் புத்திசாலித் தனமாகவும் அவர்கள் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.
அடுத்த வாரம் இன்னும் அதிகமாக மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்ப்பு இருந்தது. மழை பெய்தால் மீண்டும் தண்ணீர் மட்டம் உள்ளே உயரலாம். அங்கே நின்ற தன்னார்வத் தொண்டர்கள் எல்லோரும் ஏதாவது வகையில் இவர்களுக்கு உதவி செய்ய முன்வந்தார்கள்.
யூலை மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை, தண்ணீர் இறைக்கும் யந்திரங்கள் பல கொண்டுவரப்பட்டு குகைக்குள் இருந்த தண்ணீரை வெளியேற்றும் முயற்சி ஒரு பக்கம் நடைபெற்றது. தண்ணீர் மட்டம் குறைந்தால் சிறுவர்களை வெளியேற்ம் திட்டம் இலகுவாக நடப்பதற்குச் சாத்தியம் இருந்தது.
சுமார் 120 மில்லியன் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தன்னார்வத் தொண்டர்களாக வந்த இனம்தெரியாத ஒரு குழுவினர் தண்ணீர் இறைக்கும் இயந்திரத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து குகைக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரை விரைவாக வெளியேற்றும் முயற்சியில் தாங்களும் ஈடுபட்டார்கள். இரவு நேரம் யந்திரங்கள் தண்ணீரை வெளியேற்றிக் கொண்டிருந்தன. இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர்கள் களைத்துப் போனதால், இருந்த இடத்திலேயே அயர்ந்து தூங்கிவிட்டார்கள். திடீரென வாசலை மூடியிருந்த நீர் மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது. தற்செயலாக அங்கே வந்த அதிகாரி ஒருவர் இதை அவதானித்து விட்டு என்ன நடக்கிறது என்று அருகே சென்று பார்த்தால் தண்ணீர் வெளியேற்றப் படுவதற்குப் பதிலாக உள்ளே பாய்ச்சப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. யந்திரங்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும், யாரும் அங்கே இருக்கவில்லை, உடனடியாக அந்த நீர்இறைக்கும் யந்திரத்தை நிறுத்திவிட்டு விசாரித்த போது யாரும் அதற்கு உரிமை கோரவில்லை.
அப்படியானால் யாரோ விசமிகளின் வேலையாக இருக்கலாம் என்பது தெரிய வந்தது. வேடிக்கைக்குச் செய்ததாக இருந்தாலும், சிறுவர்கள் உயிருக்குப் போராடும் போது இப்படியும் யாராவது விசமத் தனம் பண்ணுவார்களா? அந்தக் காட்டுப் பன்றிகள் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் உயிரோடு வெளியே வந்தால், யாருக்காவது அதனால் தடங்கல் ஏற்படுமா? அப்படியானால் யார் அவர்கள்? விளையாட்டை விளையாட்டாகத்தானே எடுக்க வேண்டும் என்பதை அந்த விசமிகள் ஏன் உணரவில்லையோ தெரியவில்லை?
யூலை மாதம் 5 ஆம் திகதி புதன்கிழமை, அதிகாரிகள் அந்தப் பிரச்சனையைப் பெரிதாக்க விரும்பவில்லை. இன்னும் அதிகமாக மழை பெய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதில் அவர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள். இனி அங்கே எடுக்கும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகளின் சம்மதத்துடன்தான் மேற்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை முதலில் விடுத்தார்கள்.
குகைக்குள் பிராணவாயு போதாமையால் செயற்கை முறையில் குழாய்கள் மூலமாக பிராணவாயு செலுத்தினார்கள். சிறுவர்கள் அகப்பட்டிருந்த தூரம் சுமார் இரண்டரை மைல்களாக இருந்தது. நீண்ட தூரத்திற்குக் கொண்டு போகமுடியாததால் கொள்கலன்கள் மூலம் சுழியோடக் கூடிய அனுபவம் கொண்ட தன்னார்வத் தொண்டர்கள் சில கொள்கலன்களைச் சிறுவர்கள் இருக்கும் இடத்திற்குச் சுழியோடிச் சுமார் 100 அடி தூரத்தைத் தண்ணீருக்குள்ளால் கடந்து கொண்டு சென்று கொடுத்தார்கள். குகைக்குள் அகப்பட்ட சிறுவர்களுக்கு உதவுவதற்காகப் பலர் தன்னார்வத் தொண்டர்களாக முன்வந்தார்கள்.
யூலை மாதம் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, விமான நிலையத்தில் பாதுகாப்புக் காவலராகப் பணிபுரிந்த முப்பத்தி ஏழு வயதான சமன் குணன் (Saman Kunan) என்பவர் செய்தியை அறிந்ததும் தன்னார்வத் தொண்டராக உதவிக்கு வந்தார். இவர் தாய்லாந்து கடற்படை சுழியோடிகளில் ஒருவராக முன்பு கடமையாற்றியவர். பிராணவாயு அடங்கிய கொள்கலன்களைச் சிறுவர்கள் இருக்கும் இடத்திற்குச் சுழியோடிச் சென்று கொடுத்து விட்டுத் திரும்பி வரும்போது, சமன் குணன் என்ற அந்தத் தன்னார்வத் தொண்டரின் கொள்கலனில் இருந்த பிராணவாயு முடிவடைந்ததால், கலங்கிய சேற்றுத் தண்ணீருக்கு அடியில், வெளியேறமுடியாத நிலையில் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறினார். இதை அவதானித்த அவருடன் கூடச் சென்றவர் அவரை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று முதலுதவி செய்தாலும் முதலுதவி பலனளிக்காமல் அவர் மரணமாகி விட்டார்.
எந்த ஒரு உயிர்ப் பலியும் இல்லாமல் இந்தத் திட்டத்தைக் கவனமாகச் செய்ய முற்பட்ட போது எதிர்பாராமல் இவரது மரணம் மீட்புத் திட்டத்தின் முதற்பலியாக அமைந்து விட்டது.
மற்வர்களின் நல்வாழ்வுக்காகத் தன்னைத் தானே பலியாக்கும் இவரைப் போன்றவர்களின் தியாகங்கள் என்றுமே போற்றி வணங்கப்பட வேண்டியனவாகும். ஆனால் இந்த மரணம் எல்லோர் மனதிலும் ஒரு வித பயத்தையும் கேள்விக்குறி ஒன்றையும் அப்போது எழுப்பி இருந்தது.
சிறுவர்களைத் தண்ணீருக்குள்ளால் கொண்டுவரத் திட்டம் தயாரானபோது, ஊடகவியலாளர் வடிவில் ஒருவர் அதிகாரிகளைப் பார்த்துக் கேட்ட கேள்வி இதுதான். ‘சுழியோடியாகப் பயிற்சி பெற்றவருக்கே இந்த நிலை என்றால் நீச்சலே தெரியாத சிறுவர்களின் கதி என்னவாகும்?’
‘நீங்கள் சில விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு வகையான சுழியோடிகள் இருக்கிறார்கள், ஒன்று சாதாரண திறந்தவெளி நீரில் மூழ்கிச் சுழியோடிப் பயிற்சி பெற்றவர்கள். மற்றது குகைகளில் உள்ள நீரில் மூழ்கிப் பயிற்சி பெற்றவர்கள், இரண்டாவது மிகவும் கடினமான செயலாகும், அதற்காகப் பயிற்சி பெற்றவர்களால் தான் அதைச் செய்ய முடியும்’ என்றான் அவர்களது கேள்விக்குப் பதிலளித்த பென் என்பவன்.
‘அப்போது சமன் குணனுடைய மரணம்?’ சந்தேகத்தோடு ஒரு ஊடகவியலாளர் கேட்டார்.
‘அதுவா, அவருக்கு குகைகளில் உள்ள தண்ணீரில் சுழியோடிப் பழக்கமில்லை. ஆனாலும் உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு செயற்பட்டார். அவரது அளவு கடந்த ஆர்வம் அவருக்கே யமனாக வந்து விட்டது. அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.’
‘நீங்கள் யாரென்று சொல்லலையே?’
‘ஓ மறந்திட்டேன், சொறி.. என்னுடைய பெயர் பென், பெல்ஜியம் நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். குகைத் தண்ணீரில் சுழியோடிய அனுபவம் எனக்குண்டு.’ என்றான் பென்.
‘குகைகளில் உள்ள தண்ணீரில் சுழியோடுவதில் அப்படி என்ன கஸ்டம், எல்லாமே தண்ணீர்தானே?’ என்று ஏதாவது தானும் கேட்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு கேள்வியைத் தொடுத்தார் அங்கே நின்ற ஒரு ஊடகவியலாளர்.
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்க நேரம் போதாமல் இருந்தது.
‘நாங்கள் நல்ல செய்தியோடு மீண்டும் சந்திப்போமே..’ என்று சொல்லி அவர்களிடம் இருந்து விடைபெற்று குகையின் வாசலுக்குச் சென்றான் பென்.
பென் குகை வாசலை நோக்கிச் சென்ற போது, அங்கே குகை வாசலில் இன்னும் இருவர் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்தனர்.
‘உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, ஐயாம் பென், பெல்ஜியத்தில் இருந்து வந்திருக்கிறேன்.’ என்று அவர்களிடம் அறிமுகம் செய்தான் பென்.
‘ஐயாம் றிக் ஸ்ரான்ரன் கீ இஸ் ஜோன் வெலந்தன்’ என்று அங்கு நின்றவர்களில் ஒருவர் அறிமுகம் செய்தார்.
‘தெரியுமே, நீங்கதான் இப்போது உலகமறிந்த கதாநாயகர்கள் ஆகிவிட்டீர்களே!’ என்றான் பென்.
வாசலில் நின்றவர்கள் முக்கிய அதிகாரிகளாக இருக்கலாம், ஆளுக்காள் ஒவ்வொரு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்கள். உள்ளே அகப்பட்ட சிறுவர்களுக்கு நீச்சலடிக்கத் தெரியாததும் ஒரு குறைபாடாகவே இருந்தது. வெளியே கொண்டு வருவதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அதிகாரிகள் பயம் கொண்டிருந்தனர்.
இத் திட்டங்களில் எதுவும் சரிவராவிட்டால் மொன்சூன் காலம் முடியம்வரை, அதாவது இன்னும் மூன்று மாதங்களுக்காவது அவர்கள் தனிமையில் குகை வாசம் செய்யவேண்டி வரலாம். எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும், மனநிலை பாதிப்படையாமல் அவர்கள் சீக்கிரம் வெளியே வரவேண்டும் என்பதே எல்லோரின் பிரார்த்தனையாகவும் இருந்தது.
எந்தவொரு முடிவும் எடுக்க முடியாமல் நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மொன்சூன் மழையின் தாக்கம் இன்னும் ஒரு வாரத்தில் அதிகமாக இருக்கலாம் எனக் காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை செய்தது! இந்த எச்சரிக்கை குகைக்குள்ளே அகப்பட்டிருந்த சிறுவர்களின் ஒவ்வொரு பெற்றோரின் மனதிலும் ‘என் மகனுக்கு என்னவாகும்?’ என்ற பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே காலதாமதம் செய்யாது சிறுவர்களைத் தண்ணீருக்குள்ளால் வெளியே கொண்டு வருவது என்று அதிகாரிகள் ஒன்று கூடி முடிவெடுத்தார்கள்.
யூலை மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை, சிறுவர்களை தண்ணீருக்குள்ளால் பிராணவாயு குழாய்களைப் பொருத்தி வெளியே கொண்டு வருவது, சிறுவர்களுக்குப் பாதுகாப்பானது அல்ல என்று இத்திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரி வெளியிட்ட செய்தி பெற்றோரை மிகவும் கவலை அடைய வைத்தது. இதன் காரணமாக அவர் பெற்றோரிடம் அவசரமாக மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
யூலை மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சிறுவர்களை மீட்கும் பணி ஆரம்பமானது. ஹொலிகொப்டரும், ஆம்புலன்சும் தயார் நிலையில் வெளியே இருந்தன. சுமார் 90 சுழியோடிகள் இந்த மீட்புப் பணிக்கு உதவியாக இருந்தார்கள்.
ஆனாலும் 13 வெளிநாட்டு சுழியோடிகளும், 6 தாய்லாந்து சுழியோடிகளுமாக மொத்தம் 19 சுழியோடிகள் மட்டும்தான் சிறுவர்களை வெளியே கொண்டு வரும் கடினமான இந்த மீட்புப் பணிக்காகத் தெரிவு செய்யப்பட்டனர். சிறுவர்கள் பத்து நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால் நீராகாரம்தான் முதலில் கொடுத்திருந்தார்கள். இந்த மீட்புப் பணியில் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல சிறுவர்களின் மனவாரோக்கியமும் ஒத்துழைக்க வேண்டும். முக்கியமாக மிகவும் ஒடுங்கிய ஓடைக்குள்ளால் சுமார் நூறு அடிகள்வரை முகக்கவசம் அணிந்து சேற்றுத் தண்ணீருக்குள்ளால் சுழியோட வேண்டும். சில இடங்களில் உயிர்வளி சிலிண்டரோடு நுழைய முடியாது. எனவே பயிற்றப்பட்ட சுழியோடி முன்னாலும் இன்னுமொரு பழக்கப்பட்ட சுழியோடி பின்னாலும் சிறுவனைத் தொடர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
சிறுவர்களுக்கோ நீந்தத் தெரியாது. எனவே முகக்கவசம் அணிந்த அவர்களை முன்னால் செல்பவர் தண்ணீருக்குள்ளால் இழுத்துத் தான் செல்ல வேண்டும். பின்னால் செல்பவர் சிறுவனுக்குப் பாதுகாப்பாகத் தள்ளிக்கொண்டு செல்ல வேண்டும். இதையெல்லாம் கடந்து சிறு தவறு நடந்தாலும் உயிராபத்து ஏற்படலாம். அப்படி ஏதாவது நடந்தால் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். தண்ணீரைக் கடந்து வந்தால் உயரமான மேட்டில் ஏறி இறங்க வேண்டும். பலவீனமான சிறுவர்களால் முடியுமா என்பது தெரியவில்லை. தொடர்ந்து இருட்டுக்குள் இருந்தவர்களின் கண் பார்வை திடீரென வெளிச்சத்தைப் பார்த்தால் பாதிக்கப்படலாம்.
தங்கள் உறவுகளைக் கண்டால் சிறுவர்கள் உணர்ச்சி வசப்படலாம், நடந்ததற்காகப் பெற்றோர்கள் ஏசுவார்களோ என்ற உளரீதியான பயம் ஏற்படலாம். இப்படி எத்தனையோ பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம்.
நல்லபடியாக எல்லாம் நடந்து முடிந்தாலும் ஆயிரம் கேள்வி கேட்க வேலையற்ற சிலர் இதற்காகவே காத்திருப்பார்கள். விமர்சிப்பதற்கு என்றே காத்திருக்கும் இவர்களை எல்லாம் எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும்.
மனிதர்கள் படும் அவலத்தை, சிறுவர்களின் பரிதவிப்பை, இயற்கை புரிந்து கொண்டதால், மழை ஓரளவு ஓய்ந்திருந்தது. ஏற்கனவே தன்னார்வத் தொண்டர்கள் திட்டமிட்டுச் செயற்பட்டதால், குகைக்குள் தேங்கியிருந்த தண்ணீரும் கணிசமான அளவு வெளியேற்றப் பட்டிருந்தது. என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு சென்ற படியால் சுழியோடிகள் சற்றும் தாமதிக்காது சிறுவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர்
சிறுவர்கள் தங்கியிருந்த இடத்தைக் குழுவினர் அடைந்ததும், எல்லோரையும் ஒரே முறையில் வெளியேற்ற முடியாதாகையால் அவசரமாக யாரை வெளியேற்ற வேண்டுமோ அவர்களை மட்டும் தெரிவு செய்தனர். முதலில் அந்தச் சிறுவர்களுக்கு தேவையான மருந்தைக் கொடுத்து (anti-anxiety pills) அவர்களுக்குப் பாதுகாப்பாக முகக்கவசம் அணிவித்தனர்.
அதன்பின் காவுபடுக்கையில் அவர்களைப் படுக்க வைத்த சுழியோடிகள் அவர்களைத் தேவையான இடங்களில் தண்ணீருக்குள்ளாலும், ஏனைய இடங்களில் சுமந்து கொண்டும் வெளியே கொண்டு வந்தார்கள். இத்தனை தடைகளையும் கடந்து முதலில் நாலு சிறுவர்களைக் கவனமாக வெளியே கொண்டு வந்து உடனடியாகவே வைத்திய சாலைக்கு அன்புலன்ஸ் வண்டியில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.
யூலை மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை, அதே முறையைப் பின்பற்றிச் சுழியோடிகள் மேலும் நான்கு சிறுவர்களை வெளியே கொண்டு வந்தார்கள். வைத்தியரின் அறிவுறுத்தலின் படி அவர்களில் மிகவும் பலவீனமாக இருந்த ஒரு சிறுவனை மட்டும் வெளியே கொண்டு வந்ததும் ஹெலிகொப்டரில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
கலங்கிய சேற்றுத் தண்ணீரில் மூழ்கிச் செல்வது என்பது மிகவும் கடினமான காரியமாகும். அதனால்தான் குகைகளில் சுழியோடக் கூடிய அனுபவம் கொண்டவர்கள் ஒரு சிலரே துணிந்து உதவி செய்ய முன்வந்தார்கள். அவர்களுக்குச் சிறுவர்கள் இருந்த இடத்தை, சுமார் இரண்டரை மைல் நீளமான குகைப் பாதையைக் கடந்து செல்ல ஆறுமணி நேரம் எடுத்தது, அதேபோல திரும்பி வருவதற்கும் ஆறுமணி நேரம் எடுத்தது. அனுபவப்பட்ட அவர்களே களைத்துப் போயிருந்தனர். எனவே எட்டுச் சிறுவர்களை வெளியேற்றியதுடன் தற்காலிகமாக மீட்புப்பணி நடவடிக்கை அன்று நிறுத்தி வைக்கப்பட்டது. யார்யாரை முதலில் வெளியே கொண்டு வந்தார்கள் என்பது அப்போது வெளியே சொல்லப் படவில்லை.
எட்டுச் சிறுவர்களை வெளியே கொண்டு வந்த நிலையில், அந்தச் சிறுவர்கள் யார்யாரென்று தெரியாததால், வெளியே நின்ற பெற்றோரின் தவிப்பு மேலும் அதிகரித்தது. அன்றைய மீட்புப் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டதால் என்ன நடக்கிறது, மீட்புப் பணியை ஏன் நிறுத்தினார்கள் என்பதெல்லாம் தெரியாததால், பலவிதமான சந்தேகங்களும் கேள்விகளும் பெற்றோரின் மனதில் எழுந்தது. ஏனைய ஐவரும் உயிரோடு இருக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் மக்களிடையே கிளப்பியது.
மிகுதி ஐவரையும் எப்படி வெளியே கொண்டு வருவது என்பதில் தாமதம் ஏற்பட்டது. சுழியோடிகள் களைத்துப் போயிருந்தார்கள். அனுபவம் வாய்ந்த அவர்களின் சேவை முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட்டதால், அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக மீட்புப் பணி மறுநாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டது. அவர்களும் மனிதர்கள்தானே, ஆனாலும் தங்கள் இலட்சியத்தை அவர்கள் கைவிடவில்லை. அவர்களின் சிந்தனை எல்லாம் மிகுதிச் சிறுவர்களை மறுநாள் எப்படி வெளியே கொண்டு வருவது என்பதில்தான் இருந்தது.
யூலை மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, அதிகாலை எல்லோரும் பரபரப்பானார்கள். செய்தியை உடனுக்குடன் அறிவிக்கத் தொடர்பு சாதனங்கள் எல்லாம் காத்திருந்தன. வெளிநாட்டு பிரபலமான தொடர்பு சாதனங்களின் பிரதிநிதிகள் எல்லோரும் ஆவலோடு மீட்புப் பணியாட்களின் வரவுக்காகக் குகைவாசலில் காத்திருந்தார்கள். திடீரென வானத்தில் மெல்லிய கோடாய் மின்னலடித்து, வானம் கறுத்து மேகம் முட்டி நின்றது. பயங்கர இடியோசை ஒன்று குகை வாசலில் நின்றவர்களை அதிர வைத்தது. மழை வேண்டும் என்று இதுவரை காலமும் பிரார்த்தித்தவர்கள்கூட இன்று மழையே வேண்டாம் என்று பிரார்த்திக்கத் தொடங்கினார்கள்.
உள்ளே அகப்பட்டு இருப்பது வெறும் சிறுவர்கள் அல்ல, ஒவ்வொருவரின் குழந்தைகள் என்றே எல்லோரும் எண்ணினார்கள். அவர்களின் பிரார்த்தனை வீண்போக வில்லை, சற்று நேரத்தில் சாதுவான மழைத் தூறலுடன் மேகக்கூட்டங்கள் விலகிச் சென்றன.
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் வண்டியில் வந்து குகை வாசலில் இறங்கினார்கள். அவர்கள் யார், என்ன இனம், என்ன நிறம், என்ன மதம் என்று ஒருவர்கூட மனதளவில் சிந்திக்கவில்லை. எல்லோருடைய பார்வையிலும் மனித உருவத்தில் வந்த கடவுளின் தூதுவர்களாகவே அவர்களைப் பார்த்தார்கள். மீட்புப்பணி மீண்டும் தொடர்ந்தது.
உள்ளே சென்றவர்களுக்காக எல்லோரும் வாசலில் காத்திருந்தார்கள். பெற்றோரும் உறவினர்களும் மட்டுமல்ல தொடர்பு சாதனங்களைச் சேர்ந்தவர்களும் மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.
தோழியுடன் வந்திருந்த அவள் சோர்ந்துபோய் எதுவும் பேசாமல் குகை வாசலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனநிலையைப் புரிந்து கொள்ளாத காற்று அவளது கூந்தலுடன் விளையாடி அவ்வப்போது அவளது அழகிய முகத்தை மறைத்த வண்ணமிருந்தது. அவளோ அதைக் கவனத்தில் கொள்ளாது அவ்வப்போது தன்னிச்சையாகக் கூந்தலை ஒதுக்கி விட்டபடி ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந்தாள்.
‘ஏன்டி லலிஸா மௌனமாய் இருக்கிறாய், என்ன என்று சொல்லேண்டி?’ என்றாள் தோழி.
‘இல்லை ஒன்றுமில்லையே!’ என்றாள் லலிஸா.
‘இல்லை, ஏதோ இருக்கு எவ்வளவு கலகலப்பாக இருக்கும் நீயா இப்படி மௌனமாய் இருக்கிறாய் என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கு, என்னாச்சு சொல்லு’ என்று பிடிவாதமாகக் கேட்டாள் தோழி.
‘சொல்றேன், ஆனால் யார் கிட்டவும் சொல்லக்கூடாது, சரியா?’
அவள் பீடிகை போட, என்னவாக இருக்கும் என்று ஆச்சரியத்தோடு அவளை விழித்தாள் தோழி
சற்றுத் தயக்கத்தோடு லலிஸா தனது செல்லிடபேசியை எடுத்து அதிலே இருந்த ஒரு இளைஞனின் படத்தைத் தோழிக்குக் காட்டினாள்.
‘என்னடி சொல்லுறாய், இவனா?;’ அந்தப் படத்தைப் பார்த்ததும் தோழி ஆச்சரியமாய் அவளைப் பார்த்தாள்.
லலிஸாவின் முகத்தில் மெல்லிய வெட்கப்புன்னகை ஒன்று துளிர்த்தது.
‘இது எப்ப தொடக்கம் நடக்குது, ஏண்டி எனக்குச் சொல்லவில்லை?’
‘அவன் என்னோட அடிக்கடி அன்பாய் பேசுவான், நட்பாகத்தான் இருந்தோம், ஆனால் இங்கே வந்து அகப்படுவதற்கு முதல் நாள் இரவு பேசும் போதுதான் தனது காதலை அவன் வெளிப்படுத்தினான்’ என்றாள் லலிஸா.
‘நீ என்னடி சொன்னாய்?’
‘எனக்கும் அவனைப் பிடிக்கும், ஆனால்..!’
‘வெட்கமாக்கும், சரி, பரவாயில்லை விடு’
‘லலிஸா என்றால் ‘கடவுள் தந்த பரிசு’ என்று சொன்னான்’
‘அதுதான் உன் பெயருக்கான அர்த்தமா, அதற்கென்ன இப்போ..?’
‘ஒன்றுமில்லை, ஆனால் ‘கடவுள் தனக்குத் தந்த பரிசு’ என்று சொன்னான்டி!’
‘அப்படியா..?’ அப்பாவி போலக் கேட்டாள் தோழி.
‘அவன் என்னிடம் கேட்டபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது. அதனாலே என்ன சொல்வது என்று தெரியாமல் நான் மௌனமாயிட்டேன்’ என்றவள் விம்மி விம்மி அழுதாள்.
‘பேசாமல் இருடி, எல்லோரும் எங்களைப் பார்க்கிறாங்க’ என்றாள் தோழி.
லலிஸா கைக்குட்டையால் கண்களை ஒற்றிக் கொண்டாள்.
‘நீ என்னைக் கட்டாயப் படுத்தி இங்கே அழைத்து வந்தபோது, உண்மையிலே இவங்கமீது இரக்கப்பட்டுத்தான் வந்தாய் என்று நினைத்தேன், ஆனால் இப்படி ஒரு சங்கதி இருக்கிறது என்பது இப்போது தானே தெரிகின்றது!’ என்றாள் தோழி.
வெளிப்படையாக எதையும் சொல்ல முடியாமல் வெட்கம் தடுத்ததில் வார்த்தைகள் மௌனிக்கவே, லலிஸா ஆதரவு தேடித் தோழியின் கைகளைப் பற்றினாள்.
‘உனக்குத் தெரியுமா லலிஸா, பெண்கள் காதலை வெளிப்படுத்த மூன்று வகையான முறைகளைப் பாவிப்பார்களாம். ஒன்று அதிரடியாக காதலைச் சொல்லி விடுவது, மற்றது மௌனமாகக் காலம் கனியும் போது வெளிப்படுத்துவது, மூன்றாவது வகை மனசுக்குள்ளே பூட்டு வைத்திருப்பது. மூன்றாவது சொல்லாத காதலாக, ஒரு தலைக் காதலாகவே ஏமாற்றத்தில் போய் முடிந்து விடும், புரியுதா?’ என்றாள் தோழி.
‘எனக்கு அவனை ரொம்பப் பிடிச்சிருக்கு, அவன் வருவானா?’ என்றாள் லலிஸா.
‘பயப்படாதேடி, நீங்கள் ஒருவரை ஒருவர் உண்மையிலே விரும்பினால் இறைவன் உங்களைக் கைவிட மாட்டான், நிச்சயமாக உன்னோட அவன் உன்னைத் தேடி வருவான்’ என்று ஆறுதல் வார்த்தை சொன்னாள் தோழி.
தோழியின் வார்த்தையின் ஆறுதலடைந்த லலிஸா அவன் வருவான் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் குகையின் வாசல் நோக்கி ஆவலுடன் பார்வையைப் பதித்தவள், அவனுக்காக இறைவனிடம் மன்றாடினாள்.
ஒவ்வொருவராகக் குகையின் உள்ளே அகப்பட்டவர்களை மீட்புப் பணியாட்கள் வெளியே கொண்டு வந்தார்கள், கடைசியாகக் காட்டுப்பன்றிகளின் பயிற்றுநரையும் வெளியே கொண்டு வந்தார்கள். சிறுவர்களை உள்ளே அழைத்துச் சென்ற குற்றச்சாட்டு பயிற்றுநர்மீது ஏற்கனவே இருந்தது. பயிற்றுநரும் சிறுவர்களுடன் உள்ளே செல்லாவிட்டால் சிறுவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை குற்றம் சாட்டியவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை. பன்னிரண்டு சிறுவர்களை இத்தனை நாட்களும் ஆபத்தான பயங்கர சூழலில் பாதுகாப்பாக வைத்திருந்த பெருமை அந்தப் பயிற்றுநருக்கே உரியது என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
‘சிறுபிள்ளை வேளாண்மை வீடுவந்து சேராது’ என்று எம்முன்னோர் சொன்னதை அப்போது நினைத்துப் பார்க்க வைத்தது. சிறுவர்கள் தனித்து உள்ளே சென்றிருந்தால் அவர்களுக்கு என்ன நடந்திருக்கும், நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.
குகைக்குள் அகப்பட்ட 12 சிறுவர்களும் பயிற்றுநரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். 16 வயதில் குகைக்குள் அகப்பட்ட நைட் தனது 17 வது வயதில் உயிரோடு வெளியே வந்திருந்தான். மார்க் பலவீனமடைந்திருந்ததால் அவனைத்தான் கடைசியாக மீட்டெடுக்க வேண்டி வந்தது.
உலகக் கிண்ணப் போட்டி நடந்து கொண்டிருந்த இந்த நேரத்தில் 18 நாட்களாக உலகத்தின் கவனத்தை ஈர்த்த தாய்லாந்தில் நடந்த இந்தச் சம்பவம் நல்லபடியாக முடிவுக்கு வந்ததில் உலகமே மகிழ்ந்தது.
லலிஸா ஆவலோடு தன் தோழியையும் அழைத்துக் கொண்டு மறுநாள் மருத்துவ மனைக்குச் சென்றிருந்தாள். போகும் போது மலர்ச்செண்டு ஒன்றையும் வாங்கிச் சென்றாள்.
மருத்துவ மனையில் அவன் தங்கியிருந்த இடத்தைத் தெரிந்து கொண்டு அங்கே சென்றாள். அவனோ கண் விழித்தபடி படுத்திருந்தான். அருகே சென்று காதலனிடம் ஆவலோடு மலர்ச் செண்டை நீட்டி, புன்னகையுடன் ‘கெற் வெல் சூண்’ என்றாள்.
வாடியிருந்த அவனது முகத்தில் எந்தவொரு மாறுதலையும் அவளால் காணமுடியவில்லை. அவளை யார் என்றே தெரியாதது போலப் பார்த்தபடி ‘என்ன இது?’ என்றான் அலட்சியமாக.
காதல் கனவுகளோடு மலர்ச் செண்டை ஆசையாக வாங்கி வந்த அவள் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை. முகத்தில் அறைந்தது போல ஒரு கணம் உறைந்து போய், அதிர்ச்சியில் அப்படியே நின்றவள், மறுகணம் கண்கள் கலங்க மனமுடைந்து விம்மினாள்.
‘இப்படி ஒரு அவமானமா? அதுவும் அவனிடமிருந்தா?’ அவன் திடீரென அவளிடம் நடந்து கொண்ட விதத்தை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தலைக்குள் ஏதோ கிறுகிறுத்தது. அவனாகத்தானே வலிய வந்து அவளிடம் காதலைச் சொன்னான், அப்புறம் ஏன் இப்படி நடந்து கொண்டான்?
அவனையே ஏக்கத்தோடு பார்த்தவளின் முகம், கோபத்தில் மெல்லச் சிவந்தது. அவனை உதாசீனப் படுத்திவிட்டு திரும்பிச் செல்ல வேகமாக அடியெடுத்து வைத்தாள்.
மறுகணம் அவன் கட்டிலில் இருந்து பாய்ந்து இறங்கி வந்து அவளது கையைப்பற்றிக் கொண்டான்.
‘ஏய் லலிஸா நான் உன்னைச் சீண்டிப் பார்க்க வேடிக்கையாகச் சொன்னேன், அதற்கா இப்படி அழுகிறாய்? என்றான்.
அவள் அவனது கைகளை உதறிவிட்டுப் பொய்யாகக் கோபம் காட்டினாள்.
‘மன்னிச்சிடு, நான் உன்னிடம் மனம்விட்டு விரும்பிக் கேட்டபோது, பதிலே சொல்லாமல் இத்தனை நாளாய்க் குகைக்குள் என்னை ஏங்கி ஏங்கி அழவைச்சாயே, அதனால் வந்த கோபம்தான் இது!’ என்றவன், மலர்ச் செண்டில் எழுதியிருந்த வாசகத்தை உரத்துப் படித்தான்.
‘கடவுள் தந்த பரிசு உனக்கே உனக்காக!’ என்ற வாசகம் அதிலே எழுதப்பட்டிருந்தது.
அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அவன் ஆச்சரியமாய் அவளைப் பார்த்தான்.
‘உண்மையாவா?’ அவன் விழி உயர்த்திக் கேட்டான்.
அவர்கள் இருவருக்கும் மட்டுமே அந்த வாசகத்தின் அர்த்தம் தெரிந்ததாக நினைத்துக் கொண்டு சட்டென்று இருவரும் வாய் விட்டுச் சிரித்தனர்.
அங்கு நின்ற அவளது தோழிக்கும் அர்த்தம் தெரிந்ததால், அவர்களின் இந்த மௌன நாடகத்தைப் பார்த்து அவளும் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள்.
பிரிவுத்துயர் கலைந்ததில் இருவரின் முகங்களும் மலர்ந்து விரிந்ததை அவதானித்த அங்கே நின்ற தாதிகளும் அவர்களைத் தனியே விட்டு, மெல்லச் சிரித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினர்.
நாங்கள் நினைப்பது போல எதுவும் நடப்பதில்லை. எதிர்பாராமல் எதுவும், எப்பவும் நடக்கலாம், கூடிய வரை நாங்கள் கவனமாக நடந்து கொண்டால் இயற்கையின் தாக்கத்தில் இருந்து எம்மை ஓரளவு பாதுகாத்துக் கொள்ளலாம். அதையும் மீறி ஏதாவது நடந்தால் விதியின் மீதும் பழியைப் போடலாம்!
எது எப்படி இருந்தாலும், காட்டுப்பன்றிகளின் மீட்புப்பணி நல்லபடியாக நடந்து முடிந்ததில் உலகமே மகிழ்ந்தது!
காட்டுப் பன்றிகள் – பிற்சேர்க்கை:
இந்தக் கதையை ஆகஸ்ட் மாதம் 2018 ஆம் ஆண்டு எழுதியிருந்தேன். தாய்வீடு கனடா இதழில் வெளிவந்திருந்தது. அதன் பின் இக்கதை சார்ந்து நடந்த சில நிகழ்வுகளையும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
நாட்கள் நகர்ந்தன, சற்றும் எதிர்பாராமல், அன்று அதிகாலை மீண்டும் அந்தச் சிறுவர்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினார்கள். ஆன்ரி, அங்கிள் ரெடியா? என்று அவர்களில் ஒருவன் குரல் கொடுத்தான். அவர்களுக்காகக் காத்திருந்த சன்ராவொங், ‘நான் ரெடி’ என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தான். பதின் மூன்று பேரும் வீதி ஒழுங்கைக் கடைப்பிடித்து ஒருவர் பின் ஒருவராகக் குகை இருந்த திசை நோக்கிச் சைக்கிளில் சென்றார்கள். உலகமே அறிந்த அவர்களைப் பார்த்து எங்கே போகிறார்கள் என்று ஊரே ஆச்சரியமாகப் பார்த்தது. மலர்க்கடையில் நிறுத்தி மலர் வளையம் ஒன்று வாங்கினார்கள். குகை வாசலில் இருந்த சமன் குணனின் (Saman Kunan) நினைவுச் சின்னத்தில் மலர் வளையத்தை வைத்துக் கைகூப்பி வணங்கினார்கள்.
‘A hero is someone who has given his or her life to something bigger than oneself’ – Joseph Campbell.
அங்கே எழுதப்பட்டிருந்த வாசகங்களை வாசித்த எல்லோர் கண்களிலும் கண்ணீத் துளிகள் பனித்தன.
‘எம் உயிர் காக்கத் தன் உயிர் தந்த தியாகி சமன் குணன்’
என்று எழுதியது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் பெயர்களையும் ஒவ்வொருவராக எழுதி அங்கிருந்த சுவரில் பதித்தார்கள்.
அன்று குகையில் கையெழுத்துப் போடச் சென்ற சிறுவர்களைக் கல்லறையில் கையெழுத்துப் போடவைத்தது விதி. உயிராபத்தில் இருக்கும் ஒரு குழுவினரைக் காப்பாற்ற அன்று தனிமனிதனான சமன் செய்த அந்தத் தியாகம் தான், ‘தியாகம் என்றால் என்ன?’ என்று புரிந்துணர்வுள்ள எல்லோர் மனதிலும் ஆழமாகப் பதியவைத்தது.
நெஞ்சைவிட்டு என்றுமே அகலாதவர்கள்.
2028 யூன் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ந்து 18 நாட்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்த தாய்லாந்தில் நடந்த இந்த உண்மைச் சம்பவம் என்றுமே மறக்க முடியாததொன்றாகும். யுத்தம் என்ற போர்வையில் எம்மினமும் இதுபோன்ற பல சோதனைகளைக் கடந்து வந்திருந்தது. அதனால்தானோ என்னவோ உலகின் எந்தப் பாகத்தில் அவலம் நடந்தாலும் மனிதாபிமானத்தோடு எங்கள் பார்வை அங்கே திரும்புகின்றது. ஈழத்தமிழர்களுக்கு இதைவிடப் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டதால் தான் அவர்களுக்கு யூலை மாதம் ‘கறுப்புயூலை’ மாதமாகி விட்டது. தாய்லாந்தில் நடந்த இந்த அவலத்தின் போது தகுந்த நேரத்தில் தகவல் கொடுத்த குகைக்குப் பொறுப்பான காவலாளி, உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய பொலீஸ் அதிகாரி, சிறுவர்களுக்கு ஆறுதல் சொல்லித் தனது உணவைப் பங்கிட்டுக் கொடுத்துத் தனது கட்டுப்பாட்டுக்குள் கடைசிவரை, அதாவது 18 நாட்கள் இருண்ட குகைக்குள் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருந்த பயிற்றுநர் Chantawong ஆபத்தான காரியம் என்று தெரிந்தும் துணிவோடு மீட்புப் பணியில் ஈடுபட்டசுழியோடிகள் John Volanthen and Richard Stanton வெளிநாட்டில் இருந்து மீட்புப் பணியில் ஈடுபட மனிதாபிமானத்தோடு துணிந்து வந்து சிறுவர்களை மீட்டெடுத்தவர்கள், தூக்கத்தையும் மறந்து இரவு பகலாகத் திட்டமிட்டு இவர்களை மீட்டெடுத்த மீட்புக் குழுவினர், தாய்லாந்து சுழியோடிகள் எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது உயிரையே தியாகம் செய்த சுழியோடி சமன் குணன் (Saman Kunan) போன்றவர்கள் இச்சந்தர்ப்த்தில் பாராட்டுக்குரியவர்கள். இதில் எங்கேயாவது ஓரிடத்தில் சிறுதவறு நடந்திருந்தாலும் எல்லாமே ஒரு சோக நிகழ்வாக மாறியிருக்கும். அத்தனை உள்ளங்களையும் சோகத்தில் மூழ்க வைத்திருக்கும். நல்லதையே நினைப்போம், நல்லதே நடக்கும்!
இதன் பின் குடியுரிமை இல்லாமல் இருந்த இவர்களில் சில சிறுவர்களுக்கும், இவர்களின் பயிற்றுநருக்கும் தாய்லாந்தின் குடியுரிமை கிடைத்தது. இந்த நிகழ்வு நடந்தபோது, காற்பந்தாட்டக் குழுத் தலைவராக இருந்த டுவாங்பெட் (Duangpht) என்பவர் லண்டன் இங்கிலாந்திற்கு காற்பந்தாட்ட பயிற்சி எடுப்பதற்காகச் சென்றபோது, அங்கே தனது 17வது வயதில் மரணமாகிவிட்டார் என்ற துயரச் செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
(முற்றும்)