காட்டுப் பன்றிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 3,771 
 
 

அத்தியாயம்-2 | அத்தியாயம்-3 | அத்தியாயம்-4

எங்கே அந்தக் காட்டுப் பன்றிகள்?

யூன் மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, பொலீஸார் அங்கே வந்து பார்த்தபோது, பதின்மூன்று சைக்கிள்கள் கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்டிருந்தன. குகைவாசலில் இருந்து சற்றுத் தூரத்தில் உட்பக்கமாக இருந்த அந்த சைக்கிள்கள் அவர்ளுடையதுதானா என்பதை அதிகாரிகள் முதலில் உறுதி செய்ய விரும்பினார்கள். எனவே அங்கே இருந்த காலடித் தடங்களையும், கைரேகை அடையாளங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த போது அது காட்டுப் பன்றிகளுடையதுதான் என்பது உறுதியானது.  

இவர்களுடன் வெளியே செல்லாமல் ஏற்கனவே வீடுவந்து சேர்ந்த சில்லிடம் விசாரித்தனர். ‘எல்லோரும் பொழுது போக்கச் சைக்கிளில் சென்றார்கள், ஆனால் எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை, மலை ஏறவேண்டும் என்று அவர்கள் சொன்னது நினைவிருக்கிறது’ என்று பதிலளித்தான். 

அங்கே வந்த சில பெற்றோரும் அந்தச் சைக்கிள்கள் தங்களுடைய மகன்களுடையதுதான் என்பதை உறுதி செய்தார்கள். அப்படியானால் இந்த வழியாகத்தான் உள்ளே சென்று அவர்கள் குகைக்குள் அகப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.  

எப்படி உள்ளே செல்வது, குகைக்குள் செல்லும் பாதை மழை வெள்ளத்தால் நிரம்பியிருந்தது. காரணம் வழமைபோல் பருவக்காற்றுடன் கூடிய மழை யூன் மாத பிற்பகுதியில் அங்கே ஆரம்பித்திருந்தது. குகைக்குரிய பாதை மேலும் கீழும் நோக்கிச் செல்வதால் தான் பள்ளமான பாதை இருந்த இடமெல்லாம் மழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்தது.  

உடனடியாகத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது. குகைக்கு உள்ளே செல்வதற்கு வேறு ஏதாவது வழிகள் இருக்கிறதா என்று சுற்று வட்டாரமெல்லாம் தாய்லாந்துப் படையினர் தேடினார்கள். விமானப் படையைச் சேர்ந்த ஹொலிகொப்டர் ஒன்று மலைப்பகுதியில் சுற்றித் திரிந்து ஏதாவது வழி கிடைக்கிறதா என்று தேடியது.  

ஹொலி செல்ல முடியாத இடங்கள் எல்லாம் றோன்ஸ்; போன்றவற்றின் மூலம் எல்லா வழிகளிலும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. தாய்லாந்து படையினரும், தன்னார்வத் தொண்டர்களும் ஒன்றிணைந்து தேடுதல் நடத்தினர். ஒடுங்கிய பாதை என்பதால், மழை வெள்ளம் காரணமாக மேற்கொண்டு அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. உள்ளே செல்லும் பாதையை மழை வெள்ளம் மூடியிருந்தது. வெளியே எல்லா இடங்களிலும் தேடியும் சிறுவர்கள் அகப்படாததால், உள்ளேதான் சிறுவர்கள் அகப்பட்டு இருக்கிறார்கள் என்ற அவர்களது நம்பிக்கை வலுத்தது. எனவே அதிகாரிகள் தாமதிக்காமல் கடற்படைச் சுழியோடிகளை வரவழைத்தனர். 

யூன் மாதம் 25 ஆம் திகதி திங்கட்கிழமை, கடற்படை சுழியோடிகள் மழைத் தண்ணீரால் நிரம்பியிருந்த குகையின் வாசல் வழியாகச் சிறுவர்களைத் தேடிச் சென்றனர். கலங்கிய சேற்றுத் தண்ணீர் என்பதால் மேற்கொண்டு அவர்களால் முன்னேற முடியவில்லை. எனவே திரும்பி வந்துவிட்டார்கள். மென்சூன் மழையோ சோவென்று கொட்டிக் கொண்டிருந்தது. மலைப்பகுதி என்பதால் வழிந்து வந்த தண்ணீர் எல்லாம் பள்ளத்தில் இருந்த குகை வாசல் வழியாக உள்ளே நுழைந்து மேலும் பாதையை அடைத்துக் கொண்டது. 

யூன் மாதம் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மழையையும் பொருட்படுத்தாது பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி நல்ல செய்தி கிடைக்காதோ என்ற ஏக்கத்தோடு குகை வாசலில் காத்திருந்தனர். மீண்டும் கடற்படை சுழியோடிகள் முயற்சி செய்தார்கள். குகைப்பாதை இரண்டாகப் பிரியும் இடம் வரை சென்ற சுழியோடிகளால் ஒடுங்கிச் சென்ற பாதை வழியாக மேற்கொண்டு செல்ல முடியவில்லை. அந்தப் பாதையம் தண்ணீரால் நிரம்பி இருந்தது. எனவே இரண்டாம் நாள் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்ததால் அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார்கள். குகைகளில் சுழியோடிய அனுபவம் கடற்படை சுழியோடிகளுக்கு இல்லை என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசித்தனர். 

உள்ளே சென்று தேடவேண்டுமானால் அனுபவப்பட்ட சுழியோடிகள் தேவை என்பதால் அதற்கான ஒழுங்குகளை பொறுப்பான அதிகாரிகள் மேற்கொண்டனர். கடற்படையினரிடம் நவீன கருவிகள் இல்லாததால் வெளிநாட்டின் துணையை நாடினார்கள். எனவே காலதாமதத்தை குறைப்பதற்காக குகைகள் பற்றிய அனுபவம் மிக்க ‘ஸ்கூப்பா டைவிங்’ என்று சொல்லப்படுகின்ற சுழியோடிகள் பிறநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள்.  

யூன் மாதம் 27 ஆம் திகதி புதன்கிழமை, அவசர அழைப்பை ஏற்றுக் கொண்;டு  அமெரிக்க படையைச் சேர்ந்த சுமார் 30 வீரர்கள் தாய்லாந்து விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள். அவர்களுடன் மூன்று பிரித்தானிய சுழியோடிகளும் வந்திருந்தனர். உடனடியாகவே அவர்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதைவிட சீனா, மியான்மர், அவுஸ்ரேலியா, யப்பான் என்று எல்லா நாடுகளும் தாய்லாந்திற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிக்கு வந்தன.  

பெல்ஜியத்தில் இருந்து வந்த பென் என்ற சுழியோடி அங்கே வந்த போது,  குகை வாசலில் இன்னும் இருவர் வாசலில் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருந்ததை அவதானித்தார். 

‘உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, ஐயாம் பென், பெல்லிஜத்தில் இருந்து வந்திருக்கிறேன்.’ என்று அவர்களிடம் தன்னைத்தானே அறிமுகம் செய்தான் பென். 

‘ஐயாம் றிக் ஸ்ரான்ரொன் கீ இஸ் ஜோன் வொலந்தன்’ என்று அங்கு நின்றவர்களில் ஒருவர் அறிமுகம் செய்தார். ஒருவர் தீயணைக்கும் படையிலும், மற்றவர் கணணி செயற்பாட்டு நிபுணராகவும் இருந்தார். 

‘உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி, நாங்கள் ஒன்றாகச் செயற்படுவோம்’ என்று சொல்லி அவர்கள் பிரிந்து சென்றார்கள். தேடுதல் நடத்துவதற்கான ஒழுங்குகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.  

உடனடியாகவே தேடுதல் வேட்டை ஆரம்பித்தாலும், சிறுவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதுகூட நிச்சயப்படுத்த முடியாத நிலையில்தான் குழுக்களாகப் பிரிந்து தேடினார்கள்.  

பிரித்தானியாவில் இருந்து சென்ற அந்த சூழியோடிகள் இருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தண்ணீரால் மூடப்பட்டிருந்த ஒடுங்கிய குகைப் பதைக்கூடாக நீந்திச் சென்று தேடுதல் நடத்தினர். குகைகளில் உள்ள தண்ணீரில் சுழியோடுவது என்பது மிகவும் கடினமானதாகும். சேற்றுத் தண்ணீர் என்றால் எதையுமே பார்க்க முடியாத நிலையில்தான் சுழியோட வேண்டும். வரைபடத்தை அவதானித்தபோது பல இடங்களில் குகை மிகவும் ஒடுக்கமாக இருப்பதையும் அவதானித்தனர். 

குகைப் பாதைகளில் சுழியோடுவது என்பது உயிரைப் பணயம் வைப்பது போன்றது. மண்ணும், சேறும் கலந்த கலங்கிய நீர் என்பதால் எதையும் தண்ணீருக்குள் பார்க்க முடியாது. குகைக்குள் இருட்டு மட்டுமல்ல, சுவாசிக்கப் போதிய பிராணவாயுவும் இல்லை, அதுமட்டுமல்ல பாதை ஒடுங்கி மிகவும் குறுகியதாகவும் இருந்தது. எனவே பழக்கப்பட்டவர்களால்தான் குகைகளில் உள்ள தண்ணீரில் சுழியோட முடியும். அவர்கள் கொண்டு சென்ற பிராணவாயு கொள்கலன் பெரிதாக இருந்ததால் அதனுடன் பிரிந்து செல்லும் ஒடுங்கிய பாதையில் சுழியோட அவர்களால் முடியவில்லை. எனவே அவர்கள் சிறிது தூரம் சென்றுவிட்டு, மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் திரும்பி வந்து விட்டார்கள். 

யூன் மாதம் 28 ஆம் திகதி வியாழக்கிழமை, மழை கொட்டிக் கொண்டிருந்ததால், அதிக மழை வெள்ளம் குகைக்குள் புகுந்து கொண்டது. சேறு கலந்த கலங்கிய தண்ணீரில் சுழியோடுவது கடிமானது என்பதால் மழை விடும் வரையும் காத்திருப்பது நல்லது என்பதால் அன்று தேடுதல் வேட்டையைத் தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். 

குகைப்பாதை இரண்டாகப் பிரிந்து சென்றதால் தொலைந்து போக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு முதலில் வாசலில் இருந்து கயிறுகளைக் கட்டி அதைப் பிடித்துக் கொண்டு உள்ளே செல்லக் கூடியதாகத் தன்னார்வத் தொண்டர்கள் வழி அமைத்துக் கொடுத்தார்கள். 

யூன் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, தொலைந்து போனவர்களின் உறவினர்கள் குகை வாசலுக்கு வந்து வேண்டுதல் நடத்தினர். மழை நிற்க வேண்டும் என்று ஆங்காங்கே பிரார்த்தனைகள் நடைபெற்றன. அரசியல் பிரச்சனையாகி விட்டதால், பிரதம மந்திரி தனது அன்றாட வேலைகளை விட்டு அங்கே வந்து பாதிக்கப் பட்டவர்களின்  உறவினருக்கு நம்பிக்கையை கைவிட வேண்டாம் என்று ஆறுதல் கூறினார். 

யூன் மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை, சிறுவர்கள் தொலைந்து ஒரு வாரமாகி விட்டன. ‘பற்ராயாபீச்’ என்ற உள்ளே இருக்கும் ஓரிடத்தில் இடத்தில் அவர்கள் ஒதுங்கியிருக்கலாம் என்று தேடுதல் குழுவினர் முடிவெடுத்திருந்தனர். எனவே கடற்படை சுழியோடிகள் மீண்டும் அவர்களைத் தேடிச்சென்றனர். கடல் நீரில் சுழியோடி அனுபவப்பட்ட கடற்படை சுழியோடிகளால் குகையில் உள்ள சேற்று நீரில் சுழியோடுவது கடினமாக இருந்தது. குறுகிய பாதையை அவர்களால் கடக்க முடியவில்லை. எனவே பாதிவழியில் தேடுதலைக் கைவிட்டுத் திரும்பி வந்து விட்டார்கள். 

யூலை மாதம் 1 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வெள்ளம் நிரம்பிய குகைக்குள் குறுகிய பாதை வழியாகச் சுழியோட வேண்டும் என்பதால் அதற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தனர். பிராணவாயு கொள்கலன்கள், உணவுப்பொருட்கள், அவசர உதவிக்குத் தேவையான மருந்துகள் போன்றவற்றை பாதி வழிவரை கொண்டு போய் பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்தனர். இனி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்பினர். 

யூலை மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை, பிரித்தானிய சுழியோடிகளின் கணிப்பின்படி ‘பற்ராயாபீச்’ என்ற பெயர் கொண்ட இடத்தில்தான் அவர்கள் ஒதுங்கி இருக்கலாம் என்று நம்பினார்கள். எனவே அவர்கள் அந்த இடத்தைத் தேடிச் சுழியோடிச் சென்றார்கள். ஆனால் பல சிரமங்களுக்கு மத்தியில் அந்த இடத்தை அடைந்து தேடிப் பார்த்தாலும் தொலைந்தவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்பாடல் கருவிகளையும் அவர்கள் கொண்டு சென்றதால், அங்கிருந்தே மேலிடத்திற்குச் சுழியோடிகள் தகவல் தெரிவித்தனர்.  

மேற்கொண்டு செல்ல வேண்டாம், கடும் மழை பெய்வதாலும், அவர்கள் கொண்டு சென்ற பிராணவாயு மட்டு மட்டாக இருந்ததாலும், உடனே திரும்பி வந்து விடும்படி அவர்களுக்குப் பதில் கிடைத்தது.  

ஆனால் உலகத்தின் பார்வை எல்லாம் தங்கள் மீது திரும்பப் போகிறது என்பதை பிரித்தானியாவில் இருந்து வந்திருந்த அவர்கள் இருவரும் அப்போது அறிந்திருக்க வில்லை. எடுத்துக் கொண்ட பொறுப்பில் உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தால் சாதனைகள் தானாகவே தேடி வரும் என்பதற்கு அவர்களின் கடமை உணர்வு, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாமே காரணமாக அமைந்தன.  

சுமார் இரண்டரை மைல் தூரம்வரை அவர்கள் குகைக்குள்ளே வந்திருந்தார்கள். நடந்தும், நகர்ந்தும், நீந்தியும் சுழியோடியும் வந்ததால் களைத்துப் போயிருந்தனர். உள்ளே வந்த அவ்வளவு தூரத்தையும் திரும்பவும் அவர்கள் கடக்க வேண்டும். ஆதிஸ்டம் கிடைக்கவில்லையே என்ற கவலையோடு, திரும்பிச் செல்லுமுன் இருவரும் சற்று நேரம் அங்கே ஓய்வெடுத்தனர். 

‘இவ்வளவு தூரம் தேடி வந்தும் பலன் கிடைக்க வில்லையே, இனி அவர்கள் உயிரோடு இருப்பது சாத்தியமில்லை’ என்று அந்தச் சிறுவர்களை நினைத்துப் பரிதாபப் பட்டனர். 

குகையின் சுவரோரம் சாய்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டிச் சற்று நேரம் ஓய்வெடுத்த சுழியோடிகளில் ஒருவரான வொலந்தனின் கண்களில் தரையில் விழுந்து கிடந்த ஏதோ ஒன்று தட்டுப்பட்டது. தலைக்கவசத்தில் இருந்த விளக்கு வெளிச்சத்தைப் பரப்பியபடி அப்படியே ஊர்ந்து சென்று அந்தப் பொருளைக் கையில் எடுத்தான். அடுத்த கணம் அவனது கண்கள் வியப்பால் விரிந்தன.  

‘ஹாய், ஸ்ரான்ரொன் இங்கேபார்’ என்று நண்பனைக் கூவியழைத்தான். 

ஸ்ரான்ரொன் அருகே வந்து அவனது கையில் இருந்த பொருளை வாங்கிப் பார்த்தான். ‘ஸ்போட்ஸ் பூட்ஸ்’ என்றான் வியப்போடு.  

சிறுவர்கள் அணியும் ஸ்போட்ஸ் பூட்ஸ், இது அவர்களுடையதாகத்தான் இருக்க வேண்டும், அப்படியானால் சிறுவர்கள் இங்கேதான் எங்கேயோ இருக்க வேண்டும். 

‘இங்கே எங்கேயோதான் அருகே அவர்கள் இருக்க வேண்டும், தேடிப்பார்ப்போமா?’ என்றான் வொலந்தன்.  

‘நிச்சயமாக, எனக்கு நம்பிக்கை இருக்கிறது!’ என்றான் ஸ்ரான்ரொன். 

திரும்பிச் செல்வதற்குப் போதுமான பிராணவாயு கொள்கலனில் இருக்கிறதா என்பதைக்கூட மறந்து உற்சாகத்தோடு குரல் கொடுத்தபடி இருவரும் முன்னேறிச் சென்றார்கள். அதிஸ்டம் எங்கேயோ அருகே இருப்பது போன்ற நம்பிக்கை துளிர்க்கவே தொப்பியில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் கால் அடையாளங்களைக் கவனித்தபடி மெல்ல நகர்ந்தார்கள். இடையிடையே எல்லாத் திசை நோக்கியும் குரல் கொடுத்தார்கள்.   

‘இங்கே இருக்கிறோம்’ என்ற சிறுவனின் உடைந்து போன குரல் ஒன்று சற்று உயரமான எதிர் திசையில் இருந்து எதிரொலித்தது.  

வெலந்தனால் நம்பமுடியாமல் இருந்தது, கனவா நனவா என்று ஒரு கணம் சிந்தித்தான். 

பாதையின் நடுவே வெள்ளம் தேங்கி நின்றது. வொலந்தனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, நம்பிக்கை இழந்த நிலையில் கடவுளைக் கண்டது போன்ற உணர்வு எற்பட்டது. உண்மைதானா, எனக்கு அந்தச் சிறுவனின் குரல் கேட்டதா? 

திரும்பி அதை உறுதி செய்வது போல ஸ்ரான்ரொனைப் பார்த்தான், அந்த மங்கிய வெளிச்சத்திலும் அவனது முகத்திலும் அதை உறுதி செய்வது போன்ற மகிழ்ச்சி தெரிந்தது. 

‘இங்கே இருக்கிறோம்’ என்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் குகையின் சுவர்களில் பட்டு அவனது காதுகளில் எதிரொலித்தன. 

‘இருக்கிறீர்களா, எங்கே?’ குரல் கொடுத்தான் ஸ்ரான்ரொன். 

‘இங்கே!’ என்று அந்தக் குரல் பதில் சொன்னது. 

‘நீங்கள் எத்தனை போர்?’ தண்ணீர் நடுவே தேங்கி நின்றதால் மறுபக்கம் செல்ல முடியாததால் இங்கிருந்தபடியே குரல் கொடுத்தான் வொலந்தன்.  

‘நாங்கள் பன்னிரண்டு பேர்’ மறுபக்கத்தில் இருந்து பதில் வந்தது.  

‘பன்னிரண்டு பேரா?, பதின் மூன்று பேரல்லவா இருக்க வேண்டும்.’ ஒருவருக்கு என்ன நடந்திருக்கும் என்று ஒருகணம் மனமுடைந்து போய்விட்டான் வொலந்தன். 

உயிரோடு திரும்புவோமா என்பது கூடத் தெரியாமல் குகையின் இருட்டுக்குள் பத்துநாட்கள் சாப்பாடு இல்லாமல் தவித்திருக்கிறார்கள் இந்தச் சிறுவர்கள். 

தாய்மொழியில் அவர்கள் ஏதோ சொன்னார்கள். வொலந்தனுக்கு மொழி புரியவில்லை.  

அடுன்சாம் (Adun Sam) என்ற சிறுவன் மட்டும் ஆங்கிலத்தில் பதில் சொன்னான். பர்மா நாட்டில் சில காலம் படித்த அவனுக்கு மட்டும் அந்தக் குழுவில் ஆங்கிலம் தெரிந்திருந்தது.  

‘இல்லை எங்களுடைய மாஸ்டரையும் சேர்த்து நாங்கள் பதின் மூன்று!’ என்றான் அடுன்சாம். அந்த வார்த்தைகள் இவர்களின் நெஞ்சை நிறைத்தன. உள்ளே எல்லோரும் உயிரோடும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பதில் வொலந்தனுக்கு நிம்மதியாக இருந்தது. 

அந்த இடத்திற்குத் தன்னைக் கொண்டு வந்து சேர்த்த ஆண்டவனுக்கு மனதார நன்றி சொன்னான். தொப்பியில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் அந்தச் சிறுவர்கள் தன்னைப் பார்த்துக் கும்பிட்ட போது ஆசிய நாட்டவர்களின் கலாச்சாரம் அது என்பதைப் புரிந்து கொண்டாலும், அதற்குள் சொல்முடியாத பல அர்த்தங்கள் இருப்பதை, அவர்கள் தங்கள் உயிரையே அவனிடம் ஒப்படைத்து விட்டது போல வொலந்தன் உணர்ந்தான்.  

ஆங்கிலம் தெரிந்த சிறுவன் அங்கிருந்தே கேள்வி கேட்டான். ‘இன்று என்ன கிழமை’ என்ற அவனின் கேள்விக்குத் ‘திங்கட்கிழமை’ என்று இவன் பதில் சொன்னான்.  

‘பத்து நாட்களாக இங்கே அகப்பட்டு இருக்கிறீர்கள்’ என்று இவன் மேலும் விளக்கம் தந்தான். சிறுவர்களின் ‘பசிக்கிறது’ என்ற வார்த்தை இவனைத் தொட்டது. உணவில்லாமல் எப்படி இவர்கள் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்கள்.  

காலம் தாமதிக்காமல் ஏதாவது விரைந்து செய்ய வேண்டும், ‘நீங்கள் தைரியசாலிகள், உயிரோடு இருக்கிறீர்கள் என்பதே எங்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்கள் நாளை உணவோடு வருவார்கள்’ என்று சொல்லிவிட்டு, மேற்கொண்டு உரையாடி நேரத்தை வீணாக்க விரும்பாமல் இருவரும் விடைபெற்றார்கள்.  

டல் என்றுதான் அடுன்சாமை நண்பர்கள் அழைத்தார்கள். அவன்தான் அவர்களில் ஆங்கிலம் தெரிந்தவனாக இருந்தான். ஆங்கில மொழியில் படித்த அவன் சமீபகாலத்தில்தான் இங்கே குடிபெயர்ந்திருந்தான். 

பகல் எது இரவு எது என்றுகூடத் தெரியாத நிலையில் அவர்கள் உள்ளே அகப்பட்டு இருக்கிறார்களே என்று மனம் வெதும்பினாலும் உயிரோடு இருக்கிறார்களே என்று மனம் மகிழ்ந்தது. இந்த நல்ல செய்தியை வெளியுலகிற்குச் சொல்ல வேண்டும் என்ற சிந்தனையோடு எவ்வளவு விரைவாக மீண்டும் சுழியோடி வெளியே வரமுடியுமோ அவ்வளவு விரைவாக வெளியே வந்தார்கள்.  

அவர்கள் என்ன செய்தியோடு வருகிறார்கள் என்பது தெரியாமல் வாசலில் உறவுகள் அவர்களுக்காகப் பதட்டத்தோட காத்திருந்தார்கள். 

‘உயிரோடு அத்தனை பேரும் பத்திரமாக இருக்கிறார்கள்’ என்ற அந்த நல்ல சேதி கேட்டு தங்கள் குழந்தைகள் போலவே அவர்களையும் எண்ணி உலகமே மகிழ்ந்தது.  

செய்தி கேட்ட பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்து என்ன செய்வது, அவர்களை வெளியே எப்படிக் கொண்;டு வருவது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.  

தொடர்பு சாதனங்களில் இவர்கள் இருவரும் சிறுவர்களோடு உரையாடிய காட்சி ஒளிபரப்பாகவும், ஒலிபரப்பாகவும், செய்திகளாகவும் வெளிவந்தன. தங்கள் வீட்டுப் பிள்ளைகள் உயிரோடு இருப்பது போன்று சர்வதேசமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. உலகின் எங்கோ ஒரு இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடப்பதே தெரியாமல் வேறு ஒரு கூட்டத்தினர் எந்தக் கவலையும் இல்லாமல் தங்கள் தினசரி ஆட்டம் பாட்டம் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். 

யூலை மாதம் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மறுநாள் வைத்தியரடங்கிய குழுவினர் உணவு மருந்து போன்ற பொருட்களுடன் அங்கு சென்றிருந்தார்கள். சிறுவர்களுடன் உரையாடிய வீடியோ பதிவு ஒன்றும் வெளிவந்திருந்தது. தாயாரின் விருப்பப்படி நைட் என்ற 14 வயதுப் பையனின் பிறந்தநாளை குகைக்குள்ளேதான் அன்று கொண்டாடினார்கள். இது ஒருபக்கம் இருக்க, அவர்களை எப்படி வெளியே கொண்டுவரலாம் என்று இரவிரவாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். என்ன செய்யலாம்? 

சிறுவர்கள் உளரீதியாகப் பாதிக்கப்படாமல் அவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது, சில சிறுவர்களுக்கு நீந்தத் தெரியாதது என்பதும் ஒரு குறைபாடாக இருந்தது. 

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *