அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 | அத்தியாயம்-3
திக்குத் தெரியாத குகைக்குள்..
குகைக்குள் சென்ற பாதை மேடும் பள்ளமுமாக இருந்ததால், வாசல் வழியாக வந்த வெள்ளம் உள்ளே பள்ளத்தில் தேங்கத் தொடங்கியது. உள்ளே வரும்போது பெரியதொரு பள்ளத்தைத் தாண்டித்தான் பாதை மேல்நோக்கிச் சென்றது ஞாபகம் வந்தது.
அப்படியானால் அதையும் தாண்டித்தான் இந்தத் தண்ணீர் இங்கே வருகிறது என்பதைச் சன்ராவொங்கின் மனம் எடைபோட்டது. உள்ளே வரும்போது, வடக்கு வானம் இருண்டு இருந்ததால், வெளியே கடும் மழை பெய்திருக்கலாம் என்பதையும் ஊகிக்க முடிந்தது.
‘மாஸ்டர் வேகமாய் வாங்க, வெளியே போயிடலாம்’ என்றான் முன்னால் நின்று குரல் கொடுத்தவன்.
எல்லோரும் வந்த பாதை நோக்கி வேகமாக முன்னேற முயன்றார்கள். தண்ணீருக்குள் வேகமாக நடக்க முடியவில்லை.
‘மாஸ்டர் முழங்கால் நனைஞ்சு போச்சு’ மீண்டும் குரல் கொடுத்தான் முன்னால் சென்றவன். ஆனாலும் வாசல் திசை நோக்கி மெதுவாக முன்னேறினார்கள்.
‘மாஸ்டர் இடுப்பு வரை தண்ணிர் வந்திடிச்சு, எனக்கு நீந்தத் தெரியாதே!’ முன்னால் சென்ற மார்க்கின் குரலில் உற்சாகம் குறைந்திருந்தது. அதுவே பயிற்றுநருக்கு எதையோ எச்சரிக்கையாக எடுத்துச் சொன்னது.
‘எல்லோரும் நில்லுங்க, இங்கே திரும்பி வாங்க’ சன்ராவொங்கின் குரலில் கட்டளைத் தொனி எதிரொலித்தது.
மறுகணம் பயிற்சியின் போது பயிற்சியாளரைச் சுற்றி நிற்பது போல எல்லோரும் முழங்கால் அளவு தண்ணீரில் நனைந்தபடி அருகே வந்து சுற்றி நின்றார்கள்.
‘கவுண்ட்!’ குரலில் கம்பீரம் தெரிந்தது.
ஓன்று இரண்டு என்று ஒவ்வொருவராகத் தொடங்கிப் பன்னிரண்டுவரை எண்ணினார்கள்.
‘நல்லது நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாய் இருக்கிறோம். மேற்கொண்டு முன்னேறுவது எனக்கு நல்லதாகப் படவில்லை.’ என்றான் சன்ராவொங்.
‘ஏன்மாஸ்டர், கொஞ்சத் தூரம் தானே, வேகமாய் போனால் வெளியே போயிடலாம்’ என்றான் மற்றொருவன்.
‘வீட்டிலே தேடுவார்கள், வாங்க மாஸ்டர் போயிடலாம்’ அழாக்குறையாக மற்றவன் வேண்டினான்.
சிறுபிள்ளைத் தனமான அவர்களின் அவசரமான தீர்மானம் உயிர் ஆபத்தில் முடியும் என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
‘இல்லை நாங்கள் உள்ளே வரும்போது பெரியதொரு பள்ளத்ததைத் தாண்டித்தான் உள்ளே வந்தோம், நினைவிருக்கிறதா? இதைக் கடந்து சென்றாலும் அந்தப் பள்ளத்திலும் தண்ணீர் தேங்கியிருக்கும் என்பதால், அதற்குள் அகப்பட்டு விடுவோம், அப்புறம் இந்தப் பக்கமும் தண்ணீர் தேங்கினால் இந்தப் பக்கமும் திரும்பி வர முடியாமல் போய்விடும். இங்கே சிலருக்கு நீந்தவே தெரியாது. எனவே நாங்கள் எல்லோரும் உயரமான பாதுகாப்பான இடத்தில் நிற்பதுதான் நல்லது’
‘அப்போ என்ன செய்யலாம், வீட்டிற்குப் போகமுடியாதா?’ என்றான் சற்றுப் பயந்த மாணவன்.
‘நாங்கள் சற்று உயரமான பகுதிக்குச் சென்று கொஞ்ச நேரம் தங்கி இருப்போம், வெள்ளம் வற்றியதும் வெளியே போய்விடலாம்’ என்று சொல்லிவிட்டு அவர்களின் பதிலுக்குக் காத்திருந்தான் சன்ராவொங்.
‘என்ன எல்லோருக்கும் சம்மதமா?’
‘உள்ளே இருட்டாக இருக்குமே?’ சிறுவனின் குரலில் சற்று பயமிருந்தது.
வேறுவழியில்லை. உங்களுடைய பாதுகாப்புத்தான் இப்போது முக்கியம். முதலில் தண்ணீரில் இருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் மட்டம் எந்த நேரமும் உயரலாம், எல்லோருக்கும் நீந்தத் தெரியாது என்பதால் நாங்கள் சற்று உயரமான இடமாகப் பார்த்துத் தங்குவதுதான் சரியாக இருக்கும். என்ன சொல்லுறீங்க?’ என்றான் சன்ராவொங்.
‘நீங்கள் சொல்லுவதும் சரிதான், தண்ணீர் மட்டம் இன்னும் உயரலாம், எனவே உயரமான இடத்தில் பாதுகாப்பாகத் தங்குவதுதான் நல்லது.’
எல்லோரும் பயிற்றுநரின் முடிவை ஏற்றுக் கொண்டு பின்வாங்கிச் சென்றனர்.
ஓரிடத்தில் குகை இரண்டாகப் பிரிந்தது வேறு திசை நோக்கிச் சென்றது. ‘மொங் ஜங் ன்’ என்று சுவரில் எழுதி இருந்தது. எந்தப்பக்கம் செல்வது என்று தெரியாமல் சற்று நேரம் தடுமாறினார்கள். ஆனால் அவர்கள் செல்ல நினைத்த பாதை சற்றுக் கீழ் நோக்கிச் சென்றதால் அதைத் தவிர்த்தார்கள்.
‘எந்த நேரமும் இந்தப் பள்ளமான பாதையில் தண்ணீர் புகுந்து விடலாம், எனவே உயரமான பாதையில் ஏறிச்செல்வதுதான் எங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும்’ என்று சன்ராவொங் சொல்லவே, எல்லோரும் உயரமான பாதையில் ஏறிச் சென்றார்கள்.
மேல் நோக்கிச் சென்ற பாதை சற்று ஒடுங்கியதாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராக உயரப்பாதையில் ஏறிச் சென்றனர். பதின்மூன்று பேரும் தங்கக் கூடியதாகச் சற்று உயரமான ஒரிடம் கிடைக்கவே அந்த இடத்தில் எல்லோரும் உட்கார்ந்தனர்.
சிறுவர்கள்தானே, காலையில் ஓடியாடி விளையாடிய களைப்பின் பாதிப்பால் எங்கே இருக்கிறோம் என்பதையும் மறந்து சற்று நேரத்தில் ஒவ்வொருவராக உறங்கிவிட்டனர்.
பயிற்றுநர் மட்டும் தூக்கம் வராமல் தவித்தான். இப்படி ஒரு சூழ்நிலையில் மாட்டிக் கொண்டது பெரிய சங்கடமாக இருந்தது. சட்டப்படி அவன் தாய்லாந்துக் குடிமகன் அல்ல என்பதால் இந்த விடயம் வெளியே தெரிய வந்தால் என்ன நடக்குமோ என்ற பயம் அவனைப் பிடித்துக் கொண்டது. அது மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள இரண்டு மூன்று சிறுவர்களும் குடியுரிமை அற்றவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். தாய்லாந்து எல்லைக்கு அப்பால் உள்ள மியான்மர், லாவோஸ், சீனா போன்ற பகுதிகளில் இருந்து வந்த இவர்களில் சிலர், குடியுரிமை இல்லாததால் குறைந்தபட்ச வசதிகள் கூடக் கிடைக்காமல் இருந்தனர்.
பயிற்சி எடுக்கச் சென்ற பிள்ளைகள் வீட்டிற்குத் திரும்பிவரவில்லை என்பதை உணர்ந்த பெற்றோரின் கவலை அதிகரித்தது. அருகே இருந்த ஏனைய பெற்றோரிடமும் ஒருவரை ஒருவர் விசரித்ததில் அவர்களின் பிள்ளைகளும் வரவில்லை என்பது தெரிய வந்தது.
பயிற்சி முடிந்து பொதுவாக நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விடுவார்களே, இன்று மட்டும் என்ன தாமதம்? என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தேடினார்கள். பல இடங்களிலும் விசாரித்தார்கள், ஒருவருமே வீடு வந்து சேரவில்லை என்றதும் பயம் பிடித்துக் கொண்டது.
ஏதாவது சைக்கிள் விபத்தில் மாட்டிக் கொண்டிருப்பார்களா? எந்த தகவலும் கிடைக்காத நிலையில் பதட்டத்துடன் சன்ராவொங்கின் வீடு நோக்கிச் சென்று விசாரித்தார்கள். சன்ராவொங்கின் அக்கா தாம்மாவும் அதே பதட்டத்தோடுதான் இருந்தாள். தம்பியைக் காணவில்லையே என்று பதட்டத்தோடு காத்திருந்தவளுக்கு, தம்பி மட்டுமல்ல, ஒருவருமே வீடு திரும்பவில்லை என்ற செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது.
அக்கம் பக்கம் செய்தி பரவியதில் ஊரே பதட்டப்பட்டது. என்ன செய்யலாம், எங்கே தேடலாம்?
எங்கே அவர்கள், என்னாச்சு அவர்களுக்கு? எங்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில் பதட்டமடைந்த பெற்றோர்கள் பொலீஸ் நிலையம் நோக்கிச் சென்றார்கள்.
அருகே இருந்த பொலீஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸார் எல்லாவற்றையும் விசாரித்து பதிவுகளை மேற்கொண்டார்கள், ஒருவர் இருவரல்ல, பதின்மூன்றுபேரின் உயிர் ஆபத்தில் இருப்பதைப் புரிந்து கொண்டார்கள்.
தாமதிப்பதில் பயனில்லை என்பதால் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
முதலில் உள்ளூர் ஊடகங்களுக்கு அறிவித்தார்கள். எங்கே தேடுவது, யாரிடம் விசாரிப்பது? ஊடகங்களில் செய்தி கேட்டவர்கள் ஏதாவது உடனடித் தகவல் தரலாம் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள்.
இவர்களின் பதட்டத்தை புரிந்து கொள்ளாமல், எதற்குமே கவலைப்படாமல் வெளியே மழை சோவென்று கொட்டிக் கொண்டிருந்தது.
எங்கே ஆரம்பிப்பது, அவர்களை எங்கே தேடுவது என்று குழம்பிப் போய் இருந்தவர்களுக்கு இருண்டு கிடந்த வானத்தில் மின்னல் வெட்டியது போல நல்ல செய்தி ஒன்று அப்போது கிடைத்தது. அங்கே ஒதுக்குப் புறமாக இருந்த குகையின் உட்பக்கத்தில் சில சைக்கிள்கள் வேலியோடு பூட்டப்ட்டிருப்பதாக, உள்@ர் வானொலிச் செய்தி கேட்ட, அந்தக் குகையின் காவலாளியிடம் இருந்து பொலீஸ் நிலையத்திற்குத் தகவல் ஒன்று வந்தது.
‘எத்தனை சயிக்கிள் அங்கே இருக்கின்றன என்று தெரியுமா?’ பொலீஸ் அதிகாரி கேட்டார்.
‘தெரியும் ஸார், பதின் மூன்று!’ காவலாளியிடம் இருந்து பதில் வந்தது.
‘வேறு ஏதாவது கிடைத்ததா?’
‘ஆமா ஸார், சிறிது தூரம் உள்ளே சென்று பார்த்தேன், பந்து ஒன்றும் பூட்ஸ் ஒரு சோடியும் சற்றுத் தள்ளிக் கிடைத்தது.’
‘வேறு ஏதாவது தடயம் கிடைத்ததா?’
‘இல்லை ஸார், ரொம்பத் தூரம் உள்ளே போகமுடியவில்லை. மழை பெய்வதால் வாசலில் உள்ள வெள்ளம் வழிந்து குகைக்கு உள்ளே போகிறது’
அந்தத் தகவலே அப்போது அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அப்படியானால் அவர்கள் அங்கேதான் இருக்கிறார்கள். குகைக்குள் அகப்பட்ட அவர்கள் வெளியே வரமுடியாமல் மழை வெள்ளம் தடுத்திருக்கலாம். மாணவர்கள் அதிலும் சிறுவர்கள் என்பதால், உடனடியாகவே அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த பொலீஸ் அதிகாரி மனிதாபிமானம் கொண்டவராக இருந்தார். பெற்றோருக்கு ஆறுதல் சொல்லிய பொலீஸார் எல்லா பொலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தார்கள். செய்திகளை அறிந்த சமூகசேவை நிலையங்கள் உதவிக்கு வந்தார்கள். என்றுமில்லாதவாறு உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் இதில் தலையிட்டார்கள்.
தாய்லாந்தின் வடக்கே உள்ள ‘சியாங் றேய்’ மாகாணத்தில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் இருந்த ‘தாம் லேங் நாங்’ என்ற குகைத்தொடரில் (Tham Luang cave in northern Thailand) நடந்த இந்தச் சம்பவம் தாய்லாந்து பிரதமரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது.
வெளிநாடுகளின் உதவி வேண்டி நின்ற போது சர்வதேசத்தின் கவனம் தாய்லாந்தின் பக்கம் திரும்பியது. குகையின் உள்ளே அகப்பட்டிருக்கும் காட்டுப் பன்றிகள் விளையாட்டுக் குழுவைச் சேர்ந்த அந்தப் பதின்மூன்று பேரும் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே எல்லோரின் பிரார்த்தனையாகவும் இருந்தது. அவர்களின் பிரார்த்தனை பலிக்குமா?
– தொடரும்…