காட்டுச் சங்கிலி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 9, 2024
பார்வையிட்டோர்: 133 
 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சின்னச் சிவராமபிள்ளையின் கையில் தினசரி பிரித்த படியே இருந்தது. குதிரைப் பந்தயப் பக்கத்தைப் பார்த்துப் பெருமூச்செறிந்தார். 

“என்ன ஸார்! ஆள் கிட்ட வருவதுகூடத் தெரியாமல் அவ்வளவு பலத்த யோசனை?” என்ற சப்தம் அவரைத் தாக்கிற்று. நிமிர்ந்து பார்த்ததில் அடுத்த வீட்டு நாயுடு காரு. 

“என்ன ஸார் விசேஷம் பேபரில்?” என்றார் நாயுடுகாரு.  

சிவராமபிள்ளைக்குப் பதில் சொல்லச் சலிப்பாக இருந்தது. “மண்ணாங்கட்டி” என்றார். 

“அவ்வளவு அலுப்பென்ன ஸார்?” 

“இப்படித்தான் என் காரியங்களே ஆகின்றன. நல்ல குதிரை! அப்போதே நினைத்தேன்.” 

“ஏதாவது குதிரைப் பந்தயத்தில் எதிர்பார்த்த குதிரை தோற்றுவிட்டதா?” 

“என்னுடைய காட்டுச் சங்கிலி இருந்ததல்லவா?”

“காட்டுச் சங்கிலியா?” 

“ஆமாம், என் குதிரை. “

“ஓகோ, ஞாபகம் வந்துவிட்டது.” 

“அந்தக் குதிரையால் எனக்குக் கொஞ்சம் சொத்துச் சேர்ந்தது தெரியுமா? நல்ல குதிரை.”

“எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்லத்தான் கேள்வி’ என்று நாயுடுகாரு சொன்னது ஏதோ லயத்திலிருந்த சிவராமபிள்ளையின் மனத்தில் படவில்லை. சிவராம பிள்ளை பாட்டுக்கு மேலே சொல்லிக்கொண்டே போனார். 

“ஒரு சமயம் என்னுடைய மனைவியின் அத்தை நீடா மங்கலத்தில் அத்தியாவஸ்தையாக இருந்தாள். என் மனைவியின் தமக்கையும் அவள் புருஷனும் இவளைப்பற்றி அத்தையிடம் ஏதோ வத்தி வைத்திருந்ததாகக் கேள்விப் பட்டிருந்தோம். அத்தைக்கோ கையில் கொஞ்சம் காசு உண்டு. வேறு வார்சு இல்லை, உயில் பண்ணுவதாக வதந்தி. உயில் ஏற்பட்டால் இவளுக்கும் ஏதாவது கிடைக்கக்கூடாதா என்ற ஆசை எனக்கு. 

“நீடாமங்கலத்துக்குக் கிளம்பினோம். பஸ் நிற்கும் இடத்துக்குப் போனபோது பத்து நிமிஷங்களுக்கு முந்தித் தான் வண்டி கிளம்பிப் போய்விட்டதென்று தெரிந்தது. அடுத்த பஸ் கிளம்ப ஒரு மணி பிடிக்கும்.என்ன செய்வ தென்று தோன்றாமல் அலங்கமலங்க விழித்தேன். 

“எதிரில் ஒரு பெரிய குதிரையும் வண்டியும் தென் பட்டன. குதிரை வெகு அழகு. நாலு குளம்பும் வெள்ளை; நெற்றியில் வெள்ளைச்சுட்டி; வாலும் வெளுப்பு; பாக்கி உடலெங்கும் இரும்பு போன்ற வர்ணம். ஒருவேளை தேசிங்குராஜனுடைய பாராசாரிக் குதிரை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டே, ‘ஏன் அப்பா வண்டிக்காரா, நீடாமங்கலம் வருகிறாயா?’ என்றேன். 

“ஹூம்.”

“சத்தம் ?”” 

“இரண்டு ரூபாய்.”

“அதென்னப்பா அவ்வளவு கேட்கிறாயே?” 

“மகாராஜா கிட்டெ இருக்க வேண்டிய குதிரைங்க.”

“இருக்கட்டும், சத்தம் சொல்லு.” 

“இந்தக் குதிரையை நான் ரொம்ப இமிசை பண்ற தில்லெ. ஒரு நாளைக்கு ரெண்டு நடைகூடச் சில சமயம் உடமாட்டேன். முந்திப் போன பஸ் போரத்துக்கு முன்னா லேயே கொண்டுபோய் விடறேனா இல்லியா பாருங்க ஏனறான். 

“நானும் என் மனைவியும் அதில் ஏறிக்கொண்டு நீடா மங்கலம் போய்ச் சேர்ந்தோம். நல்ல வேளை! உயில் நகல் எழுதிக்கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததும் அத்தையம்மாவின் முகம் திகைப்படைந்தது. 

“ராவைக்கோ-நாளைக்கோ-தெரியல்லே. என்னைப் பத்தி அவதூறு பேசினீங்க இன்னு கேழ்விப்பட்டேன். நிஜமா?” என்றாள். 

“சுவாமியிடம் சொல்லுகிறாப் போல் சொல்லு கிறேன். அது முழுப் பொய் பித்தலாட்டக்காரர்கள் புனைசுருட்டு” என்றேன். 

அவ்வளவுதான். ”அப்பிடி நீங்க சொல்லியிருக்க மாட்டீங்க இன்னூட்டுத்தான் அப்பவே நெனச்சேன்” என்று சொல்லிவிட்டு அந்த உயில் நகலைக் கிழித்தெறியச் சொல்லிவிட்டு வேறு உயில் தயார் செய்தாள். என் மனைவிக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமும் ஆறுமா நிலமும் கிடைத்தன. மறுநாள் காலையில் அத்தையம்மாள் நெடும் பயணம் கிளம்பிவிட்டாள். 

“சடங்கெல்லாம் முடிந்த பிறகு ஊருக்குத் திரும்பி னோம். பஸ் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது.அதில் ஏறும் சமயத்தில் அந்தக் குதிரைவண்டி தென்பட்டது. எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. அதே சமயத்தில் என் மனைவியும் சொத்துச் சம்பாதிச்சுக் கொடுத்த குதிரை வண்டியிலேயே ஏறுவோம் என்றாள். உடனே பஸ்ஸை விட்டுக் குதிரை வண்டியில் ஏறினோம். 

“வண்டி போய்க்கொண் டிருந்தபோதே வண்டிக்காரனைக்  குதிரையை விற்கும் எண்ணம் இருந்தால் சொல்லு என்றேன். அவன் முதலில் இல்லையென்று விட்டுப் பிறகு அரைமனதாகப் பேசிவிட்டுக் கடைசியில் சம்மதித்தான். 

”ஊரை அடைந்த மூன்றாம் நாள் குதிரையையும் வண் டியையும் வாங்கிவிட்டேன். அது முதல் ஒருவாரம் வரை யில் குதிரை லாயத்தில்தான் என்னைக் காணலாம். 

குதி ரைக்கு ஹல்வா முதற்கொண்டு வாங்கிக்கொடுத்தேன் என் றால் என் மன நிலைமையைத் தெரிந்துகொள்ளுங்களேன்! அறுபது நாழிகையும் என் மனத்தில் குதிரை வண்டி நீடா மங்கலத்துக்குப் போன காட்சிதான். என்ன வேகம்! என்ன வேகம்! சாரைப் பாம்பும், காட்டுச் சங்கிலியும், காற்றும் அந்த வேகத்தை எட்டமாட்டா. 

“ஒரு பதினைந்து நாள் ஆன பிறகு குதிரைக்கு எவ் விதமான வேலை கொடுக்கிறதென்ற யோசனை பிறந்தது. ஒன்றும் தோன்றவில்லை. முன் மாதிரியே நீடாமங்கலத் துக்குப் போய்வரும் ஜட்காவாகவே இருந்துவிட்டுப் போகிறதென்று தீர்மானித்தேன். அது முதல் ஓர் ஆள் வைத்து வண்டியை ஓட்டச் சொன்னேன். ஆள் யார் தெரியுமா?” 

தன்னை ஏதோ கேள்வி கேட்டதாக நினைத்துக் கொண்டு,”எனக்கு எப்படித் தெரியும்?” என்றார் நாயுடுகாரு. 

“சொல்வதைக் கேளும். பழைய வண்டிக்காரனையே வைத்து ஒட்டினேன். இப்படிச் சில நாட்கள் சென்றன. ஒரு சமயம் எனக்கு அடுத்த ஊருக்குப் போகவேண்டி இருந்தது. வண்டிக்காரனுக்கோ வைசூரி. வண்டியைக் கட்டி நானே ஏறி உட்கார்ந்தேன். குதிரை முன்னோட்டம் பின்னோட்டம் ஓடிற்று. குதிரை மக்கார் செய்ததைப் பார்த்துவிட்டு ஒரு ஹல்வா வாங்கிக் கொடுத்துத் தாஜா செய்து பார்த்தேன். ஹல்வாவை விழுங்கிவிட்டு என்னை மோந்து பார்த்தது. வாலை இருபக்கத்திலும் கோபமாக வீசிவிட்டு முன்னங்கால்களை அழுத்தமாக ஊன்றிக் கொண்டது. எனக்குக் கோபம் மூண்டது வண்டிப் பெட்டியில் ஏறி உட்கார்ந்து சவுக்கால் ஓர் அடி கொடுத் தேன். முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு குதிரை சீராகப் பாம்பு படம் எடுப்பதுபோல் வண்டியுடன் கிளம் பிற்று. 

“என்னிடம் செல்லுமா? இன்னொன்று கொடுத்தேன். பின்னங்கால்களால் பெட்டியை உதைத்தது. 

“இன்னும் கோபம் வந்தது. மறுபடியும் சுளீரென்று குதிரையின் மர்மத்தில் அடித்தேன். அவ்வளவுதான். குதிரை பிய்த்துக்கொண்டு கிளம்பிவிட்டது. ஜனங்கள் முகமா,ரோட்டா ஒன்றும் தெரியவில்லை. மரங்களெல் லாம் வாள் வீச்சைப்போல் தோன்றி மறைந்தன. குதிரை யின் லாடம் தெருவில் அடிபட்டு நெருப்புத் தூள் பறந் ததுமட்டும் தெரிந்தது. எனக்கே ஏண்டா அடித்தோம் என்று திகில் உண்டாகிவிட்டது. இப்படி நினைத்துக் கொண்டிருந்த போதே ஏதோ ஸர் என்ற சப்தம் கேட் டது. மறுகணம் வண்டிக் கூண்டு மரத்தில் மோதி நொறுங்கிப் போனதும் நான் சாகாமல் தப்பியது மனைவி யின் மாங்கல்ய பலம் என்று அறிந்தேன். குதிரை மட் டும் ஒன்றும் தெரியாததுபோல் வடக்கு நோக்கி நின்று கொண்டிருந்தது. இதோ இடதுகைக் கட்டைவிரலைப் பார்த்தீரா?” என்று நிறுத்தினார் சின்னச் சிவராம பிள்ளை. 

“உமக்குக் கட்டைவிரல்தான் இல்லையே. உம்மைத் தெரிந்துகொண்டது முதல் கேட்கவேண்டும் என்ற எண் ணம். சந்தர்ப்பம் வாய்க்கவில்லை” என்றார் நாயுடுகாரு. 

“அப்போது நசுங்கின விரல்தான். ஆஸ்பத்திரியில் அது பிரயோஜனப்படாது என்று எடுத்து எறிந்துவிட் டார்கள். மறுநாளே குதிரையைத் தொலைத்துவிட்டு மறு காரியம் பார்ப்பதென்று தீர்மானித்தேன். மூன்றாம் மாதம் சிவகங்கை ஜமீன் தாருடைய ஆள் அதை வாங்கிப் போனான். சனி ஒழிந்தது என்று நினைத்தேன். இப்போது நினைத்துக்கொண்டால்கூடக் காட்டுச்சங்கிலி நீடா மங்கலத்துக்குப் போவதுபோல் தோன்றுகிறது. அடா டா! குதிரை என்றால் குதிரை! ஏன் விற்றோம் என்று ஏங்குகிறேன்.” 

“ஏன்?” என்றார்.நாயுடுகாரு. 

“இதைப் பாருங்கள்” என்று சிவராமபிள்ளை தின சரியில் ஓர் இடத்தைக் குறிப்பிட்டார். 

“கவர்னர் ப்ளேட். சிவகங்கை ஜமீன்தாரால் எதேச் சையாக வாங்கப்பட்ட குதிரை காட்டுச்சங்கிலி முதல் பரிசு பெற்றது வியக்கத் தக்கது” என்று படித்தார் நாயுடுகாரு. 

“இப்போது என் குதிரையாயிருந்தால்…” என்றார் சிவராமபிள்ளை. 

“பந்தயத்துக்கா போகும்? ஜட்காவண்டிக் குதிரை யாக இருக்கும். இருந்தாலும் குதிரையை நீங்கள் ஓட்டி இருக்கக் கூடாது. வழக்கமாக ஒட்டும் ஆள் இல்லாவிட் டால் அப்படித்தான் இடக்குச் செய்யும் என்று நினைக்கிறேன்” என்றார் நாயுடுகாரு. 

“அதுகூடக் காரணமாக இருக்காது. அந்தக் குதிரை ரொம்ப அறிவுள்ளது. உயர்ந்த ஜாதி. அதைக் கொண்டு போய் நான் மறுபடியும் ஜட்காவண்டிக் குதிரைமாதிரி நடத்தி இருக்கப்படாது. அதனால் தான் என்னைப் பார்த்ததும் கோபம் வந்துவிட்டது. 

“இருக்கலாம், இருக்கலாம்… பீமஸேனனிடம் ஒரு கலம் உளுந்தைக் கொடுத்துப்பருப்பாக உடைக்கச் சொன் னால் அவனுக்கு எப்படி இருக்கும்? அந்த ஆக்ஞை பிறப் பித்தவன் கதி என்னவாகும்? அதுபோலத்தான் இருக்கு காட்டுச்சங்கிலி விஷயம்” என்று சிரித்தார் நாயுடுகாரு. 

சின்னச் சிவராமபிள்ளையும் கூடச் சேர்ந்து சிரித்தார்.

– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.

 

வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *