(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“எல்லாரும் பள்ளிக் கூடத்துக்க போங்க இந்தியன் ஆமி வரப் போரானாம்”
ஒருவன் பாதையில் கூக்குரலிட்டு மறைந்தான், அவன் யார்? அவன் சொன்னது உண்மையா பொய்யா? ஏன் கத்துகிறான்? இந்தியன் ஆமி வருவதென்றால் எத்தனை மணிக்கு? எந்தப் பாதையால்? எதைப் பற்றிய ஆய்வும் தேடலும் கிடையாது
“ஆமி வாரானாம் எல்லாரையும் சுடப் போறானாம், கெதியா ஓடுங்க மச்சி, பள்ளிக் கூடத்துக்க ஓடுங்க” கக்கத்தில் ஒன்றும் கையில் ஒன்றுமாக இரண்டு குழந்தைகளையும் இழுத்துக் கொண்டு மிகுந்த பதற்றத்துடன் செல்லும் ஒருத்தி எதிர் வீட்டுக் காரியை உசார்படுத்திச் சென்றாள். இப்படித்தான் எல்லோரும் மற்றவர்கள் மீது அவ்வளவு அக்கறையும் அன்பும் பரிவும் பாசமும் பற்றும் கொண்டிருந்தார்கள். யாருக்கும் எதற்கும் எதிர்க் கேள்வி கிடையாது வந்த தகவலுக் கெல்லாம் எதிர்வினையாற்றினார்கள். அந்தப் பக்கம் வாரான் என்றால் இந்தப் பக்கம் ஓடுவது, இந்தப் பக்கம் வாரான் என்றால் அந்தப் பக்கம் ஓடுவது, பந்தயக் குதிரைகள் போல துப்பாக்கிச் சப்தம் கேட்டால் ஓடுவது ஒன்றுதான் தெரிவு, ஊரே களேபரப்பட்டுப் போய்ப் பயத்தால் அடங்கியொடுங்கி இருக்கும். பல்ே இயக்கங்கள் ஊருக்குள் முளைத்து ராஜாங்கம் நடாத்திக் கொண்டிருந்த காலப்பகுதி. இந்தியன் பீஸ் கீப்பிங் போர்ஸஸ் (ஐ.பி.கே.எப்) இலங்கைக்கு இலவச இறக்குமதி செய்யப்பட்டு சமாதானத்தைக் கொன்று புதைக்கவென்றே பயிற்றப்பட்ட பீஸ் கில்லிங் ஜவான்கள் புலி வேட்டையாடக் கிளம்பி கிழக்கு மாகாணத் திற்கும் வருகிறார்கள் அதனால்தான் அபாய மணி ஒலிக்கிறது. “பள்ளிக் கூடத்துக்க ஓடுங்க! பள்ளிக் கூடத்துக்க ஓடுங்க”
புலியெனக் கிலி கொண்டு, எதிர்ப்பட்டதெல்லாம் பதறிச்சுட்ட பீஸ் கீப்பர்ஸ் பலி கொண்டு வந்தார்கள், மனிதப் பலி கொண்டு வந்தார்கள். ஓட்டமாவடிப் பாலத்துக்கு மேற்காக இருந்த கிராமங்கள் தியாவட்டவான், பாலக்காட்டு வெட்டை, காவத்தமுனை ஆகிய ஊர்கள் துப்பாக்கி வேட்டுக்களால் அதிர்ந்து கொண்டிருந்தன. “பாலத்தடிய சண்ட நடக்குதாம்” என்பதுதான் அனைவர் வாயிலிருந்தும் வெளிப்பட்ட வார்த்தைகள். குஞ்சு குருமான்களோடு தாய்மார்கள் காற்றுக்கல்லுண்ட சருகுகளாய் நாதியற்று அச்சங்கொண்டோடியொதுங்கியிருந்தனர்.
எந்வொரு குடிமகனும் ஒரு புலியையாவது காட்டிக் கொடுக்க வில்லையே என்பதுதான் பீஸ் கீப்பர்ஸ் ஆன அவர்களுக்கு அப்போ திருந்த ஒரே கோபம். அப்படியானால் அவர்கள் பார்வையில் எல்லோ ரும் புலிகள்தான், அதனால்தான் இப்படிப்பட்ட வன்கொடுமையை மக்கள் அனுபவிக்க வேண்டியிருந்தது. ‘அப்படியில்லாது மக்களோடு மக்களாக மறைந்திருந்த புலிகளில் ஒருவரையாவது காட்டிக் கொடுத் திருந்தால் மக்கள் இவ்வளவு சொல்லொணாத் துயரங்களையும் அனுபவித்திருக்க வேண்டியதில்லை. பிற்காலத்தில் தமக்கு, புலிகளை எ விடப் பெரிய அச்சுறுத்தல் ஏதுமிருக்கப் போவதில்லை என்பதை அவர்கள் கற்பனையிலும் நினைத்திருக்கவில்லைப் போலும்,
புலி கிடைக்காத வெறியோடு இந்திய இராணுவத்தினர் ஓட்டமாவ டிப் பாலத்தைத் தாண்டுவதற்கு அச்சமுற்று நின்றார்கள். மேற்குப் பக்கமாகக் கிழக்கு மாகாணத்தினுள் நுழைவதற்கு அதுவொன்றுதான் பிரதான வழி. ஒற்றைவழிப் பாலம்; புகையிரதமும் ஏனைய வாகனங்களும் ஆற்றைக் கடக்கவும் கூட அதுவே வழி, வெள்ளைக் காரன் காலத்துப் பாலம் அது, இப்போது இராணுவ நடவடிக்கைக்கும் அதுவே பிரதானமானது. கவச வாகனங்களும், பெரிய பெரிய ட்ரக்குகளும் பாலத்தைத் தாண்டும் வரை மட்டுமல்ல தாண்டிய பின்னரும் பாலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வென்றோடவும் வெருண்டோடவும் கூட அதுதான் வழி. பட்டாளம் பாலத்தின் பாது காப்பை உறுதிப்படுத்திடவேண்டி எங்கும் விரவி நிற்க, முதல் அணி குண்டு எப்போது வெடிக்குமோ என்ற அச்சத்துடன் மெதுவாகவும் வேகமாகவும் கீழேயும் மேலேயும் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தது.
பாலத்தைத் தாண்டியதுதான் தாமதம் இந்தியப் படையினர் கண்டபடி எல்லாப் பக்கமும் சுட்டுத் தள்ளினார்கள். அவர்கள் வெறி பிடித்த மிருகங்கள் போல எதிர்ப்பட்ட மரங்களையெல்லாம் கூட புலிகள் என்று சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அப்படியே அந்த நகர்வு ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை என்று எல்லாப் பகுதிகளையும் அழித்து மயான பூமியாக்கும் வேகத்துடன் நகர்ந்து கொண்டிருக்கும் போது தூரத்தே ஒர் இளைஞர் கூட்டம் வெள்ளைக் கொடியை உயர அசைத்தபடி வெறித்தனமாகச் சுட்டுக் கொண்டிருந்த சமாதானப் படையினரை நோக்கி வந்து கொண்டிருந்து.
ஒருவன் சத்தமிட்டான்.
“கோயி பி சபீது வாளா சண்டா லேகி ஆதாகே”
அடுத்தவன் எல்லோரையும் பயமுறுத்தும்படி மிகச் சப்தமாக “எல்ரீரீஈ சப்கோ கோலி மாரா”
எல்லோரும் துப்பாக்கியை அவர்களை நோக்கித் திருப்பினார்கள். மற்றவன் மிகவும் சப்தமாக அக்கூற்றை மறுத்துரைத்தான்.
“நேஹி நேஹி, ஹேய் கோலி மாரோ ஹம்லோக் குச் பாத் கர்நேகளியே ஆதாகே”
அவர்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை வெள்ளைக் கொடியை
வேகமாக அசைத்தார்கள், முன்னேறிக் கொண்டே இருந்தார்கள்.
அவர்களின் வருகையைத் தடுக்க ஒருவன் தலைக்கு மேலால் சற்றே உயர்த்திச் சுட்டான்.
“ஹேய் மேரேகோ கோலி நேகி மாரோ உப்பர் தேகே மாரோ” அவனைப் பார்த்து ஆத்திரத்துடன் ஒரு ஜவான் கத்தினான்
“விஸ்வாஸ் நெஹீ ஷாப் விஸ்வாஸ் நெஹீ”
ஒரு சிப்பாய் பயத்தோடு பதிலிறுத்தான்.
எல்லாத் துப்பாக்கிகளும் அவர்களைக் குறி வைத்தன, வெடித்தால் அனைவரும் சல்லடை. ஆயினும் வெள்ளைக்கொடி சுமந்தவர்கள் பின் வாங்கவில்லை, இராணுவத்தின் முன்னால் வந்து அமைதியாக நின்றார்கள்.
“ஹேய் ஸ்டொப் ஸ்டொப்”
ஒரு ஜவான் அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு அவர்கள் ஆபத்தற்ற வர்கள் எனத் துணிந்து அமைதியாகக் கையாண்டான்.
இளைஞர்கள் இராணுவப் பட்டாளத்தின் முன் நெஞ்சு நிமிர்த்தி நின்றார்கள், அவர்களைச் சேனைத் தளபதி மிகுந்த ஆச்சிரியத்துடன் பார்த்தான். மொழி பெயர்ப்பாளனை அழைத்தான், அவர்களைப்பற்றி விசாரித்தான்.
“நாம் கெயாஹே”
“பேரென்ன”
“கொமெய்னி முஸ்தபா”
“அச்சா நாம் அச்சா நாம்”
இதற்கிடையில் இரண்டாவது தொகுதி இராணுவத்தினர் கொஞ்சம் அச்சங்களைந்து பாலத்தைக் கடந்தனர்.
ஜவான் அமைதியாக அவர்களை வெறித்துப் பார்த்தான்,
மொழி பெயர்ப்பாளன் தமிழ்நாட்டுக்காரனாக இருக்கவேண்டும், இலங்கைத் தமிழ் அவனுக்கு புதிதாகவுமிருந்திருக்க வேண்டும், “ட்ரான்ஸ்லேட் கரோ”
“ஏம்பா வெள்ளக் கொடி பிடிச்சுக்கின்னு பாதையை மறச்சிக்கின்னு நிக்கிறீங்க”
“இங்கால அப்பாவி மக்கள் தான் இருக்காங்க”
“இஸ்தாரப் கரிப் ஆத்மி லோக் ஹே”
“எந்தப் பொது மகனையும் நீங்க சுட வேண்டாம்”
“கோய் ஆம்ஸாம் ஆத்மி கோ முத் மார்னா”
“அகர் ஹம்லிகோ கோ குச் முஷ்கில் ஆயேகா தோ கியா கரேகா”
“ஏதாவது பிரச்சின எங்களுக்கு வந்தா என்ன செய்றது”
“யோசிக்கவே வேண்டாம் எங்கள் எல்லோரையும் உடனே சுட்டுக் கொல்லுங்கள்”
“சோச்சனா முத் ஹம்லோக் சப்கோ அபி கோலி மாரோ”
“இந்தப் பகுதியக் கடக்கும் வரையும் எந்தப்பிரச்சினையும் வராதெண்டு நாங்க உறுதியாச் சொல்றோம்’
“இஸ் ஜகஸ் நிகல்நேதக் ஹம்லோக் கோ கோய் முஷ்கில் நேஹி ஆயேகா போல்கே இயே லோக் வாதா கர்ரஹா ஹே” “ஹிம்மத் ஸே ஆகே கட ரேஹ்தாஹை அச்சா அச்சா சலோ”
எந்த விதமான துப்பாக்கி வேட்டுக்களும் தீர்க்கப்படாமல் அமைதி வேகமாக விரவிப் படர்ந்தது. அந்த அமைதிக்கான காரணத்தை மக்கள் யாருமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. படை ஓட்டமாவடியை நோக்கி நகரத் தொடங்கியது. மீண்டும் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி தைரியமாக அவர்கள் முன்னே செல்ல இந்திய ஜாம்பவான்கள் பின்தொடர்ந்தார்கள். அனைவரது துப்பாக்கிகளும் வெடிக்கத் தயார் நிலையில் விழிப்பாகவே இருந்தன. ஊர் மக்கள் எல்லோரும் பள்ளிக்கூடங்களில் தஞ்சமடைந்திருக்க கடைத் தெருவெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தன. ஆங்காங்கே ஓரிரண்டு தலைகள் மதில் மேலால் எட்டிப் பார்த்தன அதை இராணுவத்தினர் கண்டுவிட்டால் போதும் துப்பாக்கிச் சப்தம் காதைப் பிளக்கும் அப்படி யொரு மரண பயத்துடன்தான் அவர்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். வாழைச்சேனைச் சந்தியில் வைத்து கும்புறு மூலைப் பக்கம் ஒரு அணியும் கல்குடாப் பக்கம் இன்னொரு அணியுமாகப் பிரிந்து சென்றார்கள், அதிலிருந்து துவக்குகள் வெடிக்கத் தொடங்கின இடைவெளிவிடாது.
அப்போது ஒரு ராணுவ வீரன் கேட்டான்,
“ஹே ஹிம்மத் வாலே இஸ்தாரப் ஹம்லோக் கோ கோய் முஷ்கில் ஆயேகா தோ ஹம் லோட் ஆகே சப்கோ மாரேகா”
“ஹேய் ட்ரான்ஸ்ட்லேட்டர் இவன் என்ன சொல்றான்”
“பிரச்சின ஏதும் வந்ததுன்னா உங்களயெல்லாம் திரும்பி வந்து சுடுவார்களாம்’
“நல்லம் நல்லம் இதுவா உங்கட நன்றிக்கடன், வாழ்க இந்தியா சுடச்சொல்லு சுடச்சொல்லு, திரும்பி வந்தாச் சுடச்சொல்லு” “இயே கியா போல்தஹை”
“குச் நெஹி குச் நெஹி, அச்சா இந்தியா, அச்சா மிலிட்டரி போல்ஹை”
மொழி பெயர்ப்பாளன் புத்திசாலி, பிரச்சினையைப் பெரிதுபடுத்தாது இலகுவாக முடித்து விடுவதில்தான் கவனமாக இருந்தான் போலும், அதனால்தான் இலகு மொழி பெயர்ப்பைச் செய்தான், அவன் தமிழ் நாட்டுக்காரன் என்பதால் கூட அப்படிச் செய்திருக்கலாம், ஒரு முறை கொமெய்னி முஸ்தபாவைப் பார்வையால் அலசினான். அவன் தமிழ்ப் பற்று மிக்கவன் போல, அவர்கள் சென்ற சற்றைக்கெல்லாம் துப்பாக்கி வெடிகள் தொடர்ந்தும் ஒலித்துக் கொண்டே இருந்தன.
அன்றிலிருந்து ஓட்டமாவடிப் பாலம் உட்படப் பல பகுதிகள் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. தமது நிலைகளைப் பலப்படுத்தியதோடு ஓட்டமாவடிப் பாலத்தினை மிகவும் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பதில் இந்தியப் படையினர் ஈடுபாட்டோடி ருந்தனர். தினமும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். பாலத்தைச் சூழ மக்கள் இருப்பது எப்போதும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.
பாலைக்காட்டுவெட்டை அல்லது பாலக்காடு, பாலத்திலிருந்து வடக்குப் பக்கம் தியாவட்டவானை அடுத்திருந்த அழகிய கிராமம், அப்பாவி ஏழை முஸ்லிம்கள்தான் இங்கு வாழ்ந்தார்கள். விறகு வெட்டிகளாகவும், அன்றாடக் கூலிகளாகவும், விவசாயிகளாகவும் வாழ்க்கை வண்டியை ஓட்டிய அன்றாடங் காய்ச்சிகள். யுத்த நகர்வுகளுக்கு அப்பிரதேசம் மிக முக்கியமானது, ஆற்றோடு அண்மித்த இரகசிய நடவடிக்கைகளுக்கும், சுதந்திரமான பெருந் தாக்குதலுக்கான தயார்படுத்துதலுக்கும் கூட அவ்வூர் எல்லாத் தரப்பினருக்கும் அவசியமாக இருந்தது, புலிகளின் திட்டப்படி அவ்வூர் அவர்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். அப்படிவருவதாக இருந்தால் எல்லா மக்களையும் வெளியேற்ற வேண்டும் அதற்கான திட்டமிடல்கள் ஒருபுறம் நடக்க இராணுவ நடவடிக்கையொன்றைச் சுதந்திரமாகச் செய்ய முடியாத மனோநிலை வருத்தம் தர இராணுவத்தரப்பும் எதையாவது செய்தாக வேண்டு மென்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நிகழ்வு நடந்தேறியது.
ஒரு நாள் பாலத்தையண்டி ரோந்துப் பணியில் சென்றனர், முன்னால் எட்டு வீரர்களும் பத்தடி இடைவெளி விட்டு ஐந்து வீரர்களும் அதன் பின்னால் மூன்று மூன்று வீரர்களாயும் அணி வகுத்துச் சென்று கொண்டிருந்தார்கள், படையினர் அவதானத்துடன்தான் சென்றார்கள், பாவம் அவர்களது வருகைக்காகவே காத்திருந்து பாரிய சப்தத்துடன் வெடித்தது கிளைமோர், உடல்கள் எங்கும் சிதறிப் போக குருதி பெருக்கெடுத்தோடியது, தாக்குதலில் பதினைந்து வீரர்கள் வரை ஸ்தலத்திலேயே பலியாகினர். புலிகளுக்கு அது வெற்றிகரமான தாக்குதல், மறுபக்கத்தில் அப்பாவி மக்கள் வாழ்க்கைக்கு வேட்டு வைத்த தாக்குதலாயிற்று, அத்துடன் தொடங்கியது இந்திய ராணுவத்தின் வெறியாட்டம். பாலைநகர், தியாவட்டவானில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை வரிசையாக நிற்க வைத்தார்கள், அப்போது கிளைமோர்த் தாக்குதலின் ரத்தக்கறைகள் காய்ந்தே இருக்கவில்லை.
ஒரு ஜவான் நீட்டிய துப்பாக்கியோடு சப்தமிட்டுச்சொன்னான்.
‘ஆப்லோக் ஹெய்னா எல்ரீரீ கோ சமர்த்தன கர்ரஹா ஹே தும் சுப்கோ மார்னாசதாஹே”
மொழிபெயர்ப்பாளனும் அதே உயர் தொனியில்,
“நீங்க தானே எல்ரீரீக்கு சப்போர்ட் பன்றது, உங்க எல்லோரையும் கொல்லப் போறோம். இது எல்லாருக்கும் பாடமா இருக்கணும்” தாக்குதல் குறித்து எதனையும் அறிந்திராத அனைத்து அப்பாவி மக்களும் விறைத்துப்போய்த் தவிப்போடு நின்றார்கள்.
சமாதானத்தின் காவலர்களான அவர்களின் துப்பாக்கிகளுக்குப் புத்தி இருக்கவுமில்லை, கருணை இருக்கவுமில்லை,
கொடூரமாகச் சுட்டுத்தள்ளிய பின்னர்தான் ஓரளவு அவர்களின் உக்கிரம் தனிந்து தற்காலிகமாக ஓய்வுக்கு வந்தது. ஐம்பது பேர் வரைப் பிணமாக வீழ்ந்தனர், அதைப்பற்றியெல்லாம் சமாதானத்தின் காவலர்கள் அலட்டிக் கொள்ளவில்லை, பின்னர் எந்த மக்களையும் அவர்கள் நம்பத் தயாரில்லை, வெறி கொண்ட நாய்களாய்த் துரத்தத் தொடங்கினார்கள்.
தம்மால் இயலுமானவரை அந்தமக்கள் ஓடிக் கொண்டே இருந்தார் கள், வெறி நாய்களும் வேட்டையாடியபடி துரத்திக் கொண்டே இருந்தன. மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அகதிகளாய்த் தஞ்ச மடைந்திருந்தனர். அப்போதும் ஓயவில்லை அவர்களின் ஓட்டம். பாடசலை பாடசாலையாய் அவர்கள் அலைந்து திரிந்தார்கள், புலிகளைக் காட்டிக் கொடுக்கவில்லை யென்பதற்காகப் புலிகள் அந்த மக்களுக்கு எந்த உபகாரமும் செய்திடவில்லை, அவர்களுக்கும் தேவையாய் இருந்தது அந்த மக்களை அவர்களின் பூர்வீக மண்ணி லிருந்து வெளியேற்றி விடுவதொன்றுதான், அதைத் தட்டிக் கேட்க எந்த மனித உரிமைப் போராளியும் இருக்காதது துரதிஷ்டம் தான்.
பின்னொரு கட்டத்தில் அந்தப் பூமி அன்றாடங்காய்ச்சிகளிடமிருந்து அபகரிக்கப்பட்டது, ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராளிகளிடம் நியாயம் கேட்கும் தைரியம் யாருக்குமிருக்கவில்லை, அப்படியும் அனைத்தையும் தாண்டி நெஞ்சுரத்துடன் கேள்வி கேட்டவர்கள் அன்று மட்டும்தான் உயிரோடு இருந்தார்கள். அது விடுதலையின் தத்துவம், ஆயுத பாஷை. மனித பாஷை அவைகளுக்குப் புரியவில்லை, கூடவே இருந்து போராடிய இயக்கத் தோழன் கூட சில சமயங்களில் அதற்கு எதிரியானான். ஒரே இலட்சியத்திற்காகப் போராடும் சக இயக்கத்தவனும் எதிரியானான். இப்படி எதிரியாவதற்கு எதிர்த்துக் களமுனையில் நின்று போராடுதல் மட்டும்தான் விதியாக இருக்கவில்லை, பிடித்தால் தோழன் பிடிக்காவிட்டால் எதிரி, அது ஒரு புதிய தத்துவம், விடுதலை என்று அடைமொழி இட்டுக்கொண்ட வீர புருஷர்களின் ஆட்சிமொழி, பதியப்படாத விதிகள், அங்கீகரிக்கப்படாத சட்டயாப்பு, நாம் நினைத்தது மட்டும்தான் சரி, அதை மட்டும்தான் நாம் செய்வோம், என்று நெஞ்சுக்கு நேராகத் துப்பாக்கி நீட்டி நிறைவேற்றிக் கொள்ளப்படும், மேன்முறையீடு இல்லாத அதிகார சூனியப் பகுதி. அவர்கள் வெளியேறச் சொன்ன போது; அந்த அன்றாடங்காய்ச்சிகள் வெளியேறவில்லை, வெளியேற்றிய போது அவர்கள் விட்ட சாபங்கள் கண்ணீரோடு அப்படியே வானமண்டலத்தில் சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது, ஆயினும் மக்கள் ஆளுக்கொரு குட்டிச் சாக்குடன் தெருப் பிச்சைக்காரர்களாய் அநாதரவற்றுப் போயினர்.
கொமெய்னி முஸ்தபா எதற்குமஞ்சாத மனத்தினன். அவனுடன் கூட இருந்தவர்களும் சளைத்தவர்களல்ல, அவர்களிடம் ஆயுதம் இருக்கவில்லை, கல்வியறிவு இருக்கவில்லை, பட்டம் பதவி இருக்கவில்லை, பணம், காசு, காணி பூமி எதுவுமே இருக்கவில்லை. ஆனால் உண்மையும், வீரமும், மனிதாபிமானமும், தைரியமும் இருந்தன. கோழைகளைப் போல அவனும் தோழர்களும் முடங்கிக் கிடக்கவில்லை. எதையும் எதிர் கொள்ளும் பெரு மலையாய் அவன் உலா வந்தான். அவனால் எல்லாவற்றையும் தடுக்கமுடியாதபோதும், முடிந்தவற்றைத் தடுத்தான்.
இயலுமானவரைப் போராடினான், மனிதத்தை முன்னிறுத்தி.
“தம்பி இனியென்னடா செய்யலாம்?” ஆற்றாமையோடு முஸ்தபா பக்கத்தலிருந்தவனைக் கேட்டான்.
“இந்தியாக்காரன் பண்ணுற அட்டகாசம் கொஞ்சநஞ்சமில்ல, என்ன காக்கா நம்மலால செய்ய ஏலும்?”
கேள்விக்கான பதிலே ஒரு பிரச்சினை குறித்த கேள்வியாய் வந்து விழுந்தது,
“அவனுகள் வரப்போகக்குல ஊரப் பாதுகாத்ததே பெரிய விசயம்” “ஓமாக்கா இல்லாட்டி இன்டக்கி மண் குமியல்தான் இருந்திரிக்கும்” “இனிப் புலிய நம்ப ஏலாடா” முஸ்தபா ஆருடம் சொன்னான்
“நம்மட ஆக்கள் இப்ப என்னத்துக்காக அவனுகளுக்குப் பின்னுக்கு இழுபடுறானுகளோ தெரியல்ல”
“அதுண்டா உண்மதான் அதுக்காக அவனுகளக் காட்டிக் குடுக்க யுமேலாதானே” கொமெய்னி முஸ்தபாவின் வாதத்தில் நியாயம் தொனித்தது,
“எப்பிடிப் போனாலும், இனிப் புலியாலதான் நமக்குப் பிரச்சன, இந்தியாக்காரன் புலியப் பாத்தியா புலிக்கு சாப்பாடு குடுத்தியா? புலி எங்க இரிக்கான்? இப்புடியே வார போற எல்லாருக்கிட்டயும் கேக்கான். வயலுக்க போகேலா, காட்டுக்க போகேலா, மீன்புடிக்க ஏலா, ஒண்டும் செய்யேலா, இதுக்கெல்லாம் முடிவு இல்லியா?”
“எல்லாம் அல்லாட கைலதான் இரிக்கி”
அப்போது அரக்கப்பறக்க இரண்டு பேர் ஓடி வந்தார்கள்.
“காக்கா காக்கா நம்மளோட கூட இருந்த ரெண்டு பேரையும் எல் ரீ ரீ கடத்திட்டானுகள்”
“எப்ப?”
“இப்பதான் ஆக்கள் கண்டயாம் எண்டு சென்னாக”
“இந்தியன் ஆமிக்கி யார்ரா இயக்கத்தக் காட்டிக் குடுத்த? எண்டு கேட்டுத்தான் புழுதி கிளப்பித் தேடி இரிக்கானுகள், இவக ரெண்டு பேரையும்தான் ஒருத்தன் காட்டிக் குடுத்திரிக்கான்”
“நாம நம்மட மக்களப் பாதுகாத்தது தப்பாடா? யார்ரா அது நம்மலக் காட்டிக் குடுத்தவன்?”
முஸ்தபாவின் வார்த்தைகளில் ஆத்திரம் தொனித்தது.
“தம்பி நீ போ, போய்த் தேடு, நானும் ஒரு பக்கம் தேடுறன். அவனுக ளுக்கு விசயத்த விளங்கப்படுத்துவம் இனி யாரும் வெளிய திரியாதிங்க எல்லாரையும்தான் தேடுவானுகள் கொஞ்சம் பவுத்திரமாஇரிப்பமே’.
பரபரப்பு அவர்களில் தொற்றிக் கொண்டது.
நிமிடத்தில் அங்கிருந்து அனைவரும் மறைந்தார்கள்.
புலிகளிடம் மாட்டிக் கொண்டால் உயிரோடு எப்படியும் திரும்ப முடியாது என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது, அவர்களின் நியாயமான உணர்வுகளை புலிகளால் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாமலேயே போயிற்று.
***
இந்திய ராணுவத்தின் முகாம்.
சில இளைஞர்கள் முழங்காலில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதில் புலிகளும் இருந்தார்கள்.
பீஸ் கீப்பர்ஸ் விசாரனையைத் தொடங்கினார்கள்.
“தும் டிஹான் சே தேக்கி பதாவோ இயாபிய் எல்ரீரீ மே ஹை கி நஹி ஹே”
“புலியக் கண்டியா?”
“இல்ல சேர்”
“ஏன் காணல்ல?”
“அவனுகள் வரல்ல சேர் அதால காணல்ல”
அவன் முகத்தில் ஓங்கிக் குத்தினான். குத்து வாங்கியவனின் அலரல் எங்கும் எதிரொலிக்க ஜவான் மீண்டும் குத்தினான்.
“சத்தம் போடாதே”
அடுத்தவனை நோக்கிச் சென்றான்.
“புலியக் கண்டியா?”
“ஓம் சேர்”
“எங்க கண்டாய்?”
“காட்டுப் பக்கம்”
“அப்ப ஏன் வந்து சொல்லல்ல”
“அதுக்குள்ள நீங்க புடிச்சிசிட்டு வந்திட்டீங்களே சேர்”
அவனுக்கும் ஓங்கிக் குத்தினான் இரண்டாவது குத்து வாங்கப் பயத்தில் அவன் வலியுடன் சப்தத்தையும் மென்று விழுங்கினான்.
“இவனுக்கு வலிக்கல்ல போல”
மீண்டும் குத்தினான் இதன் பின்னரும் அவனால் வலியைப் பொறுக்க முடியவில்லை வாய்விட்டே அலரினான்.
ஜவான் அடுத்தவனிடம் போனான். எது சொன்னாலும் இரண்டு குத்து முகத்தில் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை
“புலியக் கண்டியா?”
“ஓம் சேர்”
“எங்க கண்டாய்?”
“வயலுக்கதான் சேர்”
“எவடத்த”
“எங்கட வாடிக்க சேர்”
“என்ன கேட்டான்?”
“சோறு கேட்டானுகள் சேர்”
“நீ குடுத்தியா?”
“ஓம் சேர்”
“ஏன் குடுத்தாய்?”
“துவக்கு வெச்சிருந்தான் சேர் குடுக்காட்டி சுட்டிருப்பான் சேர்”
“எப்புடி துவக்கு?”
“உங்கட துவக்கப் போல பெரிசி சேர்”
அவனுக்கும் இரண்டு குத்துகள்.
“இதுக்குப் பொறகு ஒண்டும் குடுக்கப்படாது”
ஜவான் கண்டிப்பான உத்தரவு போட்டான். அவன் உத்தரவு போட்டால் போட்டதுதான், அதை யாராலும் மீற முடியாது, ஜவானுக்காகக் கூஜா தூக்குவதற்கென்றே பலர் இருந்தார்கள், புலி வேட்டை கைகூடாத போதெல்லாம் மக்கள் துன்பப்படுவது இயல்பாகிப் போனது, அதைத் தடுப்பார் யாருமிருக்கவில்லை. யாரேனும் அவர்களுக்குப் புரியும்படி சொன்னால் கூட, சில வேளை காப்பாற்றிவிடலாம். ஆனால் அதன் பின்னர் விடுதலைப் புலிகளைச் சமாளிப்பது எப்படி? அது தெரியாமல் எல்லாக் கொடுமைகளையும் அனுபவித்தார்கள். எதுவரை எல்லாம்? மரணம் வரை மட்டும்தானே. “இந்தக் கொடுமையெல்லாம் யாரிடம் சொல்வது” ஒருவன் அழகு தமிழில் புலம்பினான்.
அடி வாங்காது தப்பித்துக் கொண்ட புலி உறுப்பினன் கொடுப்புக் குள்ளால் சிரித்தான்.
***
விடுதலைப் புலிகளின் அலுவலகம்,
அரசியல்துறைப் பொறுப்பாளன் எஸ்பி சன்முகராஜா விசாரித்துக் கொண்டிருந்தான்.
இரண்டு பேர் கைகள் கட்டப்பட்டு நிர்வாணக் கோலத்தில் நிலை குலைந்து கிடந்தார்கள் அவ்வளவு அடிகளையும் தாங்கி உயிரோடு இருப்பதே பெரிய விசயம்,
“ஏண்டா இந்திய ராணுவத்துக்கு எங்களக் காட்டிக் குடுத்த”
“நாங்க காட்டிக் குடுக்கல்ல அண்ணே”
“நீங்கதானேடா கொடி புடிச்சிக்கிட்டு வழியக் காட்டினிங்களாம்”
“அது அவனுகள் ஊராக்கல சுட்டுப் போடுவானுகள் எண்ட பயத்துல பேசிக் கூட்டியந்தம் அண்ணே”
“அப்போ நாங்க செத்தா பறவாயில்லியாடா?”
“அப்பிடி இல்லண்ணே, காட்டிக் குடுக்கிறதெண்டா ஊருக்குள்ள யார் யார்ர ஊட்ல கேம்பு அடிச்சிரிக்கிங்க எண்டு எல்லாத்தையும் காட்டிக் குடுத்திருப்பம், நாங்க அப்பிடிச் செய்யல்லியே”
“ஊருக்குள்ள உள்ள கேம்புகளையும் காட்டிக் குடுப்பிங்களா? அடிங்கடா இவனுகள்”
அவர்கள் அடித்தோய்ந்த போது மிகவும் வலியால் துடித்த ஒருவனின் முடியைப் பிடித்து இழுத்தபடி எஸ்பி மீண்டும் கேட்டான், “சொல்லுடா யாருடா உங்கட தலைவர்?”
கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஒருவன் நெடிய ஊசிக் கம்பியால் புட்டத்தில் ஓங்கிக் குத்தினான். இரத்தம் பிசிறியடித்தது.
அவன் அலறக் கூட சீவனற்றிருந்தான்.
“ஒண்டும் செய்ய மாட்டம், ஆளச் சொல்லுங்க உங்களயும் விட்டுடுவம்”
புட்டத்தில் ஊசியால் குத்துப்பட்டவன் மெதுவாக முணங்கினான்.
“மு..ஸ்..தபா…”
“டேய் சொல்லாதடா பாவம்டா அவன், நாம செத்தாலும் பறவல்ல சொல்லாதடா”
மற்றவன் அவ்வளவு வலியோடும் இவனைத் தடுத்தான்.
எஸ்பி அவன் முகத்தில் ஓங்கி உதைத்தான்.
“நீ சொல்லுடா எந்த முஸ்தபா?”
“அல்லாவுக்காக சொல்லாதடா… வானாடா அவன் அப்பாவிடா” மற்றவன் கெஞ்சினான்.
“இதுக்கு மேல ஏலாடா.. தாங்க ஏலாடா” சுருதியிழந்த தீனமான குரலில் இயலாமையை வெளிப்படுத்தினான்.
“நீ சொல்லுடா” மீண்டும் முகத்தில் இடி விழ குருதி கொப்பளிக்க பற்கள் எங்கும் சிதறின, எஸ்.பி.யின் அடியாள் திமிறிக் கொண்டு நின்றான். தமது பேரெதிரியைக் கண்டு பிடிக்கப் போகும் களிப்புடன்.
“கொமெய்னி முஸ்தபா.. வாழச்சேன.. கொமெய்னி முஸ்தபா”
“அந்த நாயா காட்டிக் குடுத்தவன், இவனுகள் ரெண்டு பேரையும் கொல்லுங்கடா, அதுக்கு முதல் குழாயொண்டு கொண்டு வாங்கடா”
ஒருவன் ஒரு அங்குல விட்டமுள்ள நீண்ட குழாயைக் கொண்டு வந்து கொடுத்தான்,
கொமெய்னி முஸ்தபாவைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்று தடுத்தவனின் பின் துவாரத்தில் அதை நுழைத்தான், அவனின்` கதறலுக்கூடே குழாய் குதத்தையும் தாண்டிக் குடல்வரைச் சென்றிருந்தது, முள்ளுக் கம்பியை எடுத்து குழாயினுள்ளால் நுழைத்துவிட்டுக் குழாயை வெளியே எடுத்தான், முள்ளுக் கம்பியைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுத்தினான் எஸ்.பி.
முஸ்தபாவின் தோழன் இறைவனை அழைத்துக் கதறினான், அவன் கதறலுக்கு அப்போது பதில் சொல்ல யாருமிருக்கவில்லை இறை நம்பிக்கை மட்டும் அவனின் ஒரேயொரு பற்றுறுதித் தளமாய் இருக்க சுத்திக் கொண்டிருந்த முள்ளுக்கம்பியை வேகமாக வெளியே இழுத்தான் எஸ்பி. அவனின் அலரல் எங்கும் எதிரொலிக்க குடல், குருதி, மலம், சலம் எல்லாம் பின் துவாரத்தால் பிசிறியடித்தன, ஆற்றாமையால் சரிந்து விழுந்தான்.
அவர்கள் இருவரது தலையையும் முத்தமிட்டபடி துப்பாக்கிகள் வெடிக்கத் தயாராய் இருந்த போது விழுந்தவன் சொன்னான், “டேய் எஸ்.பி ஒண்ட சாவு தூரத்தில இல்லடா, நம்பிக்கத் துரோகி. நீயும் துரோகியாத்தாண்டா சாவாய், நாய விடக் கேவலமாச் சாவாய்டா, அல்லா உன்ன சும்மா உட மாட்டாரர்… ஆ…” இரண்டு துவக்குகள் ஒருமித்து வெடித்தன.
மாலையாகிய போது புலனாய்வுத் தகவல்களுடன் எஸ்பியின் படை கொமெய்னி முஸ்தபாவைத் தேடிச் சென்றது.
சூரியன் அஸ்தமித்து மைனாக்களின் மதுரமான ஓசை எங்கும் வியாபித்திருக்க மஃரிபுத் தொழுகைக்காக அதான் ஒலித்தது. கொமெய்னி முஸ்தபா அவரது ராத்தா ஊற்றிக் கொடுத்த தேநீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தார். ஈரானில் புரட்சி வெடித்து இஸ்லாமிய ஆட்சி மலர்ந்து, குமைனில் பிறந்த ரூஹூல்லாஹ் என்ற இமாம் கொமெய்னி இரானியர்களின் ஹீரோவான போது தனது பெயருக்கு முன்னால் கொமெய்னி என்ற பெயரைச் சூட்டிக் கொண்ட முஸ்தபாவை கொமெய்னி முஸ்தபா என்று அழைத்தால்தான் தெரியும் என்றளவுக்கு அதுவே பெயராக ஒன்றித்துப் போயிட்டு, தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே அவனின் சகோதரி கேட்டாள்.
“என்னடா தம்பி ஊருக்குள்ள எல்லாரும் பயமுறுத்துறாக”
“அதெல்லாம் உடாத்தா, சாவு வார டைம்ல வரும் அத யாரும் தடுக்கேலா”
“புலி ரெண்டு பேரக் கடத்திட்டுப் போனயாமடா’
“இப்ப உசிரோட வெச்சிரிக்கமாட்டானுகள், அவனுகள் நினச்சது தான் சட்டம், ஒரு வகையில பாத்தா லத்தீபுட ஆக்கள் செய்றதும் செரிதான், எதையும் யாரும் தடுக்கேலா, சில நியாயம் உலகத்துக்கு
தெரியவராது, சிலது பிழையாத் தெரியும் ஆனா உண்ம என்டைக் காவது வெளியாகும் ராத்தா, கலீல் வந்தாச் செல்லுங்க புலியையும் நம்ப வானா இந்தியனையும் நம்பவானா, இந்த ஜிஹாதெண்டு திரியிறவனுகளையும் நம்ப வானா, எல்லாரும் சத்திராதிகள்”
“உனக்கென்னத்துக்குடா, இந்தத் வேல்லாத வேலையெல்லாம், உட்டுப் போட்டுவேலையப் பாரு பாப்பம்’
“அப்புடியில்ல ராத்தா, நம்மட பிரச்சினய நாமதான் பாக்கனும், இல்லாட்டி யாரு ராத்தா சனத்தப் பாதுகாக்கப் போறாங்க”
“அதில்லடா உனக்கு என்னசரி நடந்தா யாருடா வந்து பாக்கப் போறாங்க, கஸ்டம் என்டு வந்தா அது நம்மலோடதான்டா அதாலதான் செல்றன் உனக்குத் தேவல்லாத ஒன்டுக்குள்ளயும் தல போடாத, நமக்கு ஊர் வம்பு வானாடா”
“இப்பிடியே எல்லாரும் ஊர் வம்பு நமக்கென்னத்துக்கு என்டு ஒதுங்கினா என்ன நிலம? அப்பிடி இரிக்கப்படா ராத்தா, மத்த ஆக்களுக்கு நம்மலால ஏதாவது நல்லது செய்ய ஏலுமென்டா அதச் செய்யனும், இல்லாட்டி மனிசனாப் பொறந்ததுல என்ன அர்த்தம் இரிக்கப் போவுது? சரியாத்தா நான் பள்ளிக்கிப் பெய்த்து வாரன்”
“நான் செல்லுறத்தச் செல்லிட்டன் உன்ட புத்தி சாகவும் காணும் பொழைக்கவும் காணும், இந்தக் காலத்துல யாரு ராத்தாமாருட செல்லுக் கேக்காக”
இருள் எங்கும் விரைந்து பரவி சூழல் நிசப்தமான பொழுதில் கொமெய்னி முஸ்தபா பள்ளி நோக்கிச் செல்ல செருப்பைக்காலில் மாட்டினான் ராத்தாவின் பேச்சைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை, அவளும் எல்லாப் பெண்களையும் போல தனது உடன்பிறப்புக்கு ஏதம் நேர்ந்துவிடக் கூடாது என்ற அங்கலாய்ப்பில் புலம்புகிறாள் என்றுஎண்ணியபடி மீண்டும் தனது சகோதரியைப் பார்த்து அவன் பிரியாவிடைக் குரல் கொடுத்தான்.
“ராத்தாவாரன்”
“அல்லாட காவல்”
விடை பெற்றுக் கொண்டு வாசற்கதவை நோக்கி நடந்தவனை வழியனுப்பி வைத்தாள் விபரீதம் எதுவும் தெரியாமலேயே.
கொமெய்னி முஸ்தபா வாசலைத் தாண்டிக் கூட இருக்க மாட்டார், பட்…பட்…படபடபட வென்று ஒற்றையாய்த் தொடங்கி எண்ணிக்கையின்றி வெடித்தோய்ந்தது துப்பாக்கி.
குருதி பெருக கொமெய்னி முஸ்தபாவின் வெற்றுடல் மண்ணில் சரிந்தது. ராத்தாவின் அலரல் அண்டமெங்கும் எதிரொலித்தது. காட்டிக் கொடுத்தவனைச் சுட்ட திருப்தியில் புலிப்படை வெற்றி நடை போட்டது.
புரட்டப்படாத பல பக்கங்களோடு கொமெய்னி முஸ்தபா என்ற சரித்திரம் மூடப்பட்டது.
***
குறிப்பு: தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்குப் பிராந்திய அரசியல் துறைப் பொறுப்பாளர் எஸ்.பி.சண்முகராஜா தமிழீழ இசைக் குழுவைத் தோற்றுவித்தவர், வழிநடாத்தியவர், புலிகளுக்காகவே வாழ்ந்தவர், தளபதி கருணாஅம்மானின் பிளவோடு கையில் கிடைத்த காசோடு கொழும்பில் தஞ்சமடைந்து, கொஞ்ச நாள் ராஜபோக வாழ்வை அனுபவித்து விட்டுப், பின்னர் தனது குழுவோடு வன்னியில் புலிகளிடம் சரணடைந்தார். துரோகம் ஒரு முறைதான் செய்ய முடியும், அந்த வகையில் சரணடைந்தவர்கள் எல்லோரும் தீவிர விசாரனையின் பின்னர் மன்னிப்பு அங்கீகரிக்கப்படாது, நிர்வாணக் கோலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுப் பின்னர் எரிக்கப்பட்டனர், துரோகிகளின் உடல் தமிழீழத்தில் விதைக்கப்படுவதில்லை.
– ஹராங்குட்டி சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2012, செய்ஹ் இஸ்மாயில் ஞாபகாரத்த பதிப்பகம், இலங்கை.