கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 7,305 
 
 

நாங்கள் மலை அடிவாரத்திற்குப் போனபோது விடிந்திருந்தது. வெளியே சற்றுக் குளிரும் பனிப்புகாருமாக இருந்தது. கொஞ்ச நேரம் பஸ்சிற்குள்ளே இருந்துவிட்டு மலை ஏறத் தொடங்கினோம். ‘தாயினும் நல்ல தலைவரென்றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்’ அப்பா தேவாரம் பாடிக் கொண்டு படிக்கட்டுகளின் வழியே நடந்தார். அம்மாவும் அக்காவும் நானும் அவரைப் பின் தொடர்ந்தோம். அத்தான் தன் நண்பர்களுடன் எங்களுக்கும் பின்னாலே வந்து கொண்டிருந்தார். எல்லாரது நெற்றியிலும் திருநீறு சந்தணம்.

“நேற்று சிவராத்திரி என்ன சிறப்பாக நடந்திருக்கும். சே! பாக்க முடியால் போட்டுதே!” என்று அம்மா மனம் வருந்தினார்.

திருக்கோணேஸ்வரம் ஆலயம் ஈழத்தின் கிழக்கேயுள்ளது. மனுராசன் என்ற மன்னனால் கட்டப்பட்டது. பின் இக்கோயிலை முதலாம் குளக்கோட்டன் என்ற சோழ அரசன் புனருத்தாரணம் செய்தான். இங்குள்ள சிவலிங்கம் சிவபக்தனாகிய இராவணனால் ஸ்தாபிக்கப்பட்டது. போத்துக்கேயரினால் இக்கோயில் அழிக்கப்பட்டபோது விக்கிரகங்களை தமிழர்கள் நிலத்துக்குள் புதைத்து வைத்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு அதே இடத்தில் கோயில் மீளவும் கட்டப்பட்டது. பின்னர் கிணறு வெட்டும்போது விக்கிரகங்களைக் கண்டெடுத்த மக்கள் கோயிலில் அவற்றை வைத்தார்கள். அம்மா கோவிலைப்பற்றிய விளக்கம் தந்தார்.

இடையே மான்கள் கூட்டமொன்று மலையின் சரிவிற்கு இடப்புறமாக புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதற்குப் பக்கத்தே ‘ஆமிக் காம்ப்’ ஒன்று புதிதாக முளைத்திருந்தது. கோனேஸ்வரம் அமைந்துள்ள பிரடெரிக் கோட்டை பாதுகாப்புவலையமாக இருப்பதால் பாதுகாப்புப் படைகள் காவல் செய்கின்றனர். பள்ளிகூடப் பிள்ளைகளும் பெரியவர்களும் தேவாரம் பாடிக்கொண்டு மலையிலிருந்தும் கீழிறங்கி வந்து கொண்டிருந்தனர். மேலே ஏற ஏற கோபுரம் தெரிகிறது. தூரத்தே மூன்று புறமும் ஆர்ப்பரிக்கும் கடல். நடுவே உயர்ந்து நிற்கின்றது குன்று. பெரிய மரங்கள் சடை விரித்திருந்தன. மரங்களிலும் கோயிலிலும் குரங்குகள் தாவிப் பாய்ந்தன. இயற்கை அழகு எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. அற்புதமான காட்சி.

மலையின் கிழக்குப்புறத்தே இராவணன்வெட்டு ‘வி’ போன்ற உருவில் மலையைப் பிளந்து கொண்டு வாய் விரித்திருந்தது. நாங்கள் அதை வேடிக்கப் பார்த்துக் கொண்டு நின்றோம். “முதலிலை பூசையைப் பாப்பம். பிறகு ஆறுதலா எல்லாத்தையும் சுத்திப் பாக்கலாம்” என்றார் அப்பா. அவர் சொன்னால் சொன்னதுதான்.

கோயிலில் பூசை முடிந்தது. இராவணன்வெட்டை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. உள்ளே எட்டிப் பார்க்கப் பயமாக இருந்தது. அதற்குள் கற்களைப் பொறுக்கி எறிந்தோம். ஒவ்வொரு கற்களும் கீழே நீரில் விழுந்ததாகத் தெரியவில்லை. அருகே கிடந்த பெரிய கல்லை எடுத்து அதையும் எறிந்து பார்த்தோம். என்ன ஆச்சரியம்! பாதி வழி போன கல்லு திடீரென்று மாயமாக மறைந்தது. “பாறை கீழ் நோக்கிப் போகப் போக உள்நோக்கி வளைவதால் கற்கள் போய் தண்ணீரில் விழுவதை எங்களால் பார்க்க முடிவதில்லை” என்று அத்தான் விளக்கம் சொன்னார். அவர் பள்ளிக்கூடத்தில் ‘சயன்ஸ்’ படிப்பிக்கினார்.

திடீரென அங்கே ஒரு கிழவர் தோன்றினார். அவர் மெல்ல மெல்ல அடியெடுத்து எங்களை நோக்கி வந்தார். கிழவரின் கைகள் நடுங்கின. நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவர் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாணயக்குற்றிகளைக் கொடுத்தார். பித்தளை போன்ற உலோகத்திலான பெரிய வட்ட நாணயங்கள். “இவை இராவணன் காலத்து நாணயங்கள். இவற்றை தண்ணீரிலே எறிந்து பாருங்கள்” என்று மெல்லிய குரலில் சொன்னார். ஒவ்வொன்றாக அவற்றை நீரினுள் எறிந்தோம். என்ன ஆச்சரியம்! எல்லாமே நீரினில் விழுந்து தண்ணீர் தெறித்ததைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. அத்தானின் விஞ்ஞான விளக்கம் பொய்த்துப் போயிற்று. அத்தானும் எறிந்து பார்த்து ஆச்சரியப்பட்டார். ஞாபகத்திற்காக இன்னுமொரு நாணயத்தை அந்த முதியவரிடம் பெற்றுக் கொள்ள விரும்பினேன். “ஐயா பெரியவரே! இன்னுமொரு நாணயத்தை எனக்குத் தருவீர்களா?” என்று கேட்டுக் கொண்டே அவர் நின்ற பக்கம் திரும்பினேன். அவரைக் காணவில்லை.

– ஏப்ரல் 2009

கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை "இனி ஒரு விதி செய்வோம்" ஈழநாடு வாரமலரில் வெளியானது. இவர் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். நோர்வே தமிழ் சங்கம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *