கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 3,947 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சேலம் பேருந்து நிலையத்தில் ஏற்காடு தடப் பேருந்துகள் நிற்கும் பாந்துகளில் ஒரு வண்டியும் இல்லை. மற்ற நேரங்களில் எப்போதும் ஒரு வண்டி சிலர் மட்டும் ஏறி அமர்ந்து காத்திருக்க, கிடக்கும். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது காரணமாக இருக்கலாம். அந்த ஆண்டின் பள்ளிகள் திறப்பதற்கு முன்பான இறுதி நாட்கள் என்பதால் இருக்கலாம்.

காலை ஒன்பதரை மணிக்கே வெயில் கத்தியால் கீறிக்கொண்டிருந்தது. ஏதோவொரு வண்டி. சாக்குக் கட்டியால் பெயர்ப் பலகையில் ‘ஏற்காடு’ என எழுதியது வந்து சரக்கெனத் திரும்பி நின்றது.

ஏற்கெனவே வண்டியினுள் முக்கால்வாசிப் பயணிகள் இருந்தனர். நம் மக்களில் பலருக்கும் பஸ் பிடிப்பதில் தந்திரமும் முன்யோசனையும் இருக்கிறது. சிலர் இறங்க முயற்சிக்க, வெகு சனம் ஏற முயன்றது.

இரண்டு திறப்புகளிலும் ஆணும் பெண்ணுமாய் இரு சனக் கூட்டம். அவன் எப்போதும் முண்டியடித்து ஏறுபவன் அல்ல. வாழ்க்கையில் எந்தக் காரியத்துக்கும் எந்தக் கட்டத்திலும். எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கும் போதும் நிதானமாய் நடந்துகொண்டிருப்பவன். இலக்கிய முகாம்களில் கூட சாப்பிடப் போகும் போது கிண்ணங்கள் காலியாகி இருக்கும். அதை நிதானம் எனலாம். கூச்சம் எனலாம். பயம் எனலாம். கோழைத்தனம் எனலாம்….

நின்று கொண்டேகூட பயணம் போகும் தூரம்தான். கூடிப்போனால் ஒரு மணி நேரம், முப்பது சொச்ச கிலோமீட்டர்கள். நின்றுகொண்டு நெடுந் தொலைவு பயணம் செய்வது அவனுக்குப் புதியதும் அல்ல.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட எழுத்தாளர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் ஒன்றிருந்தது. அவனும் அழைக்கப்பட்டிருந்தான். மாட்டுப் பொங்கலன்று விழா. நூறு ரூபாய்க்கு ஒரு ‘பன்ன’ விடுதியில் மூத்திரம் நாறும் அறை போட்டிருந்தார்கள். அடுத்த நாள் அலுவலகம் இருந்ததால் அன்று இரவே ஒன்பது மணி சொகுசுப் பேருந்தில் ஒரு இருக்கை ‘பிளாக்’ செய்யப்பட்டிருந்தது.

சிறப்புக் கூட்டம் மாலை நான்கு மணிக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அரை மணி நேரம் தாமதம் என்பது நமது கலை, இலக்கிய, பண்பாட்டு நிகழ்ச்சிகளில் அசாதாரணமானது அல்ல. நாலரைக்கு ஆரம்பித்து எட்டரைக்கு முடிந்தால் கூடப் பேருந்தைப் பிடித்துவிடலாம் என மெச்சுப் போட்டிருந்தான்.

விழாவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர் தலைமை தாங்கி நடத்துவதாக இருந்தது. அவர் நாலரை மணிக்குத்தான் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டதாகச் சொன்னார்கள். அங்கே விழா மண்டபத்தில், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் கூட்டம் ஒன்பது மணி வரைக்கும்

தொடங்காமலிருக்கும் போது ‘அழைக்கின்றார், அழைக்கின்றார், அழைக்கின்றார் அண்ணா ‘ எனப் பாடும் நாகூர் ஹனீஃபா போன்று பாடுவோரும் இல்லை.

பாராட்டுப் பெறுவோர் கூட்டத்தில் ஹெப்சிபா ஜேசுதாசன், சுந்தர ராமசாமி, பொன்னீலன், ஐசக் அருமைராசன், நீல. பத்மநாபன், ஜெயமோகன் ஆகியோர் இருந்தனர். தல இலக்கியவாதிகளில் பலரும் இருந்தனர். உரையாடல்களில் நேரம் கடந்து கொண்டிருந்தது.

துணைவேந்தர் வந்துவிட்டார் எனவும் குளிர்ப்பதன விடுதி அறையில் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு, பயணக் களைப்பு நீங்கிப் புறப்படுவார் என்றும் சொன்னார்கள். மறுபடியும் முகச் சவரம் செய்து, குளித்து, சபாரி உடைகள் பொருத்தி, ஒப்பனைகள் நிறைவு செய்து புறப்பட்டு வர ஏழரை மணி ஆகிவிட்டது.

பாராட்டு விழாவில் ஒரு பொன்னாடை போர்த்துவார்கள். ஏதேனும் சில – எந்தக் காலத்திலும் படிக்க முனையாத புத்தகங்கள் பரிசளிப்பார்கள். இதற்குப் போய் இந்தக் காத்திருப்பு தேவையா எனப் பட்டது. என்றாலும், அவையில் நிறையப் பேர் இலக்கியக் குடும்பம். கல்யாண வீட்டுக் களை இருந்தது.

சொற்பொழிவு நடந்துகொண்டிருந்தது. மேடையில் எட்டுப்பத்துத் தமிழின் நவீனப் படைப்பாளிகள் ‘சிவனே’ என உட்கார்ந்திருந்தனர். வயது முதிர்ச்சி அடிப்படையில் படைப்பாளியின் சிறப்புகள் பற்றி, பேராசிரியர் ஒருவர் சொற்பொழிவு, கட்டுரை வாசிப்பு, வாழ்த்து மடல் எனும் பாங்கில் போய்க்கொண்டிருந்தது. துணைவேந்தர் இரண்டு மாமாங்கங்கள் இலத்தீன் அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் பயிற்றுவித்துக்கொண்டிருந்ததால் மேடையில் அமர்ந்திருந்த எந்தப் படைப்பாளியின் எந்தப் படைப்பையும் வாசித்ததில்லை.

ஒவ்வொரு பாராட்டுரை முடிந்த பின்பும் படைப்பாளியைப் பாராட்டி, பொன்னாடை அணிவித்து இஸ்லாமியப் பாணியில் தோள் தழுவி, பித்தளைக் கும்பா போன்ற சாதனம் ஒன்றும் கொடுத்தார். ஈயம் பூசி வைத்தால் பழையது குடிக்க வாகாக இருக்கும். பின்பு படைப்பாளியின் ஏற்புரை. வயது அடிப்படையில் ஹெப்சிபா முடிந்து சு.ரா. நடந்துகொண்டிருந்தது. நல்லவேளையாக நகுலன், ஆ.மாதவன், பா. விசாலம், மா. அரங்கநாதன் ஆகியோர் வரவில்லை . இல்லையென்றால் பாராட்டு விழா முடிய அதிகாலை மூன்று மணி ஆகிவிடக் கூடும்.

பொன்னீலன் பாராட்டுப் பெற்று வந்தார். பித்தளைக் கும்பாவைத் திரும்பத் திரும்பப் பார்த்தார். கும்பாவின் நடுவில் துளை போட்டு ஐயன் திருவள்ளுவரின் சிலையின் பிளாஸ்டிக் மாடலை நிறுத்தி, போல்ட் போட்டு முறுக்கி இருந்தனர். துக்கம் பொங்கச் சொன்னார் –

“கும்பாக்க நடுவிலே ஓட்டை போட்டுட்டானுவோ. வத்தல் மொளவோ ஈருள்ளியோதான் போட்டு வய்க்கலாம்”

அவனுக்குச் சிரிப்பாணி வந்தது. சிரித்துப் பயனில்லை. எப்படியும் ஒன்பது மணிப் பேருந்து போய்விடும் – பாராட்டுகளை தூத்து, வாரி சாக்கில் போட்டுக் கட்டி தோளில் சுமந்து, விடுதி அறையைக் காலி செய்து, பெட்டியை எடுத்து மீள்வதற்குள்

கூட்டம் முடிய ஒன்பதே முக்காமல் ஆகிவிட்டது. சொல்லிக்கொண்டு புறப்பட நேரமில்லை. இரவுச் சாப்பாட்டுக்கு நேரமில்லை . அவசர அடியாக ஒரு செந்துளுவன் பழம் தின்றதோடு சரி.

பெட்டி, பிளாஸ்டிக் பையில் தொங்கிய பொன்னாடை, சந்தன மாலை, பித்தளைக் கும்பா, பாராட்டுரை சேகரம் சகிதம் பேருந்து நிலையம் வந்தபோது பத்தேகால் மணிக்கு ஒரு பேருந்து கூட இல்லை. ஆயிரம் சனம் அலை பாய்ந்தது. விடுமுறை முடிந்து வேலைக்கு, கல்லூரிக்குத் திரும்புபவர்கள். திருநெல்வேலி, மதுரை வண்டிகள் கூட இல்லை. பித்தளைக் கும்பா வகையறாக்களையாவது விழாவுக்கு வந்த தம்பி கையில் தந்திருக்கலாம். அலவலாதித்தனம்.*

வேகமாக, கன்யாகுமரியில் அல்லது மார்த்தாண்டத்தில் இருந்து புறப்பட்ட திருவள்ளுவர் வந்து சரக்கெனத் திரும்பி நின்றது. “ஸ்டேண்டிங்தான்… சென்னை டிக்கட் மட்டும் ஏறுங்க” என்றார் நடத்துனர். மதுரைக்குப் பிறகு சென்னையும் கோவையும் சம்பந்தமில்லாத பாதைகள். வருவது வரட்டும் என்று சத்தம் மூச்சுக் காட்டாமல் உள்ளே நுழைந்து நடு வண்டியில் போய் நின்றான். சற்று நேரம் இரைந்த பிறகு மதுரைக்குப் பயணச்சீட்டு தந்தார். மதுரை வரை நின்று தூங்கி விழுந்தவாறு நள்ளிரவுப் பயணம் – அது ஒரு காலம்.

ஆனால் ஏற்காடு வரை, பட்டப் பகலில் ஒரு மணி நேரம் நின்று பயணம் செய்ய இயலாதா? கையில் பெட்டி, பை எதுவும் இல்லை. கையில் கீர்த்திலால் காளிதாஸ் நகைக்கடை துணிப்பையில் வீட்டில் செய்த எண்ணெய்ப் பலகாரப் பொதி மட்டும்.

எதற்கும் அடுத்த வண்டி போகட்டும் என்று நின்றான். திரும்பிப் போகும் உத்தேசமில்லை. காலை ஐந்தேகாலுக்கு கோவையில் இருந்து புறப்படும் ‘குர்லா எக்ஸ்பிரஸ்’ பிடித்தது. ‘பேன்ட்ரி கார்’ வழங்கிய மூன்று இட்லி, ஒரு வடை வயிற்றில் கிடந்து மிதந்துகொண்டிருந்தது. ஒரு தேநீர் குடித்தால் கொள்ளாம். இனி ஏற்காடு போய்ப் பார்த்துக்கொள்ளலாம்.

அடுத்த பேருந்தில் இடம் இருப்பதுபோல் தெரிந்தது. உள்ளே ஏறிப் பார்த்தபோது காலியான இருக்கைகள் மீது கூடைகள், துண்டுகள், கைக்குட்டைகள், பைகள், கைப்பிள்ளைகள், அந்த நொடியில் பிரசவம் ஆவதுபோல் அகலப் பிளந்த தொடைகள். ஒருவர் மூன்று இருக்கைகளிலும் அனந்தசயனமாகப் பரவிக் கிடந்தார். இரண்டு இருக்கைகளில் ஆளில்லாதது போலிருந்தது. நெருங்கிக் கேட்டதும், “இல்ல… ஆள் வருது” என்றனர். மீதி வாழ்க்கையைப் பேருந்து இருக்கையிலேயே செலவழிக்கப் போவதுபோல் பெண்டுகள் இடவசதிக்காக வழக்கிட்டுக் கொண்டிருந்தனர்.

நல்லவேளையாக உடனே நகர ஆரம்பித்தது பேருந்து. பத்தரை மணிக்குள் ஏற்காடு எத்திவிடுவதாக அண்ணனிடம் சொல்லியிருந்தான். அவன் அங்கு வேலையாக இருந்தான். அவசரமாகச் சில செலவுகள் இருந்தன. நேரில் வந்து வாங்கிக்கொள்ளச் சொல்லி இருந்தான். சாப்பிட்டு வெயில் தாழ்ந்து மடங்கினால் முன்னிரவில் வீடு போய்ச் சேர்ந்துவிட இயலும். அவசரப் பயணம். ஏற்காட்டின் குளிர்காற்று கொள்ளும் மனநிலை இல்லை.

நகரத்துச் சாலைகளில் பேருந்து ஓடிக்கொண்டிருந்தது. சேலத்துப் புழுக்கத்தை மாற்றிக்கொண்டிருந்தது காற்று. அவரவர் கதையாடல்களில் ஆழ்ந்திருந்தனர். இருக்கை வாய்த்தவர் முகத்தில் இருந்த பெருமிதமும், நின்றுகொண்டு வந்தவர் முகத்தில் இருந்த கடுப்பும் மாய, யதார்த்தம் பொருந்த இலக்கை யோசித்தவாறிருந்தனர்.

மலை எந்த உற்சாகமும் காட்டாமல் சோம்பிக் கிடந்தது. எத்தனை வண்டி மரம் தினமும் கீழே இறங்கிக்கொண்டிருக்குமோ?

அன்று மலைமேல் அமைச்சர் பங்குபெறும் மலர்க் காட்சி அல்லது காய்கனிக் காட்சி அல்லது வன விழா இருக்கிறது என்றனர். நெருக்கடி நிறைந்த வாகனப் போக்குவரத்து. இரு சக்கர வாகனங்களில் இணை இணையாக. இந்தியாவில் உற்பத்தியாகும் அனைத்து கார்களும், வேன்களும், ஜீப்புகளும்.

மலைப் பாதையின் காப்புச் சுவர்களில் வானரங்களும், மந்திகளும் குட்டிகளுமாய் குந்தியிருந்தன. பயணிகள் எறியும் வாழைப்பழங்கள், பன் ரொட்டிகள், பிஸ்கட்டுகளுக்காகக் கையேந்தி. மூன்று ஆண்டுகளாகச் சரியாக மழை இல்லை. காடு வறண்டு கிடந்தது. ஓடைகள் காய்ந்துவிட்டன. எதைத் தின்று சீவிக்கும் இவை என யோசிக்க வருத்தமாக இருந்தது. சுதந்திரமானதோர் உயிரினம் மனிதனிடம் கையேந்திக் கிடந்தது.

எல்லோரும் உல்லாசமான நிலையில் இருந்தனர். முதல் கொண்டை ஊசி வளைவில் ஓட்டுனரின் சிரமம் தெரிந்தது. பெரிய மலையேறத் தோதில்லாத வண்டி ஓட்டுனருக்கும் மலையேறிய பழக்கம் இருந்ததாகப் புலப்படவில்லை .

முன்னகர்ந்து, பின்னகர்ந்து, மறுபடியும் முன்னகர்ந்து, ஒதுங்கி, இறங்கும் வாகனத்துக்கு வழியும் விட்டு, மறுபடியும் முன்னகர்ந்து, இடையில் அவசரப்படும் இரு சக்ரதாரிகளுக்கு மனமுவந்து வழிவிட்டு, மறுபடியும் இரண்டாவது கொண்டை ஊசி வளைவு.

இப்படியே கழக முன்னணிப் பேச்சாளர்கள் பாணியில் வீராணத்திலிருந்து சென்னைக்கு ஒவ்வொரு நீரேற்று நிலையத்திலும் பம்ப் செய்வதை விவரிக்கும் விதத்தில், கொண்டை ஊசி வளைவுகளில் வண்டி சமாளிக்கும் வேலையைச் சொல்லிக்கொண்டு போகலாம். அல்லது தேசியக் கட்சியின் இலக்கியச் செல்வர்கள் மனிதனைக் கிணற்றுப் படிக்கட்டுகளில் அபாயகரமாக நிறுத்தி வைத்துக்கொண்டு ‘மேலே புலி, கீழே பாம்பு’ எனப்படும் அவஸ்தையைச் சொல்வது போலவும் சொல்லிக்கொண்டு போகலாம். நேரம் கொல்வதோ, பக்கம் களைவதோ நமது உத்தேசமில்லை.

ஆறாவது கொண்டை ஊசி வளைவைப் பேசித் தீர்க்க முனைந்த பேருந்து, ‘என்னைப் பெத்த அம்மா’ எனப் புலம்பி மறுக ஆரம்பித்தது.

மலையேறத் தெரிந்த ஓட்டுனர்களும், மலையேறும் திறனுள்ள பேருந்துகளும் முந்தி முந்திப் போக ஆரம்பித்தன. பேருந்தினுள் முனகல் ஒலி பெருகலாயிற்று. எட்டாவது கொண்டை ஊசி வளைவு அடையும் போது புறப்பட்டு ஒன்றரை மணி நேரம் ஆகியிருந்தது. இன்னும் கரை கண்ணுக்குத் தெரியவில்லை. நீர்ப் பறவைகளின் சிறகடிப்புகள் இல்லை . பயணிகளுக்கும் நடத்துனருக்கும் காரசாரமான

வெற்று வாதங்கள் ஆரம்பமாயின.

குரல்கள்

1 : மலை ஏறாத லொடக்கு பஸ்ஸை எதுக்கய்யா எடுத்துக்கிட்டு வந்து கழுத்தை அறுக்கறீங்க?

2. டிரைவர் முன்னே பின்னே மலை பார்த்திருக்காரா?

3. சபரிமலை ஏறியிருக்காரு.

4. பிள்ளை குட்டியளோட நாங்க எப்ப போயிச் சேரதுக்கு?

5. இதுக்கு நடந்தே போயிரலாம் போல.

6. பேசாம அடுத்த பஸ்ஸைப் பிடிச்சிருக்கலாம்.

7. நீங்கதானே கெடச்சப் போச்சுன்னு ஆறு பேருக்கு ஸீட்டுலே படுத்துக் கெடந்து இடம் புடிச்சீங்க. உங்க புத்திக்கு வேணும்.

8. இதுல இவங்களுக்கு ஸ்பெஷல் சார்ஜ் டிக்கெட் வேற.

9. எல்லாம் தனியார்கிட்ட விடணும்பா. அப்பதான் நாய்களுக்குப் புத்தி வரும்.

இடையில் ஒரு வளைவில் பயணச்சீட்டுப் பரிசோதகர்களும், அதிகாரி ஒருவரும் ஏறினார்கள். தலை எண்ணினார்கள். பயணச் சீட்டுக்களின் எண்களைச் சரிபார்த்தனர். இரண்டு அரை டிக்கெட்டுகள்

கொடுக்கப்படவில்லை. நடத்துனரைத் தீவிரவாதியைப் பிடித்துவிட்ட பாணியில் பாய்ந்து பாய்ந்து திட்டினார்கள். ஓட்டுனரை நோக்கி அதிகாரி கேட்டார்.

“ஏன்யா..? எப்ப கொண்டு சேர்க்கப் போறே?” “என்ன செய்யச் சொல்றீங்க சார்? ஆத்தூர்லேருந்து வந்துகிட்டிருந்தேன். மோளப் போகச் சம்மதிக்கலை. நீங்க சொன்னா தட்ட முடியுமா? எடுத்துக்கிட்டு வர்றேன். வண்டிக்கு யோக்கியதை நாங்க சொல்லித்தான் தெரியணுமா?”

எந்த அவசரமும் இல்லாமல், பேருந்து நிதானமாக முன்வைத்த அடியைப் பின்வைக்காமல் ஓடிக்கொண்டு, அல்ல, நகர்ந்து கொண்டிருந்தது.

அண்ணனிடம் பத்தரை மணிக்கு ஏற்காடு பேருந்து நிலையத்தில் நிற்கச் சொல்லியிருந்தான். அவனுக்கு அன்று அலுவலகம் விடுமுறை. அறைக்கும் வழி தெரியாது. அப்போதே பதினொன்றரை ஆகியிருந்தது அவனிடம் செல்போன் இல்லை. அண்ணனிடமும் இல்லை. இருந்தாலாவது காலையில் என்ன சாப்பிட்டே? இட்லியா? தோசையா? சாம்பாரா, சட்னியா?’ போன்ற தீவிரமான விஷயங்களைப் பேசலாம்.

அடுத்த ஏற்றத்தில் பேருந்தின் முன்பகுதியிலிருந்து புகையும் நீராவியுமாய் கறுப்பான ஆவியொன்று சுருண்டு சுருண்டு எழுந்தது. பேருந்து, “உம்ம்… உம்ம்…” என்று அமற ஆரம்பித்தது. நகர மறுத்தது. எல்லோரும் ‘க்ராஷ் லேண்ட்’ ஆகும் விமானத்திலிருந்து இறங்கும் அவசரத்துடன் வெளியே பாய்ந்தனர். புகை தணிய ஆரம்பித்தது. முந்திப்போன பேருந்துகளின் உள்ளேயிருந்து ஊளைச் சத்தங்கள் கேட்டன.

“என்ன எழவுன்னு பாருய்யா.” என்றார் அதிகாரி.

ரேடியேட்டர் மூடியைத் தூக்கியவுடன் நீராவி ஊற்றொன்று உயர்ந்து படர்ந்தது. கரியும் நெடி.

“என்னய்யா?” “ரேடியேட்டர்ல தண்ணி இல்ல சார்.” “கீழேயே பாக்கறதுக்கு என்ன?” “எங்கே பாக்க வுட்டானுக.”

குரல் 1: உசலாவது இருக்கா ?

ஓட்டுனர் : ஃபுல் டேங்க் ஆத்தூர்ல போட்டேன்.

அதிகாரி : இப்ப என்ன செய்யப் போறே?

ஓட்டுனர் : இங்கே எங்க சார் தண்ணி கெடைக்கும்?

குரல் 2: சார், ஆம்பளைங்க எல்லாம் ஒண்ணுக்குப் போகலாம்.

குரல் 3 : பஸ்ஸிலே லேடீஸும் இருக்காங்கப்பா.

அதிகாரி : ஏம்பா, எளக்காரமா இருக்கா?

குரல் 4 : மேலே ஏறுகிற பஸ்ஸை நிறுத்தி ஏத்திவிடுங்க சார்.

குரல் 5.: நடந்து போனா ராத்திரி ஆகிடும் சார்.

குரல் 6 : எல்லோருக்கும் மதியச் சாப்பாடு ஏற்பாடு செய்யுங்க சார். ஏர்கிராஃப்ட் ஆனா தருவாங்க.

ஏறும் பேருந்துகளில் எல்லாம் காற்று இடைபுகா வண்ணம் மனித மந்தைகள் இருந்தன. நிறுத்தி எவரையும் ஏற்றிக்கொள்ளவில்லை. எத்தனாவது மைலில் தண்ணீர் கிடைக்கும் என்ற தகவலும் இல்லை. ஓட்டுனரும் நடத்துனரும் பிட்ச்சின் மத்தியிலான மாநாடு நடத்தினார்கள்.

சற்றுத் தள்ளிப் பயணச்சீட்டுப் பரிசோதகர்களும் அதிகாரிகளும் கூடிப் பேசினார்கள். யாருக்கும் எந்த மார்க்கமும் தெரியவில்லை .

காப்புச் சுவரின் ஓரம் நின்று கீழே எட்டிப் பார்த்தான். பிளாஸ்டிக் பைமயமாகக் கிடந்தன. ஊன்றி நோக்கினால் உடைந்த பீர் போத்தல்கள், காலி குவார்ட்டர் போத்தல்கள் காணக் கிடைக்கும்.

சிறு தூறல்கள் விழுந்த துளிர்ப்பு மரஞ்செடிகளில் தெரிந்தது. புற்கள் பசிய ஆரம்பித்திருந்தன.

கூட்டம் அமைதி இழக்க ஆரம்பித்தது.

குரல்கள்

1: சார்… ஒண்ணு காலியா கீழே இறங்குற வண்டியைத் திருப்பி விடுங்க அல்லது ஏறுகிற வண்டியிலே பத்துப் பத்துப் பேரா ஏத்தி அனுப்புங்க. சும்மா நின்னா எப்படி?

2. செய்ய மாட்டாம்பா. அவுனுக வேலை டிக்கெட் செக் பண்றது மட்டும்தான். அரை டிக்கெட் வாங்கலேன்னா ஆட்டிக்கிட்டு வருவானுக.

3. இங்கே எங்கப்பா இறங்கற பஸ்ஸை திருப்ப முடியும்?

4. அப்ப எல்லாரும் ஆளுக்கொரு கை கொடுங்கப்பா…. பஸ்ஸை மலைலேருந்து உருட்டிடலாம். கீழே சேலத்திலே பொறுக்கிக்கிடுவானுக.

5. என்ன பேச்சப்பா இது? எவன் அப்பன் வீட்டுச் சொத்து? பப்ளிக் பணம்பா… முட்டாள் தனமா பேசப்படாது.

6. அப்ப ஒரு காரியம் செய்வோம். எல்லாம் அப்படியே ரோட்டுக்கு குறுக்கே உட்காரலாம். மந்திரி வரட்டும். இல்லேன்னா கலெக்டர் வரட்டும்….

7. அதாம்பா சரி. எல்லாரும் அப்படியே உட்காரு. வெயிலுதான்…. பரவால்லே….. பொம்பளையோ, பிள்ளையோ எல்லாரும் அப்படியே உட்காருங்கோ. பயப்படாண்டாம். கலெக்டர் வரட்டும்.

ஓரமாய் வழிவாங்கி இறங்கி வந்த பேருந்தைக் கைகாட்டி, பரிசோதகர்களும் அதிகாரியும் ஓடிப்போய் ஏறிக் கொண்டனர். அடுத்த திருப்பில் ஓடி மறைந்தது வண்டி.

“ஓடிட்டானுங்கோ ……….. பயலுகோ ..”

கலைந்து வெகுண்டு நின்ற பயணிகளிடம் ஓட்டுனரும் நடத்துனரும் நிதானமாய் நடந்து வந்தனர். இரைஞ்சும் பாவனையில் ஓட்டுனர் சொன்னார்.

“எல்லாரும் ஹெல்ப் பண்ணணும். அவங்கவங்க தண்ணி பாட்டிலைத் தாங்க. எல்லாம் சேர்த்து ஊத்திப் பார்ப்போம்.”

அவரவர் தண்ணீர் போத்தல்கள், சிறிய கேன்கள், பள்ளிச் சிறுவர்கள் உபயோகிக்கும் விதவிதமான வாட்டர் பாட்டில்கள், பன்னாட்டு நிறுவனங்களின் சுத்திகரிக்கப்பட்ட இந்தியத் தண்ணீர். ஒரு லிட்டர் பாலின் விலைக்கு விற்கப்படும் தண்ணீர்.

பேருந்து தாகித்து நின்ற அரக்கன் போல் , ‘மளக் மளக்’ என தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தது. இரண்டு வாளித் தண்ணீராவது குடித்திருக்கும்.

ஓட்டுனர் மறுபடியும் இருக்கையில் ஏறி அமர்ந்து, கரங்கூப்பித் தொழுது, இயந்திரத்தை முடுக்கினார். இயந்திரம் உயிர் பெற்று உயர்ந்தது.

அவசரமாய் எல்லோரும் பழைய இருக்கைகளில் தப்பாமல், தவறாமல் பொருத்திக் கொண்டனர். நின்றவர் அனைவரும் நின்று கொண்டனர்.

மழையற்று காய்ந்தும் வறண்டும் மெலிந்து கிடந்த காடு தனக்குள் மெதுவாய் கைத்துச் சிரித்தது.

– விகடன் தீபாவளி மலர், 2003

* போக்கிரித்தனம்

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *