காசியும் கருப்பு நாயும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 6,997 
 
 

தன் அருகில் வந்து நின்ற நாயை ஒருதரம் அந்நியமாய் பார்த்தார் காசி. நல்ல உயரம். வாலின் ஒரு பகுதி உரோமம் இழந்திருந்தது. உடலின் இன்னும் இதரப்பகுதிகளிலும் உரோமம் இல்லாமல் இருக்கலாம். அதன் கருமை நிறம் இருட்டில் எதையும் கணிப்பதற்குத் தடையாக இருந்தது. தமிழர்களின் வாடை அதற்கு ஏற்கனவே பரீட்சையமாகியிருக்க வேண்டும். மிக இயல்பாக அவர் பக்கத்தில் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் காலடியில் படுத்துக்கொண்டது. காசிக்கு நாயின் தோற்றம் ஒருவகையான அச்சத்தை ஏற்படுத்தியது. முழுவதும் கறுமை படர்ந்திருந்த அதன் ரோமங்களுக்கு மத்தியில் கண்கள் பளிச்சென வெள்ளை நிறத்தில் இருப்பது மிரட்டலை தருவது போல் உணர்ந்தார். அதன் கழுத்தில் நைந்து சிவப்பு வண்ணத்தை முற்றிலுமாக இழக்கத் தயாராகியிருந்த துண்டுத் துணி முன்பு யாரோ ஒருவரால் வளர்க்கப்பட்ட நாய் என்பதை அடையாள‌ப்ப‌டுத்திய‌து.

நாயின் உடல் நன்கு நனைந்திருந்தது. ஈரம் அதன் வாடையை இன்னும் அதிகப்படுத்தி காசிக்கு குமட்டலை ஏற்படுத்தியது. அது வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஈக்களும் குமியத்தொடங்கி அவ‌ர் கால்க‌ளை ஓரிரு த‌ர‌ம் சீண்டிவிட்டுச் சென்ற‌ன‌. அப்ப‌டி அவை சீண்டும் போதெல்லாம் காசி த‌ன‌து காலாலேயே அவை அம‌ர்ந்த‌ அடையாள‌ங்க‌ளைத் துடைத்தார். இரவுகளில் காசி ஈக்களைப் பார்த்தது குறைவு. சற்று நேரம் அவைகளையே கூர்ந்து நோக்கியபடி இருந்தார். தன் கண், மூக்கு, உடல் என ஆக்கிரமித்திருந்த ஈக்களை நாய் சட்டை செய்வதாக இல்லை. அவ்வப்போது காதுகளை மட்டும் முன்னும் பின்னும் அசைத்தது. ஒரே ஒரு முறை வாயால் ஈயை கௌவ முயன்று பின் அது இயலாமல் போக பெரும் பணி செய்த களைப்பில் மீண்டும் படுத்துக் கொண்டது. நாயின் உடலில் மொய்த்த ஈக்கள்தான் த‌ன்னையும் தொடுகிறது என்ப‌தை உண‌ர்ந்த‌ போது காசிக்கு ஒம்ப‌வில்லை. விரல் இடுக்குகளில் அவை ஊர்வது அறுவறுப்பாக இருந்தது. கால்களை இருதரம் உதறினார். அவைக்கு காசியின் அச்செயல் எவ்வகையான எதிர்ப்பையும் ஏற்படுத்தவில்லை.

காசி மெல்ல நாயை விரட்ட முயன்றார். அதன் மேல் தட்டி விரட்ட முதலில் எண்ணியவர் பிரமாண்டமான அதன் உடலைப் பார்த்து ஒருதரம் தயங்கினார். பின்னர் தன் தொடையையே வேகமாக இருமுறை தட்டினார். அவர் எண்ணிய வேகமும் வலுவும் கைகளில் இல்லாமல் நீர் குமிழ்கள் உடையும் ஓசை போல மிகச் சிறிய சத்தம் எழுந்து அடங்கியது. கைகளை குவித்தவர் மீண்டும் தொடையைத் தட்டினார். இம்முறை சத்தம் பெரிதாகவே இருந்தது. நாயிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை.

காசி அவ்விடத்தை விட்டு நகர்வதாய் இல்லை. யூசோப்பின் பார்வையில் எளிதாகப் பட அந்த இருக்கையே அவருக்கு வசதியானது. கடந்த இரண்டு வாரமாக இந்த இருக்கையில் அமர்ந்தபடிதான் தனது இரவு உணவை பெருகிறார் காசி. நகர்ப்புற கழிவுகளை அடித்துச் செல்லும் சாக்கடையின் ஓரத்தில் முதலில் சிறிய ஒட்டுக்கடை மட்டுமே திறந்தான் யூசோப். அவனின் கைப்பக்குவத்தில் மீகோரேங்கின் ருசி சற்று பிரபலமாக மூன்றே மாதத்தில் கடையைச்சுற்றி ஐந்து வட்ட மேசைகளைப் போட்டுவிட்டான். இடது புறத்தில் மொட்டை மரத்தோடு ஒட்டியுள்ள மேசைதான் காசியினுடையது. அங்கிருந்த‌ சில‌ ம‌லாய் இளைஞ‌ர்க‌ள் முன்ன‌மே அவ்விட‌த்தை நிர‌ப்பாத‌து நிம்ம‌தியாக‌ இருந்த‌து.யூசோப் இப்போதெல்லாம் உதவிக்கு அவன் மகள் மரியாவையும் அழைத்து வருகிறான்.

மரியா கடையில் இருப்பது காசிக்கு ஆறுதலான விடயம். அவர் பேத்தி வயதுதான் இருக்கும் மரியாவுக்கும். எப்போது தூடோங் அணிந்து அழகாகக் காட்சி தருவாள். சமயங்களில் இரவு உடை அணிந்திருந்தாலும் தூடோங் இல்லாமல் காசி அவளைப் பார்த்ததில்லை. அவளது துருதுருப்பும் சிரித்த முகமும் காசிக்கு அவளை தன் பேத்தியாகவே எண்ண வைத்தது. ஒருவேளை தூடோங்கை அகற்றினால் உள்ளே தன் பேத்தி இருப்பாளோ என காசிக்கு அவ்வப்போது தோன்றும். மரியாவிடம் அருந்த தண்ணீர் கேட்டவுடன் கிடைத்துவிடும். முதல் மூன்று நாட்கள்தான் காசி அவ்வாறு கேட்டுள்ளார். அதற்கு பின்பான நாட்களில் மரியாவே ஒரு நெகிழியில் வெண்ணீரை நிரப்பி உரிஞ்சு குழாய் இட்டு கொடுத்துவிடுவாள். பின்னர் சில நிமிடங்களில் மீகோரிங் பொட்டலமும் கொண்டு வருவாள்.இருமுறையும் அவரை நெருங்கும் போதும் பற்கள் வெளிதெரியாமல் உதடுகளை மட்டும் இட வலமாக இழுத்து வளைப்பாள். காசிக்கு தன் பேத்தி அடிக்கடி இளஞ்சிவப்பு வர்ணத்தில் வரையும் பிறை நினைவுக்கு வரும்.

நாய் தன்னருகில் இருப்பது இப்போது கௌரவப் பிரச்சனையாகியிருந்தது. மலாய்காரர்களை அதிகளவு வாடிக்கையாளர்களாகக் கொண்ட அக்கடையில் ஒரு நாய் இருப்பதால் அவர்களின் கோபத்திற்குத் தானும் ஆளாக நேரலாம் எனத்தோன்றியது. நாய்க்கும் தனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பதுபோல அதனிடமிருந்து சற்றே அகன்று அமர்ந்தார். பிரக்ஞையற்று படுத்திருந்த நாய் மெல்ல எழுந்து தடுமாறியபடி அவர் காலடியில் மீண்டும் படுத்துக்கொண்டது. நாய் எழுந்து நின்ற விதமும் அமைதியான தோற்றமும் அதன் கிழட்டுத்தன்மையை காசிக்கு உணர்த்தியது.

காசிக்கு நாயின் மேல் திடீர் கருணை ஏற்பட்டது. ‘ஜோனி…ஜோனி..’ என அழைத்தார். எந்த நாயாக இருந்தாலும் காசிக்கு அதன் பெயர் ஜோனியாக மாறிவிடும். நாய் தன் முகத்தின் கீழ் பகுதியை முழுவதுவாக பூமியில் பதித்து பக்கத்து மேசையில் அமர்ந்து பொரித்த கோழியை மென்று கொண்டிருக்கும் இரண்டு மலாய் இளைஞர்களை ஏக்கமாய் பார்த்தபடி இருந்தது. காசி இம்முறை ‘ஜோனி’ என்று சற்று சத்தமாகவே அழைத்தார். நாயிடமிருந்து எந்த ச‌ல‌ன‌மும் இல்லை. தான் கவனிப்பதாகக் காதுகளைக்கூட அசைக்கவில்லை. யூசோப் மட்டும் ஒருமுறை ஏறிட்டவர் கொஞ்சம் பொறுக்கும்படி கையசைத்தான். அவனின் முகத்தில் எவ்வகையான உணர்வும் இல்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் அவன் முகத்தில் நிறைய உணர்வுகளைப் பார்த்துள்ளார் காசி. முதல் நாள் ஒரு வாடிக்கையாளரிடம் காட்டும் முகம்தான் யூசோப்பிடம் இருந்தது. பின்னர் ஒரு கொடையாளனின் பெருமிதத்தோடு காசியை அவன் நோக்கியுள்ளான். இப்போது கொஞ்ச நாட்களாக அதுவும் இல்லை.

காசியின் இந்த குணம் அவருக்கே பல சமயங்களில் சங்கடம் ஏற்படுத்தும் படி இருக்கும். அவரால் அடுத்தவர்களின் உணர்வுகளையும் முகங்களையும் பொருட்படுத்தாமல் பழக முடிந்ததில்லை. ஒவ்வொரு சிரிப்புக்கும் பார்வைக்கும் த‌னது அனுபவம் கொடுத்திருக்கும் குறிப்புகளிலிருந்து மிகச்சரியானதைத் தேர்ந்தெடுத்து அதன் ரகத்தை எளிதாகக் கண்டடைந்து விடுவார்.தனக்கு உவக்காத சூழலில் அவர் நெடுநாட்கள் இருந்ததில்லை. இதில் யாரிடமும் அவர் சமரசம் செய்வதாகவும் இல்லை. தன் மகன் மருமகள் உட்பட. அவரிடம் இறுதியாக இருக்கும் ஒரே வலுவான எதிர்குரல் அதுவாகத்தான் இருந்தது.

காசிக்கு சந்தேகம் வந்தது. மெல்ல குனிந்து அதன் காதருகில் ‘ஜோனி’ என்றவர் அது ஒரு செவிட்டு நாய் என்பதை உணர்ந்து கொண்டார். முதுமையால் அந்த நாய் முற்றிலும் கேட்கும் திறனை இழந்திருப்பது காசிக்கு மேலும் இரக்கத்தை உண்டுபண்ணியது.

மலாய் இளைஞர்கள் இன்னும் மேசையைவிட்டு எழுந்திருக்கவில்லை. அவர்கள் தட்டுகளில் உள்ளதைவிட அதன் பரப்பில் இரால்களின் தோல்களும் கோழியின் எலும்புகளும் குவிந்திருந்தன. அதில் ஒன்று நழுவி கீழே விழ நாய் தடுமாறி எழுந்து அவர்கள் மேசைக்கு அருக்கில் எந்த அவசரமும் இல்லாமல் சென்றது. சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் நாய் தங்களை நெருங்குவதை அதன் வாடையின் மூலம் அறிந்திருக்க வேண்டும். ‘ஹோய்…ச்சூ… ச்சூ…’ என சத்தமிட்டு விரட்டினர். செவிட்டு நாய்க்கு அவர்களிம் சத்தம் விளங்காமல் மேலும் அருகில் சென்றது. முடியை செங்குத்தாகச் சீவியிருந்தவன் தனது குளிர் பானத்திலிருந்து ஒரு ஐஸ்கட்டியை எடுத்து நாயின்மேல் விட்டெரிந்தான்.நாயின் மீது ப‌ட்டு அத‌ன் கால‌டியிலேயே விழுந்த‌து. அது தனக்கு வீசப்படும் உணவு என்று நாய் ஒருதரம் ஐஸ் கட்டியை முகர்ந்து பார்த்தது. மண்ணில் புதைந்த கரைந்த அதை அவசரமாக நக்கியது. பின்னர் அவ்விளைஞர்களைப் பார்த்து நன்றியொழுக வாலாட்டியது.

நாயின் அச்செயல் இளைஞர்களுக்கு வெறுப்பாக உருவாகி பின்பு அதுவே விளையாட்டானது. ஆளுக்கு ஒன்றென்று ஒவ்வொரு ஐஸ் கட்டிகளாக எடுத்து நாயை நோக்கி அடித்தனர். சாராமாரியாகத் தன்மேல் ப‌ட்டு விழும் ஐஸ் கட்டிகளை ஓடிச் சென்று நக்கிய நாய் அதில் ஒன்றை எடுத்து கடித்து தின்ன முயன்றது. இளைஞர்கள் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டனர். யூசோப் அவர்களை நோக்கி ஏதோ பேச இளைஞர்களில் ஒருவன் ஒரு துண்டு எலும்பை நாயின் பார்வையில் படும்படி காட்டி பின் தொலைதூரம் வீசினர். நாய் ஒருதரம் எலும்பு பரந்து சென்ற தூரத்தை ஏறிட்டு பார்த்தது. த‌ன்னால் அவ்வ‌ள‌வு தூர‌ம் போக‌ முடியுமா என‌ ஒருத‌ர‌ம் விய‌ந்த‌து. நாக்கைத் தொங்க போட்டபடி மீண்டும் இளைஞர்களிடம் திரும்பியது. இம்முறை யூசோப் சற்று பெரிய எலும்புத்துண்டை எடுத்து நாயின் பார்வைபட காட்டினார். நாய் ந‌ன்றியொழுக‌ வாலாட்டிய‌து. அத‌ன் முழு க‌வ‌ன‌மும் எலும்பின் மீது இருந்த‌ த‌ருண‌ம் யூசோப் எலும்பை தூர‌ வீசினான். பறந்து சென்று விழுந்த எலும்பை தேடிச்சென்ற நாய் பின்பு வரவேயில்லை. காசி திரும்பிப் பார்த்தார் நாய் தரையை முகர்ந்தபடி எதிர்திசை இருட்டில் ம‌றைந்த‌து. யூசோப்பின் திற‌மைக்கு வாடிக்கையாள‌ர்க‌ள் ம‌கிழ்ச்சி தெரிவித்த‌ன‌ர். யூசோப் வெற்றி சிரிப்போடு ஈக்க‌ள் இன்ன‌மும் சுற்றிக்கொண்டிருந்த‌ த‌ரைப்ப‌குதியில் ஒரு குவ‌ளை சுடுநீரை எடுத்து ஊற்றிய‌பின் நிம்ம‌தி பெருமூச்சு விட்டார்.

இப்போது யூசோபின் மகள் பரபரப்பாக மேசைகளைத் துடைக்கத் தொடங்கியிருந்தாள். அப்படியானால் அருகில் இருக்கும் தொழிற்பேட்டையிலிருந்து இரவு நேர ஊழியர்கள் உணவருந்த வரப்போகிறார்கள் என்பதை காசி அறிவார். யூசோப்புக்கு அது மிக முக்கியமான தருணம். அவனுக்கு அதிக லாபத்தைத் தரக்கூடிய வாடிக்கையாளர்கள் அவர்கள்.

அதற்கு மேலும் காத்திருக்காதவன் சட்டியில் இரண்டு பிடி மீயை கொட்டி சில முறை கிண்டி எடுத்து ஒரு காகிதத்தில் மடித்தான். தனக்காகத் தயாராகும் பொட்டலத்தைக் கவனித்தபடி இருந்த காசி திடீரென எழுந்து நாய் சென்ற திக்கை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

ம‌ரியா இரண்டு முறை காசியை சத்தமிட்டு அழைத்தாள். “விடு. அவனுக்குக் காது கேட்காது” என்றவன் பொட்டலத்தைப் பிரித்து சட்டியில் ம‌ண‌ம் வீசிக் கொண்டிருந்த‌ சூடான‌ மீயோடு க‌ல‌ந்தான்.

– செப்டம்பர் 2010 (நன்றி: http://vallinam.com.my)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *