தற்செயலாகத் தான் அவற்றைக் கவனித்தேன். அதன் பின் தொடர்ந்தும் அவை என் கவனிப்பிற்குள்ளாகின. நான் வேலை செய்யும் உயர்மாடிக் கட்டிடத்தின் அருகாக, இந்தக் காங்ரீட் வனத்தில் தப்பித் தவறி சுவரோரமாக வளர்ந்து நின்ற சிறியதொரு கிளைகளுடன் கூடிய மரம் தான் அவற்றின் வாசஸ்தலம். ‘மனிதசாலை’யாக விளங்கும் நகர். எங்கு திரும்பினாலும் காங்ரீட் கூண்டுகள். காங்ரீட் விருட்சங்கள். டொராண்டோ நகரின் மட்டுமல்ல கனடாவின் பொருளாதார மையமே இந்த கிங்யும் பே வீதியும் சங்கமிக்கும் பகுதி தான். இங்கு தான் பிரபல தகவல் தொழில் நுட்பச் சேவை வழங்கும் நிறுவனமொன்றில் தகவல் தொழில் நுட்ப நிபுணர்களிலொருவனாக பணி புரிந்து கொண்டிருக்கின்றேன். ஆரம்பத்தில் நகரத்துப் பரபரப்பில் நான் அந்த மரத்தையோ அதில் வாசம் செய்து கொண்டிருந்த அந்த உயிரினங்களையோ கவனிக்காமலிருந்து விட்டேன். சிறிது சிறிதாக நகரத்தின் பரபரப்பான வாழ்விற்கு இயல்பூக்கம் அடைந்த பின்னர் என் கவனம் சுற்றாடல் மீது அதில் நிகழும் நிகழ்வுகள் மீது திரும்பியது. இயற்கையிலேயே வான், நதி, மழை, சுடர், மதி, புள்..என இழகிவிடும் இயற்கையினை ஆராதிக்கும் மனது என்னுடையது. இதுவரைகாலமும் தற்காலிகமாக மேற்படி பரபரப்பான வாழ்வின் ஆழத்தில் அடைந்து கிடந்து விட்டது. அதனை அந்தச் சிறிய மரமும் அதில் வாசம் செய்து கொண்டிருந்த அந்த அடைக்கலான் குருவிகளும் தான் மீண்டும் புலப்படுத்த உதவியாக இருந்து விட்டன என்று கூறலாம். அவை என் கவனிப்பிற்கு உள்ளானது முதல் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றை அவதானிப்பதை என் அன்றாட அலுவல்களிலொன்றாக ஆக்கி விட்டேன். அவதானிக்க அவதானிக்க நாளுக்கு நாள் எனக்கு அவற்றின் மீதிருந்த அபிமானமும் அனுதாபமும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டன.
நாள் முழுவதும் அவை நகரெங்கும் பறந்து திரிவதும், அடிக்கடி அங்கு வந்து ஓய்வெடுப்பதும், கூடிக் கலப்பதும் களிப்பதுமாகவிருந்தன. தனித்திருந்த அந்த மரமும் அதனால் ஒருவித பொறுப்பு கலந்த பெருமிதத்துடனிருப்பதாக எனக்குப் பட்டது. அந்தக் குருவிகளுடன் ஒரு சிறிய சுண்டெலியும் அந்த மரத்தைப் பகிர்ந்து வந்ததை அவதானித்தபொழுது அதிசயித்துப் போனேன். மனித நாகரிகத்தின் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்த நகரொன்றின் கவனத்தை அதிகம் கவராத மரமொன்று. அதில் இருப்பினைக் கழிக்கும் உயிர்கள் சில. முதன் முதலாக இயற்கை விருட்சங்களில்லாத காங்ரீட் வனத்தை உருவாக்கிய எமது மடமையை மனம் உணர்ந்தது. எத்தனை உயிர்களின் இருப்பினை அழித்துக் கேள்விக்குறியாக்கி விட்டது நமது வளர்ச்சி என்றும் பட்டது. ஒவ்வொரு நாளும் எத்தனைவகையான புள்ளினங்கள் உயர்ந்த காங்ரீட் விருட்சங்களின் கண்ணாடிச் சுவர்களுடன் மோதிக் குற்றுயிரும் குலையுயிருமாகவாழ்வை முடித்துக் கொள்கின்றன. எத்தனை அணில்கள் , ரக்கூன்கள் வாகனங்களில் அடிபட்டு அழிந்து போகின்றன. இவை பற்றியெல்லாம் எந்தவித உணர்வுமில்லாது வான் முட்டும் கோபுரங்கள் கட்டி, பெருஞ்சாலைகள், ஆலைகள் அமைத்து..என்னவிதமான வளர்ச்சியிது!
இளவேனில் கழிந்து சுட்டெரிக்கும் கோடைவந்தது. குருவிகளின் கும்மாளத்திற்கும் குறைவேயில்லை. இன்னும் சிறிது காலம் தான். மாநகரைக் குளிர் கவ்வத் தொடங்கி விடும். இலைகளின் இழப்பில் மரங்களை சோகம் கப்பி விடும். ஆனால்..என் மனத்தை அரித்தது கேள்வியொன்று. இந்தக் குருவிகள் அப்பொழுது என்ன செய்யும்? எங்கே போகும்? தொடர்ந்தும் இங்கு தான் இவ்விதமாகக் கூச்சலும் கும்மாளமுமாகக் களித்துக் கிடப்பினமோ? சூழலை எதிர்த்துச் சுற்றிப் பறந்து திரிவினமோ? என் கவனத்தை அண்மையில் தான் இவை ஈர்த்த போதினும் இது போல் பல வருடங்கள் ஏற்கனவே வந்து போயிருக்கின்றன. இனியும் வந்து போக இருக்கின்றன. இந்நிலையில் என் சிந்தனை எனக்கே சிரிப்பையும் தந்தது. உயிர்கள் எவ்விதமும் தம்மிருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வழி கண்டு விடும். இந்நிலையில் என் கவலை அர்த்தமற்றதாகப் பட்டது.ஆயினும் அவதானிப்பைத் தொடர வேண்டுமென்று முடிவு செய்து கொண்டேன். அதே சமயம் அவற்றின் இருப்பினை, உணர்வினை உணராத மனிதர்கள் மத்தியில் அவை வளையவருவதைப் பார்க்க ஒருவித கவலை கலந்த உணர்வொன்றும் படர்ந்தது. அவற்றின் வாழ்வு எவ்வளவு அற்பமாகவிருக்கின்றது. எம்மைப் போல் அவற்றால் சிந்திக்க முடியாது. நூல்களைப் படிக்க முடியாது. விவாதிக்க முடியாது. இயற்கையை இரசிக்க முடியாது. இருப்பு பற்றிக் கேள்விகளை எழுப்பிட முடியாது. எவ்வளவு அற்பமான அறியாமை மிக்க வாழ்வினை அவை வாழ்கின்றன அவை. இரை தேடச் சுற்றித் திரிவது, வருவது, அம்மரத்தில் கூடிக்களிப்பது, இரவில் தலை கவிழ்த்துத் தூங்குவது..இவை தவிர அவை அறிந்தவைதானெவை? ஒரு கணம் என்னை, என் வாழ்வினை அவற்றின் இருப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தது மனம். வேலைக்குப் போகின்றேன். முடிந்ததும் என் காங்கீரிட் பொந்தில் போயடைகின்றேன். மீண்டும் வருகின்றேன். மீண்டும் போகின்றேன். இது தவிர சில சமயங்களில் வேறு சில செயல்களில் அழிந்து விடுகின்றேன். அவை முடிந்ததும் மீண்டும் பழையபடி வேலை. கூடு. வேலை. கூடு…..பெரிய வித்தியாசம் அதிகம் இல்லை போல் படவே வெட்கித்துப் போனேன் நான். அதே சமயம் எம்மைப் போல் அவை துவம்சம் செய்வதில்லை என்பதையும் உணர்ந்தபொழுது , இந்த விடயத்தில் அவை எம்மை விட உயர்வையானவையாகவும் பட்டது. தம் இருப்பால் இருக்கும் சூழலை எம்மைப் போல் அதிகம் அவை அழிப்பதில்லைதான். இனி இவ்விதம் ஒப்பிட்டு மூக்குடைப்படுவதில்லையென்று முடிவு செய்து கொண்டேன். அதே சமயம் அவையும் நானும் இவ்விடயத்தில் ஓரளவு ஒன்றென்ற தோழமை கலந்ததொரு உணர்வு எழுந்து முன்பை விட இப்பொழுது அவற்றை அதிகமான தோழமை கலந்த அன்புடன் நோக்கத் தொடங்கினேன் நான்.
மெல்ல மெல்ல மாநகரைக் குளிர் கவ்வத் தொடங்கத் தொடங்கியது. இலைகளை விருட்சங்கள் மிக அதிக அளவில் இழக்க ஆரம்பித்தன. அந்தச் சிறிய மரமும் தன் இலைகளை அதிக அளவில் இழந்தது. இலைகளை அது இழக்க இழக்க அதனை நாடி வரும் குருவிகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. இலைகளை இழந்த மரம் காய்ந்து மூளியாகக் கிடந்தது. ஆனால் இப்பொழுதும் ஒரு நான்கு சோடிக் குருவிகள் மட்டும் அந்த மரத்தையே நாடி வந்தன. அவ்றை எண்ண எனக்குப் பரிதாபமாகவிருந்தது. பிழைக்கத் தெரியாத அப்பாவிக் குருவிகளாக அவை எனக்குத் தென்பட்டன. ஆனால் அவையோ என் பரிதாபத்தைப் பற்றியோ அல்லது இயற்கையின் சீற்றத்தைப் பற்றியோவெல்லாம் அதிகமாகத் தங்களை அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. முன்பை விட அதிகமாக ஆனந்தமாகவே அவை இருப்பதாகப் பட்டது. முன்போ அவை அதிக எண்ணிகையிலான குருவிகளுடன் தங்களது இருப்பினை பகிர்ந்து கொள்ளவேண்டிய தேவை அவற்றிற்கிருந்தது. இப்பொழுதோ அந்த மரம் முழுவதுமே அவற்றின் இராச்சியத்திலிருந்ததென்ற ஆனந்தம் போலும். இருந்தாலும் முன்பிருந்த அந்தக் கூச்சலும் கும்மாளமும் இப்பொழுது அறவே இல்லாதுதான் போய் விட்டன. ஒருவிதமான சோகம் கப்பிய நிலை அவற்றின் ஆனந்தத்தையும் மீறித் தென்படத்தான் தெரிந்தது. ஒருவேளை அவை ஆனந்தமாக இருப்பதாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விழைகின்றனவோ? சிற்சில சமயங்களில் அவற்றை இலைகளுதிர்ந்த நிலையில் காய்ந்து தென்பட்ட மரத்தின் நிறத்திலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதே சிரமமாகவிருந்தது. இயற்கையின் கடுமை அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் ஆனந்தமும் சிறிது சிறிதாகக் குறைந்து வர ஆரம்பித்தது. அடிக்கடி தலைகளைக் கவிழ்த்துச் சோர்ந்து கிடந்தன. களிப்பின் சாயலை அவற்றின் இருப்பில் தேட வேண்டியிருந்தது.
இப்பொழுதோ மாநகரில் அடிக்கடி பனிமழை பொழியத் தொடங்கி விட்டது. குளிர்க் காற்றின் உக்கிரமும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. போதாதற்கு மழை வேறு. இவையெல்லாம் அந்தக் குருவிகளின் பிடிவாதத்தினை மாற்றி விடுமென்று நான் நினைத்திருந்தேன். ஆனால் ஒவ்வொரு முறையும் பனிப்புயல் அடிதோய்ந்து மறு நாள் வேலைக்குச் செல்லும் போது அல்லது வேலை முடிந்து வரும்பொழுது வழக்கம் போல் அந்தக் குருவிகள் அங்கேயே மரத்தோடு மரமாக ஒன்றிக் கிடந்தன. இருப்பிட மாற்றத்தினை அவற்றால் சிந்திக்கவே முடியவில்லை போலும். எது வந்த போதினும் இது தான் நம் இருப்பு என்று திடமாக அவை இருப்பதாக உணர்ந்து நான் வியப்புற்றேன். அதே சமயம் பேசாமல் ஏனைய குருவிகளைப் போல் இடம் மாறித் தப்புவதற்குப் பதிலாக இவ்விதம் கிடந்து இவை இவ்விதம் வருந்தத் தான் வேண்டுமாவென்றும் மனம் நொந்தேன். மனம் நோக மட்டும் தான் என்னால் முடிந்தது. அதனை உணரவேண்டிய அவையோ அது பற்றியெல்லாம் எந்தவிதக் கவலையுமில்லாமல் இருப்பதை உண்டு, பறந்து மீண்டும் அங்கு வந்து உறங்கிக் காலத்தைக் கழித்தன. ஐயோ பாவமென்றிருந்தது. இந்தப் பறவைகளால் இருப்பினை மாற்றுவது முடியாததொரு செயலாக இருக்கின்றது. அதனை இலகுவாக இருப்பினை மாற்றிய என்னால் உணரமுடியாமலிருந்ததில் வியப்பென்னவிருக்க முடியும்?
ஓரிரவு நீண்ட நேரமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. ‘சாவ்ட்வெயர் அப்டேட்ஸ்’ ஒவ்வொரு வெப் சேர்வருக்கும் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு இரவு தான் சரியான நேரம் .அதிக ‘இன்ராநெட்’ பாவனையாளர்கள் இருக்க மாட்டார்கள். வேலை முடிந்து வந்து கொண்டிருந்தபொழுது வழக்கத்தைவிட மிக அதிகமாக அன்று மாநகரைப் பனிப்புயல் தாக்கிக் கொண்டிருந்தது. காற்றின் உக்கிரமும் மிகவும் அதிகமாக இருந்தது. பனியோடு பனியாக, காற்றோடு காற்றாக அந்த நான்கு குருவிகள் மட்டும் வழக்கம் போல் மரத்தோடு மரமாக ஒன்றிக் கிடந்தன. அடிக்கடி சிறகுகளை உதறிவிட்டுக் கொண்டிருந்தன. காற்றின் உக்கிரம் அதிகரித்த சில சமயங்களில் கொப்புகள் மாறிச் சமாளித்தன. தூங்க வேண்டிய சமயத்தில் அவற்றின் தூக்கமும் கெட்டுப் போனதை எண்ண எனக்குக் கவலை அரித்தது. இப்பொழுதாவது அருகிலிருந்த கட்டிடமொன்றில் ஏனைய குருவிகள் செய்ததைப் போல் போய் அடையவேண்டியது தானே. இன்னுமேனிந்த இறுமாப்பென்று பட்டது. அன்றிரவு முழுவதும் என் தூக்கம் முழுவதும் அந்தக் குருவிகளின் ஞாபகம் தான். இரவு முழுவதும் பனிப்புயல் மாநகரைத் துவம்சம் செய்து விட்டது. இரண்டடிவரையில் பனிமழை பொழிந்து மாநகரை மூடி விட்டதாக அடுத்த நாட்காலையில் தான் அறிந்தேன். பனிப்புயல் காரனமாக அன்று காலை நான் வேலைக்குப் போக விரும்பவில்லை. இருந்தாலும் அந்தக் குருவிகளின் ஞாபகம் வரவே காரியாலயம் நோக்கிக் கிளம்பினேன். காரியாலயத்தை அண்மித்த என்னை அந்த மரத்தின் நிலை அதிர்ச்சியடைய வைத்தது. மாநகரை மூடிய பனிமழை அந்த மரத்தை மட்டும் சும்மா விட்டு விடுமா? அந்த மரத்தை அதன் அயலை எல்லாம் பனிமழை மூடிவிட்டிருந்தது. அந்தப் வெண்பனியையும் மீறி மரத்தோடு மரமாக, சிலையாகச் சில்லிட்டுக் கிடந்த அந்த நான்கு குருவிகளையும் கண்டு மனது ஒருமுறை அதிர்ந்தது. எதற்காக அவை இவ்விதம் தம்மிருப்பினை முடித்துக் கொண்டன? ஏனைய குருவிகளெல்லாம் தப்பிப் பிழைக்க வழி கண்டு ஓடி விட்ட நிலையில் இவை மட்டும் எதற்காக இவ்விதமானதொரு முடிவைத் தேட வேண்டும்? சூழல் மாற்றத்தைத் தாங்கும் மன உறுதி, ஆற்றல் இல்லாத காரணத்தினாலா? அல்லது இதுவரை வாழ்ந்த, களித்த அந்த வீட்டினை இழக்க முடியாத துயராலா?
நன்றி: பதிவுகள், திண்ணை