காக்கை வலிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 619 
 

வீட்டு வாயிற் படியில் நின்று பார்த்தேன். முன்புறத்தில் தோட்டம் மிக அழகாக இருந்தது. ஒழுங்காகக் கத்திரித்து விடப்பட்ட அழகிய செடிகள். பத்தி, பத்தியாய்ப் பாத்தி, பாத்தியாய்ப் பல நிறப் பூக்கள்; அவ்வளவும் மணமற்றவை. மணமில்லாதவையானால் என்ன? பார்ப்பதற்கு அழகாயிருக்கின்றனவே, அது போதாதா? பார்ப்பதற்கு அழகாயிருந்தால் வேறு எது இல்லா விட்டாலும் மன்னிக்கலாம் தானே?

நாளைக்கு விடிந்தால் என்னுடைய இந்தச் சிறந்த பூந்தோட்டம் பரிசு வாங்கப் போகிறது. யாரிடம் பரிசு வாங்கப் போகிறது? எதற்காகப் பரிசு வாங்கப் போகிறது? என்று கேட்கிறீர்களா? அடப்பாவமே! இது கூடத் தெரியாமலா இந்த ஊரில் இருக்கிறீர்கள்? நகரத்திலுள்ள பங்களாக்களின் தோட்டங்களில் மிகச் சிறந்ததாக எது வளர்க்கப்பட்டிருக்கின்றதோ, அதை அந்த வருடத்தின் சிறந்த பூந்தோட்டமென்று தேர்ந்தெடுத்து மாநகராட்சியினர் பரிசு கொடுக்கிறார்கள். மாநகராட்சியினர் கூட இதெல்லாம் செய்கிறார்களா என்று சந்தேகம் வேண்டாம். நகரத்தின் அழகை அதிகமாக்குபவர்களை உற்சாகப்படுத்த வேண்டாமா? அதற்காகத்தான் இப்படியெல்லாம் பரிசு கொடுக்கிறார்கள். ‘பங்களாக்களும், பூங்காக்களும், விண்ணைத் தொட நிமிர்ந்த நிற்கும் சிமிண்டுச் செழிப்புக்களும்தான் நகரத்திற்கு அழகா?’ என்று இடக்காகக் கேட்காதீர்கள். ஓட்டைக் குடிசைகளிலும், சாக்கடை புகுந்து ஓடும் சேரிகளிலும் பரிசு கொடுக்க என்ன இருக்கிறதாம்? ‘ப்யூட்டி’ வேணும் சார், ப்யூட்டி! இந்த ‘ஸென்ஸ் ஆப் ப்யூட்டி’ (அழகு உணர்ச்சி) இருக்கிறதே, அது தமிழனுக்குச் சுத்தமா இல்லே சார்! பார்ப்பதற்கு அழகாயில்லா விட்டால் வேறு எது இருந்தாலும் மன்னிக்கக்கூடாதுதானே?

நாளைக் காலையில் சரியாக ஏழு மணிக்கு நீதிபதிகள் தோட்டத்தைப் பார்க்க வந்து விடுவார்கள். எல்லாப் பங்களாக்களின் தோட்டங்களையும் பார்த்து, எதற்குப் பரிசு கொடுக்கலாம் என்பதைத் தீர்மானம் செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் கார்ப்பொரேஷன் சில பெரிய மனிதர்களை நீதிபதிகளாக நியமிக்கிறது. அந்த நீதிபதிகள்தான் விடிந்ததும் இங்கேயும் வரப்போகிறார்கள். வரட்டுமே! வந்து பார்த்ததுமே மூக்கில் விரலை வைத்து வியக்கப் போகிறார்கள். சாதாரணமாகவா வைத்திருக்கிறேன் இந்தத் தோட்டத்தை? மூன்று மாதக் காலமாக முயன்று அப்படியே பிருந்தாவனமாக அல்லவா மாற்றியிருக்கிறேன். தோட்டக்காரப் பனையப்பனை ஒரு விநாடி சும்மா நிற்க விட்டிருப்பேனா? பம்பரமாகச் சுழன்றல்லவா அவனை வேலை வாங்கியிருக்கிறேன். அவனை இந்த மாதிரி வேலை வாங்கியிரா விட்டால் அதோ அந்த ரோஜாப் பாத்தியில் அவ்வளவு பூக்கள் அத்தனை விதமான நிறத்தோடு பூத்திருக்க முடியுமா? அந்த ‘டேலியா’ப் பூக்கள் இப்படிப் பூத்துக் குலுங்கியிருக்க முடியுமா? கேந்தி, பிச்சி, மல்லிகை, சூரியகாந்தி எல்லாம் எவ்வளவு பூத்திருக்கின்றன. நீதிபதிகள் இதைப் பார்த்தவுடனேயே இதற்குத்தான் முதற்பரிசு என்று உறுதியாக நினைத்துக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? பார்க்கலாம் நாளைக்கு விடிந்தால் தானே தெரிந்து விடுகிறது.அப்பப்பா விடிவதற்கு இன்னும் பன்னிரண்டு மணிநேரம் இருந்து தொலைக்கிறதே. நாளைக்கு மட்டும் சற்று விரைவாகவே பொழுது விடியக்கூடாதோ? நாளைக்கு மாலையில் கார்ப்பரேஷன் மைதானத்தில் நடைபெற விருக்கும் பரிசளிப்பு விழாவில், “திருவாளர் சுகவனம், ஐ.ஸி.எஸ். அவர்களின் தோட்டம்’முதற் பரிசு பெறுகிறது” என்று எட்டுத்திக்கும் ஒலிபெருக்கியில் முழங்கப் போற என் பெயரின் வெற்றி முழக்கத்தை இப்போதே கேட்டுவிட வேண்டும்போல் செவிகள் ஆசையால் துடிக்கின்றனவே! செவிகளே, பொறுத்திருங்கள்! நாளை மாலை வரை பொறுத்திருங்கள்!

பரிசு கிடைத்தால் இந்தப் பயல் பனையப்பனுக்கு ஏதாவது செய்ய வேண்டும். கொஞ்சங்கூட அயராமல் உழைத்திருக்கிறான். ஒரு சோடி புது வேட்டியும் பொங்கல் செலவுக்குப் பத்துப் பதினைந்து ரூபாய் பணமும் கொடுத்துவிட வேண்டியதுதான். தோட்டக்காரனுடைய ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இதை இப்படிப் பரிசுக்குத் தயாராக்கியிருக்க முடியுமா? அவனுக்கும்கொஞ்சம் நன்றி செலுத்த வேண்டியதுதான். ஆள் மாடாக உழைத்திருக்கிறான்.

முடிவு வெளியானதும், “என்ன சுகவனம்! இந்த வருடம் உன்னுடைய ‘கார்டன்’ பிரைஸ் வாங்கியிருக்கிறதாமே?” என்று நண்பர்களெல்லாம் அன்புடன் விசாரிக்கப்போவதைக் கற்பனை செய்கிறேன் நான். இப்படிக் கற்பனை செய்வது மனத்துக்கு எவ்வளவு சுகமாக இருக்கிறது! கார்ப்பரேஷன் கமிஷனரோ, சேர்மனோ, பரிசு வழங்கும்போது அதை நான் மேடையேறி வாங்குகிற காட்சியை உள்ளூர்ப் பத்திரிகைக்காரர்கள் புகைப்படம் எடுப்பார்கள். மறுநாள் காலையில் பத்திரிகைகளில் அந்தப்படம் முதல் பக்கத்தில் பிரமாதமாக வெளிவரும் அடடா புகழையும் வெற்றிப் பிரதாபத்தையும் கற்பனை செய்வது கொட்டையேயில்லாத பழத்தைச் சுவைத்துச் சாறு உறிஞ்சுவது போல் பரம சுகமாக இருக்கிறதே! பொழுது விடியட்டும் பார்க்கலாம்!

ஒரு வழியாகப் பொழுது விடிகிறது. தோட்டத்தைப் பார்க்க நீதிபதிகள் காரில் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாக டெலிஃபோனில் தகவல் வருகிறது.நான் அவசர அவசரமாகத் தயாரானேன். நீதிபதிகளை வரவேற்றுத் தோட்டத்தைச் சுற்றிக் காட்ட வேண்டாமா? தோட்டத்தைச் சுற்றிக் காட்டுகிற முறையிலும் ஒவ்வொன்றையும் பற்றி நான் விவரித்துக் கூறுகிற சாமர்த்தியத்திலுமே அவர்கள் மயங்கிப் போக வேண்டுமே.

என்னைத்தயார் செய்துகொண்டு நீதிபதிகளை வரவேற்கவாசலுக்கு வருகிறேன். இதென்ன? ஐயையே பின்புறம் புல்வெளியில் மூசு முசு என்று முச்சு இரைக்கும் விகாரமான ஒலி. திரும்பிப் பார்க்கிறேன். அடடா இதென்ன அசிங்கம்? இன்றைக்குப் பார்த்தா பனையப்பனுக்கு ‘இது’ வர வேண்டும்? நீதிபதிகள் வருகிற அந்த நல்ல நேரத்தில் ரோஜாப் பாத்திகளுக்கு அருகில் மல்லாந்து விழுந்து, கைகளையும் கால்களையும் வலித்து உதைத்துக் கொண்டு கிடந்தான் பனையப்பன். வாயில் இதழோரங்களில் நுரை துள்ளிக் கொண்டிருந்தது. அவனுக்கு இந்த அசிங்கமான வலிப்பு நோய் உண்டு என்பது எனக்குத் தெரியும். எப்போதாவது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தோட்டத்திலோ அதன் ஒரு மூலையிலிருக்கும் தன் குடிசையிலோ இந்த அவஸ்தைக் கோலத்தில் பார்ப்பேன் நான். ஆனால் இது சாதாரண வழக்கமாக இருந்தது. இந்தக் கோலத்தில் பார்த்ததும் ஒருபெரிய இரும்புச் சாவியை வேலைக்காரனை விட்டு அவன் கையில் திணிக்கச் சொல்வேன். இதுதான் அவனுக்கு மாமூல் வைத்தியம். சிறிதுநேரத்தில் தெளிந்து எழுந்து மறுபடியும் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவான் அவன்.

இன்றும் அப்படிச் செய்ய நினைத்து வேலைக்காரனைக் கூப்பிட்டேன். ஆனால், வேலைக்காரன் வந்து நிற்பதற்கும், வாயிலில் நீதிபதிகளின் கார் வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது. சமாளிக்க நேரமே இல்லை.

‘சே! இதென்ன அசிங்கம்? இவர்கள் கண்ணில் இந்த ஆபாசம் படக்கூடாது.’ என்று என் மனம் நினைத்தது. வேலைக்காரனிடம் ஏதோ சொல்ல நினைத்தவன், வாயிலில் காரைப்பார்த்ததும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டு,”நான் சிறிதுநேரம் அவர்களை வாசலிலேயே வரவேற்றுப் பேசிச் சமாளிக்கிறேன். அதற்குள் நீயும், கூர்க்காவுமாக இவனை மெல்லக் கிளப்பி அந்த மூலையில் மனோரஞ்சிதப் புதருக்குப் பின்னால் போட்டு விடுங்கள். மற்றதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று வேலைக்காரனுக்கு ஆணையிட்டு விட்டு நீதிபதிகளை வரவேற்க விரைந்தேன். வேலைக்காரன் அப்படியே செய்துவிடுவதாகத் தலையாட்டினான்.

அவன் அப்படியே செய்தும் விட்டான். அவன் அப்படிச்செய்துவிட்டது எனக்கு எப்படித் தெரிந்தது என்றால் நான் நீதிபதிகளை அழைத்துச் சுற்றிக் காட்டிக் கொண்டே ரோஜாப் பாத்திகளுக்கு அருகே வந்தபோது அங்கே தோட்டக்காரன் வலித்துக் கொண்டு கிடக்கவில்லை. பூக்கள்தாம் சிரித்துக் கொண்டிருந்தன. புற்கள்தாம் பசுமை காட்டிக் கொண்டிருந்தன.

எல்லாம் பார்த்தாயிற்று. நீதிபதிகளுக்குப் பரம திருப்தி. எல்லாம் சுற்றிக் காட்டிவிட்டுக் கார் வரை போய் அவர்களை வழியனுப்பினேன். போய் ஒரு மணிநேரத்தில் டெலிஃபோனில் முடிவு சொல்வதாகக் கூறிச் சென்றார்கள். முடிவுதான் எனக்குத் தெரியுமே! என்னைத் தவிர வேறு எவன் பரிசு வாங்க முடியும்?

ஒருமணி நேரத்தில் டெலிபோன் வந்தது. உங்கள் தோட்டத்துக்குத்தான் முதற் பரிசு என்று என் செவிக்கு இனிமையான குரலாக ஒலித்தது முடிவு. எனக்கு உடனே பனையப்பனின் நினைவு பாய்ந்து வந்தது. அவன் கையில் உருவான அழகு தோட்டமல்லவா இது? வேலைக்காரனைக் கூப்பிட்டுக் கேட்டேன்.

“பனையப்பன் எங்கேடா?” “இதோ பார்த்துக் கொண்டு வருகிறேனுங்க” என்று கூறிவிட்டு ஓடினான் அவன்.

சிறிது நேரங் கழித்து அவன் திரும்பி வந்து தலைகுனிந்து நின்றான்.

“என்னடா? பனையப்பன் எங்கே?” .

“வாங்க காட்டுறேன்!” நான் அவனைப் பின் தொடர்ந்தேன்.

மனோரஞ்சிதப் புதரருகில் அவன் உடம்பு நீலம் பாரித்துக் கிடந்தது.

“என்னடா?”

“இந்தப் புதர்லே நிறைய நல்ல பாம்பு உண்டுங்க”

“அடப் பாவி”

“நாங்க என்ன செய்யிறதுங்க. நீங்க போடச் சொன்னிங்க, கொண்டு வந்து போட்டோம்?”

“கையிலே சாவியைக் கொடுத்துப் போடலியாடா?”

“நீங்க அப்படிச் சொல்லலீங்களே.”

“நான் சொல்லணுமா அதை.”

அன்று மாலை திருவாளர் சுகவனம் ஐ.எபி.எஸ். அவர்கள் தமது அழகிய தோட்டத்துக்கு முதல் பரிசு வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தோட்டக்காரப் பனையப்பன் சுடலையில் எரிந்து கொண்டிருந்தான். அதற்கென்ன செய்வது?

பார்ப்பதற்கு அழகாயில்லாவிட்டால் வேறு எது இருந்தாலும் மன்னிக்கக் கூடாதுதானே?

– 1969-க்கு முன், நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *