காக்கைக் சிறகினிலே!

2
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 6, 2024
பார்வையிட்டோர்: 3,890 
 
 

அது ஒரு கொரோன கால “லாக் டவுன்” காலம் என்பதால், முதலாளி தன் டூரிஸ்ட் மினி பஸ்சை, எங்காவது நல்ல நிழலான இடத்தில் நீண்ட காலம் நிறுத்தி வைக்குமாறு சொல்ல, டிரைவர் முத்துவும் அவ்வாறே சென்னையின் ஒரு குறுகிய தெருவில் காலி மனை முன்பிருந்த பெரிய மரத்தின் அடியில், நிழலில், அந்த மினி பஸ்சை நிறுத்தினார்.

முத்து மினி பஸ்சை பார்க்கிங் செய்வதை பக்கத்து வீட்டுக்காரர் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தார். ஏற்கனவே பல இடங்களில் அந்த மினி பஸ்சை நிறுத்த முயற்சித்து அவரவர்கள் ”இங்கே நிறுத்தாதே” என்று தடுத்ததால், சற்று சோர்வும், எரிச்சலும் அடைந்த முத்து, இந்த மனிதரும் “இங்கே நிறுத்தாதே” என்று சத்தம் போடுவாரோ என்று டென்ஷன் அடைந்தார்!

யாரும் இல்லாத காலி மனை வாசலில் நான் என் மினி பஸ்ஸை நிறுத்துவதால் இவருக்கு என்ன நஷ்டம்! வருவது வரட்டும்! இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்று முத்து தீர்மானித்தபோது, பக்கத்து வீட்டுக்காரர், கிடு கிடுவென அவனை நோக்கி விரைந்து வந்தார். முத்துவும் அவருடன் வாக்குவாதம் செய்ய தயாரானார்.

பக்கத்து வீட்டுக்காரர் முத்துவை நோக்கி, “உங்கள் மினி பஸ் மேலே பாருங்கள்! ஒரு காக்கா, குச்சி குச்சியாக, வாயில் ஒவ்வொன்றாக சேகரித்து, மரத்தின் மேலே, ஒரு கிளையில் கூடு கட்டிக்கொண்டிருக்கிறது! மழைக்காலமோ, அல்லது பிரசவ காலமோ, பாவம்!

நீஙகள் உங்கள் வண்டியை மறுபடியும் இங்கிருந்து எடுத்துச்செல்லும்போது அந்த கூட்டை கலைக்காமல் நிதானமாக உங்கள் மினி பஸ்சை மெதுவாக ஜாக்கிரதையாக எடுத்துச்செல்லுங்கள் சார்!” என்றார் பக்கத்துவீட்டுக்காரர்.

எந்த நிமிடமும் அவருடன் சண்டை போடத்தயாராயிருந்த முத்து, மேலே, பஸ்சை ஒட்டியிருந்த கிளையில் கட்டப்பட்டிருந்த காக்காவின் கூட்டை பார்த்து விட்டு பக்கத்து வீட்டுக்காரரின் மனித நேயத்தை நினைத்து திகைத்து நின்றார்! காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு மட்டுமல்ல, தன் கூடு பொன் வீடு என்று பிரமித்தார் முத்து!

Print Friendly, PDF & Email

2 thoughts on “காக்கைக் சிறகினிலே!

 1. கதையின் தலைப்பு “காக்கைச் சிறகினிலே” என்று இருப்பதை விட “காக்கைக் கூடு” என்று இருந்திருக்கலாம்.

 2. இந்தக் கதை மென்மையான மனதுடன் பறவைகளுக்கு இரக்கம் காட்டும் மனிதர் ஒருவரை அடையாளப்படுத்துகிறது. இன்றைய அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் நிறைய நபர்களை இப்படி பார்க்கலாம்.

  தெரு நாய்களுக்கு உணவளிப்பவர்கள்; குருவிகளுக்கு வீடு கட்டி வைப்பவர்கள்; தெருவில் வரும் மாடுகளுக்கு வீட்டு வாசலில் தண்ணீர் வைப்பவர்கள்; எறும்புகளுக்கு உணவு வைப்பவர்களைக் கூட பார்க்க முடியும். தன் வயிற்றுக்கே பிச்சையெடுக்கும் ஒருவர், தன் முகத்தைப் பார்க்கும் தெரு நாய்க்கு உணவைப் பகிர்ந்து கொடுத்து உண்பதைப் பார்க்க முடிகிறது.

  ஒருவர் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இரக்கம் காட்டுவதைப் போல, அவர் மனிதர்களுக்கும் இரக்கம் காட்டுவாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை இருக்கக் கூடாது. ஒருவரைப் பார்த்து மற்றொரு நபர் இரக்கப்படும் சூழ்நிலை இல்லாத சமுதாயம் அமைந்திருக்க வேண்டும்.

  ஒரு மனிதரின் இரக்கத்திற்கு இன்னொரு மனிதர் விடப்பட்டிருக்கிறார் என்றால், அந்த சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகம், அவர் நிராதரவாக விடப்பட்டிருக்கிறார் என்று அர்த்தமாகிறது. இன்று அப்படியான சூழ்நிலை இருப்பதாகவே தோன்றுகிறது.

  ஒருவர் மற்றொருவரைப் பார்த்து இரக்கம் கொள்ளாமல் வாழும் ஒரு சமுதாயம் அமைந்திருக்க வேண்டும்.

  வாடகைக்குக் குடியிருப்போருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் ஏற்படும் உணர்வு போராட்டம், பேருந்திலும் இரயிலிலும் ஏற்படும் மனப் போராட்டம், விபாபாரிகளுக்கும் நுகர்வோருக்கும் ஏற்படும் சிக்கல், வாடகை வாகன ஓட்டுனர்களுக்கும் பயணிகளுக்கும் ஏற்படும் நெருடல், வேலையிடத்தில் சக நண்பர்களுக்கே உதவ முடியாத நிலைமை என்று மனித வாழ்க்கை எண்ணற்ற பல சொல்லொணா உணர்வு போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதற்கு தனிநபர்களைக் குறை கூற முடியாது.

  பறவைகளுக்கும் விலங்களுக்கும் எப்படி மனிதர்களின் இரக்கம் தேவைப்படுகிறதோ, அதே போல மனிதர்கள் மீதும் மற்றவர்கள் இரக்கப்பட வேண்டும் என்று கேட்கத் தூண்டும் ஒரு சமுதாய நிலைமையை இந்தக் கதை கண்முன் கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *