(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காக்கன்குளத்தில் இதுவரை எந்த சங்கீத வித்வானோ, அரசியல் வாதியோ, எழுத்தாளனோ அவதரித்ததில்லை. எனவே வெளி மாவட்டங் களில் அந்தப் பெயர் அறிமுகமாகாமல் இருந்ததில் அநியாயம் எதுவு மில்லை. ஆனாலும் நாஞ்சில் நாட்டுக்காரர்களுக்கு அந்த ஊர்பரவலாகத் தெரிந்திருந்தது. ஏனென்றால் அந்த ஊரில் விளையும் முருங்கைக்காய் அவ்வளவு ருசி உடையது. ருசி என்றால் நாக்கில் நிற்காது. அதன் சுவையை மூங்கையான் பேசலுற்றான் என்ன நான் மொழிந்து விட முடியாது.
ஊரெங்கும் அறுத்தடிப்புக் களங்களின் பிள்ளை மண் ஓரங்களில், வீட்டுப் புழக்கடையில் கை கழுவும் இடத்தருகில், ஆற்றங்கரை ஓரமான பெரிய திரட்டு வரப்புக்களில், தோப்புகளின் கொடுக்கள்ளி, திருகுக்கள்ளி வேலியை அணைந்து புறம்போக்கு நிலங்களில் மானாவாரியாக வஞ்சனை இல்லாமல் வளர்ந்து நின்றன முருங்கை மரங்கள்.
பூக்க ஆரம்பித்தால் ‘பொல்’லென்று வெள்ளை வெள்ளையாகப் பூத்துக் குலுங்கும். மண்மீது நடை பாவாடை விரித்தாற் போன்று வெண்மை பரத்தும். முருங்கைப்பூ, தாது புஷ்டிக்கும் இழந்த வீரியத்தின் மீட்சிக்கும் இல்லாத வீரியத்தின் வளர்ச்சிக்கும் நல்லது என்ற கருத்து பரவலாக இருந்ததால் முருங்கை பூக்க ஆரம்பித்ததும் நாட்டு வைத்திய சிகாமணிகளும் வைத்திய ரத்தினங்களும் சித்தவைத்திய ராஜ்களும் நடமாடித் திரிவார்கள். பச்சைப் பாம்புக் குஞ்சுகள் போல திரிதிரியாக முருங்கைப் பிஞ்சுகள் தொங்குகின்ற அழகு இருக்கிறதே…
நாஞ்சில் நாட்டுக் கல்யாணங்களில் அவியல் எப்படி அத்தியா வசியமான அயிட்டமோ-வைக்கப் பெறுகின்ற அவியலின் தரத்தை ஒட்டித்தான் வைப்புக்கார ஐயர்களின் நட்சத்திர முத்திரைகள் தீர்மானிக் கப்படுகின்றன – அது போல அவியலில் முருங்கைக்காய் இன்றியமை யாதது. எனவே கல்யாணத்துக்கு நாள் குறித்த உடனேயே காக்கன் குளத்தில் முருங்கைக்காய்க்கு அட்வான்ஸ் தந்து விடுவார்கள்.
முருங்கையிலும் தவிட்டு, கறட்டு, நாட்டு, பேய் முருங்கை என்று நான்கு வர்ணங்கள். நாலும் அங்கே விளைந்தன. சாதாரணமாக, யாரையாவது திட்டும்போது கூட “வளர்ந்திருக்கியே.. காக்கன்குளம் முருங்கை மரம் கணக்க…” என்பது வழக்கமாகிவிட்டது.
இப்படியெல்லாம் கியாதி பெற்றிருந்தும் வெளியூரில் காக்கன் குளம் அறிமுகம் ஆகாமலேயே இருந்தது. இந்த விஷயத்தில் அந்த ஊர்க் காரர்களுக்குக் கவிமணி மீது கூட அடங்காத கோபமும் வருத்தமும் உண்டு. ஆரல்வாய்மொழிக் கீரைத்தண்டுக்காக வேலைமெனக்கெட்டு ஒரு வெண்பாப் பாடியவர் இந்தக் காக்கன்குள முருங்கைக்காய்க்கு என்று-அட வெண்பா தான் வேண்டாம்! கேவலம் ஒரு அறுசீர் விருத்த மாவது பாடக் கூடாதா?
தங்கள் ஊர் இப்படிப் புறக்கணிக்கப்பட்ட வஞ்சம் பல காலமாக நெருப்புப் போல அங்கே கனன்று கொண்டிருந்தது. எப்படியும் அந்த மாவட்டப் பத்திரிகையில் வரும்படியாக ஒரு அதிசயம் செய்துகாட்ட வேண்டும் என்று அவர்கள் நெடு நாட்களாகவே துடித்துக் கொண்டிருந்தனர்.
அதற்கு ஏற்றாற் போல-திருப்பதிசாரம் விதைப் பண்ணையில் வீரிய முருங்கை பயிரிடுவதைப் பற்றி, அறுவங்கொறுவாய் வித்து வாங்கப் போன நடு முடுக்கு அல்லல்காத்த ஆவுடையப்பிள்ளை அறிந்து வந்து சொன்னதும் காக்கன்குள மக்களுக்கு உற்சாகம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது.
முருங்கை பயிரிடுவதில் பல தலைமுறை அனுபவமும் விலையும் நிலையும் உடைய அவர்கள், இந்த வீரியமுருங்கை விவகாரத்தையும் அங்கேயே பரீட்சித்துப் பார்க்க விரும்பினர். எனவே, ஊர்ப் பொதுச்சபை உடனடியாக- இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு – கூடியது. வெற்றிலை, பாக்கு, புகையிலை முதலானவற்றைச் சுவைத்துத் துப்பி சொக்கலால் பீடிகளைப் புகைத்துத் தள்ளி, “சவம் மீனுண்ணாகன்னியாரிமீனு- இந்த எளவு கொளச்சல் மீனு ஒரு ருசியுமில்லை மணமுமில்லே! மண்ணு கெணக்கயில்லா இருக்கு” என்பன போன்ற உலக விவகாரங்களை அலசி விட்டு ஊர்ப்பொதுச்சபை ஒரு முடிவுக்கு வந்தது.
பழைய பஞ்சாயத்து மெம்பர் அனவரதம் பிள்ளையைப் பிரசிடென் டாகவும் நடப்பு ஊராட்சி மன்றத் தலைவர் நாமவேல் கோனாரைக் கன்வீனராகவும் ஐந்து ஆண்டுகளாகப் பி. ஏ. படிப்பவரும் நாடாளு மன்றத் தேர்தலில் நாலுகால் பாய்ச்சலில் வென்ற அகில இந்தியப் பிராந்தியக் கட்சியொன்றின் உள்ளூர் அமைப்புச் செயலாளருமான காங்கை இமயனை (காக்கன்குளம் என்பதன் சுருக்கமான காக்கை என்பதைப் பெயருக்கு முன் போடுவது உசிதமானதல்ல என்பதாலும் நிறஆகுபெயராகவோ அல்லது காரண இடுகுறிப் பெயராகவோபொருள் கொள்ள இடம் இருப்பதாலும் ககர ஒற்று மெலித்தல் விகாரமாகி ஙகர ஒற்றாகியது. கைலாசம் என்ற பெயர்வடமொழி எனக் கருதப்பட்டதால் – மறைமலை அடிகள் வாழ்க – அதன் உத்தேசமான தமிழ் பெயர்ப்பான இமயன் என்றாகியது என்மனார் புலவ) பொருளாளராகவும் மற்றும் உள்ளூர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் நொண்டைங்காய் நமச்சிவாயம், நெசவுத் தொழிலாளர் நல்லமுத்து ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு ஒரு அட்ஹாக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது.
மேற்படி குழுவினரின் போக்குவரத்து, வெற்றிலை பீடி,போற்றி ஓட்டல் தோசை, ரசவடைச் செலவுகளுக்காக ஊர்ப் பொதுப் பணத்தி லிருந்து ஒரு தொகை ஒரு மனதாக ஒதுக்கப்பட்டது.
மேற்சொன்ன ‘வீரிய முருங்கை வளர்ப்புத் திட்ட காக்கன்குள செயற்குழு’ மறுநாள் கூடியது. காங்கை இமயனின் கருத்துக்கிணங்க, முதலில் கிராம ஊழியரைச் சந்திப்பது என்றும் அவர் மூலமாக வட்ட விவசாய அலுவலரை அணுகுவது என்றும் பிறகு அவர் துணையோடு விதைப்பண்ணை நிர்வாகிகளைச் சந்தித்து முடிவெடுப்பது என்றும் தீர்மானமானது.
இரண்டு மூன்று கிழமைகள் நடந்து காங்கை இமயனின் அரசியல் செல்வாக்குகளையெல்லாம் பிரயோகித்து விதைப் பண்ணையிலிருந்து, காக்கன் குளத்தில் நடுவதற்காக ஒரு வித்துக்கம்பு கொண்டு வருவதற்கான முயற்சியில் அவர்கள் கொள்கை அளவில் வெற்றி கண்டார்கள்.
வழக்கமாக முருங்கைக் கம்பு நடுவதுபோல் மூட்டையும் தலைப் பையும் சாய்கோணத்தில் சீவி, ஓரடி ஆழத்தில் குழி தோண்டி மூட்டைப் புதைத்து, ஒரு குடம் தண்ணீரையும் சாய்த்து, வெட்டுப்பட்ட கணுக்கள் காய்ந்து விடாமல் இருக்க சாணி உருண்டைகளைப் பிள்ளையார் போல உருட்டிப் பொதிந்த பிறகு அதைப் பற்றி மறந்து விடுவதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை. அல்லது நிச்சயதார்த்தங்களின் போது ஆலங் கொம்புக்குச் செய்வது போல கொஞ்சம் மஞ்சளை அப்பி, களபம் சாத்தி, பன்னீர் தெளித்து, சந்தனம் தடவி, குங்குமம் புதைத்து, மூன்று வெற்றிலைகளால் சுற்றிக் கட்டி ஒருதுண்டு பிச்சிப்பூ ஆரத்தையும் சுற்றி, ஆடுமாடுகடித்து விடாமலிருக்க பாம்புக் கள்ளி வேலி வைக்கலாம் என்ற ஆத்திகர்களின் மாற்று யோசனையும் அடிபட்டுப் போயிற்று.
இந்த ‘வீரிய முருங்கை நடும் நிகழ்ச்சி காக்கன்குளத்தின் பெருமையை உலகறியச் செய்யும்வகையில் அமைய வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். எனவே வெறும் உப்புச்சப்பில்லாமல் ஆக்கு வது போல அதை நட்டு விடக்கூடாது என்று எண்ணினார்கள். குறைந்த பட்சம் மாவட்டக் கலக்டரையோ, தொகுதி எம்.எல்.ஏ.வையோ அல்லது இருவரையுமோ அழைத்து ‘வரலாறு காணாத’ விழா எடுத்து ‘நாஞ்சில் முரசு’ தினசரியிலும் ‘குமரிச்சுடர்’ வாரப் பதிப்பிலும் வெளி யிட்டு ஊருக்குப் பெருமை தேடிக் கொள்வது என்று தீர்மானித்தார்கள். இது போன்ற தீர்மானங்களைச் செயலாக்குவதில் ஒரு குழு அமைப்பது என்பது முப்பது ஆண்டு அரசியல் பாரம்பரியத்தின் விலக்க முடியாத சடங்காகிப் போனபடியால் இதற்கென்று ஒரு விழாக்குழு ஏற்படுத்தப் பட்டது.ஊரிலிருந்த பெண்டு பிள்ளைகளிடமும் வருகின்ற போகின்ற ஆண்களிடமும் அந்த ஒலி பெருக்கிப் பெண், ‘மச்சானைப் பார்த்தீங்களா?’ என்று பல முறை கேட்டுவிட்டாள். மணி-மாலை ஆறரை நெருங்கி விட்டது. ‘மச்சானை’ப் பற்றி யாரும் கவலைப் படாமல், பரபரப்போடு, வரப் போகின்ற மாவட்ட ஆட்சித்தலைவருக் காவும் சட்டமன்ற உறுப்பினருக்காகவும் காத்திருந்தனர்.
அம்மன் கோயில் மைதானத்தில் விழா. விழா மேடை கல்யாணக் களை, வரிசை வரிசையாகப் பெஞ்சுகள். எல்லாம் ஆரம்பப் பள்ளியி லிருந்து வந்தவை. மேடைக்காகத் தென்னை ஒலைப்பந்தல். வெள்ளைக் கட்டு. ஓரங்களில் சிவப்பில் ஜாலர், நடுவில் கொத்து விளக்கு. முகப்பில் வீரிய முருங்கை நடு விழா- காக்கன்குள ஊராட்சி’ அறிவிப்பு. மூங்கில் கால்களில் எல்லாம் டியூப்லைட்டுகள். மேடையில் இரண்டு ‘மகாராஜா’ நாற்காலிகள்.கலெக்டருக்கும் எம்.எல்.ஏவுக்கும். சில்லறை தேவதை களுக்கு ஸ்டீல்செயர்கள். மேசை போட்டு, சமுக்காளம் விரித்து ஒரு பூச்சாடி, மைக். நின்று பேச வசதியாக மற்றொரு மைக். குழல்விளக் குகளில் ஆயும் கொசுக்களைப் பிடிக்க ஒவ்வொரு விளக்கின் கீழ்ப் பாகத்திலும் புன்னைக்காய் எண்ணெய் தடவிய பேப்பர்கள்.
விரிக்கப்பட்டிருந்த வெள்ளைப் பொடி மணல் மீது சிறுவர்கள் புரண்டு மறிந்தனர்.
கார் ஒன்று வந்து நின்றது. எம். எல். ஏ.கனகலிங்கம். கால்சியம் ஊசி போட்டுக்கொண்டதைப் போலக் குழுமி இருந்தவர்களிடம் ஒரு விதிர் விதிர்ப்பு. கனகலிங்கம் தோழமையோட காங்கை இமயனிடம் அளவளாவ ஆரம்பித்தார்.
திடீரென்று மைக்கில் ஒரு அறிவிப்பு.
“ஆங்காங்கே குழுமியிருக்கும் பெரியோர்களும் தாய்மார்களும் உடனே விழா அரங்கிற்கு வரும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். காக்கன்குள ஊராட்சி மன்றத்தின் வீரிய முருங்கை நடு விழா இன்னும் சில நிமிடங்களில் தொடங்கும். தலைவர், நாகர்கோயில் சப்ஜெயில் வெற்றி கொண்ட வீரர், கடுங்கனல் சொல்லன், கனகலிங்கம் எம்.எல்.ஏ. அவர்கள் வருகை தந்துவிட்டார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னும் சிலநொடிகளில் எதிர்பார்க்கப்படுகிறார். ஆகவே பெரியோர்களே! தாய்மார்களே! உடனே அரங்கிற்கு வாருங்கள் என்று சிரந்தாழ்த்தி, கரங் கூப்பி, வேண்டிவிரும்பி, பொன்னார் திருவடிகளில் பணிந்து தாழ்மை யுடன் வேண்டிக் கொள்கிறோம். வணக்கம்.”
உள்ளூர்ப் பேச்சாளர் ஒருவரின் அங்கலாய்ப்பு இந்த ‘சொற் பொழிவி’ன்மூலம் அடங்கியது.
அம்மன் கோயில் அருகில் இருந்த ஊராட்சி மன்ற படிப்பகத்தில் எம்.எல்.ஏ. பிற இரண்டு பேச்சாளர்கள் அமர்த்தப்பட்டனர். வாண்டுகள் கூடி விடுகின்ற அபாயத்தைத் தவிர்க்கவேண்டி, படிப்பக வாசலில் தொண்டர் ஒருவர் சென்ட்ரியாகப் போஸ்ட் செய்யப்பட்டார்.
“போங்கலே அந்தப் பக்கம்… இங்கே வெண்டயமா மொளைச்சிருக்கு …’ என்று அவரின் அதட்டல் நொடிக்கொரு முறை கேட்டது.
அரசாங்க ஜீப் ஒன்று ரோட்டிலிருந்து திரும்பி தெருவுக்குள் நுழைந்தது. விழாப் பந்தலுக்கு முன்னால் வண்டியை நிறுத்தி கலெக்டர் இறங்கினார்.
“அட…! சின்னப்பையனால்லா இருக்காரு…”சில அதிசயிப்புகள்.
சிரம பரிகாரம் செய்துகொண்டு விருந்தினர்கள் அனைவரும் விழா மேடைக்கு வந்தனர். மேடையில் ஏறி அமர்ந்தனர். கூட்டம் செட்டில் டௌன் ஆகிக்கொண்டிருந்தது. சிறுவர்களின் இரைச்சல் கதியில் தாழ்ந் ததும், காக்கன்குளப் பிரமுகர்கள் பரபரவென்று செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.
“இறை வணக்கம்… திரு. சங்கரநயினார் பிள்ளை…”
சங்கரநயினார் பிள்ளை பெரியபாகவதர் இல்லை. இருக்க நியாய மில்லை. கோயில் திருவிழாக்களில் கச்சேரி கேட்டுக் கேட்டு- கோயில் வார்ப்புகளில் பிடிக்கும் பச்சை களிம்பு போல-சங்கீதக் களிம்பு பிடித்துப் போனவர். சென்னை, திருச்சி வானொலி நிலையங்கள், அஞ்சல் செய்யும் இசைவிழாக் கச்சேரிகள் அவருக்காக மட்டும் அங்கே ரேடியோ வில் வைக்கப்படும். அதைக் கேட்டு அவர் அடையும் பரவசம் மற்றவர் களைப் புளகிக்கச் செய்யும். சங்கீதம் என்றால் வில்லுப் பாட்டு, சினிமாப் பாட்டு என்று இலக்கணப் பாத்தி கட்டிக்கொண்டிருந்த அந்த ஊர் மக்களிடம் மேற்படியார் சங்கர நயினார் பிள்ளைக்கு ஒரு செல்வாக்கு.
சாதாரணமாக கே.பி.சுந்தராம்பாள் கச்சேரிக்கு காக்கன் குள மக்கள் (சுற்றுப்புற ஊர்களும் அப்படித்தான்) போனால் முற்பாதியில் பொரி கடலை கொறித்துக்கொண்டு ஊர்க் கதை பேசுவார்கள்- “ஏ… லெக்காளி கொஞ்ச நாளா அம்மாசி மடத்துக்குப் போறானாமே…!”
“ஆமா… என் கிட்டையும் யாரோ சொன்னா…”
“அம்மாசி மடத்துக்குத்தான் போறானா… இல்லே இன்னாசி வீட்டுக்குப் போறானாடே…” என்ற ரீதியிலான பேச்சு. கொஞ்ச நேரம் பொறுத்து ‘ஞானப் பழத்தை பிழிந்து…’ என்று பாட்டு ஆரம்பமாகும் போதுதான் செவிக் கபாடம் திறக்கும்.
இந்த வளமைக்குச் சங்கர நயினார் பிள்ளை மட்டும் விதிவிலக்கு என்பதால் பெரும்பாலும் அவ்வூர் விழாக்களில் அவர்தான் இறை வணக் கம். அவர் உடல் நலம் இன்றி இருந்தால் அல்லது வெளியூர் போய் விட்டால் இரண்டு நிமிட மௌன அஞ்சலிதான்.
அப்படி அங்கு மாதம் மூன்று விழா நடப்பதும் இல்லை. ஆண்டு தோறும் பொங்கல் விழா நடக்கும். கடந்த பொங்கல் விழாவின் போது சங்கர நயினார் பிள்ளைக்கு டைபாய்ட் காய்ச்சல். எனவே அவர் விழா வில் பாடி ஒரு வருடமும் ஒன்பது மாதங்களும் ஆகிவிட்டன. எனவே இந்த விழாவை விட்டுவிடுவதில்லை என்று தினவெடுத்த தொண் டையைத் தீட்டிப் பதம் பார்த்துக் கூராக்கி வைத்திருந்தார். இரண்டு நாட்களாக இரவில், காய்ச்சிய பசும் பாலில் நல்ல மிளகு, குந்திரிக்கம் இவற்றைப் பொடி செய்து போட்டுச் சாப்பிடுகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறின. (ஈயம் மட்டும்தான் தொண்டைக்குப் பூசவில்லை என்று விரோதி வட்டாரங்கள் கேலி செய்தன.)
இவற்றையெல்லாம் சங்கர நயினார்பிள்ளை கூட்டாக்கவில்லை, “இறைவணக்கம்” அறிவிக்கப் பட்டதும்
துவைத்து, நீலம் போட்டு உலர்த்தி மடித்து வைத்திருந்த வெள்ளை வேட்டி, சலங்கைக் கரை நீண்ட துண்டு, வெண்ணீறு – நாற்பத்தெட்டு வயது மதிக்கத் தக்க சங்கர நயினார் பிள்ளை மேடை மீது ஏறினார்.
நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மைக்கின் முன்னால் நின்றார். “ம்க்கும்… ம்க்கும் ” என்று இரண்டு முறை தொண்டையைச் செருமினார். கண் மூடி இரண்டு நொடிகள் தியானித்தார். கண்ணைத் திறந்தார். மேடையில் எழுந்து நின்றவர்களையும் கண் முன்னால் திரண்டு நின்ற கூட்டத்தையும் பெண்கள் பக்கம்ஆறாவது வரிசையில் இருந்த தன் மனைவியையும் மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த கைக் குழந்தை திருநாவுக் கரசையும் பார்த்தார்.
”அம்மையே அப்பனே ஒப்பிலா மணியே…”
வழக்கமாக, பௌர்ணமி நாட்களில், தீபாராதனைக்கு முன்னால், அம்மன்கோவிலில் அவர் பாடும் பாட்டு தங்குதடையின்றி ஒழுகி வந்தது.
“என் ஒப்பிலா மணியே…” என்று இரண்டு முறை ஏகாரத்தை இழுத்தார். இழுத்த கையோடு அடுத்த பாட்டைத் தொடங்கினார்.
“பித்தா பிறை சூடி பெம்மானே அருளாளா…”
ஊராட்சித் தலைவருக்குக் கொஞ்சம் திக்கென்றிருந்தது. ஒரேயொரு பாட்டுத்தான் பாட வேண்டும் என்று முன்கூட்டியே சொன்னது அவருக்கு நினைவு வந்தது. ஒருவேளை அம்மன் கோயிலில் இரண்டு பாட்டையும் சேர்த்தே பாடிப்பாடி இரண்டும் ஒரே பாட்டு என்று நினைத்திருக்கலாம் என்று சமாதானம் செய்துகொண்டார்.
இரண்டாவது பாட்டைப் பாடி முடித்த சங்கர நயினார்பிள்ளை, வலது கையில் வைத்திருந்த மஞ்சள் அட்டை மலிவுப் பதிப்பு, தேவார திருவாசகத் திரட்டைப் பிரித்தார்.
”உற்றாரை யான் வேண்டேன்… ஊர் வேண்டேன்… பேர் வேண்டேன்…” என்று நிதானமாக எடுத்தார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கடத்துடன் அசைய ஆரம்பித்தார். எம்.எல்.ஏ. கனகலிங்கம் ‘இந்த மூட நம்பிக்கைக் குருடர்களை ஏன் இழுத்து வருகிறாய்?’ என்ற பொழிப்புரையில் காங்கை இமயனைப் பார்த்தார். காங்கை இமயன் பற்களைக் கடிக்க ஆரம்பித்தார்.
ஆனால் சங்கர நயினார் பிள்ளை இந்த உலகிலேயே இல்லை. பரமானந்தப் பெருவெளியில் கலந்து ஆனந்த அனுபூதியில் திளைக்க ஆரம்பித்து விட்டார்.
“சொற்றுணை வேதியன் சோதி வானவன்…” என்று நான்காவது பாட்டை உச்சத்தில் தொடங்கினார். நின்றிருந்த மக்கள் கூட்டத்தில் கிசு கிசுப்பு அலைகள்எழ ஆரம்பித்தன. காங்கை இமயனும் ஊராட்சித் தலை வரும் கண்களும் அதன் வழியாக மூளையும் வெளியில் வந்து விடுமோ எனும் படியாக விழித்தனர். சங்கர நயினார் பிள்ளை இந்த அஞ்ஞான உலகிலேயே இல்லை. மேடையில் இருந்தவர்கள் – மன்னிக்கவும், நின்றவர்கள் நிலை பரிதாபகரமாக இருந்தது.
சங்கர நயினார் பிள்ளைக்கு ஏகமான உற்சாகம். கூட்டம் தன்னுடைய பாடலில் மெய்மறந்து கட்டுண்டு திளைக்கிறது என்று எண்ணிக் கொண்டு இடைவெளி விடாமல் அடுத்த பாட்டை எடுத்தார்.
“அல்லல் என் செயும் அருவினை என் செய்யும்….”
மேலும் பொறுக்க முடியாது என்று நினைத்த காங்கை இமயன் பாய்ந்து மேடையில் ஏறினார். சங்கர நயினார் பிள்ளை கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கினார். கீழே இறங்கினார்.
அடுத்த அடி மனப்பாடம் இல்லாததால்-
“தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என் செயும்” என்று இரண்டு முறை பாடித் தானாகவே குரல் சென்று தேய்ந்து இற்றது.
முன்வரிசையிலிருந்த ‘நாஞ்சில் முரசு’ ‘குமரிச் சுடர்’ நிருபர்கள் அவசர அவசரமாகக் குறுக்கெழுத்தில் எழுத ஆரம்பித்தனர்.
– கணையாழி, மார்ச் – 1978
நன்றி: https://nanjilnadan.com/2011/03/12/காக்கன்குளம்முருங்கை/