(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வானத்துப் பொன் குதிரையைக் காணோம். அதன் எட்டிய குளம்போசை கூடக் கேட்கவில்லை. ஒரே மப்பு. திடீரென்று மழைக்கு இவ்வளவு பைத்தியம் பிடித்திருக்க வேண்டியதில்லை. என்ன புலம்பல்!
தெருவில் ஈ காக்கை காணோம். மழை ஜலம் தெருப் பள்ளங்களை நிரப்பிச் சாக்கடையை நோக்கி யாத்திரை போகிறது, சாக்கடைகள் கரை புரண்டு விட்டன. தென்னை யும், நெட்டிலிங்கமும், வேம்பும் எவ்வளவு ஒய்யாரமாய் மழைக்காற்றில் அசைந்தாடுகின்றன! எவ்வளவு காகிதங் கள் கப்பலாகி விட்டன!
மழையின் புலம்பல் விவரிக்க முடியாத எவ்வளவு உணர்ச்சிகளை எழுப்புகிறது!…
வாழ்வின் மழை ஜலத்தில் எவ்வளவோ கப்பல்களை. விட்டிருக்கிறேன். ஆழம் போதாமல் கரை தட்டிப் போன பெரிய கப்பல்கள் எவ்வளவு? விட்ட இடத்திலே முழுகிப் போன சிறிய கப்பல்கள் எவ்வளவு? ஆனால் நடுத்தரமாய்க் கட்டிய கப்பல்கள் எவ்வளவு எளிதாய், சிக்கலின்றி சாக்கடை யைச் சேர்ந்து தெருக் கோடியில் மறைந்து விட்டன! என்ன லாபம்? மறையாத மணிவிளக்காய் கப்பல் கண்ணில் பட்டுக் கொண்டு மிதந்தாலல்லவோ இன்பம்? மறையவும் படாது. மிதக்கவும் வேண்டும்…
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.