நானும், என்னுடைய கேமரா மேன் ரவியும் டூவீலரில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நல்ல வெய்யில் நேரம். எங்க ரெண்டுபேருக்கும் ஒரு டார்கெட் நெருக்கடி இருக்கிறது. நாளை மாலைக்குள் ஒரு கவர் ஸ்டோரிக்கான மேட்டரை ரெடி பண்ணி எங்கள் பத்திரிகை ஆபீஸில் கொடுத்தாக வேண்டும். எங்களுடையது மாதாந்திர இதழ். பெயர் `பிறைநிலா’ மாதம் ரெண்டு லட்சம் பிரதிகளுக்கு மேல் சர்குலேஷன் போகிறது . காலையிலிருந்து சுற்றி சுற்றி வருகிறோம். ஊஹும், எதுவும் தேறல. எதைப்பற்றி எழுதலாம் என்றே இன்னமும் எங்களுக்குள் தெளிவில்லை. நேற்றே எடிட்டர் கைலாசபதி காச்மூச்சென்று கத்தினார். அவமானமாகிவிட்டது. பின்னே இரண்டு வாரங்களாக ஒரு மேட்டரையும் நாங்கள் தயாரித்து அனுப்பவில்லை என்றால் யார்தான் சும்மா சம்பளம் கொடுப்பார்கள்?. இலக்கில்லாமல் கிராமங்கள் பக்கம் போய்க் கொண்டிருக்கிறோம். சாலையின் இடது பக்கம் ஒரு கிளை சாலை பிரிந்து செல்கிறது. சுமங்கலி கிராமம் 2 கி.மீ என்ற பெயர் பலகை இருக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டி வண்டியை நிறுத்தி இறங்கினோம். சாலை சஞ்சாரங்களின்றி அமைதியாக இருந்தது. எப்பவோ ஒருதடவை ஹீரோ மெஜஸ்டிக்கோ, அல்லது டி.வி.எஸ்.50 வண்டியோ அந்த இடத்தை கடந்து போகிறது. எதிரில் விரிந்தொடும் பெரிய தரிசுநில பரப்பில் ஆட்டு மந்தை ஒன்று மேய்ந்துக் கொண்டிருக்கிறது. கையில் ஒரு கோலை வைத்துக் கொண்டு ஒரு பத்து பனிரெண்டு வயசு சிறுவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். துணைக்கு பெரியவங்க யாரையும் காணவில்லை. அவனைப் பார்த்ததும் ஒரு ஐடியா எழ ,ரவியை கூட்டிக் கொண்டு அவனிடம் சென்றேன். தடுக்கி விழுவான் போல குச்சி உடம்பில் கிள்ளியெடுக்க துளி சதையின்றி இருந்தான். அட்ட கரியான நிறம். அழுக்காய் அரை டிரவுஸர் போட்டிருந்தான். மேலே அதே அழுக்குடன் மொடமொடவென்று காக்கியில் அரைக்கை சொக்காய். அழுக்கு தெரியாத நிறத்தில் ஒரு அழுக்கேறிய லுங்கியை தோளில் மாட்டி தொங்க விட்டிருந்தான். ராத்திரியில் இந்த லுங்கிதான் அவனுடைய போர்வை என்று படுகிறது. தலைமுடியில் எண்ணை குளிப்பாடு நடந்திருக்கிறது. முகத்தில் எண்ணை வழிந்து மினுமினுக்கிறது.
“டேய் தம்பீ! இங்க வாப்பா.”- கிட்டே வந்தான். “இன்னாபா?.” – ஒருவிதமான கலவரத்துடன் கேட்டான். மோட்டார் சைக்கிளில் வரவே எங்களை போலீஸ்னு நினைச்சிக்கிட்டிருக்கலாம். அதற்கேற்றார் போல வண்டி புல்லட் வண்டி. “ஒண்ணுமில்லபா உன் பேரு என்னா?.” “பெருமாளு.”- சற்று மிரட்சியுடன் இருந்தான். அவனை சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும்.
“சரிப்பா இந்தா“ – என் தோளில் தொங்கியிருந்த பேக்கிலிருந்து ஒரு மில்க் பிக்கீஸ் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை எடுத்து அவனுக்கு கொடுத்தேன். தயக்கத்துடனும், சந்தேகப் பார்வையுடனும் வாங்கிக் கொண்டான்.
“ஏம்பா இன்னா படிச்சிருக்கிற?.”
“நாலாங்கிளாஸ். எதுக்குபா கேக்கற?”
“சும்மா தெரிஞ்சிக்கத்தாண்டா. சரீ அதுக்கு மேல படிக்கலியா?.”
“ஆட்டு மந்தைய யார் மேய்க்கறது?. அதான் வந்துட்டேன். எனுக்கும் படிப்பு ஏறலபா.”
“சரி…சரி. சரிப்பா உன்னை ஆடுங்களோடு வெச்சி ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா?. புஸ்தகத்தில இந்த போட்டோ வரும். புஸ்தகத்த உனுக்கு குடுக்கிறேன்.” -அவன் முகம் சிரித்தது. “எப்ப குடுப்ப?.” “ஒரு வாரத்தில குடுக்கிறேன்.”- ரவி என் ஐடியா புரிந்து, அவனை மேய்ச்சலில் இருக்கும் ஆடுகள் பின்புறத்தில் இருக்கும்படி நிற்கவைத்து லாங் ஷாட்ல ரெண்டு, க்ளோஸ்அப்ல இரண்டு என்று கிளிக் செய்துக் கொண்டான். அதற்குள் ஆள் சகஜ நிலைக்கு வந்திருந்தான். மில்க் பிக்கீஸ் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து அவனிடம் கொடுத்தேன். ஆவலாய் சாப்பிட ஆரம்பித்தான்.
“சரீ உன் மந்தையில எத்தினி ஆடுங்க இருக்குது?. “
“எதுக்கு அதெல்லாம் கேக்கற?.”
“ஆட சும்மா தெரிஞ்சிக்கத்தாண்டா. உன்னை பத்தி புஸ்தகத்தில எழுதணுமில்ல?.”
“உ..ம்.. எம்பது. அதில்லாம பாஞ்சி வெள்ளாடுங்க, நாலு கிடாய்ங்க. இருவது பொட்டைக்கு ஒரு கிடா கணக்கு . அப்பறம் எட்டு குட்டிங்க.”
“அப்படியா. இம்மா ஆட்டையும் நீ ஒண்டியாவா மேய்க்கற?“
“ஆங் எங்கப்பன் அப்பப்ப எனுக்கு தோள் மாத்த வரும். அதுக்கு ஆட்டு வாகடம்லாம் நல்லா தெரியும். அது இப்ப இல்ல, போன வைகாசியப்போ செத்துப் போச்சி.”- அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.. அவனை தட்டிக் கொடுத்து ஆசுவாசப் படுத்தினேன்.
“ஆடுங்க மொத்தம் உங்களுதாடா?.
“ஊஹும் எங்க ஆன்டை வூட்டுது. கூலிவாரத்துக்கு மேய்க்கறோம். போட்ற குட்டியில நாலுக்கு ரெண்டு எங்களுது. “
“இப்ப உனக்கு துணை யாருடா?.”
“எங்க ஆத்தாதான். காத்தால நானு மந்தைய கெளப்பிக்கிணு வந்துடுவேன். மத்தியானம் எனுக்கு கூ கரைச்சி எடுத்துக்கிணு எங்காத்தா வரும். இப்ப வர்ற நேரந்தான். இன்னிக்கு மத்தியானம் கெவுரு மாவுல சிமிளி கெளறி எடுத்தார்றேன்னு எங்காத்தா சொல்லிக்கீது.” – சொல்லும்போதே வாயில் சுரக்கும் ஜொள்ளை விழுங்கிக் கொண்டான். “அதென்ன சிமிளி?.” “ஐயே தெரியாதா? கெவுரு மாவுல செய்றது. தித்தீச்சிக்கிணு இருக்கும். இருபா எங்க ஆத்தா வந்ததும் உனுக்கும் தர்றேன் துன்னுட்டு போ.” – அவன் முகத்தில் அவ்வளவு வேட்கை இருந்தது.. கேட்காதவற்றையும் வலிந்து சொல்லும் வெள்ளந்தித்தனம். “போவட்டும் ஞாயித்துக் கிழமை ஒருநாள் மேய்ச்சலுக்கு லீவு விட்டுக்குவீங்களா?.”
“லீவா? அதெல்லாம் எனுக்கு தெரியாதுபா.. லீவு வுட்டுப்புட்டா அன்னிக்கி ஆடுங்க தீனிக்கு எங்க போவுமாம்?. அதுங்களும் நம்மளாட்டந்தான?.”
“அப்ப உனக்கு ஜுரம் கிரம் வந்துட்டா என்ன பண்ணுவீங்க?. அன்னைக்கு யாரு ஆடுகளை மேய்க்கிறதாம்?.”
“எனுக்கு சொஸ்தமாவுற மட்டும் எங்க அப்பனோ, ஆத்தாவோ ஆடுங்களை ஓட்டிம் போவாங்க. இல்லேன்னா எங்க பங்காளிங்க மந்தையோடு புனைச்சி அனுப்பிடுவோம். அவுங்களுக்கு ஒரு இக்கட்டுன்னா அவங்க மந்தைய நாங்க மடக்குவோம். ”
“தோ பாருபா, காத்தால ஆறு மணிக்கு கூ குடிச்சிப்பிட்டு.”
“கூ ன்னா என்ன தம்பி?.”
“ கூ பா ஆங் கூயு.”
“ சரி..சரி. புரிஞ்சி போச்சி. கூழு.”
“ஆடுங்களை பட்டிய வுட்டு கெளப்பிடுவேன். மந்தைய மேய்ச்சல்ல வுட்டுப்புட்டு பொழுதன்னிக்கும் ஊருமேல ஊருன்னு மந்தைய நவுத்திக்கிணே இருப்பேன்..”
“ஒரு நாளைக்கு எம்மாம் தூரம் மேய்ச்சலுக்கு ஓட்டிட்டு போவ?.வெய்ய காலத்தில இங்கிருந்து மேச்சேரி ஆறுகல் தொலைவுபா. மேச்சேரி ஏரி எதுவாய் வரிக்கும் போவேன் . மத்த நாள்ல இங்கியே ஏரிக்கரையில, பொறம்போக்குல வுட்டு மேய்ப்பேன். ”
“சரி எப்பவாவது ஆடுங்க தொலைஞ்சி போறது உண்டா?.“
”உம் அப்பப்ப எதனா வேத்து மந்தையில மேச்சல்ல கலந்துபோயி ஆடுமேல ஆடுங்கன்னு பூடும். அப்ப அங்க போயி எங்க ஆடுங்களை ஓட்டியாருவோம். எங்க ஆடு எங்களுக்கு தெரியும்”
“எப்படிப்பா?. எல்லா ஆடுங்களும் ஒரேமாதிரிதான் இருக்கு.” – அவன் ரோஷமாய் பார்த்தான்.
“யோவ்! எல்லா ஆட்டுக்கும் அடையாளம் கீது. எங்களுக்கு தெரியும்யா. தெர்தா என் மந்தையில அறுபது கெரிச்சல் ஆடுங்க, பத்து மறையாடுங்க, பத்து சில்லி, கீதுபா. இதில்லாம நாலு கெரிச்சல் கிடா கீது, எட்டு சில்லி ஆட்டுக் குட்டிங்க கீதுபா. இது இல்லாம வெள்ளாடுங்க கீது. எம்மா பெருசு மந்தையா இருந்தாலும் எங்க ஆட்டை எனம் பிரிச்சி கூட்டியாந்துடுவோம். தூரத்தில் நின்னு ஒரு கொரலு குடுத்தா பொதும். என் கொரலை கேட்டாலே வெள்ளாட்டி என் பின்னால ஓடியாந்துடுவா தெர்தா?.”
“வழக்கமா மத்தியானம் வீட்டிலயிருந்து இன்னா சாப்பாட்டை உங்க ஆத்தா கொண்டாரும்?. கொழம்பு சோறா?”
“தீவாளி, பொங்கல்,னா பலகாரம், சோறு கொயம்பு வரும். அம்மாவாசை, கிருத்திகயில் கூட மத்தியானம் சோறுதான். மிச்ச நாள்லாம் எப்பவும் கூ தான். கடிச்சிக்க உப்புகண்டம் வறுத்து வெச்சிருக்கும்.”
“உப்புகண்டமா?.”
“ஹக்காங். போன மாசம் தொண்டையடைப்பான் நோவு தாங்கி மூணு கெரிச்சலாடுங்க செத்துப் போச்சி. அத்தை வெச்சிக்குணு இன்னா பண்றது?. எங்க ஆன்டை ரெண்டு ஆட்டை தூக்கி ஊர்ல கீற எங்காளுங்க கிட்ட குடுத்துட்டாரு. ஒரு ஆட்டை அறத்து சின்ன சின்ன துண்டுங்களா போட்டு, உப்புல ஊறவெச்சி வெய்யில்ல காயவெச்சி, நல்லா வத்தலா காஞ்சப்பறம் எடுத்து பானையில போட்டு வெச்சிக்கிறது.. வோணும்போது ஊற வெச்சி, வறத்து துன்றது. அதான் உப்புகண்டம்.” – அந்த பையன் ஒவ்வொரு விஷயமா எங்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தான்.
“சரிப்பா நீ சினிமாவுக்கெல்லாம் போறதில்லையா?.”
“ஊஹும். சாயங்காலம் ஆடுங்கள பட்டி அடைக்கிறப்போ இருட்டிப்பூடும். அப்புறம் ஆடுங்க உருப்படி கணக்கு செரியா கீதான்னு மொத்தத்தையும் எண்ணி வுட்டுப்புட்டு வூட்டுக்கு போறப்போ ராத்திரி ரொம்ப நேரம் ஆயிப்பூடும். அடுப்புல சுடத்தண்ணி போட்டு வெச்சிருக்கும். குளிச்சிப்புட்டு சாப்புட்டுப்புட்டா. அப்பவே தூக்கம் வந்துடும். சினிமால்லாம் எனுக்கு புடிக்காதுப்பா. அதுக்கு ரெண்டாவது ஆட்டத்துக்குத்தான் போவணும். ரொம்ப நேரம் கண்ணு முழிக்கணும். நம்மால ஆவாது.
“கடைசியா நீ என்ன சினிமா பார்த்த?.” – அவன் நெடுநேரம் யோசித்தான்.
“ம்..ம்..அது..பேரு தெரியாது, சிவாஜி நடிச்சிருந்தாரு. எங்கூரு டெண்ட் கொட்டாய்ல வந்துச்சி. ஒரே அயுவு. நானும் அயுதுபுட்டேன்.” – எங்களுக்கு பாவமாய் இருந்திச்சி. நாமெல்லாம் அனுபவிக்கிற எந்த ஒரு பொழுது போக்கு அம்சங்களும், எந்த உணவு சுவைகளும் இல்லாத ஒரு வாழ்க்கைமுறை. அது இல்லையென்பதையே அவன் உணரவில்லை . இவ்வளவு சின்ன பையனை நம்பி நூறு ஆடுங்களை அனுப்பிவெச்சிருக்காங்களே, எவ்வளவு பெரிய பொறுப்பு?. ஒருஆபத்துன்னா இந்த குழந்தை என்ன பண்ணும்?.
“மாசம் ஒருநாள் கூட ரெஸ்ட் இல்லாம எப்பிட்றா ?’’
“ஆங்..நம்ம கொடலுக்கு ரெஸ்ட் கீதா?, அப்பறம் ஆடுங்க கொடலுக்கு எப்பிடி ரெஸ்ட் குடுப்ப?. அப்டீன்னு எங்கப்பன் சொல்லும்.”
“ அடடே! இவ்வளவு பேசத்தெரியுமா உனக்கு. “ – அவன் பேசிக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி மந்தையின் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே இருந்தான். அடிக்கடி ஓடி மந்தையை விட்டு விலகி தூர போய் மேயும் ஆடுகளை ட்ரீய்ய.. ட்ரீய்ய என்று ஓடிப்போயி மடக்கி ஓட்டி வந்து மந்தையுடன் அணைத்து விட்டான். என்ன பேசினாலும் அவன் கவனம் பூரா ஆடுகளின் மீதே இருந்தது.
“ஏண்டா தம்பி! காலம் கெட்டுப்போயி கிடக்குது. திடீர்னு ஆடு திருடனுங்க வந்துட்டானுங்க சுற்றிலும் உதவிக்கு ஒரு காக்கா குருவி இல்லை, தனியா நீ இன்னா பண்ணுவ?. உன் ஆடுங்களை எப்படி காப்பாத்துவ சொல்லு. எப்படி சமாளிப்ப?.”- இப்ப அவன் எங்களை பார்த்த பார்வையே வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை எங்களையும் ஆடு திருடனுங்கன்னு நினைச்சிட்டானோ.
“டேய்…டேய்..எங்கள அப்படி பாக்காதடா. நாங்க ஆடு திருடனுங்க இல்லடா, ஆபீஸ்ல வேலை செய்றவங்கடா.”—கிட்டேபோய் அவனை அணைத்துக் கொண்டேன். அவன் மேலே ஒரே முடை நாத்தம்.
“அதெல்லாம் சமாளிப்பேன்யா . தோபாரு கல்லாலேயே அடிச்சி அவனுங்க மூஞ்சை பேத்துடுவேன் ஹக்காங்.” – சிறுபிள்ளையின் இந்த பேச்சைக் கேட்டு ரவி சிரித்தான். அந்நேரம் மேற்கே ரொம்ப தூரத்துல ஒரு நாலைந்து ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருந்ததை பையன் கவனித்துவிட்டு அதை மடக்கி கொண்டுவர ஓடினான்
நாங்கள் ஓடிய அந்த பையனையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவனை பார்க்கிறப்ப சகல வசதிகளையும், சொகுசுகளையும் அனுபவித்துக் கொண்டு வாழும் அவன் வயசேயான என் பிள்ளை கோகுல் நினைவில் வந்தான். இந்த பையனுக்கு வரும் சவாலகளில் ஒன்றை கூட நாங்கள் அவனுக்கு விட்டுவைக்கவில்லை. காலை எட்டு மணிக்கு சாவகாசமாய் துயிலெழுந்து, பேருக்கு காக்காய் குளியல் போட்டு, சாப்பிட்டு ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்கு காரில் போய் இறங்குகிற சுகவாசி அவன். தினசரி விதவிதமான உணவு வகைகள். இந்த பையன் குடிக்கிற கூழெல்லாம் கோகுல் என்ன நானே என் வாழ்நாள்ல டேஸ்ட் பண்ணியதில்லை.
திடீரென்று அந்த பையன் தூரத்திலிருந்தே டாய்!….டாய்!… த்தா பொறுக்கி டேய். ஐயோ அவங்களை புடிங்க புடிங்க… என்று கத்திக் கொண்டே கீழே கிடந்த தொரடை எடுத்துக்கிட்டு வேகமாய் ஓடி வந்துக் கொண்டிருந்தான். என்னாச்சி?. அப்போதுதான் நாங்களும் பார்த்தோம் மெயின் ரோடை ஒட்டி இரண்டு ஆடு திருடனுங்க அவசர அவசரமாக ஒரு ஆட்டை பிடித்து டூ வீலரில் வைத்து கொண்டுபோக முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஆடு அடங்கல, துள்ளி துள்ளி திமிரிக் கொண்டிருந்தது. ம்மே…ம்மே… என்று ஒரே கத்தல். பையன் வர்றதுக்குள்ளே அவனுங்க வண்டியை கிளப்பிடுவானுங்களே.
“ரவி! நாம எதையாவதுசெய்யணும். எங்கூட ஓடிவா. அவங்களை விடக்கூடாது.”
பையன் வருவதற்குள் நாங்க வேகமாக ஓடி அவனுங்களை தடுத்துவிட்டோம். நான் துணிச்சலை வரவழித்துக் கொண்டு, டாய் என்று கத்திக் கொண்டே டூவீலரில் பின்னாலிருந்தவன் ஷர்ட்டை கொத்தாக பிடித்தேன். நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. ஆட்டை அப்படியே போட்டுட்டு ஓடிடுவானுங்கன்னு நினைச்சேன். இப்போது அவன் கையில் கத்தி ஒன்று பளபளத்தது. சடக்கென்று கத்தியை வீசினான். என் புறங்கையில் ஆழமாய் கீறல் விழுந்து ரத்தம் கொட்டியது. ஆவென்று கத்திவிட்டேன். கேமராமேன் ரவி என்னை தூரமாய் இழுத்துக் கொண்டு வந்துவிட்டான். கைக்குட்டையை எடுத்து ஒரு கட்டு போட்டான். ரத்தம் வருவதை நிறுத்த பையிலிருந்து வாட்டர் பாட்டிலை எடுத்து ரணத்தின் மேல் ஊற்றி கைக்குட்டையை ஈரமாக்கினான். நாங்கள் ஆளுங்க நீட்டும் பூட்டுமாய் இருந்தாலும். அடிதடிக்கு பழக்கப்படாத பூஞ்சையான ஆளுங்க. கத்தியைப் பார்த்தால் பேண்ட்டை ஈரமாக்கிக் கொள்ளும் ரகம்.
“த்தா! டாய்! கிட்ட வந்தீங்க த்தா சொருவிடுவேன்.” – கத்தினான்
போச்சி, ஆட்டை வண்டியில் ஏத்திட்டானுங்க. அவசரமாக வண்டியை கிளப்பிட்டானுங்க. ஆடு கத்திக்கிட்டே இருக்கு. நாங்க ஒண்ணும் செய்யமுடியாம நிற்கிறோம். அய்யோ பாவமே இந்த பையனின் பாவத்தில் விழறாங்களேன்னு நாங்க பதைபதைத்து நிற்கிறோம்.. ஆனால் அடுத்து நடந்ததை நாங்கள் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை.சரியாக வண்டி நகரும்போது பையன் வேகமாக ஓடிவந்து தொரடை சரியாக வண்டி ஓட்டுபவன் கழுத்தில் மாட்டி தளர்வில்லாமல் இழுத்துப் பிடித்தான். தொரடு முனையில் இருந்தது வீச்சருவாள். வெள்ளாடுங்களுக்கு மரங்களில் இருந்து தழைகளை கழிச்சி போட்றதுக்காக வெச்சிருப்பான்போல. அருவாள் படுஷார்ப். அதற்குள் திருடன் கழுத்திலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. வண்டிய ஓட்ற திருடன் வலி தாளாமல் அலறினான்.
இப்போது பையன் தொரடை லேசாக அசைத்தான். ரத்தம் குபு குபுவென்று கொட்ட ஆரம்பித்து விட்டது. அவன் ஷர்ட்டெல்லாம் ரத்தத்தில் நனைந்து விட்டது.திருடன் ஐயய்யோ என்று அலறினான்.
“ டேய் ! மரியாதையாய் ஆட்டை வுடு .இல்லே ஒரு இஸுப்பு இஸ்தேன்னா தலை துண்டாய் எகிறிப்பூடும். உம்… வுட்றா.”— கீச்சுக் குரலில் பையன் கத்திய கத்தலில் ஆட்டை கீழே தள்ளிவிட்டார்கள். ஆடு ம்மேவென்று கத்திக்கொண்டே ஓடிச் சென்று மந்தையில் கலந்துவிட்டது. நம்மாளு இப்ப தொரடை எடுத்துக் கொள்ள திருடனுங்க சிட்டாய் பறந்துட்டானுங்க. நாங்க பிரமையில் திகைத்துக் கிடந்தோம். எங்கள் கண்களை எங்களால் நம்பமுடியவில்லை. சிறுவனை எவ்வளவு குறைவாக மதிப்பிட்டுவிட்டோம்?. எவ்வளவு துணிச்சல்?. எங்களுக்கு வெட்கமாகிவிட்டது. ஒரு நிமிடத்தில் இந்தனூண்டு சின்ன பையன் எடுத்த விஸ்வரூபம், அ.ப்.ப ப்.பா. எங்களுக்கு பேச நா எழவில்லை. இந்த பொடிப்பையனா இப்படி?. சூழ்நிலைகள் மனிதர்களை எப்படியெல்லாம் செதுக்கி வைக்கின்றன.
நாங்கள் நிறைவாய் கிளம்பினோம். எங்கள் ப்ராப்ளம் ஓவர். கவர் ஸ்டோரிக்கான மேட்டர் ரெடி. இனிமேல் டேபிள் ஒர்க்தான். பையனை தட்டி கொடுத்துவிட்டு “ நாங்க கிளம்பறோம்டா தம்பி.”—பையன்தான் படு உஷாராச்சே.
“புஸ்தகம் தர்றேன்னியே எப்ப?.”
“அதான் சொன்னனே ஒரு வாரத்தில.”
“நானு இங்கதான் மேச்சிக்கிணு இருப்பேன்.”
கிளம்பும்போது கவனித்தேன். அவனுடைய மேல் ஜேபியில் நான் வாங்கிக் கொடுத்த பிரிட்டானியா மில்க் பிக்கீஸ் பிஸ்கட் பாக்கெட் பாதி பேக் துருத்திக் கொண்டு இருந்தது.
“டேய்! பிஸ்கட்டை பிரிச்சா முழுசும் சாப்பிட்டுவிடணும்டா. மிச்சம் வெச்சா நமுத்து போயிடும். நல்லாயிருக்காது. சாப்பிட்றா.”
“ஊஹும் அது எங்க ஆத்தாளுக்கு.”.