கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 31, 2017
பார்வையிட்டோர்: 8,943 
 
 

திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று நேரம் அகழியில் கிடந்த முதலைகளைப் பார்த்தான்.

யாரையும் பற்றிக் கவலைப் படாமல் நான்கு ஒட்டகச் சிவிங்கிகள் சுற்றிக் கொண்டிருந்தன. இங்கிருந்து பார்த்தாலே தெரியும் வண்ணம் உள்ள புலிகளின் கூண்டருகில் நல்ல கூட்டம் இருந்தது. கடந்த மாதம் வந்த புது வரவான வெள்ளைப் புலியும் ஒரு காரணம். சிறுவர்களுக்கான ரயில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நிழல் தரும் பெரிய தூங்குமூஞ்சி மரங்களின் கிளைகளில் உட்கார்ந்திருந்த காக்கைகளைக் கூட்டில் இருந்த பஞ்சவர்ணக் கிளிகள் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.

”சரி, வா, கரடிகளைப் பார்க்கப் போகலாம்”

என்று மகன் வேலனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்தான் முத்துசாமி.

”நீ இன்னும் என் கேள்விக்குப் பதில் சொல்லல”

என்று குற்றச் சாட்டை முன்வைத்தான் வேலன்.

”ஆமா! நீ என்ன கேட்ட?” என்றான் முத்துசாமி.

”இல்லப்பா, இங்க எல்லாம் இருக்கு; கழுதையை மட்டும் காணோம்”

விடை தெரியாமல் தத்தளித்த முத்துசாமி ‘இங்க இருக்காதுடா, இது விலங்குக் காட்சிசாலை’ என்று பதில் கூறினான்.

”ஏம்பா கழுதையும் விலங்குதானே? வீட்டு விலங்கு இல்லயா?”

”இல்லடா, இங்க பல அதிசய மிருகங்களைத்தான் வைப்பாங்க”

”கழுதையும் அதிசயம்தாம்பா; அதுக்கு இருக்கிற மாதிரி மூக்குல வெள்ளயா எதுக்கு இருக்கு?”

”இருக்கலாம்டா, இங்க ஆடு, மாடு, குதிரையெல்லாம் இல்ல பாத்தியா? அதெல்லாம் எல்லா இடத்திலேயும் பாக்கக் கூடியது”

”ஆனா இந்த ஊர்ல கழுதையே கணோமே?”

”இது நகரம்டா; கிராமத்துக்குப் போனா பாக்கலாம்.”

”நாம எப்ப கிராமத்துக்குப் போவோம்.”

”நாலஞ்சு வருஷமாதான் போகல; இந்த வருஷம் நிச்சயம் போவோம்.” என்றான் முத்துசாமி.

’அங்க எனக்கு கழுதையைக் காட்டறியா” என்று கேட்ட வேலனிடம் ‘கண்டிப்பா’ என்று பதில் கூறினான் முத்துசாமி.

இரவு வீட்டுக்குச் சென்றவுடன் மனைவி மலர்விழியிடம்,

“மலரு, இன்னிகு வேலன் என்னா கேட்டான் கேளு”

என்ற முத்துசாமி மனைவியும் வேலனும் பேசுவதை ஆர்வத்தோடு கேட்டான்.

”என்னடா கழுதையைப் பாக்கறதுல அவ்வளவு அவசியம் ஒனக்கு” என்றாள் மலர்விழி.

”இல்லம்மா, புத்தகத்துல ‘ASS’ என்று படம் போட்டிருக்குது; பள்ளியில கழுதையின்னு சொன்னாங்க; அது எப்படி இருக்கும்னு பாக்கறதுக்குதான் கேட்டேன்”

முத்துசாமியைப் பார்த்தாள் மலர்விழி.

”இந்த வருஷம் திருவிழாவுக்குப் போகப் போறோம்ல; அங்க கழுதையைப் பாத்தாப் போச்சு” என்றான் முத்துசாமி.

கிராமம் என்றதுமே தனது ஓட்டு வீடு, அதன் பின்னால் உள்ள மாமரம், தென்னை மரம், கிணறு, பெரிய ஏரி, அதன் கரைகளில் உள்ள வேல மரங்களில் இருக்கும் குருவிக்கூடுகள், வயல்கள் எல்லாம் அவன் நினைவுக்கு வந்தன.

பேருந்தில் சென்று மாலை நான்கு மணிக்கு இறங்கிய முத்துசாமி மகன், மனைவியுடன் தனது கிராமத்திற்கு ஒரு கிலோ மீட்டர் மண் சாலையில் நடந்து கொண்டிருந்தான். சாலையின் ஓரம் சலசலத்துக் கொண்டிருந்த வாய்க்கால் நீரில் தலையை முங்கி முங்கிக் குளித்துக் கொண்டிருந்த காகங்களை வேலன் மகிழ்வாகப் பார்த்தான். அவனது முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது.

தோட்ட்த்தில் கீச் கீச்சென்று கத்திக்கொண்டே ஓடிப்பிடிக்கும் அணில்களும், மேலும் கீழும் தலையாட்டும் ஓணான்களும், பட்டாம்பூச்சிகளும், மரத்தில் கூடு கட்டி இருந்த பெயர் தெரியாத பறவைகளும் வேலனுக்குப் புதிய உலகத்தையே காண்பித்தன.

மறுநாள் காலையிலே எழுந்தவுடன் “அப்பா, போகலாமா” என்றான் வேலன். கிளம்பிய முத்துசாமியிடம், “அப்பனும் புள்ளயும் காலையில் எங்கடா” என்றாள் அவன் அம்மா.

”வந்து சொல்றேன்” என்று சொல்லிக் கொண்டே முத்துசாமி புறப்பட்டான்.

”என்னா தம்பி? எப்ப வந்தே” ஒன் புள்ளயா? எவ்வளவு ஒயரமாயிட்டான்” என்று வழியெல்லாம் விசாரித்தனர்.

நான்கைந்து தெருக்களைத் தாண்டி கடைசி தெருவில் ஒரு குடிசையின் முன்னால் நின்று, ’நாகசாமி, நாகசாமி’ என்று குரல் கொடுத்தான் முத்துசாமி,

உள்ளே இருந்து வந்தவன் முத்துசாமியின் வயதை ஒத்தவனாக இருந்தான். “வா, முத்து. வந்து உட்கார்” என்று திண்ணயைக் காட்டினான்.

வேலன் உட்கார மனமில்லாமல் குடிசையின் பக்கத்துச் சந்தில் நுழைந்துத் தோட்டத்திற்குப் போனான்.

”என்னா முத்து? எப்படி இருக்க? பாத்து ரொம்ப நாளாச்சு? போனானே இவன்தான் ஒன் பையனா?” என்று கேள்விகளை அடுக்கினான் நாகசாமி.

”நல்லா இருக்கேம்பா; நீ எப்படி இருக்க? வேலை ஏதும் கெடச்சுதா?”

”ஒண்ணுமில்லப்பா, எல்லாரும் சிபாரிசு கேக்கறாங்க; பொழுதக் காலம் தள்ளறதே கஷ்டமாயிருக்கு’ என்றான் நாகசாமி. தோட்டத்திலிருந்து வந்த வேலன், ’போப்பா, இங்க ஒண்ணுமே இல்லப்பா’ என்று கூற ;என்னடா கண்ணு என்னா வேணும்’ என்று நாகசாமி கேட்டான்.

”போன வாரம் பூரா இந்தப் பையன் ஒரே நச்சரிப்புப்பா; அதான் இங்க கூட்டிவந்தேன்; ஏன் தோட்டத்திலே கழுதங்க இல்ல” என்றான் முத்துசாமி.

“கழுதைங்களா? அதெல்லாம் போயி ரெண்டு வருஷமாச்சு” என்றான் நாகசாமி.

”அப்புறம் தொழிலு”

”தோ பாரு” என்று நான்கு சக்கர வண்டியைக் காண்பித்து நாகசாமி சொன்னான். ”இப்ப ஆத்துக்குப் போறதுத்குணி வைக்கிறது; வெள்ளாவி வைக்கிறது; எல்லாம் இல்லப்பா”

”அப்புறம்” என்று கேட்டான் முத்துசாமி.

”எல்லாரும் பாலிஸ்டர் இல்லன்னா டெரிகாட்டன்தான்; அவங்க அவங்களே தோச்சிக்கறாங்க; கரண்ட்டுல வச்சு அயர்ன் பண்ணிக்கறாங்க; சில வீட்ல பெட்டி போட மட்டும் இந்த வண்டியில தெனம் நகரத்துக்குப் போய்டுவேன்; இப்ப எல்லாம் கழுதைக்கு வேலையே இல்ல’

என்பதைக் கேட்ட முத்துசாமிக்கு ஆச்சரியமும், வேலனுக்கு வருத்தமும் வந்தன.

உடனே வேலன், “அப்பா, நீ கழுதையையும் காட்சிச்சாலையில் வைக்கணும்னு கடிதம் எழுதப்பா” என்றான்.

– பெப்ரவரி 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *