‘பாவம்! அந்த அம்மாவுக்கு ஒரு வருஷமா எந்தப் பட சான்ஸும் வரல. அதனால் பொழுது போகாம கழுதையை வளர்க்கிற அளவுக்குப் போயிட்டாங்க’ என்று நடிகை வர்ஷாவின் வேலைக்காரன் முருகன், தன் மனைவி வள்ளியிடம் அனுதாபப்பட்டான்.
“அதை தினமும் அவுங்களே சோப்புப் போட்டு குளிக்க வைச்சு, துடைச்சு விடறாங்க!’ வியந்தாள் வள்ளி.
“அந்த கழுதை ரொம்ப கொடுத்து வைச்சுருக்கணும்’ என்றான் முருகன்.
மறுநாள் – அனைத்து தமிழ், ஆங்கில பேப்பர்களில், வர்ஷா கழுதையின் குழுத்தை கட்டிக் கொண்டிருந்த போட்டோ பிரசுரமாகியிருந்தது.
நடிகை வர்ஷாவிடம், “அம்மா, ஒரு வருஷத்துக்கு அப்பாலே உங்க போட்டோ எல்லா பேப்பர்களிலும் வந்திருக்கும்மா’ என்றாள் ஆச்சரியத்துடன் வள்ளி.
“ம்… பார்த்தேன். இனிமேல் நான் நிறைய படங்களில் நடிப்பேன் பாரு. எப்படி என் யுக்தி’ என்றாள் பெருமையாக வர்ஷா.
வர்ஷா சொன்னதுபோல் பிரபல பட முதலாளி அவளைத் தேடி வந்தார். அவரை மகிழ்ச்சியோடு வரவேற்று சோபாவில் உட்கார வைத்தாள்.
“புக்’ பண்ண வந்திருக்கேன்.
“சந்தோஷம், என் கால்ஷீட் எப்போ வேணும்?’
குழப்பத்துடன் அவர் “நாங்க வித்தியாசமான ஒரு படம் எடுக்கப் போகிறோம். அதுக்கு “கழுதை’ என்று பெயர் வச்சுருக்கோம். அதனாலே… உங்க கழுதையை மட்டும் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கோம்’.
வர்ஷாவுக்கு வியர்த்துக் கொட்டியது.
– ராஜன்புத்திரன் (ஏப்ரல் 2014)