கல்விக் கண்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 5,197 
 
 

ஆறு வயது மதிக்கத் தக்க ஒரு சிறுமியை ஒருவன் கையில் ஏந்தியிருக்க சுற்றிலும் ஆணும் பெண்ணுமாய்ப் பரபரப்போடு கூட்டம் தொடர அந்தச் சிறுமியின் வலது கண்ணில் குத்திநிற்கும் மரச்சிராய். ரத்தக் குழியில் முளை அடிதத்தைப் போல பார்க்கவே படு பயங்கரமாக.

டாக்டர் தாமஸ் கண் மருத்துவமனையில் எப்போதுமே கூட்டம் நிரம்பி வழியும். டாக்டரிடம் சென்றதுமே கண்ணாடி எழுதித்தரும் டாக்டர்கள் மத்தியில் இவர் வித்யாசமானவர். முடிந்தவரை மருந்து, மாத்திரை, எக்ஸசைஸ், டயட் கண்ட்ரோல் இவற்றிலேயே குணப்படுத்திவிடும், மனிதநேயமிக்கவர் டாக்டர் தாமஸ். எனவே இவர் புகழ் சுற்று வட்டாரங்களில் பரவ, வெயியூர்களிலிருந்தும் ஏன் வெளி மாவட்டங்களிலிருந்தும்கூட இவரைத் தேடி வருவதுண்டு.

கூட்டம் வெளியே நிற்க, அவசர கேஸ் என்பதால் சிறுமியை ஏந்தியிருந்தவனோடு ஓர் யுவதியும் உள்ளே சென்றாள். சிறுமியின் பெயர் ப்ரியா. நர்ஸரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். தந்தை ராமபத்ரன் ஏலச்சீட்டு கம்பெனியில் மேனேஜர். தாய் கிருஷ்ணவேணி ஹவுஸ் ஒய்ஃப். ப்ரியாவுக்கு ஒரு அண்ணன் உண்டு. பெயர் ராஜராஜன். முனிசிபல் பள்ளியில் ஆறாவது படிக்கிறான்.

குழந்தைகள இருவமே படிப்பில் சோடையில்லை. ராமபத்ரனின் மாத வருமானம் குடும்பச் செலவுக்கே இழுபரியான நிலையில் கிருஷ்ணவேணி இரண்டு மூன்று வீடுகளில் சமைத்து வைத்து, அப்பளம் வடகம் விற்று வரும் வருமானத்தில் குழந்தைகளின் படிப்புச் செலவுகளை ஈடுகட்டினாள்.

‘நாமதான் படிக்கலை. குழந்தைகளாவது நன்கு படித்து பெரிய உத்யோகத்தில் அமரவேண்டும்’ என்ற ஞாயமான ஆசை உந்த உடம்பை வருத்தி உழைத்தாள். மற்ற குழந்தைகளைப் பார்த்து ஏங்கி விடக்கூடாது என்று ‘கான்வெண்ட் வேன்’ கூட ஏற்பாடு செய்தாள்.

கான்வெண்டில் படித்தவரை முதல் ரேங்க் எடுத்த ராஜராஜன் முனிசிபல் பள்ளியில் சேர்ந்த பிறகு முதல் டெஸ்டிலேயே மதிப்பெண் குறைந்திருக்க உழைத்து ஓடாய்த் தேயும் கிருஷ்ணவேணிக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

ஆரம்பத்திலேயே கண்டிக்காவிட்டால் பையன் வீணாகிவிடுவான் என்கிற அக்கரையில் தேர்ச்சி அட்டையில் கணவனைக் கையெழுத்துப் போட வேண்டாம் என்று தடுத்துவிட்டாள். ஆனால் ராஜராஜனோ கையெழுத்துப் பற்றி அதன் பிறகு பேசவே இல்லை. இவள் கேட்டதற்கும் மழுப்பினான்.

பையன் நடத்தையில் சந்தேகம் வர இவறே பள்ளிக்குச் சென்றாள். ஒவ்வொரு வகுப்பிலும் ஆசிரியர்கள் மாணவர்களை பிரம்பால் அடிப்பதும், தலையில் குட்டுவதும், பெஞ்ச் மேல் ஏற்றுவதும், முட்டிப் போடச் செய்வதுமாக இருக்க ராஜராஜன் கடைசீ பெஞ்சின் மேல் நின்றதைக் கண்டபோது கிருஷ்ணவேணியின் வயிறு எரிந்தது. வகுப்பாசிரியரைச் சந்தித்தாள்.

ரேங்க் கார்டில் அப்பாவின் கையெழுத்தை இவனே போட்ட செய்தி ஆசிரியர் மூலம் தெரிந்தது.

‘இந்த வயசுலயே இப்படின்னா… போகப் போக…’ விபரீதமான கற்பனைகள் மனதில் விரிய…

‘கூடாது… என் மகன் வீணாகிவிடக் கூடாது…’

‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவான்,’ ‘அடியாத மாடு படியாது…’ என்கிற பழமொழிகளெல்லாம் அவளை அரவணைக்க…

“சார், நான் வந்தது அவனுக்குத் தெரியவேண்டாம். நீங்களே அடிச்சி உதைச்சி அவன் வாயாலேயே உண்மைணை வரவழைக்க ‘ட்ரை’ பண்ணுங்க. நானும் வீட்ல விசாரிக்கறேன்.”என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினாள்.

மணி மூணரை. கான்வெண்ட் விடும் நேரம். ப்ரியா வந்துவிடுவாள்.’

அவசர அவசரமாக ஓட்டமும் நடையுமாய் கனத்த மனத்தோடு வீடு வந்து சேரவும் ப்ரியா வரவும் சரியாக இருந்தது. பாப்பாவுக்குத் தின்பண்டங்கள் கொடுத்து ‘டீ’ கொடுத்தாள். பசியாறியதும் ப்ரியா பொறுப்பாக ‘ஹோம் ஒர்க்’ செய்யத் தொடங்கினாள்.

கிருஷ்ணவேணியின் மனம், மகள் ப்ரியாவையும் மகன் ராஜராஜனையும் ஒப்பிட்டது.

சொன்னப் பேச்சைக் கேட்டு ஐந்தாவது வரை நன்கு படித்து முதல் ராங்க் வாங்கியவன்தானே ராஜராஜனும். இந்த வயசுலயே பொய்க் கையெழுத்துப் போடும் துணிச்சல் எப்படி வந்தது? கெட்ட நண்பர்களோடு கெட்டுப் போகிறானோ? நாளை ப்ரியாவும் ஆறாம் வகுப்புக்குப் போனால் இப்படிச் செய்வாளோ? நான் நாள் பூராவும் படும் கஷ்டம் வீணாகி வியர்த்தமாகிவிடுமோ..?’

விபரீதமான எண்ணங்கள் சுழல பாத்திரம் ஒன்று ‘டனால்’ என்று கீழே விழ… அப்போதுதான் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய ராஜராஜன் நேரே சமையல் கட்டுக்குள் நுழைந்தான்.

“என்னம்மா… பாத்திரம் விழுந்துடுச்சா… நான் எடுத்துத் தரேன்.”

“நீ ஒண்ணும் கிழிக்க வேணாம். போய் உன் வேலையப் பாரு..”

அம்மாவின் பேச்சு இயல்பாக இல்லையென்பதை உணர்ந்த ராஜராஜன், புத்தகப் பையை கிடாசிவிட்டு வெளியே விளையாட விரைந்தான்.

“ஏய்… இங்கே வா…”

பயந்து நடுங்கியபடி அம்மாவின் எதிரே வந்து நின்றான்.

“ப்ரியா ஹோம் ஒர்க் செய்யறதைப் பார்த்தியாடா?”

“விளையாடிட்டு வந்து செய்யறேம்மா…”

“உன் ஹோம் ஒர்க் நோட்டு எடு…”

“… … … …”

“எட்ரான்னா…” கிருஷ்ணவேணியின் குரல் உயர்ந்தது.

“அந்த நோட்டு ஒரு ஃப்ரெண்ட் கிட்டே கொடுத்திருக்கேன்மா…”

“ஓ..ஹோ…”

கிருஷ்ணவேணியின் ‘ஓஹோ’ வில் ப்ரியாவும் நடுங்கிவிட்டாள்.

“உன் கணக்கு நோட்டு எடு…”

“அது… வந்து…”

“என்னடா அது… இது… எடுடா… ராஜராஜனின் புத்தகப் பையை கிருஷ்ணவேணி இழுத்துத் தலை கீழாய்க் கொட்ட, புத்தக நோட்டுக்கள் சிதற, சிகரெட் அட்டைகள், நடிகர், நடிகைகளின் படங்கள், சோடாமூடிகள் என விழுந்தன.

கிருஷ்ணவேணி ரௌத்ரமானாள்.

“ஏண்டா… நீ படிக்கப் போறியா… ஊர்ல உள்ள குப்பை கூடமெல்லாம் பொறுக்கப் போறியா…? உன்னை…” காதைப் பிடித்துத் திருக, ராஜராஜன் பெரிய குரலெடுத்து அழுதான்.

அவன் அழ அழ, “ஏண்டா ப்ராக்ரஸ் ரிப்போர்ட்ல அப்பா கையெழுத்துப் போட்டியா..?”

“இல்லவே இல்லேம்மா…” அழுகையினூடே சொன்னான்

தன்னை விட நாலு வகுப்பு குறைந்து படிக்கும் தங்கை ப்ரியாவின் எதிரே அம்மா தன் காது திருகுவது கேவலமாக இருந்தது ராஜராஜனுக்கு.

“டேய்… நிஜத்தைச் சொன்னா மன்னிச்சு விடுவேன்…இல்லே…”

“அம்மா, நான்தான் சொல்றேனில்ல… நான் அப்பா கையெழுத்து போடலை… போடலை… போடலை… போதுமா…?”

“ஏண்டா நாயே… நான் உன் ஸ்கூலுக்கு வந்து என் கண்ணால பாத்துட்டு வந்திருக்கேன். பொய்… அதுவும் அடிச்சிப் பொய் பேசறியா… உன்னை…”

கிருஷ்ணவேணியின் கைகள் பரபரக்க புத்தக நோட்டுகளுக்கிடையில் கிடந்த ஒரு ஒடி மர ஸ்கேல் கண்ணில் பட

‘பளீர்… பளீர்…’ என்று இரண்டு அடி முதுகில் விழ வீரிட்டு அழுதான் ராஜராஜன்.

“அழுகையை நிறுத்துடா நாயே…”

மூன்றாவது அடி ஓங்கி அவன் முதுகில் விழ

“ஐயோ… அம்மா…” அருகில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் அலறல்.

மர ஸ்கேலின் நுனி அடித்த வேகத்தில் உடைந்து ஆழமாக கண்ணில் இறங்க ரத்தக் குளத்தில் நட்ட முளையாய் அந்த ஸ்கேல் துண்டு.

ப்ரியாவின் வலது கண் ஆபரேஷன் செய்து எடுத்தாகிவிட்டது. கல்விக் கண்ணைத் திறக்கிறேன் என்று ஒரு கண்ணை மூடிவிட்ட கிருஷ்ணவேணி பற்றிக் கூறிய டாக்டா தாமஸ் ஆண்டு விழாக் கூட்டத்தில் சில விளங்கங்களைக் கூறினார்.

“தாய்மார்களே… நீங்கள் தாயாக மட்டும் இருங்கள். ஆசிரியராக மாறாதீர்கள். ஆசிரியர்கள் குழந்தை மனவியல் படித்தவர்கள். அவர்கள் அடிப்பது போல பாவனைதான் செய்வார்கள். தண்டனை என்ற மிரட்டலிலேயே மாணவர்களைத் திருத்துவார்கள். மீறி அடித்தே தீரவேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் எவ்வித பாதிப்பும் இன்றித் தான் செயல்படுவார்கள்.

மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதை மிக மிக அதிகபட்ச தண்டனையாகத்தான் கருதுவார்கள். அடித்தாலும் ஸ்கேல் போன்ற ‘நறுக்’ கென்த் தெரிக்கும் மரச்சட்டங்களால் அடிக்காதீர்கள்.

குழந்தைகளை ஏன் அடிக்க வேண்டும் ? அன்பினால் ஆகாததுண்டோ..

அன்பினால் அரவணையுங்கள் வருங்காலத் தூண்களை.

– 04.09.1996 ச மு இந்து மேனிலைப்பள்ளி நூற்றாண்டு மலரில் பிரசுரமான சிறுகதை

Print Friendly, PDF & Email

2 thoughts on “கல்விக் கண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *