(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எல்லையற்ற வானம் தனது உஷை நகையை கிழக்கி லிருந்து வீச ஆரம்பிக்கின்ற சுபவேளை தொட்டு, மாலைப் பொழுதிலே வெய்யவனின் தங்கக் கதிர்கள் மேற்கின் மார்பகத்தே முகம் புதைக்கும் காலம் வரை இயற்கை அன்னையின் இன்ப விளையாட்டுகளிலே மனந் தோய்ந்து கிடப்பான் அந்தக் கலைஞன்.
அம்மட்டா? அழகுத் தேவதையின் முலைப்பாற் சுரப்பான நிலா மழையிலும் காலந்தெரியாது கிடப்பது அவ னுக்குப் பிரியமான சங்கதி.
இன்னமுஞ் சொல்லப்போனால் அழகு ராஜ்யத்தின் பெருமிதச் சின்னங்களான கோடி இனப் பூக்களிலே – சாயாத சத்யத்தைப் பாவாகப் பாடிச் செல்கின்ற நதிக் கவர்ச்சிகளிலே, சப்தித்தோடும் சமூத்திரங்களிலே இப் படியான இயற்கை லீலைகளிலேயே தன் பொழுதை – காலத்தை செலவிட்டுத் திரிந்தான் அக்கலைஞன்.
இத்தனைக்கும் மேலாக அவன் விரும்பியது இளமையின் பூரிப்பிலே உருப்பெற்றுத் திரிகின்ற இனிய கேண் மைக் கனிகளை.
ஆம்! அவற்றைச் சுவைப்பதில் – சுகிப்பதில் அவன் வெகு சமர்த்தன்.
இவ்வாறான கனவுகளே அவன் வாழ்க்கையாக இருந்த சந்தர்ப்பத்திலே கலையின் மதுரமறியாத – அதன் ஜீவனைப் புரிந்து கொள்ளும் திறனற்ற ஒரு சிவப்புச் சட்டை எழுத் துக்காரன் அந்தக் கலைப் பித்தனைச் சந்தித்தான்.
“ஏ கலைஞனே! பாடுபடுகின்ற பாட்டாளிகளைப் பார். முதுகொடிய உழைக்கின்ற உழைப்பாளிகளைப் பார். இந்தப் பரிதாபத்துக்குரியவர்களை அண்டிப் பிழைக்கின்ற முதலாளி முதலைகளைப் பார். இவை கண்டு நீ பேசா மடந்தையாக இருக்கலாமா? உன் எழுத்துக்களை – உன் சிந்தனைகளை இவற்றுக்கல்லவா அர்ப்பணஞ் செய்ய வேண்டும்?”
கலைஞன் சிந்தித்தான். “சரி என் கனவுகளை எழுத்துக்களைச் சாமான்ய காரியங்களுக்குப் பயன்படுத்திப் பார்ப்போம்.”
இந்த முடிவோடு கலைஞன் சிவப்புச் சட்டை எழுததுக்காரனைத் தொடர்ந்தான்.
அன்று தொட்டு அக் கலைஞன் பாட்டாளி வர்க்கப் பிரதிநிதியானான்.
தன் எழுத்தைச் சாதாரண பிரச்சனைகளிலே ஓட விட்டான். அவன் ஜீவிதம் இயந்திரமயமானது.
வெற்று ஆரவாரங்கள் – பாமரத் திருப்திகள் – எந்திர வாழ்க்கை முறை இவற்றிலே அக் கலைஞனால் வெகு காலம் ஆழ்ந்திருக்க முடியவில்லை.
கலைஞன் எழுந்தான். பழைய அழகுக் கனவுகள் அவன் இதயத்திற் சிறகு விரித்தன. பரந்த வானைப் பார்த்தான். அங்கே செம்பரிதி.
“அட மூடனே! என் அழகை ஏனடா நீ மறந்தாய்?” என்றது.
விரிந்த கடலைப் பார்த்தான். அது பேய்க்குரலில்: “நீ ஜடமேதான்”‘ என்று கத்தியது.
அழகு இராஜ்யத்தின் பெருமிதச் சின்னங்களான பூக் களைப் பார்த்தான். அவை கலைஞனை “வா! வா!” என வாஞ்சையோடு அழைத்தன.
நதிகள் யாவும் “நீ ஏன் எம்மை மறந்தாய்?” என்றன.
அக் கலைஞனுக்கு மிகப் பிரியமான வனப்பாள் குமரர்கள் யாவரும்
“எங்களுக்குப் பற்றுக்கோ டாக உள்ள கொழு கொம்பே! நீ வருகிலாயோ?” எனத் தம் தீங்கனிக் குரலால், நிர்மலமான தமது விழிகளில் ஏக்கம் குடிகொள்ள கலைஞனை நோக்கிப் பேராவலோடு கை நீட்டினார்கள்.
கலைஞன் புத்தி தெளிந்தான். பூரண சக்தி எதுவெனப் புரிந்தான். அழகுக் கலையே தன் உயிரென உணர்ந்தான்.
அழகெனும் பொன் மாளிகையிலே தன் இதய ஆவ லைத் தணிப்பான் வேண்டி நுழைந்தான்.
“ஏ கலைஞனே! ஏ கலைஞனே!”
சிவப்புச் சட்டைக்காரன் அவனைத் துரத்திக் கொண்டோடினான். அவன் கலைஞனைத் தொடர முடியாதவாறு திடீரென அழகு மாளிகையின் கபாடங்கள் மூடின.
ஒரு கம்பீரமான குரலொன்று, “இது சௌந்தர்ய தேவாலயம். இங்கே பாமரர் களுக்கோ, பாமரப் பக்தர்களுக்கோ, கலையை உணரத் தெரியாத மதிகேடர்களுக்கோ இடமில்லை” எனச் சொல்லியது.
அப்படிச் சொன்னது யார்?
கலையையும், அழகையும் எந்தக் கடவுள் படைத்தானோ அவனே அப்படிச் சொன்னான்.
– சௌந்தர்யா பூஜை (இனிய சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1970, பிரசுரித்தவர்: ஐ.குமாரசாமி, கல்வளை, சண்டிருப்பாய்.