கலெக்டர் அம்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 20, 2024
பார்வையிட்டோர்: 1,173 
 
 

அர்ச்சனா தனது அலுவலக  அறைக்குள்  நுழையும்  முன் , தன் பார்வையில் பட்ட, 

அ. அர்ச்சனா , ஐ.ஏ.எஸ்., 

மாவட்ட ஆட்சியர், மதுரை.

என்ற பெயர் பலகையை பார்த்தவுடன், மனதிற்குள் சட்டென்று ஆயிரம் நினைவுகள் . (நான்கு நாட்களுக்கு முன்புதான் மதுரை மாவட்ட ஆட்சியராக அர்ச்சனாவிற்கு அரசாணை  வழங்கப்பட்டது)

அவள்  அரை நொடி, அதை நின்று பார்த்துவிட்டு , தனது அறைக்குள் நுழைகிறாள்.

தனது 15ஆவது வயதில் , தான் வரைந்த  அந்த ஓவியத்தை, பிரேம் போட்டு, அவளின் இருக்கைக்கு மேலே, அலுவலக  அறையில், நேற்று மாலையே… கந்தன் மாட்டியிருக்க வேண்டும். அர்ச்சனாவின் கண்கள் அதன் மேலேயே நிலை குத்தி நின்றன.

“ஒரு கால் மணி நேரம்…யாரும் உள்ளே வர வேண்டாம், “என தன் பர்சனல் செகரட்டரி ராதிகாவிடம், சொல்லிவிட்டு, அப்படியே நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினாள்.

திரைப்படமே கண்முன் வந்து போனது…!

அப்போது அர்ச்சனா பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.  அவளும் அந்த ஊர் கலெக்டரின் மகள், பிரியாவும் நெருங்கிய தோழிகள். 

பிரியா அவளை…தனது பர்த்டே பங்க்ஷனுக்கு, தன் வீட்டிற்கு  மாலை வருமாறு ஆசையோடு அழைத்தாள்.

தனது தோழி அன்போடு அழைக்கிறாள் என, அர்ச்சனாவும்  அன்று மாலை பள்ளி முடிந்தவுடன் பிரியாவின் வீட்டுக்கு சென்றாள்.

வீட்டுக்குச் சென்றவளை, பிரியாவின் அம்மா வீட்டிற்குள்ளேயே விடவில்லை. அனாதையை போல்…ஒரு மணி நேரம் காத்திருந்து விட்டு, அவமானத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டின் உள்ளே… பிரியாவும்  அவள் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தது அர்ச்சனாவிற்கு தெளிவாய் கேட்டது.

“ஏய் …பிரியா யாருடி அவ…உன் பிரண்டா. பார்க்க அப்படி இருக்கா..! வெளுத்துப் போன பாவாடையும்… பழுப்பு நிற வெள்ளை சட்டையும் போட்டுக்கிட்டு… அவ தான் உனக்கு பிரண்டா…? நீ எப்படி… அவளை நம்ம வீட்டு பர்த்டே ஃபங்க்ஷனுக்கு கூப்பிடுவ…?”

“நம்ம வீட்டுக்கு …இப்போ எத்தனை விஐபிகள் வருவாங்க. அப்பாவோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க. இவ வந்து நம்ம வீட்டுக்குள்ள நிக்கிறதா..? எதுக்கு நீ கூப்பிட்ட..? ஒரு பியூனோட பொண்ணு நம்ம வீட்டு ஹாலுக்கு வர்றதா..?  அதுவும் டிரெஸ்ஸாவது நல்ல போட்டுட்டு வந்து இருக்காளா..! எதுக்காக என்கிட்ட கேட்காம அவளை கூப்பிட்ட…?”

“இல்லம்மா… என் பிரண்டு அவ. ரொம்ப நல்லவ. ரொம்ப நல்லா படிப்பா. கிளாசில் ஃபர்ஸ்ட் ரேங்க் அவதான். அவ அப்பாவுக்கு நல்ல டிரஸ் வாங்கி கொடுக்க முடியல. எனக்கு நிறைய ஹெல்ப் பண்ணுவாம்மா. சயின்ஸ் ரெக்கார்ட் நோட்ல படம் எல்லாம், அவ தான் வரைந்துகொடுப்பா. அம்மா ப்ளீஸ்மா அவ வரட்டும்மா. வீட்டுக்குள்ள வரட்டுமா… இன்னைக்கு மட்டும்..!” கெஞ்சிளாள் பிரியா.

எவ்வளவு கெஞ்சியும் பிரியாவின் அம்மா அர்ச்சனாவை  அனுமதிக்கவே இல்லை.

கொஞ்ச நேரத்தில் பெரிய பெரிய அதிகாரிகள், கோர்ட்டெல்லாம் போட்டுக்கொண்டு, பிரியாவின் வீட்டுக்குள் நுழைந்தனர். பிரியாவின் அம்மா அவர்களை அப்படி முகம் மலர… வரவேற்றாள். அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாமல் வீட்டிற்கு வந்து, அன்று இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள் அர்ச்சனா.

தூக்கம் வராமல், புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த அர்ச்சனா, அன்று இரவு வரைந்த ஓவியம் இது. தூக்கம் வராத எரிச்சலிலும், வருத்தத்திலும் தனது குமுறலை எல்லாம் ஓவியமாய் தீட்டி விட்டாள். அன்று அவள் மனதுக்குள் ஒரு  விதையை ஆழமாக பதித்து விட்டாள் அர்ச்சனா.

நானும் கலெக்டர் ஆகியே திருவேன், என மனதுக்குள் வைராக்கியம் கொண்டாள். அதை வெளிப்படுத்தும் வகையில் அந்த ஓவியம் அமைந்திருந்தது. வெளுத்துப் போன பாவாடைக்காரி  அர்ச்சனா ஒரு பக்கம். அவள் கலெக்டராய் உருமாறி..! கம்பீரமாய் அழகான ஆடையில் அமர்ந்து கொண்டிருக்கும் அர்ச்சனா ஐ.ஏ.எஸ்.எதிர்பக்கத்தில். இதுவே அந்த ஓவியத்தின் சாராம்சம்.

அந்த ஓவியம் புதுப்பிக்கப்பட்டு …நிறம்  மாற்றப்பட்டு… நகல் எடுக்கப்பட்டு அழகான ஒரு ஓவியமாய்… ஆச்சிரிக்கப்படுகிற ஒரு ஓவியமாய் இதோ… இங்கே… இப்போது.

தான் அன்று வரைந்த ஓவியத்தை தன் வீட்டின் சுவரில் தான் படிக்கும் இடத்திற்கு மேல் ஒட்டி வைத்து தினம் தினம் பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. அந்த ஓவியம் அவளுக்கு தினம்  தினம் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. கலெக்டர் ஆகியே தீரவேண்டும் என்ற வேகத்துடனும், விடாமுயற்சியுடனும், மாநிலத்திலேயே முதலாவதாக  வந்தது, பி. ஏ படிக்கும்போதே ஐ.ஏ.எஸ் படிக்க தேவையான முயற்சிகளை செய்து, கடும்முயற்சியுடன், இரண்டாவது முறையில்  ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் 10 ஆவது இடத்தை பிடித்தது, எல்லா நிகழ்வுகளும் ஒரு நிமிடத்திற்குள் திரைப்படமாய் மனதிற்குள்.

அந்த நிகழ்வு, அன்று அவள்  வீடு, இன்று அவளின்  கலெக்டர் பங்களா,  அன்றைய  பியூன் அப்பா, இன்றைய கலெக்டரின் அப்பா, மாவட்ட ஆட்சியர் என போர்டு வைக்கப்பட்ட தனது கார், கிடைக்கும் சல்யூட்கள் என அத்தனையும், ஒரு நொடியில் வந்து போய், பெரிய பிரமிப்பை  அவளுள் ஏற்படுத்தி விட்டது. அந்த அவமானம் இல்லையேல், இன்று இந்த  அர்ச்சனா ஐ.ஏ.எஸ் இல்லை.  தனது தோழி பிரியாவின் அம்மாவிற்கு மானசீகமாய்  நன்றி தெரிவித்தாள்.

பர்சனல் செகரட்டரி ராதிகா வந்து, “மேடம்” என கூப்பிட்ட பிறகு தான் சுய நினைவுக்கு வந்தாள் அர்ச்சனா.

“என்ன மேடம், டயர்டா இருக்கீங்களா..?”

“ஒன்னும் இல்ல. சும்மாதான்.”

“அந்த போட்டோவை நேற்று ஈவினிங், கந்தன் பிரேம் செய்து கொண்டு வந்தான். அதை உடனே, நீங்க சொன்ன இடத்துல, மாட்ட சொல்லிட்டேன் மேடம். சரியா இருக்கா மேடம்..?”

“ம்…ஓகே .”

“இந்த ஃபோட்டோ உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா மேடம்..?”

“எஸ்… நான் வரைந்தது..”

“ரொம்ப நல்லா வரைந்து இருக்கீங்க மேடம்.”

..ம்..  ஒரு புன் சிரிப்பு.

( நான் கடந்து வந்த பாதையை  என்றும், மறக்கக்கூடாது என்பதற்காக, இதை மாட்டச் சொன்னது, ராதிகாவிற்கு தெரிய வாய்ப்பில்லை.)

“மேடம்….உங்கள பார்க்க நிறைய பேர் வெயிட் பண்றாங்க மேடம். உங்க பிரண்டு பிரியா…வாம்.  அவங்க அம்மா கூட வந்திருக்காங்க… முதலில் அவங்கள வர சொல்லட்டுமா…?”

“இல்ல.. வரிசைப்படியே அனுப்புங்க ராதிகா…”

“எஸ் மேடம்…”

– மே 2024, தமிழ் டிஜிட்டல் நியூஸ்.

இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *