கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 3,941 
 
 

அத்தியாயம் 11 – 12 | அத்தியாயம் 13 – 14 | அத்தியாயம் 15 – 16


அத்தியாயம் – 13

அறுவடை நாட்களில் பரபரப்பாய் இருக்கும் ‘பூசரக் களம்’, வழக்கத்துக்கு மாறாக, இன்று நடவு சீசனில் பரபரப்பாய் இருந்தது.

பேண்ட்டும் சூட்டுமாய் வாட்ட சாட்டமான இருவர் காரில் வந்து இறங்கினர்.

அவர்களைத் தொடந்து, பின்னாலேயே டிராக்டரில் காணிக் கற்களும், சிமெண்ட் பில்லர்களும், முள் வேலிக் கம்பிப் சுருள்களும், கடப்பாரை, மண்வெட்டி, ஷஃபல், பிக்காசு, போன்ற தொழிற் கருவிகளோடு, ‘திமு திமு திமு…வென ஆட்கள் வந்து இறங்கினர்.

அங்கும் இங்கும், அப்படியும் இப்படியும் கை காட்டி நான்கெல்லையை அனுமானமாய்க் காட்டிக் கொண்டிருந்தனர்.

என்னென்ன வேலைகளை எப்படி எப்படிச் செய்ய வேண்டும் என்று உத்தரவும் பிறப்பித்துக்கொண்டிருந்தனர் பேண்ட் சூட் ஆசாமிகள்.

களத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ‘செயின்’ நீட்டி அளந்தனர்.

அளந்ததையே மீண்டும் அளந்தனர். கையில் இருந்த வரைப்படத்தைப் பார்த்தனர். மீண்டும் சற்றே ஒதுக்கி அளந்தனர்.

சரியான எல்லையைக் கண்டுப்பிடித்துக் காட்டியபின், முகத்தில் ஓரளவு திருப்தி தெரிந்தது.

அளந்த ‘செயின்’ லிங்க்கும், வரைபடத்தில்அந்த இடமும் பொருந்துகிறா என்று ஒரு முறைக்கு இரு முறை பார்த்தனர்.

சுட்டுவிரல் மூலம் இடம் சுட்டிக்காட்ட, ஆறடி கடப்பாறை சுமந்த ஒருவன் ஒரு குத்துப் போட்டு மூங்கில் சிம்பு முளையை நட்டான்.

ஏற்கெனவே தவறாக நடப்பட்டதைப் பிடுங்கிப் போட்டான். இப்படி பல முறை வேறு வேறு திக்கிலிருந்தும், எல்லையிலிருந்தும் அளந்து அளந்து ஒழுங்கினார்கள்.

ஆங்காங்கே முளை அடித்து, நான்கெல்லை உறுதி செய்தார்கள்.

கட்டட இடிபாட்டுக் கப்பிகளோடு டிராக்டர் வந்து நின்றது.

‘பேண்ட் சூட்’ கைகாட்டியபின், அதை களத்தின் அங்கமாக இருந்த தாமரைக் குளத்தில் கொட்டியது.

பூசர களத்தில் விவசாய வேலை என்றால் கூலி சற்றே குறைத்துத் தந்தாலும் விவசாயக் கூலிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் வருவார்கள்.

காரணம், களத்தின் அங்கமாய் இருக்கும் குளம்தான்.

தாமரை பூத்துக்குலுங்கும் ரம்யமான குளம். எவ்வளவுதான் வெய்யிலடித்தாலும வெம்மை தெரியாத களம்.

மற்ற களங்களிலெல்லாம் பசியாறச் செல்லும் முன், குடத்திலிருந்து லோட்டாவில் தண்ணீர் சரித்து, முகம், கைகளை சுத்தம் செய்ததாகப் பாவனை செய்துகொண்டு தான் சாப்பிடவேண்டும்.

ஆனால் பூசர களம் அப்படியல்ல.

குளத்திலிருந்து நீரை அள்ளி ஊற்றிச் சுத்தம் செய்து கொள்ளலாம்.

வியர்வை அகலக் குளித்துவிட்டேக் கூட, குளிரக் குளிர அமர்ந்து சுகமாய்ச் சாப்பிடலாம்.

அது மட்டுமா..! சோற்றுப் பாத்திரங்களை பளிச்செனத் தேய்த்து வெயிலில் கவிழ்த்து வைத்துவிடும் வசதி அந்தக் களத்தில் மட்டுமே உண்டு.

வேலை முடிந்து குளத்தில் நன்கு மூழ்கி சூடு தீர அமுங்கி அழுந்தக் குளித்துச் சுத்தப் பத்தமாக வீடு திரும்பலாம்.

இத்தனைச் சிறப்புகளைத் தாங்கிய அந்தத் தாமரைக் குளத்தில் கொட்டப்படும் இடிபாடுக் கழிவுகள், தங்கள் கண்களில் கொட்டப்படுவதாக உணர்ந்தார்கள் கூலித் தொழிலாளர்கள்.

மனசு தவித்தது.

பாவம்… ஏழைகள்.

“பூசரக் களத்துத் தாமரைக் கொளத்தை துக்கறானுங்களே…!”

“பூத்துக்குலுங்கற குளத்தைத் துக்க எப்படித்தான் மனசு வருதோ…!”

“பொறம்போக்குல கெடக்கற களத்தையும் குளத்தையும் ஆக்கரமிக்கராங்களே…!”

“யாரு தூண்டிவிட்டு இதெல்லாம் நடக்குது…? கேட்பார் கேள்வியே இல்லியா…?”

“புறம்போக்குதானேன்னு அரசாங்கத்துல எதுனா செய்யறாங்களோ…?”

“வாடீப் போய்க் கேப்போம்…!” வீ

வீராப்புடன் போனாள் அன்னலட்சுமி.

“ஏய்யா…! வீட்ல ஆம்பளைங்கல்லாம், வேலைக்குப் போன இந்த நேரத்துல, ஊர்க்காரவங்க பொதுவாப் பொளங்கறக் களத்தை அடைக்கறதும்…, குளத்தைத் துக்கறதும்…! என்னதான் உங்க மனசுல நினைச்சிட்டிருக்கீங்க… நீங்கல்லாம் யாரு…?”

பில்லர் நடுவதற்குக் குழி பறிப்பவன் அருகில் சென்று குரல் உயர்த்திக் கேட்டாள் அன்னலட்சுமி…”

“……………………………..”

இவள் பேச்சை காதில் வாங்காமல், தன் வேலையிலேயேக் கருத்தாய் இருந்தான் அவன்.

“நான் ஒருத்தி கேக்குறேனில்ல… செவுடா நீ…?”

“……………………………..”

‘செவுடு இல்லை’ என்பதுபோல், அவளை அலட்சியமாகப் பார்த்தான்.

“……………………………..”

“எதுவா இருந்தாலும் அவங்ககிட்ட பேசு…”

வாயால் சொல்லாமல், பேண்ட் சூட் ஆசாமிகளை நோக்கிக் கைக்காட்டினான்.

இதைப் பார்த்த பேண்ட்சூட் ஆசாமிகள் அவள் அருகில் வந்தார்கள்…

“சாரே…! இது அநியாயம்… அக்கரமம்… ஊர்ல பொதுவாப் பொளங்கற களத்தைக் கட்டறதும், குளத்தை துக்கறதும்… அநியாயம்… இந்த அக்கரமத்தை கேக்க இங்கே யாருமே இல்லியா…?”

அப்போது குப்பாத்தா குறுக்கே புகுந்தாள்.

“ஏளை பாளைவ குடி கெடுக்க வந்தியா சார்…? நீ நல்லாவே இருக்கமாட்டே…!”

சாபம் கொடுத்தாள்.

அவளுக்குப் பேண்ட் சூட் ஆட்கள் ஏதோ பதில் சொல்ல வந்த நேரத்தில், புஷ்பவல்லி புயலாய்ப் புகுந்தாள்.

“யோவ்… ஊர்ல, நாட்டாம, கணக்குப்புள்ள, மணியாரு, முனிசீப்பு, கிராம சேவக்கு… ன்னு எல்லாரும் இருக்கும்போது அவங்களையெல்லாம் கலக்காம நீ ஊருக்குள்ள பூந்துருவியா…?”

தர்ணா செய்ய உட்கார்ந்துவிட்டாள்.

“……………………………..”

“எங்க குடிசைங்களையெல்லாம் காலி பண்ணப்போறதா சொன்னியாமே…? முடிஞ்சாப் பண்ணிக்க…!”

சவால் விட்டாள் புஷ்பவல்லி…

அடுத்தடுத்து வந்த பெண்டுகள்…, புஷ்பவல்லிக்கு ஆதரவாக உட்கார்ந்தனர்.

மதியம் பசியாற வந்த ஆண்களும் வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர எதுவும் பேசவில்லை.

எக்காலத்திலும் ஏழைச் சொல்தான் அம்பலம் ஏறாதே.

தெருத்தலையாரி பஞ்சாட்சரம் செய்தி அறிந்து அங்கு வந்தார்.

“அய்யா… நீங்க துணிச்சலாப் பொது எடத்துல பூந்து மேக்கரிக்கறீங்கன்னா, ஏதோ பலமான பின்னணி இருக்கும்னு ஊகிக்க முடியுது.”

என்னக் காரணம்னு தெரிஞ்சிக்க நான் ஆசைப்படல்லே. எது செஞ்சாலும் ஊர் கணக்கப்பிள்ளை, பட்டாமணியம், கிராம சேவகர்… இப்படி யாரையாவது கலந்துக்கிட்டு செய்யறதுதான் முறைனு சொல்ல வந்தேன்…”

“நாங்க யாரையும் பாக்கவேண்டிய அவசியமில்ல… வேணுமின்னா அவங்களை வந்து எங்களைப் பாக்கச் சொல்லு…!”

தெனாவெட்டாக பதில் வந்தது.

அன்றாடங்காய்ச்சிகள், தினக் கூலிகள் போன்றவர்களுக்கு இந்தக் களம் ஒரு களன்… அவ்வளவே.

இது இல்லையென்றால் வேறு எங்கு சொல்கிறார்களோ அங்கு சென்று உழைத்துவிட்டுக் கூலி வாங்கிவிடுவார்கள்.

அதே போல மிட்டா மிராசுகளுக்கும், சிறிய பெரிய விவசாயிகளுக்கும் அந்தக் களம் இல்லையென்றால் வேலைக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது…

தெருவில் தார்ப்பாய் விரித்து கண்டுமுதல் எடுத்துவிடுவார்கள்.

அந்தக் களம் ஒரு வசதி.

பத்துப் பதினைந்து வருஷங்களாகப் பழகிய இடம்.

அது இல்லாவிட்டால் குடி முழுகிவிடாது என்றாலும், ஊர்ப் பொது இடத்தை எவனோ வந்து தடாலடியாக ஆக்கிரமிப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருந்துவிட முடியுமா என்ன…?

கணக்குப் பிள்ளையும், பட்டாமணியமும் ஊர் பொதுப் பிரச்சனை எதிலும் என்றுமே தலையிட்டதில்லை.

சமயத்தில் இடைஞ்சல் வேண்டுமானாலும் செய்வார்கள்.

ஜனங்கள் வழக்கம்போல கிராம சேவகர் மாதய்யா வீட்டுக்குப் படையெடுத்தார்கள்.

“இன்னிக்கு நடவு. வயலுக்குப் போயிருக்காங்களே…!” என்றாள் குந்தலாம்பாள்.

அவள் சொன்ன, அந்த நடவு வயலுக்கு விரைந்தார்கள்.

செய்தியைக் கேட்டதும்… “சரி உடனே வரேன்… நீங்க போயிக்கிட்டே இருங்க…” அவர்களை அனுப்பினார் மாதய்யா.

“கலியா பூசர களத்துக்கு ஓட்டு வண்டிய…!”

மாதய்யா, சற்று முன் கொடுத்த குத்தகைச் சீட்டை வண்டியின் கூண்டுப் பிரம்பு இடைவெளியில் செருகினான் கலியன்.

வண்டி பூசரகளம் நோக்கிச் சென்றது…

‘பூவரசக் களமும், தாமரைக்குளமும் சமுதாயப் புறபோக்கு அல்ல’, என்பது மாதய்யாவுக்குத் தெரியும்.

பூமிநாத உடையாருடைய பூர்வீக சொத்து அது…

பூமிநாத உடையாருக்கு… மதுரை வீரனைப் போல வாட்ட சாட்டமான உடற்கட்டு, இரட்டை நாடி.

கழுத்தில் தொங்கும் தங்கச் சங்கிலியும், அதில் கிடக்கும் புலிப் பல்லும் அந்தக் கம்பீரத்துக்கு மேலும் கம்பீரம் கூட்டும்.

நல்ல எருக்கட்டும், பாசனமும் கொடுத்து, முறையானப் பராமரிப்பில் விளைந்த முரட்டுப் பசளைக் கீரையின் இலை போல, நுனி அகன்ற மீசையோடு ஆஜானுபாகுவாக இருப்பார்.

ஏகப்பட்ட நிலபுலங்களோடு, தாசில் பண்ணையாகக் கொடிகட்டிப் பறந்தவர் அவர்.

வீம்புதான் ரொம்பவே அதிகம் அவருக்கு.

***

இப்போது பூசரக் களமாக இருக்கும், புஞ்சையில், அவர் வழக்கமாகப் பயிரிடுவது ‘விரலி மஞ்சள்’தான்.

பொங்கல் சீசனில், அறுவடை செய்த மஞ்சளை சென்னைக்கு, மதுரைக்கு என லாரியில் அனுப்பி விற்று, நிறைய பணம் சம்பாதித்தார்.

ஒரு சமயம் மஞ்சள் விதைக்கிற நாளில், ஆட்கள் அதிக கூலி கேட்டுப் போராடி, வேலைக்கு வராமல் தர்ணா செய்தார்கள்.

உடையார் ரௌத்ரமானார்.

விதை மஞ்சளை வந்த விலைக்கு விற்றார்.

புஞ்சை பூராவும் நெருக்கமாக பூவரசம் போத்துக்களை நட்டுப் பயிர் செய்துவிட்டார்…

“தொழிலாளர்களுக்குக் கூலி அதிகமாகக் கொடுக்கக் கூடாது என்பதோ, கூலிக்காரர்கள் வயிற்றில் அடிப்பதோ பூமிநாதனின் நோக்கமல்ல.

வேலை தொடங்குவதற்கு முன்பே பேசித் தீர்த்துக்கொண்டிருந்தால் சந்தோஷமாகக் கூலி உயர்வுக்கு ஒத்துக்கொண்டிருப்பார்.

கிடை மறித்து, தொழுஉரமடித்து, அவுரி, கொளுஞ்சி விதைத்து, வெட்டிப் புரட்டி, பாத்திக் கொத்தி, பதப்படுத்தும் வரை ‘கம்’மென்றுக் கவுடாய் இருந்துவிட்டு, விதை விடும் நாளன்று கூலி அதிகம் கேட்டார்கள். பயமுறுத்தப் பார்த்தார்கள்.

எதற்கும் துணிந்த, அவரா பயப்படுவார்…

இரக்க குணமும் உள்ளவர்தான் உடையார். ‘சரி தரலாம்…’ என்றுதான் முடிவெடுத்தார்.

ஆனால், எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லாமலே, வேலை நிறுத்தம் செய்தார்கள் தொழிலாளர்கள்.

பூமிநாதனுக்குக் கோபம் வந்துவிட்டது.

இப்படிச் செய்து விட்டார்.

இப்படி வீம்புக்காக எத்தனையோ காரியங்களைச் செய்திருக்கிறார் அவர்.

‘அவரிஷ்டத்துக்கு வாழ்ந்து மடிந்தவர்’

அங்கு களம் போடவேண்டும் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.

அவர் ஒருநாள் பூவரசந்தோப்பில் உலாத்திக்கொண்டிருந்தார்.

‘மடக்… மடக்…’ கென்று சுள்ளி முறிக்கும் சத்தம் கேட்டது.

‘தன் தோப்பில் தைரியமாய் நுழைந்து சுள்ளி உடைப்பது யாராக இருக்கும்…?’

சந்தேகம் வரச் சென்றுப் பார்த்தார்.

‘முனியம்மா’.

அந்த கிராமத்தின் மேனா மினுக்கி.

கொஞ்சம் கறுப்புத்தான்.

கருப்பே அழகு காந்தலே ருசி.

உடையாரைப் பார்த்ததும், கிறங்கிய கண்களுடன், தேர்ந்த நாட்டியக்காரி முத்திரை வைத்தாற்போல் அபிநயத்துடன் அவர் முன்னால் வந்து நின்றாள்.

“‘நம்ம’ கொல்லைனுதானேன்னு உரிமையா ஒடைக்கேன்…’”’

இடுப்பை ஒரு வெட்டி வெட்டிச் சொன்னது கூட அவரைப் பாதிக்கவில்லை.

‘நம்ம…’ கொல்லை என்று உரிமையோடு, அழுத்தம் கொடுத்துச் சொன்ன முனியம்மாவின் கண்களோடு பூமிநாதனின் கண்கள் நோக்கொக்கியது.

ஷேக்ஸ்பியரின், As You Like It என்ற நாடகத்தில்

‘டச் ஸ்டோன்’ என்பவன், கிராமத்து மேனாமினுக்கியான ‘ஆர்ட்ரி’ யிடம் காதல் வயப்பட்டு, அவளே கதி என்று அவள் காலடியிலேயே கிடந்ததைப் போல ஆகிவிட்டார் பூமிநாதன்.

அன்று அந்தப் பெண்ணின் வலையில் விழுந்தவர்தான்.

பூவரசந்தோப்பும், ஆசை நாயகி முனியம்மாவும்தான் எல்லாமே என்று ஆகிப் போனது.

To His Coy Mistress என்ற Andrew Marvell எழுதிய Carpe diem Poem எனப்படும், நிகழ்காலத்தை அனுபவிக்கவேண்டும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கவிதையில் எவ்வாறெல்லாம் தன் ஆசை நாயகியோடு அனுபவித்தானோ, அதைப் போல அனுபவித்தார் பூமிநாதன்.

Let us roll all our strength and all

Our sweetness up into one ball,

And tear our pleasures with rough strife

Through the iron gates of life:

Thus, though we cannot make our sun

Stand still, yet we will make him run.

‘தொடுத்த பூ வாசத்தையும், தொடுப்பு மேல பாசத்தையும் ரகசியமா வெக்ய முடியுமா?’

ரகசியத் தொடுப்பு அம்பலமானது.

ஊர் சிரித்தது.

நற்றிணை 330ல் தலைவி தலைவனிடம் சொல்வாள் அல்லவா…

தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து

மட நடை நாரைப் பல் இனம் இரிய,

நெடு நீர்த் தண் கணம் துடுமெனப் பாய்ந்து,

நாட் தொழில் வருத்தம் வீட. சேண் சினை

இரு புனை மருதின் இன் நிழல் வதியும்

யாணர் ஊர ! நின் மாண் இழை மகளிரை

என் மனைத் தந்து நீ தழீஇயினும், அவர்தம்

புன் மனத்து உண்மையோ அரிதே; அவரும்,

பைந் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து,

நன்றி சான்ற கற்பொடு

எம் பாடு ஆதல் அதனினும் அரிதே.

அதைப்போல

பலவாறாக உணர்த்தி “அவள் உறவு வேண்டவே வேண்டாம்…!” என்று தடுத்தாள் பூமிநாதனின் மனைவி..

கவர்ச்சி மோகம் கண்களை மறைத்தது.

குடும்பம் சீர்குலைந்தது.

ராம லட்சுமணர்கள் போல இரண்டு ஆண்பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஊருக்குள் தலை நிமிர்ந்து, கவுரதையாக இருக்க முடியவில்லை தாலி கட்டிக்கொண்ட மனைவியால்.

குழந்தைகளைகளோடுபுதுக்கோட்டைக்குப் போய்த் தன் சகோதரன் வீட்டோடு ஐக்கியமாகிவிட்டாள்.

மாமனின் பராமரிப்பில் வளர்ந்தார்கள் மருமான்கள்.

மனைவி குழந்தைகள் எல்லாரும் வீட்டை விட்டுப் போனாலும் அந்த வீட்டில் ஆசை நாயகியை கொண்டு வந்து வைத்துக்கொள்ள மனசு வரவில்லை பூமிநாதக்கு.

பூவரசந் தோப்பில் பத்துக்குப் பதினைந்தடியில் ‘சின்ன ஓட்டு வீடு’ முனியம்மாவுக்காகவேக் கட்டினார்.

அதிலேயேப் பழியாகக் கிடந்தார்.

தொடுப்புக்கு வீடு கட்டுகையில் செங்கல்லுக்கு அலைந்தபோதுதான்,

‘ நாமே ஏன் காளவாய் போட்டு செங்கல் பிசினஸ் செய்யக்கூடாது…!’ தோன்றியது அவருக்கு.

விவசாயத்தில் வந்ததை, காளவாயில் முதலீடு செய்தார்.

ஓங்கு தாங்காய் உயர்ந்து, பருத்து நின்ற பூவரச மரங்களை வெட்டிச் சாய்த்தார்.

முதல் காளவாய்க்கு சூளைக்கு ஆகுதியாக்கிக் கொளுத்தினார்.

கல்லறுப்புத் தொழில் பிடிபட்டுவிட்டது.

நல்ல லாபமும் பார்த்துவிட்டார்.

அந்தத் திடலிலேயே, ஆழமாய்க் குழி பறித்து மண் எடுத்தார்.

லட்சம் லட்சமாகக் கல்லறுத்தார்.

லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கவும் செய்தார்.

காளவாய்க்காக மண்ணெடுத்து மண்ணெடுத்து, அந்தப் பள்ளம் குளமாய் நின்றுவிட்டது.

முத்தனூர் தாமரைக்குளத்திலிருந்து கிழங்கு வெட்டிவந்து பூசரக் குளத்தில் போட்டவன் குடிகாரன் ராமசாமி.

இன்றும் தாமரைக் குளமாக தகதகக்கிறது..

வந்த வருமானத்தையெல்லாம், உடைகளாகவும், தங்கமாயும், வைரமாயும், மாறியது.

பொன்னாம்மா மேனியில் அனைத்தையும் வைத்து அலங்கரித்து அழகு பார்த்தார்.

வாரத்துக்கு இரண்டு முறை வளையல் செட்டிக்கு அடித்தது அதிர்ஷ்டம்.

“அடியாத்தீ… தொடுப்புக் கட்டைக்குப் பட்டும் பனாரசுமா, உடுப்புப் பாருடீ…!”

“அடேடே இவளுக்கு இப்படி ஒரு ஆராதனையா..!”

“வூட்டுக்காரிக்கு வேட்டு வெச்சவளுக்கு வந்த வாழ்வு பாத்தியா…!”

“ தோப்புல சுள்ளி பொறுக்கின கள்ளிக்கு அசல் வெள்ளி சரிகை மினுமினுக்க சேலைப் பாருடீ…!”

“இப்படி வைரமாயும், வைடூரியமாயும் வீசுறாரே இந்தத் தாசிக்கு… அப்படி என்னதான் இருக்கோடி அவகிட்டே…!”

“இவளுக்குத்தான் என்னா அதிஸ்டம்…? தங்கமாயும், வயிரமாயும் மினுக்கறாளே…!”

“அது மட்டுமா…! அத்தர் என்ன… புனுகு என்ன… வாசனைத் திரவியங்கள் என்ன… சாம்பிராணிப் புகையென்ன… அவளுக்குச் சேவகம் பண்ண சேடிப் பொண்ணுங்க என்ன…? அதிர்ஷ்டக்காரிடீ அவ…”

திரை மறைவில் முனியம்மாவைப் பேசினார்கள்.

‘நமக்கு இந்த வாய்ப்புக் கிடைக்காமப் போயிடுச்சே…’ தாங்கலால் மருகினார்கள்.

“வைப்பாட்டியானாலும் பூமினாதனுக்கு இருக்கணும்…!” நேரடியாகவேப் பலான பெண்டுகள் பேசிக்கொள்ளும் அளவுக்குப் பிரபலமாக இருந்தவர் அவர்.

இதெல்லாம் , அவர் பால்யத்தில், முப்பது நாற்பது வயதில் செய்தது.

ஒரு நாள் பொன்னம்மா விஷக் கடியில் இறந்து விட்டாள்.

நிமிஷமாய் போய்ச் சேர்ந்துவிட்டாள்.

அவள் இறந்து கிடந்த அந்தத் திண்ணையில் கருங்கல் பாளங்களைப் போட்டு இழைத்தார்.

அந்தத் திண்ணையே அவருக்குத் தாஜ்மகாலானது.

அவள் நினைவாகவே அன்ன ஆகாரமின்றிக் கிடந்து உயிரை விட்டார்.

இதெல்லாம் பதினைந்து இருபது வருஷங்களுக்கு முந்தைய சேதி.

‘இப்போது, உடையாரின் வாரிசுகள் வந்து தன் சொத்துக்களை மீளக் கட்டுகிறார்களோ…?’ மனதில் பட்டது மாதய்யாவுக்கு.

இந்தப் பதினைந்து வருடங்களில், களத்திலிருந்த வைப்பாட்டி வீடு பராமரிப்பின்றி இடிந்தது, சிதைந்தது.

கரையான் தின்ற மரச்சட்டங்கள் போக, மிச்சம் மீதி அக்கம்பக்க வீடுகளின் அடுப்பில் எரிந்தன.

இப்போது அங்கே இருப்பது கடைசீ காலத்தில் உடையார் கருங்கல் பதித்துக் கட்டிய குட்டித் திண்ணை ஒன்றுதான்…

களத்துக்கு வருவோர் எல்லாம் அந்தத் திண்ணையில்தான் தங்கள் சோற்று மூட்டையை இறக்கி வைப்பார்கள்.

ஆரம்பத்தில் ‘முனியம்மாத் திண்ணை’ என்று இருந்தது, காலப்போக்கில் ‘முனி’ த்திண்ணையாக மருவி, முனீஸ்வரனுக்கு சூலம் நட்டுவிட்டார்கள் ஜனங்கள்.

இன்றும், எல்லாரும் அப்படிச் சொன்னாலும், பெயர்க் காரணம், மாதய்யா வயதொத்த சில பேருக்குத்தான் தெரியும்.

Natures poet, lakes poet, Romantic poet என்றெல்லாம் வருணிக்கப்படும் ஆங்கில கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த், ஒரு சமயம் பிரான்ஸ் நாட்டிற்கு போகிறார்.

அங்கு ஆனடி வேலன் Annette Vallon என்ற, Wordsworth ஐ விட ஐந்து ஆண்டுகள் மூத்த பெண்ணின் தொடர்பும், காதலும் கிடைத்தன.

காதலுக்கு என்றும் எப்போதும், வயதோ, அழகோ, ஜாதியோ, மதமோ … எதுவுமே தடையாக இருந்தது இல்லையே.

அவளிடம் வேர்ட்ஸ்வொர்த் பிரெஞ்சு மொழி கற்றார். கூடவே காதல் மொழியும் பறிமாறிக்கொண்டனர்.

‘காதலுக்கு வழி வகுத்துக் கருப்பாதை சாத்திடுவோம்’ என்ற பாரதிதாசனின் வாக்கு அங்கு எடுபடவில்லை.

பருவ வேட்கையில் தங்களை இழந்தனர்.

ஒரு குழந்தையும் பெற்றுக் கொண்டனர்.

‘பிரெஞ்சுப் புரட்சி’ வந்தது

அவர்களைப் பிரித்தது.

இங்கிலாந்துக்குத் திரும்ப வேண்டிய நிர்பந்தம் Wordsworthக்கு.

அதற்குப் பின் மறுபடியும் பிரான்ஸ்க்குப் போகவே முடியவில்லை.

காதலியைப் பார்க்க வேண்டும் என்ற துடிப்பு.

தாங்க முடியாத வேட்கை.

போக முடியாத சூழல்.

அந்த வேட்கையின் ஆற்றல் வேற்றுரு (Sublimation) பெற்றது.

ரொமான்டிக் பொயட் அல்லவா..

Lines Written a Few Miles above Tintern Abbey என்ற சிற்றிலக்கியமாக மலர்ந்தது.

மும்தாஜ்க்கு, தாஜ்மகால் போல…

ஆனடி வேலன்’க்கு Tintern Abbey போல…

அந்தனூர் பூசர களத்தில் முனியம்மாவுக்கு முனித் திண்ணை.

‘இவ்வளவு துணிச்சலா வேலி கட்றான், கொளம் துக்கறான்னா, உடையாரோட வாரிசுங்களாத்தான் இருக்கணும்…!’ நினைத்தது சரியாகிவிட்டது.

கலியன் வண்டி நிறுத்தினான்.

எதிரில் முப்பது முப்பத்தைந்து வயதுள்ள இரண்டு பூமிநாத உடையார்கள் ஜோடியாக நடந்து வருவது போல இருந்தது.

அப்பனைப் போலவேப் பிள்ளைகள்.

William Shakespeare தன் முதல் Sonnet ல்

From fairest creatures we desire increase,
That thereby beauty’s rose might never die,

என்று வர்ணித்ததைப் போல

உருவத்தில் மட்டுமில்லை. செயல்பாடுகளிலும் அப்பனின் வேகம், துணிச்சல்…

இப்போது ஆள் படைகளை வைத்து, முள்வேலி அடைக்கச் சிமிட்டிக் கம்பம் நடும் வேகத்தை வியப்புடன் பார்த்தார் மாதய்யா…

முப்பது வருஷத்துக்கு முன் வீம்பாக பூவரசம் போத்து நட்ட பூமிநாத உடையார் கண்முன் வந்துபோனார்.

“கிராம சேவகர் வந்திருக்கார்… வந்து பாக்கறீங்களா…?” அருகில் சென்று சேதி சொன்னார் அம்பாகடாட்சம்.

“ஏன் …! அவுரு இறங்கி வரமாட்டாருங்களா…?”

“தம்பிகளா…! உடையார் வாரிசுங்கதானே நீங்க…! இங்கே என் கிட்டே வாங்க… என்னால இறங்கி வரமுடியாதுன்னேன்… கால் எலும்பு முறிஞ்சி இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா தேவலையாவுது. டக்குன்னு இறங்கி வர முடியாது…”

சத்தமாகக் குரல் கொடுத்தார் மாதய்யா.

“………”

விபரம் அறிந்ததும், அருகில் வந்தார்கள்.

“தாயார் நல்லா இருக்காங்களா…?”

“இருக்காங்கய்யா…”

“உங்கப்பாவோட நல்ல சினேகிதம் உண்டு எனக்கு… பூமிநாதன், தன் இஷ்டத்துக்கு இருந்து போனவன்.”

“………”

அப்பாவின் சிநேகிதர் என்ன சொல்கிறார் என்பதை அமைதியாகக் கேட்டனர்.

இங்கே இருந்தா, உங்க வளர்ச்சிக்கு நல்லதில்லைனு முடிவெடுத்து, உங்கம்மா உங்க ரெண்டு பேரையும் அவங்க அண்ணனோட பாதுகாப்புல, புதுக்கோட்டைல, தாய்மாமன் வீட்டுல விட்டுப் படிக்க வெச்சாங்க…”

“ஆமாங்கய்யா…” என்றனர் இருவரும் ஒரு சேர.

“அப்பா அனாமத்தா விட்டுப் போனதை பாத்யதை கொண்டாட வந்திருக்கீங்க…! சந்தோஷம்.”

“உங்க அப்பனும் இப்படித்தான். எதையும் படபடன்னு, யாரையும் எதையும் பத்திக் கவலையேப் படாம வேகமாத்தான் செய்வான்…”

“அப்பனுக்குப் பிள்ளை தப்பாம இருக்கீங்க…செரி…செரி… வேலை நடக்கட்டும்…”

அவர்களிடம் சொல்லிவிட்டு வலப்பக்கமாய்த் திரும்பி “இந்த நாலு குடிசைங்களும் யாருது…?” சுற்றி நின்றவர்களைக் கேட்டார்.

“என்னுது…! என்னுது…!” என்று நான்குபேரும் வந்தனர்.

“இந்தனை காலம் அனுபவிச்சீங்க…! சரி…! உடையவங்க வந்துட்ட பிறகு அதை விட்டுக் கொடுத்துடறதுதான் ஞாயம்.”

“……………..”

“நீங்க நாலு பேரும் பெரிய வாய்க்காலண்ட இருக்கற என்னோட தெடல்ல கொட்டா கட்டிக்கிட்டு இருங்க.”

“……………..”

“உடையார் ஊருக்காக விட்டுப் போனதை அவரோட வாரிசுங்க வந்து பாத்தியதை கொண்டாடறமாதிரி, என் வாரிசும் ஒரு நாள் வந்து உங்களை காலி பண்ணச் சொல்லிருவான்’னு பயம் வேண்டாம்.”

“ஒரு வாரம் ரெண்டு வாரத்துல உங்க பேருக்கு சாசனம் பண்ணி கொடுக்கறேன்…” என்றார்.

சின்ன உடையார்கள் பக்கம் திரும்பினார்.

“தம்பீ… இன்னும் ரெண்டொரு நாள்ல அவங்க காலி பண்ணிக் கொடுத்துருவாங்க…” என்றார்.

“தம்பிங்களா…! எடத்தை மீட்டு வேலி போட்டு கிரயம் பண்றதா திட்டமா…?”

“விக்கற ப்ளான் இல்லீங்க… ஃபாக்டரி கட்டலாம்னு.” என்றார் இருவரில் ஒருவர்.

“செய்யுங்கோ…! செய்யுங்கோ…!! அப்பா வாழ்ந்த மண்ணை மதிச்சி வந்திருக்கீங்களே… அதுவேப் பெருமையா இருக்கு… அம்மாவை ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்கோ…”

விடைபெற்றார் மாதய்யா.

அன்றைய அலைச்சலில் ‘புஸு புஸு’ வென்று நன்கு வீங்கி யானைக்கால் போலச் சுரந்து விட்டது கால்.

துரைராமன் மூலம் ஜீவபுரம் டாக்டருக்குச் செய்தி போய், அவரும் வந்துவிட்டார்.

“மாதவா…எலும்பெல்லாம் நன்னா சேர்ந்துடுத்து… கொஞ்ச நாளைக்கு அதிக அலைச்சல் இல்லாம இரேன்.”

“……………..”

“காட்லீவிர் ஆயிலைத் தடவிண்டு வீட்லயே நடமாடி, அப்பப்போ காலை லேசா அமுக்கி விட்டுண்டு, ‘பிசியோ தெரபி’ பண்ணி ஸ்டடி பண்ணிண்டு அப்பறம்தான் வெளீல அலையணும்.”

“……………..”

“வலி வரும்போது ரெஸ்ட்… அப்பறம் மெதுவா நடை… ரெஸ்ட்…. இப்படி இரு…”

“ஒரே மூச்சுல மண் எடுக்க ஆசைப்படாதே… விபரீதமாயிடும்…”

எச்சரித்துவிட்டுப் போனார்.

பல்லைக் கடித்துக்கொண்டு அடுத்த பத்து நாட்களும், டாக்டர் அருணகிரி சொன்னதைப்போல், வீட்டிலேயே நடை பயின்றார்.

வீட்டில் தங்கினால் துரைராமனோடு வாக்குவாதம் வந்துவிடுமோ என்று பயந்தார். அப்படி ஏதும் நடக்கவில்லை…

துரைராமன், வீட்டில் தங்கினால்தானே பிரச்சனை வருவதற்கு…

அவன்தான் பொழுதுக்கும் கிராதகன் ‘கிட்டா’வோடு கிடக்கிறானே…!

பத்துப் பன்னெண்டு நாள் ஓய்வுக்குப் பிறகு, ஓரளவுக்கு நன்றாக நடக்க முடிந்தது.

வெகு நேரம் நடந்தால் வீக்கமோ, வலியோ இல்லை.

ஒரு முறை காவிரி ஆறு வரைக்கும் நடந்து பார்த்தார்.

வழக்கம்போல வீரனோடு காவிரிக்குச் செல்லவேண்டியதுதான் என்று தீர்மானித்தார்.

விடிகாலை எழுந்து பால் கறக்கலாமா…? என்று நினைத்தார்.

குத்துக்காலிட்டு உட்கார முடிகிறதா என்று பார்த்தார்.

‘இன்னம் ஒரு வாரம் சென்று அதைச் செய்யலாம்” என்று தோன்றியது.

விடிகாலை வீரனோடு காவிரிக்குப் போக நினைத்தவருக்கு ஏனோ, ‘இன்று வேண்டாம்..’ என்று தோன்றியது.

விபூதிப் பொட்டலத்தைக் கட்டி மடியில் வைத்துகொண்டு, சின்ன பித்தளைக் குடத்துடன் சென்றார்.

எல்லையம்மன் கோவில் முகப்பில் கால்கள் அனிச்சையாய் நின்றன.

குடத்தைக் கீழே வைத்தார்.

தலைக்கு மேல் குவித்துக் கும்பிடு போட்டார்.

சிறிது நேரம் அந்தக் கோவில் முன் கிடக்கும் பாறாங்கல்லில் உட்காரவேண்டும் போல இருந்தது.

உட்கார்ந்தார்.

ஒவ்வொரு மழைக்கும் கரைந்துக் கரைந்து விழுந்து, குட்டிச்சுவர் ஆகிப்போன எல்லையம்மன் மதிலைப் பார்த்தார்.

பறவைகளின் எச்சத்திலிருந்தும், காற்றின் உபயத்தாலும், விழுந்த தப்பு முதல்கள்… இடிந்த சுவரின் கல்லிடுக்கில் சிக்கி, மண்ணோடு புணர்ந்து பிறந்த தாவரங்கள்.

அரசு, ஆல், நுனா, வேம்பு, சரகொன்றை, உத்தராசு… போன்ற மரங்கள்

கால் வைக்க முடியாதபடிக்கு வளர்ந்து நிற்கும், பேயத்தி, ஆமணக்கு, எருக்கு, சஸ்பேனியா, குப்பைப் கீரை, காய்ஞ்சான் கீரை, ஊமத்தை, துத்தி, எருக்கு, நாயுருவி, தும்பை, மூக்கரட்டை, தொட்டால் சிணுங்கி, யானை நெருஞ்சி,… இன்னும் பெயர் தெரியாத செடிகள்…

ஓணான் கொடி, சீந்துக்கொடி, கோவை, காஞ்சுருட்டான், வேலிப்பருத்தி, தூதுவளை, முடக்கத்தான் போன்ற கொடிகள்…

பார்க்கப் பார்க்க மனசுப் பிசைந்தது.

இரண்டாண்டுகளாக நின்று போய்விட்ட எல்லையம்மன் காப்புக்கட்டு, தீமிதி இவைகளைப் புதுப்பிக்கவேண்டும்போல் மனசு கிடந்து தவித்தது.

‘பூனைக்கு மணி கட்டுவது யார்…?’

இரண்டாண்டுகளாகப் போட்டிப் போட்டுக்கொண்டு, காப்புக் கட்டை நிறுத்தியதற்கு நீயும்தானே காரணம்…’ என்றது மாதய்யாவின் உள்ளுணர்வு.

‘நாமே முன்னின்று நடத்தாமல் போனோமே…!’ கழிவிரக்கத்தில் கலங்கினார்.

கோபுரத்தில் அப்போதுதான் வேரூன்றி பத்துப் பதினைந்து இலைகளை வெளிக்காட்டி தன் இருப்பைக் காட்டிக்கொண்டிருந்த அரசங்கன்று அவர் கண்ணில் பட்டது,

‘முளையிலேயே கிள்ளினால் தேவலை… கோபுரமாவது தப்பிக்கும்…!’

நினைத்த மாத்திரத்தில், ஓர் உந்துதலில், பிரகாரத்தில் படிப்படியாய் நீட்டப்பட்ட பிறைகளும், நீட்டலுமாய் இருந்த கட்டுமானங்களில் படிப்படியாய் கால் வைத்து, மெது மெதுவாய், விமானத்தை அடைந்துவிட்டார் மாதய்யா… ‘கோபுரத்துல முளைக்கற அரசு நுணா போன்ற மரங்களை முளையியேலே கிள்ளி எறிந்து கோபுரத்தைக் காப்பாத்தறது புதுசா கோவில் கட்றதைவிட சிரேஷ்டமானது’ என்பது மாதய்யாவின் தீவிர சித்தாந்தம்.


அத்தியாயம் – 14

“அய்யா, கோயிலு கோபுரத்து மேல நின்னு என்னா செய்யுறீங்க…?”

கலியன் பதற்றத்தோடு கேட்டான்.

“அரசஞ் செடிங்க அங்கங்கே கிளம்பியிருந்துச்சா…! அதையெல்லாம் புடுக்கிப் போட்டேன்….!” சொல்லிக்கொண்டே கீழே கிடக்கும் செடிகளை ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டினார்.

“அய்யா…! அய்யா…! ஓரமா வராதீங்க…!”

பதறினான் கலியன்.

“………………………..”

கலியன் பதற்றத்துக்கு மதிப்பளித்து, மாதய்யா கால்களை ஒரு அடி பின்னால் இழுத்துக்கொண்டு நின்றார்..

“ஆத்துக்குக் குளிக்கப்போன அய்யாவை இன்னும் காணோமே!’னு வீட்டுல அம்மா கவலைப்பட்டுக் குந்திக் கிடக்காங்க.”

“நீங்களோ, இப்படி கோபுரத்துல ஏறி உட்காந்துருக்கீங்களே…! இது ஒங்களுக்கே நல்லாருக்கா…! தப்பித் தவறி விழுந்துட்டா வருமா…!’

“………………………..”

“அடிபட்டு முறிஞ்ச காலு…! சேருவனானு சேந்து இப்பத்தான் சரியா வந்துருக்கு… இப்பப் போயி…?”

“கலியா…! இதுபோல வேலைங்களைச் செய்யக் காலம் கடத்தக்கூடாதுடா…!

‘அன்று கிடந்தா ஆறு மாசம்’னு சொல்லுவாங்க…!”

“அப்பறம் ஆவட்டும், பாத்துக்கலாம்’னு விட்டுப்புட்டா, அது மறந்து போயி, ‘ஆஹா…!னு ஒரு நாளைக்கு ஞாபகம் வரும்போது, நல்லா வேர் விட்டு உறுதியா நின்னுரும்…!”

“………………………..”

அய்யா சொல்வதைக் கவனமாகக் காதில் வாங்கினான் கலியன்.

“இப்போ இது போல ஒரே இழுப்புல நிமிஷமாப் புடுங்கிப் போட்டுறலாம்.

கொஞ்சம் வேர் ஊனிடுச்சோ, அவ்ளோதான், சித்துளியால உடைச்சி, திராவகம் ஊத்தி நாள் கணக்குல மெனக்கடணும் பாரு…”

“நீங்க சொல்றதெல்லாம் செரிதான்யா. இதுபோல ஏதாச்சும் வேலைன்னா வரும்போதே வீட்ல சொல்லிப்புட்டு வந்தா, அம்மா கவலையில்லாம இருப்பாங்கதானே…?”

“………………………..”

கலியன் சொல்வதில் இருந்த கரிசனத்தையும், ஞாயத்தையும் அமைதியாக உணர்ந்தார் மாதய்யா.

“நீங்க எதுக்கு இந்த வேலையெல்லாம் செய்யணும். கீளே உக்காந்து இதை எடு, அதை கவனி, இப்படிப் பண்ணு, அப்படிப் போடுன்னு நோக்கம் சொன்னீங்கன்னா, நான் ஏறி செஞ்சிட்டுப் போறேன்…!”

“………………………..”

“எலும்பு முறிஞ்சி சேறுமானு சேந்த காலு…! பாத்து இறங்குங்கய்யா…!”

“நான் மெதுவா இறங்கிக்கறேன். நீ வீட்ல போய் சேதி சொல்லிட்டு, கடப்பாரை, அருவா, மம்முட்டி, கோடாலி எல்லாம் எடுத்துக்கிட்டு வா…போ…!”

“நான் போவுறது இருக்கட்டும். நீங்க இறங்குங்க மொத….”

பிடிவாதமாய் நின்றான் கலியன்.

“இறங்கிட்டேன்… போதுமா…!”

“………………………..”

“இப்ப போ, ஜாமான் எடுத்துக்கிட்டு வா…!”

“………………………..”

அமைதியாக நின்றான் கலியன்.

“ஏன் தயங்கி நிக்கறே… என்னமா காடா மண்டிக்கிடக்கு பாரு…”

“களையெடுப்புங்கய்யா……! இன்னிக்கு நம்ம வயல்ல…”

“அது கெடக்கட்டும்டா, கோவில் காரியம். நெனச்சதும் செஞ்சிரணும்.”

“செஞ்சிருவோம்யா…!”

“களையெடுப்புக்கு வந்திருக்கற ஆளு படைங்களைக் கோவிலுக்கு வரச்சொல்லு… கோவில் சுத்தமாவட்டும்…”

“நான் சொல்றேன்னு நினைக்காதீங்கய்யா… காலத்துல செய்யவேண்டிய, களையெடுப்பு நிக்காம நடக்கட்டுங்கய்யா.”

“………………………..”

“கோவில் வேலைக்குத் தனியா நாலு ஆம்பள ஆளுங்க ஏற்பாடு பண்ணி விடறேங்க…”

“கலியா…! நாலு ஆளுங்க செய்யறதை நாப்பது ஆளுங்க செஞ்சா சட்டுபுட்டுனு வேலை முடியுமில்ல… அம்மன் காரியம்டா… நெனைச்சதும் செஞ்சி முடிச்சிரணும்.”

“முடிச்சிருவோம்யா…”

“கை வெச்ச நேரம் சரசரன்னு கமிட்டிப் போட்டுத் திருப்பணி வேலைங்களைத் தொடங்கிரலாம்…”

“………………………..”

“இந்த வருசம் காப்புக் கட்டிப்பிடணும்னு யோசிக்கறேன்…”

“………………………..”

நான் ஒரு கணக்குப் போட்டா நீ ஒரு கணக்குப் போடுறியே…?”

“அய்யா… உங்களுக்குத் தெரியாததில்ல. நம்ம வயக்காட்டுல இருக்கறதும் தானிய லட்சுமிதானுங்களே…!”

“………………………..”

“அந்த லட்சுமிக்கு எடைஞ்சலா இருக்கற களைங்களையும் நேரத்துல எடுத்துத்தானே ஆவணும்…”

“………………………..”

“கமிட்டி எதுக்குங்க கமிட்டி… கோவில் வேலைக்கு கல்லு, சிமிட்டு, கொத்துக் கூலி, மேஞ்செலவுங்க இதுக்குத்தானே…!”

“ம்ம்…!”

“ஒரு தண்டோராப் போட்டா, ஊர்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணு ஏத்துக்கிடுவாங்க. கட்டுமான வேலைங்களும் சிறப்பா முடிஞ்சிரும், ஆத்தா காப்புக்கட்டையும் தடபுடலாப் பண்ணிப்புடுவாங்களே…!”

“………………………..”

“கமிட்டி போட்டாலும் போடலேன்னாலும் பொதுக்காரியம் நடந்தே தீரும். கோவிலுக்குக்கொடுக்கறவங்க கொடுப்பாங்க.”

“கமிட்டின்னு போட்டா கமிட்டிக்காரங்க வரட்டு கவுரவத்தால காரியம் கெட்டுத்தான் போவும். சரிதானுங்களே நான் சொல்றது…?”

“ம்…”

“சிமிண்டு நிறைய கிடைச்சா, கட்டு வேலையும் சிமிண்டுல போடுவோம். இல்லியோ சேத்துல கட்டுவேலை போட்ருவோம்.”

“சிமிண்டு பூசி மெழுகிடுவோம்…!”

“சர்தான்…!”

“இத்தினி வருசமா நின்ன இந்தச் செவுரு… களிமண் கட்டு வேலைதானுங்களே…!”

“அதுவும் சரிதான்…”

“இன்னிக்கு நாலு ஆளு வெச்சி வேலை தொடங்கிருவோம்…

எல்லையம்மன் வேலை. அதும்பாட்டுக்க சீரா சிறப்பா நடக்குமுங்க…”

கலியன் பேசியதில் ஒன்றைக் கூட மறுக்க முடியவில்லை.

‘தீர்மானமாக, தீர்கமாக, உறுதியாக, தெளிவாகப் பேசுகிறானே இவன்…’

வியந்தார்.

கலியன் கையில் குத்தகைச் சீட்டு எழுதிக் கொடுத்த பின் அவர் மனசின் ஒரு மூலையில் ‘இவன் சொன்னபடி செய்வானா…?’ என்று

மாதய்யாவின் மனதில் இருந்த துளிப்போல இருந்த சம்சயமும் இன்று முற்றிலும் நீங்கிவிட்டது.

‘சொத்து பூராவும் அவன் பெயருக்கே எழுதி வைத்தாலும்கூட கலியன் தனக்கென்று சுயநலமாய் எதுவும் செய்துகொள்ள மாட்டான்…’

தீர்மானமாக மனசில் பட்டது.

“அய்யா…! போற வளீல ஒரு எட்டு களையெடுப்பை பாத்துட்டுப் போங்கய்யா.

“ம்… பாக்கறேன்…”

காவிரியாத்துல முளுவிட்டு, வீட்டுக்குப் போயி பசியாறி வந்துடுங்க…”

“நானும் போயி கோவில் வேலைக்கு ஆளு இட்டாரேன்…”

கலியனும் மாதய்யாவும் இரு வேறு திக்கில் நடந்தனர்.

“களையெடுக்கும் பெண்டுங்களே….

கையிலெங்கே களையக் காணோம்…

கை வளையல் குலுக்கிவிட்டு

காசு வாங்கிப் போவியளோ…?”

பாட்டோசையுடன் தன் வருகையை அறிவித்தார் மாதய்யா.

அமைதியாய் போய்க் கொண்டிருந்த களையெடுப்பு கலகலப்பாய் மாறியது.

“பாலும் பழமும் எடுத்துப்பாக அய்யா

பழைய சோத்து நீர் குடிப்போம் நாம

இட்லி காபி எடுத்துப்பாக அய்யா

இருத்த நீச்சுத் தண்ணிக் குடிப்போம் நாம.

கணக்குப் பாக்காம காசு கொடுப்பார் அய்யா

கணக்குப் பாக்காம களை எடுப்போம் நாம…

என்று சின்னப்பொண்ணு பாட்டுக் கட்டினாள்.

எல்லோரும் குலவை போட்டுச் சிரித்து அய்யாவை மகிழ்வித்தனர்.

ரசித்து மகிழ்ந்த மாதய்யா, தோண்டியை எடுத்துக்கொண்டு அவசரமாய்க் காவிரிக்குப் போனார்.

காவிரிப் படித்துரைக்கும், லஸ்கர் கட்டடத்துக்கும் இடையே இருந்த சுமைதாங்கியில் கைப் பையை வைத்துவிட்டு பெட்டவாத்தலை பஸ்ஸுக்காகக் காத்திருந்த காசி வாத்தியாரைப் பார்த்ததும் குசலம் விசாரித்தார்.

“என்ன வாத்தியாரே…எப்படி இருக்கீங்க…?”

“நல்ல சௌக்யம்… நீங்க நல்லாருக்கீங்களா…?”

“இருக்கேன் வாத்யாரே… உங்க தகப்பனார் போனதோட, எல்லையம்மா காப்புக் கட்டும் இப்படி நின்னுப் போயிருச்சே…!”

“………………………..”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றார் காசி வாத்தியார்.

“இந்த வருசமாவது எல்லையம்மனுக்கு காப்பு கட்டிரணும் வாத்தியாரே…”

“கண்டிப்பாக் கட்டிருவோம்.”

ஊக்கப்படுத்தினார் காசி வாத்தியார்.

“அதுக்கு முன்னே கோவில் காம்பவுண்டு செவுரு கட்டிரணும்…னு பிரயாசைப்படுறேன்.”

“ஜமாய்ச்சிருவோம்…!”

காவிரியில் குளித்துக் கரையேறியபின் வழக்கம்போல, காவிரிக்கரை ஆதித்ய வினாயகர் முன் நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டார் பரமசிவம்.

காசி வாத்தியாரும், மாதய்யாவும் பேசிய பேச்சைக் காதில் வாங்கிக்கொண்டே அவர்கள் அருகில் வந்தார் ‘கொத்தனார் மேஸ்திரி’ பரமசிவம்,

“நீங்க பேசினதை காதுல வாங்கினேன். காம்பவுண்டு கட்டித் தர்றது என் பொறுப்பு.”

சொல்லிவிட்டுப் போனார்.

மாதய்யாவுக்கு மனசெல்லாம் மகிழ்ச்சி பொங்கியது.

உடலும் உள்ளமும் குளிரக் குளிர காவிரியில் நீராடிவிட்டு தோண்டியில் தண்ணீரோடு வீடு திரும்பினார் .

கோவில் வேலைக்கு ஆட்கள் ஏற்பாடு செய்துவிட்டான் கலியன்.

கோவில் மதிலைச் சுத்தம் செய்யத் தொடங்கினர்.

“இப்படிச் செய்… அப்படிச் செய்… ஜாக்கரதை…. பார்த்துக் கால் வை, பாம்பு, தேளு, நட்டுவாக்களி கெடக்கும், ஜாக்கரதை… எச்சரிக்கையாச் செய்யி, தனியாத் தூக்காதே, அவசரப் படாதே, கை ஜாக்கரதே…”

எச்சரிக்கை செய்துகொண்டே இருந்தார் மாதய்யா

ஓரிடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் ஓடி ஆடி ஆட்களுக்கத் தோது சொன்னார்.

நடு நடுவே சம்பாக் காணிக்குச் சென்றார்.

களையெடுப்பிலும் போய் பாட்டுக் கட்டினார்.

விவசாயக் கூலிகளை உற்சாகப்படுத்தினார்.

“கண்ணாடி வளையல் போட்டு…

களையெடுக்க வந்த பொண்ணே…

கண்ணாடீ மின்னுதடீ….

களையெடுப்புப் பிந்துதடீ….”

சின்னப்பொண்ணுவை கேலி செய்து பாட்டுக் கட்டினார்.

அவள் கட்டிய எதிர்ப்பாட்டை வரவேற்று மகிழ்ந்தார்.

அவர்களின் குலவையை ரசித்தார்.

சற்றைக்கெல்லாம், கோவிலில் ஆட்கள் வேலை செய்வதைப் பார்க்க ஓடினார்.

ஆட்களுக்கு நோக்கம் சொன்னார்.

பஸ் ஸ்டாண்டுக்கு, காவிரிக்கு, வயல்வெளிகளுக்கு… எனச் சாலையில் போனவர்கள் எல்லோரும் சற்றே நின்று பார்த்தார்கள்.

‘கோவில்ல என்னவேலை நடக்குது…’

ஆர்வத்தில் அருகில் வந்து கவனித்தார்கள்.

ஆட்களிடமும், மாதய்யாவிடமும் கேட்டு விபரமறிந்தார்கள்.

அறிந்த விவரங்களை அங்கங்கே பரப்பினார்கள்.

அனைத்து தெருவாசிகளுக்கும், கோவில் காம்பவுண்டு புதுப்பிக்கும் வேலையைப் பற்றித் தெரிந்தது.

அம்மனுக்குக் காப்புக் கட்டும் மாதய்யாவின் எண்ணத்தை அறிந்தார்கள்.

பச்சைக்கொடி காட்டினார்கள்.

“என்னால ஆனது…!”

“என்னால முடிஞ்சது…!”

“நான் இதைச் செய்யவா…!”

“அதை நான் ஏத்துக்கறேன்…!”

“இதுக்கு நான் பொறுப்பு…!”

என்று எல்லையம்மனின் பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டுக் கோரிக்கை வைத்தார்கள்.

சம்பிரதாயத்துக்காகத் தண்டோரா போடப்பட்டது.

தர்மலிங்கம் ஒன்பது தெருவுக்கும் தண்டோரா போட்டு செய்தி பரப்பினான்.

ஊர்க்கூட்டம் நடைபெற்றது.

குறைந்தபட்சம், தெருவுக்குத் தலா 10 மூட்டை சிமெண்ட் தர ஒப்புக்கொண்டார்கள்.

மேலே தேவைப்பட்டாலும் செய்வதற்கு தயாராக இருந்தார்கள்.

பாரவண்டி வைத்திருப்பவர்கள், தலைக்கு மூணு நாலு வண்டியாவது ஆற்று மணல் அடித்துத் தர ஒப்புக்கொண்டார்கள்…..

அந்தனூரைச் சேர்ந்த 40 கொத்தனார்களும், சம்பளம் இல்லாமல் கோவில் வேலை செய்வதாக வாக்களித்தார்கள்.

திருச்சியில் பிரபலமான சிவில் இஞ்சினியர் திருநாவுக்கரசு. பவுர்ணமி தவறாமல் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் தீவிர சிவபக்தர்.

அவர் முகத்தில் வெளிப்படையாகவே அந்த தேஜஸ் தெரியும்.

தாத்தா காலத்திலேயே திருச்சியில் குஜிலித் தெருவில் பங்களா கட்டிக்கொண்டு செட்டில் ஆகிவிட்டாலும், தன் பூர்வீகமான அந்தனூர் எல்லையம்மனின் தீவிர பக்தர் திருநாவுக்கரசு.

மிகவும் பிஸியான இஞ்சினியர் அவர்.

அவருக்கு இருந்த பற்பல பணிச்சுமைகளுக்கு நடுவே எல்லையம்மன் கோவில் திருப்பணியை நாள் தவறாமல் வந்து மேற்பார்வைச் செய்தார்.

சரியாக ஒண்ணரை மாதத்தில் கோவில் சுற்றுச் சுவர் கட்டியாகிவிட்டது.

கணேசலிங்க ஸ்தபதி சுற்றுச் சுவரின் நான்கு ஓரங்களிலும் சுதைவேலை செய்து தந்தார்.

கட்டுமான வேலைகள் அனைத்தும் சிறப்பாகவும், தரமாகவும், திருப்தியாகவும் செய்து முடிக்கப்பட்டது.

கோவில் பிரகாரம் முழுவதும் தன் சொந்தச் செலவில் கருங்கல் தளவரிசைப் போட்டுத்தந்தார் இஞ்சினியர் திருநாவுக்கரசு.

சிமெண்ட்பூச்சு, சுதை வேலை, வண்ணப்பூச்சுகள், தளவரிசை… எல்லாம் முடிந்து பளிச் என்று காட்சி அளித்தது எல்லையம்மன் கோவில்.

கும்பாபிஷேகம் குறித்து முக்கியஸ்தர்கள் கூடிப் பேசினார்கள்.

“பாலாலயம்தான் பண்ணலையே..!.” என்று இழுத்தார் விஸ்வம் குருக்கள்.

“………………………..”

“ஆமாமா…! சந்நிதி உள்ளேயும், விமானத்துலயும், கும்பத்துலயும்தான் கை வைக்கலையே.” இது கிச்சாமி.

“………………………..”

“காம்பவுண்டுச் சுவர், பிரகாரம் தளவரிசைன்னு, வெளி வேலைப்பாடுங்கமட்டும்தானே நடந்துருக்கு…” ராமப்பிரசாதய்யா எடுத்துச் சொன்னார்.

“………………………..”

“ஒரு புண்யதானம் பண்ணித் தீர்த்தம் தெளிச்சாப் போறாது…?” கேள்வி எழுப்பினார் காசி வாத்தியார்.

“………………………..”

“காப்புக் கட்டறப்போ ஒரு காவு கொடுத்து பூஜை போட்டுட்டாப் போதும்…”

முடிவாய்ச் சொல்லிவிட்டார் அந்தக் கோவிலின் பரப்பரை ட்ரஸ்டியும், கோவிலின் பூசாரியுமான செல்வமுத்துப் பண்டாரம்.

அவர் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்பட்டார்கள்.

அப்படியே செய்வோம் என்று முடிவெடுத்தும் விட்டார்கள்.

கணேசலிங்க ஸ்தபதியும் பூசாரி சொல்வதுதான் சரி என்றார்.

சந்தேகத்துக்கு, ஆகமபூஷணம் தாயுமானவ சிவாச்சாரியாரை அணுகிக் கேட்க மாதய்யாவும், காசி வாத்தியாரும் சென்றார்கள்.

எங்கோ கும்பாபிஷேக வேலையாகச் சென்றுவிட்டு கையில் மூட்டையுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார் சிவாச்சாரியார்.

“வாங்க என்ன சேதி…”

“நீங்க ரெஸ்ட் எடுங்க. சாய ரஷை வந்து பாக்கறோம்…” என்றார் காசி வாத்தியார்.

அதெல்லாம் ஒண்ணும் சிரமமில்லை. நமக்குள்ள என்ன சம்ப்பிரதாயம், என்னைத் தேடி வந்த விஷயத்தைச் சொல்லுங்கோ…”

கோவில் வாசலிலேயே வைத்து விஷத்தைச் சொன்னார்கள்.

அவரும் யாக சாலை, கும்பாபிஷேகம்னு எதுவும் தேவையில்லை என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

கையும் மெய்யுமாக, இரண்டு வருடங்களாக நடக்காமல் நின்றுபோன காப்புக் கட்டை, இந்த வருஷம் மாதய்யா பொறுப்பேற்றுக் கட்டுவதாகவும் தீர்மானமாம் செய்தார்கள்.

அனைத்துத் தெருத் தலையாரிகளும் அவரவர் தெரு மண்டகப்படியை குறிப்பிட்ட நாளில் வழக்கம் மாறாமல் செய்துவிடுவதாக உறுதியளித்துவிட்டார்கள்.

நாளை விடிந்தால் காப்புக் கட்டுத் திருவிழா.

காப்பு கட்டும் நாளில் ஊர் எல்லைக்குள் இருந்தால், காப்பு அறுக்கும் நாளிலும் ஊர் எல்லைக்கள் இருந்தே ஆக வேண்டும் என்பது ஐதீகம்.

இந்த ஐதீகம் அறிதோர்…

‘காப்பு அறுக்கும் நாளில் வெளியூர்த் தங்கல் இருக்கலாமோ…?’ என்று சந்தேகப் படுவோர், காப்புக் கட்டுகிற நேரத்தில் ஊர் எல்லை தாண்டிச் சென்றுவிட்டார்கள்.

காப்புக் கட்டு முடிந்ததும் அவர்கள் ஊருக்குள் வருவார்கள்.

காப்பு அறுக்கும் நாளில் நிச்சயமாக இங்குதான் இருப்போம் என்று உறுதியாய் இருந்த வெளியூர் வாசிகளும் காப்புக்கட்டில் கலந்துகொள்வதற்காக ஊருக்குள்ளேயே இருந்தார்கள்.

காப்புக் கட்டு என்பதை ‘ரக்‌ஷா பந்தனம்’ வட மொழியில் சொல்வார்கள்.

ரஷை என்றால் காப்பு என்று பொருள். பந்தனம் என்றால் கட்டுதல்.

ஒரு காரியத்தை நாம் செய்யும் முன்பு அந்தக் காரியம் முடியும் வரையிலும் இடையூறு ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைசக்தியை வேண்டிக்கொண்டு கையில் கயிறு கட்டிக்கொள்வதற்கு ரக்‌ஷா பந்தனம் என்று பெயர்.

நாம் செய்வது ஒரு நாள் பூஜையாகவும் இருக்கலாம். பத்து நாள் பூஜையாகவும் இருக்கலாம்.

அது மாதிரிக் காரியங்களில் ரஷா பந்தனம் செய்து கொண்டால் ஊர் எல்லையைத் தாண்டிப் போகக்கூடாது. நியமத்துடன் இருக்க வேண்டும்.

இரண்டாண்டுகளாக நின்று போயிருந்த காப்புக் கட்டை இந்த ஆண்டு பக்திப் பரவசத்தோடும், முழு ஈடுபாட்டுடனும், காலங்காலமாக செய்து வந்த முறைகளை முறையாகக் கடைபிடித்தும், விமரிசையாக நடத்துவதாகத் தீர்மானித்துவிட்டார்கள் ஊர் மக்கள்.

ஊர் வழக்கப்படி, எல்லையம்மனின் கையில் மஞ்சள் கயிறு கட்டினார் பூசாரி.

கொடிமரத்தில் மஞ்சள் நீரில் நனைத்துக் காயவைத்த துணியில் நவதானியங்கள் வைத்து சாங்கியமாய் முடிந்து வைத்த துணியைக் கொடிபோல் ஏற்றிக் கட்டினார் பூசாரி.

ஊர் கூடி அம்மனின் அருள் பெற்றார்கள்.

காப்புக் கட்டியாயிற்று.

காப்பு கட்டிய நாள் முதல் பத்து நாள் அந்தனூரில் விழாக் கோலம்தான்.

தினமும் எல்லையம்மன் வீதி உலா வருவாள்.

பத்தாம் நாள் தீமிதி.

பதினோராம் நாள் விடையாற்றி விழா.

எந்தத் தடையும் இன்றி எல்லையம்மன் நடத்திக்கொள்ள வேண்டும். நடத்திக்கொள்வாள்.

***

மாதய்யாவின் கையில் வேப்பலைக் குடத்தை முதலில் கொடுத்தார் பூசாரி.

அதன் பின் விரலி மஞ்சள் கட்டிய காப்பை அவர் வலது கையில் கட்டினார்.

மாதய்யா கையில் காப்பு என்கிற மிகப் பெரிய பொறுப்பு ஏறிவிட்டது.

காப்புக் கட்டிக் கொண்டவர்களுக்கு புலால் உண்ணாமை, போகம் தவிர்த்தல், ஊர் எல்லை தாண்டிப் போகாது இருத்தல்…

இப்படிச் சில நெறி முறைகள் உண்டு.

காப்புக் அறுக்கிற வரை ஊரில் யாரும் இறந்து விடக்கூடாது.

இறந்துவிட்டாலோ அது அச்சானியம்.

தெய்வக் குத்தம் ஆகிவிடும்…

இதுவரை அப்படி யாரும் இறந்ததாக வரலாறில்லை..

‘எல்லாம் நல்லபடியாக முடியவேண்டுமே…!’

அல்லும் பகலும் எல்லையம்மனைப் பிரார்த்தித்தபடியே இருந்தார் மாதய்யா.

காசி வாத்தியாரின் அப்பா பக்கிரி அய்யா.

அவர் இருந்தவரை அவர்தான் பொறுப்பேற்றுக் கொண்டு காப்புக் கட்டுவார்.

எட்டுக் கண் விட்டெறிந்து நிர்வாகம் பண்ணும் திறமை அவருக்கு உண்டு.

மாதய்யா பொறுப்பில் காப்புக் கட்டுவது இதுவே முதல் முறை.

‘ஏதும் குத்தப்பாடு வந்துவிடாமல் நல்லபடியா முடியணும் தாயே…!’

அல்லும் பகலும் கவலைப்பட்டார் மாதய்யா.

முதல் நாள் காருடையான் தெரு மண்டகப்படி.

காருடையான் தெரு சிலம்பாட்டத்துக்குப் பெயர் போனது.

முதல் நாள் மண்டகப்படியன்று சிலம்பாட்டம்தான் சிறப்பு.

அந்தனூர் சிலம்பாட்டம் பார்க்க வெளிநாட்டவர்களை திருச்சி ஸ்டார் ஓட்டல்களில் இருந்து அழைத்து வருவார்கள் டூரிஸ்ட் ஏஜண்டுகள்.

அவ்வளவு பிரசித்தம்.

முதல் நாள் மண்டகப்படியன்று அக்கிரகாரம் தெருவுக்கு வீதி உலா வரும்.

பெரிய தெரு பெயருக்கு ஏற்றபடி பெரிய தெரு.

அந்தத் தெருவுக்கு மட்டும் இரண்டு நாட்கள் மண்டகப்படிக் கட்டளை உண்டு.

வழக்கப்படி, இரண்டு நாட்களில் முதல் நாள் மட்டும் அக்கிரகாரம் தெருவுக்கு ஊர்வலம் வந்தது. மறுநாள் வரவில்லை.

மூன்றாம் நாள் முறை வாணியத்தெருவினது…

நான்காம் நாள் வேளாளர் தெரு…………..

பறவைக் காவடிகள், சக்திக் காவடிகள், அலகுக் காவடிகள், பால்குடம் எடுத்தல்… இது போல,

எந்த நாளில் எந்த சாங்கியம்…

எந்தத் தெரு மண்டகப்படி…

எந்தத் தெருவில் தொடங்கும்…

எந்தத்தெருவிற்குச் செல்லாது…

என்றெல்லாம் எழுதப்படாத சட்டங்கள் பல உண்டு.

எந்த முறைகளையும் மாற்றாமல் ஊர்ச் சட்டதிட்டங்களை முழுமையாக மதித்து, விமரிசையாய் நடைபெற்றுக்கொண்டிருந்தது எல்லையம்மன் திருவிழா.

காப்புக் கட்டிக் கொள்பவர்களைப் போலவே, தீ மிதிக்க நேர்ந்தவர்கள், காவடி எடுப்பவர்கள், பால்குடம் சுமப்பவர்கள் என எல்லோரும் காப்புக் கட்டு நாளன்று, பூசாரியின் கையால் மஞ்சள் வஸ்திரம் வாங்கிப் போனார்கள்.

இந்தப் பத்து நாளும் இவர்களும் கவிச்சை, போகம் இன்றி சுத்தபத்தமாக இருந்து விரதம் காத்தார்கள்.

விரதம்காக்காதவர்களை ‘தீ…மிதிக்காதே…’ என்று எச்சரித்துவிடுவாள் எல்லையம்மா.

அம்மன் உத்தரவை மீறினால் விசுவநாதக் கொத்தனுக்கு நேர்ந்த கதிதான்.

விசுவநாதக் கொத்தன்.

தெய்வ நம்பிக்கையே இல்லாதவன்.

“வேண்டாம்… வேண்டாம்…”

பூசாரி எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.

காதில் வாங்கவே இல்லை விஸ்வநாதன்.

“நான் தீ மிதிக்கத்தான் மிதிப்பேன்…”

வீம்பு செய்தான்.

காப்புப் கட்டிக்கொண்டான்.

பூசாரியிடம் மஞ்சள் வஸ்திரம் வாங்கிக் கொண்டான்.

வாங்கிக்கொண்டானே தவிர அதை அணியவில்லை

எந்த விரதத்தையும் அனுசரிக்கவும் வில்லை.

அவன் முறை வந்தபோது தீக் குழிக்குப் போனான்.

அதுவரை யாரும் பார்க்காத ஒரு சின்னஞ்சிறு பெண் குழந்தை… அவனுக்கு முன்னேவந்து நின்றது.

“நீ… தீ மிதிக்காதே…!”என்று சொல்லிற்று.

“சரி… மிதிக்கல…! நீ போ பாப்பா…!” என்று அலட்சியமாகச் சொல்லி அனுப்பிவிட்டான் அந்தச் சிறுமியை.

கேலியும் கிண்டலுமாகச் சிரித்தபடியே தீக்குழி நோக்கிச் சென்றான்.

குழியில் கால் வைக்கும் நேரம் தன்னை யாரோ இழுப்பது போல் உணர்ந்தான் விசுவநாதன்.

ஆனாலும் முரண்டு பிடித்துக்கொண்டு கையை உதறித் தள்ளிவிட்டு இறங்கப் போனான்.

பொதேரென்று தீக்குழியில் விழுந்தான்.

இந்தக் கதையை தீமிதிக்குச் செல்பவர்களை நிறுத்தி கொஞ்சம் கூடச் சலிப்பில்லாமல் விவரமாகச் சொல்லுவான் விசுவநாதக் கொத்தன் உயிரோடு இருந்தவரை.

சொல்லும்போது அவன் உடம்பு பூராவும் நாகப்பழக்கலரில் நிற்கும் தழும்புகளை கைகளால் தடவியபடியே சொல்லுவான்.

அவன் சொல்வதைப் பார்க்கும்போது

Coleridge என்ற ஆங்கிலக் கவிஞன்

The Rime Of The Ancient Mariner என்ற கவிதையில்,

The Wedding-Guest sat on a stone:
He cannot choose but hear;
And thus spoke on that ancient man,
The bright-eyed Mariner.

திருமணத்துக்குச் செல்பவர்ளை நிறுத்தி. தன்னுடைய பயங்கரமான (Voyage experiences) கடற்பயண அனுபவத்தையும், இறைவனைப் பிரார்த்தனைச் செய்து அந்தப் பயங்கரத்திலிருந்து உயிர்த் தப்பித்த கதையையும் வலிந்துச் சொல்வாரல்லவா…

அது போலவே இருக்கும் விசுவநாதக் கொத்தன் சொல்வது.

விசுவநாத கொத்தனாரின் உடம்பு பூராவும் முட்டு முட்டாக நாகப்பழ நிறத்தில் இருக்கும் தீப்புண் வடுக்கள்.

இதைப் பார்ப்பவர்கள் நிச்சயம் தப்பு தண்டா செய்யவே மாட்டார்கள். விரதங்களை முறைப்படி அனுசரிப்பார்கள்.

காப்புக் கட்டிவிட்டால் ஊரில் விசுவநாதக் கொத்தன் முக்கியமானப் பேசுபொருள் ஆகிவிடுவான்.

தீமிதி நெருங்க நெருங்க அவன் பற்றிய பேச்சும் அதிகமாகும். அவ்வளவு பிரசித்தம்.

“அப்பா பொறுப்பெடுத்துண்டு காப்பு கட்டியாறது. உனக்கு உத்யோகம், லீவு இதையெல்லாம் உத்தேசிச்சி, மோகனாவையும் ரஞ்சனியையும் கொண்டு விட்டுட்டுப் போ. பத்துநா இருந்து எல்லாத்தையும் பாக்கட்டும்…”

குந்தலாம்பாள் ஒரு போஸ்டு கார்டு எழுதிப் போட்டாள்.

அம்மாவின் தபாலுக்கு மதிப்பளித்து, காப்புக் கட்டுக்கு முதல் நாள் அவர்களைக் கொண்டு வந்து விட்டுப் போனான் துரை.

யானை, மயில், கிளி, சிங்கம்… இப்படி நாளுக்கு ஒரு வாகனமாக, சுற்றுப் பத்துக் கோவில்களிலிருந்தெல்லாம் வாகனங்களை இரவல் வாங்கி, எப்போதும் இல்லாத திருநாளாய் ஒன்பது நாளும் விமரிசையாக நடந்தது கண்கொள்ளாக் காட்சியானது.

இரண்டாண்டுகளுக்குப் பின் காப்புக்கட்டியதால் ஊரில் தலைக்கட்டு வரி கொஞ்சம் அதிகமாகவே விதித்தார்கள்.

ராஜாமணிக்குருக்கள்.

ஒவ்வொரு நாளும் ‘டாண்’ என்று மதியம் மூணு மணிக்கே வந்து அலங்காரத்தைத் தொடங்கிவிடுவார்.

புஷ்ப அலங்காரம் தடபுடலாய் இருக்கும்.

சாட்டை மாலை, திண்டு மாலை, வெட்டிவேர்ப் புஞ்சம், வெள்ளை மற்றும் செந்தாமரை, மரிக்கொழுந்து, மல்லிகை, முல்லை, தாழை, மகிழம்பூ, பாரிஜாதம், அரளி, கதிர்ப் பச்சை என்று பக்கதர்களால் அளிக்கப்பட்ட அனைத்தும் கலந்து ‘கம்’ மென்று அந்த வளாகம் பூராவும் மணம் பரப்பும்.

திண்டுத் துணிக்கட்டும், கறுப்புக் கயிறுகளும், வாழை நார்களும், சிம்புகளும், குச்சிகளும் ஒருபுறம் குவிந்திருக்கும்.

துணி சுற்றிய அபயஹஸ்தம், வரதஹஸ்தம், வில், அம்பு, திரிசூலம், கிரீடம், தண்டை, ஒட்டியானம்… எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் வில்வெட் துணிப் பரப்பி அதன்மேல் பளிச்சிட்டுக் கொண்டிருக்கும்

தொட்டுத்தொட்டு, தடவித் தடவி, கட்டி-அவிழ்த்து, பொருத்தம்-பார்த்து, தலைப்பு மாற்றி, தளவாடங்கள் மாற்றி, அளவு வைத்துப்பார்த்து, எட்ட நின்று கண்டு களித்து , திருப்தி இல்லையெனில் மீண்டும் அவிழ்த்துக்-கட்டி, மனதுக்குச் சரியாகப் படாததை முற்றிலும் வேறு மாற்றி…பொறுமையாக பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்து அலங்காரம் செய்வார்.

‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்ற சொலவடைக்கு இலக்கணமாக இருக்கும் அவர் அலங்காரம் செய்யும் நேர்த்தி.

கொஞ்சம் கூட அலுப்புப் படமாட்டார்.

பார்த்துப் பார்த்து அனுபவித்து அழகாய் அலங்காரம் செய்து முடிக்க மணி ஏழு ஆகிவிடும்.

கையெழுத்து மறையும் நேரம், ஆறு ஆறரைக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் விளக்கு வந்துவிடும்.

அதன் வெளிச்சத்தில் எட்ட நின்று ஒரு முறை அலங்காரத்தைப் பார்ப்பார்.

எதிலாவது திருப்தி இல்லை எனில் அந்த இடத்தில் சின்னச் சின்ன நகாசு வேலைகளைச் செய்து, சாதாரணக் கண்களுக்குத் தப்பு தெரியாமல் மறைத்து விடுவார்.

ஒன்று மட்டும் உறுதி.

ராஜாமணிக்குருக்கள், தனக்குத் திருப்திப் படும் வரை அலங்காரம் செய்தபிறகுதான் ஊர்வலத்திற்கு அம்பாளை எடுத்துச் செல்ல அனுமதிப்பார்.

ராஜாமணிக்குருக்கள், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி தேவஸ்தானத்தில் பல வருஷங்கள் இருந்தவர்.

அலங்காரம் செய்வதில் நிபுணர் அவர்.

ஒவ்வொரு நாளும் 7 மணிக்கெல்லாம் கோவில் வாசல் களை கட்டிவிடும்.

கூட்டம் கூடி விடும்.

அலங்கரித்த அம்பாளை சந்நிதியிலிருந்து கோவில் வாசலில் நிற்கும் சப்பரத்தட்டிக்குப் கொண்டு போய் சேர்த்தல்தான் அடுத்த எபிசோட்.

பொது இடம், பொதுக்காரியம் என்பதால், ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

எல்லாவற்றையும், காதில் வாங்கியும் வாங்காமலும் தீபாராதனை முடித்து, மாதய்யா தலையில் பரிவட்டம் கட்டினார் பூசாரி.

கைத்தலத்தில் வைத்துக் கட்டிய அம்பாளை நான்கு பேர் தூக்கி எடுத்து வந்து சப்பரத்தில் வைத்தார்கள்.

சப்பரத்தட்டியின் கொக்கிகளோடும் வளையங்களோடும் சேர்த்து நூல் கயிற்றால் உறுதியாகக் கட்டுவான் அதைக் கட்டச் தெரிந்த, வழக்கமாய்க் கட்டும் முருகானந்தம்.

“சீக்கரம் ஆவட்டும்…” என்று யாராவது சொல்லிவிட்டால் அவ்வளவுதான்.

“எனக்குத் தெரிஞ்சது இவ்ளோதான்.. வா நீ வந்து கட்டு…” என்பான்

கோபித்துக்கொண்டு பாதியில் இறங்கிப் போய்விடுவான்.

ஆளாளுக்குப் போய் அவனைக் கூப்பிடுவார்கள். அவனோ முறுக்கிக் கொள்வான்…

“நீ கட்டு கெடக்கு… அவன்தான் ஏதோ சிறு பிள்ளைத்தனமா பேசிட்டான்…” என்பது போல எதையாவது சொல்லித்தான் அவன் வயதொத்தவர்கள், அவனைச் சமாதானப் படுத்தி அழைத்து வருவார்கள்.

இப்படியெல்லாம் எதிர்பாராத பிரச்சனைகளும், சிக்கல்களும், சிணுங்கல்களும், வருத்தங்களும், வார்த்தைத் தடிப்புகளும், கோபதாபங்களும், முறுக்கல்களும், முனகல்களும், கிறுக்கல்களும், வைராக்கியங்களுமாக…ஒரு சவாலாகத்தான் இருக்கும், இருந்தது ஒவ்வொரு நாளும்

‘தேருக்கு உள்ள சிங்காரம் அதுக்கேத்த அலங்காரம்’ னு சும்மாவா சொல்லி வெச்சாங்க.

எல்லாம் முடிந்து புறப்பட ரெண்டு பங்கு நேரம் கூட ஆகிவிடும் சில நாட்களில்.

வெண்கொற்றக் குடைகளும், ஆயக்கோல்களும்…

ஒத்தைக் கால், மூன்று கால், ஐந்து கால், சந்த்ரவளையக்கால், சக்கரக்கால் என தினுசு தினுசாக எறியும் தீவட்டிகளின் ஆடி அசையும் வெளிச்சமும்

தலையில் சுமந்து வரும் பெட்ரோமாக்ஸ்களின் பளீர் என்ற ஒளியும்….

ஆங்காங்கே விடும் வாணவேடிக்கைகளின் வண்ணங்களும்…

வீதி உலாவின்போது உருவாக்கும் ஒளிநிழற் காட்சிகள் கண்களைக் கொள்ளை கொள்ளும்.

தவில், நாயனம், செண்டை, பம்பை, எக்காளம், உடுக்கை, கொம்பு… எனப் பல்வேறு வாத்தியங்களின் இசை காதுகளுக்கு விருந்தாகும்.

ஒவ்வொரு நாள் மண்டகப்படிக்கும் எந்தத் தெருக் கட்டளையோ அதன் தலையாரியைப்போய் அழைக்கவேண்டும்.

அவர் சரியான நேரத்தில் வரவில்லையென்றால் அவர் வரும் வரை அபிஷேகம் செய்யாமல் காத்திருக்க வேண்டும்.

மாதய்யா ரொம்பவே தவித்துப் போய்விட்டார்.

காலம் நேரத்தில் மிகவும் கண்ணும் கருத்தாகவும், கணக்காவும் கரெக்டாகவும் இருக்கும் மாதய்யாவுக்கு இது ஒரு சோதனையாகத்தான் இருந்தது.

“இதோ பின்னாடியே வரேன் போங்க..!” என்பான். வரமாட்டான்.

பின்னாலேயே ஆள் விட்டுப் பார்த்து வரச் சொன்னால், “அவரு வீட்ல இல்லீங்க… அப்பவே…. புறப்பட்டுட்டாருங்க…”

சேதி வரும்.

தலையாரி, கோவிலுக்கும் வராமல், வீட்டிலும் இல்லாமல் எங்காவது நின்று மாட்டுத் தரகு பேசிக்கொண்டிருப்பான்.

‘நமக்காகச் சாமி காத்திருக்கலாமா…?’ என்கிற அச்சமோ, லஜ்ஜையோ சிறிதும் இல்லாமல், தாமதமாக வந்து இயல்பாக நிற்பான்.

அவனை முறித்துக் கொள்ளவும் முடியாது. கொஞ்சம் அப்படி இப்படிப் பேசிவிட்டால், “மண்டகப்படியை வேணா நிறுத்திக்கிடுங்க…” என்பான்

“ஒக்காந்த எடத்துல காசு சம்பாரிக்கறவன் இல்ல நான் … நாலு எடத்துல தரகுப் பேசிப் பொளைக்கறவன்.”

“ரெண்டு நிமிசம் தாமசமா வந்ததுக்கு இப்பிடி அவமானப் படுத்துறது மொறையா…? ”

விதண்டாவாதம் பேசுவான். ஊர் கூட்டுவான்…

சில தெருத் தலையாரிகள் சரியான நேரத்துக்கு வந்துவிடுவார்கள்.

“தீபாராதனை காட்டலாமுங்களா…?”

பூசாரி மாதய்யாவைக் கேட்பார்.

மாதய்யா தலையாரி கோஷ்டியைக் கேட்பார்.

அவர்கள் பட்டும் படாமலும் தலையாட்டுவார்கள்.

“எல்லாரும் வந்தாச்சா?” சம்பிரதாயமாய்க் கேட்பார்.

“இன்னாரு வரலைங்க…!” குறிப்பிடுவான் ஒருத்தன்.

“அவரு வந்துரட்டுமே…! தெருவுல முக்கியமான தலை அவரு… வரட்டுமே…” என்று சிக்கவைப்பார்.

ஆமோதிப்பும் எதிர்ப்புமாய் ஒரு நாடகம் நடக்கும்.

இந்த மாதிரி நேரங்களில் பக்கிரி அய்யாவாக இருந்தால்

“நீங்க கற்பூரம் காட்டுங்க பண்டாரம்…” என்று உத்தரவு கொடுப்பார்.

எது வந்தாலும் சமாளிப்பார். அதெல்லாம் ஒரு காலம்.

ஏழு மணிக்கு ஊர்வலம் புறப்பட்டால் ஒன்பது தெருவும் சுற்றி வருவதற்கு விடிகாலை மூணு மணி ஆகிவிடும்.

அப்புறம் அலங்காரம் கலைத்து விக்கிரகத்தை கொண்டு போய் மூலஸ்தானத்தில் வைக்கவேண்டும்.

மூன்று கதவுகளையும் சாத்தித் தாழ்ப்போடவேண்டும்.

ஒன்பது பூட்டுக்களால் மூன்று கதவுளைப் பூட்டும் வரை இருக்கவேண்டும்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்தால் ஒரு இரண்டு மணி நேரம் தூங்கலாம்.

ஏழு மணிக்குப் புறப்பாடு தொடங்கினால்தான் இதெல்லாம்…!

ஒரு நாள் கூட ஏழு மணிக்குப் புறப்பட்டதாக சரித்திரம் இல்லை.

யாராலாவது, எதனாலாவது, தவிர்க்கமுடியாமல் தாமதமாகிவிடும்.

ஒரு நாளைப் பார்த்தாற்போல் இரவு ஒன்பது மணிக்கு மேல்தான் புறப்பட்டது.

கோவிலைப் போய் அடையும்போது மறுநாள் பகல் எட்டு மணி ஆகிவிடுகிறது.

கதவு பூட்டும்போது காலை ஒன்பது ஆகிவிடுகிறது.

ஒன்பதரை மணிக்கு அன்றைய மண்டகப்படிக்கான அபிஷேகம் நடக்க வேண்டும்.

மாதய்யா கோவிலில் இருந்து நேரே காவிரிக்குப் போய்த் திரும்பி, வீட்டில் குந்தலாம்பாள் தரும் அவல் கஞ்சியைக் குடிப்பார்.

தூக்கம் வந்து கண்கள் செருகும்.

தூங்கிவிட முடியுமா…?

ஒரு பத்து நிமிஷம் தாமசமாய்த்தான் கோவிலுக்குப் போய்விடமுடியுமா…?

எவனாவது ஒன்றுக்கும் உதவாத, நயா பைசாவுக்குப் புண்ணியமில்லாத, திண்ணைத் தூங்கிச் சோம்பேரிப் பயல்… முகம் காட்டுவான்.

“காலத்துல வரமுடியாதவங்க ஏன் பொறுப்புக் கட்டிக்கணும்…”

சுருக் என்று பேசிவிடுவான்.

அவனை எதிர்த்துப் பேசிவிட்டாலோ… அவ்வளவுதான்.

அந்தத் தெருவே கூடி ‘எச்சில்கலைக்கு இச்சகம் பேசுவது (உயர்வாய்ப் பேசுவது) போல்’ சோப்ளாங்கிப் பயலுக்கப் பரிந்து பேசும்.

தூக்கமில்லாமல், சரியான நேரத்துக்குச் சாப்பாடு இல்லாமல், ஓடி, ஆடி, அலைந்து ஒன்பது நாள் திருவிழாவைப் முடித்துவிட்டார் மாதய்யா…

ஒன்பதாம் நாள் தடபுடலாக காளியாட்டம் நடைபெற்றது. பச்சைக் காளி, பவளக்காளி இரண்டும் போட்டிபோட்டுக் கொண்டு நல்ல வாக்கு சொன்னது.

ஒன்பதாம் நாள்.

தீமிதிக் குழிக்கு எரிபொருள்கள் வரும் நாள்.

இரண்டு வருடங்களாக தீமிதி நடக்காததால், தேவைக்கு அதிகமாகவே வந்து குவிந்துவிட்டன.

வீட்டில் தலைமுறை தலைமுறையாக உபயோகித்து உடைந்துவிட்ட நடைவண்டி, உரல், உலக்கை, ஊத்துப் பட்டை, பூரிக்கட்டை, மாட்டுத் தீவனத் தொட்டி, மத்து, கொட்டாப்புளி, தூளிக்கட்டை, வண்டிப் பார், நுகத்தடி, பரம்புப் பலகை, கலப்பைக் கட்டை…மர மரக்கால், மரப்படி போன்ற மரச்சாமான்களை வீட்டில் எரிப்பதில்லை.

தீமிதிக் குழிக்குத்தான் ஆகுதியாக்குவார்கள்.

இது மட்டுமில்லை, பழைய வீடு இடித்து புது வீடு கட்டியவர்கள், வாசல் அருகாலை தீக்குழிக்குத்தான் தருவார்கள்.

வேறு வழியின்றி கிணற்றை தூர்க்க வேண்டி வரும்போது, மூடுவதற்கு முன் அதிலிருந்து வெளியே எடுத்தப் போட்ட ‘சூராவளிக் கட்டை’.

வீட்டில் அரசு, வில்வமரம் இருந்து சாய்ந்துவிட்டால் அதையும் வீட்டில் அடுப்பெரிப்பதில்லை.

அதை வெட்டிப் பத்திரப்படுத்தி தீமிதி வரும்போது தீக்குழிக்கு அர்ப்பணிப்பார்கள்.

இரண்டு ஆண்டுகள் தீமிதி நின்று போயிருந்தததால் வழக்கத்தை விட ஒரு பங்கு அதிகமாகவே குவிந்துவிட்டது எரிபொருட்கள்.

இரண்டு மூன்று ஆசாரிகள் உட்கார்ந்து பொழுதுக்கும் வேலை பார்த்தார்கள்.

வந்திருக்கிற கட்டைகளில் ஆணி, ஸ்க்ரூ, கீல்பட்டை, பூண், வளையம், கொக்கி, என இரும்பு சம்பந்தம் இருக்கிறதா என்பதைப் பார்த்து அதைக் உளியால் கொத்திப் பிரித்து எடுத்தார்கள்.

வழக்கம்போல் எரி பொருட்களை கவனமாகக் கை பார்த்தப் பிறகு தீமிதிக் குழிக்கு எரியூட்ட அனுப்பினார்கள்.

பத்தாம் நாள்.

தீமிதி.

உச்சிகாலம் 12 மணிக்கெல்லாம், மூலஸ்தானத்தில் தீபாராதனை செய்த கற்பூரத்தைக் கொண்டு வந்து தீமிதிக்குழி பற்றவைத்தார் பண்டாரம்.

எரிய எரிய விறகுகள் போட்டார்கள் ஒரு கோஷ்டியினர்..

அருகில் அண்டாவில் நிரம்பியிருந்த தண்ணீரைக் குவளையால் எடுத்துத் தலையில் கொட்டிக் கொண்டார்கள்.

தீக்குழி அருகில் சென்று எரி பொருட்களைப் புரட்டி விட்டார்கள்.

எரிந்த கட்டைகளை முரட்டுப் பச்சைக் கழி கொண்டு அடித்து நெருப்புப் பூக்களாக்கினார்கள்.

மூன்று மணிக்கு வீதி உலா கிளம்பிய எல்லையம்மன் ஆறு மணிக்கு வருவதற்குள் தீக்குழி பூக்குழியாகத் தயாராக வேண்டும்.

வெள்ளைவெளேர் என்ற நந்தி வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட எல்லையம்மா ஒட்டமாய் ஓடி அந்தனூர் பூராவும் அருள்பாலித்தாள்.

படைப்பவர்களும், தீபாராதனை காட்டுபவர்களும், சிதர் தேங்காய் உடைப்பவர்களும், மாவிளக்கு போடுபவர்களும்…. பத்து பதினைந்து வீடுகளுக்கு முன் அம்மன் வரும்போது அவரவர்களே படைத்தார்கள்.

தலைவாழை இலையில் படைத்து வைத்த மாவிளக்கு மாவை நான், நீ… என்று போட்டி போட்டுக்கொண்டு இழுத்தார்கள்.

இலை கிழிந்து மாவெல்லாம் சிதறிவிட, அப்படியே போட்டுவிட்டு ஓடினார்கள்.

அடுத்தடுத்த வீடுகளில் வைக்கும் மாவையும் சிதறடிக்க அவசரமாய் ஓடினார்கள்…

இப்படி ஓட்டமாக ஓடி வரும்போது வாரையில் ஆள் மாற்றம் செய்து கொண்டார்கள்.

எக்குத் தப்பாய் ஒரு வாரையில் நோஞ்சான் தோள்களாகச் சேர்ந்துவிட்டது.

ஓட்டத்துக்கும் பாரத்துக்கும் ஈடு கொடுக்க முடியாமல் நோஞ்சான்கள் தடுமாறியதில் அந்த வாரைப் பக்கமாக வாகனம் சாய்ந்துவிட்டது.

எப்படியோ சாமர்த்தியமாக அருகில் இருந்த லாந்தர் கம்பத்தில் சாய்த்து சமாளித்துவிட்டார்கள்.

ஆயக்கோல் நிறுத்தி, லாந்தர் கம்பத்தில் மோதி உடைந்த ரிஷபத்தின் காலைச் சிம்பு வைத்து கட்டி ஒப்பேற்றினார்கள்.

ரிஷபத்தின் கால் உடைந்ததால் ‘தெய்வ குத்தம்’ இருக்கு” என்று பேசிக்கொண்டார்கள் ஒரு சாரார்.

சிம்பு வைத்துக் கட்டி ஒப்பேற்றியதால், ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு…” என்ற பேச்சுக்கும் குறைவில்லை…

சாபமும் சமாதானமுமாகப் பேசியது ஊர்.

ஆறு ஆறரைக்குள் தீமிதி தொடங்கிவிடவேண்டும்..

ஐந்தரை மணிக்கெல்லாம் எரிந்துகொண்டிருக்கும் கட்டைகளைத் தட்டித் தட்டிக் கரையேற்றினார்கள்.

அதைத் தண்ணீர் கொட்டி அவித்தார்கள்.

கொள்ளிக் கட்டைகளை கோணிச் சாக்கில் போட்டுத் தூக்கிப்போய் ஜனங்கள் கால் வைக்காத இடத்தில் அப்புறப்படுத்தினர்.

மூங்கில் கழியின் முனையில் பொருத்தப்பட்ட விரல்களை மடித்தாற்போல் வளைந்த இரும்புக் அருவலால் செவ்வகத் தீக்குழியில் இருந்த நெருப்புக் கட்டிகளை சீர் செய்தார்கள்.

ஜ்வலிக்கும் செம்மலர்களைக் குழியில் பரத்தியது போல ரம்யமான காட்சியாக இருந்தது தீக்குழி.

செவ்வகத் தீக்குழியும் அதை அடுத்த சதுரப் பால் குழியும் பார்க்க, சிவப்புக் கோட்டுக்குக் கீழ் வெள்ளைப் புள்ளியிட்ட ஆச்சரியக் குறிபோல அமைந்திருந்தது.

அவ்வப்போது அடிக்கும் காற்றின் திசையில் அனல் வீசியது.

புது மணம்பெண் (blushing of the Bride) முகத்தில் கை வைத்து மறைத்து நாணிச் சிவப்பது போல அவ்வப்போது அங்கங்கே நெருப்பூக்கள் (நீறு பூத்து) சாம்பல் போர்த்தியபடி நாணின.

தீக்குழியின் இரண்டு பக்கமும் ஏறும் தரைச் சூட்டைத் தணிக்க பச்சை மட்டைகள் பரத்தப்பட்டன.

தீ மிதித்து வந்தவர்களின் பாதங்களை நனைக்க பால்குழியில் பால் நிறைந்திருந்தது.

அவ்வப்போது ஊற்ற பெரிய அண்டாவில் பால் நிறைந்திருந்தது.

ஊர் முழுதும் சென்று தரிசனம் தந்துவிட்டு எல்லையம்மன் நிலைக்குத் திரும்பியபின் தீபாராதனை காட்டினார் பூசாரி.

வேட்டுச் சத்தம் வானைப் பிளந்தது.

தீ மிதி துவங்கியது.

பட்டு ரோஜா, பன்னீர் ரோஜா, செம்பருத்தி இதழ்கள் கல்யாண முருங்கைப்பூ இதழ்கள் என சிவந்த நிறப் பூக்களால் விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளத்தில் நடப்பதைப்போல முதலில் நடந்து வந்தார் கரகம் ஏந்திய கனகசுந்தரம்.

தொடர்ந்து முன்பே தயார் செய்துள்ள வரிசைப்படி தீ மிதித்தனர் பக்தர்கள்.

பதினோராவது நாள்.

விடையாற்றி

சிவந்த வெட்டுக்குதிரையில் சூலபாணர் புறப்பாட்டார்.

பூசாரி சூலத்தைத் தாங்கியபடி சென்றார்.

குருத்தோலையில் முடைந்த கிளிகள், பூக்கள், மாவிலைக் கொத்து, கிழிந்துவிட்ட குறுத்தோலை, பாக்குக் குலை, தேங்காய்க் குலை, இளநீர் குலை, பலவகை வாழை மரங்கள் குலைகளுடன், எனச் வெகு விமரிசையாக, சிறப்பாக, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட காவிரிக்கரை சூலப்பந்தலில் சூலத்தை ஆவாஹனம் செய்தனர்.

சூலத்தோடு கூடவே வந்த ஒன்பது தெரு நாட்டாமைகளும் சுமந்து வந்த முளைகட்டிய நவதானியங்களும் காவிரி நீரில் இறைக்கப்பட்ட பின், மாதய்யா, தலை முழுகிவிட்டு மடியாக எடுத்து வந்த நீரை சூலத்துக்கு அபிஷேகம் செய்தார் பூசாரி.

சூஷபானருக்கு முறைப்படி படையல் போட்ட பின்

மீண்டும் சூலத்தோடு கோவிலுக்குச் சென்றார்கள்.,

காப்பு அறுத்துவிட்டார் பூசாரி.

கோவில் மண்டபத்திலேயே தலையாரிகளை உட்காரச் சொல்லி, தயாராக வைத்திருந்த கணக்கு வழக்குகளை விவரமாகச் சொல்லி ஊர் பொதுவில் ஒப்படைத்தார் மாதய்யா.

“நல்லபடியா நடத்திக்கிட்டே தாயே…” நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.

வீட்டுக்கு வந்து படுத்தவர்தான்.

உடம்பு அனலாய்க் கொதித்தது.

ஜீவபுரத்திலிருந்து டாக்டர் அருணகிரி வந்து தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்தார்.

ஜூரம் தணியவே இல்லை.

மூடிய கண் திறக்கவே இல்லை.

ஆகாரம் எதுவும் செல்லவில்லை.

பட்டகசாலையின் நடு அங்கணத்தில் அஸ்மானகிரி மஞ்சத்தில் அசைவற்றுக் கிடந்தார் மாதய்யா.

குந்தலாம்பாள், மோகனா, ரஞ்சனி மூவரும் டாக்டர் என்ன சொல்லப்போகிறாரோ எனக் கவலையோடு நின்றனர்

“மனுஷ யத்தனத்துல எதுவும் இல்லே…” கைவிரித்தார்.

“………………………..”

‘எல்லாம் பகவான் செயல்’ என்பது போல விரித்த கையை உயரே தூக்கினார் டாக்டர் அருணகிரி.

– தொடரும்…

விகடன் மின் இதழான மை விகடன் இதழில், 02.05.2022 அன்று கலியன் மதவு என்ற சமூக நாவல் தொடங்கித் தொடர்ந்து 28.01.2023 ல் அதை நிறைவு செய்யும் வரை, அதைச் சிறப்பாக வெளியிட்டு ஊக்குவித்த ஆனந்த விகடன் ஆசிரியர், மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – ஜூனியர் தேஜ்

இயற்பெயர்: வரதராஜன் அ புனைப்பெயர்: ஜூனியர் தேஜ் ரத்த வகை: O Positive பிறந்த தேதி: 04.06.1962 குடும்பம்: மனைவி, மகன், மருமகள் பணி: உதவித் தலைமை ஆசிரியர் (பணி ஓய்வு ஓய்வு பெற்று இப்போது பணி நீட்டிப்பில். 31 மே 2023 ல் ஓய்வு) கல்வித் தகுதி: MA(English).,M.Sc (Counseling Psychology)., B.Ed., CLIS., முதல் ஜோக்: ஜூனியர் விகடன் 1980 களில், சரியான தேதி இல்லை முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *