கலங்காத கண்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 1,933 
 
 

அந்தக் காட்சியைக் கண்டதும் அப்துல்காதர் திகைத்தே போனார்.

அவருடைய எண்ணங்கள் யாவும் ஒன்றாய் திரண்டு, பஞ்சுக்கூட்டம் போல் எங்கேயோ மெதுவாக மிதந்து, மிதந்து சென்று கொண்டிருந்தன.

உணர்ச்சிகள் எதுவுமற்ற மரக்குற்றி போல அப்படியே ஆடாமல் அசையாமல் பேசாமல் நின்றார் அவர்.

‘காசீம்!…..’

அவரையும் அறியாமல் அதரங்கள் மெல்ல அசைந்து இந்தப் பெயரை உச்சரித்துப் பார்த்தன. நினைவுத்திரையில் அவனுடைய அழகு நிறைதோற்றம் வந்து நிழலாடியது.

‘மயங்கும் கண்கள்…… சுருண்ட கேசம்…. இராச நெற்றி…. வட்ட வடிவமான முகம்….. செவ்வானச் சாயை…..’

அப்துல்காதருடைய உடல் மெல்ல, மெல்ல வெல வெலுப்பைக் குறைத்துக் கொண்டன. சிலிர்த்த உரோமங்கள் படமெடுத்த பாம்புபோல ஒடுங்கித் தோலுடன் சாய்ந்து கொண்டன. உள்ளமும் குமுறலைத் தணித்தது…….

தமது காலடியில் மூச்சற்றுப் பேச்சற்றக் கிடந்த காசீமை ஒருமுறை பார்த்தார் அப்துல்காதர். அவருடைய மார்பு ஒரு தடவைக் கிருதடவையாக விம்பிப் புடைத்தது.

‘இந்தக் காசியா……’ இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டான்…. சே! நேர்மை. நியாயம், நீதி, எதுவுமே அற்ற உலகம்!…. முரட்டுச் சாதிங்களட்டை இருந்தால் எவனுக்கும் இந்தக்கதிதான் ஏற்படும்!……. நினைவு தடுமாறியது!

அப்துல்காதர் அரசியலைப்பற்றி நினைத்துக் கொண்டதும் அவருடைய உள்ளம் உடல் எல்லாம் நடுங்கின. அந்த நேரத்தில் அப்படியே நின்றால்…… யாராவது தன்னைப் பார்த்துவிட்டால்……

காசிமுக்கு நடந்த அதேநிலைதான் தமக்கும் எற்படலாமென்று எண்ணினார்.

பழையபடி அவருடைய நிலை மிகப் பரிதாபமாக இருந்தது.

‘இதென்ன?……. காலெல்லாம் கசியுது……’

தம்மையே கேட்டுக் கொண்டு குனிந்து பார்த்தார். வீதி நீளம் நாட்டப் பெற்றிருந்த தெரு விளக்குகளில் ஒன்று அவருக்கு உதவியது.

ஓளியின் உதவியுடன் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தார் அப்துல்காதர்.

‘ஐ……ய்……யோ!…….ஹல்லா!……’

அவருடைய வாய் அலறிவிட்டது!

அங்கே.

‘தார்’ வீதியிற் செங்குருதி பாய்ந்து கொண்டிருந்தது. குண்டுகள் பாய்ந்து காசிமின் உடலைக் கிழித்திருந்தன.

இரத்த ஆறு ஓடியது!

நெருப்பை மிதித்தவர்போல் துள்ளி மறுபுறம் வந்து காசிமைத் தூக்க முயன்றார்.

அவரால் முடியவில்லை!

முதுமையின் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருந்த அப்துல்காதரால் கட்டிளங் காளையான காசிமைத் தூக்க முடியவில்லை.

அந்த ஐந்து சந்தியில் எந்த வீதியில் மனித மிருகங்களுடைய வண்டி வந்து கொண்டிருக்கும் என்று அவரால் சரியாக நினைத்துப் பார்க்க மூடியவில்லை. அந்த இடத்தைவிட்டு ஓடி தம்முடைய உயிரைக் காப்பாற்றலாமே? என்றாலும் மனம் ஒருபடவில்லை.

‘வாழ வேண்டிய பொடியன் இந்தா பொயிட்டான்….. நெறிகெட்ட அந்த நீசங்களாலை…… இனிமேல் நமக்கெதுக்கு வாழ்வு?…. கொஞ்சம் முந்தி என்னோட என்னமாதிரியெல்லாம் கதைச்சான்?……. இந்த இன்னைக்கு…..’

அப்துல்காதரால் மேற்கொண்டு எதையும் சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. நினைவுத்திரையில் அவை மறைந்து கொண்டிருந்தன.

பதிலாக.

அடுத்த திரை விழுந்தது! தமிழர்கள் தம்முடைய உரிமைக்காக அகிம்சாவழிப் போராட்டம் நடத்திய வேளையில்……. அதற்கு வயது ஐம்பத்தொன்பது நாட்களாக இருந்தபோது….. அவசரகாலச்சட்டமும் ஊரடங்குச்சட்டமும் ஒன்றாக நாற்பத்தெட்டு மணித்தியாலங்களிற்கு பிரகடனப்படுத்தப்பட்ட அதேநாளில்……

மத்தியான வேளை!

அப்துல்காதர் காசிமைக் கண்டார். அவன் அவருடைய இனத்தவன் தான்….. இருந்தாலும் இதற்கு முன் அவர் அவனுடன் முகம் கொடுத்துக் கதைத்திருக்கவும் மாட்டார். ஐந்து சந்தி என அழைக்கப்படும் அந்த சோனக தெருவின் ஒரு மூலையில் அவர் இருப்புக்கடை வைத்திருக்கின்றார்.

அந்த வழியாற் போய்க்கொண்டிருந்த காசிமைக் கண்டதும் அவருக்குப் புதிய பிரச்சனை தோன்றியது. என்றும் இல்லாதவாறு அவனுடன் கதைக்க வேண்டும் போன்ற ஆசையும் அடிமனதைக் கிளறியது.

‘தம்பி…. காசிம்!….. எங்கேப்பா போறா?’

‘எனக்கு எங்கே போகக்கிடக்கிறது காக்கா? சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருக்கிறார்களே!….. அந்தப் பெருமக்களுக்குச் சாப்பாடு எடுத்துக் கொடுக்க வேண்டும். அதுதான் போகிறேன்……
நேரமில்லை!….’ என்றவண்ணம் தொடர்ந்து நடந்தான் காசிம்.

‘வயதில் முதிர்ந்தவர் வழியிலே கதை கேட்கிறாரே!…… நின்று பதில் கூறிவிட்டுப் போவோம்! என்று எதுவித எண்ணமும் காசிமிடம் குடிகொள்ளவில்லை.

‘கடமை அங்கே காத்திருக்கிறது….. பொழுதுபோக்க என்னை மறித்து அழுது கொண்டிருக்கும் இவருடன் எமக்கென்ன எதை?…….’

இப்படியும் காசிம் நினைக்கவில்லை.

நேரத்தைப் பார்த்தான் காசிம்!

ஒரு மணி!

‘ஐ…..ய்….யோ! ஆண்டவனே! அங்கே அவர்கள் என்ன கஷரப்படுகிறார்களோ? நான் இங்கே நின்று வீணாக நேரத்தைப் போக்காட்டுகிறேன்…..’ என்ற ஒரே எண்ணந்தான் அவனிடம் வந்து போகிறது.

மனதையும் முந்திக் கொண்டு அவனுடைய கால்கள் கச்சேரி வாசலை நோக்கி வந்துவிட்டன.

மக்கள் வெள்ளமே கச்சேரியின் வாசலிலும், மதிலிலும் வந்து முட்டிநின்றது. வீதி நிரம்பி வழிந்தது. அந்த வெள்ளத்தினிடையே கட்டுமரங்கள் சிலவற்றைப்போல வைத்த விழி வாங்காமல் சில இராணுவவீரர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களைக் காண காசிமுக்கு என்ன செய்தென்று புரியவில்iலை. பற்கள் ஒன்ரோடொன்று உராய்ந்தன. கண்கள் அகலவிரிந்து… படர்ந்தன.

‘இந்த அறப்போர் தொடங்கப்பட்ட நாளில் மண்டை உடைபட்ட தலைவர்கள் எத்தனைபேர்? மானம் மரியாதை எதுவுமின்றி மாடு, ஆடுகளைப்போல் அடிபட்டவர்கள் எத்தனை?…உடைபட்பவர்கள் எத்தனை?…எத்தனை?’

காசிம் தலையே சுழல்வது போன்ற நினைப்பு!…… ஒரு மூச்சு அடிவயிற்றில் பொங்கி வெளியே வழிந்தோடியது. கவலையில் பாதி….

காசிம் எல்லா வேலைகளையும் முடிந்து வீடு திரும்ப நன்றாக இருட்டிவிட்டது.

வழமைபோல் அப்துல்காதர் தம்முடைய கடையைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்றார். காசிமைக் கண்டதும் அவருடைய மனம் ஒருவித கிளு கிளுப்பை உணர்ந்தது. அகத்திலே ஒருவித மலர்ச்சி!…….

‘வாப்பா! வா! எல்லாம் முடிஞ்சு போய்ச்சா….. இப்ப என்னதான் நடக்கபோகுது?…. அவர்கள் உங்கடை உரிமையை கொடுக்கத்தான் போறாங்கள் என்ன?’

காசிமுக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை! அடக்கமுயன்றான், முடியவில்லை.

‘இந்தா காக்கா எனக்கு மட்டும் இரத்தம் துடிக்குதில்லை. இலங்கையில்….. இந்தியாவில் ஏன்? இந்த உலகத்திலுள்ள அத்தனை தமிழருடைய இரத்தமும் துடிக்கிறது. மொழிக்காகத் தன்னுடைய உயிரையே தியாகம் செய்ய எந்த மானமுள்ள தமிழனும் மறுக்கமாட்டான்! அவர்கள் எங்களுடைய உரிமைகளை எங்களிடமே விடத்தான் போகிறார்கள். இன்னும் இரண்டொரு நாளையில் அதுவும் தெரியத்தான் போகிறது!’.

‘தம்பி! நான் சொல்லுறன் என்றே வித்தியாசமா நினைச்சுப் போடாதே!…. நாமேன் இந்தமாதிரியான சோலிகளிலை எல்லாம் தலைபோடுவான்? அவங்க தங்கட உரிமை என்று பாடுபட்டால் பாடுபட்டுட்டுப் போகட்டுமே… யாருக்கென்ன? நீ சும்மா கிடவன்….’

அப்துல்காதர் தம்முடைய ‘தொப்பி’யால் காசிமையும் மூடப்பார்த்தார். அவருடைய நீண்டநாள் நினைவு… கனவு… எண்ணங்கள் அத்தனையுமே உடைந்து கரையும் வண்ணம் செய்தது, காசிம் சொன்னவைகள்.

‘கா…க்…கா…! எது உங்கடைய தாய்மொழி? நீங்க என்னுடன் இப்ப எந்த மொழியிலே பேசுறியள்? தன்மானம் என்ற ஒன்றிருந்தா இப்படிப் பேசுவீர்களா? அன்றைக்கு முஸ்லீம்களெல்லாம் சேர்ந்து செய்த சத்தியாக்கிரகத்தில் நீங்கள் பங்குபற்றவில்லை. இதுதானா உங்களுடைய நேர்மை? நியாயம்? இது உங்களுக்கு கண்ணியமாக இருக்கிறது. எங்களுக்குச் சரிவராது….. நாங்கள் தமிழர்கள்!…. எங்களுக்கு தன்மானம் என்ற ஒன்றுண்டு. அதுதான் பெரிது……’

ஆவேசத்தில் வார்த்தைகள் வெளிவந்தன. அவனுடைய கைகள் நடுங்கின. கால்கள் நிலையிழந்து, அவனுடைய உடலையே மண்ணில் வீழ்த்துவன போல முடங்கின. உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. கண்கள் இருண்டு கொண்டு வந்தன. எதையோ எல்லாம் பேசினான் காசிம்.

அப்துல்காதருக்கு மூக்கே சிவந்துவிட்டது. ‘என்னடா பயலே! ஒரு மாதிரி முறைக்கிறே!… உன்னுடைய இரத்தம் அப்படிச் சொல்லுது…. இண்டைக்கு ஏதோ மந்திரிசபை கூடுதாம். ஆமிகள் வந்து உன்னை ஒரு கை பார்த்தப்புறம் எல்லாம் தெரிஞ்சுக்கத்தான் போறே!’

முனிவர் ஒருவர் சாபம் போட்டால் எப்படி இருக்குமோ? அப்படியிருந்தது அவருடைய நிலை… அதே கோலம்…. அதே பேச்சு….. அதே சாட்சி!

காசிம் எதையோ சொல்ல நினைத்து அதரங்களை அசைக்கப்போனான். ஏதோ ஒருவித ஓலம் வந்து தடுத்துவிட்டது!

‘காக்கா!…… கா…..க்……கா! ஆமியள்; சத்தியாக்கிரகம் செய்து கொண்டிருந்தவங்களை எல்லாம்…. கொல்லுறாங்கள்…. எல்லாரும் திசை தெரியாமல் ஓடுறாங்கள்….’

சைக்கிளிலே ஓடிவந்த ஒருவனின் குரல் மட்டும் கேட்டது. பறை அறைபவனைப் போல மணியை அடித்துச் செய்தியையும் பரப்பியபடி ஓடிவந்தான் அவன்.

இந்த இருவரையும் கண்டு எதுவும் கூறவில்லை. முன்பு சொன்ன வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டு ஓடினான்.

காசிம் ‘காதர் காக்கா’ விடமும் எதுவும் சொல்லிக் கொள்ளாமல், கால்கள் போன போக்கில் விறு விறுவென நடந்தான்.

மனோகரா படமாளிகை வீதியில் அவன் இறங்கி நடந்ததும், அப்துல்காதர் அறைக் கதவைச் சாத்திக் கொண்டார். ஒரு நிமிடம் சென்றிருக்க முடியாது!

‘டுமீல்! டுமீல்!!

என்ற வெடிச்சத்தம் வானில் முட்டி அதிர்ந்தது. அப்துல்காதரின் காதுகள் வெடித்துவிடாத குறை….

அதனைத் தொடர்ந்து. ‘ஐ….ய்….யோ!…… அ…..ம்…..மா…’ என்று காசிம் அழகு தமிழிலே அழைத்த அந்த இறுதி வார்த்தைகளும் அவருடைய காதுகளை குத்தி அழிந்தன.

ஏதோ கொலை செய்துவிட்டவர் போல அப்துல்காதர் நடுங்கினார்.

அறைக்கதவை திறப்பதற்காக திறவு கோலைப்பற்றிய அவர் கை தானாகவே மறுத்து நின்றது. சந்தியில்…. இராணுவத்தினரின் வண்டி பறந்து கொண்டு சென்றது.

காசிம் கதறிக் கதறிச் செத்துக் கொண்டு இருந்தான். தெய்வ நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்ட அறப்போருக்கு துணை நின்ற அந்தத் தமிழ் உடலைத் துப்பாக்கிக் குண்டுகள் துளை போட்டிருந்தன.
‘அங்கிருந்த பெண் பிரசுகள் என்ன ஆனார்களோ?………. வயோதிபர்கள்…. குழந்தைகள்…. ஐ…ய்….யோ!’

ஒரு குமட்டல். காசிமின் கண்கள் இமைக்குள் மறைய துடிதுடித்தன.

‘ஆமிகள் வந்து உன்னை ஒரு கை பாத்தப்புறம் எல்லாந்தெரிஞ்சுக்கத்தான் போறா!……..’ என்ற அப்துல்காதரின் வன்சொற்கள் அவனுடைய காதுகளில் விசம் பாய்ச்சின.

கண்கள் ஒடுங்கிவிட்டன!

சமையற் கட்டுக்கள் நுழையும் பூனையைப் போல சுடுகாடாக உறங்கிக் கொண்டிருந்த அந்த ஐந்து சந்தியைத் தாண்டி வந்தார் அப்துல்காதர். கண்கள் புரண்டன!

காசிம் பிணமாகக் கிடந்த காட்சியை அவரால் கண்டுகளிக்க முடியவில்லை.

அந்தத் துப்பாக்கிக் குண்டுகளில் ஒன்று பட்டோ என்னவோ பக்கத்து வேலி பூவரசு மரத்தில் இருந்து காகம் ஒன்று கரைந்து கொண்டிருந்தது. சாதாரண கரைவா அது?

குதறல்!…. பிரிவைக் கண்டு துடிக்கும் உள்ளத்தின் குமுறல்….

அப்துல்காதர் திருப்பிப் பார்த்தார்! வேலியின் ஓரத்திலே வேறொரு காகம் செத்துக்கிடந்தது.

ஏடு எடுத்தும் படியாமல் கேள்வியால் அறியாமல்…. ஏதோ நீதிகளை எல்லாம் புகட்டும் அந்த இரு காக்கையையும் மாறி மாறிப் பார்த்தார் அப்துல்காதர். பின் – காசிமையும் பார்த்தார்…..!

அவரையும் அறியாமல் என்றுமே கலங்காத அவருடைய குழி விழுந்த கண்களிலிருந்து. இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள் மல்கி, காசிமின் உடல்மீது விழுந்து தெறித்தன!

அந்தக் கண்ணீர்த் துளிகள் உரிமைக்காகப் போராடிய அவன் உள்ளக் குமுறலை, கொந்தளிப்பை, இனிமேல்தான் தமிழைக்காக்க தியாகிகள் தோன்றப் போகிறார்கள் என்று கூறத் தணித்தனவா?

அறத்தினால் வீழ்ந்தவர்களின் எண்ணத்திற்குச் சாவுமணி அடித்தனவா?

அப்துல்காதருடைய கண்களிலிருந்து மென்மேலும் நீர் சுரந்து கொண்டிருந்தமை எதையோ ஒன்றை உண்மையெனக் கூறியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *