கலக்கம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 6,630 
 
 

“சே! என்ன வாழ்க்கை இது ? ஒரு நிம்மதி உண்டா ? ஒரு சந்தோஷம் இருக்கா?“ அறுபத்தி ஐந்து வயது முதியவர் பத்மநாபன் என்கிற பத்து , அவரது அன்றாட புலம்பல் இது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கப் போகும் வரை இதுதான் அவரது பூபாளம், தாலாட்டு!

ஆனால், அவரது மனைவி, மஞ்சுளா, இதற்கு நேரெதிர். “ அட !! நீங்க என்னங்க , எப்போ பார்த்தாலும், இப்படியே கன்னத்திலே கை வச்சு கப்பல் கவிழ்ந்தா போல இருக்கீங்க?இப்போ என்ன ஆகிப்போச்சு? உங்க பையன் வேலைக்கு போக மாட்டேங்கிறான் ! அவ்வளவு தானே ? இது என்ன பெரிய விஷயம்? ஊரிலே எத்தனை பேரு இப்படி இருக்காங்க ! இதுக்கு போய் இப்படி அலட்டிக்கிறீங்க ? “ – இது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், அவர்கள் வீட்டில் நடக்கும் வாக்குவாதம் ! . வெளியே போனாலும், ரோட்டில், நடக்கிற சர்ச்சை !

பத்மநாபனின் மகன், ஒரே மகன், செல்ல மகன், சுப்பிரமணி, சுருக்கமாக சுப்பு, ஒரு வினோதப் பிறவி. படிப்பில் கெட்டிக்காரன். வெளி நாட்டில், அமெரிக்காவில் மேல் படிப்பு படித்து, பின்னர் , அங்கேயே பெரிய வேலையிலிருந்தான். காசு பணம் நிறைய பண்ணினான். அவன் கல்யாணத்திற்கு சென்னையில் பத்துவும், மஞ்சுவும் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது விழுந்தது அவர்கள் தலையில் ஒரு இடி.

என்னமோ தெரியவில்லை, திடீரென, ஒரு நாள், சுப்பு , எல்லாவற்றையும் விட்டு விட்டு , இந்தியாவுக்கே திரும்பி வந்து விட்டான். கேட்டால், “ இந்த உலகம் அழியப் போகிறது, எல்லாரும் சுய நல வாதிகள். எங்கே பார்த்தாலும், கார்பன் டை ஆக்சைட். காற்றிலே மாசு, ரோட்டிலே தூசு !நான் படிச்ச படிப்பினாலே யாருக்கும் எந்த லாபமும் இல்லே ! பன்னாட்டு நிறுவனங்கள் , ஏழை நாடுகளை சுரண்டறாங்க ! நமக்கு மதிப்பில்லே ! அதனாலே, இந்த படிப்பும் வேண்டாம், வேலையும் வேண்டாம். காசு பணம் வேண்டாம், கல்யாணமும் வேண்டாம்! ” என்று ஒரே பிடியாக சொல்லி விட்டான்.

அப்பா பத்து கதறினார்,கத்தினார், திட்டினார், வேண்டினார். பையன் காலில் விழுந்தும் பார்த்து விட்டார். மகன் எதற்கும் மசியவில்லை. அப்பா அங்கலாய்ப்பது பிடிக்காமல், சுப்பு வீட்டிற்கு வருவதை நிறுத்தி விட்டான். வெளிநாடு,வெளியூர் என்று சுற்றுவான். எப்போதாவது வீட்டிற்கு வந்தாலும், கொஞ்ச நாள் தான். ஏதாவது காரணம் சொல்லிவிட்டு, திரும்பி ஓடி விடுவான்.

இப்போது அவனுக்கு வயது 35 . இமய மலையில் பனிப்புலி , சைனாவில் பாண்டா கரடி, திபெத்திய யாக் எருமை, மலேசியாவில் அழியும் குரங்கினம், ஆப்ரிக்காவில் மடியும் யானைகள், ஆசியா புலிகள் , இப்படி ஏதோ ஒரு உயிரினம் பற்றி, சொந்த காசில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான். ஏதோ என் ஜி ஓ வாமே ! அது மாதிரி !

சுப்புவிற்கு இலக்கியம், இயற்கை, ஆயுர்வேதம் இதெல்லாம் பிடிக்கும். இனிப்பு காரம், காபி, டீ பிடிக்காது. வைணவ ப்ரபந்தம், சைவ சித்தாந்தம், புத்தர் போதனை, கிருத்துவ கோட்பாடு எல்லாம் கரைத்துக் குடித்தவன். சுப்பு, யோகாசனம், தியானம், தினமும் காலை மாலைகளில் ,செய்வான். வித்தியாசமான ப்ரிகிருதி.

சுப்புவுக்கு, ஜாகிங் போவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், அப்பாவை , சுத்தமாக பிடிக்காது. அம்மாவை ரொம்ப பிடிக்கும் . அவன் சொல்வதை, யார் ஒப்புக் கொண்டாலும், சுப்பு அவர்களை விரும்புவான். குறை சொல்லும் உறவை, எதாவது நொண்டி சாக்கு சொல்லி ஒதுக்குவான் . அது அவன் குணம்.

அம்மா மஞ்சு மட்டும் அவனுக்கு சப்போர்ட். அவன் சொல்வது வேத வாக்கு. அவளின் அதிக பட்ச இலட்சியமே, சுப்பு போதும் போதும் என்று சொல்வதற்குள், இன்னொரு தோசை சுட்டு அவன் தட்டில் போடுவதே ! அவன் நன்றாக இருந்தால் போதும், சந்தோஷமாக இருந்தால் போதும், அதுவே அவளுக்கு போதும் ! அவளது நிலைப்பாடு ப்ரேயம்!.

இதுதான் காரணம், பத்துவின் வேதனைக்கு. மகனும் சரியில்லை, மனைவியும் சரியில்லை. ´பையனுக்கு எதுவுமே செட்டில் ஆக மாட்டேங்குதே. வேலைக்கு போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறானே? காசு பணம் இருந்தென்ன, வேலை இல்லைன்னா , வருமானம் இல்லாத கோவில் குமாஸ்தா கூட , இவனுக்கு பெண் கொடுக்க முன் வர மாட்டானே ! எந்த பெண்ணும் இவனை சீந்தாதே! “

பத்துவிற்கு, துக்கம் தொண்டை அடைத்தது. தூக்கம் கெட்டது. கலக்கத்தால், கண்ணில் குளம் கட்டியது. மன உளைச்சல், கவலை, ஏமாற்றம் அவரை வாட்டியது. உடல் நலம் குன்றியது.

இந்த வாழ்க்கை பத்துவிற்கு பிடிக்க வில்லை. உறவினரை பார்க்க விருப்பமில்லை. ‘யாராவது பையனை பற்றி ஏதாவது கேட்டு விடுவார்களோ ? என்ன சொல்வது ? பொய் சொல்லி மாட்டிக் கொண்டால், மானம் கப்பலேறி விடுமே ? நான் ரிடைர் ஆனவன், என் மகன் வேலைக்கு போய், ரிடைர்ட் ஹர்ட் ஆனவன் என்று சொல்ல முடியுமா? ‘ என்று தானாகவே ஏதேதோ கற்பனையை வளர்த்துக் கொண்டு, எல்லாரையும் தவிர்த்தார். வீட்டிலேயே முடங்கினார்.

“ என்ன சொல்லியும் இந்த சுப்பு கேட்க மாட்டேங்கிறானே? ஒரு காலேஜ் வாத்தியார், ஒரு அக்ரோ சர்வீஸ் கடை, இல்லே , அவன் விருப்பத்திற்கு ஏற்றார் போல் ஒரு சின்ன சோலார் பேனல் உதிரி பாக தொழிற்சாலை , இப்படி ஏதாவது பண்ணினால் போதாதா? காட்டிலேயும், மேட்டிலேயும், குளிர் பனியிலும், கொதிக்கும் பாலைவனத்திலும் கிடந்து அல்லாடனுமா என்ன ? பின்னாளில் , இவனுக்கு யார் துணை ? பணம் இருந்து என்ன பயன் ? எல்லாம் வியர்த்தம்! “ என்று வெந்து போவார் ஒய்வு ஒழிவின்றி.

அதுவும் அவர் வேலையிலிருந்து ஒய்வு பெற்ற பின், இதுதான் தினம், அவர் பல்லவி, அனு பல்லவி அண்ட் சரணம் எல்லாம் ! அவரது நிலைப்பாடோ ஷ்ரேயம் ! அவன் எதிர்காலம் நன்றாக இருக்க என்ன வழி ? இது மட்டும் தான் அவரது கவலை.

அன்றும் இப்படித்தான். மஞ்சுளா காபி கொண்டு வருகையில் பத்து, வழக்கம் போல தன் புலம்பலை ஆரம்பித்தார். “ மஞ்சு, சுப்பு இப்படி இருக்கானே! நீயாவது அவனுக்கு புத்தி சொல்லக் கூடாதா? அவனை ஏதாவது வேலைக்கு போக சொல்லேன் ? இல்லே இதாவது பிசினஸ் பண்ண சொல்லேன் ? நானும் கொஞ்சம் முதல் போடறேன் ! நான் சொன்னா அவன் கேக்க மாட்டான் ! நீ கொஞ்சம் பேசிப் பார்க்க கூடாதா? “

அவரது மனைவி மஞ்சுளா கொஞ்சம் தீர்க்கமானவள். கொஞ்சம் பொறுமையானவள். மஞ்சுளாவுக்கும் மகன் போக்கு வருத்தம் தான். மகன் சுப்பு எப்படி எப்படியோ இருப்பான் என்று தான் நினைத்தாள். அவள் கனவு எதுவும் பலிக்கவில்லை. கல்யாணம் காட்சி எதுவும் நடக்க வில்லை. . இருப்பினும், உள்ளதை மறைத்து, உள்ளத்தை மூடி , மற்றவருக்கு காட்டாமல், வெளியில் சிரிக்கத் தெரிந்தவள்.

ஆனால், அன்று என்ன மூட் அவுட்டோ, என்னவோ, மஞ்சு வள்ளென்று திரும்பி கடித்தாள். தன் கடுப்பை கணவனிடம் கொட்டினாள். “ இங்கே பாருங்க ! சும்மா இப்படி சுப்புவை கரிச்சுக் கொட்டாதீங்க! உங்க பையன் என்ன உங்களை காசு கேட்கிறானா? இல்லே உங்க சொத்தை அழிக்கிரானா? அவன் தப்பு வழியிலே எதுவும் போகலை ! அது நமக்கு தெரியும் ”

“அதில்லே மஞ்சு, நான் என்ன சொல்ல வரேன்னா? ” – பத்து ஆரம்பித்தார்.

மஞ்சு அவரை இடை மறித்தாள் ” நீங்க சும்மா இருந்தாலே போதும் ! அவன் பாட்டுக்கு தன்னை தன் வழியில் இருக்க விட சொல்றான் . அவன் இஷ்டப்படி அவன் நிம்மதியாக இருக்கட்டும். வேலை வெட்டி இல்லைன்னா என்ன ? அவனுக்கு தான் கல்யாணம், கால் கட்டு எதுவும் இல்லியே ? நமக்கு அப்புறம் நம்ம காசு அவனுக்கு தானே ? நாம விட்டுட்டு போற சொத்து , அவனுக்கு தாராளமா போதும் !சுப்புவை பத்தி கவலை படறதை விட்டுட்டு, பேசாமே , நீங்க உங்க வேலைய பாருங்க ! டிவி பாருங்க ! பாட்டு கேளுங்க ! நிம்மதியா இருங்க ! என்னையும் நிம்மதியாக இருக்க விடுங்க ! ஏன் உங்களை நீங்களே பாடா படுத்திக்கிறீங்க ? நடக்கிறது எல்லாம் தானா நடக்கும்! ” பட படவென்று பொரிந்து தள்ளி விட்டாள் மஞ்சு.

***

மதியம் ஒரு மணியிருக்கும். மனைவி மஞ்சுளா வெளியில் சென்று விட்டாள் ஏதோ வேலையாக. மகன் உள்ளே, அவன் பாட்டுக்கு , அவனது லேப்டாப்பில் ஏதோ பாட்டு கேட்டுக் கொண்டிருந்தான். பத்துவிற்கு மனது ஆறவில்லை. மனைவி இப்படி அசட்டையாக இருக்கிறாளே ! நமக்கு பிறகு நமது மகனுக்கு ஒரு துணை வேண்டாமா? அவனுக்கும் வயதாகுமே ? இப்படியே காலம் முழுக்க ஒற்றையாக கழித்து விட முடியுமா? அதை பார்த்துக் கொண்டு, தாங்கும் சக்தி எனக்கு இருக்கிறதா?”

நினைக்க நினைக்க அவரது குமுறல் அதிகமானது. மண்டை குடைந்தது. பேசாமல், இந்த சித்ரவதைக்கு பதில், ஒரேயடியாக உயிரை மாய்த்துக் கொள்ளலாமா? அது நம்மால் முடியுமா? மனைவியும் நம்மை மதிக்க மாட்டேன் என்கிறாள். மகனும் என்னை துச்சமாக பார்க்கிறான்.

இது என்ன வாழ்க்கை? இந்த உருப்படாத ஜன்மங்களோடு இருப்பதை விட, பேசாமல் செத்து மடியலாம்.

பத்து முடிவு செய்து விட்டார். தற்கொலை செய்து கொள்வதென.

எப்படி ? தூக்க மாத்திரை? எலி பாஷாணம் ? வேண்டாம் , வேண்டாம், உயிர் போயும் போகாமல், அது வேறு வகை சித்ரவதை. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டால் என்ன ? வேண்டாம் வேண்டாம் ! ஈமச்சடங்குக்கு , பாவம் , சுப்புவுக்கு வெறும் சாம்பல் தான் மிஞ்சும் ! கடலில் விழுந்து தற்கொலை பண்ணிக்க லாமா? வேண்டாம் வேண்டாம். யாரா வது காப்பற்றி விடுவார்கள். என் மானம், மட்டும் கப்பலேறிடும் .

கத்தியால், வயிற்றில் குத்திக் கொண்டு? வேண்டாம் வேண்டாம் ! அது வலிக்கும் ! தூக்கு போட்டு கொண்டு தொங்கலாமா? வேண்டாம் வேண்டாம் ! நாக்கு தொங்கி, , பார்க்க கண்றாவியாக இருக்கும் ! ரயில் தண்டவாளம், லாரியின் கீழ் விழுந்து ? வேண்டாம்! வேண்டாம் ! அதுவும் உடல் நசுங்கி , பார்க்க சகிக்காது ! ஒன்று செய்யலாம் ! பேசாமல் மாடியிலிருந்து குதித்து விடலாம் ! நிறைய பேர் இப்போதெல்லாம் , அப்படித்தானே தற்கொலை செய்து கொள்கிறார்கள். ! ஆனால், ஒரு பிரச்னை ! நம்ம வீடு இரண்டு மாடி மட்டும்தானே ! அது போதாதே ! பின் என்ன செய்யலாம்?

பத்து முடிவு செய்து விட்டார், தன் நண்பன் வீட்டிற்கு போய் அவரை கடைசி முறையாக பார்த்து விட்டு தனக்கு ஒரு முடிவு தேடிக்கொள்ளலாம் !! . ரொம்ப காலம் ஆகி விட்டது சேதுவையும் நேரில் பார்த்து. அவரது வீடு எட்டு அடுக்கு குடியிருப்பில் தானே ! பேசாமல், அங்கிருந்தே மொட்டை மாடியிலிருந்து குதித்து விடலாம். நமக்கும் ஒரு விடிவு.

நண்பர் சேதுவுக்கு போன் பண்ணினார் . “ சேது ! ஊரிலே இருக்கியா ? உன்னை பாக்கணும் போல இருக்கு சேது ! இப்போ வந்தால், வீட்டில் இருப்பியா ? “

சேதுவிற்கு ஆச்சர்யம். பழைய நண்பன். “ வா வா பத்து ! எவ்வளவு நாள் ஆச்சு உன்னை பாத்து ? உடனே வா ! வீட்டிலே எல்லாம் சௌக்கியம் தானே ? உன் பையனுக்கு கல்யாணமா என்ன ?“

“ அதெல்லாம் ஒன்னும் இல்லே சேது ! சும்மா தான் வரேன் !” சேது ஏதோ சொல்ல ஆரம்பிக்குமுன், பத்து , போனை கட் பண்ணினார்.

***

நண்பர் சேதுவின் வீடு ! ஏழாவது மாடி !!.

மனதில் எண்ணம் தோன்றியது சேதுவை பார்த்து விட்டு, இன்னும் இரண்டு மாடி லிப்டில் போனால், மொட்டை மாடி. அங்கிருந்து குதித்தால், உடல் கீழாக, உயிர் மேலாக போகும். சுய வேதனையிலும் அவருக்கு சிரிப்பு வந்தது.

அழைப்பு மணியை அழுத்தினார். ஒரு சின்ன குழந்தையை தூக்கிக் கொண்டு, வாசல் கதவை திறந்தவர் சேது. “ வா பத்து ! எவ்வளவு வருஷம் ஆச்சு உன்னை பாத்து ! நீ இங்கே வந்தே ஒரு ஐந்து வருஷம் ஆகிஇருக்குமா? உக்காரு !! என்ன சாப்பிடரே? வைப் வெளியே போயிருக்கா! ஒரு சர்பத் போட்டு கொண்டு வரவா? “

தள்ளாட்டமாக உட்கார்ந்தார் பத்து . “ எதுவும் வேண்டாம் சேது ! மனசு சரியில்லே ! உன்னை பார்த்துட்டு போகலாமென்று தோணித்து! அதான் வந்தேன் !”

சேது சொன்னார் “ எனக்கு தெரியும் பத்து. ! ரெண்டு மாசம் முன் , உன் மனைவி சொன்னா ! பையனுக்கு கல்யாணம் ஆகலைன்னா இப்போ என்ன குடி முழுகிப் போயிடுத்து ? உன் கையிலே எதுவும் இல்லை! எல்லாம் இறைவன் சித்தம் ! எல்லாமே நல்லதுக்கு தான் ! “

பத்து அலுத்துக் கொண்டார் . “ என்னமோ சொல்லறே! எனக்குத்தான் ஒரு பிடிப்பும் இல்லாம இருக்கு ! எதுக்கு இந்த உலகத்திலே வெட்டியா இருக்கோமுன்னு இருக்கு!”

சேது சமாதானப் படுத்தினார் “ அப்படியெல்லாம் நினைக்காதே ! எல்லாம் காலப் போக்கிலே சரியாயிடும் !”

சேது பேசிக்கொண்டிருந்த போதே, வாசலில் காலிங் பெல் அடித்தது. சேது போய் கதவைத்திறந்தார். 55- 60 வயது மதிக்கதத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள். “மாமி இல்லியா?”

“ இல்லியே ! உங்க விஷயமாகத்தான் வெளியே போயிருக்கா ! இப்போ வந்துடுவா! நான் வேணா போன் பண்ணி உங்க கூட பேச சொல்லட்டுமா? “

“இல்லே இல்லே ! நான் வீட்டுக்கே போய் போன் பண்ணிக்கறேன் ! அங்கே என் பொண்ணு , வீட்டிலே தனியா இருக்கா! கொஞ்சம் பிட்ஸ் வந்தா மாதிரி இருக்கு ! உடனே டாக்டர் கிட்டே போகணும். மாமி வந்தா கொஞ்சம் சொல்லுங்க! குழந்தையை, எங்க வீட்டுக்கார் வந்து வாங்கிப்பார் ! மருந்து வாங்க கடைக்கு போயிருக்கிறார். இப்போ வந்துடுவார் . பாவம் ! உங்களுக்குத் தான் நான் சிரமம் தரேன் ! “ சொல்லி விட்டு ஓடினார் அந்த பெண்மணி.

பத்துவிற்கு ஒன்றும் புரியவில்லை . “ என்ன ப்ராப்ளம்? ஏன் இந்த அம்மா இப்படி தவிக்கிறாங்க ?”

சேது சொன்னார் “ இவங்க நம்ம பக்கத்து ப்ளாட்லே இருக்காங்க . அவங்க நிலைமை ரொம்ப பாவம் பத்து ! . அவங்களுக்கு ஒரு ஒரே பெண். ஆசை ஆசையாக பெண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணினாங்க. பத்து வருஷம் கழித்து, வேண்டாத தெய்வம் இல்லை, போன வருஷம் தான் , ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை தான் ! ஆனால், கூடவே எல்லா கஷ்டங்களும் பிறந்தது !”

பத்து வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்தார். “என்ன ஆச்சு ?”

” மாமியோட பெண்ணுக்கு , இப்போ , கர்ப்பப் பை பக்கத்திலே ஏதோ பெரிய கோளாறாம் . ஒரு வருஷம் ஆச்சு. இன்னும் சரியாகலை. மற்ற இடங்களுக்கும் நோயின் தீவிரம் பரவிடுச்சாம் . ஹாஸ்பத்திரி, நர்ஸ், மெடிகேஷன் , வைத்திய செலவு, போக்குவரத்து , எக்க சக்கம்! கஷ்டம்டா சாமி ! இவங்களாலே சமாளிக்க முடியலே!, அவங்க மூச்சு முட்டுது. இதிலே, இந்த மாமி தான் கிட்டதட்ட ஒரு வருஷமா இந்த குழந்தைய பாத்துக்கிறாங்க. ! அது இன்னும் கொடுமை ! அறுவது வயசிலே, அவங்களே சுகர் பேஷன்ட். இதிலே கணவனை கவனிப்பாளா, நோய் வாய் பட்ட மகளை கவனிப்பாளா, இல்லே பேத்தியை கவனிப்பாளா? மாப்பிள்ளைய பெத்தவங்களோ, இந்த சமயத்திலே, கிட்ட கூட வர மாட்டேங்கிறாங்க. அவங்களுக்கும் வயசாயிடித்து ! அவங்க உடம்பு பிரச்னை அவங்களுக்கு ! இந்த மாமிக்கு என்ன பண்றதுன்னு தெரியலே! நேத்தியிலிருந்து, அந்த பெண்ணுக்கு உடம்பு அதிகமாயிடுத்து. ரத்தம் ஏத்தணுமாம். டாக்டர் சொல்லிட்டார். என் மனைவி தான் ரத்த தானத்துக்கு ஏற்பாடு பண்ண போயிருக்கா! “

பத்துவிற்கு புரிந்தது. “ இதுதான் வாழ்க்கை! இதுதான் ப்ராப்தம் !! நாம எவ்வளவோ தேவலை ! ஏதோ இந்த அளவாவது இறைவன் நம்ம பேரில் கருணை காட்டியிருக்கிறானே! நம்ம பையனுக்கு வேலை இல்லை !! அதனாலென்ன? அவனுக்கு கல்யாணம் ஆகலைன்னா என்ன ? அது சுப்புவின் விருப்பம். கடவுள் அனுக்கிரகம் இருக்கும் போது , கிரகங்கள் கூடி வந்தால், அது நடக்கிற போது நடக்கட்டும் !! ஆனால், இப்போ, அவன் நோய் நொடியில்லாமல், காசு பணத்திற்கு குறைவில்லாமல் இருக்கிறானே !அது போதுமே ! வேறே என்ன வேண்டும் ? அதை நினைத்து சந்தோஷப் படுவதை விட்டு விட்டு, தற்கொலை முடிவுக்கு போனேனே!

செருப்பு இல்லையே என வருந்தினேன்! கால் இல்லாதவனை காணும் வரை!

எப்படிப்பட்ட மடையன் நான்!”

உயிரை விடும் எண்ணத்தை கை விட்டு விட்டு, சேதுவிடம் விடை பெற்றுக் கொண்டு, வந்த வழியே நடையை கட்டினார் பத்து. போகும் வழியில், விநாயகனை கும்பிட்டு, சேதுவின் பக்கத்து வீட்டு பிளாட் நோய் வாய் பட்ட பெண் குறை தீர, அவள் தன் குட்டிக் குழந்தையுடன் சுகமாக இருக்க .இறைவனை மனமுருக வேண்டினார்.

பின், நிச்சலனமாக , விரக்தியின்றி, வீட்டிற்கு போனார். சந்தோஷமாக சாப்பிட்டார். மகனை பார்த்து “ சாப்பிட்டியா சுப்பு?” ஆதுரமாக வினவினார். இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு, சுகமாக தூங்கினார். மனைவிக்கும், மகனுக்கும் நம்ப முடியவில்லை.

****

ஒரு வாரம் கழித்து : மஞ்சுளா காபி கொண்டு வருகையில் பத்து, தன் ஆதங்கத்தை ஆரம்பித்தார். “ மஞ்சு, சுப்பு இப்படி இருக்கானே! அவனை ஏதாவது வேலைக்கு போக சொல்லேன் ? இல்லே இதாவது பிசினஸ் பண்ண சொல்லேன் ? நான் சொன்னா கேக்க மாட்டான் ! நீ கொஞ்சம் பேசிப் பார்க்க கூடாதா? நீ சொன்னா கேப்பானே! “

வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது! சிலரை மாற்றுவது கடினம் !ஆனால், அவர்களே முயற்சித்தால் முடியும் !

…. முற்றும்

ஆ.கு : ** கீதையில், கண்ணன் சொன்னது இதுதான்! – ” அர்ஜுனா ! மனம் சஞ்சலம், சலனம் உள்ளதுதான் ! எண்ணம் நமது கட்டுக்கு அடங்காது தான் ! ஆனால், அதை விடா முயற்சி, வைராக்கியம் கொண்டு கட்டி விடலாம்.” (பகவத் கீதா 6:35 சாங்க்ய யோகா : பாடல் 35).

மன பாரங்களை குறைக்க , ஒரு வழி, யோக சித்தர் , பதாஞ்சலி கொடுத்துள்ளார் : ” யோகா ! சித்த விருத்தி நிரோதகா! “ – ” யோகம் செய்வது, மனம் அலை பாய்வதை, மன உளைச்சலை குறைக்க வல்லது “ என்கிறார் அவர் !

நன்றி : கூகுல்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *