கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 7,964 
 

“சாயாவனம்…சாயாவனம்…, உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு…”

ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம் நாள் சாயாவனத்தின் திருமணம். நாளை மறுநாள் அந்தியில் மணப்பெண்ணுக்கு பரிசம் போட்டுவிடுவார்கள். சாயாவனத்தின் கையில் காப்பு கட்டிவிடுவார்கள்.

வாடகைப் பந்தல் முனுசாமி, “நாளை காலைல வந்து பந்த போட்டுடறேன்..” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். நாளை மதியம் பாரவண்டி அனுப்பினால் வாடகைச் சமையல் பாத்திரங்கள் வந்து சேர்ந்துவிடும். இன்று அந்தியில் மளிகை அனுப்பிவிடுவதாகச் செட்டியார் சொல்லி அனுப்பிவிட்டார். பெஞ்சு, பந்திப்பாய், பெட்ரோமாக்ஸ் விளக்கு எல்லாம் ஆர்டர் செய்த இடத்தில் ஒரு எட்டு ஞாபகப்படுத்திவிட்டு வந்துவிட்டான் சாய்வனம். புரோகிதரிடம் சொல்லிவிட்டு அப்போதுதான் வந்தான்.

இன்னும் ஒரு வேலைதான் பாக்கி. டவுனுக்குப் போய் டியூப் லைட், சீரியல் செட், ஸ்பீக்கர் செட் இதுகளுக்குச் சொல்லிவிட்டு வரவேண்டும். யாரேனும் டவுனுக்குச் செலபவர்களிடம் சொல்லி ஞாபகப்படுத்தி விடலாம்தான். ஆனால் அது சாயாவனத்துக்குப் பிடிக்காது. ‘தானே நேரில் சென்று நினைவூட்டுவதும் அழைப்பதும்தான் மரியாதை..’ என்று நினைக்கும் ரகம் சாயாவனம்.

‘டவும் பஸ்ஸுக்கு நின்னா காரியம் கெட்ரும். வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு ஒரு மிமிச்சிப் போயிட்டு வந்துரலாம்’ என நினைத்து, வாடகை சைக்கிள் எடுக்கக் கிளம்பிய நேரத்தில்தான் செங்கரும்பு வந்து, “அவசரமா அய்யா உன்னை இட்டாரச் சொன்னாங்க..” என்று வந்து நின்றான்.

“நான் கல்யாண சோலியா டவுனுக்குக் கிளம்பிக்கிட்டிருக்கேன். என் விஷயமா அய்யா அழைச்சாருன்னு தெரியுமா செங்கரும்பு…”

“டவுனுக்கு வண்டி கட்டணும் போலத்தான் இருக்கு. வயக்காட்டுல நின்னவரு திடீர்னு பரபரப்போட வீட்டுக்கு ஓடினாரு. “நான் வேட்டி சட்டை மாட்டிக்கிட்டு தயாரா இருக்கேன். உடனே போய் சாயாவனத்தை அளைச்சிக்கிட்டு வாடா’ன்னாரு… ஓடியாந்தேன்…” என்றான் செங்கரும்பு.

வா… சாயாவனம். கல்யண சோலியா நீ ஒருத்தனே அல்லாடிக்கிட்டிருபே, உன்னை சிரமப்படுத்த வேண்டாம்னு நினைச்சேன். ஆனா வேற வழி தெரியலை…” என்று நிறுத்தினார் மார்த்தாண்டம்.

“சோலியெல்லாம் நெருக்கிட்டேன் அய்யா. டவுனுக்குக் கிளம்பிக்கிட்டிருந்தேன். வாடகை சைக்கள் எடுத்துக்கிட்டுப் போகலாம்னு இருந்தேன். இப்பத்தான் வண்டீல போகப்போறேனே..” என்றான் சாயாவனம், பூட்டிய வண்டியை மார்த்தாண்டம் வகையாய் ஏற நிறுத்திய வகையில்.

“ஒரு வாரம் முன்னால என்னை ஒரு விழாவுக்கு அழைக்க வந்தவங்க இண்ணி தேதீல வீட்டுக்குக் கார் அனுப்பறேன்னுதான் சொன்னாங்க. நான் வண்டி கட்க்கட்டு வந்துடறேன்னுதான் சொன்னேன். வயக்காட்டுல வேலை மும்மரத்துல டவுன் விழாவை மறந்துட்டேன்.” என்று நொந்துகொண்டே தன் தலையில் லேசாகத் தட்டிக்கொண்டார் மார்த்தாண்டம். அவர் தன்னை அறியாமல் ஏதாவது தவறு செய்துவிட்டால் அப்படித்தான் தன்னையே நொந்துகொண்டு தலையில் தட்டிக்கொள்வார்.

வில் வண்டி சிட்டாய்ப் பறந்தது.

கிராம சேவகர் மார்த்தாண்டத்துக்கு வில் வண்டி ஓட்டும் ஆஸ்தான ‘சாரதி’ சாயாவனம்தான். “ஒலு ‘நொடீ’ல இறக்கி ஏத்தாம, ஆட்டம் பாட்டம் இல்லாம ‘பிளைமோத் கார்’ மாதிரி இருக்கும் நம்ம சாயாவனம் வண்டி ஓட்டினா. அதுக்காக வண்டி வேகம் ஒண்ணும் குறைஞ்சிடாதுன்னேன். சிட்டாப் பறக்கம். “ என்று மார்த்தாண்டம் ஒரு முறை சிலாகித்துப் பேசியது சாயாவனத்துக்கு நினைவுக்கு வந்தது.

“டவுன்ல நாலு நாளா ஒரு கருத்தரங்கம் நடக்குது. அதை ஒட்டிக் கண்காட்சி ஒண்ணு நடக்குது. இன்னைக்குக் கடைசீ நாள். சாயங்காலம் சிறப்புக் கூட்டம். நான்தான் தலைமை தாங்கப்போறேன். சிறப்புக் கூட்டத்துக்கு தலைவரே லேட்டாப் போகலாமா..? அதான் ஒரே பரபரப்பா இருக்கு…” என்றார் மார்த்தாண்டம்.

“ஆறு மணிக்குத்தேனேய்யா கூட்டம். இன்னம் எம்மா நேரம் இருக்குது…” என்று சொல்லிக்கொண்டே மாட்டை வாகாய்த் தட்ட, வண்டி அதி வேகத்தில் விரைந்தது.

எம் எஸ் ஸி., எம்ஃபில்., பிஎச்டி., படித்தவர் டாக்டர் மார்த்தாண்டம். படிப்பு முடிந்த கையோடு பல்லாயிரக் கணக்கல் சம்பளம் தரும் அரசாங்க, தனியார், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையெல்லாம் புறக்கணித்துவிட்டுத் தன் தந்தை விட்டுச் சென்ற பூர்வீக நிலபுலன்களில் விவசாயம் செய்வதில் ஈடுபட்டார். ‘இந்தியாவின் எதிர்காலமே கிராமப் புறங்களில்தான் உள்ளது ‘ என்ற மகாத்மாவின் சித்தாந்தத்தில் அபரிமிதமான நம்பிக்கை கொண்டவர் அவர்.

தான் படித்த படிப்பைத் தன் வயல்களில், தன் கிராமத்தில், தன் அருகாமைக் கிராமங்களில், தன் ஜில்லாவில் பயன்படுத்தி உயர்த்த வேண்டும்என்ற உத்வேகத்தில் இருப்பவர் மார்த்தாண்டம்.

மார்த்தாண்டத்தின் விவசாய வேலையே தனி ரகம். கொஞ்ச நஞ்ச நிலமுள்ளவர்களெல்லாம் டிராக்டர் கட்டி உழுவதும், மிஷின் வைத்து கட்டு அடிப்பதும், டிராக்டர் கட்டிப் போரடிப்பதுமாக விவசாயம் செய்ய, டாக்டர் மார்த்தாண்டம் மட்டும் பழைய பாணி விவசாயம்தான்.

ஊரில் எர் கலைப்பை வைத்திருப்பவனுக்கும், அதை ஓட்டத் தெரிந்தவனுக்கம் வேலை கிடைக்கிறது என்றால் அது மார்த்தாண்டத்தினால்தான். கைக் கட்டு அடித்தல், மாடு கட்டிப் போரடித்தல் என்ற பழைய முறைகளிலேயே வெற்றிகரமாக விவசாயம் செய்யும் புரட்சியாளர் அவர்.

படித்தது ரசாயனம் என்றாலும் ரசாயன உரங்களை விட நாட்டுத் தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு, கம்போஸ்ட்… இவைகளையே பெரிதும் பயன்படுத்தினார். தொழு உரத்திற்காகவே டஜன் கணக்கில் ஆடு மாடுகள் வைத்து வளர்ப்பவர் அவர். விவசாயத்தை அவர் மதிப்பதால் விவசாயம் அவரை மதித்தது. ஊரில் இருக்கும் எல்லோருக்கும் கண்டு முதல் இருபது மேனி என்றால், மார்த்தாண்டத்துக்கு முப்பது மேனி கிடைத்து வந்தது.

டவுன் ஹால் முன் வட்டமடித்து நின்றது வண்டி. கார், வேன், இரு சக்கர வாகனங்கள் என ஆங்காங்கே நிற்க, வில் வண்டியிலிருந்து கம்பீரமாக இறங்கினார் மார்த்தாண்டம்பிள்ளை.

“சாயாவனம்… உனக்கு டவுன்ல ஏதோ ஜோலி இருக்குதுன்னியே… அதை முடிச்சிக்கிட்டு வந்துடேன். இன்னும் ஒரு மணி நேரம் ஆகம் இங்கே..”

“திரும்புகால்ல வண்டி நிறுத்தி ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போக வேண்டியதுதானுங்கய்யா.”.

“அப்படின்னா வண்டிய அவுத்துவிட்டுட்டு அதோ பக்கத்துல இருக்கற கல்யாண மண்டபத்துல கண்காட்சி நடக்குது போய்ப் பாரு… கண்காட்சியை பார்த்து முடிச்சிட்டு அப்புறம் வந்து விழவில கலந்துக்கட்டு எல்லாரும் பேசறதைக் கேளேன்…” என்று மார்த்தாண்டம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “அய்யா வந்துட்டாரு, டாக்டர் அய்யா வந்துட்டாரு…” என்று நான்கைந்து பேர் பேண்டும் சூட்டுமாய் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவர் கையில் எலுமிச்சம் பழம் கொடுத்து விழா மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

“சுற்றுச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்ககுக் கண்காட்சி’ என்று எழுதப்பட்ட பேனர் ‘வருக…! வருக…!’ என்று சாயாவனத்தை வரவேற்றது. உள்ளே சென்றான் சாயாவனம்.

பிரும்மாண்டமான அந்த மண்டபத்தைப் பகுதி பகுதிகளாகத் தட்டி வைத்துப் பிரிதுப் படங்களும், சினிமாக் காட்சிகளும், செயல் விளங்கங்களுமாக உயிரோட்டத்துடன் இருந்தது கண்காட்சி. முதல் அடைப்புக்கள் நுழைந்தான் சாயாவனம். அதில் தண்ணீர் மாசு படுதல் பற்றி விளக்கங்கள் . வீட்டில் பாத்திரத்தைக் கழுவும் தண்ணீர் முதல் சாக்கடைத் தண்ணீர் வரை எப்படியெல்லாம் சுற்றுச் சூழலை பாதிக்கிறது என்பதைப் பற்றியும், சுத்திகரிக்கப்படாத ஆலைக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஏற்படும் அபாயம் பற்றியும் மாடல்கள், புகைப் படங்கள் என இருந்ததோடு அவைகளை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றிய விளக்கச் சித்திரத்தைச் சினிமாப் படம் போல போட்டுக் காண்பித்தார்கள்.

படங்களும் விவரிப்புகளும் மனத்தில் படிந்தன சாயாவனத்துக்கு. ஆங்காங்கே எழுதிப் போட்டிருந்த விவரங்களைச் சாயாவனத்தால் புரிந்து கொள்ள முடியாத நிலையில், படிப்பறிவற்ற தன் நிலையை நினைத்துக் கழிவிரக்கம் பிறந்தது அவனுக்கு.

“படிப்பறிவில்ல… படிப்பறிவில்லன்னு சொல்றியே சாயாவனம். படிப்புங்கறது புத்தகத்தை வெச்சி எழுத்துக் கூட்டிப் படிப்பது மட்டும்தானா..? இப்ப நீ உன் வயல்ல விவசாயம் பண்றியே.. ஒரு கறவை மாடு வெச்சிக்கட்டு அதைப் பக்குவமா பராமரிக்கசிறயே…, பிளைமோத் கார் மாதிரி மாட்டு வண்டிய லாகவமா ஓட்டறியே…இதுங்க கூடப் படிப்புதான். வாழ்க்கைப் படிப்பு. பட்ளிக்கூடத்துலயும், காலேஜ்லயும் பொய்ப் படிக்கறது மட்டும் படிப்புன்னு நினைக்காதே. உனக்கு உன் பேரை எழுதச் சொல்லித் தர்றேன். அதை முதல்ல தெரிஞ்சிக்கோ.அப்பறம் ஒவ்வொண்ணா கத்துக்கடலாம். புதுசு புதுசா கத்துக்கறது பெருமைதான். அதைவிட கத்துக்கிட்டது ஒண்ணோ ரெண்டோ இருந்தாலும் அதை செயல்படுத்தறதுதான் அதை விடப் பெருமை.” என்று ஒரு முறை மார்த்தாண்டம் சொன்னது இந்தச் சமயத்தில் நினைவில் இடறிற்று சாயாவனத்திற்கு.

புரியவில்லையே என்று வருத்தப்படுவதைவிட, புரிவதை மனதில் வாங்கிக் கொள்ளும் உற்சாகத்தோடு அடுத்த ஸ்டால் நோக்கிப் போனான் சாயாவனம். வயல்வெளிகளில் அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களை இடுவதால் ஏற்படும் பின் விளைவுகளைச் சித்தரிக்கும் வகையில் அமைக்கப் பட்டிருன்த ஸ்டாலைப் பார்த்தபோது, மார்த்தாண்டம் தன் வயல்களுக்கு முற்றிலும் ரசாயன உரத்தைத் தவிர்த்து இயற்கை உரங்களையே இடும் ரகசியம் புரிந்தது அவனுக்கு.

அடுத்து புகையினால் மாசு படுதல் பற்றிய ஸ்டால்.

ஓசோன் படலம் மாசுபடுதல் பற்றியும், அதன் காரணங்கள் பற்றியும் விளக்கும் திரைப்படம் மற்றும் ஆலைக்கழிவு முதல் மோட்டார் வாகனங்கள் வெளியேற்றும் புகை வரை அததில் உள்ள நச்சுத் தன்மைகளையும், அதன் நச்சுத் தன்மைகளைக் குறைக்கும் வழிமுறைகளையும் விளக்கும் திரைப்படமும் காட்டினார்கள்.

ஒலியினால் ஏற்படும் சூழல் கேடு பற்றிய ஸ்டாலில் பஸ், கார் இவற்றின் ஹாரன் முதல் பட்டாசு வெடித்தல் வரை பல நிலைகளில் ஒவ்வொன்றின் முக்கயத்துவம் அவற்றால் ஏற்படும் கெடுதிகளை விளக்கும் வழிவகைகளையும் காட்டியதோடு, ஒலியினால் காது செவிடானவர்கள், வேறு பாதிப்புக்கு உள்ளானவர்களின் நிலைகளைக் காட்டி அதனைப் பற்றி ஒரு டாக்டர் விளக்கினார். அந்த விளக்கம் சாயாவனத்தை பெரிதும் பாதித்தது.

மீட்டிங் ஆரம்பித்துவிட்டது. வரவேற்புறை நிகழ்த்தியவர் தலைவர் டாக்டர் மார்த்தாண்டம் பிள்ளைப் பற்றிக் கூறும்போது, “இன்றைய விழாத் தலைவர் டாக்டர் மார்த்தாண்டம் பிள்ளை அவர்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றி மேடையில் பேசும் வெறும் பேச்சாளர் மட்டுமல்ல. அவர், தான் கற்ற கல்வியைக் கிராமத்தில் செலவிட்டுக் கிராமப் புறங்களை உயர்த்தும் பண்பாளர். நிலம், நீர் இரண்டையும் மாசுபடுத்தும் ரசாயன உரங்களைத் தவிர்த்து இயற்கை னரங்களை மட்டுமே பயன்படுத்தி வெள்ளிகரமாக வேளாண் சாதனை படைக்கும் முன்னோடி விவசாயி ஆவார். டிராக்டர் போன்ற பல நவீனச் சாதனங்கள் இருக்கும் இந்தக் காலத்திலும் மனித சக்தியைப் பெரிதும் போற்றும் மனித நேயமிக்கவர். மார்த்தாண்டம் பிள்ளையைப் பற்றிச் சுருக்கமாகக் கூற வேண்டுமென்றால் ‘வாழ்ந்து காட்டுபவர்’ என்றே சொல்ல வேண்டும்..” என்று கூறி அமர, மார்த்தாண்டம் பிள்ளை பேசினார்.

“வாகனங்கள் வெளியேற்றும் புகையிலிருந்து கார்பன் மோனாக்ஸைடு வெளியேறிக் காற்றில் கலந்து காற்றை மாசு படுத்துவதோடு ஓசோன் படலத்தையும் ஓட்டையாக்குகிறது. தேவையான பயன்படுத்தல் தவிர வாகனங்களைப் பொழுது போக்கிற்காகப் பயன்படுத்துவதைத் தவிர்த்தாலே எத்தனையோ நன்மைகளை அடையலாம்..” என்று கூறி பலத்த கை தட்டல் பெற்று இறங்கினார் மார்த்தாண்டம்.

கார் வாங்க வசதி இருந்தும் மாட்டு வண்டியில் பயணிக்கும் மார்த்தாண்டம் பிள்ளையைப் பாராட்டுப்போது, ‘அந்த வண்டியை ஓட்டுவது நாம் தான்’ என்ற பெருமையில் திளைத்த சாயாவனம் வண்டியைப் பூட்டித் தயாராக நின்றான்.

வண்டி வீடு நோக்கிச் செல்லும்போது, ‘கண்காட்சி, விழ எல்லாமே ரொம்ப நல்லா இருந்துச்சு அய்யா..” என்றான் சாயவனம்.

“கண்ணால பார்த்து ரசிக்கறது சரி… காரியத்துலயும் காட்டணும்…” என்றார் சாயாவனம்.

“…”

“சாயாவனம்…நீ ஏதோ ஞாபகப் படுத்தணும்னு சொன்னியே…!” என்று மார்த்தாண்டம் கேட்க “இதோ இடம் வந்துடுச்சுய்யா…” என்று வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான்.

‘வரதராஜன் சவுண்டு சர்வீஸ்’ கடையிலிருந்து ஒருவன் வண்டியை நோக்கி ஓடி வந்தான்.

“நெனப்பு இருக்கு சாயாவனம். நாளைக்கு அந்தீல வந்து கட்டிடறேன். நீ இதுக்காக கவலைப் படவேண்டாம்.. சொன்ன நேரத்துக்கு ‘டாண்..’னு ஆளுக வந்துடும் என்றான் வந்தவன்.

“டியூப் லைட்டுங்க, சீரியல்செட்டுங்க இது மட்டும் கொண்டு வரச் சொல்லு போதும்.”

“ஸ்பீக்கர் செட்டு வேற எங்காவது சொல்லிட்டியா?”

“இல்லை. ஸ்பீக்கரை அலற விட வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன்..” என்று கூறிவிட்டு, “நாளைக்கு அந்தீல வந்திரச் சொல்லு..” என்று வண்டியை ஓட்டிக் கொண்டு கிளம்பினான் சாயாவனம்.

மார்த்தாண்டம் சாயாவனத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தார்.

இப்போது சாயவனம் பேசினான். “ஸ்பீக்கர் செட்டு போடாம மிச்சப்படுத்தறான் பாருன்னு நாலு பேரு பேசுவாங்கதான் அய்யா. இருந்தாலும் மத்தவங்க பேசுற கேலிக்காக நம்ம கொள்கைகளை விட்டுப் புடக் கூடாதுன்னு நீங்க மேடைல பேசினீங்களே…அதை அப்படியே நெஞ்சுல வாங்கிக்கிட்டேன். ஏதோ, என்னால ஆனது. என் கல்யாணத்துக்காவது ஸ்பீக்கரை அலற விடாம இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

சாயாவனம் சொல்லச் சொல்ல மார்த்தாண்டம் நெகிழ்ந்து போனார். காந்தியின் கனவு முழுதும் நனவாகும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் மார்த்தாண்டம்.

– 09.04.2000 தினமணி கதிர்

Print Friendly, PDF & Email

1 thought on “கற்றது ஒழுகு

  1. இக்காலத்திற்கு தேவையான கதை. மிகவும் அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *