கறிவேப்பிலைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 294 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இராமையா கிழவனுக்கு நித்திரை வரவில்லை. புரண்டு படுத்தான். கிழவனுக்கு உடம்பெல்லாம் அடித்தது போன்ற வலி, மூட்டுக்கள் கழன்றுவிட்டதைப் போன்று கால்கள் கடுத்தன. இடது முழங்கலாலுக்குக் கீழே கொப்புளமாகத்தோன்றி, பின்னர் வெடித்ததுத் தற்பொழுது ரூபாய் நாணயங்களின் அளவில் நாற்புறமும் படர்ந்திருக்கும் புண்கள் விண்விண்ணென்று’ தெறிக்கின்றது.

இன்று வெள்ளிக்கிழமை. எல்லாக்கடைகளிலுமே சதம் ஒன்று பிச்சைபோடுவார்கள். மொத்தமாக ஒரு நாலைந்து ரூபாய் தேறும். இதைக் கொண்டு அடுத்துக் கம்மியாகும் இரண்டு மூன்று நாள்களுக்குமாக இரண்டு உயிர்களைக் கூட்டில் தங்கவைப்பதற்கு இரைபோட்டுவிடலாம். எனவேதான் மந்தண்டாவளைச் சந்தியிலிருந்து அரசாங்க வைத்தியசாலை வரை இரண்டுகல் தொலைவில் நீண்டுகிடக்கும் கடைகளில் ஒன்றுவிடாமல் ஏறி இறங்கினான்.

ஒரு காலத்தில் பெருநாள் சாமான்கள் என்றும், புடவைகள் என்றும் மிடுக்காக இக்கடைகளில் ஏறி இறங்கியவன்தான். ஆனால் இன்று

…அது ஒருகாலம்…

வெள்ளிக்கிழமையைத் தவிர பிறநாள்களில் கடைகள் பக்கம் தலைகாட்டவே முடியாது. வீடுகளில் கிடைப்பதுதான். அதுவும் நிச்சியமாகச் சொல்லமுடியாது. பாதசாரிகள் மிகுந்த கச்சேரி ரோட்டிற்குச் சென்றாலும் ஊனங்களை முதலாகவைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் ஆயுள் பிச்சைக்காரர்கள் இவர்கள் போட்டிக்கு வந்துவிட்டதை உணர்ந்து ஏசத்தொடங்கி விடுவார்கள்.

பகல் யாரோ ஒரு புண்ணியவதி மீன்குழம்புடன் சோறு போட்டாள். அதை அப்படியே கோப்பையில் ஏந்திக்கிழவிக்கு வைத்துக்கொண்டு தகரப்பேணியில் வெறும் காட்ட ஒன்றினை வாங்கிக் கால் றாத்தல் பாணை அதில் தொட்டு நனைத்துச் சாப்பிட்டான். கிழவன் கொடுத்த சோற்றைக் கிழவி மிகவும் ருசித்துச் சாப்பிட்டாள். இடையில் கிழவனுக்கும் இரண்டு கவளம்கொடுத்தாள். சோற்றைச் சாப்பிடும்போது கிழவி கண்கலங்கி விட்டாள். அன்றொருநாள் இரண்டுநாட்கள் தொடர்ந்துவந்த பட்டினி விரதத்தை முடித்துக்கொள்ளும் முகமாக ஹோட்டலுக்கு முன்னாலுள்ள எச்சில் தொட்டில் இலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொருக்குகளைச் சாப்பிடவேண்டி வந்துவிட்டது. அதுவும் சரிவர முடியவில்லை. நாகர்கவான்கள் கலைத்துவிட்டார்கள். சாப்பிடும் பொழுது பழைய நினைவுகளில் கண்கலங்கிய கிழவியைக் கிழவன் தேற்றினான்.

பாதையோர வாழ்வு. பாதைக்கு வந்துவிட்ட வாழ்வு வீதிக்கு தள்ளிவிடப்பட்ட முதியோர்கள் சமுதாயத்தில் எத்தனை மேடுபள்ளங்கள் – வளைவு நெழிவுகள் – உயர்வு தாழ்வுகள் உண்டோ , அத்தனையும் சூக்குமமாகக் காட்டும் காட்சியாக அவ்வீதி காட்சியளித்தது.

பகலில் எந்நேரமும் ஆரவாரம் மிகுந்தே காணப்படும். லொறிகளும் மாட்டு வண்டிகளும் இன்னும் தள்ளு வண்டிகளும் பொருட்களை ஏற்றுவதிலும், இறக்குவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருக்கும்.

இந்தக் கடையிலா இவ்வளவு பொருட்களும் அடைந்து கிடந்தன’ என்று யோசித்து மூக்கின்மேல் விரலை வைக்கும்படியாகிவிடும். கொழும்பு மார்க்கட் நிலைவரம் பார்த்து லோட் அடித்து நிற்கும் லொறிகள். கடைக்குக்கடை இதே கதைதான். மிளகு என்றால் மிளகு. இலவம் பஞ்சு என்றால் பஞ்சு…. கொக்கோ… என்றால் கொக்கோதான். இத்தனைக்கும் சாதுவாகத் தோன்றும் கடையைப் பார்க்கும் போது பூதம் அடைபட்டிருந்த புட்டிதான் நினைவிற்கு வரும்.

தலைக்கு அணையாக வைத்திருந்த குட்டிச் சாக்கினுள் அடைபட்டுக்கிடந்த தகரப்பேணி தலையை அழுத்துகின்றது. ஒருவாறு சரித்து வைத்துக் கொண்டான். இப்பொழுது தகரப்பேணி அகப்பட்டு நெளிகின்றது.

இரவு முதிர்ந்துவிட்ட போதிலும் நகரம் ஒளிவெள்ளத்தில் மிதக்கின்றது. வீதியின் அருகில் நிற்கும் மரங்களின் காகங்கள் கொட்ட…..கொட்ட விழித்திருக்கின்றன….. மாநகர சபை விளக்குகளுடன் கொஞ்சி விளையாடிய ஈசல்கள் சிறகிழந்து அப்பிக் கிடக்கின்றன. அழகுமலைப் பக்கத்திலிருந்து வேட்கையுடன் பறந்து வந்த வௌவால் ஒன்று மின்சாரக்கம்பியில் மோதி நிரந்தமாகத் தொங்கிக் கொள்ளுகிறது.

தனக்கு நேர் கிழக்காக “பேமண்டின்” மறுகோடியில் உறங்கும் கிழவியைப் பார்த்தான். கிழவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். கிழவியை நினைக்கும் போது அவனுக்கு துக்கம் மேலிடுகின்றது. கிழவிக்கு ஒரே ஊர் பைத்தியம். அவளுடைய உறவினர்கள் அங்கேதான் இருக்கின்றார்கள். கிழவியின் பேச்சைக் கேட்டு உடலில் தெம்பு இருக்கும் போதே ஊருக்கு போயிருந்தால் தனக்கு இக்கதி ஏற்பட்டிருக்குமா என்று நினைத்து நினைத்து கவலைப்பட்டான்.

கிழவியை கல்யாணம் முடித்த தினம் அவனுக்கு நினைவுக்கு வருகின்றது. மாரியம்மன் கோவிலிருந்து தப்புத்துமுறுடன் வீடுவரை……’ஜே… ஜே’ என்று ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். காமாட்சி என்றால் முழுத் தோட்டத்திலுமே பிரசித்தம், கொழுந்து எடுப்பதில் மகாகெட்டிக்காரி. இவனும் வேலையில் இப்படித்தான். தவறணை இராமையா என்றால் ஒரு தனி மதிப்புத்தான். பிள்ளையை வளர்ப்பதுபோல் தேயிலைக் கண்டுகளை வளர்த்தான். பூமா தேவிக்கு மட்டும் வஞ்சகம் செய்யக்கூடாது’ என்ற நன்றாக பாடுபட்டான்.

இப்பொழுது தோட்டத்து வாழ்க்கையை நினைக்கும் போது பெரும் ஏக்கம் ஏற்படுகின்றது. இவ்வாறு துன்பப்படவேண்டுமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. தோட்டத்தில் சிறுவனாக இருந்தபொழுது செட்டு’ சேர்த்துக்கொண்டு ஒன்றாகப் படுத்துறங்குவது, மிலாறு பொறுக்கச்செல்வது, மலைக்குத் தேநீர்கொண்டு செல்வது, போன்றவைகளெல்லாம் நினைக்கும் தோறும் இனிக்கும் நினைவுகளாகும்.

அதற்குப் பின்னரும் அவனுடைய வாழ்க்கை சந்தோஷமானதாகத்தான் இருந்தது. காமாட்சியைக் கல்யாணம் முடித்து தனிக்குடித்தனம் வந்தான். தோட்டத்தில் உள்ளவர்களோடு வருடம்தோறும் காமாட்சி சகிதம் கதிர்காமம் சென்றுவருவான். மாசிமகத்தில் அம்மனுக்குத் தேர் எடுப்பார்கள். கார்த்திகை கழிந்ததும் காமன்கூத்து ஆரம்பமாகிவிடும். காமன் தகனம் என்றால், தோட்டமே விழாக்கோலம் பூண்டுவிடும். ‘அறம் காத்த வாணியே குலம்காத்த வாணியே’ என்ற சரஸ்வதி துதியுடன் இரவு எட்டுமணிக்கு ஆரம்பமாகும். சின்னையா வாத்தியாரின் வள்ளித் திருமண நாடகம் முடிந்து ரகுபதி ராகவ ‘ கீதம் ஆர்மோனியத்தில் இசைக்கும் போது, விடிய கோழி கூவி விடும்.

மேட்டு லயத்துப் பெண்கள் துள்ளுமாவுடன் குலவை கொட்டியபடி புறப்பட, ஒத்த ரோட்டு வரையில் ஒத்ததப்புடன் செந்தூதன் ஓலைகொண்டு பந்தங்கள் எரிய ஆடிவந்து காமன் பொட்டலைச்

சேரும்போது பொழுது “பளார்” என்று விடிந்துவிடும். முழுநாளும் ஒரே குதூகலம்தான். இன்னும் கரகம் பாலிப்பு, பங்குனி உத்தரம் என்று எத்தனை விழாக்கள் சந்தோஷத்திற்குக் குறைவில்லை.

தீபாவளி, சித்திரை போன்ற பெருநாள்கள் வந்தால் டவுனிலிருந்து கார் ஒன்றும் குடும்பம் ஒன்றமாகத்தான் திரும்புவார்கள். இப்படியே இராமையா கிழவனின் வாழ்க்கையில் நாற்பது வருடங்கள் இன்பமாக ஓடியபின்னர் அது நடந்தது. தோட்டத்தை நிர்வகித்து வந்த கம்பனி நட்டம் என்று காரணம்காட்டி பல பிரிவுகளாக தோட்டத்தை பிரித்தது. புது நிர்வாகங்கள் வந்தன. புது ஆபிஸ்கள், முதலாளிகள், உத்தியோகஸ்தர்கள் வந்தார்கள். பிரிந்த தோட்டங்களில் வெவ்வேறு சங்கங்கள் தோன்றின. தண்ணிச் சண்டைகள் முளைத்துத் தகரங்கள் கல்லடிபட்டன. இப்படிப் பல பிரச்சினைகள் புதிதாக முளைத்தன.

இவ்வேளையில்தான் பிரஜா உரிமை ஒப்பந்தம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மனுக்கள் கோரப்பட்டன. கிழவி… ஊருக்குப் போவோம்” என நச்சரித்தாள். ஆனால், ரெங்கையா ஏதோ நப்பாசையால் மறுத்துவிட்டான். இலங்கைப் பிரஜா உரிமை கோரி அவன் மனுப்போட்டான். காணிச் சீர்திருத்தச் சட்டம் தோட்ட மக்கள் வாழ்க்கையில் பிரளயத்தையே ஏற்படுத்தி விட்டது.

பழைய கௌரவம் போய் புதிய கிராமியத் தோட்டச் சூழலில் ஒருவாறு காலம் ஓடிக்கொண்டிருக்கையில், தொடர்ந்துவந்த துன்பங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்று தோட்டம், காணியில்லாதவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு தோட்டத்தில் வேலை செய்த சகலரும் வேலையிழந்தார்கள்.

முதலாளி…புத்திசாலி. எப்படியெல்லாமோ…காரியம் பார்த்து லயத்தைக்கூட விற்றுவிட்டார். கூப்பன் அரிசி தொட்டு உண்டாக்கிய காய்கறிச் சேனைவரை சகலதும் பறிபோயிற்று. நாட்டான் தலையில் பழியைப்போட்டுவிட்டு கோழிக்கூடுகள் மாயமாய் மறைந்தன. பக்கத்துத் தோட்டங்களிலிருந்து கிடைத்த ஆதாரமற்ற செய்திகள் கூடக் ‘குமர்கள் வைத்திருப்பவர்களை குலைநடுங்கச் செய்தன’. சில பகுதிகளிலிருந்து வந்த செய்திகள் மகிழவைத்தன.

தெம்புள்ள குடும்பங்கள் வவுனியாவிற்கு நடந்தன. பிற தோட்டங்களிலும் உள்ளவர்களுக்கே வேலையில்லையென்று கையை லிரித்துவிட்டார்கள்.

தங்க நகைகளில் தொடங்கி செம்பு … கோடரி , கத்தி என்பனவெல்லாம் ஒரு கொத்து அரிசிக்காக விலைபோயின… உணவுப்பஞ்சத்தில் மரவள்ளி, வற்றாளை என்று தொடங்கி அரிசியையே மாதக்கணக்கில் காணாது குறுனை, தவிடு, கோரக்கிழங்கு , அமலப்புல் என்பவற்றில் போய்நின்றது.

பசி தாங்காது காட்டு மரவள்ளிக்கிழங்கைத் தின்று யார் யார் யாரோ இறந்துபோனார்கள்.

லயத்துத் தகரங்களையும் இரும்புக் கேடர்களையும் ஒரு கோஷ்டி சண்டித்தனம் செய்து கழற்றிச் சென்றது. ஆயா என்றும் சேவண்ட் கேர்ள்’ என்றும் பட்டினத்து பங்களாக்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

இனியும் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் டவுனுக்கு நடக்கத் எதாடங்கிவிட்டார்கள். எந்த நகரத்திற்கு முன்பு பெருமையுடன் வந்து போனார்களோ அதே நகரில் இன்று பிச்சை எடுக்கிறார்கள்.

ஒருநாள் ஒரு கோஷ்டி பலரைப் பிடித்துத் தெரு நாய்களை வண்டியில் பலாத்காரமாக அடைப்பதுபோன்று அடைத்துச் சென்றது. மூன்றாம் நாள் களைத்து வாடிச்சோர்ந்து திரும்பிவந்த சிலர், அவர்கள் தங்களை இனம்தெரியாத காட்டுப்பகுதியில் இறக்கி விரட்டி, இம்சைப்படுத்தியதாகக் கூறி அழுதார்கள்.

கிழவனுக்கு நித்திரை வரவில்லை. வெற்றிலைப்பையைத் துழாவி ஒரு புகையிலைத் தட்டையை எடுத்துச் சப்பினான். அந்த வீதியின் பேமண்டில் அநேகர் அலங்கோலமாகப்படுத்து உறங்கினார்கள். தெருநாய்கள் கூடவே படுத்துக்கிடக்கின்றன.

ஐயோ…. கிழவனைத் தனிக்க வச்சிட்டு என்னையக் கொண்டு போறானுக… கிழவி தூக்கத்தில் வாய்புலம்புகிறாள். கிழவிக்கு கடந்த பத்து நாட்களுக்கு மேலாகக் கடுமையான வருத்தம். இன்னநோய் என்றில்லாத துன்பத்தில் வாடுகிறாள். உடல் ஈர்க்கிலாக இளைத்துப்போயிருக்கின்றது.

இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாத அவளை நினைக்கும்போது கிழவனுக்குப் பெருமையாக இருக்கின்றது. மெதுவாக நகர்ந்து அவள் முகத்தைத் தடவிப்பார்த்தான். புஸ்… புஸ்…. என்று மூச்சு … இழுத்து வந்தது. விலகிக் கிடந்த சேலைத் தலைப்பைச் சரியாக இழுத்துவிட்டான்.

வாழ்க்கையின் சுமையேபோன்று இணைந்து தொடரும் பெட்டிகளை இழுத்துவந்த ஆசுவாசத்தில் ஸ்டேசன் வந்து சேர்ந்த குட்ஸ் ரெயின் மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கி பின் …. ஊ… என்று அவலக்குரல் எழுப்பியபடியே ஓடுவது நிசப்தமான இரவுவேளையில் தெளிவாகக் கேட்கிறது.

இவர்களுக்கு முன்னதாக கடைக்காரன் எழுந்துவிட்டால் மாடியிலிருந்து நீரைக்கொட்டி இலவசமாக ஸ்நானம் செய்து வைப்பார்கள். தெருவின் மேற்கு மூலையில் சாக்கடைக்கு அருகில் படுத்திருக்கும் குடும்பம் குப்பையில் நெருப்புமூட்டிக் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றது.

சிக்னல் கம்பங்கள் தரும் சமிக்ஞைகளைப் பொருட்படுத்தாது வாகனங்கள் பறக்கின்றன.

பொழுது விடிந்துவிட்டது. கிழவியை எழுப்பி சைவக்கடை’யில் சூடா ஒரு காட்ட வாங்கிக்கொடுத்துவிட்டு, இடத்தைக் காலி செய்து ஆலமரத்துப் பக்கம்போய் குந்துவோம்’ என்று நினைத்தவன், ‘ஏய் …. புள்ள….. ஏய் …. காமு… எந்திரி… எந்திரி… நல்லா விடிஞ்சிரிச்சு’ என்று அவளை எழுப்பினான். பதில் இல்லை .

பனிகொட்டி நனைந்திருக்கும் அவள் போர்த்திருந்த சேலையை விலக்கி ,’ஏய்… காமு… காமு’ என்றவன் முகத்தைத் தடவிக் கையைப் பிடித்துப் பார்த்தான்.

கிழவனுக்குக் குடுமியைப் பிய்த்துக்கொண்டு ஓவென்று பெரிதாக குரல் எடுத்துக் கத்தவேண்டும் போலிருந்தது. அவளுடைய முகம் வீங்கி உடம்பு விறைத்துப்போயிருந்தது. இலையான்கள் குந்திக்குந்தி மொய்த்துப் பறந்தன.

கடை திறந்தவுடன் விடயத்தை அறிந்த முதலாளி, ருத்ரதாண்டவத்தில் நின்றார். ச்… சீ…’ தொல்லையாகப் போய்விட்டது. சனியன்களைப் படுக்கவிடுறதால வாற தொல்லைகள் இதெல்லாம் ….. இருக்கட்டும்…. இருக்கட்டும்… இதுகளுக்கு ஒரு நல்ல முடிவெடுக்கிறன்…’ ஆத்திரத்தில் ஏதேதோ பொரிந்து தள்ளினார். கிழவனுக்கு முதலாளியின் முகத்தைப் பார்க்கப் பயமாக இருக்கின்றது.

முனிசிபல் லொறி வந்து பிணத்தை ஏற்றிச்சென்றது. பிச்சைக்காரர் கூட்டத்தைச் சேர்ந்த சிலர் வந்து அனுதாபம் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து முனிசிபல் முனிபுங்கவர்களால் தொடுக்கப்பட்ட ஆக்கினைகள் முழுப் பிச்சைக்காரக் கூட்டத்தையுமே வெலவெலத்து நடுங்கச்செய்தன. கிழவன் நீண்டு வளர்ந்திருக்கும் தாடியை உருவியபடியே சற்று நேரம் அந்த பேமண்டில் உட்கார்ந்திருந்தான். இப்பொழுது அவன் சிந்திக்கவில்லை. தன்மீது துர்நெடி வீசுவது அவனுக்கே தெளிவாகப் புரிந்தது.

பின்னர் மெதுவாக எழுந்தான். கிழவி போய்விட்டாள் புண்ணியவதி. நான்தான் பாவி… பாவி இன்னும் உசிரோட இருக்கேன்’ என்று அரற்றியபடியே கால்கள் போனபடியே நடந்தான். ‘காண்குட்டைகளில் பாய்ந்து உயிரைப் போக்கிக்கொள்ளுவோமா? என்றுகூட நினைத்தான்.

அன்றிரவு வழமையாகப் படுக்கும் வீதிக்கு வரவில்லை. புகையிரத நிலையத்திற்கு முன்பாக அலரி மரத்தடியில் படுத்தான்.

நடுச்சாமத்திற்கு மேல் இருக்கும் டவுண் சுற்றிக்காவல் செய்யும் ‘சிக்குரிட்டி காட்மார்கள்’ இருவர் கிழவனை எழுப்பி ஏதோ தமாஷ் செய்துவிட்டு நடந்தார்கள். விடியவிடியப் பனி கொட்டியது. தூக்கமே வரவில்லை. சிவராத்திரிதான். இப்படிப் பொழுதைக் கழிப்பது அவனுக்கு ஒன்றும் புதிய அனுபவமல்ல….

மறுநாள் பகல் வழமையாக ஓடிவிட்டது. தூக்கம் கண்களைத் தாலாட்ட இரவு பேமண்டிற்குத் திரும்பினான். சற்றுத் தூரத்திலிருந்தே கடையை நோட்டம் விட்டு கடை பூட்டியாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மெதுவாக நடந்து சென்று குட்டிச் சாக்கை வைத்தான்.

கையில் ஏதோ அரும்புவது போன்ற உணர்வு ஏற்பட்டது. சடக்கென்று கையை எடுத்துக்கொண்டவன், மீண்டும் ஒரு அடி முன் தள்ளி சீமெந்து தரையை ஒரு குருடனைப் போல இரு கைகளாலும் தடவிப் பார்த்தான்.

அவனுக்கு பாதக் குறட்டில் ஏறியது போன்று இருந்தது. கடைக்கு வந்துபோகும் நடை பாதையைத் தவிர்த்து பிற்பகுதிகள் யாவும் சீமெந்துக்கு மேலே அரையங்குல உயரத்திற்கு கூரான முனைப்பான முக்கோண சிறிய கூளாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. தரை இன்னமும் உலரவில்லை.

மெதுவாக எழுந்து வீதிக்கு வந்தான். நடுரோட்டில் நின்றபடியே வீதியின் இருபகுதிகளையும் வெறிக்க நோட்டம் விட்டான். ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அவ்வீதியில் தான் ஒரு குருடனாக்கப்பட்டுக் கிடப்பதாக அவனுக்குப்பட்டது. தெளிவான வானத்தில் விண்மீன்கள் பளபளத்துக்கொண்டிருக்கின்றன. எட்டிய உயரத்திற்கு சிறிய விளக்குகளால் கோலம்போட்டபடி மின்மினிகள் பறக்கின்றன.

இராமையா கிழவன் இருமியபடி தோளில் குட்டிச் சாக்குத் தொங்க நடந்து செல்லும்போது நடுங்கியபடியே ஊன்றிச் செல்லும் தடி எழுப்பும்…டொக்…டொக் என்ற ஓசை தெளிவாகக் கேட்கின்றது.

அந்த நாலுமாடிக் கட்டிடத்தின் உச்சியில் கம்பனியின் பெயர்ப் பலகையை அலங்கரித்துக்கொண்டு டால் அடிக்கும் ஆட்டோமாடிக் பல்ப்புகள் ஒளிவர்ணங்களில் ஜாலம்காட்டி கண்களை கூசச்செய்கின்றன.

– வீரகேசரி-1978, அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *