கதையாசிரியர்:
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 6,653 
 
 

நேரம் ராத்திரி பத்து மணி. தெருவின் மொத்த அகலத்தையும் அடைச்சமாதிரி நெடுக்க ஜனங்க கூட்டம் நிரம்பி வழியுது. இரண்டு பக்கங்களிலும் கட்டியிருந்த ஸ்பீக்கர்களில் டி.எம்.செளந்தரராஜன் பாடிக் கொண்டிருந்தார். கித்தானை கீழே விரிச்சி முன்னால இடம்பிடிச்சி குடும்பம் குடும்பமா உட்கார்ந்து ஊர்வம்புகளை பேசிக்கொண்டிருக்கும் கிராமத்து மனிதர்கள். ஒரே கூச்சல். சுற்றிலும் அடிக்கும் உழைக்கும் மனிதர்களின் வியர்வை கப்பும், பீடிபுகையின் நாத்தமும், சாராய நாத்தமும் மூக்கை அறுக்கின்றன. கூத்துமேடை களைகட்ட ஆரம்பிச்சாச்சி.. விசில் பறக்குது. திரெளபதியம்மன் கோவில் திருவிழா. பாரதக்கூத்து நடந்துக்கிட்டிருக்கு. இன்னைக்கு பதினேழாம் நாள் கூத்து, `கர்ணமோட்சம்’. நாளைக்கு பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளத்தோட பதினெட்டு நாள் பாரதக்கூத்து முடிஞ்சிடும். மேடையில வாத்திய கோஷ்டி சுதி கூட்டும் மும்முரத்திலிருந்தார்கள்.. ஆர்மோனியம் வாசிப்பு-—அண்ணாமலை, மிருதங்கம்—ராமதாஸ் நாயுடு,முகவீணை—மாரியப்பன்,டோலக்கு—குட்டிராஜு, தாளம்—முருவன், சுருதி—சங்கரு. ஆச்சு வாத்தியக்காரங்க கிட்டத்தட்ட சுதி கூட்டி தயாராயிட்ட மாதிரிதான் தெரியுது. நாயுடு டண்..தொப்,…டண்..தொப்னு மிருதங்கத்த தட்டி சுதி சேர்த்துக்கிட்டிருந்தாரு.

கீழே கூட்டம் பொறுமை இழக்க ஆரம்பிச்சிடுச்சி. உள்ளே வேஷம் கட்றவங்களும் முக்காலும் ரெடியாயிட்டாங்கதான். எல்லாம் தயார். ஆனாலும் வாத்தியாரு விசில் குடுக்காம கையை பிசைஞ்சிக்கிட்டு குறுக்கும் நெடுக்கும் போயி போயி வந்துக்கிட்டிருக்காரு. முக்கிய வேஷக்காரன் இன்னும் வந்தபாடில்லையே என்ன பண்ணுவேன்?.கடவுளே!. மாசி பயல இன்னும் காணல, கர்ண வேசம் கட்றவனாச்சே. இதுக்கப்புறம் வருவான்ற நம்பிக்கையும் இல்லை. நேத்து தலைவரு வூட்ல ஓசி பிரியாணி தின்றப்போ மட்டனை வாரி வாரி செனாறினானே அதில பேதி புடுங்கிக்கிச்சா?. க்ரூப்பில் இருக்கிறவன்ல யாரையாவது மாத்தி போட்டு சமாளிக்கலாம்னா கூத்து களைகட்டாது. கர்ணன் வேஷம் கட்றவன் நல்லா கிறிக்கி அடிக்கத் தெரிஞ்சவனா இருக்கோணும், பாவங்கள சரியா புடிக்கோணும், முப்பத்திரெண்டு அடவுகளையும் சரியா புடிக்கோணும். மாசி எல்லாத்திலியும் சூரன். அதிலியும் கிறிக்கி அடிக்கிறதில படுசூரன். இந்த பக்கத்துக்கே அது நல்லா தெரியும். இந்த ஜனங்களை ஏமாத்த முடியாது. பாரதக்கூத்தை வருஷாவருஷம் பார்த்துப் பார்த்து விஷயங்கள் அத்துபடியான கும்பல்.

வெந்தய கலர்லதான் கர்ணனுக்கு அரிதாரம் பூசறது வழக்கம். அது மாசி நிறத்துக்கு பாந்தமா இருக்கும். கட்டைகட்டி இடுப்புல டவுறு புடிச்சி, முழு அலங்காரங்களுடன் கையில வாளுடன் மேடையேறிட்டா, ” கதிரவன் ஈன்ற மைந்தன், தானதரும தயாள குணசீலன்,”– ன்னு நாலரை கட்டையில விருத்தம் எடுப்பான் பாரு, எப்.ப்.பா. எடுத்துட்டு கிறிக்கி அடிப்பான் பாரு. ரங்கராட்டினம் மாதிரி சும்மா கிறுகிறுன்னு ஒரே மூச்சில அம்பது கிறிக்கிக்கு மேல அடிப்பான். தாளக்கட்டு எகிறும், கைத்தட்டல்கள் பொரியும். முப்பத்திரெண்டு தாளங்களுக்கும் என்னா அழவா அடவு கட்டுவான்?. இதெல்லாம் பொறப்பில இருந்தே வரணும். அவன் அப்பன், தாத்தன் எல்லாரும் கூத்தாடிங்கதான். அந்த நாள்ல அவங்கப்பன் கட்ற இரணியன் வேசத்த பேசாத ஆளே கெடையாது. அம்மாம் பேரு. வாத்தியாருக்குக் கூட இருபது முப்பதுக்கு மேல கிறிக்கி அடிக்க வராது. மேடை விஸ்தாரத்துக்கும் பம்பரமா சொழலுவான். ஐயோ! என்னா பண்ணப் போறனோ தெரியலியே. அதுக்குள்ளார ஊரு நாட்டாம ரெண்டு தபா வந்து இன்னாய்யா?ன்னு மொறைச்சிட்டு போறாரு. இந்த படுபாவி செல்லை ஆப் பண்ணி வெச்சிருக்கானே. ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவுதுன்னு உள்ளே அவருக்கு மனக்குறளி எச்சரிக்கை பண்ணிக்கிட்டே இருக்குது..

“இன்னாபா? இன்னா மாசிய இன்னும் காணல?.”

“ தெரியலையே நாயுடு. கயித தண்ணியடிச்சிட்டு எங்கனா புரண்டுங் கெடக்குதோ இன்னா எழவோ. ஹும்! கூத்தாடி பசங்ககிட்ட இது ஒரு வில்லங்கம்.”

“த்சு..த்சு. வுடுபா..பதினாறு ராத்திரியா தூக்கம் கெட்டு கெடக்கிறோம். அதிலியும் மாசி மெயின் வேசக்காரன். மனுசனுக்கு அலுப்பு சலிப்பு இல்லியா?.. உழைப்பு ஜாஸ்திபா.”

“இருக்கிறதிலேயே இவனுக்கும், கட்டியக்காரன் கோபாலுக்கும்தான் கஷ்டமான வேஷம். இன்னா பண்றது?.அதுக்கேத்த சம்பளமும் அட்வான்ஸும் குடுத்திருக்கேன் இல்லே?.இதோ கோபாலு டாண்னு வந்து நிக்கல?.ஆனா என்னிக்கும் மாசி இந்தமாதிரி நின்னதில்லபா.” “ “ சரி,மாத்து வழிய பாருப்பா. யாரு தோதுபடுவான்னு பார்த்து, கோர்த்து வுட்ருபா. ராத்திரி பத்தரை மணியாச்சி. இல்லேன்னா நீயே கட்டிட்றது சிலாக்கியம். இனிமேலா மாசி வரப் போறான்?.”

அப்போது டாய்!…டாய்!..என்று கீழேயிருந்து பெருங்கூச்சல் கெளம்பியது. மூலைக்கு மூலை விசில். இதுக்கு மேல இழுத்தடிச்சா கல்லடிப்பானுங்க..உள்ளே ஓடினாரு. எல்லாரும் ரெடி. ஊஹும்! குள்ளமா, ஒல்லியா இருக்கிற தான் கட்டியக்காரன் வேசம் கட்லாமேயொழிய கர்ணன் வேசத்துக்கு பொருத்தமில்லன்னு வாத்தியாருக்கு நல்லா தெரியும். அதுக்கு சும்மா ஒசரமா கம்பீரமா இருக்கோணும். சகாதேவன் வேசம் கட்ற பாபு, அரிதாரம் மட்டும் பூச்சிக்கிட்டு உக்காந்திருக்கான். பாதிக்கு மேலதான் அவனுக்கு மேடையில வேலை. ஆளு தடுமனா, நல்ல ஒசரம் வேற. “ டேய் பாபு! ஓடியா. இன்னிக்கி நீதான் கர்ணன். போயி வேசம் கட்டு.” “ஐயோ! நானா?.” “ ஏன் பாடம் தெரியுமில்லே?.” “தெரியும் வாத்தியாரே! ஏன் மாசி இல்லியா?.” “அடச்சீ! சொல்றதை செய்யி. ஒண்ணுக்கு ரெண்டு வாட்டி பாடத்த பார்த்து வெச்சிக்குணு மேடையேறணும் புரியுதா?. மனசுல ஓட்டி பார்த்துக்கோ.”—-அவன் தலையாட்டினான். “அப்புறம் மானத்த வாங்கிப்புடாத. சீக்கிரம் ஓடு. கிரீடம் கட்டி, பெரிய மீசை வெச்சி, கட்டைகட்னா தீர்ந்து போச்சி. சுலுவுடா. டவுறு புடிச்சி கட்றது சொம்மா பம்னு இருக்கோணும்னு ராமன் கிட்ட சொல்லு அவன் பார்த்துக்குவான். ஓடு..ஓடு.”—வாத்திய கோஷ்டிக்கு சிக்னல் குடுத்துட்டு மேடைக்கு போனாரு. கற்பூரம் ஏத்தி சாமிய கும்பிட்டு முடிச்சப்புறம், ஜனங்களைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடு போட்டுப்புட்டு விசில் குடுத்தாரு.. “டேய் எப்பா! பாபு! தயவு பண்ணி ஸ்டேஜ்ல ஒரு பத்து கிறிக்கியாவது அடிச்சி காட்றா.”—-அவன் மத்திமமா தலையாட்டினான். பகவானே! இன்னா பண்ணப் போறானோ?.

ஓட்டேரி வரதன் ஜமா, என்ற அந்த `அன்பே சிவம் நாடக மன்றம்’ பரபரப்புடன் இப்ப களரி கட்ட ஆரம்பிச்சிட்டது. களரி கட்டறதுன்னா எல்லா வாத்தியங்களும் சேர்ந்து எத்தனை வகை தாளங்கள் உண்டோ அத்தனையையும் வாசிச்சி முடிச்சிட்டு, அதுக்கப்புறம் மொதல்ல விநாயகர் துதி, அடுத்து கலைவாணி துதி, அதுக்கப்புறம் முருவன் துதி, நாலாவதா பொது விருத்தம். இது முடிய எப்படியும் ஒரு நாப்பத்தஞ்சி நிமிசம் ஓடிப்புடும்.. இதான் களரி கட்றது. இதுக்கப்புறம்தான் கட்டியக்காரன் பிரவேசம். அவன் எப்படியும் ஒரு இருவது நிமிசம் அறிமுகம், ஆட்டம் பாட்டம்னு இழுத்துடுவான். அதுக்குள்ளார மாசி வந்துட்டா போறும். முருவா! என்னப்பனே! வாத்தியாரு மனசுக்குள்ள தோத்திரம் சொல்லிக்கிட்டிருந்தாரு. மாசி வரக்கூடாது பகவானேன்னு உள்ளே சகாதேவன் வேசக்காரன் பாபு வேண்டிக்கிட்டிருந்தான். இன்னிக்கு கர்ணன் வேஷத்தை கஷ்டப்பட்டு நல்லா பண்ணிப்புட்டா அவன் அந்தஸ்து எகிறிப் போவுமில்ல? அந்த கவலை அவனுக்கு.

அதுக்கப்புறம் வாத்தியாரும் இவனை நம்பி பெரிய வேசம் குடுப்பாரு. இல்லே அந்தப் பாவி மாசி திடீர்னு வந்துட்டான்னா, எழவு மறுபடியும் ஒருக்கா வேசத்த கலைச்சிப்புட்டு,. சகாதேவன் வேசங் கட்டணும். ஹும்! ராத்திரி முழுக்க ஆட்டத்தில சகாதேவனுக்கு நடுவால அஞ்சி வரி கடைசியில அஞ்சி வரி வசனம் அவ்வளவுதான்.. அத்தோட பதினெட்டாம் நாள் போர்ல மட்டும்தான் வேலை. சகுனிய சகாதேவனும், நகுலனும்தான் வதம் பண்றது. தூத்தெரி! இந்த பவுசுக்கு இத்த ஒரு வேசம்னு கட்றேன் பாரு. பதினேழு நாளா தூங்காம முழுச்சி, தினசரி பேசறது என்னமோ அதே ரெண்டு அஞ்சி வரி வசனம்தான். சில நாளு மேடையில சிப்பாயி மாதிரி நாலோட அஞ்சா போய் நிக்கிறதோட முடிஞ்சிப்புடும். ஹும்! நாமளே மேலு. இதுக்கும் கேடு நகுலன் வேஷம். ஸ்டேஜ்ல போவலாம் வரலாம், வயைத் திறக்க வழியில்லை. தனக்கும் கீழேயும் ஒருத்தன் இருக்கான்றதில ஒரு திருப்தி, சந்தோசம். ஆச்சி. களரிகட்டி முடியற நேரம். பொது விருத்தம் போய்க்கிட்டிருக்கு. கர்ணன் தர்பார் பிரவேசத்துக்கு தயாராக நிக்கிறான். திரைக்கு பின்னாலேயே நின்னுக்கிட்டு மத்தவங்களோடு சேர்ந்து பொது விருத்தத்தை பாடிக்கிட்டு கட்டியக்காரன் கோபாலு தயாராக நிக்கிறாப்பல. வேகமா வந்த நாட்டாமை கோவமாய் கத்திட்டு போறாரு.

”இன்னாய்யா பத்தரை மணியாவுது. ஒரே பாட்டையே இழுத்து இழுத்து வுட்டுக்கிணு பஜனை பண்றீங்களா?. சொம்மா அனாவசியத்துக்கு நீட்டின மவனே ஜாக்கிரதை ஆட்டத்தை நிறுத்திப்புடுவோம்.”— ஆச்சி விருத்தங்களை பாடி முடிச்சாச்சி. அடுத்ததாக கட்டியக்காரன் மேடையேறி ஒரு விருத்தம் பாடி, கதை விலாவரியைச் சொல்லி, கதையின் பாத்திரங்களை அறிமுகம் செஞ்சி முடிக்கணும், முடிச்சிட்டான். அடுத்ததா கர்ண மகாராஜா பிரவேசம்தான். வாத்தியாரு கவலையோடவும், கர்ண வேசம் கலவரத்தோடவும் நிற்க, கர்ணன் பிரவேசத்துக்கான நேரம் வந்திடுச்சி. வாத்தியாரு பாபுவை மேடைமேல புடிச்சி தள்ளிவுட்டாரு. “கதிரவன் ஈன்ற மைந்தன்”- ன்னு ஆரம்பிச்சி ரெண்டு அடி பாடிட்டு கிறிக்கி அடிக்க ஆரம்பிச்சான். பாவி பத்தாவது கிறிக்கியிலேயே கி..ர்..ர்…அடிச்சி கீழே விழுந்தான், அந்நேரத்துக்கு கட்டியக்காரன் ஓடிப்போயி தாங்கிப் புடிக்கவே தப்பிச்சிது. எல்லா சங்கடங்களையும் கட்டிக்காரன் தான சமாளிச்சாவணும்?.

“ இன்னாய்யா கர்ண மகாராஜா! சரக்கு ஓவரா பூடுச்சா?”—கொல்லென்று சிரிப்பு கெளம்பியது..கிட்ட போயி மோந்துட்டு

“இல்லியே. பாவம் பசி மயக்கம். ஹும்! வர்றப்ப ஒரு ஜோடுதலை கூழு குடிச்சிட்டு வந்திருக்கலாம் இல்லே?. இது முழுபட்டினி முக்காபட்டினி ராஜாவாட்டம் இருக்குதுடோய். ”—-கூட்டத்தில் மீண்டும் சிரிப்பு கெளம்பியது. கர்ணன் அடுத்து ஒரு பத்து நிமிசம் வசனம் பேசியிருப்பான். ஏதோ அவன் சக்திக்கு சுமாரா வசனம் பேசி பாடினான். ஆனால் அதுக்குள்ளார ஏழெட்டு விவரவாளிகள் மேடைக்குப் பின்னால படையெடுத்துட்டாங்க.. “யோவ்! கர்ணன் வேசத்தை மாசிதான கட்றது?.இன்னைக்கு இன்னா?.”—–அவங்களை ஒருமாதிரி சமாளிச்சி அனுப்பி வைக்க, கூத்து நடக்க ஆரம்பிச்சிது. ஊமைக்கு உளறுவாயி மேலுன்னு சகாதேவன் பாபு ஒருமாதிரி சமாளிச்சி நடிச்சிக்கிட்டு இருந்தான். மாசி வேசம் கட்றப்ப அப்பப்ப கைத்தட்டலும் விசிலும் பறக்கும். இப்ப அது இல்லாமப் போச்சி.

அந்த நேரத்துக்கு வேர்க்க விறுவிறுக்க மாசி ஓடிவந்து உள்ளே நுழைஞ்சான். பார்த்ததும் தற்காலிக கர்ணவேசம் சோர்ந்து போயி படுத்துக்கிச்சி. போச்சி கர்ணன் பாடத்தையும், பாட்டுங்களையும், ரெண்டு தடவை மனசுக்குள்ளார மெனக்கெட்டு ஒத்திகை பார்த்தது அத்தனையும் வேஸ்ட்டு. ச்சீ! இது ஒரு பொயப்பா எனுக்கு?. புலம்பிக் கொண்டிருந்தான். மாசி வந்ததும் கண்கள் கலங்க வாத்தியாரு கைய புடிச்சிக்கிட்டு நின்னான். “வூட்ல கொஞ்சம் சண்டைப்பா. பஸ்ஸை வுட்டுட்டேன், அதான் லேட்டு. மன்னிச்சிக்கப்பா.” —அவரு ஒண்ணும் சொல்லல. சரி இப்ப நெலமையை சுதாரிக்கணும். நடந்து கிட்டிருக்கிற கர்ணன் சீனை பாக்கிறவனுக்கு தெரியாதபடிக்கு கட் பண்ணி, அடுத்து வர்ற பொன்னுருவி அறிமுகப் படலம் சீனை வெச்சாரு. “மாசி! .ஓடு..ஓடு..சீக்கிரம் போயி வேசம் கட்டு. டேய் பாபு! வேசத்த கலைச்சிட்டு உன் வேசத்துக்குப் போ. ஜல்தி..ஜல்தி. “—பாபு அழமாட்டாத குறையாய் எழுந்து போனான். வாத்தியாரு வாத்திய கோஷ்டியாண்ட ஓடிப்போயி இன்னும் ஒரு பத்து நிமிசத்துக்கு நீட்டச் சொல்லி ஆர்மோனியம் காதை கடிச்சிட்டு வந்தாரு. வந்து கர்ணன் வேசம் போட்றதுக்கு கூடமாட ஒத்தாசை பண்ண ஆரம்பிச்சாரு. சன்னமான குரலில் “இன்னாடா சரோஜ கிட்ட சண்டையா?. எதுக்குடா?.” அதெல்லாம் கேக்காதப்பா. வுட்ரு. எந்நேரமும் நானு வூட்லியே இருக்கணும்னா பூவாவுக்கு இன்னா பண்றது?.” —மெளனமாக கால்ல சலங்கையைக் கட்டிக்கிட்டிருந்தான். முகம் கறுத்துக் கிடந்தது. “வுடு வுடு வுட்றா. வூட்டுக்கு வூடு வாசப்படிதான். இப்ப வூட்டு நெனைப்பே வரக்கூடாது.. மேடையேறி நின்னுட்டா பொயுது விடியிடற மட்டும் வூட்டை மறந்துப்புடணும். இப்ப நீ யாரு?, கர்ண மகாராஜா. உன் புத்திக்குள்ள அதான் நிக்கணும். உள்ளே பொன்னுருவிதான் இருக்கணுமே ஒழிய சரோஜா வரக்கூடாது. கூத்துல மொத பாடமே இதானடா?.”—சொல்லிவிட்டு சிரிச்சாரு. பொன்னுருவி வேசம் கட்டிக்கிட்டிருந்த ரகுபதி கேட்டுவிட்டு ஒய்யாரமாய் நடந்து வந்து, மாமா! ன்னு மாசி தோளைப் பற்றினான். “அட தடிக் கயுதை! இன்னாடா பாடத்தை மாத்தி பேசற?. நாதா!..என் பிராண நாதா!..” —–இப்ப மாசி கண்ணை தொடைச்சிக்கிட்டு சிரிச்சான்.

மாசி கர்ண மகாராஜனாய் மேடையேறிட்டான். ச்சே! இவன்தாண்டா ஆட்டக்காரன். இன்னா கெத்து?. அவன் புடிக்கிற அடவுகள் ஒவ்வொண்ணும்.அ.ப்.ப்.பா.. வாத்தியாரே கொஞ்ச நேரம் நின்னு ரசிக்கிறாரு. மொத பிரவேசமாட்டம் நாலரை கட்டையில –“கதிரவன் ஈன்ற மைந்தன். தான தரும தயாள குணசீலன், அதி வீர தீர பராக்கிரமன், கர்ணமகாராஜன் வந்தேன்”– ன்னு பாட்டெடுத்து கரகரன்னு கிறிக்கி அடிச்சான் பாரு. ஒரே நெட்டுல அம்பது கிறிக்கி. அந்த கோடி வரைக்கும் படபடன்னு கைத்தட்டல்கள் ஓரு அஞ்சி நிமிசத்துக்கு பொரிஞ்சி தள்ளிடுச்சி. அடுத்த பத்து நிமிசத்துக்கு கர்ணன் அறிமுகப் படலம் நடந்து முடிய, அந்நேரத்துக்கு உள்ளே நுழைஞ்ச சகுனி கர்ணனை பார்த்துட்டு திகைச்சி நின்னுட்டான். அப்புறம் கர்ணனைப் பார்த்து உரக்க. “யார்றா நீ?. நீயா கர்ணன்?. இதுக்கு முன்ன கர்ணன்னு வந்து கிர்.ர்.ர.டிச்சி சாய்ஞ்சானே அவன்.யாரு?” கட்டியக்காரன் ஓடிவந்தான். “(மெதுவான குரலில் ஜனங்க பக்கம் திரும்பி) இவன் சில்மிஷமான ஆளுதான். நூறு குறும்புன்றது செரியாத்தான்டா இருக்கு. இவன் எங்க போனாலும் பிரச்சினைதாண்டா. ஒரு நிமிசம் சும்மா இருக்குறானா பாரு.. டேய்!..டேய்!..வில்லங்கம் புடிச்சவனே. (சகுனியின் பக்கம் திரும்பி பவ்வியமாக) இரு..இரு.. ஐயா!! கூனு மகாராசா!” “டேய்! என்ன சொன்னாய்?. நான் காந்தார நாட்டு இளவரசன் சகுனிடா மடையா.” “இ..இ..இல்லபா காந்தார நாட்டு எழவரசே! சகுனி மகாராஜா! அப்படீன்னுதான் சொன்னேன். இதோ பாரு சனியன் மகாராசா ச்சீ.. சகுனி மகராசா! இவருதான் கர்ணன்னு நான் ஒத்துக்கினேன், இதோ அமர்ந்திருக்கிற நம்முடைய இந்த குடிமக்கள் அவ்வளவு பேரும் ஏத்துக்கினாங்க. இதுல உனக்கு எங்க நோவுது?.— அவன் பண்ணிய அபிநய சேட்டையில் கூட்டம் குதூகலிச்சிது. “டேய்..! என்னையா அவமானப் படுத்துகிறாய்?. நான் யார் தெரியுமாடா?. அதாகப்பட்டது காந்தார நாட்டை கட்டியாண்ட வீரபராக்கிரம் பொருந்திய சுலபா சக்கர்வர்த்தியின் இளைய புத்திரனும், திருதராஷ்டிர மகாராஜாவின் பட்டத்து ராணியுமான காந்தாரியின் சகோதரனும், துரியோதனனின் மாமனுமான, இளவரசன் சகுனிடா. மாவீரன் துரியோதனனே எங்கிட்ட அடங்கிப் போவாண்டா மடையனே! நாளைக்கு உன் கதையை முடிக்கிறேன் பார்.” —-கட்டியக்காரன் ஜனங்க பக்கம் திரும்பி “ டியேய்! நாளைக்கு பதினெட்டாம் போர்ல மொத பலியே நீதாண்டீ. காலங்காத்தாலயே போட்டுத் தள்ளப் போறோம். பாடை கட்டிடவேண்டியதுதான். இரு. என்னையா காலி பண்ற?..நாளைக்கு காலங்காத்தாலயே உனுக்கு உ..உஊ சங்குதாண்டீ.” “என்னடா மடையனே.” “பாடை…பாடை” “என்னடா சொன்னாய்? டேய்!…டேய்..!” “படை..படைன்னுதான சொன்னேன். சகுனி எழவரசே..”—–தெரு முழுக்க சிரிப்பலை.

அந்த நிமிசத்திற்கப்புறம் கீழே தெரு முழுக்க வியாபித்திருந்த மக்கள் கூட்டம் கர்ணனுடனேயே வாழ ஆரம்பிச்சிட்டாங்க, போர்க்களத்தில அவனுடன் சேர்ந்து சண்டை போட்டாங்க, சேர்ந்து அழுதாங்க, கோவப்பட்டாங்க. மாசியினுடைய நடிப்பு அவ்வளவு அபாரமா இருந்திச்சி. அதிலும் பீஷ்மர் அம்பு படுக்கையில சாகக் கிடக்கும் போது கர்ணன் வந்து பாக்கறானே. அந்த கட்டத்தில பேசற வசனமும், நடிப்பும், அ..ப்..ப்..பா.

கர்ணா! துரியோதனன் நல்லவன், பிறத்தியாருடைய துன்பத்தைப் பார்க்கத் தெரிஞ்சவன்டா, ஆனால் தற்குறி. எனுக்குப் பின்னால அவனைக் காப்பாத்தக் கூடிய திறமையானவன் நீ ஒருத்தன்தான்டா. எல்லாரும் போயிட்டாங்க.என் பிராணனும் முடியப் போகுது. அவன் யாருமில்லாம நாதியத்தவனா ஆயிடுவான்.. அதனாலதான் நான் உசுரோட இருக்கும் வரைக்கும் நீ போர்க்களம் பக்கமே வரக்கூடாதுன்னு நிர்தாட்சண்யமா ஒதுக்கி, உன்னை காப்பாத்தி வெச்சேன்னு பீஷ்மர் சொன்னவுடனே கர்ணன் ஒரு விருத்தம் பாடி முடிச்சிட்டு, அவரு காலை பிடிச்சிக்கிட்டு குலுங்கிக் குலுங்கி கதறின கதறல் இருக்குதே. அதைப் பார்த்துப்புட்டு பொண்டுகள்லாம் அப்பிடி அழுதிச்சிங்க. பூஞ்சை மனசு ஆம்பளைங்கள்லாம் கூட கலங்கினாங்க. அதுக்குமேல கர்ணனை வதம் பண்ற கடைசி கட்டம். ஐயோ! ஆம்பளைங்கல்லாம் கூட மூஞ்சை பொத்திக்கிட்டு அழுதாங்க. இந்த காலத்தில ஒரு கூத்தைப் பார்த்து விட்டு யாராவது அழுவாங்களா? என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இன்றைக்கும் கிராமங்களில் அப்படி அழுபவர்களும், அவ்வளவு சிறப்பாக நடிப்பவர்களும் இருக்கிறார்கள். எங்க கூத்து நடந்தாலும், நாலைஞ்சி மைல் என்றாலும் சைக்கிளில் பொய் பார்ப்பவர்கள் இன்றும் நிறைய உண்டு. கிராமங்கள்ல பாரதக் கூத்துக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. இப்போது நகரங்களிலே கூட சில இடங்களில் சிறப்பா நடக்குது. பார்க்க செமத்தியா கூட்டம் வருது.

விடிநேரம் அஞ்சி மணிக்கெல்லாம் கூத்து முடிஞ்சிப் போச்சி. தெய்வமும் மனுஷங்களும் சேர்ந்து படிப்படியா திட்டம் போட்டு பாவப்பட்ட கர்ணனை மோட்சத்துக்கு அனுப்பி வெச்சிட்டாங்க.. காத்தால ஏழு மணிக்கெல்லாம் எல்லாரும் வேஷம் கலைச்சி, பல் தேச்சி குளிச்சிட்டு, தூக்கக் கலக்கமான கண்களோடு டிபனுக்கு காத்திருக்காங்க. ராத்திரியில தூங்கி இன்னைக்கோட பதினேழு நாள் ஆச்சி. சாப்பிட்டப்புறம் எங்கனா கட்டைய நீட்டினாத்தான் இன்னைக்கி ராத்திரிக்கு பதினெட்டாம் நாள்போர் கூத்தை நல்லா நடத்த முடியும்.திரெளபதியம்மன் கோயிலுக்கு எதிரில் பிரமாண்டமாய் தலை விரித்தபடி நிற்கும் வேப்பமரத்து நிழலில் எல்லாரும் உட்கார்ந்து இருக்காங்க. மாசி அமைதியா உட்கார்ந்திருந்தான். திருவிழாவுக்காக கீழே மணல் கொட்டி பரப்பியிருந்தார்கள், வசதியாக இருந்தது. எல்லோருக்குமே தூக்கம் இழுக்குது. மாசி இன்னும் கட்ன வேஷத்தின் சோகத்திலிருந்து வெளியே வரல. அவன் எப்பவும் அப்பிடித்தான். துக்கமோ, கோபமோ,அந்த வேஷத்தின் பாதிப்பிலிருந்து வெளிவர ரொம்ப நேரமாகிப்புடும். அப்பிடி ஐக்கியமாயிப்புடுவான். இன்னைக்கு பதினெட்டாம் போர்ல மாசி கட்டப் போறது துரியோதனன் வேஷம்.

பத்து ஆம்பளைங்க ஒண்ணா சேர்ந்துப்புட்டா, அவங்க நடுத்தர வயசுன்னாகூடபேச்சு மெதுவாக சினிமா, அரசியல் பத்திதான் ஆரம்பிக்கும். இதுல முதலிலேயோ, நடுவாந்தரத்திலியோ பேச்சு பொம்பளைங்கள பத்தி திரும்பிடும். இதுதான் எப்பவும் ஆம்பளைங்களுக்கு சுவாரஸ்யம் தர்ற விசயம். ஆனா இவங்க பேச்சில் உபரியா இதர கூத்துகளையும், கூத்தாடிகளையும் பத்தியே சுத்தி வரும். இன்னைக்கும் பேச்சு அப்படித்தான் துவங்கிச்சி.. துவக்கி வெச்சது ஆர்மோனியம் அண்ணாமலை.

“எங்க கூத்துக்குப் போனாலும் மாசிக்குன்னு நாலு பொம்பளைங்க வந்துட்துங்கடா. நேத்து கூட ஒண்ணு வந்து மொறைச்சிங் கெடந்துச்சே கவனிச்சீங்களாடா?. “ஆமாமா கவனிச்சோம்.”—-அதுக்கு மாசியிடமிருந்து எந்த ரியாக்சனுமில்லாத்தினால, பேச்சு வேற கட்டத்துக்கு போச்சி.

“யோவ் ராமா! எப்பவும் எதனா ஒரு ஊரு வம்பை வெச்சிருப்பியே வாய்யா இந்தப் பக்கம்..”— மறைவா வாய்ல பீடியோட இருந்த ராமன் பீடியை தேய்ச்சி கருக்கிட்டு சிரிச்சிக்கிட்டே கிட்ட வந்து உட்கார்ந்தான். அவன் கம்பெனி ஒப்பனைக்காரன்.

“ அண்ணாத்த! விழுப்புரம் தாண்டி அத்திப்பட்டுல தேவன் கம்பெனி இருக்குதில்ல?. அதில எனக்குத் தெரிஞ்ச ராஜபார்ட்டு ஒருத்தன் இருக்கான்பா. அவன் கதைய சொல்றேன் கேளு. சேட்டுன்னு பேரு நல்லா கட்டுமஸ்த்தா படா ஷோக்கா இருப்பான்.” “இருந்துட்டுப் போறான் அத்த சொல்லவா இங்க வந்த?..” —இது சங்கரு. “கம்னு மூடிக்கிணு கேள்றா. அழவா கட்டுமஸ்த்தா இருக்கிறதினால மட்டுமே பொம்பளைங்களை வசப்படுத்த முடியாதுன்னு சேட்டுவ பார்த்து தெரிஞ்சிக்கினேன். அவன் இரணியன் வேசம் கட்னா மேடை அதிரும்டா. கிறிக்கி கட்றதில படு சூரன். பாவம் அவனுக்கு பாரு, அங்க அவன் மேடையில கூத்தாடுனா, அவன் பொண்டாட்டி வூட்ல கமானமா அவளோட கள்ளப் புருசனோட கூத்தடிக்கிறாளாம். போன செவ்வாக் கெழம என்னைப் பார்த்துப்புட்டு எங்குடும்பமே சீரழிஞ்சி போச்சி அண்ணாத்தேன்னு சொல்லி அப்பிடி அழுவறான்..”—-அடப்பாவி இத்த எவனாவது வெளியே சொல்வானா?. இவனை தன் உடம்பொறப்பாட்டம் நெனைச்சி நம்பி பாரத்த இறக்கி வெச்சிருக்கான். அத்த இந்த கம்மனாட்டி பொதுவுல இப்படி ஏலம் போட்டுட்டானே என்று மாசி எரிச்சல் பட்டான். அந்நேரத்துக்கு குட்டி ராஜு சங்கர் கிட்ட ரகசியமா என்னமோ சொல்ல ரெண்டு பேரும் குபீரென்று சிரித்தார்கள்.

“அதான பார்த்தேன். நீ வாயைத் திறந்தா இந்த கதைதானே மாளும்”.——. எல்லோரும் கொல்லுன்னு சிரிக்க, மாசி அதில சம்பந்தப் படாதவனா காலை நீட்டி படுத்து விட்டான். “ராஜபார்ட்டுக்கு இந்த விசயம் தெரியாதா?.” “தெரிஞ்சி இன்னா பண்றதாம்?. நாட்டையே ஆள்ற ராஜான்னாலும் கீழ எறங்கினா கூஜா. இத்தினிக்கும் அவங்களுக்கு வயசு வந்த ரெண்டு பொம்பளை புள்ளைங்க இருக்குதுபா. இருந்தும் பப்ளிக்கா நடக்குதாம். எதிர் வூட்டுல ஒருத்தன், அவளோட சொந்தத்தில இன்னொருத்தனாம்.” “அட தேவுடா! கட்னவன் இல்லாம ரெண்டு பேரா?. அப்ப அயிட்டம்.”- அதுக்குமேல எல்லாரும் கொஞ்ச நேரத்துக்கு அந்த கதையை விலாவாரியா பிரிச்சி மேய்ஞ்சி சிரிச்சிக்கிட்டிருந்தானுங்க. கேட்டுக்கிட்டிருந்த நாயுடு கோபத்துடன் சீறினான். “சீ! இன்னா மானங்கெட்ட பொழப்பு. ராஸ்கோலு அம்மாம் திமிரு எப்பிடி வரும் அவளுக்கு?. பெத்த பொண்னுங்களைப் பத்தி நெனைச்சாளா?. அப்படிப்பட்ட தெவிடியாள அங்கியே புடிச்சி துண்டு துண்டா வெட்டத்தேவல ஒரு ஆம்பளை?.” “அதெல்லாம் ரோஷக்காரனுக்குதாண்டா.அவ வூட்டுக்காரன் எல்லாத்தையும் வுட்டுட்டுதான திரியறான்?.” “அட நாலு வூட்டு சோத்த துன்னவளுக்கு ஒரு வூட்டு சோறு புடிக்கதுபா.”—இத்த சொன்னது டோலக்கு குட்டி ராஜு.அதுக்கு எல்லாரும் அப்பிடி சிரிச்சானுங்க. மாசிக்கு வருத்தமாக இருந்தது. திரும்பி கோபத்துடன் அவர்களைப் பார்த்தான்.

“டேய்! ஆம்பளைங்கதான்டா நாலு வுட்டு சோத்த திம்பான். தின்னுப்புட்டு தின்னேன்னு பெருமையா கூட ஆம்பளதான் பேசலாம், பொம்பளை சொன்னா அர்த்தம் வேற. மானத்துக்கு அஞ்சி எதாயிருந்தாலும் புழுங்கிங் கெடக்கிறவதாண்டா பொம்பள. கற்புன்ற ஒண்ணை வெச்சித்தான அதுங்கள காலங்காலமா அடக்கி வெச்சிருக்கோம்?. ”—மாசி எழுந்து கொஞ்சம் காரத்தோடவே சொன்னான்..

“கட்றது என்னமோ கோமணமாம்!, நடக்குறது வெள்ளக்காரன் கணக்காவாம். மூட்றா சர்தான். ஒருத்தி அஞ்சிபேரை வெச்சிக்கலாம் ன்றதுக்கு இது இன்னா துவாபர யுகமா?. இல்லே அவதான் திரெளபதியா?.”—-இது அண்ணாமலை.. அங்கே குபீர்னு சிரிப்பு வெடிச்சிது. மாசியின் எரிச்சல் இன்னும் கூடியது.

“ யோவ்! திரெளபதிய அன்னைக்கு துச்சாதனன் சபையில இழுத்தான்னா இன்னைக்கு நீ இழுக்கிறீயா?. பாவம்யா. அவ மாதிரியான ஒரு பாவப்பட்டஜென்மம் மகாபாரதத்தில வேற யாருமே கெடையாது தெரிஞ்சிக்க.” —-வாத்தியாருக்குப் புரியல.

“டேய் மாசி! இன்னா உளற்ற?. இன்னாத்த கண்டுட்ட நீ?. கர்ணனையும், பீஷ்மரையும் விடவாடா?, இதுக்கு மேல சின்ன பையன் அபிமன்யு இருக்கிறாண்டா. மடையனே! குருசேத்திரப் போர்ல லட்சம் லட்சமா ஜனங்க செத்தாங்களே. அதுக்குக் காரணம். திரெளபதியோட ஆத்திரம்தானடா?. கதை போக்கு தெரியாம பேசக்கூடாது. பி.ஏ. வரைக்கும் படிச்சவன்றதாலதான் இப்படியெல்லாம் யோசனை வருதாடா உனக்கு?.”— வாத்தியாரு கோவப்பட்டாரு,

“ வாத்தியாரய்யா! ஒரு பொம்பளய அம்மாம் பெரிய சபையில கட்ன துணிய உருவி… ஐயோ பாவம் சபையில எந்த பொம்பளைக்கும் வரக்கூடாத அப்படியொரு மானபங்கத்தை அனுபவிச்சா. இரண்டாவதா பாரதப்போர் முடிஞ்சி துரியோதனின் ரத்தத்தை தன் கூந்தல்ல தடவி தன் சபதத்தை முடிச்சி, பட்டத்து ராணியா சிம்மாசனத்தில உக்காந்த அப்புறமும் கூட அவளுக்கு சந்தோஷம் கிட்டல. தன் புள்ளைங்க அஞ்சிபேரையும் ஒரே நேரத்தில் அஸ்வத்தாமனால பறி கொடுத்துட்டு நின்னாள். அடுத்ததா ஒரு வருசம் ரெண்டு வருசம் இல்ல, அவ கட்டையில போறமட்டும் அஞ்சிஆம்பளைங்களுக்கு பொண்டாட்டியா மல்லுக்கட்டியிருக்கா. அது ஒண்ணே போதும், அவ ஒடம்பை அஞ்சிபேரு புழங்கியதில அவ எம்மா இம்சையை அனுபவிச்சிருக்கணும்?. ஒரு மனுஷிக்கு இத்த விட பெரிய டார்ச்சர் வேற இன்னா இருக்க முடியும்?. சொல்லுங்க.. இந்த கஷ்டத்த அவ விரும்பி ஏத்துக்கல, அவமேல திணிச்சாங்க.”—என்று மாசி புதுசா விஷயத்தின் இன்னொரு கோணத்தைக் காட்டி பேசினான். “டேய் மாசி! அதெல்லாம் கதைதானடா?.”—-வாத்தியார் “அது எப்படி? நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். கூத்துப்பட்டரையிலும் போனமாசம் சொன்னாங்களே நீங்கள்லாம் கேக்கல?. குருசேத்திரப் போர் நடந்த இடம் ஹரியானாவில இருக்குதாம். கிருஷ்ணன் ஆண்ட துவாரகாபுரி நாடு கடலுக்குள்ள இருக்குது. அகழ்வாராச்சியில கண்டுபிடிச்சிட்டாங்களாமே. அப்ப எல்லாமே நிஜம்தான?.—-வாத்தியாரு கொஞ்ச நேரம் எதுவும் பேசல.

“ ஐயா! என்னதான் அவ வருஷத்துக்கு ஒருத்தரோடதான் வாழ்ந்தான்னு கதையில சப்பைக் கட்டு கட்டியிருந்தாலும்,இந்த விஷயத்தில அப்படியெல்லாம் மனுஷன் கறாரா கோடுபோட்ட மாதிரி எல்லாம் இருந்திருக்க முடியுமா என்ன?. அவங்களும் நம்மள மாதிரி சராசரி மனுசங்க தான?, தெய்வப் பொறப்பு இல்லையே?.கதைக்குவேணா கண்ட்ரோலா இருந்தாங்கன்னு சொல்லிக்கலாம். பாரதக் கதையில் சொன்னது பாதின்னா, சொல்லாம வுட்ட அநீதிங்க பாதி இருக்குது.”—வாத்தியாருடன் சேர்ந்து யாருக்கும் அதை மறுக்கமுடியல, மறுக்கத் தோணல. “அது பொம்பளைங்க குறைச்சலாய் இருந்த காலம்டா, அத அப்பிடித்தான் எடுத்துக்கணும். அத்த வுட்றா ஆமா இப்ப யாரு பொண்டாட்டியடா துண்டு துண்டா வெட்டணும்னு இங்க பேசறீங்க, அத்த சொல்லுங்கடா..”—வாத்தியாரு அந்த விஷயத்தை அத்துடன் கட் பண்ணிட்டு, விட்ட இடத்துக்கு வந்துட்டாரு. “ ஆங்.. அத்திப்பட்டுல சோரம் போனாளே அவளை.” —மத்தவங்களும் சேர்ந்து அதுக்கு ஆதரவாய் குரல் குடுத்தாங்க . வாத்தியாரு கொஞ்ச நேரம் அவங்களை கண் கொட்டாமல் பார்த்தார். “யோவ் நாயுடு! நீதானே மொதல்ல வெட்டணும்னு சொன்னவன்?.”

“ஆமாப்பா. பின்ன? கண்ணெதிரில் சோரம் போறவளை கத்திய எடுத்து சிலுக்க சிலுக்க வெட்டத்தேவலே?. வகுந்துப்புட்டுத்தான் மறுவேலை பார்க்கணும் ஹக்காங். போன வாரம் வேப்பம்பட்ல ஒருத்தன் அந்த எடத்திலியே பொண்டாட்டி வயித்தில கத்திய சொருவுனாம் பாரு அவன் ஆம்பளை.”—வாத்தியாருக்கு எரிச்சல் மேலிட்டது. நாயுடுவை கூர்மையாய் பார்த்தார். சுருசுருவென்று எழுந்த கோபத்தில் உதடுகள் துடித்தன.

“எவனைப் பார்த்தாலும் ஆன்னா வூன்னா வெட்டிப்புடுவேன் வெட்டிப்புடுவேன்னு பேசறானுங்களே. மூணாவது ஆளுக்கு நாயம் சொல்றதுனா துண்ட தூக்கி தோள்ல போட்டுக்குணு வந்திடுவானுங்களே. யோவ் நாயுடு! அதிருக்கட்டும், நீ உன் நாயத்த சொல்லு. இதுவே அது உன் பொண்டாட்டியா இருந்தா வெட்டிப்புடுவியா?.. உன் மனசுக்கு நேர்மையா இதுக்கு நீ பதில் சொல்லணும்”——–அவர் பேச்சில் கறார்தனம் இருந்தது அசையாமல் நேர் பார்வையாய் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே சிரிப்பும், கைத்தட்டலுமாய் போய்க் கொண்டிருந்த பேச்சு, சடக்கென்று ஒரு சீரியஸான கட்டத்துக்கு மாறியது.

“ தோ பாருங்கப்பா, வாய் புளிச்சதோ மாங்காய் புளிச்சதோன்னு இன்னா வேணாலும் பேசலாம். ஆனா அந்தமாதிரி எல்லாராலயும் கொலை செஞ்சிட முடியாது. அதுக்கு ஒரு அசுர துணிச்சல் வோணும். சரி, இப்பிடி வெச்சிக்குவோம்..நீதான் அத்திப்பட்டான். உம் பொண்டாட்டிதான் ஊர்மேல போறவ. சரியா?. இப்ப நீ எத்தையும் சட்டைபண்ணாம நேரா போயி அவளை துண்டுத் துண்டாய் வெட்டிப் போட்டுப்புட்டு, கல்யாணத்துக்கு நிக்கிற உம் பொண்ணுங்களை நடுத்தெருவுல அம்போன்னு வுட்டுப்புட்டு ஜெயிலுக்கு பூடுவியா?. இல்லே உம்பொண்ணுங்க கெதிய நெனைச்சி ஐயோ!ன்னு மொன்னு முழுங்கிக்கிணு அவளுக்கு புத்தி சொல்லுவியா?. சொல்லு. ,” — எல்லோருமே அமைதியாகி விட்டார்கள்.

“ இதுக்கு யாராலயும் பதில் சொல்ல முடியாதுடீ. அது அசலா அவனவனுக்குன்னு நேரும்போதுதான் நோவு தெரியும். இங்க நம்மள்ல சிலபேர் யோக்கியமில்லாம இருக்கிறோம். இதுபோல ஏறக்குறைய ஒவ்வொரு கம்பெனியிலும் ஒண்ணு ரெண்டு பேரு இருக்கிறதுதான். யோவ்! நாயுடு! உனக்கு கட்டினது இல்லாம, சேர்த்துக்கிட்டது அந்தியூர்ல ஒண்ணு, புதூர்ல ஒண்ணுன்னு இருக்குதில்ல?.. நீ பேசற வெட்டணும், குத்தணும்னு. ஹும்! இத்தையெல்லாம் வூட்டு பொம்பளைங்க மொண்ணு முழுங்கிக்கினு போவல?…ஏற்கனவே வருஷத்தில பாதி நாளுக்கு மேல கூத்துன்னு வெளியூர்ல கெடக்கிறோம். அதுக்குமேல வூட்டுக்கு வந்தா மொடாக்குடி, குடிச்சிப்புட்டா பொண்டாட்டிய ஒதைக்கணும். நாம தர்ற குடைச்சலுக்கு ஒழிஞ்சிபோடான்னு சாப்பாட்ல துளி பாலிடால் கலக்க அவுங்களுக்கு எம்மாம் நேரம் ஆவும்?. ஏன் செய்றதில்ல?. புள்ளைங்களுக்கோசரந்தான். ஆணோ, பொண்ணோ, பெத்த பசங்களுக்கோசரம் சகிச்சிக்கிட்டு திருத்தத்தான் பார்ப்பாங்களேயொழிய வெட்டிப்புட்றது இல்ல.

அது அடுத்த வூட்டு விஷயம்ன்றதால, இஷ்டத்துக்கு ரெண்டு கள்ளப் புருசன், மூணு கள்ளப் புருஷன்னு சரடு வுட்டுக்குணு, கீழ்வெட்டு வெட்டி சிரிச்சிக்கிணு, த்தூ! இதில ஒரு சந்தோசமாடா உங்களுக்கு?. நல்லா கேட்டுக்கோங்க. அடுத்தவன் பொண்டாட்டிய தாசி, வேசின்னு பேசின துரியோதனனை கூத்தாடிங்க நாம இன்னா பண்றோம்? வருஷாவருஷம் பதினெட்டாம் போர்ல தண்டனை குடுத்து, ஜனங்களுக்கு நீதிய சொல்றோமில்ல?.. அப்புறம் கொஞ்சம் கூடவெக்கமில்லாம நாமளும் அதே தப்பை செய்யலாமாடா?. அந்த நீதி நமக்கு இல்லையாடா?. நாட்ல எத்தினி துரியோதனனுங்கடா?. நாடு தாங்காது வாணாம்டா. மனசு கூசணும்டா.”—

வாத்தியார் சற்று வலுத்த குரலில் கோபத்துடன் இடித்தார். எல்லோரும் மெளனமாகி விட்டார்கள். அத்துடன் வாத்தியாரு எழுந்தார் “ஆமா ஏண்டா இந்த கதைக்கு நீங்க அத்திப்பட்டு வரைக்கும் போவணுமா இன்னா?” — கேட்டுவிட்டு டிபன் என்னாச்சின்னு விசாரிக்கப் போயிட்டாரு. வாத்தியாரு கேட்டகேள்வியிலும், அவரிடம் துளிர்த்த நக்கல் சிரிப்பிலும், அவர் சொல்லாத இன்னொரு அர்த்தத்தை அது கொடுக்க, அந்த நிமிஷம் நெசமாவே இது அத்திப்பட்டான் கதைதானா? என்ற சந்தேகம் அங்கிருந்தவர்களுக்கு தோண ஆரம்பிச்சிடுச்சி. அவ்வளவுதான் அத்துடன் அவர்களுடைய தூக்கக் கலக்கங்கள் தொலைஞ்சி போக, மாசி கூட எழுந்து உட்கார்ந்து விட்டான். ஆக இதுவரைக்கும் இங்கே அரிதாரம் பூசாமல் அரங்கேறிய இந்த இன்னொரு கூத்து இத்துடன் நிறைவு பெறுகிறது.

– இந்தக் கதை `மோட்சம்’-என்ற பெயரில் ஆகஸ்ட்2016 `கணையாழி’ இதழில் பிரசுரமானதாகும்.

Print Friendly, PDF & Email
நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *