கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 25, 2020
பார்வையிட்டோர்: 8,813 
 
 

நெல்லையப்பபிள்ளை குறுக்குத்துறையை நோக்கி வேகமாக சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். இரவு மணி பத்துக்கும் மேலருக்கும். அன்று மதியம் தென்காசிக்குப் போயிருந்தார். அவருடைய ஒண்ணுவிட்ட அண்ணன் மகள் துர்கா தூக்கு மாட்டிச் செத்துப்போனாள். சவத்துமூதி புருஷனைப் பிடிக்கலைன்னா அத்து எறிஞ்சிட்டு வரவேண்டியது தானே…வர வர பிள்ளைகளுக்குத் தைரியம் காணமாட்டேங்கி… சேதி தெரிந்தபிறகு போகாமல் இருக்க முடியாது. அவர் வேலைபார்த்த அரிசிக்கடையில் ஒரு நாள் லீவு சொல்லி விட்டு துட்டி வீட்டுக்குப் போய்விட்டு இப்போது தான் திரும்பியிருந்தார். உடனே சைக்கிளை எடுத்துக் கொண்டு குறுக்குத்துறை தாமிரபரணியில் குளிக்கக் கிளம்பி விட்டார். பிரளயமே வந்தாலும் அவருக்கு இரண்டுவேளை குறுக்குத்துறை இசக்கியம்மன் படித்துறையில் ரெண்டு முங்காச்சி போட வேண்டும். அதற்கு நேரம் காலமெல்லாம் கிடையாது. எந்த ராத்திரியாய் இருந்தாலும் சரி. கோடையோ, மழையோ, குளிரோ, எப்படியிருந்தாலும் சரி. போய்க்குளித்து விடுவார். வெளியூர் போயிருக்கிற நாட்களில் ஏங்கிப் போய்விடுவார். ஊரிலிருந்து வந்தவுடன் ஆத்துக்குக் கிளம்பி விடுவார். அதுவும் குறுக்குத்துறை இசக்கியம்மன் படித்துறையில் தான் குளிப்பார். எவ்வளவு கூட்டமிருந்தாலும் சரி. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் சரி. அந்த இடத்தைத் தவிர வேறு எங்கேயும் குளிக்க மாட்டார். இன்னிக்கு சைக்கிள் சாலையில் போவதே தெரியவில்லை. வழுக்கிக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. கடையத்திலிருக்கிறவரைக்கும் ஏன் திருநெல்வேலி வந்து சேர்கிற வரைக்கும் கூட மனசு கனத்துக் கிடந்தது. ஆனால் சைக்கிளை எடுத்து ஒரு மிதி மிதித்து ஏறி உட்கார்ந்ததும் அப்படியே மனசில் காற்று வீசியது. லேசாகி பறக்க ஆரம்பித்தது. அவருக்குக் கொஞ்சம் பார்வைக் குறைபாடு உண்டு தான். இருந்தாலும் இன்னிக்கு அந்த இரவு விசித்திரமாக புகைபோன்ற பனித்திரை விழுந்து ஓவியம் போலத் தெரிந்தது. அவர் அந்த ஓவியத்துக்குள் தன்னுடைய பழைய கீச்சிடும் ஹெல்குலீஸ் சைக்கிளோடு போய்க் கொண்டிருந்தார்.

வானத்தில் நட்சத்திரங்கள் கைகளினால் பறித்து விடலாம் போல அவ்வளவு பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. நட்சத்திரங்களின் ஒளியில் சைக்கிள் மிதந்த மாதிரி ஓடியது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ஓங்கி வளர்ந்த மருத மரங்களின் கிளைகள் காற்றில் அவருக்குப் பிடித்தமான சட்டி சுட்டதடா கை விட்டதடா நெஞ்சில் பட்டதடா என்ற பாடலை அப்படியே பாடிக் கொண்டிருந்தன. இந்தப்பாட்டை வீட்டில் கொஞ்சம் உற்சாகமாக இருக்கும்போதெல்லாம் பாடுவார். அவர் பாடத்தொடங்கியதும் அவருடைய மகள் சங்கரகோமதி

“ ஏளா அப்பாவைப் பாரு திரும்பவும் அந்தப்பாட்டையே படிக்க ஆரம்பிச்சிட்டா…..”

என்று கத்துவாள். உடனே வடிவு

“ உங்களுக்கு வேற பாட்டே கெடைக்கலியா…இதென்ன பாட்டு சவத்துப்பய பாட்டப்போட்டிருக்கான் பாரு…”

என்று கோபிப்பாள். அவர் உடனே பாட்டை நிறுத்திவிடுவார். எப்படி அவரிடம் இந்தப்பாட்டு ஒட்டிக்கொண்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்தப்பாட்டை கேட்குபோதோ, பாடும்போதோ அவருடைய மனதில் ஒரு பேரமைதி நிலவும். வெளியில் உள்ள எந்த இரைச்சலும் கேட்காது. சாந்தி..சாந்தி..அவர் மௌனமாகி விடுவார்.

சைக்கிளை அவர் ஓட்டுவதைப் போலத் தெரியவில்லை. சைக்கிள் அவரை அழைத்துக் கொண்டு போவதைப் போல இருந்தது. குறுக்குத்துறைச்சாலையின் இரண்டு பக்கச்சரிவிலும் விரிந்திருந்த வயக்காட்டிலிருந்த நெற்பயிர் பால் பிடிக்கத்தொடங்கியிருந்த காலமாக இருந்தது அது. இரவின் வெளியெங்கும் அந்தப்பாலின் பச்சைமணம் பெருகியது. அந்த மணத்தின் ருசியில் ஆண்களும் பெண்களும் தாய்ப்பால் குடித்த நினைவின் சுருள் விரிய வாயைச் சப்புக்கொட்டிக் கொண்டே திரும்பிப் படுத்தனர். ஒரு கணம் நெல்லையப்பபிள்ளைக்கும் அம்மையின் ஞாபகம் வந்தது. ஏழு வயது வரை அம்மையிடம் பால் குடித்துக் கொண்டு திரிந்தவர். அந்த முலைகளின் வெதுவெதுப்பும், குளிர்மையும் இப்போது அவருடைய உடலில் ஓடி மறைந்தது. அந்த கருஞ்சாம்பல் நிற இரவும், குளிரும் காற்றும் அவருக்கு ஒரு அபூர்வக்கனவைபோலவே இருந்தன. அவருக்குக் கனவுகளே வருவதில்லை. படுத்த இரண்டாவது நிமிடத்தில் குறட்டை விடுகிற வர்க்கத்தைச் சேர்ந்தவர். ஆண்டுக்கு ஒன்றோ இரண்டோ கனவுகள் வந்தால் ஆச்சரியம். மிகுந்த பிரச்னைகளினால் மனம் கிலேசமுற்று இருக்கும்போது தான் கனவுகள் திடீரென முளைத்து வரும். அந்தக்கனவுகளில் அவருடைய அம்மையிடம் அவர் பால் குடித்துக் கொண்டிருப்பார். சிலநேரம் ஐம்பத்தைந்து வயதான அவர் அம்மையின் மடியில் படுத்துக் கொண்டு பால் குடிக்கிற காட்சி கொஞ்சம் ஐயறவாகத்தான் இருக்கும். ஆனால் கனவிலிருந்து முழிக்கும்போது மனம் லேசாக இருப்பதைப் போல உணர்வார்.

ஒருவேளை அம்மையின் கதகதப்பான அரவணைப்பைத் தேடித்தான் ஆத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறாரோ. படித்துறையின் படியில் இறங்கி அந்தத் தண்ணீரில் முதல் காலை வைக்கும்போது ஒரு சிலிர்ப்பு உயிருக்குள் ஓடும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீருக்குள் உடம்பு இறங்க இறங்க கதகதப்பாய் தழுவும் நீர் அவரை அறியாமல் அம்மா என்று முனக வைக்கும். தாமிரபரணியும் களக்..ப்ளக்… என்று கொஞ்சிக் கொண்டு போகும். அந்தக் கொஞ்சலைக் கேட்கும்போது ஒரு பெண்ணின் சிணுங்கலைப் போல, ஒரு குழந்தையின் மிழற்றலைப் போல ஒரு கிழவியின் பொக்கைவாய்ச் சிரிப்பைப் போல தோன்றும். அவர் ஆத்தில் குளிக்கும்போது தன்னை மறந்து விடுவார். அவரும் தாமிரபரணியும் மட்டும் தான் இந்த உலகத்தில் இருப்பதைப் போல மெய்ம்மறந்திருப்பார். யார் அவரைக் கடந்து போனாலும் சரி, யார் அவரிடம் “ என்ன அண்ணாச்சி இன்னைக்கி சீக்கிரமே வந்துட்டீஹ..” என்றாலும் சரி பதிலே சொல்ல மாட்டார். எங்கேயோ பித்தநிலையில் இருப்பவரைப்போல ஒரே முழியாய் அருகில் இருக்கும் கருப்பந்துறையைப் பார்த்து முழித்துக் கொண்டு குளித்துக்கொண்டிருப்பார். சிலசமயம் கருப்பந்துறையில் எரிந்து கொண்டிருக்கும் சிதையிலிருந்து மேலெழும் புகையைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார். காற்றில் அலைவுறும் அந்தப்புகையின் உருவங்களை வைத்த கண் மாறாமல் பார்த்து பெருமூச்சு விடுவார்.

நெல்லையப்பபிள்ளை குளிக்கிறதுன்னா அப்படி இப்படி குளியல் இல்லை. எவ்வளவு நேரம் குளித்தாலும் அவருக்குத் திருப்தி வராது. சரி போகலாம் என்று ரெண்டு அடி கரையை நோக்கி எடுத்துவைப்பார். அப்புறம் ரெண்டு முங்கு போடுவார். அப்புறம் ரெண்டு அடி எடுத்து வைப்பார். மறுபடியும் ரெண்டு முங்கு போடுவார். சில நேரம் படித்துறையில் நின்று தலையைத் துவட்டி முடித்த பின்னரும் திடீரென்று நினைத்தாற்போல மீண்டும் ஆத்துக்குள் இறங்கி விடுவார். அவருடைய மனைவி வடிவு கூட “ அப்படி என்ன தான் ஆத்துல வைச்சிருக்கோ உங்களுக்கு… எதிலயும் ஒரு நிதானம் வேணும் ஆம்பளைக்கி..” என்று செல்லமாகச் சடைத்துக் கொள்வாள். அந்தச் சடைவில் ஒளிந்திருக்கும் அந்தரங்க சல்லாபத்தை நெல்லையப்ப பிள்ளையால் மட்டுமே குறிப்பால் உணர முடியும்.

அவருக்கு இந்த வாழ்க்கையைப் பற்றி பெரிய புகார் எதுவும் இல்லை. எப்படியோ வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அவருடைய பிள்ளைகளுக்கு பெரியதாய் எதுவும் செய்ய முடியவில்லையென்றாலும் அவர் ஏண்டவரை செய்தார். பையன் முத்துக்குமார் குடும்பத்துக்கேற்ற மாதிரி கஷ்டப்பட்டான். கடுமையாகப் படித்து அரசு வேலைக்குப் போய் விட்டான். போனதும் மூத்தவள் சங்கரகோமதிக்கு வரன் பார்த்து எளிமையாகக் கலியாணத்தையும் முடித்து விட்டார். மாப்பிள்ளை மருந்துக்கம்பெனி பிரதிநிதியாக இருந்தார். வடிவு ஒரு சுத்து பெருத்துத் தான் போய்விட்டாள். முன்பு முகத்தில் இருந்த புகைமூட்டம் மறைந்து ஒரு ஒளி பரவியிருந்தது. இப்போது நெல்லையப்பபிள்ளைக்குக் கூடுதல் கவனிப்பும் கிடைத்தது. ஆனால் அவருக்குள் ஒரு அதிருப்தி கனன்று கொண்டேயிருந்தது.

இரவின் கருமையைக் கிழித்து ஒளிவீசிக் கொண்டு அவ்வப்போது .இருசக்கர வாகனங்கள் அவரை முன்னும் பின்னும் கடந்து போய்க் கொண்டிருந்தன. அந்த ஒளியினால் அவர் எந்த சலனமும் அடையவில்லை. இருளுக்குள் இருள்துணுக்காக போய்க் கொண்டிருந்தார். வண்டிகளைத் தவிர ஆள்நடமாட்டம் எதுவும் இல்லை. வயக்காட்டிலிருந்து வந்து பூச்சிகளின் ரீங்காரம் ஒரு பின்னணி இசையைப் போல ஒரே இடைவெளியில் விட்டு விட்டு கேட்டது. கூடு தவறிய ஒற்றைக் கொக்கின் கதறல் இரவின் திரையில் கோடு கிழித்தது. எங்கிருந்தோ ஒரு குயிலின் கேவல் நீண்டு ஒலித்தது. சாலையின் நடுவில் சென்று கொண்டிருந்த நாய் நெல்லையப்பபிள்ளையின் சைக்கிள் சத்தத்தில் பதறி விலகி சாலையின் ஓரத்திற்குச் சென்று ஓடியது. அட மூதி.. என்று சொல்லிய நெல்லையப்பபிள்ளை சைக்கிளை விட்டு இறங்கி ஒரு மரத்திற்குக் கீழே சைக்கிளை சாத்தி வைத்துப் பூட்டி விட்டு இசக்கியம்மன் படித்துறையை நோக்கிப் போனார்.

படித்துறையை நெருங்க நெருங்க ஓடிக் கொண்டிருக்கும் தண்ணீரின் சளப் சளப் என்ற சத்தம் விடாமல் கேட்டது. அவர் படித்துறையின் படிக்கட்டில் வேட்டி, சட்டையைச் சுருட்டி வைத்து அதற்கு மேலே துண்டைப் போட்டு போர்த்தினார். பின்னர் பட்டாபட்டி டவுசரோடு ஆத்துக்குள் இறங்கப்போனார். அதுவரை மிக அருகில் கேட்டுக்கொண்டிருந்த தண்ணீரின் சத்தம் இப்போது வெகுதூரத்தில் கேட்டது. அவர் கூர்ந்து பார்த்தார். படித்துறையிலிருந்து வெகுதூரத்தில் ஒரு சிறிய ஓடையைப் போல தண்ணீர் மினுங்கியது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று கூட படியைத் தொட்டுக் கொண்டு ஓடியதே. அதுக்குள்ளயும் எப்படி இப்படி ஒடுங்கியது. அவர் ஆத்துக்குள் இறங்கினார். மணல் இல்லை. வெறும் சல்லிக்கல் தரை பாதங்களில் குத்தியது. அவர் குனிந்து பார்த்தார். இருளில் எதுவும் தெரியவில்லை. ஆனால் அடுத்த அடியில் பெரும்பாறையில் வலது கால் இடித்து விட்டது. அவரை அறியாமல் அம்மா என்று கத்தி விட்டார். அப்படியே கொஞ்ச நேரம் நின்றார். அவருக்கு ஏதோ விசித்திரமாக இருந்தது. கால்களால் பாறையைத் தடவி தடம் பார்த்து விட்டு அடுத்த அடியை எடுத்து வைத்தார். அது பெரும்பள்ளமாக இருந்தது. அப்படியே தடுமாறிக் கீழே விழுந்து விட்டார். இருட்டில் கை வைத்த இடத்தில் பிசுபிசுவென ஏதோ ஒட்டியது. சே….என்ன கருமாந்திரமோ என்று குனிந்து தரையில் கையைத் தேய்த்தார். அப்படியே மேடும் பள்ளமாக இருந்த தரையில் ஊர்ந்து போனார். சிறிது நேரத்தில் அவருடைய கண்கள் பழகி விட்டன. அவருக்கு ஆச்சரியம் என்னவென்றால் ஆத்தில் துளி மணலைக் காணோம். கட்டாந்தரையாக இருந்தது. என்னவோ மாயம் நடக்கிறது என்று அவருக்கு அரிச்சலாகத் தோன்றியது. அப்படியே முன்னால் தண்ணீரைப் பார்த்து நடந்தார்.

தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த இடத்துக்கு அருகில் வந்த பிறகும் தண்ணீரின் சத்தமே இல்லை. மிக அருகில் போனபோது தண்ணீர் அந்த இரவை விட கருப்பாய் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். ஒரு மோசமான சாக்கடை நாத்தம் அதுவும் கெட்டிக்கிடந்த சாக்கடை நாத்தம் மயக்கம் வருகிற அளவுக்குத் தீவிரமாய் நெல்லையப்பபிள்ளையைத் தாக்கியது. அவருக்கு நடந்து கொண்டிருப்பது எதுவும் புரியவில்லை. நேற்று பார்த்த ஆறு எங்கே போச்சு? சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரே இருள். இசக்கியம்மன் படித்துறை எங்கோ தூரத்தில் இருந்தது. இது நாள்வரை பேய்,பிசாசு, முனி, என்று பயந்தவரில்லை நெல்லையப்பபிள்ளை. ஆனால் இப்போது ஏதோ முனியின் காட்சிதானோ இது என்று யோசித்தார். திரும்பிவிடலாம் என்று நினைத்தபோது ஒரு பேரிரைச்சல் கேட்டது. ஒரு கணநேரத்தில் அவரைச் சுற்றி வெள்ளம் பெருகியது. பெரிய சத்தத்துடன் தண்ணீர் அலை பாய்ந்து அவரைச் சூழ்ந்த தண்ணீர் அவருடைய கழுத்து வரை உயர்ந்தது. அவர் கைகளால் தண்ணீரை அளைந்து நிதானம் கொள்ள முயற்சித்தார். ஆனால் தண்ணீரின் வேகம் அவரைத் தள்ளியது. தண்ணீரின் அளவு கூடிக்கொண்டே போகப்போக அவருக்குப் பயம் வந்து விட்டது. அவர் கைகளையும் கால்களையும் அவசர அவசரமாக வீசி அடித்தார். தண்ணீரின் பாய்ச்சலில் அவர் துரும்பு போல அடித்துச் செல்லப்பட்டார். தண்ணீருக்குள் முங்கி எழுந்தார். பயம் மறுபடியும் நெல்லையப்பபிள்ளையை தண்ணீருக்குள் இழுத்தது. அவர் வாயிலும் மூக்கிலும் தண்ணீர் நுழைந்தது. தண்ணீரைக் குடித்தபோது உப்புக்கரித்தது. மிகுந்த பிரயாசையுடன் தண்ணீருக்கு மேல் தலையைத் தூக்கினார். கருப்பந்துறையிலில் எரிந்து கொண்டிருந்த சிதை தெரிந்தது. அந்த சிதையில் கிடந்த முகம் யார்? தெரிந்த முகமாக இருந்தது. அதுவும் மிகவும் பழகிய முகம். ஆம் அது அவருடைய முகமே தான். தீ கிளம்பி எழுந்தபோது சிதையிலிருந்த நெல்லையப்பபிள்ளை கைகளை ஆட்டினார். கால்களால் உதைத்தார். நான் சாகவில்லை.. நான் சாகவில்லை என்று கத்தினார். வாய் அசைந்ததே தவிர குரல் வரவில்லை. நிமிட நேரத்தில் பெருநெருப்பாய் கிளர்ந்த தீ புகையைக் கக்கியது.

நெல்லையப்பபிள்ளைக்கு மூச்சுத்திணறியது. தண்ணீருக்குள் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தார். அம்மையின் ஞாபகம் வந்தது. அவளிடம் குடித்த தாய்ப்பாலின் மணம் திடீரென அவரைச் சுற்றிப் பரவியது. அம்மையின் அரவணைப்பின் கதகதப்பு உடம்பில் பரவியது. அவருக்குள் ஒரு அமைதி பரவ ஆரம்பித்தது. அவர் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தார். ஆவலுடன் அம்மையிடம் எப்படி தாய்ப்பாலைக் குடித்தாரோ அப்படி தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தார். அது முதலில் உப்புக்கரித்தது. சாக்கடை நாத்தமெடுத்தது. பன்னீரின் மணம் வந்தது. தாமிரவாசம் வயிற்றை நிறைத்தது. எல்லாவற்றையும் அவர் குடித்தார். என்ன இருந்தாலும் அது அவருடைய அம்மையின் பால். அவருக்கு உயிரூட்டிய பால். அவருடைய உடல் வளர்த்த பால். அவர் கொஞ்சமும் அசூயைப் படாமல் குடித்துக் கொண்டேயிருந்தார். அப்போது தான் அந்தக்குரல் அவருடைய காதுகளில் அசரீரி போல கேட்டது. அம்மையின் குரல். நெல்லையப்பா…என்ராசா,,,நெல்லையப்பா… அவருக்கு உறக்கத்திலிருந்து முழிப்பு வந்தது போல திடுக்கிட்டு விழித்து தண்ணீருக்கு மேல் தலையைத் தூக்கிப் பார்த்தார். இசக்கியம்மன் படித்துறையில் அவருடைய அம்மை நின்று கொண்டிருந்தாள். அவரைப் பார்த்துக் கைகளை ஆட்டி “ சீக்கிரம் வாலே போதும் குளிச்சது…” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவர் பார்க்க கரை வெகுதூரத்திலிருந்தது. தண்ணீர் வேகவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தண்ணீருக்கு மேல் செத்தை, குப்பை, இலை, தழை, அடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. அவர் அவற்றை விலக்கித்தள்ளினார். ஒரு இரண்டு அடி நீந்தியிருப்பார். அவர் மேலே மோதி ஒரு பிணம் நின்றது. அவர் பயத்தில் வெளிறிப்போனார். கைகளால் அதைத் தள்ளி விட்டார். சற்று தொலைவில் இன்னும் சில பிணங்கள் மிதந்து போய்க்கொண்டிருந்தன. அவர் கரையைப் பார்த்தார். கொஞ்சம் கூட தூரம் குறையவில்லை. இப்போதும் அம்மையின் குரல் கேட்டது. நீரின் இளகிய திரையில் அவர் அம்மையைப் பார்த்தார். அம்மை இப்போதும் கைகளை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

மூச்சை இழுத்துப்பிடித்து கொண்டு அவர் படித்துறையைப் பார்த்து நீந்தத் தொடங்கினார். நீந்த நீந்த கரை விலகிக் கொண்டேயிருந்தது. ஆனால் கரையில் நின்று கொண்டு அம்மை விளிப்பதும் கேட்டுக் கொண்டே தான் இருந்தது. ஒருபோதும் அவர் கரைக்குச் சென்று சேர முடியாதோ என்று கூடத் தோன்றியது. ஒருவேளை அவர் வெறுந்தரையில் தான் நீந்திக் கொண்டிருக்கிறாரோ….அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ ஒரு மாயச்சுழலில் சிக்கிக் கொண்டதாக நினைத்தார். இந்த மாயத்திலிருந்து எப்படி வெளியேறுவது என்று அவருக்குத் தெரியவில்லை. இருள் மெல்ல கலைந்து கொண்டிருந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் மங்கத் தொடங்கின. கிழக்கில் விடிவெள்ளியின் ஒளியில் ஆறு ததும்பிக் கொண்டிருந்தது. பாலத்தின் மீது ஒளிக்கோடென ஒரு ரயில் நெல்லையப்பா என்று கூவிக் கொண்டே போனது. அது அவருடைய அம்மையின் குரலாகக் கேட்டது. அவர் விடாமல் மறுபடியும் கரையை நோக்கி நீந்திக் கொண்டிருந்தார். அவர் நீந்த நீந்த கரை விலகிக் கொண்டே போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *