கரையோரத்து சிறு நண்டு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 3, 2024
பார்வையிட்டோர்: 328 
 

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

கால்களைத் தழுவிய கடல் அலையின் ஈரம் மூலைவரையும் சென்று குளிர் ஏற்ற, முகிலெடுத்து வந்து ஒத்தடம் கொடுத்தது மாலைக்காற்று. கரையோரத்திலே கட்டியிருந்த படகொன்று அலையின் தாளத்துக்கேற்ப அபிநயம் பிடித்தது. தனது நான்கு வயது மகனோடு கடற்கரையோரமாக உலாப் போய்க் கொண்டிருந்தான் வசீகரன். வெளிச்ச வீட்டுக்கு முன்பாகவிருந்த ஹோட்டல் மணலில் இருந்தபடி சூரியன் மறைவதை விதம் விதமாக படம் பிடித்துக் கொண்டிருந்த வெள்ளைக்கார உல்லாசப் பயணிகளில் ஒருத்தி வருணனையும் தனது புகைப்படக் கருவிக்குள்ளே வாரிக் கொண்டாள்.

தகப்பனின் கைகளைப் பிடித்திருந்த வருணன் அவனது கைகளில் இருந்து விடுபட்டுகரையோரத்திலே குவிந்திருந்த சிப்பிகளை சேகரிக்கத் தொடங்கினான். எதிர்ப் பக்கமிருந்து கிழிந்த சட்டையோடு சிறுவன் ஒருவன் இவனிடம் வந்து கையை நீட்டினான். என்ன என்றான் வசீகரன்.. காசு குடுங்க அண்ணே என்றபடி தலையைச் சொறிந்து கொண்டு நின்றவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு என்னட்டை சில்லறை இல்லை என்றபடி அலட்சியமாக அவனை விட்டு விலகிச் சென்றான். அப்படி அவன் சொன்னதுக்கு ஒரு காரணமும் இருந்தது. இவனை மாதிரிப் பெடியளுகள் கடற்கரைக்கு வாற ஆக்களிடம் காசு வாங்கிக் கொள்ளுறதுக்காக ஏதாவது பொய் சொல்லுவாங்கள். பிறகு கையிலை கிடைக்கிற காசிலை பீடி சிகரெட் எண்டு வாங்கி சின்ன வயசிலையே கெட்டுப்போடுவாங்கள். இப்பிடி ஒரு சின்னப் பெடியன் கெட்டுப் போயிட ஏன் நானும் ஒரு காலாக வேணும் என்பதே இவன் வாதம்.

தும்பு மிட்டாயை வித்தபடிக்கு தூரத்திலே ஒரு வயோதிபர் கடற்கரை ஓரமாக வந்து கொண்டிருந்தார். கைகளிலே இருந்த மிட்டாய்ப் பெட்டியைக் கண்டவுடன் அவரை நோக்கி ஓடினான் வருணன். அந்த மனிதரது முகத்திலே முதுமை தனது முகவரியைப் பதித்து விட்டிருந்தது. இந்த வயசு போன நேரத்திலும் உழைத்துச் சாப்பிட வேணும் எனும் அவரது வைராக்கியத்தை பார்க்கையிலே அவனது தகப்பனின் பிடிவாத குணமே நினைவுக்கு வந்தது.

ஏனப்பா இன்னும் வேலைக்குப் போறீங்கள் என்று கேட்டால் “சுத்தும் வரை தான் தம்பி பூமி, உழைக்கும் வரை தான் மனிசன். சொந்த உழைப்பிலே சோறுண்ணும் சுகம் தான்சுகம்” என்று பெரிமிதம் கொள்வார்.

சரி அப்பா அதுக்குத்தானே அரசாங்கம் உங்களுக்குப் பென்சன் தருதே என்றால் பதில் பேசாது சிரித்துச் சமாளிப்பார். அந்த வயோதிப மிட்டாய்க்காரனைப் பார்த்ததும் அவனது அப்பாவின் கொள்கைப் பிரகடனமே நினைவுக்கு வந்தது. மிட்டாய் வாங்கித் தருமாறு கையைச் சுரண்டினான், மகன். கைகளால் மிட்டாய்க்காரனைப் பார்த்ததும் அழைத்தான். முறுவல் ஒன்றை உதிர்த்தபடி அருகிலே வந்தவரிடம். என்ன விலை என்றான். பத்துக்கும் இருக்கு இருபது ரூபாய்க்கும் இருக்கு அவனது பதிலுக்காக முகத்தைப் பார்த்தார்.

“பத்து ரூபாவுக்கு ஒண்டு தாங்கோ ஐயா”

தும்பு மிட்டாய் பெட்டியில் இருந்து சிறிதளவை எடுத்து மடித்து மகனிடம் கொடுத்தார்.

தம்பிக்கு எந்த இடம் ..? காசை வாங்கிக் கொண்டே அவனிடம் கேட்டார் அந்தப் பெரியவர்.

யாழ்ப்பாணம் அய்யா. எப்பிடி வியாபாரம் நானா..? அவர் அணிந்திருந்த தொப்பி அவரை அவனுக்கு அடையாளங் காட்டியது. எங்கை தம்பி யாவாரம் முன்னைய மாதிரி இல்லை எல்லாம் படுத்திட்டுது. தமிழரும் முஸ்லிம்களும் வாழமுடியாத சூழல் வேறு யாருக்கும் கேட்டுவிடாத படிக்கு குரலைத் தாழ்த்திப் பேசினார்.

என் மகனுக்கு தும்பு மிட்டாய் எண்டா சரியான விருப்பம் ஐயா. உங்களுக்கும் பிள்ளையள் இருக்கினமோ? தனது தந்தையைப் போல இருந்த படியினாலேயே அதைக் கேட்டான்.

இரண்டு பெண்ணுகளும் ஒரு பையனும், ஒரு பெண்ணைக் கட்டிக் கொடுத்திட்டன். ம் பாப்பம் அல்லா வழிவிடுவான். சரி நான் போய்த்து வாறன். ஏன்றபடி மிட்டாய் பெட்டியோடு கடற்கரை ஓரம் போய்க் கொண்டிருந்தார்.

இப்பொழுதெல்லாம் சனி ஞாயிறென்றால் மகனோடு கடற்கரைக்குப் போய் விடுகிறான் வாகீசன். மகனையும் கூடவே அழைத்துப் போவதற்கு இரண்டு காரணம் உண்டு. ‘ஒன்று’ அவனது மகனுக்கு கடல் என்றால் பிடிக்கும். மற்றையது மகனோடு வெளியே சென்றால் பக்கத் துணையும் பாதுகாப்பும் அதிகமாகக் கிடைக்கும் என்பதும். இன்று விடுமுறை தினம் ஆனாலும் சனக்கூட்டம் குறைவாகவே இருந்தது. காரணம் எங்கோ நடந்த ஏதோ ஒரு அரசியல் அசம்பாவிதம். ஒரு கதவடைப்பு நாள் போல ஆரவாரமின்றி இருந்தது கடற்கரை. ஏங்கும் ஒருவரை மற்றவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள் இங்கே. பேரூந்திலும் தொடரூந்திலும் கடைத் தெருவிலும் இது தான் இப்போதைய இலங்கை நிலவரம். தட்டுத் தடுமாறி வேட்டி சட்டை வீபூதி, பூ, பொட்டோடு ஒருவர் வந்தால் அவர் கதை கூண்டோடு கைலாயம் போக வேண்டியதுதான்.

கடற்கரையோடு ஒட்டிய அந்த பாறையின் ஒரு பகுதி கடலுக்குள் மூழ்கி இருந்தது. பாறைக்கு அந்தப் பக்கம் மீன் பிடிப்படகுகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. சிறுவன் ஒருவன் எந்தவித தயக்கமும் இன்றி இயற்கைக் கடனை கழித்துக் கொண்டிருந்தான்.

யாரோ பின்பக்கமாக சுரண்டவே திரும்பிப் பார்த்தான். அன்றொரு நாள் பிச்சை கேட்ட அதே சிறுவன் தான் இன்றும். கிழிந்த சட்டையோடு கலைந்த கேசத்துடன் காட்சி தந்தான். இம்முறை அவனைப் பார்க்கையிலே ஒரு அனுதாபம் ஏற்பட்டது. எதையோ சொல்வதற்காக அலைந்து கொண்டிருக்கிற அழகான அந்த அலையைப் போலவே அந்த சிறுவனின் முகத்திலும் ஏதோ கவலை புதைந்து போயிருக்கிறது என்பதை அவன் கண்களுக்குள் வசீகரன் கண்டு கொண்டான். அவனோடு பேச வேணும் போல ஒரு ஆர்வம் பிறந்தது. ஏன் தம்பி உன்னுடைய அம்மா அப்பா எங்கே? அவனுடைய கண்களை ஊடுருவினேன்.

அம்மா செத்துட்டா அப்பாவு க்கு இழுப்பு. சாப்பாட்டுக்கே கஷ்ட மண்ணே! என்றவன் கண்களிலே கண்ணீர் துளிர்த்தது.

சரி உன்னோடை வீடு எங்கையிருக்கு சேரிப்பக்கமிருந்த திசையைச் சுட்டினான். வா வீட்டுக்குப் போய் வருவம் என்றபோது தயங்கினான். வில்லங்கமாக அவனையும் என் மகனை இழுத்துக் கொண்டு அந்தச் சேரியை நோக்கிப் போனேன். மூக்கைப் பொத்திக் கொண்டான் வருணன். பூவரசு மரத்துக்குக் கீழே படங்கால் போடப்பட்ட பந்தலுக்குக் கீழே இருமியபடி படுத்திருந்தான் ஒருவன். நோயால் அனுங்கிக் கொண்டிருந்தான். எலும்புக்கு மேலால் தோல் போர்த்தியிருப்பது போலவே அவனைப்பார்க்கத் தெரிந்தது. இவருதான் எங்கய்யா என்றபடி தகப்பனின் தலையைத் தடவினான் அவன்.

அய்யா. அய்யா என்று தகப்பனைத் தட்டி எழுப்பினான். அவரால் எழுந்திருக்க முடியாது இருந்தது. தலையை உயர்த்திப் பார்த்து விட்டு மீண்டும் படுத்துக் கொண்டான். என் மகனளவிலே ஒரு சிறுமியைக் காட்டி அவளைத் தங்கை என்றான். காலையிலே பேப்பர் பொறுக்கி வித்தாத்தான் மத்தியானம் வயிறு நிறையும். பின்னேரம் யாராச்சு பாவப்பட்டு ஏதாவது குடுத்தாத்தான் உண்டு. வெக்கம் வந்ததோ தெரியவில்லை குனிந்தபடியே பேசினான். அப்ப பள்ளிக் கூடம். போய்க் கன காலம். பேசைத்திறந்து உள்ள பணத்தை எல்லாம் கொடுத்துவிட்டு விடை பெற்றேன். பேசினதும் மனசினதும் பாரம் குறைந்து போயிற்று.

அதென்ன யுத்தக் கறையானுக்கு தமிழ்ச் சமுதாயம் மட்டும் தான் உணவாகிப் போனதோ…? வினாக்கள் பல எழுந்து வந்து அவன் உடலைச் சுற்றிக் கொண்டன.

ஒரு சில வருடங்களுக்குப் பின்னதாக அந்த இடத்திலே அவனது கால்கள் மிதக்கின்றேன். ஆமாம் இறந்து போன தாய் இழுப்பு வந்தே இழைத்துப்போன தகப்பனோடு அந்த சிறுவன் வசித்த அதே கடற்கரை தான். இப்போ நிறைய மாற்றங்களை உள்வாங்கி இருந்தது. எவ்வளவு சிரமப்பட்டு எங்கு தேடியும் கூட அந்தச் சிறுவனையோ அவனிருந்த குடிசை வீட்டையோ கண்டு பிடிக்க முடியவில்லை. அங்கிருந்து சுண்டல் விற்ற ஒருவனிடம் விசாரித்துப் பார்த்ததில் அந்த இடத்தைச் சுனாமி தின்று விட்டதாகவே சொன்னான். ஏமாற்றமாகவே இருந்தது. அந்த இடத்தினைக் கடந்து இப்போது போனாலும் கூட அந்தச் சிறுவன் எங்காவது தென்படுகிறானா என்றே வசீகரனின் கண்கள் அவனைத் தேடிப் பார்க்கும்.

– இருக்கிறம் 2009.02.15

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *