(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அப்பா கரும்பாயிரம்! இந்த வாட்டியோடே ஆறு மாமாங்கம் பாத்தாயிடுச்சு. ஒங்க ஆத்தா போய் ஒரு வருசம் ஆவப்போவது. அதுவே பிடிச்சு ஒரு நாளைக்கு நாச்சும் என்கூட நீ சாப்பிட்டயா, சொல்லு?”
“என்ன மோசம் அம்மாயி?”
“கிழக் கோட்டானாயிட்டேனல்ல. பஞ்சாங்க ஐயரு பொறக்கற மாசத்துலெ ஒன் பேரனுக்குக் கருமம் செய்ய நேரம் வருதூன்னு நேத்துச் சொன்னாரு…வந்தா வரட்டும். பயமில்லே எனக்கு. இருந்தாலும் ஒன்னோடே ரெண்டு நாளாச்சும் சோறு தின்னாத்தான் நெஞ்சு வேவும்… பல பல இங்கறத்துக்குள்ளார ஒங்க ஆலையிலே சங்கு ஊதிப் பிடுறாக! நீ ஓடிப் பூடறே… அப்பறம் மூணு மணிக்கு இம்மாஞ்சோறு தின்னறது நீ இல்லாமெ சொகப்பட மாட்டேங்குது. ரெண்டு வேளை நாச்சும் சேந்தாப்போல உட்கார்ந்து சோறு திம்போம். அப்புறம் எது வேணா வரட்டும். சந்தோசமாய்ப் போயிடறேன். என்ன சொல்றே?”
இந்தப் பேச்சைக் கேட்ட கரும்பாயிரத்துக்கு மில்லுக்குப் போக மனம் வரவில்லை. வருஷம் முழுவதந் தான் உழைத்தாகிறது. இரண்டு நாள் தான் ரஜா வாங்கிக் கொள்வோமே என்று நினைத்துக்கொண்டு ஒரு மனு எழுதிப் பக்கத்து வீட்டுச் சோமுப்பிள்ளையினிடம் கொடுத்தனுப்பிவிட்டான்.
“அம்மாயி! ரெண்டு நாள் ஒன் கூடவே இருக்கேன்; சாப்பிடறேன். சந்தோசமா இரு; இருக்கிறாயா?”
கிழவியின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. என் ராஜா என்று அவனைத் தட்டிக்கொடுத்தாள்.
“அம்மாயி! இன்னிக்கு என்ன சமைக்கச் சொல்ல ? ஒனக்கு என்னா வேணும்?”
“இன்னிக்கு முள்ளங்கி, வெங்காயம், அப்புறம், ஹூம், அப்புறம்..
“எறைச்சி.”
“செ! சாவப்போற காலத்துலெ அது எண்டா எனக்கு? நான் சொன்னேனே அதுவும் பெருங்காயமும் கொத்தமல்லியும் பருப்பும் வாங்கிக்கிட்டு சாம்பாரா வச்சிக்கிட்டு வா. நல்ல ஊத்திக்கிடுவோம்.”
ஆனால் சரியென்று கரும்பாயிரம் மார்க்கெட்டுக்குக் கிளம்பி னான். அவன் வாசல் வரையில்கூடப் போகவில்லை.
“ஏ கரும்பாயிரம்! போரப்பே கூப்பிடரேன்னு நெனைக்காதே. நானும் சும்மா கூட வாரேன்” என்றாள் கிழவி.
அதன் பேரில் இருவருமாக மார்க்கெட்டுக்குக் கிளம்பினார்கள். மருமகள் குளத்துக்கு முழுகப் போய் விட்டாள்.
மார்க்கெட் அண்டை வந்ததும் கிழவியை முள்ளங்கி யும் கொத்தமல்லியும் பருப்பும் வாங்கச் சொல்லிவிட்டுத் தான் வெங்காயம் கொண்டு வருவதாகப் போய்விட்டான். சிறிது நேரம் சென்று இரண்டு சுமாரான மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு திரும்பி வந்தான்.
மார்க்கெட் வாசலில் கிழவி உட்கார்ந்திருந்தாள்.
“ஏதப்பா கரும்பாயிரம்! இம்மாம் பெரிய மூட்டை? அடெ! இதென்ன? இம்மாம் பெரிய வெங்காயம்?” என்று கிழவி வியப்புற்றாள்.
“மேஸ்திரி நாயக்கருக்கு வந்துச்சாம். நேத்து என்னை எடுத்துக்கிட்டுப் போகச் சொன்னாரு. மறந்து பூட்டேன். நீ சொல்லாங்காட்டியும் ஞாபகம் வந்துடுச்சு. அதான் போய் எடுத்துக்கிட்டு வந்தேன் …சாமியல்ல குடுக்குது…சாவப்போற கிழவியாச்சே இன்னூட்டு ஒசத்தி வெங்காயம்!”
“அந்த மூட்டை ?”
“மள்ளாக் கொட்டை; நாயக்கரு கொடுத்தாரு.”
“இம்புட்டுத்தானே,தம்பி,கிளம்பு” என்று எழுந்தாள் கிழவி. அதற்கு ஐந்து நிமிஷம் பிடித்தது.
“வா அம்மாயி! மெதுவா நட. தள்ளாத வயசு. ஊட்டுலே இருன்னா கேக்கறயா?… இந்தா கையைப் பிடிச்சுக்கிட்டு வா- அனாவஷியமா சங்கட்டப்படறே!”
“என்ன சங்கட்டம்டா? நாளைத் தரிச்சு ஒங்கூட இப்படி வர முடியுமா?… சும்மா நடந்து போ.”
வெங்காய மூட்டையையும் கடலையையும் சேர்த்துக் கட்டித் தலையில் தூக்கிக்கொண்டு கரும்பாயிரம் கை வீசி நடந்தான். கிழவி மெதுவாகப் பின்னால் வந்துகொண்டிருந்தாள்.
பேரனுக்குப் பால்யமும்,கடு நடையும், தலையில் பார மும் இருந்தபடியால் கிழவிக்கும் அவனுக்கும் நடுவே அரை பர்லாங்குக்குமேல் தூரம் ஏற்பட்டுவிட்டது. பின் னும் இரண்டொரு நிமிஷம் நடந்து செல்லுமுன் கரும்பாயிரத்துக்கே திகில் உண்டாகும்படியான காட்சி தென்பட் டது. தெரு முழுதும் ஜே ஜே என்று கூட்டம்; ஒரே இரைச்சல்! அதிலும், அவ்வளவு பேரும் தன்னுடன் மில்லில் வேலை செய்யும் பெண்களும் ஆண்பிள்ளைகளும் வாலிபர்களும். ரோட்டுக்கு வலதுபுறம் இருந்த போலீஸ் ஸ்டேஷனை அவ்வளவு பேரும் பார்த்துக்கொண்டிருந்தனர். பலர் முகத்தில் திகைப்பும், முன்னணியில் நின்றவர் முகத் தில் கோபமும் ஆவேசமும் குடிகொண் டிருந்தன. ஸ்டேஷன் கேட் சாத்தப்பட்டிருந்தது. ஸ்டேஷன் ரூம் ஜன்னலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலை தெரிந்தது. ஜனங்கள், “அவனை விடறயா இல்லையா?” என்று அடிக்கடி கத்திக்கொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார் என்பது யார் காதிலும் படவில்லை. இன்ஸ்பெக்டர் கையை விரித்து சமிக்ஞை செய்தார்.
“ஏங்கறேன், இது என்னா இது?” என்று கரும்பாயிரம் பக்கத்திலிருந்தவனைக் கேட்டான்.
அவன் யாரோ வழிப்போக்கன். “பல பேர் பல தினுசாச் சொல்றாங்க. யாரோ மில்லிலெ வேலைக்காரப் பொம்பளை கொஞ்சம் அளகா யிருப்பாளாமே?”
“ஆமா.”
“அவமேலெ மானேஜர் ஒரசிக்கிட்டுப் போயிட்டாறன்னு கூப்பாடு போட்டாளாம். அவ புருசன்காரன் கீழே கிடந்த இரும்புக் குச்சியை எடுத்துக்கிட்டு மானேஜரைத் துரத்தினானாம். அவரு பயந்துக்கிட்டு ஓடியாந்து இந்தப் போலீஸ் ஸ்டேசனுக்குள்ளாரப் பூந்துக்கிட்டாரு. இந்தப் பாக்கி ஆளுங்க இருக்கிறான்களே, அவங்களும், ‘இன்னிக்கு அவன் பெண்சாதிக்கு வரது நாளைக்கு நமக்கும்’ இன்னுட்டுக் கூடச் சேர்ந்துக்கிட் டாங்களாம். மானேஜரை வெளியே வரச்சொல்லுன்னு கத்தறாங்க.”
“மானேஜர் புதுசு. கொஞ்சம் கடுமைக்காரரு. ஆனால் இந்த வளியெல்லாம் போவமாட்டாரே?”
“அதான் ஒருத்தன் சொன்னான். எப்போதும் போலக் குடிச்சுட்டு அவ புருசன் வந்தானாம். இல்லாத லூட்டியெல்லாம் அடிச்சானாம். அதுக்காக மானேஜர் அவனை வேலைக்கு வேண்டாம்னூட்டராம். அதுவெ பொம்பளைக்கு வவுத்தெரிச்சல். மானேஜரை வாயா வார்த்தையாக் கேக்கக்கூடாது? புள்ளை, குட்டி இன்னு பேசினாளாம், “மரியாதையாப் போரியா இல்லாட்டி…” இன்னாராம். அப்படியா சமாச்சாரம்னூட்டு இப்படிக் கத்தினாளாம். மானேஜர் பயந்து பூவோரூ இன்னு ரோசனை. அது ஒரு கலாட்டாவாய்ப் போய்க் கலகத்திலெ முடிஞ்சுட்டுதாம்.”
“அப்புடியும் இருக்கும்” என்றான் கரும்பாயிரம். மேலே பேச முடியவில்லை. காரணம்: “மானேஜரை வெளீலே தள்றீங்களா? இல்லாட்டி.. என்று பல ஸ்தாயியில் பல குரல்கள் ஏக காலத்தில் கிளம்பினது தான்.
கரும்பாயிரம் பரம சாது. நமக்கேன் வம்பு என்று நடந்து செல்லப் பிரயத்தினப்பட்டான். அவனுக்கு முந்தியும் பிந்தியும் இருந்த ஜனங்கள் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து இடித்துக்கொண் டிருந்தார்கள். முன்னே போக முடியவில்லை.
“கதவைத் தொறக்குறீங்களா இல்லையா?” என்ற கூக்குரல்.
ஸ்டேஷனுக்குள்ளிருந்த இன்ஸ்பெக்டருக்கு இன் னது செய்வதென்று தெரியவில்லை. மானேஜரை வெளி யேயும் விட முடியவில்லை. உள்ளே வைத்துக்கொள்வ தென்றால் ஆபத்தா யிருந்தது. ஒட்டின்மீது கற்கள் வந்து விழுந்ததும் அவருக்குத் தைரியம் பிறந்தது.
“போறேளா இல்லியா? என்கிறார் இன்ஸ்பெக்டர்.
“இதோ போறோம்ங்க!” என்று பரிகாசமாக ஆட்கள் பதில் சொன்னார்கள். ஒருவன் மட்டும் வெறிகொண்ட முகத்தோடு ஸ்டேஷன் சுவரின் வெளி விளிம்பைப் பிடித்துக்கொண்டு அதன் பேரில் ஏறி ஒட்டின் வழியே உள்ளே செல்லப் பிரயத்தனம் செய்தான்.
“அவன் யார்?” என்றான் வழிப்போக்கன். “அவள் புருஷன்!” என்றான் கரும்பாயிரம்.
அது வரையில் பொறுத்துப் பார்த்த இன்ஸ்பெக்ட ருக்குத் தாங்கவில்லை ஆத்திரம். ஆத்திரம் பொங்கிற்று. பட்டப்பகலில் கொள்ளைக்காரர் மாதிரி ஒரு கூட்டத்தார் நடப்பதென்றால்? நடக்கும்படி ஒரு போலீஸ் அதிகாரி விடுவதென்றால்? கலகம் முற்றி உள்ளே இருப்பவர்கள் உயிருக்கும் ஸ்டேஷன் சொத்துக்களுக்கும் ஆபத்து நேரிட்டுவிட்டால்?”
“போரேளா இல்லையா- ஒரு தரம்” என்று கூவினாா.
சுவரில் ஏறியவன் பின்னும் ஏறிக்கொண் டிருந்தான். “போக மாட்டீர்களா? இரண்டாம் தரம். மூன்றாம் முறை சுட்டுவிடுவேன். ஐந்து நிமிஷம் கொடுக்கிறேன். போங்கள்.”
இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார் என்று நினைத்து ஜனங்கள் கெக்கலித்தார்கள். ஏளனச் சிரிப்பு அடங்கியதும் நிச்சப்தம். எல்லோரும் ஒட்டின்மீது பார்த்தார்கள். இன்ஸ்பெக்டர் காதில் ஓடு நொறுங்கும் சப்தம் விழுந்தது. “நல்ல மனிதனுக்கும் கருணை உள்ளவனுக்கும் காலமில்லை” என்று நினைத்தார்.
“விடாதே! உள்ளே குதி” என்று குரல்கள் உற்சாகப் படுத்தின.
கரும்பாயிரத்துக்குத் திகில்.எப்படியாவது கூட்டத்தை விட்டு வெளியேறினால் போதுமென்று ஆகிவிட்டது. தெய்வமே என்று அடுத்த தெரு வழியாகப் போயிருக்கலாம். ஆனால் அவனுக்கு ஜோஸ்யம் தெரியுமா? இப்போது பின்னும் போக முடியவில்லை; முன்னும் போக முடியவில்லை. கூட்டமோ அலை புரளுவதைப் போல் அசைந்துகொண்டிருந்தது. என்ன செய்வான் கரும் பாயிரம்?
“மூன்றாம் தரம் -சுடு” என்ற வார்த்தைகள் உரக்கக் கேட்டன. ஸ்டேஷன் ஜன்னலிலிருந்து துப்பாக்கிகள் தோட்டாவைக் கக்கின.
கூட்டம் நெல்லிக்காய் மூட்டையைப்போல் சிதறி ஓடிற்று. எங்கும் உயிருக்கு மன்றாடி ஓடும் ஒலங்கள்! ஓடும் முயற்சியில் கால் மிதிபட்டு ஜனங்கள் விழும் காட்சி! ஒரு குண்டுபோய்த் திகைத்து நின்ற கரும்பாயிரத் தின் விலாவில் பாய்ந்தது. “ஐயோ, அம்மாயி!” என்று அலறிக்கொண்டு கீழே விழுந்தான்.
கூட்டம் உடனே மறைந்து போயிற்று. போலீஸ் காரர் சுடுவதை நிறுத்தினார்கள். ஓட்டின் மேல் நின்றவன் ‘அலங்க மலங்க’ விழித்துக்கொண்டிருந்தான்.
போலீஸ் ஸ்டேஷன் கதவு திறக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் வெளியே வந்து கரும்பாயிரத்தைப் பார்த்தார். வலது விலாவிலிருந்து ரத்தம் கொட்டிக்கொண் டிருந்தது; அப்படியேடது விலாவினின்றும். மெதுவாக ஒரு மோட்டாரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். ஓட்டின் மேல் இருந்த ஆளை இறக்கிக் கைக்கு விலங்கிட்டார்கள். வெங்காய மூட்டையும் கடலை மூட்டையும் கவனிப்பாரற்று மண்ணில் கிடந்தன.
ஓடிப்போன ஜனங்களில் சிலர் கரும்பாயிரம் அடி பட்டதைக் கண்டார்கள். “ஐயோ பாவம்!” என்று சொல்லிக்கொண்டே பின்னும் ஓடினர்.
இவ்வளவு சம்பிரமங்களும் நடந்தது, ஒரு பத்துப் பன்னிரண்டு நிமிஷங்களுக்குள். மேற்குத் திக்கிலிருந்து தளர் நடையுடன் கிழவி வந்துகொண் டிருந்தாள். அவளைப் பார்த்துவிட்டுச் சோமுப்பிள்ளை, “ஐயோ பாட்டி! கரும்பாயிரத்து வவுத்துல குண்டு பாஞ்சுட்டுது. ரத்தம் ஊத்துது” என்று பதறிப்போய்ச் சொன்னான்.
கிழவிக்குச் செய்தி திடீரென்று கிடைத்ததால் பிரமையைத் தவிர அழுகை வரவில்லை. சற்று வேகமாக நடந்தாள். சோமுப்பிள்ளையும் பின்தொடர்ந்தான். ரோட்டில் கிடந்த மூட்டைகளையும் ரத்தக்களரியையும் பார்த்ததும் “அட தம்பி! என் ஆசையா உனக்கு நமனா வந்துச்சு?” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டாள். அதற்குள் சோமுப்பிள்ளை ஸ்டேஷனுக்குள் போய் விசாரித்ததில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு போகப்பட்ட விவரம் கிடைத்தது. இருவரும் ஒரு வண்டியில் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பினார்கள்….
ஆஸ்பத்திரியில் ஒரே கூட்டம். சஸ்திர சாலைக்கு வெளியே இருந்த பெரிய ரூமில் ஆறு டாக்டர்கள் நின்றுகொண்டிருந்தனர். தாழ்வாரத்தில் அறைக்குள் எட்டி எட்டிப் பார்க்கும் ஆள் கூட்டம். டாக்டர் முகத்தில் நிமிஷங்களைக் கணக்கிடுவது போன்ற தோற்றம்.
படுக்கையில் பெரிய கட்டுகளுடன் கிடந்த கரும் பாயிரம் வெகு பிரயாசையுடன் ஒரு தரம் கண் விழித்துப் பார்ப்பான்; மறுபடியும் கண்ணை மூடுவான். “அம்மாயி'” என்று மூச்செறிந்துகொண்டே திரும்பவும் கண்ணைத் திறப்பான்.
கிழவி வந்து சேர்ந்தாள். ஹோவென்று வரும் பெரும் மழையைப்போல், நோயாளியின் அறைக்கு வந்தாள். டாக்டர்களுக்காவது இதரர்களுக்காவது அவளைத் தடுக்கத் தோன்றவில்லை.
“அட பாவிப்பையா! சேந்து சாப்பிடுவோமின்னு சொன்னதுக்கா இப்பிடி மோசஞ் செஞ்சு பூட்டே! கண்ணே கரும்பாயிரம்” என்று அலறினாள்; விம்மினாள். அவனைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள். கரும்பாயிரம் கண் திறக்கவில்லை. ஐந்து நிமிஷங்கள் சென்றன. “அம்மாயி அம்மாயி!” என்ற கொஞ்சும் குரல் பேரன் வாயிலிருந்து வந்தது. பாட்டியின் முகத்தைப் பார்த்தான். ஆள் குறிப்பு உணர்ந்தானோ என்னவோ! அவ்வளவு தான்… கிழவியின் துன்பம் கரை புரண்டு ஓடியது…
வெளியே தாழ்வாரத்தில் கரும்பாயிரத்தின் கதையைக் கேட்டவர்களில் சிலர், “கடவுளின் திருவுளம்” என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.