கருப்பு வெள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 21, 2012
பார்வையிட்டோர்: 6,760 
 
 

தலைமுடியில் நரை விழுவது குறித்து சந்தோஷமடையும் மனிதன் இந்த ஊரிலேயே ஒரே ஒருவன் என் நண்பன் முருகன்தான். வெள்ளை நிறத்தில் அப்படியொரு ஈர்ப்பு ஏற்படும் வகையில் அவனை ஏங்க வைத்து விட்டது அவனது தோலின் நிறம். அவன் இருளில் நடந்து வரும் பொழுது சிரித்தாலன்றி அடையாளம் கண்டு கொள்வது கடினம். இருளோடு இருளாக பிரிக்க முடியாத ஒரு இணைப்பாக ஒன்றியிருப்பான். தினசரி 4 வேளை பல் துலக்குவான். அந்த பல்லை தும்பைப் பூ போல் வெண்மையாக வைத்துக் கொள்வதற்கு அவன் காட்டும் ஈடுபாடு அசாதாரணமானது. அவனது வீட்டு அலமாரியில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், கோல்கேட், க்ளோஸ்அப், பெப்சோடண்ட் மற்றும் வஜுர்தந்தி போன்ற உபகரணங்களை, காலை, மதியம், மாலை, இரவு என பிரிஸ்கிரிப்சன் எழுதி வைத்து உபயோகிப்பான். அன்று ஒரு நாள் அந்த பல்லை ஈஈஈஈ……….. என்று திறந்து வைத்தபடி வெகு நேரமாக பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அவன் கூறுகிறான் அவனுக்கு 36 பற்கள் இருக்கின்றனவாம். அவன் அந்த பற்களைக் காதலிக்க ஆரம்பித்துவிட்ட ஒரே காரணத்துக்காகவாவது, எனக்கு 10 பற்களை குறைவாக வைத்திருக்கலாம் அந்த கடவுள். அவனுடைய துரதிர்ஷ்டம் எனக்கும் 36 பற்கள் தான்.

அந்த சிறிய கிராமத்தில் ஒரே ஒரு தொலைக்காட்சிப் பெட்டி மட்டும் தான் உண்டு. ஊருக்கு பொதுவான அந்த வண்ணத் தொலைக்காட்சியை மாலை 6 மணிக்கு மேல்தான் திறப்பார்கள். ஆம் அதை சுற்றி ஒரு வலிமையான கூண்டு அமைத்து இரண்டு ஆள் சேர்ந்து தூக்கக் கூடிய ஒரு இரும்புக் கதவை நிறுத்தி அதை பூட்டுவதற்கென்றே திண்டுக்கல்லுக்கு ஆள் அனுப்பி வாங்கி வந்த பூட்டை போட்டு பூட்டி அந்த தொலைக்காட்சியை பாதுகாத்து வைத்திருப்பார்கள். இதற்கு மேலும் அந்த தொலைக்காட்சிப் பெட்டியை ஒரு திருடன் திருட முயலுவானேயானால், அவனுக்கு ஏதேனும் உயரிய விருது வழங்கலாம் என்று நான் மனப்பூர்வமாக சிபாரிசு செய்வேன். உண்மையில் ஒரு தொலைக்காட்சி பெருமைப்பட வேண்டுமானால் அந்த உரிமை எங்கள் ஊர் தொலைக்காட்சிக்கு மட்டுமே உண்டு. அதற்கு அவ்வளவு மரியாதை உண்டு.

மாலை வேலையில், எங்கள் ஊரில் இருக்கும் ஒரே கோவிலில் நடத்தப்படும் பூஜையின் போது தவறாமல் தொலைக்காட்சிப் பெட்டிக்கும் தீபாராதணை நடத்தப்படும். அதற்கு பொட்டு வைத்து, பூ வைத்து, சில சமயங்களில் தேங்காய் உடைத்து, அதன்பின் பயபக்தியுடன் அந்த தொலைக்காட்சி ஆன் செய்யப்படும். அதை ஆன் செய்யும் உரிமை பூசாரிக்கு மட்டுமே உண்டு. அதில் அவருக்கு ஏக பெருமை, ஒரு சமயம் உடைக்கப்பட்டத் தேங்காயின் ஒரு சில் டி.வியின் ஒரு முனையில் பட்டுவிட பதறிப் போன ஊர் மக்கள் பூசாரியை பஞ்சாயத்தில் நிறுத்திவிட்டார்கள். பின் சாமியாடி அவர் தப்பியிருக்காவிட்டால் அவர் ஊர் கடத்தப்பட்டிருப்பார்.

ஒரு முறை சென்சஸ் கணக்கெடுக்க எங்கள் ஊருக்கு வந்திருந்த அதிகாரிகள் தினறிப் போனார்கள். ஒரு குடும்பத்தை சந்திப்பதற்காக முள்காடு வழியாக இரண்டரை மணி நேரம் பயணம் செய்து விட்டு வர, இது போன்று 20, 30 வீடுகள் இருக்கின்றன என்பதை கேள்விபட்டு துவண்டு போனார்கள். எங்கள் ஊரில் மொத்தமிருக்கும் 147 பேரையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டுமானால் பஞ்சாயத்துத் தொலைக்காட்சி இருக்கும் இடத்திற்கு வருமாறு ஐடியா கொடுத்தது என் நண்பன் முருகன்தான். யாரையும் தொந்தரவு செய்யாமல் கணக்கெடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள் என் நண்பனால்.

கடைசியில் என் நண்பனை கணக்கில் சேர்க்காமல் விட்டுச் சென்று விட்டார்கள். காரணம் அவன் இருளில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான். எப்படித் தெரிவான் அவர்கள் கண்களுக்கு. குறைந்த பட்சம் ஒரு சிரிப்பாவது சிரித்திருக்க வேண்டும். இந்த தூர்தர்ஷனில் வயலும் வாழ்வும் ஓடும் பொழுது யாரேனும் சிரித்தால் அவர்களுக்கு புத்தி பேதலித்து விட்டதாக அல்லவா அர்த்தமாகிவிடும். அல்லது ஒரு புத்தி பேதலித்தவனால் மட்டும் வயலும் வாழ்வும் பார்த்து சிரித்து விட முடியுமா என்ன?. ஆனால் எங்கள் கிராமத்து மக்கள் மின்சாரம் இல்லையென்றால் கூட வெறும் தொலைக்காட்சியையாவது பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதன் மீது அவர்களுக்கு அவ்வளவு அன்பு.

அன்று ஒரு நாள் “உலாவரும் ஒளிக்கதிர்” நிகழ்ச்சியை கொட்டாவி விட்டபடி பாத்து கொண்டிருந்தான் முருகன். அன்றுதான் முதன் முதலாக பேர் அண்ட் லவ்லி விளம்பரத்தைக் காண்பித்தார்கள் கொலைக்காட்சியில். கண்களை அகல விரித்தபடி முதன் முதலில் தாஜ்மஹாலைப் பார்த்தவனைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த விளம்பரத்தை. அடுத்த நாள் அவன் வீட்டில் உண்டியல் உடைபடும் சத்தம் கேட்டது. அந்த உண்டியல், திருவிழாவின் போது நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, தினம் ஒரு ரூபாய் என முருகனின் தாயாரால் சேர்த்து வைக்கப்பட்டது. முருகனுக்கு 5 வயது தாண்டிய பிறகு ஒரு வருடம் கூட அந்த உண்டியல் பணம் கடவுளை சென்றடையவில்லை என்பது அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். இந்த சின்ன திருட்டுகளுக்காக அவன் பலமுறை தென்னங்கீற்றை கிழித்தெடுத்த பின் கிடைக்கும் குச்சிகளைக் கொண்டு செய்யப்பட்ட துடைப்பத்தால் (வெளக்கமாறு என்று வெளிப்படையாக கூறினால் என் நண்பன் கோபப்படுவான்) அடிவாங்கியது ஊருக்கே தெரியும். முருகனின் தாயார் ஒன்றும் சாதாரணமானவர் இல்லை. அவர் கையில் விளக்கமாற்றிற்கு பதிலாக ஒரு வாள் கத்தி இருந்திருக்குமேயானால் அவர் ஜான்சிராணியை போல் புகழ்பெற்றிருப்பார்.

பல்வேறு விழுப்புண்கள் கிடைக்கும் என்பது உறுதியாக தெரிந்த பின்னும் துணிச்சலோடு இப்படி ஒரு முடிவெடுக்கும்படி அவனைத் தூண்டிய விஷயம் எதுவெனில், அது அந்த பேர் அண்ட் லவ்லிதான். சைக்கிள் கடை முத்துவிடம் ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு, பெல் வைத்த சைக்கிளை தேடிப்பிடித்து எடுத்துக் கொண்டு நானும் அவனும் கிளம்பினோம். அருகிலிருக்கும் திண்டுக்கல் டவுனுக்கு. எங்கள் ஊரிலிருந்து டவுனுக்குச் செல்ல வேண்டுமென்றால் 22 கிலோமீட்டர். நான் பாதி தூரம், அவன் பாதி தூரம் என வாயில் நுரை தள்ளுவதற்குள் வந்துவிட்டோம் நகரத்திற்கு. எனக்கும் அந்த பேர் அண்ட் லவ்லியை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டுதான் இருந்தது. பேர் அண்ட் லவ்லி எந்தக் கடையில் கிடைக்கும் என்று ஒரு 20 பேரிடமாவது கேட்டிருப்போம். யாரோ ஒருவன் கடும் கோபத்தில் இருந்திருப்பான் போல, எங்களைக் கெட்ட வார்த்தையில் திட்டி விட்டான். அவனை முருகனிடமிருந்து காப்பாற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. பின் ஒரு மணிநேர தேடலுக்குப்பின் அந்த கடையை கண்டுபிடித்து விட்டோம்.

மதிய வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நாங்கள் இருவரும் கடைக்குள் சென்றோம். யாரோ இரண்டு திருடர்கள் கடைக்குள் வந்து விட்டதைப் போன்ற தெறிநிலைக்குக் கடைக்காரர் வந்துவிட்டார். பின் முருகன் தான் கேட்டான், அந்த பசை எங்களுக்கு வேண்டுமென்று. ஆனால் நான் எதிர்பார்த்தது சரியாகத்தான் நடந்தது. அதற்குரிய பணத்தை ஒருஒரு ரூபாயாக சடசடவென கொட்ட கோவில் உண்டியல் திருடன் என உறுதியே செய்துவிட்டான் கடைக்காரன். அது எங்கள் சொந்த சேமிப்பு என்பதை உணர்த்தி அதை வாங்கி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. நான் அதை கவனித்தேன். அந்த பேர் அண்ட் லவ்லியை கடைக்காரனிடமிருந்து தன் கையால் அவன் வாங்கிய பொழுது, அவன் கைகள் நடுங்கின. அவன் கோவில் பிரசாதத்தை வாங்குவதைப் போல இரு கைகளையும் குவித்து பயபக்தியுடன் வாங்கினான்.

கிடைத்தற்கரிய பொக்கிஷத்தை பெற்றுக் கொண்டு எங்கள் ஊருக்கு செல்லும் வழியில் இருந்த ஐயனார் கோவிலில் அதை வைத்து கும்பிட்டுவிட்டு சைக்கிளில் பறந்தோம். எனக்கு சிரிதும் நம்பிக்கையில்லை. அதன் வாசனையை எனக்கு முகரக் கொடுப்பான் என்று. எனக்கு உள்ள பெருமையெல்லாம் என்னவென்றால், எங்கள் ஊரில் முதன் முதலில் பேர் அண்ட் லவ்லி வாங்கியவர்கள் நாங்கள் தான் என்பது தான். நாளை கல்வெட்டு என்று ஒன்றை நடுவோமேயானால் அதில் என் பெயரும் இடம் பெயரும். கல்வெட்டு நடுவது குறித்து வெட்கப்படுபவர்கள் இல்லை எங்கள் ஊர் மக்கள்.

40 ரூபாய்க்கு ட்யூப் லைட் (கோவிலுக்கு) நன்கொடையாக வாங்கிக் கொடுத்துவிட்டு அதில் தன் பெயரையும், தன் வீட்டு விலாசத்தையும் எழுதி, அதிலிருந்து வெளிப்பட வேண்டிய ஒளியை மொத்தமாக மறைத்து விட்ட சிவலிங்கம் எங்கள் ஊரில் தான் இருக்கிறார். கோவிலுக்கு 701 ரூபாய் நன்கொடை அளித்துவிட்டு, ஆயிரம் ரூபாய் செலவு செய்து கல்வெட்டு வைத்த தர்மலிங்கம் எங்கள் ஊரில் தான் இருக்கிறார். எங்கள் ஊரிலேயே மச்சு வீடு வைத்திருக்கும் ஒரே பணக்காரர் கிருஷ்ணமூர்த்தி. 10 ஆயிரம் ரூபாய் கோவிலுக்கு நிதி உதவி அளித்துவிட்டு சும்மாவா இருப்பார். கோவிலின் முன் கிருஷ்ணமூர்த்தி என கொட்டை எழுத்தில் எழுதி வைத்துவிட்டார். இப்பொழுது அது கிருஷ்ணமூர்த்தி கோவில் என்றாகிவிட்டது. உள்ளே ஒரு கடவுள் அநாதைப் பயலைப் போல உட்கார்ந்திருப்பார்.

நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன? ஊரில் இருக்கும் அத்தனை மரங்களிலும் பொறிக்கத்தான் போகிறோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விஷயத்தை. நான் எதிர்பாத்தது போல், ஊருக்குள் இல்லாமல் ஊருக்கு வெளியிலேயே காத்திருந்தார் முருகனின் தாயார். கையில் அந்த வலிமையான ஆயுதம். நான் தூரத்திலிருது வரும் பொழுதே கவனித்து விட்டதால் சைக்கிளை விட்டு இறங்கி ஓடிவிட்டேன். முருகன் தைரியமாக செல்வதைப் பார்த்தபொழுது, எனக்கு உடலெல்லாம் நடுங்கிப் போனது. நான் ஓடிச் சென்று ஒரு புளியமரத்தில் ஏறிக் கொண்டு வேவு பார்க்க ஆரம்பித்தேன். முருகன் நல்ல பிள்ளை போல் மீதி பணத்தை தாயாரிடம் கொடுத்துவிட்டு நடந்த உண்மையை கூறினான். அவன் கூறியதையெல்லாம் அவர் அமைதியாக காது கொடுத்து கேட்டதே ஆச்சரியமான விஷயம். என் ஆசிரியர் கூறுவார். அடிப்பவனை விட அடி வாங்குபவனுக்குத்தான் அதிக தைரியம் வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியதாக, ஆனால் அந்த வார்த்தைகள் தான் எவ்வளவு உண்மை. ஆசிரியர் கூறிய பொழுது, அதில் எனக்கு உடன்பாடில்லாமல் இருந்தது. ஆனால் இப்பொழுது, என் கண் முன் நிகழும் அந்த கொடூரத்தைப் பார்க்கும் பொழுது அதை உண்மை என ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

முருகன் ஒரு பேர் அண்ட் லவ்லிக்காக இவ்வளவு தியாகங்களைச் செய்வான் என நான் எதிர்பார்க்கவேயில்லை. அவ்வளவு அடிகளையும் வாங்கிக் கொண்டு கனத்துப் போன இதயத்துடன் இரண்டு நாட்களாக அவன் சாப்பிடவேயில்லை. துரதிஷ்டம் என்னவெனில் அடிவாங்கி சிவந்துபோன அவன் முதுகை அவனால் பார்க்க முடியவில்லை, ஆம் முதன் முறையாக அவன் உடலில் சிவப்பேறியிருந்தது. பின் 3வது நாள் கறியும், சோறுமாக தின்ற வகையில் ஒரு முழு ஆட்டை கபளிகரம் செய்துவிட்டான்.

அந்த நேரங்களில் எங்களுக்கு புகலிடமாக அமைந்தது முத்துசாமி பிள்ளையின் தென்னந்தோப்புதான். தோட்டத்தின் நடுவில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு, உடலை வெயிலில் காய வைத்துவிட்டு மதியம் போல் மெதுவாக கல்லூரிக்குச் செல்வோம். தினசரி என்னை அழைத்துக் கொண்டுதான் தோட்டத்திற்கு செல்வான். ஆனால் இன்று ஏனோ பொழுது விடிந்து வெகு நேரமாகியும் அவனைக் காணவில்லை. எனக்கு அவன் வீடு சென்று விசாரிக்க சற்று பயமாகத்தான் இருந்தது. ஒரு வேளை கோபப்பட்டு வீட்டை விட்டு சென்றிருப்பானோ? என நடக்கவே நடக்காத அந்த விஷயத்தைப்பற்றி தேவையில்லாமல் யோசித்தபடி பொடிநடையாக தென்னந்தோப்பை வந்தடைந்தேன். அங்கு நான் கண்ட காட்சி இருக்கிறதே, உடல் முழுவதும் பேர்அண்ட் லவ்லியை தடவியபடி சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தான் முருகன். ஐயோ, நல்லவேளை உள்ளாடை போட்டிருந்தான்.

நான் அருகில் சென்றேன் மெதுவாக பூனை போல. பிதுக்கி எடுக்கப்பட்டு காலியாகிப் போயிருந்த அந்த பேர் அண்ட் லவ்லி பாக்கெட் வரிசையாக 10, 15 ரோடு ரோலர் ஏறியது போல சப்பிப் போய் கீழே கிடந்தது. அவன் அதை கீழே போட்டிருக்கிறான் என்றால் இனி அதில் ஒன்றும் இல்லை என்றுதான் அர்த்தம். அவனை மெதுவாகப் பின்னிருந்து தொட்டேன். அவன் கத்திய கதறலில் நியாயமாக நான்தான் பயந்திருக்க வேண்டும். ஜெகன் மோகினி படத்தில் வருகிற குட்டி பிசாசு போல இருந்து கொண்டு பயம் ஒரு கேடு அவனுக்கு. அவன்தான் எடுத்த முடிவைப்பற்றி விளக்கமாக என்னிடம் கூறினான். மாலை 5 மணி வரை அப்படியே இருந்து விட்டு, வெயில் அடங்கியபின் வீட்டுக்குச் செல்வதாக அவனது திட்டம் அமைந்திருந்தது.

கல்லூரியில் எனது சிந்தனை முழுவதும் முருகனை பற்றியதாகவே இருந்தது. ஒருவேளை முருகன் இன்று இரவு வெள்ளையாகி விடுவானோ? நினைத்து பார்க்கவே சிலிர்ப்பாக இருந்தது. அப்படி மட்டும் நடந்துவிட்டால் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லிவிடக் கூடாது. அப்பாவின் மோதிரத்தை திருடி விற்றாவது வெள்ளையாகிவிடுவது என்கிற முடிவுக்கு வந்தவிட்டேன். நான் பரீட்சை ரிசல்ட்டுக்காக கூட இவ்வளவு தவிப்புடன் காத்திருந்தது இல்லை.

அடுத்த நாள், இடம் – கிணற்றடி. தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என பல்வேறு உதாரணங்களை எடுத்துக் கூறியும், முருகனின் மனம் சமாதானமடையாமல் வெதும்பிக் கொண்டிருந்தது. தனது தியாகங்கள் எல்லாம் விழலுக்கிரைத்த நீரைப் போல் ஆகிவிட்டதே என வாய்கால் தண்ணீரில் காலை விட்டுக் கொண்டு வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கண்ணீர் விட்டு அழுவதைத்தான் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவன் அழுது கொண்டே பரிதாபமாக என்னைப் பார்த்துக் கேட்டான்.

‘டேய் சூரி, வெள்ளக்காரன் கூடவா பொய் சொல்லுவான்” நான் என்ன சொல்வது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்தேன். வெள்ளைக்காரர்களை பற்றி எனக்கென்ன தெரியும். நான் அவர்களுடன் பழகியிருக்கிறேனா என்ன? பின் ஏதாவது சொல்லி வைக்க வேண்டுமே என்று இவ்வாறு கூறினேன். ‘விடுறா முருகா, வெள்ளக்காரனுக்கும் நமக்கும் என்னைக்குமே ஆகாதுடா”. அதிசயிக்கத்தக்க வகையில் அவனும் அதைக் கேட்டு சமாதானமடைந்துவிட்டான்.

சில மாதங்களுக்குப் பின் ஒருநாள், எங்கள் ஊரில் அந்த அதிசயம் நடந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. எங்கள் ஊரின் மேலும் பரிதாபப்பட்டு ஒரு திரைப்படக் குழுவினர் ஷூட்டிங் வந்திருந்தார்கள். விஷயம் தீ போன்று பரவியதற்கு முக்கிய காரணம் அந்த நடிகை தேவயானிதான். விஷயம் கேள்விப்பட்ட பொழுது நானும், முருகனும் மாங்காய் திருடிக் கொண்டிருந்தோம். நான்கைந்து வருடங்கள் கடினமாக ஓட்டப்பயிற்சி எடுத்திருக்கும் உலக மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் கூட எங்களைப் போல் ஓடியிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு ஓட்டம். தலைதெறிக்க ஓடிவந்ததில் எங்கள் இதயம் தொண்டைக்கு வந்துவிட்டது. முடிவில் வந்து சேர்ந்தே விட்டோம். அந்த புல் மேட்டில் தேவயானி உருண்டு பிரண்டு நடனமாடிக் கொண்டிருந்தார். என்ன ஒரு நிறம் அவர். லேசாக சுண்டிவிட்டால் ரத்தம் வந்துவிடும் போல. அப்படி ஒரு கலர். நான் கூட சற்று கண்களை அவ்வப்பொழுது இமைத்தேன், ஆனால் முருகன், அவனது கண்கள் நிழற்படத்தில் இருப்பது போல் அச்சடித்தாற் போன்று அப்படியே நின்றுவிட்டது. எப்படியாவது தேவயானியிடம் பேசிவிட வேண்டும் என பிரம்ம பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தோம்.

அந்த திரைப்படத்தின் இயக்குநரிடம் சுமாராக 77 முறைதான் கேட்டிருப்போம் தேவயானியுடன் பேச வேண்டும் என்று. அதற்குப் போய் அவர் கோபித்துக் கொண்டார். பின் காவல்துறையினரிடம் புகார் செய்ய தேவயானிதான் பரிதாஷபப்பட்டு எங்களிடம் பேசினார். தேவயானியை அருகில் பார்த்த அதிர்ச்சியில் நான் அவரிடம் கேட்டது. “மேடம் ஒரு ஆட்டோகிராப்” என் நண்பன் முருகன் கேட்டது, (அது என்னவாக இருக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்).

“மேடம் நீங்க என்ன சோப்பு போட்டு குளிக்கிறிங்க”

தேவயானி பதிலுக்குச் சிரித்து விட்டு அந்த சோப்பின் பெயரை கூறினார். அன்று இரவு முழுவதும் அந்த புல் தரையில் படுத்து உறங்கினோம். நாங்கள் மட்டுமல்ல 20, 25 பேர் அங்கு தான் அன்றிரவு படுத்து உறங்கினார்கள். தேவயானி உருண்ட இடம் அல்லவா அது. நல்லவேளை கோவில் கட்டுவதை பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஊருக்குள் ஒன்றிரண்டு பேர் பெரியார் புத்தகத்தை வைத்திருப்பதை ஒரு சில சமயங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

அடுத்தநாள், முருகன் வீட்டில் மீண்டும் உண்டியல் உடைபடும் சத்தம் கேட்டது. வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு மீண்டும் கிளம்பினோம் திண்டுக்கல்லுக்கு. டவுனில் கடை, கடையாக ஏறி இறங்கினோம். எல்லா கடைகளிலும் அந்த லக்ஸ் சோப் இருந்தாலும், ஒரு பெரிய கடையில் 100, 150 லக்ஸ் சோப்புகளுக்கு நடுவிலிருந்து ஒன்றை உருவினால்தான் எங்களுக்குத் திருப்தி. அந்த சோப்பின் மேல் வெயில் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே அவன் குடையை எடுத்து வந்திருந்தது பின்னர்தான் எனக்கு புரிந்தது. வழக்கம் போல் வரும் வழியில் அய்யனார் கோவிலில் வைத்து அபிஷேகம் செய்துவிட்டு சென்றோம். வழக்கம் போல் நடந்த அடிதடிகளுக்குப் பின்னர் அந்த லக்ஸ் சோப்பும் அவனை ஏமாற்றிவிட்டது. இத்தனை சோகத்துக்குப் பின்னரும் அவன் கேள்வி கேட்பதை மட்டும் நிறுத்தவில்லை. என்னை பார்த்து வழியும் கண்ணீருடனும். பரிதாபத்துடனும் இவ்வாறு கேட்டான்

‘டேய் சூரி, தேவயானி கூடவா பொய் சொல்வாங்க”

எனக்கு என்ன தெரியும் தேவயானியைப் பற்றி, அவன் ஏன் இப்படியெல்லாம் கேட்கிறான். இருப்பினும் என் நண்பன் அல்லவா அவன்? ஏதேனும் சொல்ல வேண்டியதிருக்கிறது. ‘விடுறா முருகா, இந்த நடிகைகளுக்கும், நம்ம ஊருக்கும் ஆகவே ஆகாதுடா” . இது போதும் அவன் சமாதானம் அடைய என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

அதன் பின் தனது முகத்தை வெண்மையாக்கும் முயற்சியில் கண்ட களிம்புகளை முகத்தில் தடவ, அவனது முகம் ஒரு மாதிரியாக வெளுத்துப் போனது. அவனது முகத்தின் இரு இடங்களில் வெண்படை ஏற்பட்டிருந்தது. முருகன் தன் கடும் முயற்சிகளுக்குப் பலனாக கடவுள் கொடுத்த பரிசாகவே நினைத்தான் அந்த இரு வெண்படைகளையும். நான் கூட முருகனை பயமுறுத்திப் பார்த்தேன் அது தொழுநோயாக இருக்கலாம், மருத்துவரிடம் சென்று கவனி என்று. அவன் அசைந்து கொடுக்கவில்லை. அவன் கேட்கிறான் முகம் முழுவதும் வெண்படை தோன்ற என்ன செய்ய வேண்டும் என்று. நான் யாரை நொந்து கொள்வது? என்னையா? அவனையா?

10 வருடங்களுக்குப் பிறகு சென்னையிலிருந்த எனது அலுவலகத்திற்கு 5 நாள் விடுமுறை கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஊருக்கு சென்றிருந்தேன். முருகனை பார்த்து பல வருடங்கள் ஆயிற்று. யாரோ ஒரு அந்நியன் ஊருக்குள் வந்து விட்டதைப் போல அனைவரும் பார்த்தனர். ஒரு வயதானவர் என் அருகே வந்து உற்றுப் பார்த்து சில நிமிடங்கள் யோசித்துவிட்டு இப்படிக் கேட்டார்.

‘யாரு ராசேந்திரன் பையனா?”

எனக்கு அந்த ராசேந்திரன் யார் என்றே தெரியாது. ஒரு வழியாக அவரது கேட்காத காதுகளில் என்னைப் பற்றி விவரங்களை போட்டு விட்டு. ஊருக்குள் சென்றேன். வெகு காலத்திற்கு முன்னரே நாங்கள் இந்த ஊரைவிட்டு சென்னைக்குச் சென்று விட்டதால், கிராமம் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப் போயிருந்தது. ஊருக்குள் முருகனைப் பற்றி விசாரித்ததில், அவன் குழந்தை குட்டிகளுடன் டவுனில் வசதியாக இருப்பதாக தெரியவந்தது. திண்டுக்கல்லுக்குச் சென்றேன்.

வெகுநேர போராட்டத்திற்குப் பின் அவனை ஒரு மளிகைக் கடையில் பார்த்தேன். கையில் ஒரு பெண் குழந்தையுடன் நின்றிருந்தான். அந்த கடை அவனுடைய கடையாம். அந்த குழந்தையும் கூட. நான் ஆச்சரியத்தில் வெலவெலத்துப் போனது உண்மைதான். எனது ஆச்சரியம் எல்லை மீறிப் போனதிற்குக் காரணம், அந்தக் குழந்தைதான். அந்தக் குழந்தை செக்கச்செவேல் என முருகனுடன் சற்றும் ஒட்டாமல் தனித்து இருந்தது. நான் கூட சந்தேகப்பட்டேன். ஏதேனும் வெள்ளைக்காரக் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறானோ என்று. ஆனால் விஷயம் இதுதான். அவன் ஒரு வெள்ளைக்கார பெண்மணியை திருமணம் செய்திருந்தான்.

அவளது சொந்த ஊர் கனடா. 7 வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறாள் அவள். மதுரை மீனாட்சியம்மன் கோவிலை பார்த்து விட்டு அப்படியே திண்டுக்கல் மலைக் கோட்டைக்கு வந்திருக்கிறாள். அங்கு சோகமாக ஒரு முகட்டின் மீது உட்கார்ந்த கொண்டு எதையோ வெறித்து பார்த்து கொண்டிருந்திருக்கிறான். இவன் தற்கொலை தான் செய்யப் போகிறானோ? எனத் தவறாக நினைத்துக் கொண்டு அவளுக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் ஆறுதல் கூற பின் இருவரும் பேசிப் பழகி எப்படி திருமணம் வரை வந்தது என்று எனக்கும் புரியவில்லை.

கடைசியாக நான் கேள்விபட்ட விஷயம் இதுதான். அவள் ஒரு விதவை. ஆனால் அந்தக் குழந்தை நிச்சயமாக அவன் ஜாடையில் தான் இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *