(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நடிகனாக ஆசைப்பட்டு, துணை இயக்குனராக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் நான், பொழுது போகாத ஒரு பின்னிரவில், இணையத்தில் பழங்காலத்துப் படமான கன்னிகா என்ற படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, சிறு வயதில் கதவு வைத்த சாலிடர் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி நினைவுக்கு வந்தது.
அதில் ஒளியும் ஒலியும், கிரிக்கெட் பார்த்த காலங்களில் இருந்த ஒரே ஆசை, வண்ணங்களில் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்பதுதான். வண்ணங்களில் முக்கி எடுத்த பிற்கால எம்.ஜி.ஆர் படங்கள், கருப்பு வெள்ளையல்ல என்பதைத் தெரிந்து கொள்ளகூட பதினைந்து வருடங்கள் ஆனது. 40 வருடங்கள் முன்பு வரை, உலகம் கருப்பு வெள்ளையில்தான் இருந்திருக்குமோ என நினைத்தக் காலங்களை கடந்து, வண்ணக் காட்சிகள் வாழ்க்கையில் பழக்கப்பட்டபின்னர், எம்.ஜி.ஆர் களும் சிவாஜிகளும், ஏன் கமலும் ரஜினியும் கூட கருப்பு வெள்ளையில்தான் மிக அழகாகஇருப்பதாகத் தோன்றியது.
92 உலகக்கோப்பைப் போட்டிகளின் பொழுது, இந்திய அணிக்கான உடை அடர் நீல நிறம் என்பதை என் கனவில்தான் தெரிந்து கொண்டேன். வீட்டுத் தொலைக்காட்சியில், அந்த உடை கருப்பாக இருந்தாலும் இந்தியா ஒரு ஓட்டத்தில் தோற்ற அன்று, கவலையில் தூங்கிய பொழுது, அதே அடர் நீல நிற உடையுடன் கடைசி ஆட்டக்காரர் வெங்கடபதி ராஜுவிற்குப் பதிலாக நான் களம் இறங்கி, கடைசி ஓட்டத்தை நிறைவு செய்து, ஆட்டத்தை சமனிலை செய்தேன். மறுநாள் காலையில் என் வீட்டில் கனவை சொன்னபொழுது, கனவில் சரியான நிறத்தைக் கண்டுபிடித்ததை அவர்கள் கவனிக்காமல், ராஜுவிற்க்கு பதிலாக நான் ஆடியதற்காக சொல்லி சொல்லி சிரித்தார்கள்.
அந்தக்கால முறைப்படி, சபையில் ஆடும் பரதநாட்டியத்துடன் திரைப்படம் ஆரம்பமானது. மாயாஜால வித்தைகள் தெரிந்த நாயகனும் கெட்ட ராஜாவின் மகளும் காதலிக்கின்றனர். என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் முறையே நாயக, நாயகியின் தோழன், தோழி. என படம் நாடகத்தனமாக நகர, அப்படியேத் தூங்கிவிட்டேன். ஆனால் கனவில் படம் பலப் பாடல்களுடன் தொடர்ந்தது, இறுதியில், உயிரை ஒளித்து வைத்திருக்கும் கெட்ட ராஜாவின் கூடான புறாவின் கழுத்து என்.எஸ்.கிருஷ்ணனால் திருகப்பட்டு ராஜா கொல்லப்படும் பொழுது, திடுக்கிட்டு கண் விழித்தேன். திடுக்கிடலுக்கு இரண்டு காரணங்கள், முதலாவது நகைச்சுவை நடிகரால் எப்படி எதிர்மறை நாயகன் கொல்லப்படுவான், இரண்டாவது, கனவில் வந்தப் படம் முழுவதும் நேரில் பார்த்ததைப் போல வண்ணத்தில் இருந்தது. கொஞ்சம் மனது திகிலாக இருந்தாலும், முழுப்படத்தையும் நிஜத்தில் பார்த்துவிடுவது என முடிவு செய்து பார்த்த பொழுது, ஏற்கனவே இருந்த திகில் இரண்டு மடங்கானது. காட்சிக்கு காட்சி அப்படியே கனவில் வந்தது படத்தில் இருந்தது. கடைசிக் காட்சியில் என்.எஸ்.கிருஷ்ணன் தான் புறாவைக் கொல்லுகிறார்.
கருப்பு வெள்ளை திரைப்படம், கனவில் கலரில் வந்தது என்று சொன்னால் மக்கள் சிரிப்பார்கள். மறுநாள் வேண்டாத வேலையாய், வீணை எஸ்.பாலசந்தரின் “நடு இரவில்” படம் முழுவதும் பார்த்து விட்டுத் தூங்கிய பின்னரும் கனவு வந்தது. நடு இரவில் படம் கனவில் வரவில்லை. ஆனால் இந்தக் கனவில், வீணை.எஸ்.பாலச்சந்தருடன் சிவாஜி கணேசனும் பத்மினியும் வண்ணத்தில் நடித்துக் கொண்டிருந்தனர். நடு நடுவே எம்.ஜி.ஆரும் பானுமதியும் வேறு வந்துப் போயினர். பயத்தின் உச்சக்கட்டம் வீரம், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கனவு கலைந்து எழுந்தவுடன், சிவாஜி கணேசன், பத்மினி, வீணை. எஸ். பாலசந்தர் என கூகுளில் தேடினால், மரகதம் என்றத் திரைப்படம் அகப்பட்டது. கன்னிகா படத்திற்கும் மரகதம் திரைப்படத்திற்கும் என்னவொரு ஒற்றுமை என தேடியதில் உணர்ந்தது பக்ஷிராஜா நிறுவனம்தான் இரண்டையும்
தயாரித்து ஸ்ரீராமுலு இயக்கி இருக்கிறார்.
முடிவு-1
இந்தப் படங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று தூங்கிப்போனபொழுது,
“இந்த இதை உடுத்திக்கிட்டு, அந்த ரயில் பொட்டில போய் உட்கார்ந்து வேடிக்கைப்பாரு” என இயக்குனர் சொல்ல,
“சீன் 22, டேக் 1” எனக் காட்சியின் படமாக்கல் ஆரம்பிக்க, கிளாப்போர்டில் மலைக்கள்ளன் என எழுதியிருந்தது.
தூங்கிக்கொண்டிருந்த என்னால் கனவைக் கலைத்து எழுந்திருக்க முடியவில்லை, நாளைகாலை எனக்காக அழும் மக்களிடம் சொல்லிவிடுங்கள், பக்க்ஷிராஜா ஸ்டுடியோ எடுத்தப் படங்களில் நான் உதிரி நடிகனாக, துணை இயக்குனராக 40 களையும் 50 களையும் 60 களையும் வண்ணத்தில் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என !!!
முடிவு -2
கன்னிகா படத்திற்கும் மரகதம் திரைப்படத்திற்கும் என்னவொரு ஒற்றுமை என தேடியதில் உணர்ந்தது பக்க்ஷிராஜா நிறுவனம்தான் இரண்டையும் தயாரித்து ஸ்ரீராமுலு இயக்கி இருக்கிறார். எம்.ஜி.ஆர் பானுமதி நடித்து, ஸ்ரீராமுலு சம்பந்தப்பட்ட படம் மலைக்கள்ளன். இந்தப் படங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி அடுத்த அடுத்த நாட்களின் வேலைப்பளுவால், மறந்து போனது, பார்த்த கன்னிகா படமும் மறந்துப்போனது. கடும் போராட்டங்களுக்குப் பின்னர், தொழில்நுட்பத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் தலை சிறந்த இயக்குனர் என்ற பெயர் பெற்றேன். ஏதோ ஒரு நாள், மீண்டும் கன்னிகா, மரகதம், மலைக்கள்ளன் படங்கள் நினைவுக்கு வர, அவற்றை எனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வண்ணத்தில் மறு உருவாக்கம் செய்ய முடிவெடுத்தேன், சொல்ல மறந்துவிட்டேன், எனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பக்ஷிராஜா ஸ்டுடியோஸ் !!!!
– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு: http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.