அந்தப் பிரதான சாலை எனக்கு பழக்கப்பட்டதுதான். இவ்வளவு தடுப்புக் கம்பிகளை இன்றுதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். வழக்கமாகவே அது மக்கள் நெருக்கடி மிகுந்த வளைவு. ஆடுகளும் மாடுகளும் கூட வாகனங்களின் குறுக்கே அடிபடும். அப்போதெல்லாம் வைக்கப்படாத தடுப்புகள் இப்போ எதற்கு? மற்றவர்களைப்போல் எனக்கும் அந்த வியப்பு இருக்கத்தான் செய்தது. அரசு மருத்துவமனையை ஒட்டிய சாலை. நோயாளிகளின் தேவைக்காக விலை குறைவான பிளாஸ்டிக் வாளிகள், கப்புகள், பாய்கள், தலையணைகள் விற்கும் சின்னச் சின்ன கடைகள் இருக்கும். இன்று அத்தனைக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கடை வாசலிலும் கும்பல் கும்பலாக போலீஸ்காரர்கள் நின்றிருந்தார்கள். மருத்துவமனைக்கு உள்ளே செல்ல கடுமையான பரிசோதனைகளும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. பயங்கர சூறாவளிக்கு முன் அமைதிகாக்கும் முதிய மரங்களைப் போல் அந்த இடம் அச்சமாக இருந்தது. அவர்கள் எதற்கோ அல்லது யாருக்கோ காத்திருந்தார்கள்.
சாலையைவிட மருத்துவமனை வளாகத்திற்குள் பரபரப்பு கூடியிருந்தது. கலகக் கட்டுப்பாட்டு வஜ்ரா வாகனம் நிற்காத குறை அவ்வளவுதான். அதுவும் எங்கோ மறைவாக நிறுத்தப்பட்டிருக்கலாம். உள்ளே போனபோது நண்பகல் 12.45 மணி. ஏப்ரல் வெயில் கொளுத்தி எடுத்தது. எப்படியும் வீரையன் வந்திருப்பான்.
அதற்குமுன் எதாவது செய்தி வாங்கிவிடலாமென்று அங்கே நின்று கொண்டிருந்த காவலர்களை ஒட்டி நின்றேன்.
“யோவ் யாருய்யா நீ? இங்கே என்ன நடக்குதுன்னு தெரியாம ஒரசிக்கிட்ட நிக்கிற. ஓடுய்யா அந்த பக்கம். எழவெடுத்த கருங்காலிப்பய ஜாமீன்ல வந்த பத்து நாளா எங்க தாலிய அக்குறான். நல்லவங்களுக்கு பாதுகாப்பு குடுக்குறத விட இவனுங்களுத்துத்தான் சோறு தண்ணியில்லாம நிக்க வேண்டியிருக்கு. இதுல நீ வேற”
வயதான போலீஸ்காரர் எரிந்து விழுந்தார். இது கதைக்கு ஆகாதென்று உள்ளே போய் அவசர சிகிச்சைப் பிரிவின் பக்கவாட்டில் நின்றுகொண்டேன். ஒர் அறையில் கொக்கியில் மாட்டியிருந்த சீருடையை அணிந்து அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு வெளியில் இருந்த வீல் சேரை உருட்டிக்கொண்டே வீரையன் கேசுவாலிட்டிக்குச் சென்றான். என் சகா அவன். கிரிமினல் மூளை. டிடெக்டிவ் ஏஜென்சி வச்சு நடத்தணும்னு ஆசை. ஏழைப்பட்டவர்களுக்கு நினைத்ததெல்லாமா நடக்குது! நினைத்தது கிடைக்கவில்லை என்றால் கிடைத்ததில் பொருத்திப் பார்க்கும் வகையறா. இங்க இவன்தான் உளவுத்துறை அதிகாரி. துணைக்கு இருப்பவர்கள், நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், கடைநிலை ஊழியர்கள் வரை அத்தனை பேரின் வரலாறையும் வைத்திருப்பான். பெண்ணு, மாப்பிள்ளை பார்க்குறவங்க அணுகுறதுக்கு சரியான ஆள். சிரிக்க பயமாக இருந்தது. மனதிற்குள் சிரித்துக்கொண்டே அவனை வழி மறித்தேன்.
”டேய் வீரா…எப்புர்ரா இருக்க?” என்றதுதான் தாமதம், “அடேய்… நல்…லா இருக்கேன்”.
“ஏது இந்த பக்கம் ? “கண்களைச் சுற்றும் முற்றும் அலையவிட்டு வீரையன் அவசரம் அவசரமாகக் கேட்டான்.
“உன்னை பார்க்கலாம்னு வந்தேன். ஏதோ தப்பா பட்டுச்சு. அதுதான் உள்ள வந்துட்டேன். என்னதான்டா நடக்குது?” கேள்வி கேட்ட என் வாயைப் பொத்தி பழுதடைந்த பழைய வீல்சேர்கள் கிடக்கும் அறைக்குள் தள்ளிக்கொண்டு போனான்.
“உன்னை யாருடா இங்க வரச்சொன்னது? கருங்காலிய வெட்டிப்புட்டாங்கடா”.
“கருங்காலியா? யாருடா அது?”
“நம்ம கருதலிங்கம் டா”. எலும்புகள் உடைந்து கீழே உதிரும் அளவிற்கு என் உடல் நடுங்கியது.
“இங்கதான் உயிருக்கு போராடிக்கிட்டிருக்கான். நிலமை சரியில்லை. நீ வீட்டுக்கு போயிரு.” வீரையன் கண்டிப்போடு கெஞ்சினான். அந்த அறையின் இடுக்கில் யாரோ ஒளித்து வைத்துப்போன உடைந்த விஷ்கியின் நாற்றமும் ஆல்கஹால் ஊறிய துருவின் காட்டமும் குமட்டிக்கொண்டு தலைக்குள் சுர்ரென்று ஏறியது.
அவன் பெயர் கருதலிங்கம். படிக்கிற காலத்தில் நாங்கள் மூவரும் நண்பர்கள். குக்கிராமத்தில் ஐந்தாம்வகுப்பு வரைக்கும்தான் பள்ளிக்கூடம் இருந்தது. மேலே படிக்க விரும்பினால் தஞ்சாவூர் வரவேண்டும். மூன்று பேரும் படிப்பதற்காக மாந்தோப்பு, வடவாறு கடந்து தஞ்சாவூர் வருவோம். கருதலிங்கம் நல்ல கருத்தாக இருப்பான். குரும்பை முத்தாத தென்னம்பாளை கலர். ஒடிசலாக இருப்பான். எல்லாத்தையும் அறிவியலா பார்த்து கேள்வி கேட்பான். வாத்தியார்களுக்குப் பிடிக்காது. நல்ல மார்க் வாங்குவான். அதனால அவங்களுக்கும் வேற வழியில்ல. யார் வம்பு தும்புக்கும் போகமாட்டான். எல்லாத்தையும் விட்டுக்கொடுப்பான். கணக்கு பாடமெல்லாம் எங்களுக்குச் சொல்லித் தருவான். ஆனால், முதல் ரேங்க் மட்டும் யாருக்கும் விட்டுக்குடுக்க மாட்டான். ஜியாமென்ரியில் புலி. அங்க படிச்ச ஆசிரியர்கள், மருத்துவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வருத்தம்தான். அவங்க பெற்றோர்களுக்கும்தான். அவங்களெல்லாம் சந்தோசப்படுற மாதிரிதான் அந்த சம்பவம் நடந்தது.
கருதலிங்கத்தோட அப்பா பக்கம் கொஞ்சம் தோப்பு தொரவு உண்டு. சொத்து பிரிக்கிறதுல பிரச்சனை. இவன் பள்ளிக்கூடம் வந்த நேரம், அவர் தம்பிகாரங்க நான்கு பேர் பஞ்சாயத்து பேசுற மாதிரி வீட்டுக்குள்ள புகுந்து அவன் அப்பா, அம்மாவை வெட்டிக் கொன்னுட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு போலீஸ் வந்து அவனை கூட்டிட்டு போனாங்க. நானும் வீரையனும் பின்னாடியே ஓடுனோம். அந்த சம்பவத்தை இன்னைக்கு நினைத்தாலும் உயிர் பக்குன்னு போயிரும். நீதிமன்றம், விசாரணைன்னு போகவும் வரவும் இருந்தான். என்ன நடந்து என்ன? கருதலிங்கம் யாரும் இல்லாத அனாதை ஆகிட்டான். அவனுக்கு அவ்வளவு கனவு இருந்தது. கடினமான வேலை பாக்குற அளவுக்கு பலம் இருக்காது. அறிவுதான் அவனுக்கு தெம்பு. பசி பொறுக்க முடியாமல் படிப்பையும் நிறுத்திட்டு ஆர்.எஸ். பண்ணையில் வேலைக்கு சேர்ந்துட்டான். அந்த ஆளு அவனை வெளியிலே விடுறதில்லை. வீட்டுக் காவலுக்கு நிக்கிற ஆளுங்க, வேட்டை நாயை அவுத்துவிட்டு, பார்க்க வரும் எங்களை அடித்து விரட்டி விடுவாங்க.
மனசு கேட்காமல் முகப்புக் கதவு இடுக்கு வழியா பார்ப்போம். அதற்குப்பிறகு, எங்கள் கண்களுக்கு அகப்படாமலே இருந்தான். என்னோட அப்பாவுக்கும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை கிடைத்ததால் அங்கேயே வீடு, தொழில் என்று நிரந்தரமாகிவிட்டது. எனக்கு ஈரோட்டில் வாகனங்களின் உதிரி பாகங்கள் இணைக்கும் வேலை. பாடி கோர்த்து தஞ்சாவூர் வண்ணாரப்பேட்டையில் புது டிராக்டர் இறக்குறதுக்காக வந்த வழியில்தான் வீரையாவைப் பார்க்கலாம் என்று மருத்துவக் கல்லூரிக்கு வந்தேன்.
“என்னடா திரு திருன்னு முழிக்கிற என்னோட வந்து தொல. அவன ஒரு எட்டுப் பார்த்துரலாம்” வீரையன் சொன்னபோதுதான் நினைவு தட்டியது.
“கருதலிங்கத்துக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பொம்பளப் புள்ளைங்க இருக்குடா. அதுகல நல்லா படிக்க வச்சிட்டான். அவன் மனைவி இங்கதான் மாரியம்மன் கோயிலு. குணமான பொண்ணுன்னு கேள்விப்பட்டேன். நல்ல குடும்பத்தோட நிம்மதியா வாழ்ந்துகிட்ருக்கான்னு சந்தோசப்பட்டேன். ஆர்.எஸ்ஸோட பையன் மொரட்டு ரௌடி. பிடிக்கலைன்னா பார்த்த இடத்துல சிதைச்சிருவான். படிக்காத மோடு முட்டிப் பய. வெளியிலே தெரியாமல் கருதலிங்கத்தோட புத்திசாலித்தனத்தை பயன்படுத்திருக்கானுங்க. நம்மாளு களத்துல இறங்க மாட்டானாம். மாஸ்டர் பிளான் மட்டும்தானாம். அதுல கில்லாடியாம். என்னால நம்பவே முடியலைடா. அவன் அறிவு இப்படியாடா கெட்டுப் போகணும்? சித்தப்பனுங்கள பழி வாங்க அவனுங்க கூட சேர்ந்தானா? ஒன்னுமே புரியல. குற்ற உணர்ச்சியா இருக்கு. அவன நாம விட்ருக்கக்கூடாதுடா.” வீரையன் கண்களைத் துடைத்துக்கொண்டான்.
“நாமளாச்சும் அவனோட பேச முயற்சி செய்திருக்கலாம். அவன ஆதாரமா வச்சி ஆள் கடத்தல், கொலைன்னு செய்திருக்கானுங்க. கண்டுபிடிச்சு ஜெயில்ல போட்டுட்டானுங்க. ஜாமின்ல வந்துருக்கான். இப்பவும் அவனை நெருங்க முடியாது. சின்னவன் கன்ட்ரோல்லதான் இருக்கான். பரம்பரையா இவனை புடிச்சி வைச்சிருக்கானுங்க. ரெட்டிப்பாளையம் ரோட்டுல பைக்கில வந்தபோது பின் மண்டையில் சரியா மூளையை குறிவச்சி கட்டையால பலமா தாக்கியிருக்காங்க. இரண்டு கைகளிலும் சரியான வெட்டு. பிழைப்பானாத் தெரியல. எப்படி இருக்க வேண்டியவன்…”
வேதனையோடு அவசர சிகிச்சை பிரிவுக்குள் நாங்கள் நுழையும் போதே கருதலிங்கத்தின் அலறல் அந்தப் பகுதியையே உறைய வைத்தது. வீரையனுக்கு உதவியாளனைப்போல் நானும் உள்ளே நுழைந்தேன். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவனைப் பார்க்கிறேன். வில்லனுக்கான எந்த அடையாளமும் இல்லை. டீ, காபி கூட குடிக்க மாட்டானாம். பழைய சோற்றில் சின்ன வெங்காயத்தை நசுக்கிப்போட்டு கரைத்துக் குடித்துவிடுவானாம். ஐம்பது வயதிலும் நாற்பத்தைந்து கிலோ எடைதான் இருப்பான். அவன் பக்கத்தில் ஒரு பெண் அழ வாய்ப்பில்லாமல் சேலை முந்தானையை வாய்க்குள் அடக்கிக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தாள். அவள், அவன் மனைவியாகத்தான் இருக்க வேண்டும். அவன் மூச்சு வேகம் மேலும் கீழுமாக ஏறி ஏறி இறங்கியது.
“டாக்டர்… டாக்டர்… என்னை எப்படியாவது காப்பாத்திருங்க . புண்ணியமாப் போகும். இனிமேல் தப்பு செய்ய மாட்டேன்.” தலையை தூக்க முயன்று தோற்றுக்கொண்டே இருந்தான். ”டாக்டர்…டாக்டர்…” என்ற அவனின் அழுகை அங்கிருப்பவர்களை துயரத்தில் ஆழ்த்தியது. மருத்துவர்கள் அழக்கூடாதென்று சட்டம் இருக்கிறதா என்ன? கண்கலங்கினார்கள். பதறினார்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் எப்படியாவது அவனைக் காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தார்கள். “புன்னை நல்லூர் அம்மா இந்தமுறை பொழைக்க விட்ரு தாயி. உன் மேல சத்தியம்” என்றெல்லாம் கருதலிங்கம் புலம்பினான்.
அவன் படுக்கைக்கு அருகே நோயாளிக்கான லாக்கரில் மாலைகள், காப்புகள் என அரை மூட்டை அளவு கருங்காலிகள் பேப்பரில் சுற்றியிருந்தன. வீரையனைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டான். “அதெல்லாம் இவன் போட்டு இருந்தது. காத்து, கருப்பு அண்டாதாம். தீய சக்தி நெருங்கவே நெருங்காதாம். எவன் வியாபாரத்துக்கு கெளப்பி விட்டான்னு தெரியல. எல்லாப் பயலுகளும் போட்டுக்குட்டு திரியுறானுங்க. செய்யுறதெல்லாம் மொள்ளமாரித்தனம். இது ஒன்னுதான் இவனுங்களுக்கு கொறச்சல். ம்க்கும்.” ஒருவித கோபத்தோடும் சலிப்போடும் மெல்லிய குரலில் சொன்னான்.
சிறிது நேரத்திற்குள் கருதலிங்கத்தின் சுவாசம் தேய்ந்து கொண்டே இருந்தது. “ஐயோ மாமா…” அவன் மனைவி எழுந்து ஓலமிட ஆரம்பித்தாள். மார்ச்சுவரியில் கூட்டம் கூடிவிட்டது. தகவல் தெரிந்த உடனேயே பரபரவென்று வாகனங்கள் பிரதான
சாலைக்கு விரைந்தன. எதிர்பார்த்ததுபோல் ரௌடிகள் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை. பதுங்கியிருந்த ஆர்.எஸ்.ஆட்களும் எதிர் தரப்பு கோஷ்டியும் பெரிய அரிவாள்களோடு ஆவேசமாக ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டார்கள். காவல் துறையினர் அனைவரையும் துரத்திப் பிடித்து அத்தனை பேரையும் வாகனத்தில் ஏற்றினார்கள்.
“நீ ஊருக்கு போ. பேசுறேன்” வீரையன் அனுப்பி வைத்தான்.
பேருந்துக்காக வெளியில் வந்தேன். எல்லாமும் இயல்பாக இருந்தது. கடைகள் திறந்திருந்தன.
அடுத்த ஒரு மணி நேரத்தில் சாலை சுத்தம் செய்யப்பட்டு வாகனங்களை அனுமதிக்கும் வகையில் தடைக்கம்பிகள் நீக்கப்பட்டன.
கருதலிங்கத்தின் பழைய நினைவுகளில் இருந்து மீளவே முடியவில்லை. அவன் செயற்கைக்கோள் விஞ்ஞானியாக வருவான் என்று அவனைப்போல் நாங்களும் கனவு கண்டோம். ”வாழ்க்கை என்னதான் சொல்ல வருகிறது”. அழுகையும் ஆத்திரமுமாக வந்தது. மதியம் 2.30 மணி. தேநீருக்கு பசியையும் அழுகையையும் சமநிலைப்படுத்தும் தன்மை உண்டு. ஒரு கண்ணாடி குவளையில் தேநீர் வாங்கிக்கொண்டு நிமிர்ந்தேன். கருதலிங்கத்தின் அலறல் அதிர்வுகூட இன்னும் மறையவில்லை. அதற்குள் “கருங்காலி கடவுள் ஆனார்” என்ற இரங்கல் செய்தியோடு பதாகையை அங்கே கட்டிக் கொண்டிருந்தார்கள். அதை யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அடிக்கடி இப்படி யாராவது கடவுள் ஆகிவிடுவார்கள் போல.
அவன் முகத்தை முழுமையாகப் பார்க்கிறேன். மார்பு தெரியாத அளவிற்கு கழுத்து நிறைய கருங்காலி மாலைகள். “அந்த போலிஸ்காரர் என்னிடம் இவனை கருங்காலி என்று எதை வைத்து திட்டியிருப்பார்”. பிழைத்திருந்தால் ஒருவேளை திருந்தியிருப்பானா? திருந்தியிருந்தால் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? அவன் மனதிற்குள் என்ன புழுங்கியிருப்பான். நல்லவர்களைத் தேடி அலைந்தானா? என்னையும் வீரையனையும் நிச்சயம் நினைத்திருப்பான். யோசனையாக இருந்தது. நாம் எல்லோரும் யாரோ ஒருவர் விரித்த கன்னி வலையில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.
தூரத்தில் இருந்து மருத்துவமனையை நெடுநேரம் கூர்ந்து கவனித்தேன். பிரபஞ்சத்தையே உள்வாங்கும் ஹாக்கிங்கின் கருந்துளைபோல் அது மர்மமாகச் சுழன்று கொண்டே இருந்தது.