கருத்தரங்குக்கு வந்த டாக்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2024
பார்வையிட்டோர்: 651 
 
 

ஹைதராபாத் நகரத்தின் ஜன நடமாட்டமும், வாகன நெரிசலும் அதிகமாக இருந்தது அந்த வியடியற்காலை நேரத்தில் !

வாடகைக்கு காரை அனுப்பி வைக்கும் அந்த ட்ராவல்ஸ் ஏஜன்சி அலுவலகத்தின் உள்புறம் அமைந்திருந்த அறையில் மேசையின் முன்னால் அமர்ந்திருந்த மானேஜர் சத்தமாய் போனில் பேசிக்கொண்டிருந்தார். என்ன சார் இந்த முறையும் நாங்கதான உங்க கருதரங்குக்கு காருக சப்ளை பண்ணறோமில்லையா?

போனின் எதிர்புறமிருந்து சாரி இந்த முறை வேற “ட்ராவல்ஸ்” ஏற்பாடு பண்ணியிருக்கு.

என்ன சார் எப்பவும் நாங்கதான உங்களுக்கு காருக சப்ளை பண்ணி கிட்டிருக்கோம், அப்படி இருக்கும்போது திடீருன்னு வேற ஒரு ட்ராவல்ஸ்சை புக் பண்ணியிருக்குன்னு சொல்றீங்களே.

ஐ ஆம் சாரி, இந்த கருத்தரங்கை ‘ஸ்பான்சர்’ பண்ணறவங்களுக்கு வேண்டப்பட்ட ‘ட்ராவல்ஸ்’ அது, அதனால அவங்க வற்புறுத்தறதுனாலதான் இந்த ஏற்பாட்டை பண்ணிருக்கோம்,

பேசி முடித்து தொலைபேசியை கீழே வைக்கவும் ட்ரைவர் ஒருவன் காரை கழுவி துடைத்து இவனே தள்ளி நின்று அதை அழகு பார்த்து விட்டு, ட்ராவல்ஸ் அலுவலகத்தின் முன் கொண்டு வந்து நிறுத்திவிட்டு உள்ளே வந்து மானேஜர் சார் நான் ரெடி, அந்த ஹோட்டலுக்கு கிளம்பட்டுமா சார் ?

ச்..சு.. அவங்க வேற ட்ராவல்ஸ் புக் பண்ணிட்டாங்களாம்ப்பா.. நீ வெயிட் பண்ணு, அடுத்து எங்க போகணும்னு அப்புறம் சொல்றேன்.

என்ன சார் இப்படி பண்ணிட்டாங்க, இன்னைக்குத்தான நிறைய டாக்டருங்க பேசற மீட்டிங்குக்கு வந்து தங்கியிருக்கற ஹோட்டலுக்கு போகணும்னு சொல்லிகிட்டிருந்தீங்க.

ஆமாப்பா, எப்பவும் நம்பளைத்தான் கூப்பிடுவாங்க, அதனால அதைய நம்பி வேற ட்ரிப் எதுவும் இன்னைக்கு எடுக்காம வச்சிருந்தேன். இவங்க இப்படி காலை வாருவாங்கன்னு எதிர்பார்க்களையே !

அந்த ட்ரைவரின் முகம் சோர்ந்து விட்டது. சரி சார் வண்டியை மறுபடி ஷெட்டுல கொண்டு போய் விட்டுட்டு வர்றேன், வெளியே வந்தவன் காரை அவர்களுக்கு ஒதுக்க்கியிருந்த பகுதியில் கொண்டு போய் நிறுத்தி விட்டு இறங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு யாருக்கோ போன் செய்தான்.

நம்ம திட்டம் நடக்காது போலிருக்கு, இன்னைக்கு என் காரு அந்த ஓட்டலுக்கு போக முடியாது போலிருக்கே? என்ன செய்யறது.

அதுக்காக நம்ம திட்டம் போட்டு வச்சிருக்கற வேலைய செய்யாம இருக்க முடியாது. இப்ப மணி என்ன? ஏழு ஆச்சு. இன்னும் அரை மணி நேரத்துல நீ போயி அவரை ஏத்திக்க, வெளியே காரை கொண்டு வந்து ஏதோ சொல்லி வண்டியை ஓரங்கட்டி என்னை கூப்பிடு, அடுத்து நான் பார்த்துக்கறேன்.

இங்க மானேஜர் கேட்டா என்ன பண்ணறது?

அவருகிட்ட எதுவும் சொல்ல வேணாம், வண்டிய எடுத்துட்டு நேரா நீ அந்த ஹோட்டலுக்கு போய் சேரு. கவனம் கவனம். அவங்களுக்கு கொஞ்சம் கூட உன் மேல சந்தேகம் வந்துட கூடாது, புரிஞ்சுதா!

ஹைதராபாத் நகரில் புகழ் பெற்ற நட்சத்திர ஹோட்டல் அது. நேற்றே சென்னையில் இருந்து இங்கு வந்து கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அவருக்கு என்று ஒதுக்கி இருந்த அறையில் தங்கியிருந்தார் அறுவை சிகிச்சை நிபுணர் அய்யன் பெருமாள்.

சென்னையில் ஓரளவு பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டி அதனை நிர்வகித்து வருகிறார். இவரைப்போல புகழ் வாய்ந்த மருத்துவர்கள் அங்கு பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இவரது எண்ணம், இலட்சியம் எல்லாம் புதிய புதிய மருத்துவ சிகிச்சை முறைகளை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துவதில் தான்.

இந்த கருத்தரங்கிற்கு வந்திருப்பது கூட அறுவை சிகிச்சையில் புதிய முறை ஒன்றை இந்த கருத்தரங்கில் எடுத்து சொல்லத்தான் வந்திருக்கிறார். இதற்காக இவரை கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்கள் விசேஷமாகவே அழைத்து இருக்கிறார்கள்.

விடியற்காலையில் எழுந்து எட்டு மணிக்கெல்லாம் தயாராகி விட்டார். பத்து மணி அளவில்தான் கருத்தரங்கு தொடங்கும் இவருக்கு பதினோரு மணிக்கு நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.

அது வரை என்ன செய்வது? இவர் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் தான் ஆற்றவிருக்கும் சொற்பொழிவை எப்படி பேசி வந்திருக்கும் மருத்துவர்களின் கவனத்தை கவர்வது என்று சிந்தித்து உட்கார்ந்து கொண்டிருந்தார்.

கதவை தட்டும் சத்தம் கேட்டவுடன் யெஸ் கமின் என்றார். உள்ளே நுழைந்த ஒரு இளம் பெண் ஓட்டல் பணீயாளராய் இருக்க வேண்டும். சார் உங்களை கருத்தரங்கு நடக்கும் இடத்திற்கு அழைத்து போக கார் கீழே நிற்கிறது டிரைவர் காத்திருக்கிறார். .

இதோ கிளம்பி விட்டேன். எனது பைல்?..சுற்று முற்றும் தேடியவர், சற்று தள்ளி சோபாவின் மேல் இருந்ததை பார்த்து எடுத்துக் கொண்டவர், அறையை விட்டு கிளம்பினார்.

கார் டிரைவர் யூனிபார்மில் விறைப்பாக நின்றார். முகம் கொஞ்சம் வித்தியாசமாய் இருந்ததாய் மனதுக்குள் பட்டாலும் அதை கருத்தில் கொள்ளாமல் காருக்குள் ஏறி உட்கார்ந்தார்.

கார் அந்த ஓட்டலை விட்டு வெளியே வந்து சற்று தொலைவு சென்று நின்றது. டிரைவர் இறங்கி காரை சுற்றி வந்து ஒவ்வொரு டயரையும் தட்டி பார்த்தது இவருக்கு ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.

சட்டென ஓட்டுநர் இருக்கை கதவு திறந்து மன்னிக்கவும் சார், பின் புறம் இருக்கும் சக்கரம் ஒன்றில் காற்று இறங்கியிருக்கிறது. கோபித்து கொள்ளாமல் இருந்தால் வேறொரு காரை இப்பொழுதே வரவழைக்கிறேன். இல்லையென்றால் பத்து நிமிடம் தாருங்கள், டயரை மாற்றி விடுகிறேன்.

அய்யன் பெருமாள் அவ்வளவு சீக்கிரம் கோப்படுபவர் அல்ல, அவரது அனுபவமும் திறமையும் அவரை கோபப்பட வைப்பதில்லை. காரணம் அவர் இன்று இந்தியாவின் முன்னணி மூளை அறுவை சிகிச்சை நிபுணர். கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட மூளை அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து காட்டியவர். இன்று இந்த கருத்தரங்குக்கு அவரை அழைத்திருப்பதே அவரது வெற்றிகளை பற்றிய அவரது கட்டுரைகளை கேட்க வேண்டும் என்றே அழைத்திருக்கிறார்கள்.அவரும் அவருடைய அறுவை சிகிச்சைகளின் விவரங்களை கோப்பில் வைத்து கிளம்பியிருக்கிறார். இப்படி புகழ் வாய்ந்தவரை கருத்தரங்கு நடத்துபவர்கள் வந்து பத்திரமாய் அழைத்து போக வேண்டும், இவர் அதை கூட பெரியதாக எடுத்து கொள்ளாமல் கிளம்பியிருக்கிறார்.

டிரைவரின் வேண்டுகோள் பெரியளவில் பாதிக்காததால், தனது வாட்சை பார்த்தவர் நேரமானாலும் பரவாயில்லை., நீ மெதுவா முடிச்சுட்டு வா, நான் வேற ஏதாவது கார்ல போயிக்கறேன்.

டிரைவர், இத ஒரு நிமிசம் சார் வேகமாக ஓடியவன் ஐந்தே நிமிடத்தில் ஒரு காருடன் வந்தான். சார் காரை கூட்டிட்டு வந்திருக்கேன், இதுல ஏறிக்குங்க,

மறுபடி மன்னிப்பு கேட்டுக்கறேன். பரவாயில்லை, இவருக்கு வழி தெரியுமில்லையா?. ஏறி உட்கார்ந்தவர், மேற்கொண்டு எதுவும் பேசாமல் தான் கொண்டு வந்திருந்த பைலை மும்முரமாக படிக்க ஆரம்பித்தார்.

ஒன்பது மணி இருக்கும், அந்த நட்சத்திர ஓட்டலின் முன் கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு கோட்டு சூட்டு அணிந்தவர்கள் இறங்கி ரிசப்ஷனை நோக்கி வந்தனர்.

ஓட்டல் ரிஷசப்சனில் அமர்ந்திருந்த அந்த இளம்பெண் எஸ்..தலையை உயர்த்த டாக்டர் அய்யம் பெருமாள் அறை எண் 206 ல் இருக்கிறார், அவரை கருத்தரங்குக்கு கூப்பிட்டு போக வந்திருக்கோம், ஆங்கிலத்தில் சொல்ல அந்த பெண் வியப்பாய் புருவத்தை நிமிர்த்தினாள். சார் அரை மணி நேரம் முன்னால் ஒரு கார் வந்து அவரை அழைத்து போக வேண்டும், அழைக்க முடியுமா என்று என்னை கேட்டார்கள், நான்தான் அவரை கீழே அழைத்து அந்த காரில் ஏற்றி விட்டு வந்தேன்.

அவரை அழைத்து போக கார் வந்ததா? என்ன சொல்கிறீர்கள், அவரை அழைக்க இப்பொழுதுதான் நாங்கள் வருகிறோம், அதற்குள் அவரை யார் அழைத்து சென்றிருப்பது?

தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள் கையில் இருந்த செல்போனில் யாரிடமோ பேசி விட்டு பரபரப்பானார்கள். டாக்டர் அங்க இன்னும் வரலையாமா? அப்படீன்னா அவரை யார் கார்ல கூட்டிட்டு போயிருப்பா? இதை கேட்ட அந்த பெண்ணின் கண்கள் பயத்தை காட்டியது. தான்தானே அவரை காரில் ஏற்றி அனுப்பியது.

அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த ஓட்டல் காவல் துறையின் கேள்வியால் துளைக்கப்பட்டது. அந்த பெண்ணிடம் ஏகப்பட்ட கேள்விகள், எந்த கார்? கலர் என்ன? டிரைவர் எப்படியிருந்தான்?

அதற்குள் கார் நிற்குமிடத்திலிருந்து ஒருவன் கொடுத்த தகவல் டாக்டர் அந்த காரில் போகவில்லை, அதிலிருந்து இறங்கி வேறொரு காரில் ஏறி சென்றதை பார்த்தாக சொன்னான். அப்படியானால் டாக்டர் அந்த காரிலும் ஏறவில்லையா?

அந்த ஓட்டலின் சி.சி. டிவி கேமரா கொண்டு வரப்பட்டு ஆராயப்பட்டது. கார் டிரைவர் அவருடன் ஏதோ பேசுவது தெரிந்தது, ஆனால் முகம் சரியாக தெரியாத அளவுக்கு தலை தாழ்த்தி பேசுவது தெரிந்தது, அடுத்து கார் ஓட்டலை விட்டு வெளியே போனவரைக்கும் தெரிந்தது. ஆனால் வேறு காரில் மாறி போயிருக்கிறார், அப்படியானால் அந்த கார்?

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தில் போலீஸ் இரு கார்களையும் அடையாளம் கண்ட போது அது அநாதையாக ஐம்பது கிலோ மீட்டர் தள்ளி ஒரு பள்ளத்தில் நின்று கொண்டிருந்தது. காரை ஓட்டி வந்தவர்களின் இருப்பிடத்தை கண்டு பிடித்து அவர்களை பிடிக்க வசிக்குமிடத்திற்கு விரைந்த போலீஸ் அவ்ர்கள் தங்கியிருந்த அறை கதவின் பூட்டை. உடைத்து உள்ளே போனது.

யார் அவர்கள்? மறு நாள் பத்திரிக்கை முழுவதும் இதே கேள்வி. அடையாளம் தெரியாத நபர்களால் புகழ் பெற்ற மூளை அறுவை சிகிச்சை டாக்டர் கடத்தப்பட்டார். அவரை கடத்தி சென்ற கார் கண்டு பிடிக்க பட்டு விட்டது, ஆனால் டாக்டரையும், அவரை கடத்தியவர்களையும் கண்டு பிடிக்க போலீஸ் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது.

அன்று இரவு பதினோரு மணி அளவில் சென்னையில் தனது மருத்துவமனையில் டாக்டர் அய்யம்பெருமாள் பத்திரிக்கை நிருபர்களை அழைத்து நேர்காணல் கொடுத்தார். என்னை எவரும் கடத்தவில்லை. நானாகத்தான் சென்னை வந்து விட்டேன் என்று.

அப்படியானால் உங்களை ஏற்றிக்கொண்டு சென்ற கார் ஏன் நடு வழியில் நிற்க வேண்டும்?. அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். முதல் கார் டயர் மாற்ற வேண்டும் என்று வேறு காரில் ஏற்றினார்கள், அதுவும் சிறிது தூரம் போனவுடன் பழுதாகி நின்று விட்டது. எனக்கு மனசு சரியில்லாமல் போய் விட்டது. ஒரு வேளை நான் இந்த கருத்தரங்கிற்கு வருவது இயற்கைக்கு பிடிக்கவில்லையோ என்ற மனகசப்பு தோன்ற அந்த டிரைவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் சென்னைக்கு வந்து விட்டேன்.

உடனே கருத்தரங்கு நடத்தியவர்களிடம் சொல்லியிருக்கலாமே? நிருபர்கள் கேட்கவும், மன்னிக்கவும் அவர்கள் என்னை அவமானப்படுத்தியதாக நான் நினைத்ததால் அதை பற்றி பேச விரும்பவில்லை, என்னை அழைக்க அவர்களே அல்லவா வந்திருக்க வேண்டும், யாரோ ஒரு டிரைவரை அனுப்ப, அவன் திடீரென்று கார் ஓடாது என்று என்னை இறக்கி விட்டு வேறொரு காரில் ஏற்றி விட அவனும் வண்டி பழுது என்று என்னை இறக்கி விட இத்தனை களேபரமும் இவர்களால்தானே? அதனால் சென்னை வந்து நான் ஒப்புக்கொண்ட இரண்டு நோயாளிகளின் அறுவை சிகிச்சையை முடித்து விட்டு உங்களுக்கு பேட்டி கொடுக்கிறேன்.

அந்த ஓட்டுநர்கள் என்னவானார்கள்? நிருபர்களின் கேள்விக்கு எனக்கு தெரியவில்லை, போலீசிற்கு பயந்து எங்காவது பதுங்கியிருக்கலாம்.

அடுத்த நாள் இரு ஓட்டுநர்களும் போலீசில் சரண்டைந்தார்கள், தீவிர விசாரணையில் அவர்கள் கருத்தரங்கு நடத்துபவர்களுக்கு வாடிக்கையாக ஓட்டுபவர்கள், இந்த முறை இவர்களை விட்டு வேறொருவருக்கு வாய்ப்பு தந்து விட்டதால், தாங்கள் இவரை அழைத்து கொண்டு போய் விட முந்திக் கொண்டதாக சொன்னார்கள், ஆனால் எங்களின் கெட்ட நேரம் இரு கார்களும் பழுதாகி விட்டது. டாக்டரும் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டதால் அவர் என்னவானார் என்ற கேள்வி வரும்? போலீஸ் எங்களை கண்டு பிடித்து தேடுவார்கள் என்று பயந்து ஒளிந்து கொண்டதாக தெரிவித்தார்கள். அவர்கள் சொன்னது நம்ப கூடியதாக இல்லாவிட்டாலும் டாக்டரின் பேட்டியில் அவர்கள் மீது எந்த தவறும் சொல்லாததால் இவர்களை எச்சரித்து விட்டு விட்டார்கள்.

டாக்டர் அய்யம்பெருமாள் வீட்டில் ஏழை விவசாய தோற்றமுடைய கணவனும் மனைவியும் டாக்டரின் கையை பிடித்து, என் குழந்தையோட உயிரை காப்பாத்தி கொடுத்திட்டீங்க டாக்டர். நானும் என் மனைவியும் அப்ப தெய்வத்து கிட்ட முறையிட்டுகிட்டு இருந்தோம், இப்படி எங்க குழந்தையோட மரணத்தை எதிர்பார்த்து காத்திகிட்டிருக்க வைச்சுட்டியே? அப்படீன்னு அழுதுகிட்டிருக்கும் போது தெய்வமா வந்து என் குழந்தைய இங்க கூட்டிட்டு வந்து எங்கனால நினைச்சு கூட பார்க்க முடியாத சிகிச்சைய குழந்தைக்கு கொடுத்திருக்கீங்க, எங்களையும் உங்க வீட்டுலயே தங்க வச்சிருக்கீங்க ஐயா..

உஷ்..அழுக கூடாது. நீங்க எனக்கு நன்றி சொல்றதை விட என்னைய கடத்தி உங்க கிட்டே கொண்டு வந்து நிறுத்தி உங்க குழந்தைக்காக கெஞ்சி நின்னானுங்க பாருங்க அந்த டிரைவர் பசங்க, அவங்களுக்கு சொல்லுங்க. அவங்க ஏற்பாடு பண்ணி கொடுக்கலையின்னா நாம அவசர அவசரமா என்னோட ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்திருக்க முடியுமா? உடனே சர்ஜ்ரி பண்ணி குழந்தைய பிழைக்க வைக்க முடிஞ்சிருக்குமா?

வெளியே இருந்து அழைப்பு வர டாக்டர் முன்னறைக்கு வந்தார். ஹைதராபாத் கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்த அய்யம் பெருமாளின் நண்பன் டாக்டர் ரமேஷ் உடன் இரண்டு மூன்று டாக்டர்கள் இருந்தார்கள்.. அவ்ர்களை கண்டதும், வாங்க உட்காருங்க, அன்புடன் அழைத்தார்.

சாரி டாக்டர் உங்களை ரொம்ப சங்கடப்படுத்திட்டோம், நாங்க பொறுப்பு எடுத்து உங்களை கவனிச்சிருக்கணும், வருத்தத்துடன் சொல்ல, டாக்டர் அப்படி செஞ்சிருந்தீங்கன்னா என்னால் ஒரு நல்ல காரியம் செய்ய முடியாம போயிருக்கும், சொல்லி விட்டு சிரித்தார். வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் முகத்தில் கோபத்தை காணோமே என்று யோசித்திருப்பார்களோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *