குமரேசன் முன்பு அந்த சிறுத்தை சீறிப் பாயும் உறுமலுடன் நின்று கொண்டிருந்தது. இவனுக்கோ பசி வயிற்றைக் கிள்ளுகிறது. இந்தக் கொடும் பசியில் இப்படி இங்கே நின்று கொண்டிருக்கிறோமே என்று மனம் விசனப்பட்டது. அந்த சிறுத்தையின் முன்பு இரண்டு நாட்களுக்கு முன் இறந்த மாட்டின் இறைச்சி கிடந்தாலும், அது அதனை சீண்டவில்லை.
குமரேசனையே பார்த்து முறைத்துக் கொண்டபடி இருந்தது.
விமல் சரியாக அப்போது தண்ணீர் பாட்டிலுடன் அங்கே வந்தான். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த குமரேசனைத் தட்டி அந்த பாட்டிலை அவனிடம் கொடுத்தான். அதை வாங்கி குடிக்கையில் சட்டென என்ன தோன்றியதோ தன் முன்னே கூண்டுக்குள் நின்று கொண்டிருக்கும் சிறுத்தையிடம் அந்த பாட்டிலை நீட்டினான். அது மேலும் தன் கோரப்பற்களைக் காட்டி மிரட்டலாக உறுமியது.
அந்த மிருகக்காட்சி சாலையில் அன்று 200 பேர் நடமாடிக் கொண்டிருந்தாலும் அனைவரும் அங்கே இருக்கும் கிளிகளையும், மான்களையுமே பார்க்க ஆவல் காட்டினர். ஏன் இந்த சிறுத்தையை கண்டுகொள்ள மறுக்கின்றனர் என்று குமரேசனுக்கு அங்கிருந்தவர்களின் மேல் வெறுப்புத் தட்டியது. சட்டென அந்த தண்ணீர் பாட்டிலை தன்னுடன் எடுத்துக் கொண்டு, அந்த மிருகக்காட்சி சாலையின் முகப்பில் அமைந்திருக்கும் அலுவலரின் அறைக்குச் சென்றான். அங்கே அவர் மிகவும் கவனத்துடன் முக்கியமான ஏதோ ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது.
அவரின் மேசையின் மேல் இருந்த மை டப்பாவை எடுத்து அவரின் கோப்பின் மேல் தாமதிக்காமல் ஊற்றினான் குமரேசன்.
அலுவலர் அவனை ஏறிட்டு முறைத்துப் பார்த்தார். அவன் அவரின் மேசையின் அருகில் வந்து பார்க்க அப்போது தான் தெரிந்தது, அவர் பேனாவில் எழுதிக் கொண்டிருந்தது ‘Hindu paper’-ல் வரும் sudoku-விற்கான விடைகள் என்று. பொழுதுபோக்கிற்காக எழுதுவதை இவ்வளவு மும்முரமாக செய்கிறாரே என்று எண்ணினான் அவன். பின் அவரை நோக்கி இறங்கி வரச் சொல்லி சைகை காட்ட, அவர் என்னவென்று புரியாமல் இவனைப் பார்த்தவாறே அருகில் வந்தார். அவரை அங்கே தூரத்தில் தெரியும் சிறுத்தையின் கூண்டைத் திரும்பிப் பார்க்கச் சொன்னான். அவர் சற்றும் புரியாமல் அதைப் பார்த்துவிட்டு பாவமாக இவனைத் திரும்பிப் பார்த்தார்.
“புலிக்கு ஏன் தண்ணி வெக்கல?” என்று குமரேசன் கேட்க, அந்த அதிகாரி தனக்குள் சிரித்துவிட்டு, பின் தன் உதவியாளரை உள்ளேயிருந்து அழைத்து, அந்த சிறுத்தைக்கு தண்ணீர் வைக்கச் சொன்னார். அப்போது குமரேசனுக்கு அருகில் சரியாக வந்து நின்றான் விமல். அதிகாரி முகம் மலர்ந்தவாறே சிரித்தபடி, “பையன் சுட்டியா இருக்கானே.. என்ன படிக்கிறான்..?”
எனக் கேட்க, “4th standard sir..” என்று பதில் கூறினான் விமல்.
சிறுத்தைக்கு தண்ணீர் வைத்துவிட்டு வந்த உதவியாளனைப் பார்த்து, “ஒரு 8 வயசு பையனுக்கு இருக்கற மனிதாபிமானம் கூடவா உங்களுக்கு இல்ல? நமக்கு கொடூரமானதா தோணினாலும் அதுவும் ஒரு உயிர் தானய்யா..” என்று கடிந்து கொண்டார். அவன் மௌனமாக உள்ளே சென்று ஒளிந்தான். அதிகாரி தன்னிடம் இருந்த ஒரு சாக்லேட்டை குமரேசனிடம் தர அதை சிரித்தபடியே வாங்கிக் கொண்டு அவருக்கு சல்யூட் வைத்து விட்டு, விமலின் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பினான் குமரேசன்.
தான் சிறுத்தைக்கு தண்ணீர் வைத்ததால் தான் அந்தச் சிறுவன் தனக்குப் புன்னகை புரிந்தான் என்று அதிகாரிக்கும் தெரிந்திருந்தது.