கருக்கொண்ட மேகங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2024
பார்வையிட்டோர்: 769 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் பத்தொன்பது

ஹலீம்தீனின் தங்கை ஜெஸ்மினுக்கு விவாகப் பேச்சுவார்த் தைகள் இக்கிரிகொல்லாவையில் நடந்து முடிந்து விட்டிருந்தது. 

அன்று ‘அடையாளம் போடும்’ வைபவத்திற்காக மாப்பிள் ளைப் பகுதியினர் வந்து விட்டுப் போய் ஒரு வாரத்திற்குப் பின் பெண்வீட்டாரை ஒரு விருந்துபசாரத்திற்கு அழைத்திருந்தார்கள். 

அப்துல் மஜீதின் இல்லத்திலிருந்து இரண்டு ‘வேன்’கள் நிரம்ப ஆட்கள் போயிருந்தனர், ஆண்களும் பெண்களுமாய்… 

வீட்டுக்கு முன்னால், நீண்ட முன்றிலில் பாய்கள் விரித்து வரிசை வரிசையாக சுத்தமான தாமரை இலைகள் பரப்பப் பட்டிருந்தன. பகலுணவு ‘சிம்பிளாக’ சம்பா அரிசிச் சோறும், இரண்டு கறிகளும் ஒரு சொதியும்… 

அந்த வைபவம் முடிந்ததும். 

அப்துல் மஜீத் குழுவினர் கிராமத்திற்குத் திரும்பினர். 

ஆனால் ஹலீம்தீனும் அவனுடன் சென்ற யாசீனும் சேகுவும் நின்று விட்டார்கள். பி.வி.மு.ச இக்கிரிகொல்லாவ பிரதிநிதி, பாடசாலை மண்டபத்தில் நண்பர்கள் சந்திப்பிற்கு ஒழுங்கு செய்திருந்தார். 

ஆரம்பத்திலேயே ஒரு சந்தேகம். 

‘முன்பு ஒருமுறை நாச்சியாதுவ கிராமத்தின் வரலாற்றை சொன்ன நீங்கள், ஆனால் மன்னனுடன் வந்தவர்கள் முஸ்லிம் களா என்று தெளிவுபடுத்தவில்லை…” 

“இரண்டாம் சேன என்னும் மன்னனுடன் வந்தவர்கள் முஸ்லிம்கள்தான். அதாவது, குளத்தின் நடுவே குடியிருப்புகளை ஏற்படுத்தியிருந்தவர்கள் கண்டியிலிருந்து மல்வத்து ஓயாக் கரையோரமாக வந்து கரையேற வழிதேடி வந்த முஸ்லிம்கள். காட்டின் நடுவே உள்ள நிலம் பயிருக்கு ஏற்றதாக இருந்ததால் அங்கேயே தங்கி விட்டார்கள். கண்டி இராச்சியம் யுத்தமொன் றில் பல தொல்லைகளுக்கு உட்பட்டிருந்த வேளை. இரண்டாம் சேன என்னும் மன்னன் தன்னுடன் இருந்த பிரதானிகளுடனும் மெய்ப்பாதுகாவலர்களுடனும் அவர்களது குடும்பத் தலைவர் களுடனும் தப்பி மல்வத்து ஓயாக் கரையோரமாக வந்துள்ளான். மன்னனுடன் வந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதில் சந்தேகமி ல்லை. வந்த வழியில் ஒரு மலைக்குகையைக் கண்டு மன்னனைக் குகைக்குள் ஒளித்துவிட்டு, வந்தவர்கள் ஆங்காங்கே குடியிருந் தார்கள். இன்றக்கி வேண்டுமென்டாலும் அந்தக் கற்பாறை யையும் குகையையும் பார்க்கலாம். 

அத்தோடு அமிழ்ந்து போன பள்ளிவாசலையும் மார்க்கத்தை ஆழமாகக் கற்றுத் தெளிந்த ஒருவரின் அடக்கஸ்தலத்தையும் காணலாம். வரலாற்றின் ஆரம்பகால கட்டங்களில் கலாச்சா ரத்தையும் பண்பாடுகளையும் பேணிப் பாதுகாக்கவே முன் னோர்கள் காடுகளில் வாழ்ந்து விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடாத்தினார்கள்” என்று விளக்கம் கூறிய ஹலீம்தீன் – 

“அனுராதபுரத்திலிருந்து பத்து கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிற உங்கள் கிராமம் – இக்கிரிகொல்லாவ மிக முக்கிய மானது. இப்பெயர் வரக் காரணம் உங்களுக்குத் தெரியுமா…?”

“…இங்கேயும் கண்டிப் பிரதேசத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் குடியேறினார்கள்…. என்றுதான் அறிகிறோம்.”

“அது உண்மைதான். கண்டியில் யுத்த பயம்தான் காரணமாயிருந்தது. தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள இங்கே வந்து குளத்தைச் சுற்றிக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டார்கள். 

“இங்கு வந்தது முஸ்லிம் வைத்தியர்கள்தானே…?” மீண்டும் குறுக்கிட்டார் இக்கிரிகொல்லாவ பிரதிநிதி. 

“ஆமாம்… பெரும்பாலானவர்கள் முஸ்லிம் வைத்தியர் கள்… ஏனென்டா கிராமிய வைத்திய முறைக்கு இங்கே நிறைய மூலிகைகள் இருந்தன. ‘இக்கிரி’ என்று சொல்லப்படுவது ஒரு மூலிகையின் பெயர்தான். அதையே தான் கிராமத்திற்கும் வைத்துக் கொண்டார்கள். ‘இக்கிரிகால்’ நாளடைவில் மருவி ‘இக்கிரிகொல்லாவ’ என்றாகி விட்டது. இங்கேயிருந்து கொஞ் சம்பேர்தல்கஹவெவ, றம்படகஸ்வெவ, மரக்கலஹல்மில்லாவ போன்ற இடங்களுக்கும் குடியேறினார்கள். அத்தோட உங்கட கிராமத்துக்குக் கிட்டே பழைய அரண்மனைகள் இருந்ததற்கான தடயங்களும் கிடக்கு… ஆரம்பகால முஸ்லிம்களின் இல்லங்கள் இருந்திருக்கின்றன… ” என்று கூறி முடித்தான் ஹலீம்தீன். 

அதற்குப் பின் சில பொதுவான விடயங்கள் இடம்பெற்றன. நண்பர்கள் சந்திப்பு கலைந்தது. 

பிரதிநிதியும் ஹலீம்தீன் நண்பர்களும் அனுராதபுரத்திற்கு பஸ் ஏறுவதற்காக நடந்து கொண்டிருந்தார்கள். 

“அடையாள ஆர்ப்பாட்ட நிகழ்வுக்குப் பின் கிராமங்கள் எங்கும் பி.வி.மு.சஅங்கத்துவம் பெருகி வருவதை அவதானிக்க முடிகிறது…” என்றான் யாசின். 

“அதற்கு நல்ல உதாரணம்தான் இக்கிரிகொல்லாவ…” என்றான் சேகு. 

அநுராதபுரத்திற்கு வந்ததும் அவர்களுக்காகவே திருமலை கடுகதி பஸ் காத்திருந்தது போல் அவர்கள் ஏறி அமர்ந்ததும் பஸ் புறப்பட்டது. 

கஹட்ட கஸ்திகிலியாவுக்குப் போய் சில முக்கிய அலுவல் கள் முடித்து விட்டுத்தான் கிராமத்திற்குப் போகத் தீர்மானித் தார்கள். 

அன்று மாலை அவர்கள் கிராமத்திற்குத் திரும்பினாலும் மறுநாள் காலை ஏஎல் பரீட்சை எடுத்த மாணவர்கள் மகா வித்தியாலயத்திற்கு சமுகமளிக்க வேண்டியிருந்தது. 

நீண்ட இடைவெளிக்குப் பின் க.பொ.த உயர்தர இறுதிப் பரீ ட்சை எழுதிய ஹலீம்தீன் நண்பர்களுக்கு வெண்ணிறப் பாட சாலை சீருடை அணிந்து செல்வது என்னவோ போலிருந்தது. 

ஹலீம்தீன் விசேடமாக சித்தியடைந்திருந்தான். நிச்சயமாக பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் செல்லத் தடையில்லை. ஏனையவர்களின் முடிவுகளும் மிக நன்றாகவே இருந்தன. எவரும் கோட்டை விடவில்லை. 

சிங்கள மகாவித்தியாலயத்தில் பியசீலியின் முடிவும் மிக நன்று. நிச்சயம் பல்கலைக்கழகத்திற்கு புக முடியும். 

அமரதாச,பியசேன ஆகியோரின் பரீட்சை முடிவுகளும் நன்று.சோமரட்னவும், யசவத்தியும் இவ்விரண்டு பாடங்களில் மட்டுமே சித்தியடைந்திருந்தார்கள் 

இரண்டு கிராமங்களிலிருந்தும் வாழ்த்துச் செய்திகளும், அனுதாபச் செய்திகளும் பறந்தன. 

ஹலீம்தீனும், யாசீனும் மோட்டார் சைக்கிளில் சிங்கள கிராமத்திற்கு போகத் துடித்தனர். ஆனால் அப்துல் மஜீத் தடுத்து விட்டார், மீண்டும் சைக்கிளில் போய் ஆபத்துகளை விலைக்கு வாங்க வேண்டாமென்று. சிலவேளைகளில் அமரதாச வேனில் வரக்கூடும். 

முஸ்லிம் கிராமத்தைப் பொறுத்தவரையில் பரீட்சை முடிவு கள் மகிழ்ச்சி அலைகளை வீசிக் கொண்டிருந்தன. கிராமத் திற்குப் பெருமை மட்டுமல்ல. பி.வி.மு.சவின் இணைத் தலை வர் ஒரு பட்டதாரியாக உருவாகப் போகிறார். 

அப்துல் மஜீத் எதிர்பார்த்தது போல் அமரதாசவும் பிய சேனவும் விஜயம் செய்தனர். 

“நானும் யாசீனும் வர இருந்தோம். ஆனால் பைக்கிள வாரது…?” 

பரீட்சையில் வெற்றி ஈட்டியதற்காக இரு தலைவர்களும் கட்டித் தழுவிக் கை குலுக்கிக் கொண்டனர். 

இனி அமர, நான் கெம்பஸ் போறதா இல்லயா… வெளிவாரி மாணவனாக படிப்பதா…? என்று இன்னும் ஒரு முடிவு எடுக் கல்ல…” என்றான் ஹலீம். 

“விளையாடாதே… நீ கட்டாயம் போகத்தான் வேணும்… பியசீலியை களனி கெம்பஸுக்கு அனுப்ப யோசனை. நானும் சிலரும் வெளிவாரி மாணவர்களாக பதிவு செய்வோம்… மொத் தப்புள்ளி தீர்மானிக்கப்படவில்லை தானே. எப்படியும் நீயும் பியசீலியும் நிச்சயம். அடிப்படை புள்ளி எப்படி வருகிறது என்று பார்ப்போம்…” என்றான் அமர. 

“இந்தக் கட்டத்தில் பி.வி.மு.சபின்னடைந்து விடக்கூடாது… ‘குளக்காட்டு’ விடயமாக விசாரணைக்குப் போய் வந்து நாட்களாகி விட்டன…” 

பண்டார கிராம சேவகர் லீவில் கொத்மலைக்குப் போயிருக் கிறார். அது அவருடைய சொந்த ஊர். கடமைக்கு வர சிலநாட்க ளாகும். ஹலீம்…. எப்படியும் பல்கலைக்கழகம் போகப் பல மாதங்களாகும். அதற்குள் திட்டமிட்டு எவ்வளவோ செய்து விடலாம். நாம் திட்டமிட்டிருக்கிற படிக்கு எமது சங்கத்தின் முதலாவது மகாநாட்டில் சமர்ப்பிக்க ஐந்தாண்டுத் திட்டத்தை மிகத் தெளிவாக வரைய வேண்டும். பி.வி.மு.ச தோன்றி, பல மாதங்கள் வேகமாகப் பறந்து விட்டன. மகஜரில் இருந்து கால்பங்கு கோரிக்கைகள் பல செயலுருவில் தலை காட்டத் தொடங்கி இருந்தன. 

“ஹலீம், முன்னணி அரசியல்வாதிகள் என்ன பேசிக் கொள் கிறார்கள் தெரியுமா…?” 

“….?” 

“ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒரு சங்கம் தேவையாம்… விவசாய பெருமக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் ஒரு பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் தோன்றியிருப்பது காலத்தின் தேவையாம்… இப்படியான ஒரு சங்கத்தின் மூலம் தான் விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அவர்களது தேவைகளை நேரிடையாகவும், யதார்த்தபூர்வமாகவும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. விவசாயிகளுடைய தேவைகளை திட்ட வட்டமாக அறிந்து உடனுக்குடன் செய்து கொடுக்க முடியுமாம். இப்படியாக பி.வி.மு.சவுக்கு நீண்ட பாராட்டு அது…” 

“நல்ல செய்திதான்… நாமும் மிக நிதானமாக… அரசியல் கலப்பின்றி கட்டியெழுப்புவோம்… 

‘அதுதான் சரி… மற்றுமொரு இரகசியத் தகவல்… அதாவது உங்கள் கிராமத்தில் ஒரு பெரிய புள்ளி டொனேசன் தந்து உறுப்பினராகச் சேர விரும்பினாரே…” 

“ஓம்….இனி…?” 

‘அந்த ஆள் கட்சிப் பிரமுகரிடம் போய் அதே பல்லவியைப் பாடி தனது தலைமையில் புதிய சங்கம் ஒன்றை ஆரம்பிக்க…. அபிப்பிராயம் கேட்டிருக்கிறாராம்…” 

“அப்புறம்…?” 

“நல்லா வாங்கிக் கட்டினாராம். 

அருமையான வேலைத் திட்டங்களுடன் பி.வி.மு.சதோன்றி மிக நேர்மையாக செயற்பட்டுக் கொண்டிருக்கு. எம்மையும் கெளரவித்து எமக்கு மகஜர் அனுப்பிக் கிடக்கு. அதையெல்லாம் குழப்பிவிடாமல்… முடிந்தால் அந்தச் சங்கத்துக்கே உறுதுணை யாக இரு’ என சத்தம் போட்டு அனுப்பி விட்டாராம். போனவர் வாயடைத்துக் கொண்டு திரும்பிட்டாராம்…” 

இப்படிச் சொல்லிவிட்டு அமர உரக்கச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஹலீமும் பியசேனவும் இணைந்து கொண்டனர். 

“அமர இனி வேறென்ன நியூஸ்?” 

“வேறென்ன இனி, ஏ.எல் ரிசல்ட் அலைகள் ஓய இன்னம் ஒரு வாரமாவது போகும். பெரிய தேர்தல்களில் அபேட்சகர்கள் வெற்றியீட்டியது போல…” 

“அப்ப பி.வி.மு.ச நிர்வாகக் குழுவை எப்ப கூட்டுவது… சில முக்கிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாட வேண்டியிருக்கு”. 

“இடம்…” 

“கஹட்டகஸ்திலியா பாடசாலை மண்டபம்… எனெண்டா… பி.வி.மு.ச.நிர்வாகக் குழுவினர் உட்பட, கிராமத்துப் பிரதிநிதிகள், நிர்வாகக் குழுவில் இடம் பெறாத எமது நண்பர்கள், மூத்த தலைவர்கள், பண்டார கிராம சேவகர்… இப்படிக் கொஞ்சப் பேரையும் அழைக்க வேணும்; சங்கத்தின் முதலாவது மகாநாட் டில் நாம் சமர்ப்பிக்கப் போகும் தீர்மானங்கள் பற்றி ஆலோசிக்க வேண்டியிருக்கு. தேவை ஏற்பட்டால் நிர்வாகக்குழு கூட்டத்தை பிறகு கூட்டுவோம்…” என்றான் ஹலீம். 

“பைக்ல வர பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆபத் தானகட்டங்களை நாங்கள் கடந்து விட்டோம்” தெம்பூட்டினான் அமர. 

சற்று நேரத்தில் அமரதாசவின் வேன் புறப்பட்டது. விஷேட சித்தியடைந்த ஹலீம்தீனை சந்தித்து, பாராட்டவும், வாழ்த்த வும், விருந்துபசாரங்களுக்கு அழைப்பு விடுக்கவும் ஊரவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவற்றைத் தடுக்க முடியாமல் தவித்தான் ஹலீம். 

சகல சௌகரியங்களையும் அமைத்துக் கொண்டு விடயங் களை முன்னெடுத்துச் செல்வோம் என்றால் காலமகள் காத்திரு க்க மாட்டாள். இன்னல்களுக்கு மத்தியில்தான் இயங்க வேண் டும். பியசீலி மிகச் சரியாகத்தான் காலத்தைக் கணித்திருக்கிறாள். 

காலச் சக்கரத்தின் வேகத்தோடு நாம் போட்டி போட்டுக் கொண்டு ஓடாவிட்டால் எல்லாமே பின்தங்கிப் போய்விடும் என்பதுதானே அதன்கருத்து. பின்தங்கிப் போனவை எல்லாமே காலத்துக்கு ஒவ்வாததாக கழிக்கப்பட்டு விடலாந்தானே. எப்படியோ பி.வி.மு.ச .வின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த ஹலீம்தீனுக்கு ஒன்று நிச்சயமாகப் பட்டது. 

காலத்தை அனுசரித்து அதன் வேகத்தோடு ஒட்டிப் போய். பி.வி.மு.ச அதன் குறுகிய கால பயணத்தில் வெற்றிகள் ஈட்டி யிருக்கின்றன என்பது உண்மை. இவ்வாறு பி.வி.மு.ச வின் ஆரம்ப வளர்ச்சியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது சவால், சமது விதானை அதைத் தொடர்ந்து சேகு, யாசீன் அன்சார்தீன்… 

சற்று நேரத்திற்கெல்லாம் அலுவலகம் நிரம்பி வழிந்தது. யாசீன்தான் கேட்டான். 

“ரிசல்ட் நல்லா வந்திருக்கே… அப்புறம் தலைவருக்கு என்ன அப்படி தலைபோற யோசனையோ…?” 

”எனக்கு ரிசல்ட் பற்றி ஒன்றுமில்ல. பி.வி.மு.ச தோன்றி மாதங்கள் ஓடி விட்டன… அதன் ஓராண்டு நிறைவு மிக வேக மாக வந்து கொண்டிருக்கு… இதற்குள் நாம் உண்மையில் ஏதாவது செய்திருக்கிறோமா… என்றுதான் ஒரு அலசல்… 

“தலைவர் என்றாலே அப்படித்தான் எந்த நேரமும் மக்க ளைப் பற்றிய யோசனைதான்…” என்றான் சேகு. 

இதுக்கு இவ்வளவு யோசிக்கத் தேவ இல்ல… எங்கட கோரிக்கைகள் மெல்ல மெல்ல அமுலாகிக் கொண்டிருக்கு. குளக்காட்டு பிரச்சினை மட்டும் தீர்ந்து விட்டால்…. முதலாவது ஆண்டுக்கு அதைவிடச் சாதனை வேறு எதுவும் இருக்காது…. என்றான் சமது விதானை. 

அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டனர். 

அமரதாச நேற்று வந்து விட்டுப் போனதைச் சுருக்கமாகச் சொன்னான் ஹலீம். 

“ஆலோசனைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்…?” சவால் கேட்டான். 

“இப்ப நாங்க எதிர்நோக்கிக் கொண்டிருப்பது மகாநாடு தான்… யாசீன் தமிழில் ஒரு “ஸ்டென்சில் எழுதி வைத்துட்டுப் போ… ஆலோசனைக் கூட்டத்திற்கான அழைப்பு என்றான் ஹலீம்தீன். 

“தேநீருக்குப் பின் நண்பர்கள் கலைந்தனர். 

மறுநாள் யசவத்தியும் நந்தாவும் அலுவலகத்திற்கு வந்ததும் முதல் வேலையாக ஆலோசனைக் கூட்டத்திற்குத் தேவையான அழைப்புகளை மும்மொழிகளிலும் தயாரித்து ‘ரோனியோ’ செய்தனர். பிறகு முகவரிகளை எழுதிக் குவித்தனர். 

அன்று பின்னேரம் ஹலீம்தீன், அமரதாச, யாசீன் ஆகியோர் வந்து சரிபார்த்து நேரடியாக கையளிக்க வேண்டியவற்றைப் புறம்பாக வைத்துவிட்டு அஞ்சலில் போட வேண்டியவற்றை தனியாக எடுத்துச் சென்றனர். மறுவாரம் ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு கஹட்ட கஸ்திகிலியா மகா வித்தியாலய மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம். சுமார் இரண்டு மணித்தி யாலம் நீடித்தது. மகாநாடும் அதனை வெற்றிகரமாக நடத்தும் முறை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முதன் முறை யாக இப்படித்தான் பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் ஓர் அற்புதமான மகாநாடு நடத்த விவசாயப் பெருமக்களின் ஒற்றுமைக்காகவும் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் தம்மை இனங்காட்டிக் கொள்ள வேண்டும் என்பதால் அதன் வெற்றிக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கு வதாக உறுதியளித்தனர். 

பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் முதலாவது ஆண்டு மலர் வெளியிடும் திட்டமும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேறியது. மலர் பி.வி.மு.ச வின் ஆவணமாக இருக்க வேண்டும் என்பதால் அதில் பி.வி.மு.ச. வின் தோற்றமும் வளர்ச்சியும், ‘குளக்காட்டுப் பிரதேசம்’ அனுராதபுர மாவட்டத்திற்கு சிங்களவர்கள், முஸ்லிம்கள் குடியேறிய வரலாறு என்பன ஆய்வுக்கட்டுரைகளாக அமையும். மும்மொழிகளிலும் காத்திரமான தகவல்களை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகும் எனத் தீர்மானித்து ஐந்து பேர்களைக் கொண்ட மலர்க்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது. 

அத்தியாயம் இருபது 

கஹட்டகஸ்திகிலிய வீதிகள் என்றும் இல்லாமல் களை கட்டியிருந்தன. 

அனுராதபுரம், கஹட்டகஸ்திகிலியா, ஹொரவப்பொத்தான போன்ற பிரதான இடங்களைச் சுற்றியுள்ள சிங்கள, முஸ்லிம் கிராமங்களிலிருந்து பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கத் தின் அங்கத்தவர்கள் ‘பி.வி.மு.ச. ஆட்கள்’ குழுக்கள் குழுக்க ளாக தொண்டர்களின் தலைமையில் வந்த வண்ணமிருந்தனர். 

பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு ஒரு மகாநாடாக பெருவிழாவாகப் பரிணமிக்க சரியாகக் காலை ஒன்பது மணிக்கு ‘காரி’ செய்யது அஹ்மது அவர்களின் ‘கிராஅத்’ கணீரென்றொலித்தது. தொடர்ந்து ஏனைய சமய சிந்தனைகளுடன் மகாநாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. 

பி.வி.மு.ச வின் கிராமத்து பிரதிநிதிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பௌத்த குருமார்கள் மூவர் உட்பட நண்பர்கள், பிரமுகர்கள், அழைப்பை ஏற்று வந்த நலன் விரும்பிகள், சகல கிராமங்களிலிருந்தும் குழுக்கள் குழுக்களாக வந்த விவசாயப் பெருமக்கள்….. 

கஹட்டகஸ்திகிலியா மகாவித்தியாலய மைதானம் நிரம்பி வழிந்தது. மைதானத்தில் வாகனங்களை நிறுத்த ஒதுக்கப்பட்ட இடம் போதாமையினால் பாதையோரங்களிலே நிறுத்த வேண் டிய சங்கடம் ஏற்பட்டது. 

மைதானத்தில் பொதுமேடை மிக அற்புதமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. 

சங்கத்தின் இணைத் தலைவர்கள் அமரதாசவும் ஹலீம்தீனும் தலைமைப் பீடத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தனர். அவர்களுக் குப் பின்னால் அரைவட்டத்திற்கு வெண்பட்டு விரித்த ஆசனங் களில் பௌத்த மதகுருமாருக்கு வலமிடமாக ‘ஆலிம்’ இருவரு டன் அலங்கார இருக்கைகளில் பிரமுகர்கள் வீற்றிருந்தனர். அது போலவே மேடைக்குக் கீழே முன்வரிசையில் கிராமங்களின் சிங்கள, முஸ்லிம் மூத்த தலைவர்கள் அமர்ந்திருந்தனர். அதை யடுத்து நிர்வாகக் குழு…. அப்புறம் நண்பர்கள்…. 

ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பிரதிநிதிகளால் நியமிக்கப் பட்ட விவசாயத் தொண்டர்கள், தமது கடமைகளை மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். பரந்த மைதா னத்தில் கூடும் மக்களைக் கட்டுப்பாடாகவும், அமைதியாகவும் வைத்திருக்க ஒவ்வொரு கிராமியக் குழுக்களுக்கும் இடம் ஒதுக்குவதில் அவர்கள் மிகச் சுறுசுறுப்பாகவும், நேர்த்தியாக வும் செயற்பட்டார்கள். 

மகாநாட்டில் கலந்து கொள்ள வரும் விவசாயப் பெருமக்கள் அணிந்து வரவேண்டிய உடைகளைப் பற்றியோ நிறங்களைப் பற்றியோ எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் அடை யாள ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியது போல வெண்ணிற ஆடைகளையே நாம் அணிய வேண்டும்…. என்பதை அவர்களே தீர்மானித்திருந்ததைக் காண முடிந்தது. 

சமய அனுஷ்டானங்களுக்குப் பின் இக்கிரிகொல்லாவ பிரதி நிதியும், சோமரத்னவும் வரவேற்புரை நிகழ்த்தினர். தொடர்ந்து நிகழ்வுகளில் விவசாயப் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக, ஒரு மணித்தியாலம் ஒதுக்கப்பட்டிருந்தது. சுருக்கமாகப் பேச வேண்டும் என்று முன்கூட்டியே அறிவுறுத் தியும், ஒரு சிறிய பயிற்சியும் கொடுக்கப்பட்டிருந்ததால் பத்துக் கிராமங்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களைச் சுருக்கமாக முன்வைத்தனர். அவர்கள் தத்தமது கிராமங்களில் நிலவும் குறைபாடுகளை மட்டுமன்றி, அவற்றைத் தீர்க்க வழிவகை களையும் சமர்ப்பித்தனர். சிலர் தீர்மானங்களையும் தந்து பரிசீலிக்கும் படி வேண்டினர். எனினும் அவர்கள் பி.வி.மு.ச. வை பாராட்டத்தவறவில்லை. 

அவர்கள் சமர்ப்பித்த தீர்மானங்கள் அவ்வப்போது பரிசீலிக் கப்பட்டு திருத்தங்களுடனும், திருத்தங்கள் எதுவும் இல்லா மலும் நிறைவேறின. ஒன்றிரண்டு தீர்மானங்கள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. 

எப்படியோ அமரதாசவும் ஹலீம்தீனும் நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மிகக் கவனமாக இருந்தனர். 

காலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த முக்கியமான அரசியற் பிரமுகர் சமுகமளித்ததும் கூட்டம் கலகலப்படைந்தது. பண்டார கிராம சேவகர், பஹார்டீன் மாஸ்டர், சமது விதானை, யாசீன் ஆகியோர் அவரை மாலை அணிவித்து வரவேற்க, வந்தவர் பௌத்த குருமாரைத் தாள்பணிந்து தமக்குரிய இருக் கையில் அமர்ந்தார். 

பண்டார கிராம சேவகருடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தார். 

பிரதிநிதிகள் உரைகள் முடிந்ததும், பிரதேசத்தில் வயது அடிப்படையில் மூப்படைந்த ஐம்பது விவசாயிகள் பொன் னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். 

எண்பத்து நான்கு வயதுடைய ஒரு விவசாயியைத் தொண் டர்கள் மேடைக்குத் தூக்கிக் கொண்டு வந்து பொன்னாடை போர்த்தச் செய்த போதும், ஒரு பெரிய மகாநாட்டில் கிரி பண்டா, அப்துல் மஜீத் போன்ற மூத்த தலைவர்கள் கௌர விக்கப்பட்ட போதும் மைதானத்தில் கரகோஷம் உச்சக்கட் டத்தை அடைந்தது. தொண்டர்கள் மிக விழிப்புடன் இருந்து கட்டுப்படுத்தினர். 

கடந்த காலங்களில் பாராளுமன்றத்தில் விவசாயிகளுக்கு குரல் கொடுத்ததோடு இப்பொழுது ஆயிரம் இளைஞர்களுக்கு விவசாயக் காணிகளும் அவற்றிற்கான உறுதிகளும் கொடுக்க முடிவு எடுத்திருப்பதையும், ஆங்காங்கே உதிரிகளாக உதவிகள் வழங்கி வருவதையும் குறிப்பிட்ட அரசியற் பிரமுகர் தொடர்ந்து…. 

“இத்தகைய ஒரு விவசாயிகள் சங்கம் உருவாகுவதற்கு முக்கிய காரணம் கல்வியே. கல்வி கற்ற இளைஞர்களே இப்படி ஒரு விழிப்புணர்ச்சியை விவசாயக் கிராமங்களில் ஏற்படுத்தி யுள்ளனர். கல்வியின் பயனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள். இன வேறுபாட்டைத் தூக்கி எறிந்து விட்டீர்கள். கற்றல் தான் சிந்த னையைத் தூண்டும். பண்பாட்டையும் கலாசாரத்தையும் வளர்க் கும் என்பதையே இது எமக்கு உணர்த்துகிறது. 

விவசாயிகள் தொழிற்சங்கம் மூலம் சமர்ப்பிக்கும் விண்ணப் பங்களை நான் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கப் பின் நிற்கமாட்டேன். முழு அனுராதபுர மாவட்டத்திலும் அறவே காணி இல்லாத இளைஞர்களுக்குத்தான் காணி வழங்கப்படும். 

இந்த முறை வயது முதிர்ந்த விவசாயிகள் கௌரவிக்கப் பட்டது ஒரு புதுமையான நிகழ்ச்சி. அடுத்த வருட மகாநாட்டில் நூறு விவசாயிகளைக் கௌரவியுங்கள். பொன்னாடையும் மாலையும் மட்டும் காணாது. பணமுடிப்புகளும் வழங்க வேண் டும். அடுத்த மகாநாட்டில் பரிசுத் தொகை கொடுக்க நான் ஏற்பாடு செய்து தருவேன்…” என்றதும் மீண்டும் மைதானத்தில் வெடித்த மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கட்டுப்படுத்தத் தொண்டர் கள் திணறினர். 

அத்துடன் அவர்வெளியேற வேண்டிய கட்டாயம் இருந்தது. மாலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாகக் கூறி விடை பெற் றுக் கொண்டார். 

கடந்த ஓராண்டில் பிரதேச விவசாயிகள் சங்கத்தின் தோற்றம், வளர்ச்சி, சில வெற்றிகள் பற்றித் தலைவர்கள் ஹலீம்தீனினதும் அமரதாசவினதும் தலைமை உரைகள் விவசாயப் பெருமக்களை பெரிதும் கவர்ந்தன. 

இடைவேளையில் தொண்டர்கள் மதிய உணவுப் பொட்ட லங்கள் வழங்கினர். விவசாயிகள் இளைப்பாறினர். 

ஒன்றரை மணிநேர ஓய்வுக்குப் பின் மீண்டும் பின்னேர நிகழ்வுகள் சரியாக இரண்டு மணிக்கு ஆரம்பமாகின. விவ சாயிகள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்பட்டனர். 

பி.வி.மு.ச வின் ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி விரிவாக விளக்கினான் யாசீன். பெரும்பாலான விவசாயிகள் இன்னும் ஓலைக் குடிசைகளிலும், மூங்கில் மண் சுவர்களினால் உருவான குடில்களிலும் வாழ்கின்றனர். இவர்களுக்குப் புதிய முறையில் சிறுவீடுகள் கட்ட கடனுதவி தேவை. 

மின்சார வசதி இல்லாத கிராமங்களின் பெயர்களை வாசித் தான். 

சில கிராமங்களில் ஆரம்பப் பாடசாலைக் கல்வியோடு முற்றுப் பெறுகிறது. அதற்கு மேல் அவர்கள் கல்வியைத் தொடர வேண்டுமானால் நகர்ப்புறங்களுக்குச் செல்ல வசதிகள் இல்லை. பெரும்பாலான பாடசாலைககளுக்குக் கட்டிட வசதிகள் அளித் துத் தரம் உயர்த்தினால் தொடர்ந்து மாணவர்கள் கல்வி கற்க உந்தப்படுவர். 

மேலும் இளைஞர்களுக்குத் தொழிற்துறையில் ஊக்குவிப்ப தற்காக ‘மூலப்பொருட்கள் கிராமங்களிலேயே தேங்கிக் கிடக்கின்றன. நேசவாலைகள், தச்சு வேலை, தையற் பயிற்சி நிலையங்கள் என்று… 

கால்நடைப் பண்ணைகள், கோழிப் பண்ணைகள் இப்படி எவ்வளவோ சுட்டிக் காட்டலாம். இவற்றையெல்லாம் நாம் பி.வி.மு.சமூலம் ஆண்டு தோறும் மனு சமர்ப்பித்துப் போராடி பெற்றுத்தர எமக்கு கால அவகாசம் போதாது. அதற்காகத்தான் எமது நிர்வாகக் குழு தீர யோசித்து ஓர் ஐந்தாண்டு காலத் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம். இன்னும் சற்று நேரத்தில் உங்கள் மேலான பரிசீலனைக்காக அதன் அச்சுப் பிரதிகள் விநியோகிக்கப்படும். 

எமது இவ்வருட நிர்வாகக் குழு தொடர்ந்து அடுத்த வருட மும் பதவியில் இருக்க வேண்டும். உறுப்பினர் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டிருப்பதால் எமது நிர்வாகக் குழுவை இன் னும் விஸ்தரிக்க வேண்டும். முதலில் மேலதிக கிராமப் பிரதிநிதி கள் தெரிவு செய்யப்பட வேண்டும். அப்புறம் பொதுச் செய லாளருக்கு உதவியாக மேலதிக உதவிச் செயலாளர்கள் தேவை. 

ஆகவே, எமது ஐந்தாண்டுத் திட்ட அமுலாக்கலை பூரண வெற்றியடையச் செய்யச் சகல கிராமங்களைச் சார்ந்த விவசாயி களினதும் ஒத்துழைப்புத் தேவை. 

இவ்வாறு யாசீன் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் உருக்க மாகப் பேசி கரகோஷம் மூலம் சகல விவசாயிகளினதும் ஆதர வைப் பெற்றான். 

ஐந்தாண்டு திட்டத்தின் மற்றுமொரு விளக்கத்தை ஹலீம்தீன் தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டினான். அமரதாசவும் சிங்கள மொழிமூலம் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினான். 

ஒவ்வொரு பிரேரணையும் ஏகமனதாக நிறைவேறிக் கொண் டிருக்கும் போது நிக்கவெவ பிரதிநிதி கேட்டான்:- 

“வறுமையில் தோய்ந்த எண்பத்து நான்கு வயது நிரம்பிய ஒரு விவசாயிக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தது நல்லதுதான். ஆனால், இந்தப் பொன்னாடை மாலை மரியாதை அவரை வறுமையிலிருந்து மீட்சி பெற எந்த வழியிலும் உதவப் போவதில்லை…’ 

“அவருக்கு உணவு முத்திரை வழங்க ஏற்பாடு செய்திருக் கிறோம். அத்துடன் எமது அடுத்த நிதி ஆண்டிலிருந்து சங் கத்திலிருந்து மாதாந்த ஆதாரப்படியும் வழங்கத் திட்டம்….” என்றான் ஹலீம்தீன். 

மிகுந்த பாராட்டுதல்களுக்கு மத்தியில் அந்தத் தீர்மானம் நிறைவேறியதும் பிரதேச விவசாயிகள் முன்னேற்றச் சங்கத்தின் முதலாவது ஆண்டுமலர் வெளியிடப்பட்டது. 

கவர்ச்சியான அட்டைப் படமும், காத்திரமான உள்ளடக் கமும் பி.வி.மு.ச வின் வெற்றிகளை மும்மொழிகளிலும் பதிவு செய்து ஓர் அற்புதமான ஆவணமாக உருப்பெற்றிருந்தது ஆண்டு மலர். 

காலையில் அவசரமாகச் சென்றிருந்த அரசியல் பிரமுகர் மீண்டும் ஆண்டு மலர் முதற் பிரதியைப் பெறுவதற்கும், விஷேட அதிதியாக மாலை நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிப்பதற்காகவும் வருகை தந்திருந்தார். 

மலரில் அவருடைய விஷேட செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.  

மலர்க் குழுவின் சார்பில் சேகுவும், பியசேனவும் சுருக்கமாக கருத்துக்கள் கூறினர். 

பஹார்டீன் மாஸ்டர் பி.வி.மு.சவின் முக்கியத்துவம் பற்றி பத்து நிமிடங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மைதானம் நிசப்தமாய் விழித்துக் கொண்டிருந்தது. நாடளாவிய ரீதியில் கிளைகள் அமைத்துக் கொண்டு வரும்போது, சங்கத்தின் பெயரை ‘இலங்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம்’ என மாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார். அவருடைய பேச்சின் சாராம்சத்தை அமரதாச சிங்கள மொழியில் மிகத் தெளிவாக எடுத்துரைத்தான். 

கிரி பண்டா, அப்துல் மஜீத், பிங்காமி, கரீம் மாஸ்டர் ஆகி யோர் கருத்துக்கள் தெரிவிக்கும் போது பல தசாப்தங்களுக்கு முன் வாழ்ந்த விவசாயிகளின் போராட்ட வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டினர். கிராமந்தோறும் சங்கங்கள் தோன்றி வளர்ச்சியடையாமல் போனதற்குரிய காரணங்களை எடுத்தியம் பினர். 

தீர்மானங்கள் அனைத்தும் திருத்தங்களுடனும், திருத்தங்கள் இல்லாமலும் நிறைவேற்றப்பட்ட பின் இறுதியாக மிக முக்கிய மான அனைத்து விவசாயிகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உரை இடம்பெற்றது. அதுதான் கிராம சேவகர் பண்டார அவர்களின் மானுட நேய உரை. 

“சிங்களவர்கள் தமிழையும் தமிழர்கள் சிங்கள மொழியை யும்கற்க வேண்டும் என்று ஒரு கருத்து காலத்திற்குக் காலம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இப்பிரதேசத்தில் சிங்கள முஸ்லிம் கிராமங்களைப் பொறுத்தவரையில் மூன்று தசாப்தங் களுக்கும் மேலாக முஸ்லிம் கிராமவாசிகள் பேசும் பிரதேச தமிழ்மொழியை சிங்கள மக்கள் நன்கு புரிந்து கொள்கின்றனர். பேசுகின்றனர், சுமாராக. பெரும்பாலான சிங்கள இளைஞ களுக்கு தமிழ் எழுத வாசிக்கத் தெரியும். அது போல முஸ்லிம் இளைஞர்கள் சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்கின்றனர். 

இது போன்ற கூட்டங்களுக்கும் மகாநாடுகளுக்கும் சமுகமளிக் கும் போது அவர்கள் எந்தவித மொழிபெயர்ப்பும் இல்லாமல் பேச்சுக்களைப் புரிந்து கொள்வதை அவதானித்திருக்கிறேன். 

இன்று விவசாயிகள் கெளரவிக்கப்பட்டது புதுமையான விடயம். ‘ஆதாரப்படி பற்றி பேசப்பட்டது. புதிய பட்டியல் ஒன்றைத் தயாரிக்கும் பொறுப்பை பி.வி.மு.ச பொறுப்பேற்க வேண்டும். அது போலவே உணவு முத்திரைகள் கொடுபட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்றும் தேவை. 

பி.வி.மு.சவின் ஒவ்வொரு செயற்பாட்டையும் மிகவும் கூர்ந்து கவனித்து வந்தவன் நான். 

பி.வி.மு.ச விவசாயிகளின் மறுமலர்ச்சிக்காக மிக நேர்மை யாகப் பாடுபட்டு வரும் ஒரு சங்கம். 

ஹலீம்தீனின் கிராமத்திற்கும், அமரதாசவின் கிராமத்திற்கும் தஸாப்தங்களாக ஒரு பிரச்சினை. அந்தக் கோபதாபங்கள் நீங்கி ஒருமைப்பாடு ஏற்பட இந்த இரு இளைஞர்களும் அவர்களது நண்பர்களும் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். 

‘குளக்காட்டு’ பிரச்சினையை நான் மேற்போக்காக எடுத்துக் கொள்ளவில்லை. மிகுந்த கவனத்துடன் ஆழ்ந்த ஆய்வு செய் தேன். அது உண்மையில் அரசுக்கு உரிய காடு. அங்கு இயற்கை யிலேயே ஒரு சிறு குளம் . குளத்தைச் சுற்றி மிருகங்கள் செறிந்து வாழ்கின்றன. அந்தக் குளத்தை உள்ளடக்கிய நிலப்பரப்பு விவசாயத்திற்கு ஏற்ற மண்வளம் கொண்டுள்ளது என்பதால் குறிப்பிட்ட இரு கிராமவாசிகளும் வேட்டைக்குச் சென்று மண் ஆராய்ச்சி செய்து அதை நிரூபித்திருக்கின்றனர். அந்தக் குளத் தின் குளிர்மையான நீரை நாடியே மிருகங்கள் அங்கு குடி கொண்டுள்ளன. 

எக்காலத்திலும் மக்கள் விவசாயம் செய்ததாக பதிவுகளில் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதே உண்மை. ஆகவேதான் ‘இந்தக் குளக்காடு’ இரு கிராம எல்லைகளில் அமைந்திருப்ப தால் சிறிய அளவில் ஒரு குளமும் அமைந்திருப்பதால் உற் பத்தியைப் பெருக்கும் நோக்கத்தோடு இந்தப் பிரதேசத்தை இரு கிராமங்களுக்கும் பகிர்ந்து அளிப்பதுதான் நீதி நேர்மை என்று தீர்மானித்து, உரிய முறைப்படி நில அளவையாளர்களைக் கொண்டு அளந்து ‘கொங்கிறீற் கல் அடையாளமிட நடவடிக்கை எடுத்து விட்டோம் என்னும் மகிழ்ச்சியான செய்தியை இந்த மகாநாட்டில் பகிரங்கமாக அறிவிப்பதில் பெருமையடை கிறேன். பி.வி.மு.சவின் முயற்சி வென்றுவிட்டது.’ மைதானத் தில் குழுமியிருந்த சனக்கும்பலின் கரகோஷத்தையும் ஆரவாரத் தையும் தொண்டர்களால் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாதிருந்தது. அந்த மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம் சற்று அடங்கிய வேளை கிராம சேவகரின் குரல் மிக நிதானமாக ஆழமாக மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது. 

“இதுவரை நீங்கள் யாருமே அறியாத ஓர் இரகசியத்தை நான் சொல்ல விரும்புகிறேன். உங்கள் பி.வி.மு.ச தோன்றிய நாள் முதல் அதன் வளர்ச்சி பற்றி சகலதையும் அறிந்த ஒருவர் இங்கு உங்கள் முன்னால் வீற்றிருக்கிறார். அவர் அடிக்கடி என்னை அழைத்து கட்டாயம் சிங்கள முஸ்லிம் கிராமங்களிடையே ஒற்றுமையும் அபிவிருத்தியும் தேவை என வலியுறுத்தி அதற் காக எனக்குப் பல்வேறு உதவிகள் புரிந்துள்ளார். அவரால்தான் இந்தச் சங்கத்தின் அனைத்து செயல்களுக்கும் நான் முழு மூச்சாக உதவ முடிந்தது. எனவே நாம் அவருக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறோம். அவரது ஒரே ஆவல் நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு வளர்ச்சியடைய வேண்டும் என் பதே. அவர்தான் இப்பிரதேச பிரதம பௌத்த குருதர்மரத்ன தேர அவர்கள்” என்று கூறி முடித்தார் ஜீ.எஸ். 

அவற்றைச் செவியுற்ற எல்லார் மனதிலும் இனமத பேதங்கள் நீங்கிய ஒரு பெருமிதம் நிரம்பி வழிந்தது. அங்கிருந்த அனைவர் கண்களும் அந்த மதகுருவை நன்றிப் பெருக்குடன் மொய்த்துக் கொண்டிருந்தன. 

அத்தியாயம் இருபத்தொன்று 

“வெற்றி… வெற்றி…” 

“வாழ்க… வாழ்க” 

“அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்”

“பி.வி.மு.ச வாழ்க, பி.வி.மு.ச வாழ்க” 

மகிழ்ச்சி ஆரவாரம் பெருக்கெடுத்து ஓடியது. 

பத்து நிமிடங்களுக்குப் பின் இளந்தலைவர்கள் அமரவும் ஹலீமும் எழுந்து ஒலிபெருக்கியில் சிரமப்பட்டு அமைதியை ஏற்படுத்தினர். 

“உண்மையில் இது மாபெரும் வெற்றிதான். உங்களுடன் சேர்ந்து கோஷமிடத்தான் தூண்டுகிறது. ஆனால் எமது நிகழ்ச்சி நிரலில் இன்னும் பல விடயங்கள் இருப்பதால் அமைதியாக இருக்கும்படி தயவாய் வேண்டிக் கொள்கிறோம். உளப்பூரிப் படைந்த ஹலீம் அமர குழுவினர் அந்த உயர் நோக்குக் கொண்ட மதகுருவுக்கும் பண்டார கிராம சேவகருக்கும் ஆழ்ந்த நன்றி யைச் சமர்ப்பித்தனர். 

அரசியல் பிரமுகர், பண்டார கிராமசேவகர், பஹார்டீன் மாஸ்டர், கரீம் மாஸ்டர் ஆகியோருக்கும் மணம் கமழும் மல் லிகை மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி கௌரவித் தனர். பின்னர் பி.வி.மு.ச வைப் பாராட்டி…. விடைபெற்றுக் கொண்டார் அரசியல் பிரமுகர். அவருடன் பண்டார கிராம சேவகரும் செல்ல வேண்டியிருந்தது. மதகுருமார்களும் வாழ் த்தி விடை பெற்றனர். 

இறுதி நிகழ்வாக சிங்களத்திலும், தமிழிலும் இடம்பெற்ற நன்றி உரைகளோடு கூட்டம் மீண்டும் ஆரவாரித்த வண்ணம் கலையத் தொடங்கியது. அதற்குமுன் பி.வி.மு.சவின் நிர்வாகக் குழுக் கூட்டம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற விருப்பதால் நிர்வாகக் குழு உறுப்பினர்களை மண்டபத்திற்குள் அமரும்படி தலைவர்கள் வேண்டிக் கொண்டனர். 

ஏனைய பிரமுகர்களும் நலன் விரும்பிகளும் பிரிந்தனர். கிராமப் பிரதிநிதிகளும் தொண்டர்களும் தத்தமது கிராமக் குழுக்களை வாகனங்களில் ஏற்றி, தாமும் ஏறிக் கொண்டனர். இந்தக் குளக்காட்டுப் பிரச்சினை அனுராதபுர மாவட்டத்தில் உள்ள எல்லா முஸ்லிம் கிராமங்களிலும் ஆங்காங்கே பேசப் பட்டு வந்த சங்கதிதான். ஆகவே அதனைப் பகிர்ந்தளிக்கும் முடிவு அனைத்து கிராமவாசிகளுக்கும் மிக மகிழ்ச்சியைத் தந்த விடயம் என்பதை அப்படியே உரித்துக் காட்டி விட்டது. விவ சாயிகள் வாகனங்களில் ஏறும்போதும் அதன் எதிரொலியைத் தான் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வாகனமும் இரைச்சலு டனும் கோஷங்களுடனும் கிளம்பியது. 

அரைமணி நேரத்திற்குள் மைதானம் வெறிச்சோடிக் கிடந்தது.

நிகழ்வுகள் யாவும் அமளியின்றி நேரத்திற்கு முடிந்ததில் அமர தாசவும் ஹலீம்தீனும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்தனர். 

மைதானத்தை விட்டு அமரதாசவும் குழு உறுப்பினர்களும் மண்டபத்தினுள் பிரவேசித்தனர். பாடசாலை மண்டபத்தில் பி.வி.மு.ச நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு அதிபர் தேநீர் விருந்துபசாரம் அளித்துக் கொண்டிருந்தார். 

அனைவருமே முதலாவது ஆண்டு மகாநாட்டின் வெற்றி பற்றியே சிலாகித்துக் கொண்டிருந்தனர். 

தேநீருக்குப் பின் நிர்வாகக் குழுக் கூட்டம் தொடங்கியது. “எல்லாமே நேரத்துக்கு முடிந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒன்றை தயார்படுத்தியிருக்கலாம்…” 

“நாங்க யொசித்ததுதான், ஆனா தூர இருந்து வாற கிராம வாசிகள் நேரத்தோட ஊர்களுக்குப் போய்ச் சேர வேணும் என்ப தாலதான் அது கைவிடப்பட்டது…” என்றான் யாசீன். 

“இந்த மகாநாடு பரீட்சார்த்தமாக நடந்ததொன்று. இரண் டாவது மகாநாடு தொடர்ந்து மூன்று நாட்கள் நடத்தப்பட வேண்டும்….அப்போது கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுபட வேண்டும். 

“இந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் மிக முக்கியமான இரண் டொரு விடயங்களை மட்டும் பரிசீலனை செய்வோம்…” என்றான் அமரதாச. 

“தகுதியானவர்களை நிர்வாகக் குழுவில் மேலதிகமாகச் சேர்க்கும் விடயத்தில் நான் மேலதிகத் தலைவராக பஹார்டீன் மாஸ்டரை நியமிக்கலாம் என்று அபிப்பிராயப்படுகிறேன்…” என்றான் ஹலீம். 

“எந்தவித ஆட்சேபனையும் இல்ல. ஆனால் அவர் எமது பிரதேசத்திலேயே தங்கிவிட வேண்டும்… வேலைகளை கவ னிப்பதற்கு இலகுவாக இருக்கும்…. 

“அதப்பத்தி யோசிக்கத் தேவை இல்லை… அவர் இங்கத்தய ஆள்தான்.அவர் பென்சன் எடுத்த பிறகு இங்கேயே இருப்பதற்கு வழி வைத்திருக்கிறோம்” என்றார் அப்துல் மஜீத். 

அப்துல் மஜீத் அவர்களின் வீட்டு வலது புறக் காணியில் ஒரு குறிப்பிட்ட அளவு அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் அவர் ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்ற தும் அவர் தனக்கென ஒரு கல்வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். குடும்பமாக வந்து குடியேறி விடலாம் என்பது முடிவாகிவிட்ட விடயம். அத்துடன் ஹலீம்தீன் இரண்டு ஏக்கர் வயற்காணியும் தரவிருப்பதால் மேலதிக வருமானத்திற்கு தடை இராது. அவர் சங்கத்தின் முழு நேர தலைவராகப் பணிபுரிய எந்த விதத் தடை யும் இருக்காது. 

பகிரங்கப்படுத்தாத இந்த விடயத்தை அன்று தனிப்பட்ட முறையில் பஹார்டீன் மாஸ்டரிடம் சொன்னபோது அவர் ஒரு கணம் அப்படியே பிரமித்துப் போய் விட்டார். 

பொதுச் செயலாளருக்கு உதவியாக இரு உதவிச் செயலாளர் களும், மேலதிக கிராமப் பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்பட்ட னர். 

ஏனைய விடயங்கள் பிற்போடப்பட்டன. அனைவருமே களைத்துப் போயிருந்தனர். கூட்டம் கலைந்ததும் கிரிபண்டா அமரதாச, பியசீலி, மற்றும் நண்பர்கள் அவர்களது வேனில் புறப்பட்டனர். 

அப்துல் மஜீத், ஹலீம்தீன், பஹார்டீன் மாஸ்டர், கரீம் மாஸ்டர், யாசீன் மற்றும் நண்பர்கள், தாம் வந்த பஸ்ஸில், தமது கிராமத்து பிரதிநிதியின் தலைமையில் வந்த விவசாயிகள் குழு வினருடன் சென்றனர். சிங்கள கிராமத்து விவசாயிகளும் இணை ந்தே பிரயாணம் செய்தனர். 

குளக்காட்டுப் பிரச்சினை தீர்ந்து விட்டதனால் பஸ்ஸில் ஒரே அமர்க்களமாக இருந்தது. 

சிங்கள கிராமத்திலிருந்து இரண்டு வயதுக் குழந்தையுடன் வந்திருந்தாள் ஓர் இளம்தாய். பஸ் பிரயாணம் பிடிக்கவில் லையோ, என்னவோ அந்தக் குழந்தை அடிக்கடி அடம்பிடித்துக் கொண்டு, அழுத வண்ணமிருந்தது. தாய்க்காரி பால் கொடுத் தாள், பிஸ்கட் கொடுத்தாள்….. அப்படியும் கேட்கவில்லை. 

“குழந்தை ஏன் அழுகிறது?” என்று பஹார்டீன் மாஸ்டர் கேட்டார். 

“வீட்டுக்குப் போக வேண்டுமாம்….” 

இளைஞர்கள் சிரித்தனர். 

“வீட்டுக்குத்தானே போகிறோம்” 

“குழந்தைக்கு என்ன தெரியும்….?” 

பஸ் போய்க் கொண்டிருந்தது. 

குளக்காட்டுப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்து விட்டதால், பிரயாணம் மகிழ்ச்சியாகவும், கொண்டாட்டமாகவும் தான் இருந்தது. 

பஹார்டீன் மாஸ்டர் அந்தக் குழந்தையை அவதானித்துக் கொண்டிருந்தார். 

சேகுவையும், அன்சார்தீனையும் அழைத்து ‘ ‘கவிஞர்களே, இந்தக் குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருக்கு… உங்களுக்கு ‘ஐடியா’ ஒன்றும் தோன்றவில்லையா…?” என்று கேட்டார். 

“அதுதான் நம்ம குளக்காட்டுப் பிரச்சினை தீர்ந்து விட் டதே… ஏன் அழவேணும்..?” என்றான் சேகு. 

“எனக்கு ஒரு கருத்தும் தோன்றவில்லை…” என்றான் அன்சார்தீன். 

“குளக்காட்டுப் பிரச்சினை தீர்ந்து விட்டால் எல்லாம் தீர்ந்து விட்டது என்று அர்த்தம் இல்லை…” என்றார் பஹார்டீன் மாஸ்டர். 

“அப்ப என்ன சேர்…?” 

“எனக்கு ஆங்கிலத்தில் ஒருபுதுக்கவிதை பிறந்தது…”

“சொல்லுங்க சேர்”. சேகுவும் அன்சார்தீனும் ஆவலுடன் கேட்டனர். 

“திக்ரை அட் பர்த் 
இஸ்தி பிரசன்ட் ஒன் ஏர்த் 
திக்ரை அட் டெத் 
இஸ்ட்டுஷோமோட் லென்த் 
கிரைஸ் இன் பிட்வீன் 
இஸ்ட்டு லிவ் ஒன் ஏர்த்…” 

விவசாயிகளின் தொழிலாளர்களின் நடைமுறை வாழ்க்கைத் தத்துவத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டி விட்டீர்களே சேர்…

“அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நல்லாயிருந்தால்… தமிழில் மொழி பெயர்த்தால் மொழி பெயர்ப்பவருக்கு நான் ஒரு பரிசு தருவேன்…” 

“உங்களுக்கு கவிதை வருமா?” 

அவ்வப்போது வசதியாக நீண்ட பஸ் பிரயாணம் செய்யும் போது கவிதைகள் தோன்றினால் நான் டயறியில் குறித்து வைப்பேன்… நான் ஒரு கவிஞன் அல்ல…” 

ஹலீம்தீன், அமரதாச மற்றும் நண்பர்கள் அனைவருமே கவிதையை ரசித்தனர். 

வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்தது….. 

ஹலீம்தீன் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். 

“தலைவருக்கு என்ன சிந்தனையோ?” அமரதாசவும் யாசீனும் கேட்டனர். “அப்படி ஒன்றுமில்ல…. கவிதையை சுமாராக மொழிபெயர்த்து விட்டேன்.” என்றான் ஹலீம். 

“அப்படியா?” 

டென்ஷன் அடையாத பஹார்டீன் மாஸ்டரே ஒரு கணம்….

“சொல்லுங்கள் ஹலீம் பார்க்கலாம்…” என்று அவசரப் பட்டார். 

“ஆனால் பஹார்டீன் மாஸ்டர், நான் ஒரு வரியை கூட்டி யிருக்கிறேன்… பரவாயில்லையா…?” 

“சரி… சரி… செல்லுங்க…” 

“பிறக்கும் போதே அழுகை
பிறந்து விட்டோமே என்று
இறக்கும் போதும் அழுகை
பிரியப் போகிறோமே என்று
இடைக்காலம் எல்லாம் 
அழுகை. அழுகை அழுகை
வாழ்வதற்கே! 
எங்கள் ஓலம் 
உங்களுக்குக் கேட்கின்றதா?” 

“நல்லாயிருக்கு ஹலீம். இந்தாங்க ஹலீம் நான் சொன்ன படிக்கு பரிசு….” அவர் அளித்த பரிசு ஒரு ஹீரோ பேனா. ஹலீம்தீனும் ஒரு ஹீரோ என்ற எண்ணம் போலும் அவருக்கு. 

நண்பர்கள் அனைவரும் ஹீரோ ஹலீம்தீனைப் பாராட்டினார்கள். 

“பிறந்த போது அழுததுதான்.

அது சரி… இறக்கும் போதும் அழுவோம். பந்தபாசம் விட்டுக் கொடுப்பதில்லை தானே. இடைக்கால மெல்லாம் அழுகை. அழுகை அழுகை என்று கூறியிருப்பது மிக மிகப் பொருத்தம். ‘குளக்காட்டுப்’ பிரச்சினைக்காக நாம் மூன்று தஸாப்தங்களாக அழுதிருக்கிறோமே. போதாதா…? அத்துடன் ஓய்ந்துவிடுமா… இன்னும் எத்தனை எத்தனையோ பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டியிருக்கு. எங்கள் ஓலம் நிச்சயமாக மேலிடத்திற்கு கேட்கத்தான் போகிறது… ஹலீம், நீ உண்மையில் ‘ஹீரோ’தான் என்று அனைவரும் பாராட்டினார்கள். பல தஸாப்தங்களாக சிங்கள முஸ்லிம் கிராமங்களிலேயே தொட்டகுறை விட்ட குறையாக இருந்த குளக்காட்டுப் பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வைக் கண்டு விட்டோம் என்ற உள்ளக்களிப்பில் அதற்காக முனைந்து நின்ற அந்த உள்ளங்கள்தாம் நடந்து வந்த பாதையை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்து பெருமிதம் அடைந்து கொண்டிருந்தன. அந்த வேளை அதனை ஆசீர்வதிப்பது போல பிரதேசமெங்கும் வயல், வரப்பு, செடி, கொடி, மரம் புட்பூண்டுகள் கூட பூத்துக்குலுங்க வேண்டி, வசந்த காலத்தின் வருகைக்காக, பூபாளம் இசைத்துக் கொண்டிருந்தது. 

(முற்றும்)

– கருக்கொண்ட மேகங்கள் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 1999, பேசும் பேனா வெளியீடு, பேருவளை.

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *