கருக்கொண்ட மேகங்கள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 18, 2024
பார்வையிட்டோர்: 755 
 
 

(1999ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21

அத்தியாயம் பதினாறு

“நாளைக் காலை ஒரு ஆர்ப்பாட்ட கூட்டம்’ என்ற அழை ப்பை ஏற்று ஞாயிற்றுக்கிழமை, காலை ஏழு மணியிலிருந்தே விவசாயிகள் வரத்தொடங்கினர். பாடசாலை ‘கேற்றுக்கு’ வெளியே சிரமதானம் மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது அந்தப் பெரிய திடல். ஒருவர் பின் ஒருவராகவும், குழுக்க ளாகவும் பிரசன்னமாகிக் கொண்டிருந்தனர். அவர்களிடையே ஆர்வமும் மகிழ்ச்சியும் இரண்டறக் கலந்திருந்தது. பெண் களுக்குத் தனிப்பிரிவு அமைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்கு வீடு பிரதான குடியிருப்பாளர் மட்டுந்தான் என்றில்லாமல் பலரும் கலந்து கொண்டார்கள். 

சொல்லிவைத்தாற் போல், சரியாக காலை ஒன்பது மணிக்கு இஸ்மாயில் மௌலவியின் ‘கிராத்’ ஒலித்தது. இதற்கிடையில் சுமார் இருபத்தைந்து முப்பது பெண்கள் வயது வித்தியாசங் களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தூய வெண்ணிற ‘பர்தா’ ஆடைகள் அணிந்து ‘கிராத்’ ஓதல் முடியும் வரைக்கும் ரோட்டில் நின்று அது முடிந்ததும் அமைதியாக தமக்காக ஒதுக்கப்பட்டத்திற்குச் சென்று பன்பாயில் அமர்ந்தனர். தொடங்கி அரைமணி நேரத்திற்குள் தொண்ணூறு வீதத்தினர் சமூகமளித்து வருகைப்பதிவேட்டில் கைச்சாத்திட்டிருந்தனர். பெரும்பாலும் வயது வந்த பெண் பிள்ளைகள் மட்டும் வீட்டுக்குக் காவல் இருந்தனர். மத்தியான சமையல் வேலை அவர்களின்தலையில் சுமத்தப்பட்டிருந்தது. அந்த வழியில் அவர்களது மறைமுகமான பங்களிப்பும் பாராட்டிற்குரியது. 

எப்படியும் சிலர்சமையல் வேலைகளை நேரத்திற்கு முடித்து விட்டு, ஆர்ப்பாட்டத்தில் நடப்பவற்றை புதினமாக வந்து பார்க்கத் தவறவில்லை. இத்தகைய அடையாள ஆர்ப்பாட்டம் கிராமங்களுக்குப் புதிதுதான். இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததில்லை. இப்படி ஒரு பிரதேசத்தின் கிராமங்களை உள்ள டக்கிய ஒரு சங்கமும் உருவாகவில்லை. காலம் காலமாக விவசாயிகளின் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செல்ல ஒரு பலம் வாய்ந்த அமைப்பு மிகவும் அத்தியாவசியம் என்பதையும், ஒவ்வொரு விவசாயியும் விழிப்படைந்து விட்டதையும் இவ் வார்ப்பாட்டம் உணர்த்துகிறது. அத்தோடு இது சாத்வீகமாய் நடந்து கொண்டிருப்பதே சிறந்த எடுத்துக்காட்டு. 

விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களின் பங்களிப்பும், கண்ணியமான நடத்தையும், ‘போஸ்டர்களை’ உயர்த்திப் பிடித்து உரத்து வாசிப்பதில் கையாண்ட முறையும், கடைப்பிடித்த ஒழுக்கமும், மிக அற்புதம். யார் அவர்களுக்கு கருத்தரங்கு வைத்து ‘இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். என்று சொல்லித் தந்தார்கள்…..? 

அதுதான் கிராமத்து இளைஞர்களின் இயல்பான பண்புகள்.

குடும்பத்துப் பெண்கள் கணவன்மார்களையும் பெரிய பிள்ளைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் செய்து அவர்கள் தேநீர், உணவு என்று அடிக்கடி வீடுகளுக்கு போவதும் வருவது மாய் நடந்து கொண்டிருந்தார்கள். 

ஏற்கனவே அவர்கள் பாடசாலை முன்றிலில் தான் இந்த அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று திட்ட மிட்டிருந்தார்கள். ஆனால், கரீம் மாஸ்டர் மிக நுணுக்கமாகச் சிந்தித்து, அரசாங்க பாடசாலை முன்றிலை இவ்விடயத்திற்குப் பாவிக்கக்கூடாது என்று காரணம் காட்டினார். உடனே ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டு சகல கிராமத்துப் பிரதிநிதிகளுக் கும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

“நாளை பின்னக்கி…” ஒரு பிரச்சினை முளைத்துவிட்டால் பாடசாலை அதிபர் விசாரணைக்கு உட்படுத்தப்படக் கூடாதல்லவா…

அடையாள ஆர்ப்பாட்டம் ஒரு சாதாரண சம்பவம்தான். ஒரு சாதாரண நிகழ்வுதானே தேசத்தின் பிரச்சினையாக உருவெடுக் கிறது. 

பாடசாலை வேலிக்கு முன்னால் ஒரு நீண்ட செவ்வகம்தான். ஒரு பொட்டல் வெளி இராப்பகலாய் சிரமதான வேலை செய்து அதை பளிச்சென அமைத்துவிட்டார்கள். ஒரு மைதானம் போல் அமைந்து விட்டது. பிரதான வீதியை ஒட்டினாற் போல் இருந் தாலும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாய் இருக்கவில்லை. 

சகலரும் பாய்கள் கொண்டு வந்து விரித்து அமர்ந்திருந்தனர். ரோட்டில் செல்லும் வாகனங்கள் வேகத்தைத் தளர்த்தி, இங்கே என்ன நடக்கிறது’ என்று போஸ்டர்களை வாசிக்கத் தவறவில்லை. ‘அந்த வகையில் அது ஒரு நல்ல பிரச்சாரம் தான்’ என்று ஹலீம்தீனும் யாசீனும் அபிப்பிராயப்பட்டார்கள். 

“பள்ளிக்கூடத்த தவிர்த்ததும் நல்லதுக்குத்தான்…” என்று யாசீன் மகிழ்ந்தான். 

“நேரம் பத்து முப்பது. தேத்தண்ணிய குடிச்சிப் போட்டு கஹட்டகஸ்திகிலியாவுக்குப் போய் வருவமா…? சேகுவையும் சமது விதானையையும் பொறுப்பாக இருக்கச் சொல்லு, நான் வீட்ட போய் பைக்க’ எடுத்துட்டு வாரன். சற்று நேரத்திற்குப் பிறகு மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோலை ஊற்றிவிட்டு வந்தான் ஹலீம். 

அன்சார்டீன் தேநீர் பரிமாறிக் கொண்டிருந்தான். 

தேநீருக்குப் பின் ஹலீம்தீனும் யாசீனும் புறப்பட்டார்கள். கிராமங்களைச் சுற்றி மேற்பார்வையிட்டு இந்த நேரம் பஹார்டீன் மாஸ்டர் அனுராதபுரத்தில் டெலிபோனுக்குப் பக்கத்தில் இருப்பார். சரியாக பதினொன்றரைக்கு கஹட்டகஸ் திகிலியாவுக்கு கோல்’ எடுப்பார். சுற்றுவட்டாரகிராமங்களின் நிலைப்பாட்டை அவர் மூலம் அறிந்ததும்….. பியசேன மூலம் அமரதாசவுக்கு செய்தி அனுப்ப வேண்டும். 

திட்டமிட்டபடி, இன்னும் நேரமிருக்கிறது என்ற எண்ணத் தில் அவன் நிதானமாகத் தான் சைக்கிளைச் செலுத்திக் கொண்டி ருந்தான். 

வழியில் ஒரு தனிமையான இடத்தில் பற்றைகள் அசைந்தன. மிருகங்களாக இருக்கும் என்று அவனும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான்.ஆனால் அந்த ஒரு செக்கனில் சரமாரியாக கற்கள் வந்து விழுந்தன. 

ஹலீம்தீன் வேகத்தைக் கூட்டிப் பறந்தான். சில நிமிடங்களுக்குப் பிறகு 

“இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்து” என்றான் யாசீன்.

“அடிபட்டுச்சா…”

“முதுகில் பட்டிருக்கு, போய்த்தான் பாக்கணும்…”

“இந்த இடத்தில மறைவாக நிப்பது தான்… நல்லது… முன் னுக்கு இரண்டு பக்கமும் காடு. என்ன நடக்குமோ தெரியா…” 

“நின்டு என்ன செய்றது……?” 

“நேரத்துக்குப் புறப்பட்டிருந்தா இன்னும் பத்துப் பதினை ந்து நிமிஷங்களில் திருமலை எக்ஸ்பிரஸ் பஸ் வர வேணும்…”

“பைக்கை ஓரிடத்தில் மறைச்சி வச்சிட்டு பஸ்ஸில் போவோம்” என்றான் யாசீன். 

பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு லொறி வந்தது. கையைக் காட்டி நிறுத்தினான். 

நடந்ததை டிரைவரிடம் விளக்கமாகச் சொன்னதும் அவன் உதவினான். 

“பஸ் நேரத்துக்கு வராது. நீங்க பலகையைப் போட்டு பைக்கை பின்னால் ஏத்த முடியுமா?…. பின்னால் நீங்களும் ஏறிக் கொள்ளணும்” 

“நீங்க வரும் போது ஒரு ஸ்கூலுக்கு முன்னால ஆர்ப்பாட்டக் கூட்டத்தைப் பாத்தீங்களா?” 

ஹலீம்தீன் டிரைவருக்குப் பக்கத்தில் துவாரத்தின் ஊடாகக் கேட்டான். 

“ஆமா…… எல்லாருமா அமைதியா இருந்து சுலோகத்தை புடிச்சிக்கிட்டு இருந்தாங்க…. நானும் கொஞ்சம் ஸ்லோ பண்ணி இரண்டொன்று வாசிச்சேன்…. உரிமைக்காக போராட்டம் செய்ற மாதிரி இருந்திச்சி….” 

”ஓ. அதுதான் விசயம்… ஒரே பார்வையில ஊகிச்சிட்டீங் களே….’ என்றான் யாசீன். 

ஹலீம்தீன் சுருக்கமாக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பி.வி.மு.ச. வைப் பற்றி எடுத்துச் சொன்னதும் டிரைவருக்கு அவர்கள் மீது ஒரு பற்று ஏற்பட்டது. 

“அப்ப ஒங்க லட்சியத்த குழப்பத்தான் ஒரு கூலிப்படை வேலை செய்யுது…. நீங்க கவனமாக இருக்கணும்’ 

”சரியா சொன்னீங்க… உங்களுக்கு நல்ல அனுபவம் கிட க்கு…” என்றான் யாசீன். 

“நா… மலைநாடு…. என் பேர் வேலு” என்று கூறி தோட்டத் தொழிலாளர், உரிமைப் போராட்டம்…… வேலை நிறுத்தம், அடிதடி.. இவற்றைப்பற்றி விளக்கம் சொன்னான். 

கஹட்ட கஸ்திகிலியாவில் அவர்கள் இறங்கிக் கொண்டார்கள்.  

லொறிச்சாரதி பணம் எடுக்க மறுத்துவிட்டான். “ஆபத்தான நேரத்தில் பிரதேச விவசாயிங்க முன்னேற்றச் சங்கத்தின் இளம் தலைவர்களுக்கு ஒரு சின்ன உதவி செய்யக் கிடைச்சது சந் தோஷம். வாழ்க தலைவர்கள். 

வாழ்க விவசாயிகள். வெல்க உங்கள் இலட்சியப் போராட் டம்” என்று வாழ்த்தினார் டிரைவர்” 

உங்க நல்ல மனசுக்கு நன்றி. 

மறுமுறை வரும் போது எங்கள் கிராமத்துக்கு வாங்க…. லீம்தீனின் இதயபூர்வமான அழைப்பு. 

“கட்டாயம் வர்றேன்….” 

“தேங்ஸ்…… போய் வாங்க…”

“நீண்ட இடைவெளிக்குப் பொறகு மலை நாட்டையே தரிசிச்ச மாதிரி என்ன?” என்றான் யாசீன். 

“இன்றக்கி… இந்த ஆளுடைய உதவி இல்லாட்டி…. இன்றைய புரோகிறாம் அப்செட்தான்” 

“சரி இப்ப நாம என்ன செய்றது?” 

“பொலிசில் ஒரு முறைப்பாட்டை போட்டு வைப்பம்…..” என்றான் யாசீன். 

“அதுக்கு நேரமெடுக்கும்….. யாசீன். நாம முதல்ல சுலை மானின் கடைக்குப் போய் டெலிபோன் வந்ததா என்று பார்த்து, பொலிசுக்குப் போவோம்….” என்றான் ஹலீம். 

அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சுலைமானின் கடைக்குப் போனார்கள். 

“பதினைஞ்சு நிமிசத்துக்கு முன் ஒரு கோல் வந்தது….. இருங்க, திரும்பவும் எடுப்பாராம்…”

அவர்கள் உட்கார்ந்து போட்டிருந்த தலைக் கவசங்களை கழற்றினர். 

பட்பட்டென்று கற்கள் விழுந்ததால் ‘ஹெல்மட்’ நிறைய புள்ளி புள்ளியாய் அடையாளங்கள் பதிந்திருந்தன. 

“விபத்து ஏற்பட்டாதலையைக் காப்பாத்திக் கொள்ள மட்டுந் தான் ஹெல்மட் போடுவது என்று நான் நினச்சிக் கொண் டிருந்தன். இப்ப என்னாச்சு பாத்தியா?” என்று சிரித்தான்ஹலீம். 

ஹலீம்தீனுக்கு வலது முட்டுக்காலுக்குக் கீழும், கையிலும் சிறுகாயங்கள். யாசீனின் சேட்டைக் கழற்றிப் பார்த்தான். இரண்டு இடங்களில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. 

அப்பொழுது விங்… விங் என்று டெலிபோன் சிணுங்கியது. அனுராதபுரத்திலிருந்து பஹார்டீன் மாஸ்டரே தான். ஐந்து நிமிடங்களுக்குள் செய்திகளை பரிமாறிக் கொண்டனர். 

“யாசீன்… எல்லா இடங்களிலும் எதிர்பாராத வெற்றியாம்… இக்கிரிகொல்லாவையில் மட்டும் ஒரு சின்ன வாக்குவாதம்…. அது பொறகு சரியாகி விட்டதாம்….. 

ஹலீம்தீனின் முகத்தில் ஓர் அலாதியான திருப்தி நிலவியது. “யாசீன் இப்ப நாம் உடனடியாக பொலிசில் ஒரு முறைப் பாடு செய்து அரசாங்க ஆஸ்பத்திரியில மருந்து போட்டுக் கொண்டு பஸ்ஸில் ஊருக்குப் போவம்…..” 

“அப்ப பைக்…” 

“அதை பாடசாலையில் அதிபருடைய பொறுப்பில் விட்டுட்டுப் போகலாம்….” 

சுலைமான் முதலாளி கேக், பழம் பிஸ்கட்… என்று தட்டு நிறைய கொண்டு வந்தார். அந்தச் சிற்றுண்டியை முடித்துவிட்டு அவர்கள் அவசரமாகப் புறப்பட்டனர். 

இனி அவர்கள் பியசேனவை சந்திக்க வேண்டும். அமர தாசவுக்கு செய்தியனுப்ப வேண்டும். அப்புறந்தான் சைக்கிளை பாடசாலையில் போட்டுவிட்டு பஸ் பிடிக்க வேண்டும். பஸ் வரச்சுணங்கினால் ஒரு வாகனத்தைப் பேசிப் போக வேண்டும். ஆனால் அதற்குத் தேவை இருக்கவில்லை. முக்கிய அலுவல் களை முடித்துவிட்ட போது, அனுராதபுரத்திலிருந்து வந்த கடுகதி புறப்பட ஆயத்தமாகியது. அதிர்ஷ்டம்தான். 

கிராமத்துக்குத் திரும்பிய போது பின்னேரம் இரண்டு முப்பது. ஆக நாற்பத்தைந்து நிமிடங்கள் தாம் சுணக்கம். 

அடையாள ஆர்ப்பாட்டம் செய்யும் விவசாயிகள் அப்பொ ழுது தான் பகல் உணவை முடித்துவிட்டு ஓய்வெடுத்துக் கொண் டிருந்தார்கள். 

“சைக்கிளில் போன ஆட்கள் பஸ்ஸில் வந்திருக்கிறீங்க… சைக்கிளுக்கு என்ன நடந்தது? 

எல்லாரையும் இருத்திவிட்டு நடந்ததை விளக்கமாகச் சொன்னான் யாசீன். 

“ஹலீம்தீன்… யாசீன்…. சாப்பாடு ரெடியா இருக்கு…… பொறகு விரிவாகப் பேசுங்க….” 

“தலைக்கு வந்தது ஹெல்மட்டோடு போயிட்டுது” என்றான் சேகு. 

“அந்த அளவோடு முடிஞ்சதற்கு இறைவனுக்கு நன்றி செலு த்த வேணும். பொது சேவையில் ஈடுபடும் போது அப்படித் தான். எதற்கும் நாம கவனமாக இருக்க வேணும் இனிமேல் கொண்டு சைக்கிளில் ஓடித்திரிய வேணாம், சொல்லிப் போட்டன்” என்று எச்சரித்தார் அப்துல் மஜீத். 

மற்றப்படி எல்லா இடங்களிலும் அடையாள ஆர்ப்பாட்டம் எல்லாரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இந்த ஆரம்ப வெற்றிக்காக எல்லாரும் ஆரவாரத்துடன் கோஷமிட்டனர். இளைஞர்கள் கோஷமிட மூத்தவர்கள் ‘அல் லாஹு அக்பர்’ என்றனர். 

கிராமங்களிலுள்ள நிர்வாகம் இளையவர்கள் கைககளுக்கு மாறியதும் விவசாய பெருமக்களின் வாழ்க்கையிலும் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் அறிகுறிகள் மிகத் தெளிவாகத் தென்பட்டன. 

ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் அனைத்தும் மூன்று மணியோடு நிறுத்தப்பட்டன. 

விவசாயிகள் சோர்ந்து காணப்பட்டாலும் அவர்களது உள் ளங்களில் பேருவகை பெருக்கெடுத்தது. பருவ மழையின் வீச்சைப் போல ஹலீம்தீன் எழுந்து நின்று இலட்சிய நோக் கோடு ஒத்துழைக்க எல்லாருக்கும் நன்றி சமர்ப்பித்தான். அனைவரும் கலைந்து வெற்றிப்பாதையில் நடந்து சென்றனர். 

அத்தியாயம் பதினேழு

சில நாட்களுக்குப் பின் ஓர் இனிய காலைப் பொழுதில், வழக்கம் போல் கிரிபண்டனின் வீட்டு திறந்தவெளி மண்ட பத்தில், கிரிபண்டா, அமரதாச நண்பர்கள் உட்பட அக்கிரா மத்தின் நிர்வாகக் குழுவினர், முஸ்லிம் கிராமவாசிகளின் சந்திப்பிற்காக மிக்க ஆரவாரத்துடனும், ஆவலுடனும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

மிக அவசரத்துடன் அப்துல் மஜீதின் தலைமையில் ஹலீம் தீன் நண்பர்கள், வேனில் வந்து இறங்கிய போது தான் இரு சாராரினதும் மகிழ்ச்சி எல்லையைக் கடந்திருந்தது. 

கிராம சேவகர் பண்டார சற்று முன்னதாகவே வந்திருந்தார். வழக்கம் போல இரு அரைவட்டங்களாக இல்லாமல், விரும்பி யவர்கள் விரும்பிய ஆசனங்களில் அமர்ந்திருந்தது ஒரு பலம் வாய்ந்த ஒருமைப்பாட்டிற்கு அறிகுறியாய் அமைந்திருந்தது. 

நடந்து முடிந்த அடையாள ஆர்ப்பாட்டத்தின் வெற்றிக்கும், அதன் பெறுபேறுகளை மதிப்பீடு செய்வதற்குமே அது கூட்டப் பட்டிருந்தது. 

கொட்டை எழுத்தில் படங்களுடன் பத்திரிகைச் செய்திகள் அவர்களை உலுப்பி விட்டிருந்தன. 

‘அனுராதபுர மாவட்டத்தின் சிங்கள முஸ்லிம் கிராமவாசி களிடையே சக்தி வாய்ந்த சங்கமொன்று உருவாகிறது. 

“விவசாயப் போராளிகள் மறுமலர்ச்சிக்காக குரல் எழுப்புகிறார்கள்…”

“சிங்கள முஸ்லிம் கிராமவாசிகளிடையே ஒருமைப்பாடு உதயம்….”

“விவசாயிகள் விழிப்படைந்து விட்டனர்”

இவ்வாறாக நாளிதழ்களில், சிங்கள தமிழ் ஆங்கில மொழி களில் வெளியான உற்சாகமூட்டும் தலைப்புகளை சபையோருக் குப் படித்துக் காட்டினர் அமரவும், ஹலீமும். 

ஹொரவப்பொத்தான தேர்தல் தொகுதியில் பதினேழு முஸ்லிம் கிராமங்களை மட்டும் ஒருங்கிணைத்து, தாம் எழுபது களில் நிறுவிய முஸ்லிம் முன்னேற்றச் சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் தோல்வியும் இது பற்றிய அனுபவங்களையும் குறுக்கே நின்ற தடைகளைப் பற்றியும், அந்தச் சங்கம் தொடர் ந்து இயங்காமற் போனதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கி, அந்தத் தோல்விகளின் அத்திவாரத்தில்தான் பி.வி.மு.ச. எழும்பியுள்ளது’ என்று கரீம் மாஸ்டர் எடுத்துரைத்தார். 

எமது புனிதமான நோக்கமும் நடவடிக்கைகளும் செயற்பாடு களும் செல்வந்த தரத்து ‘பெரியவர்களுக்கு மலேரியா காய்ச்சல் வந்தமாதிரி ஒத்துவராது… இந்தச் சங்கத்தையும் ஆரம்பத் திலேயே முறியடிப்பதற்கு அவர்கள் மறைமுகமாக முயற்சி களை மேற்கொள்ளக்கூடும். 

கரீம் மாஸ்டர் முக்கியமான கருத்தொன்றை முன்வைத்தார்.

“முஸ்லிம் கிராமங்களில் மட்டுமல்ல… சிங்கள கிராமங் களிலும் அப்படியான நிலைதான்….” என்றான் பியசேன. 

“எங்கும் ஏழைகளைச் சுரண்டுவதில் பணக்காரர்கள் பேத மில்லாம ஒன்றுபடுவர், அது ஒரு மரபு….” இது சேகுவின்கருத்து. 

“அந்த மரபை மாத்தியமைக்கத்தான் இன மத பேதமற்ற பி.வி.மு.ச.உதயமாகியுள்ளது. இது அவர்களுக்கு ஒரு சவால். எதிர்ப்பு வந்தாலும்… எமது ஒத்தும சிதறாது. சிதறிடவும் கூடாது.’ அமரதாச சாதாரணமாகப் பேசினாலும் அது ஆவேசப்படு வது போலத்தான் தொனிக்கும். 

“குளக்காடு காணிகளுக்கு மறைமுகமாக பணம் கட்டி பின் னால அக்காணிகளயும் விழுங்கிக் கொள்ள அவங்க திட்டமிடு றாங்க. அவங்க மோப்பம் பிடிச்சதால தான் நாம பொதுக்காணி யாக்கத் திட்டம் போட்டம். நாம போராட அவர்கள் சொந்தக் காரர்களாவதா…? நீங்கள் உங்கள் பகுதியை எப்படிச் செய்ய போகிறீர்களோ?” 

“நாங்களும் அப்படித்தான் அறவே விவசாயக் காணி இல் லாம மிச்சம் பேர் இருக்கிறாக….”

“சரியான சந்தர்ப்பத்தில் அஹ்மதுலெப்பைக்கு செய்தி கிடைச்ச படியினால வயல் காணியில்லாதவங்களுக்கு மட்டும் புரிச்சிக் கொடுக்க ஒரு திட்டம் கொண்டு வந்தாரு. ஆனா அந்த நடைமுறையிலும் நாம ஏமாளியாகக் கூடாது எண்டு தான்…. பல தஸாப்தங்களாக பிரச்சின கொடுத்த குளக்காட்டு காணிப் பங்கை பொதுவாக உறுதி எழுதிட்டா அது எல்லாரையும் பங்காளியாக்கிடும்…. தனிப்பட்ட முறையில் யாரும் வாங் கவோ விற்கவோ முடியாத படிக்கு….. வேட்டையின் பலனை எல்லாருமே அனுபவிக்கட்டும்…….” 

“மிக அருமை” என்று சிங்கள கிராமவாசிகள் பாராட்டினர். ‘ஆனாலும் முட்டுக்கட்டைகள் போட எத்தனிக்கலாம்….. என்பது கிரிபண்டாவின் கருத்து. 

எத்தனிக்கலாம் என்று சொல்லாதீங்க, அதைத்தான் அவர் கள் பொழுது போக்காச் செய்து கொண்டிருப்பாங்க… நம்மட வயித்திலே அடிச்சால்தான் அவங்க சொகுசா… அதாவது நம்மட சேகு, அன்சார்தீன் சொல்ற பாணியிலே சொல்றதாயிருந்தா… ‘ஏழையின் வயிற்றில் அடித்தால்தான் பணக்காரன் காரில் போக முடியும்! அப்துல் மஜீத் இப்படிச் சொன்னதும் திறந்தவெளி மண்டபம் கரகோஷத்தால் வானைப் பிளந்து – சிரிப்பொலி அடங்க வெகு நேரமாயிற்று. 

இந்த வயதிலும் புதுக்கவிதையா…? என்று ஒரு குரல்… 

“கவிதைக்கு வயது தேவையில்ல உணர்ச்சிதான் முக்கி யம்…” என்றார் பஹார்டீன் மாஸ்டர். 

“சரி… அடையாள ஆர்ப்பாட்டத்தின் வெற்றியை மகிழ்ச்சி யுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்…” என்றான் ஹலீம்.

“ஹலீம்தீனுக்கு கல்லெறிந்ததும், அவர்களுடைய கூலிப் படையாகத் தானிருக்கும்” என்றான் சமது விதானை. 

அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று பலரும் கண் டனம் தெரிவித்தார்கள். கல்வியறிவு இல்லாமல் விவசாயிகளை விவசாயிகளாக வயலோடு மட்டும், எருமைகளோடு எருமை களாக வைத்திருக்க வேண்டும் என்ற காலம் மலையேறி விட்டது என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். 

“பெட்டிசன் காரர்களுக்கும், கல்லெறிந்தவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா…?”சிங்கள கிராமத்திலிருந்து ஒரு வினா. 

“முதலில் குளக்காடு காணிகளுக்கு பங்குதாரராகச் சேர வேண்டுமென்று முஸ்லிம் தனவந்தர் தாம் முயற்சித்து இருக்கி றாங்க. அதனால அவங்க குளக்காடு காணிகள் முஸ்லிம் கிராமத் திற்கு சேரக் கூடாது எண்டு எப்படியும் தடைபோட்டிருக்க மாட்டாங்க” என்று விளக்கினான் யாசீன். 

பெட்டிசனும் கல்லெறியும் வெவ்வேறு விடயங்கள். ஒன்றுக் கொன்று தொடர்பு இல்லை. 

“சிங்கள முஸ்லிம் ஒருமைப்பாட்ட விரும்பாத சக்திகளும் இல் லாம இல்ல” என்று தனது அனுபவத்தை கூறினான் கிரிபண்டா. 

“இன்னுமொரு பகிடி ஒங்களுக்கு தெரியுமா….?” என்று புதிர் போட்டான் ஹலீம்தீன். 

எல்லாரும் ஆவலுடன் அவனைப் பார்த்தனர். 

“ஒரு பெரிய மனிசன்’ செய்தி அனுப்பியிருக்கிறாக…. அவர் பி.வி.மு.ச.வில் சேந்து ஏழை விவசாயிகளின் பிரச்சினைகளை வென்றெடுப்பதில எம்முடன் கைகோத்து நிக்க விருப்பமாம்… அதோட சங்கத்தின் வளர்ச்சிக்காக ஒரு தொகை பணத்தையும் டொனேசனா தர ஆயத்தமா இருக்கிறாராம்” 

இதைக்கேட்டு எல்லாரும் சிரித்தார்கள். சிலர் ஆத்திரமடைந் தார்கள். கோபங் கொண்டார்கள். ஆவேசப்பட்டார்கள். 

“மனிசன் விவசாயிகள் எண்டாப்பில என்ன நினைச்சிக் கொண்டிருக்கிறாரு. கொண்டை கட்டின இளிச்சவாயன்கள் என்ற நினைப்பா இன்னும்…?” 

“பெரிய மனிசனெண்டா கொஞ்சம் யோசிக்கணும்…. அவர்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பி.வி.மு.ச. குதிரையில் சவாரி செய்யும் திட்டமாகவும் இருக்கலாம்” 

“ஓ… ஓ…அதுதான் உண்மை” 

எல்லாரும் மீண்டும் சிரித்து, பலரும் பல கோணங்களில் இருந்து சுவையான கருத்துக்களை வெளியிட்டனர். 

“இது ஜோக் அல்ல…. எங்கட குதிரை நொண்டிக்குதிரை அல்ல. அது பந்தயத்தில் ஜெயிக்கப் போற குதிரை என்டத அவர் இனங் கண்டு கொண்டார். மனிசனுக்கு நல்ல நம்பிக்கை வந்திருக்கு.” 

”அது சரி அந்தப் பெரிய மனிசனுக்கு என்ன மறுமொழி அனுப்பிக் கிடக்கு?” 

பஹார்டீன் மாஸ்டருடைய அணுகுமுறைதான்… நிச்சய மாக புதிய அங்கத்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்……” என்று மனம் நோகாதவாறு பதில் அனுப்பிக் கிடக்கு” என்றான் ஹலீம். 

“அது நல்லமுறை…. இப்போதைக்கு அவரை பகைத்துக் கொள்ளக்கூடாது” என்றார் பஹார்டீன் மாஸ்டர். 

“உங்கள் எல்லாரது பேச்சுகளிலிருந்து ஒன்று தெளிவாகிறது. எங்களது முதலாவது அடையாள ஆர்ப்பாட்டம், நாம் எதிர் பார்த்ததை விட பெரு வெற்றியளித்திருக்கு. எங்கட அரசியல்வாதிகள் கூட சிந்திக்கிறாங்களாம்….. அனுராதபுர மாவட்ட விவசாயிகளுக்கு நாம் உருப்படியாக என்ன செய்திருக்கிறோம் எண்டு….?” என்றான் பிங்காமி. 

“நாம் சமர்ப்பித்த மகஜரை அவர்கள் ஆழ்ந்து ஆராய்வாங்க…’ “மகஜரிலிருந்து சுடச்சுட பல விடயங்கள் நடைமுறைக்கு வந்து செயற்படுகின்றன என்று சொல்லப்படுகிறதே” 

“மகஜர் ஒரு கலக்கு கலக்கியிருப்பது உண்மை…..நமது மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தாலும்… சில பழைய விடயங் களும் உயிர் பெற்றிருக்கின்றன…” என்றான் யாசீன். 

“ஓரிரு பள்ளிக் கூடங்களுக்கு புதிய மாடிக்கட்டிடங்கள், விஞ்ஞான ஆய்வு கூடம், ஆசிரியர் பற்றாக் குறைக்கு விண் ணப்பங்கள் பரிசீலனை, சாலைகள் சீர்திருத்தம், புதிய சாலைகள் நிர்மாணித்தல், கிராமவாசிகளுக்கு ஜே.பி. கிராமாதிகாரி பதவி கள், மாணவர்களுக்கு ஏற்ற விதத்தில் பஸ் போக்குவரத்துகள், படித்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகள், சில குளங் களைப் புனரமைத்தல், கிராம வாசிகளுக்கு விவசாயக் கடனுத விகள்… என்று பல விடயங்கள் பரிசீலிக்கப்பட்டு பல வேலை கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. உங்கள் மகஜர்தான் பணி களை முடுக்கி விட்டிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்ல” என்றார் கிராமசேவகர் பண்டார. 

இதைக் கேட்டதும் எல்லாரும் பூரிப்படைந்தனர். 

“கட்சிசார்பற்ற நாம் பதவியிலிருக்கும் கட்சிகள் அல்லது பிரதிநிதிகள் மகஜர் கேட்டால் நாம் எவ்வித மறுப்புமின்றி பிரதிகள் சமர்ப்பிக்க வேண்டும்… நாம் விரைவில் கலந்துரை யாடி எமது மகஜரைப் புதுப்பிக்க வேண்டும். சிலவற்றை நீக்கி புதியன சேர்க்க வேண்டும்…” என்றார் பஹார்டீன் மாஸ்டர். 

“எமது அடையாள ஆர்ப்பாட்ட நாளன்று, கஹட்டகஸ்திகி லியா சந்தியில் நடந்த கூட்டத்திற்கு சனம் எப்படியாம்……?” என்று ஆர்வமான ஒரு வினா எழுந்தது. 

“சொல்லத் தேவையில்லை, படுதோல்வி” 

“மகஜரை ஏன் மாற்ற வேண்டும் என்று மாஸ்டர் கூறுகிறார்” ஹலீம்தீன் பதிலிறுத்தினான். 

“கிராமம் கிராமமாகச் சென்று நாம் திரட்டிய குறைபாடு களை திரும்பவும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். மிக அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு முதலிடம் என்ற ரீதியில் இப்பொழுது veliakal ஆரம்பிக்கப்பட்டுள்ள விடயங்களையும் நீக்கி, இலக்கமிட்டு ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலம் ஒரு காத்திரமான மகஜரை தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்…..” என்று விளக்கம் கூறினான்

எமது நடவடிக்கைகள் எதுவானாலும், பிரதேசத்தின் விவ சாய பெருமக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படை யாகக் கொண்டவையாக அமைய வேண்டியது அவசியம். தேர்தல் காலங்களில் விவசாயிகளின் வாக்குகள் தேவையானால் எமது பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும் என்று வெளிப் படையாகச் சொல்லாமல், ஆனால் விடாப்பிடியாக மிகவும் சாதுரியமாக அவர்களுக்கு உணர்த்த வேண்டும். விவசாயி களுக்காக நாம் என்ன செய்து விட்டோம்……?” என்று சிந்திக் கிற காலகட்டம் வந்து விட்டது” என்றான் அமர. 

அதைத் தொடர்ந்து கிரிபண்டா மிக நிதானமாக கருத்து தெரிவித்த போது 

“ஒவ்வொரு முறையும் நாங்கள் எத்தனையோ தேர்தல்களை கண்டு விட்டோம்… ஒவ்வொரு முறையும், தேர்தல் காலங் களில் எம்முடன் மிக நெருக்கமாக இணைந்து உறவு கொண் டாடுவர், மூட்டை மூட்டையாக வாக்குறுதிகளை கட்டிக் கொண்டு வந்து குவிப்பர், நெற்குவியலைப் போல். தேர்தலில் எமது வாக்குகளைச் சுருட்டிக் கொண்டு போனால், இனி அடுத்த தேர்தல் காலத்தில் தான் முகங்களைப் பார்க்கலாம். இவை நாம் சந்திக்காத புதிய விடயங்கள் அல்ல. ஆனால் மாற்றுவழி இன்றி அநாதைகளாய் இருந்தோம். இப்போது பி.வி.மு.ச. அமைப்பு பஹார்டீன் மாஸ்டரின் கடும் உழைப்பினால் ஒரு தொழிற் சங்கக் கட்டமைப்பில் உருவாக்கம் பெற்றிருக்கிறது. எக்காலத் திலும் விவசாயிகள் செல்வாக்கு இல்லாதவர்கள். அவர்களது வாழ்க்கை முறைகள் காடுகளால் மூடப்பட்டுக்கிடக்கின்றன. குக் கிராமங்களாக சிதறுண்டு கிடக்கின்றன. சிபார்சும் இலஞ்ச முமின்றி எந்த ஒரு விடயத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைப்பாடுதான் இன்னும்…

ஆகவேதான் எமது அமைப்பின் மூலம் – எமது சாத்வீகப் போராட்டத்தின் மூலம், விவசாயிகளும், எமது நாளாந்த உணவை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் என்று இனங்காணப்பட வேண்டும். கமக்காரர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்….” என்று உருக்கமாகக் கூறி முடித்தார் மூத்த தலைவர் கிரிபண்டா. 

“விவசாயிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கத்தான் பி.வி.மு.ச. ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது…” என்றான் ஹலீம்தீன். 

“எமது பிரதேசத்தை வெறும் ‘கஷ்டப்பிரதேசம்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கஷ்டங்களை நீக்க எவரும் முயற்சி செய்ததாகத் தெரியவில்லை. ‘பின்தங்கிய கிராமங்கள்’ என்று சொல்வார்கள், பின்தங்கியதற்கு, அல்லது பின்தங்கிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணங்கள்? எவரும் ஆய்ந்து அவற்றை நீக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை. இவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து ஆவன செய்ய வேண்டும் என்று ஆலோ சனைகள் வழங்குவதற்கு பஹார்டீன் மாஸ்டரைப் போல் வெளிமாவட்டத்திலிருந்து வேறு எவரும் வந்து எம்முடன் இணையப் போவதில்லை. அவர் எமது பி.வி.மு.ச.வின் ஒரு தூண். பிரதேசவிவசாயிகள் முன்னேற்றச்சங்கம் இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு விளையாட்டுச் சங்கம் அல்ல.” 

இப்படி ஆவேசப்படாமல் நிதானமாகத்தான் கூறினான் அமரதாச. 

சிங்கள முஸ்லிம் கிராமவாசிகள் ஒருங்கிணைந்துள்ள இச்சந் திப்பில் நான் ஒன்றைச் சொல்லி வைக்க விரும்புகிறேன். விவசாயிகள் எமது பிரதேசத்தில் மட்டுமல்ல இலங்கையில் பல பாகங்களிலும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு சங்கம் இல்லை. அவர்கள் இனங்காணப்படவில்லை. 

ஆகவேதான் எமது பிரதேச விவசாயிகள் பிரச்சினைகளில் இருந்து ஓரளவு விடுபட்ட பிறகு, அதாவது எமது பி.வி.மு.ச. வின் ஓராண்டு பூர்த்தியானதும் சங்கத்தின் விஸ்தரிப்பு வேலை களைத் தொடங்க வேண்டும். நாடளாவிய ரீதியில் கிளைகள் பரப்ப வேண்டும். பின்னர் எல்லா விவசாயிகளையும் ஒருங் கிணைத்து இலங்கை விவசாயிகள் முன்னேற்றச் சங்கம் என்று பெயர்மாற்ற வேண்டும். இதுபற்றி எமது சங்க யாப்பில் விரி வாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தேநீருக்குப் பின் வேறு முக்கிய அலுவல்கள் காரணமாக பண்டார கிராமசேவகர் வெளியேறி னார். அவர்புறப்படுவதற்கு முன் ஒரு முக்கிய தகவலை மட்டும் சொல்லிவிட்டுப் போனார். 

குளக்காட்டுப் பிரதேசம் விடயமாக பி.வி.மு.ச. சார்பில் உரி மைப் பேராளர் குழுவொன்று தயாராக இருக்க வேண்டும். இதில் சிங்கள கிராமத்திலிருந்து இருவரும் முஸ்லிம் கிராமத்திலிருந்து இருவரும் கட்டாயமாக அங்கம் வகிப்பது நல்லது. உத்தியோக பூர்வமாக ஒரு நேர்முக விசாரணைக்காக கடிதம் வரும்.” 

எல்லாரும் அகம் மகிழ்ந்தனர். 

“கிட்டத்தட்ட மூன்று தஸாப்தங்களுக்குப் பிறகு இவ்விட யம் கிளறப்பட்டு இப்படி ஒரு கடிதம் வரப்போகிறது.’ 

“அதற்கு மிகவும் நிதானமான, புத்தியான அணுகு முறை தான் காரணம்'” என்றார் பஹார்டீன் மாஸ்டர். 

பண்டார கிராம சேவகருடன் வேறு சிலரும் அலுவல்கள் காரணமாக அனுராதபுர நகருக்குக் கிளம்பியிருந்தனர். 

இறுதி அம்சமாக குளக்காட்டுப் பிரதேசம் உரிமைப் பேராளர் குழுவொன்று அமைக்கப்பட்டது. 

கிரிபண்டா. அப்துல் மஜீத், அமரதாச, ஹலீம்தீன், பியசேன சமது விதானை ஆகியோர் தெரிவான பின்னர் இன்னும் ஒரு வரை பிரேரிக்குமாறு வேண்டப்பட்டது. 

பிங்காமி எழுந்து நின்று யாசீனை பிரேரித்தான். அது ஏக மனதாக அங்கீகரிக்கப்பட்டது. 

அத்துடன் அடையாள ஆர்ப்பாட்டத்தின் வெற்றியைக் கொண்டாட ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் கலைந்தது. 

இரு சாராரும் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இல்லங்கள் ஏகினர். அனைவரும் பிரிந்த பின்னர் ஹலீம்தீன் நண்பர்கள் மட்டும் திறந்த வெளி மண்டபத்தில் உரையாடிக் கொண்டிருந் தனர். ஆனால் அப்துல் மஜீத், பஹார்டீன் மாஸ்டர், சவால் ஆகியோர் ஏற்கனவே வேனில் அமர்ந்து மற்றவர்களை எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி என்ன அவசரமோ! ‘அப்ப யாசீன் உனக்கு ஏதும் வேலை இருக்கா…..?” ‘இனியும் சுணங்க ஏலாது.” 

“சேகு? அன்சார்டீன்…?” 

“இண்டக்கி எங்களுக்கு நிக்கவெவ கிராமத்தில் இலக்கிய முயற்சிகளின் தேடல்” 

“அங்கே எங்களுக்கு கோழி பிரியாணிசாப்பாடுந்தான்……” என்றான் அன்சார்டீன். 

“ஓ அப்படியா, நீங்க எல்லாரும் வேனில போங்க… பெரியவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்… நான்தலைவர் ஹலீம்தீனுக்கு விஷேட பகலுணவு அளித்து மீண்டும் கல்லெறி ஏதும் படாமல் பாதுகாப்பாக மாலையில் வேனில் கொண்டு வந்து விடுகிறேன்” என்று அமரதாச கூறியதும் எல்லாரும் நகைத்தனர். கையசைவுகளுடன் வேன் புறப்பட்டது. 

அத்தியாயம் பதினெட்டு

“ஹலீம் வா உள்ளே போவோம். நீ கொஞ்ச நேரம் ஓய்வாயிரு.நான் குளிச்சிட்டு வாறன்…” என்றான் அமர. 

“ஓய்வு தேவையில்லை… முகம் அலம்பிக் கொண்டாப் போதும்… என்று கூறி கிணற்றடிக்குப் போனான்…. சற்று நேரத்தில் மீண்டு வந்து, கண்ணாடிக்கு முன் நின்று தலைவாரி, உடைகளை ஒழுங்கு செய்து கொண்டு விறாந்தையிலுள்ள சாய்வு நாற்காலியில் அமர்ந்து, அன்றைய ஆங்கிலப் பத்திரி கையை விரித்தான் ஹலீம். 

பியசீலியும் நந்தாவும் வந்து நின்றார்கள். 

“என்ன ஹலீம், இந்தப் பக்கத்துக்கே காணல்ல… தலைவர் பிஸிபோல….? கல்லடி எல்லாம் பட்டீங்களாமே? தலைம ஏற்றால் எல்லாம் பட வேண்டியதுதான், பெரிய காயங்களா?பெரிசா ஒண்ணுமில்ல… யாசீனுக்கு தான் ஒரு சின்னத் தழும்பு…” 

“வீரச் சின்னங்களா…?” என்று கேட்டுச் சிரித்தாள் பியசீலி “நேற்று ரேடியோ நியூஸ் கேட்டீங்களா…?” 

“என்ன விசேஷம்….?” 

“எங்கட ஏ.எல் தலையெழுத்து என்ன என்பது அடுத்த சில தினங்களில் தெரியவரும்…. 

“அப்படியா? ரிசல்ட் வருதா…? எப்ப? எனக்கு சோதின எழுதினதுதான் தெரியும். மாதங்கள் எவ்வளவு வேகமாக ஓடிக் கிடக்கு.” 

“காலமகள் உங்களுக்காகக் காத்திருப்பாளா?”

“சாப்பாடு தயாராகிக் கொண்டிருக்கு, ‘கூல்’ ஏதும் குடிக் கிறீங்களா? என வினவிய பியசீலி நந்தாவை விளித்து 

“நந்தா போய் எடுத்திட்டு வாயென்…” 

“பியசீலி அன்றக்கி யாசீன் வந்து சொன்ன நேரம், நான் அடையாள ஆர்ப்பாட்ட ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்தேன். என்னை சந்திக்க வேணும் எண்டு….? பியசீலியை தன் கவனத் திற்கு இழுத்தான் ஹலீம். 

“விசேஷம் ஒண்ணுமில்ல… நீண்ட நாளா தலைவரின் முக த்தை பார்க்கல்ல. ஒரு வேளை சமரசிங்கவுக்கு பயந்து விட்டீங்களோ….?” 

‘சே, நான் ஏன் பயப்பட வேணும்?” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது 

நந்தா குளிர்பானம் கொண்டு வந்தாள். 

‘யசவத்தியும், நந்தாவும் கிழமைக்கு மூன்று நாட்கள் உங்கள் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு வந்து ஒரே உங்களைப் பாராட்டிப் புகழ்வார்கள். 

“ம்… அப்படியில்ல…” என்று நந்தா தடுமாறிப் போய் நாணிக்குறுகினாள். 

நீ பயப்படாத நந்தா. அப்புறம்… நீங்கள் பாவமாம்…. உங்களுக்கு ஓய்வே இல்லையாம்… ஆம்… நேரத்துக்கு சாப் பிடக்கூட… நந்தாவுக்கு மிகக் கவலை…. ஏன் ஹலீம் இப்படி செய்றீங்க…?” 

ஹலீம் சிரித்து விட்டு சொன்னான். 

“பியா, உனக்கு தெரியும்தானே. 

நான் எப்போதும் பெண்பிள்ளைகளின் பாராட்டு புகழுரை களுக்கு அடிமையானதில்லை என்று….” 

“ஓ, தெரியுமே, அழகும் ஆழ்ந்த அறிவும் உள்ள ஓர் இளம் தலைவருக்கு எப்போதும் விவசாயப் பெருமக்களின் மறுமலர்ச் சியைப் பற்றிய சிந்தனை தான் என்று …” பியசீலி தூக்கிப் பிடிக்க 

“அது மட்டுமல்ல, தலைவருக்கு நல்ல நண்பர்கள் பக்கத் துணையாக இருக்கிறார்கள்…” என்று முடித்தாள் நந்தா 

“எங்கட தலைவர் அமரதாசவும் அப்படித்தான். தன்னுடைய லட்சியம் கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் கிராம மறுமலர்ச்சி தானாம். பெண் பிள்ளைகளுடன் சிரித்துப் பேசவே மாட்டார். ஆனால் அவரது நண்பர்கள் அதற்கு நேர்மாறு. கேலி பண்ணுவ தும் நையாண்டி பண்ணுவதும் ஓவர். அவர்களுக்கு அது பொழுது போக்கு. அமர எல்லாரையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் சரி. எல்லாரையும் விட உங்களைத்தான் அதிகம் நேசிப்பவர். உங்கள் ஆலோசனை அவருக்குத் தெய்வவாக்கு. 

“கிராமங்களின் நிர்வாகப் பொறுப்பைத் தலையில் தூக்கி வைத்து, மறுமலர்ச்சிக்காகவும் ஒருமைப்பாட்டுக்காகவும் போராடுகின்ற நாங்கள் சில்லறைத்தனமாக நடந்து கொண்டால் அது மிகக் கேவலம் அல்லவா…? என்ற ஹலீம் தொடர்ந்து 

உன்னையும் போல் நந்தாவையும் போல் அழகான இளம் பெண்களுடன் நெருங்கிப்பழகி… ” மணம் முடிப்பேன்” என்று வாக்குறுதிகள் பரிமாறிக் கொண்டு பின்னர் அவை உடைந்து விட்டால், பிறகு நடக்கும் கதைகள் தெரியுந்தானே? 

மன்னராட்சிக் காலத்தில் ஒரு பொறுப்பான மன்னன் நடந்து கொண்ட பொறுப்பற்ற செயல் உங்களுக்குத் தெரியும்தானே? 

“தெரியாது… தெரியாது அதை முதலில் சொல்லுங்களேன்…” பியசீலியும் நந்தாவும் வற்புறுத்தினார்கள். 

”அந்தக் காலத்தில் அனுராதபுரத்தை அரசு செய்த சிங்கள மன்னனுக்கு முஸ்லிம் ஒருவர் மந்திரியாக இருந்தாராம்… 

“பியசீலி இப்பதானே சிங்கள தமிழ் முஸ்லிம் துவேஷம் எல்லாம்.” 

“இனவேறுபாடு என்பது அரசியல் லாபம் பெற முன்வைக் கப்படும் முதலீடு என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்களே… அது சரி விசயத்துக்கு வாங்க” பியசீலி தூண்டினாள். 

“பொதுவாக முஸ்லிம்களோடு அரசனுக்கு மிக நெருக்க மான அன்பு. ஒரு சந்தர்ப்பத்திலே இனிமையான தென்றல் வீசும் மாலைப் பொழுதில் மன்னன் உலாவச் சென்றிருக்கிறான். 

“அப்புறம்…?” நந்தாவின் ஆர்வம் பியசீலியின் வார்த் தைகளாக தெரிந்தன. 

‘மந்திரியின் அழகிய மகளைக் கண்டு மன்னன் மயங்கி விட்டான். 

“நந்தாவை விட அழகா…” என்று கேட்டாள் பியசீலி, நந்தாவைப் பார்த்துக் கொண்டே. “நந்தாவை விட அழகென்று தான் சொல்ல வேண்டும்” 

“இவர் என்னமோ நேரடியாகப் போய் கண்டு வந்தமாதிரி கதை விடுகிறார். நான் அழகு என்று யார் இப்ப உங்களிடம் சொன்னது…?” இது நந்தாவின் குத்தல். 

“பியசீலிதானே இப்ப கேட்டா” 

“சரி… சரி… கதைக்கு வாங்கோ….” 

“மன்னன் மயங்கினாலும்…. கேவலமாக நடந்து கொள்ள வில்லை. உரிய பரிவாரங்களுடன் பெண் கேட்டு தூது அனுப்பினான் மன்னன். 

“அப்புறம்…?” 

மந்திரியின் மகள் அதை ஏற்க மறுத்து, பரிவாரங்களைத் திருப்பியனுப்பி விட்டாளாம். 

“சஸ்பென்ஸ் அதிகம், பட்டென்று சொல்லிவிடுங்கள் ஹலீம்” பியசீலி பறந்தாள். 

“பரிவாரங்களைத் திருப்பி அனுப்பி விட்டுத்தான் அவள் யோசித்தாள்…மன்னனுக்கு கோபம் வந்து விட்டால்… தந்தைக்கு ஏதும் ஆபத்துகள் வந்துவிடுமோ என்று குழம்பிய அந்த இளம் பெண் அவசரப்பட்டு தற்கொலை செய்து கொண்டா ளாம். 

அந்தப் பெரிய மன்னனே மயங்கி விட்டாரென்றால் இந்த இளம் தலைவர்கள் எந்த மூலைக்கு…. ?” என்றாள் பியசீலி. 

“அந்த இடத்தில்தான் நீங்கள் ஹலீம்தீனையும் அமரதாச வையும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை…. பெண் பிள்ளை களுக்கு வாக்குறுதிகள் அளித்து நம்பிக்கைகளை வளர்த்து… அவை நிறைவேறாமல் போனால்… அந்த மந்திரியின் மகளைப் போல…. தற்கொலை செய்யவும்… சே…” 

அவள் அவசரப்பட்டு விட்டாள். அப்படியே முடிவை எடுக் கிறதாயிருந்தாலும், இன்னும் கொஞ்சம் பொறுத்திருக்கலாம்…” என்றாள் பியசீலி 

“பாத்தியா… நீயும் அந்த முடிவைத்தான் ஆதரிக்கிறமாதிரி இருக்கே…” 

“சொரி”,நந்தா படிச்சவள். அவசரப்பட்டு அப்படி ஒரு முடிவு எடுக்கமாட்டாள்… நான் நினைக்கவில்லை. படித்த பெண்கள் இந்தக் காலத்தில் அப்படியான முடிவுகளை எடுப்பார்கள் என்று….” 

‘நந்தா நீ என்ன நினைக்கிறாய்?” பியசீலி கேட்டாள். 

“சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் காரணம்… அப்படியான முடிவுகளுக்கு…” என்றாள் நந்தா. 

“அப்படியான சந்தர்ப்பங்களை உருவாக்கக்கூடாது என்று தான் நான் சொல்கிறேன்… பியசீலி அதைவிட்டுட்டு இன்னொரு கோணத்திலிருந்து யோசித்துப் பார். இப்ப என்னை எடுத்துக் கொள்… என்னுடைய நிலைமையில், நான் சிங்களக் கிரா மத்தில் விவாகம் செய்து விட்டேன் என்று வைத்துக்கொள்… கதை எங்கே எப்படி முடியும் என்று நினைக்கிற…?” 

“அருமையான நல்ல பொயின்ட். நீங்க சொல்லுங்க ஹலீம்…”

“இவ்வளவு காலம் குளக்காட்டுப் பிரதேசத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, சிங்கள முஸ்லிம் ஒருமைப்பாட்டு க்கு வித்திட்டது, பி.வி.மு.ச அமைத்தது… எல்லாமே இந்த அற்ப சுயநலத்திற்குத்தானே என்று சமரசிங்க கோஷ்டியினர் கதை பரப்பும் போது நாம் வெட்கித் தலைகுனிவதை விட வேறு என்ன செய்ய முடியும்? எங்களுடைய இலட்சியம் அதுதானா…?” 

“மிக அற்புதமானதலைவர்கள்தான். சந்தேகமில்லை. உங்கள் தொலைநோக்குப் பார்வை… ஏ.வன்… ஆனாலும் இப்படியும் செய்யலாந்தானே… பொதுவாக சொல்லப்போனால்… முஸ் லிம் கிராமத்திலிருந்து சிங்களக் கிராமத்தில் விவாகம் செய்து, ஒரு ‘நேகம் அதாவது உறவு முறையை ஏற்படுத்தி ஒரு முன் மாதிரி காட்டலாந்தானே…” 

“பொறுப்புக்களை சுமந்துள்ள என் போன்றவர்கள் செய் தால் எமது சமூகப் பணிகளை கொச்சைப்படுத்தி விடுவார்கள்… அந்த அளவுக்கு எமது கிராமிய மக்களின் மனங்கள் பக்குவப் படவில்லை. அது போக சமயம்…? எப்படிப் பார்த்தாலும் சுயநலத்திற்காக எமது புனிதத்துவமும், மலர்ந்துள்ள புரிந் துணர்வும் மானுட நேயமும் அதன் இயல்பை இழந்து விடக் கூடாது. எங்கும் பொய், பித்தலாட்டம், சந்தர்ப்பவாதம், காழ்ப்பு, சுழியோட்டம்.. தலைவிரித்தாடுகின்ற கால கட்டத்தில் எந்த ஒரு புனித காரியமும் கொச்சைப்படுத்தப்படுவதற்கு வெகு நேரம் போகாது. இல்லையா?” என்றான் ஹலீம்தீன். 

“நான் உன்ன சாதாரண ஏ. எல் மாணவன் என்றுதான் நினைத் தேன். ஆனால் நீ பெரிய மேதை. அனுபவசாலி” என்று பாராட் டினாள் பியசீலி 

“அப்படி ஒன்றும் இல்லை. நான் பொறுப்புடன் சமுதாயத் தைப் படிக்கிறேன் அவ்வளவுதான்… நீ ‘நேகம்’ என்று சொன்ன தும் எனக்கு அனுராதபுர மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள நகம (Negama) என்னும் கிராமம்தான் ஞாபகத்துக்கு வந்தது. கண்டி மன்னன் விக்கிரம ராஜசிங்கன் தனக்குச் சேவை செய்த நான்கு முஸ்லிம்களில் ஒருவருக்கு இக்கிராமத்தை அன்பளிப்புச் செய்து ஏற்கனவே அங்குள்ளவர்களுக்கு உறவினர் என்று கருத் துப்பட ‘நேகம’ என்று சிங்கள மொழியில் அழைத்தார்கள். 

‘நேகம’ என்னும் சொல்லில் ‘Kama’ Gama வாக மாறி (Negama) என்று கிராமத்தின் பெயராக மாறிவிட்டது. 

“ஹலீம்தீன் இப்படியாக ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் அளித்தபோது பியசீலியின் மனம் விழிப்படைந்து, விரிவடை ந்து சிந்திக்கத் தூண்டியது. 

‘நல்லது ஹலீம், நீங்க அடிக்கடி வந்து எங்களுடன் கலந் துரையாடினால் நாங்கள் எவ்வளவோ தெளிவடைகிறோம்… ல்லாவிட்டால் நாங்கள் வெறும் புத்தகப் பூச்சிகள்தான்… ஒன்றை மட்டும் சொல்லி வைக்க விரும்புகிறேன்” என்று கூறி நந்தாவின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாள் பியசீலி. 

“என்ன புதிர்…?” ஹலீமின் கண்கள் இருவர் முகங்களையும் ஊடுருவின. 

“உங்கள் இலட்சியப் பாதையில் இனி நந்தா குறுக்கே நிற்கமாட்டாள்.” என்றாள். 

பியசீலியின் வார்த்தைகள் நந்தாவை மறையச் செய்தனவோ. ஹலீம் தனக்குள் சிரித்துக் கொண்டான். 

அமரதாசகுளித்துவிட்டு உடைகள் மாற்றி வந்து உட்கார்ந்தான்.

“அமரகிணற்றில் இன்னும் தண்ணீர் இருக்கா…?” என்று கேட்டான் ஹலீம். 

“இண்டக்கி எவ்வளவு நல்லது… நீங்கள் இருக்கிறபடியால் அரைமணித்தியாலத்தில் குளிப்பு முடிந்துவிட்டது… இல்லா ட்டி அரைநாள் போகும்…” என்றாள் பியசீலி. 

பகலுணவு தயார். சாப்பாட்டு மேசையை ஒழுங்குபடுத்து வதற்கு பியசீலியும் அப்பால் சென்றாள். 

கிரிபண்டாவின் அறையிலிருந்து குறட்டைச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 

பகலுணவு முடிந்ததும் இரு தலைவர்களும் சற்று நேரம் திறந்தவெளி மண்டபத்தில் நடந்தனர். பின்னர் தென்றல் வீசும் ஓர் ஒதுக்குப் புறத்தில் நாற்காலிகளைப் போட்டு அமர்ந்தனர். 

இருவரும் தனிமையில் கலந்துரையாடி சில முக்கியமான விடயங்களைப் பரிசீலித்தனர். 

அன்று மாலை ஹலீம்தீன் கிராமத்திற்கு திரும்பும் போது ‘அசர்’ பிந்தி விட்டிருந்தது. 

– தொடரும்…

– கருக்கொண்ட மேகங்கள் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 1999, பேசும் பேனா வெளியீடு, பேருவளை.

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *