கரிப்பு மணிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 1,376 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-22

ஓடைக்கரை நெடுகத் தாழைப் புதர்களில் மணத்தை வாரிச் சொரியும் பொன்னின் பூங்குலைகள் மலர்ந்திருக்கின்றன. வேலுவுக்குப் பரீட்சையின்றிக் கல்லூரி மூடிவிட்ட தால் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் முள் செறிந்த தாழைகளை விலக்கிக் கொண்டு கவனமாக இரண்டு பூங்குலை களைக் கொய்து கொண்டு வருகிறான்.

மஞ்சள் பூச்சு படர்ந்த முகத்தில் திருநீறும் குங்குமமும் துலங்க, மொடமொடவென்று கோடிச் சேலயை உடுத்துக் கொண்டு பொன்னாச்சி சங்கமுகேசுவரர் சந்நிதியில் புதுமணப் பெண்ணாக நிற்கிறாள். குஞ்சரியும், வள்ளியும் பாஞ்சாலியும் பச்சையும் அவளைப் பார்த்துக் கொண்டே சுற்றிச்சுற்றி வருகின்றனர். மூங்கில் துறையிலிருந்து குருக்கள் முன்னதாகவே அதிகாலையில் வந்து ஈசுவரனுக்கு அபிடேகம், ஆராதனை முடிக்கிறார். ஓர் புறம் அடுப்பு மூட்டி பொங்கலும் வைத்திருக்கிறார். 

முதல்நாள் காலையில் வேலுதான் சென்று பொன்னாச்சி யையும் குழந்தைகளையும் கூட்டி வந்திருக்கிறான். திருமணம் என்று சொல்லாமலேயே அவர்களை அழைத்து வரச் செய் திருக்கிறார் அவர். ராமசாமி மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியுடனும் வெள்ளைச்சாமியுடனும் வந்தான். 

“அம்மாளைக் கூட்றிட்டுவான்னே?…” என்று மாமன் கேட்டபோது, அவன் சிரித்து மழுப்பிவிட்டான். அவள் முரண்பாடாகத் தகராறு செய்வாளென்றும், திருமணம் முடித்துக்கூட்டிக் கொண்டுபோனால் போதும் என்றும் மொழிந்தான். காலையில் நேராகக் கோயிலுக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, அவளுக்கு இருபத்தைந்து ரூபாயில் ஒரு சேலையும் ஏழு ரூபாயில் ஒரு ரவிக்கையும் கொண்டுவந்து கொடுத்திருக்கிறான். இரவில் யார் யாரையோ பார்க்க வேண்டிய வேலை இருக்கிறதாம். “ஏழு மணிக்கு நாங்கூட்டியார…” என்று தனபாண்டியன் பொறுப் பேற்றுக் கொண்டு சென்றிருக்கிறார். சிலுசிலுத்து ஓடும் ஓடையில் மாமன் முழுகி, வேறு வேட்டியணிந்து பட்டை யாகத் திருநீறு அணிந்து தட்டத்தில் எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறார். வெண் சம்பங்கியும் அரளியும் ரோஜா வும் கட்டிய இரண்டு மாலைகள்- வெற்றிலை பாக்கு, ஒரு சீப்பு பழம், இரண்டு தேங்காய் எல்லாவற்றுடன் அந்தப் புடவை ரவிக்கை, மாப்பிள்ளைக்கு அவர் வாங்கிவைத்த வேட்டி, துண்டு ஆகியவற்றையும் வைக்கிறார். பின்னர், பத்திரமாகக் கொண்டுவந்திருக்கும் அந்த மங்கிலியத்தை, புதிய சரட்டில் கோத்து அதன் நடுவே வைக்கிறார். தங்க பாண்டியிடம் வட்டிக்கடன் பெற்று முதல் வேலையாக அதை மீட்டு விட்டார். உப்பின் வெப்பமும் உயிரற்ற வெண்மை யும் கவிந்த வாழ்க்கையில் இந்த இளம் பருவம் உப்புக் காட்டில் ஓடிவரும் ஆற்றின் கால்களைப் போன்று குளிர்ச்சி பொருந்தியது. இந்தக் குளிர்ச்சி தரும் இனிமைகளே இவர்கள் வாழ்வில் பசுமைகளாகும். எனவே, கல்யாணத்தை இவர்கள் மிகப் பெரியதாக எதிர் நோக்கியிருக்கும் போராட்டத்துக்கு முன்பே வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து விட்டார். 

இந்த இனிய சேதி பொன்னாச்சியைப் பூரிப்பிலாழ்த்தி யிருக்கிறது. மாமியினால் அதிகாலை நேரத்தினால் நடந்து வர ஏலாது என்று கூறிவிட்டாள். ஆனால் பொன்னாச்சிக்கு அன்போடு முழுக்காட்டி, சடை கோதி, மலர் அலங்காரம் செய்திருக்கிறாள். அவள் மாப்பிள்ளையுடன் வரும் காலை நேரத்தில் இனிப்பும் பாயசமும், புட்டும் சமைத்து வைத்திருப்பாள். 

ஒரு சிறு கைமணியை அடித்து, குருக்கள் பூசைக்கு வான வரையும், தேவதைகளையும் அழைக்கிறார். 

கிழக்கே விண்மணி பொற்சுடராய்ப் பொங்கிச் சிரிக் கிறாள். வசந்தகாலத்து இன்பசாரலின் துளிகள் பசும்புல்லில் வீற்றிருக்கையில் ஒளிக்கதிரின் கால்பட்டுச் சிதறும் வண்ண மாலையாக உலகம் தோற்றுகிறது. 

அருகிலுள்ள வேம்பின் உச்சியில் இரு பச்சைக்கிளிகள் கொஞ்சுகின்றன. 

“அதா, கிளி! கிளி!…” என்று அந்தக் குழந்தைகள் கவடற்ற ஆனந்தத்தில் மூழ்கிக் கூச்சலிடுகின்றனர். 

உதயத்தின் செம்மை மாறி, ஒளிக்கற்றைகளில் வெம்மை ஏறுகிறது. மாமன்,ஓடைக்கரையினூடே வரும் ஒற்றையடிப் பாதையில் வெண்மையாக ஆள் அசைந்து வருவது தெரிகிறதா என்று முகத்தை நிமிர்த்திப் பார்க்கிறார். வேலு அவர்களை எதிர் கொண்டு அழைப்பவனாகப் பாதி வழிக்கே. ஓடிச்சென்று நிற்கப் போகிறான். 

அருணாசலத்துக்கு அடிமனதில் ஓர் அச்சம் உண்டு. ஏனெனில் தங்கபாண்டி அந்தப் பக்கமே நடமாடுபவன். அவன் பொன்னாச்சி தனக்குரியவளென்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறான். அதனாலேயே அவர் கேட்ட வுடன் பணமும் கொடுத்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்தால் ஏதேனும் இடையூறு செய்து விடுவானோ என்ற அச்சத்தில் அவர் இந்தத் திருமணத்தை இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டாம் என்றே நினைத்திருந்தார். ஆனால். எல்லோரும் திருச்செந்தூர் சென்று மணமுடிப்பதென்றால், செலவு அதிகமாகும். அதற்கேற்ற தாராளம் கூட இப்போது இல்லை. 

“நாங்க முன்னாடி மாப்பிள்ளையோடு வந்து காத் திருப்பம். நீங்கதா பொண்ணுக்குச் சிங்காரிச்சிக் கூட்டியார் நேரமாவும்” என்று தனபாண்டியன் கூறினாரே? மணி எட்டாகிறது. இன்னும் வரவில்லை? எட்டு மணிக்கு அவர்கள் மணமுடித்துத் திரும்பிவிட வேண்டும் என்றல்லவோ திட்டம் போட்டிருக்கின்றனர்! 

பொறுமையின் உச்சி விளிம்பில் நிற்பதைப் போன்று ஓர் பரபரப்பு அவரை அலைக்க, மேற்கே அவர் விழிகளைப் பதித்திருக்கையில், பின்புறமிருந்து குரல் கேட்கிறது. 

“என்ன மாமா? என்ன விசேசம் இன்னிக்கு? கோயில்ல வந்து?…அட… பொன்னாச்சியா?… என்ன இன்னிக்கு?” என்று மண்டபத்தின் பக்கம் தங்கபாண்டியின் குரல் கேட்டு அவர் திடுக்கிட்டவராக வருகிறார். அவர் உமிழ் நீரை விழுங்கிக் கொள்கிறார். “எங்க வந்த, நீ?” 

“நா கிளித்தட்டு ஓடப்பக்கம் வரயில இங்க ஆளுவ தெரிஞ்சிச்சி, என்ன விசேசம்னு வந்த, அங்ஙன ஆர எதிர்பார்த்திட்டு நிக்கிறிய?” 

“ஆரயுமில்ல, சக்திவேலு வந்திருக்கா. அவ பெறந்த நாளு அவாத்தா எதோ நேந்துக் கிட்டாப்பல…அவனுக்காவத்தா நிக்கே…” 

முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முடியுமா? தங்கபாண்டியன் கண்கள் கபடத்தை நிரப்பிக் கொண்டு பொன்னாச்சியின் மீது பதிகின் றன. பிறகு தட்டதுக்கு மாறுகின்றன. 

“கெளவா, பொய்ய ஏஞ் சொல்ற?” என்ற முணமுணப் புடன் அவர் மீது குரோதப் பார்வையை வீசுகிறான். 

“அதுக்கு ரெண்டுமால, புதுச்சில, வேட்டி…ஒம்ம மவனுக்கு இவளக் கட்டிவைக்கப் போறியளா?” 

“தங்கபாண்டீ! வாயத் தொறந்து வார்த்தய அநாவசியமா, வுடாத ஒஞ்சோலியப் பார்த்திட்டுப்போ!” 

“என்ன சோலி? என்னவே சோலி? இப்ப ஏன் சோலி இதா. எனக்கு இப்ப பணம் வேணும்? என் ரூவாய வச்சிட்டு மறுவேலை பாரும்!” 

“சரி, தார. நீ முதல்ல இந்த இடத்தில இப்ப ஏங்கிட்ட வம்புக்கு வராத. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு போல….” 

அவர் அழாக் குறையாகக் கெஞ்சுகிறார். 

“அது சரி. எனக்கு இப்பப் பணமொட. ஒங்ககிட்டக் கேக்கத்தா வந்த…” என்றவன் கண்சிமிட்டும் நேரத்தில் லபக்கென்று குனிந்து தட்டத்தில் வெற்றிலை பூமாலை களுக்கிடையே புதிய மஞ்சட்சரட்டில் கோத்து வைத்திருந்த மங்கிலியத்தை எடுத்துவிடுகிறான். 

அவர் பதறிப் போகிறார் “ஏல, குடுரா அதெ கொரங் குப் பயலே? அத்த ஏ ண்டா எடுத்த” அவன் பின் அவர் ஓடுகிறார். 

“நீரு என்னிய மோசஞ் செய்தீரல்ல? இந்தத் தாலிய இப்ப கெட்டி இவள இழுத்திட்டுப் போவ.” 

பொன்னாச்சி அஞ்சிச் சந்நிதிச் சுவரோரம் ஒண்டிக் கொள்கிறாள். 

“சங்கமேசுவரா! இதுவும் ஒன்சோதனையா?” என்று கலங்கிய அவர் அவன் கையைப் பற்றி அவன் மடியில் கட்டிக் கொள்ளும் அந்த மங்கிலியத்தைக் கவர முயலுகிறார். ஆனால் அவன் அவரைத் தள்ளிவிட்டு ஓடியே போகிறான். 

பொன்னாச்சி இடி விழுந்த அதிர்ச்சியுடன் மாமனை எழுப்புகிறாள். 

பச்சை சக்திவேலுடன் போய்விட்டானா? 

“அவ ஓடிட்டா…ஓடிட்டா!” என்று பாஞ்சாலி கத்துகிறாள். 

“பாவிப் பய, இதுக்கு அநுபவிப்பான். இவனுக்கு மண்ண வெட்டிப் போடுற…” என்று மாமன் குடி முழுகிப் போன ஆத்திரத்தில் கத்துகிறார். 

சக்திவேலும் பச்சையும் வருகின்றனர். 

“எங்கலே போயிட்டிய? அந்த மடப்பய தாலியத் தூக்கிட்டு ஓடிட்டானே? நா ஒரு மட்டி. தாலிய மடிலல்ல வச்சிருக்கணும்!” என்று புலம்புகிறார். 

“நீங்க கடசீ நேரத்துல எடுத்து வச்சாப் போதுமே? யாரு அந்தப் பய ?” என்று விசாரிக்கிறார் குருக்கள், 

“என் கரும வினை? ஈசுவரன் ரொம்ப சோதிக்கிறார்!”‘ சக்திவேலுக்கு எதுவும் புரியவில்லை. 

“யாரச் சொல்லுறியப்பா? அவங்கல்லாம் அங்க வாராங்க. எதோ பஸ்ஸில் வந்து இறங்கி வராப்பில…” 

மாமனின் முகத்தில் சயாடவில்லை. 

மணாளனை அகமும். முகமும் மலர்ந்து வரவேற்பதற்கு மாறாக அதிர்ச்சியுடன் கண்களில் நீர் கசிய, பொன்னாச்சி நிற்பதைக் கண்டு ராமசாமி திடுக்கிடுகிறான். 

“என்ன வுள்ள? என்ன நடந்திச்சி” 

“ஒண்ணில்ல, நீங்கல்லா வரக்காணமின்னுதா. கொஞ்சம் சடைவு…” 

சங்கமுகேசுவரனுக்கு முன்பு சாத்திய ரோஜா மாலை யைக் குருக்கள் அதைப் பிரித்து எடுத்துப் போட்டிருக்கிறார். முறுக்கி மஞ்சட்தூளைப் பூசி விரைவில் மாமன் கொண்டு வருகிறார். ஆதில் பொன்னின் சின்னமில்லை; ராமசாமி ராதோ நடந்திருக்கிறதென்று ஊகித்துக் கொள்கிறான். எனினும் கேட்கவில்லை. அந்த மஞ்சட் கயிற்றை அவளுக்குப் பூமாலையுடன் அணிவித்து அவளை உரிமையாக்கிக் கொள் கிறான். குருக்கள் மணியடித்து மணமக்களுக்காக அருச்சனை செய்கிறார். பொங்கல் பிரசாதம் பெற்று மண மக்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் வருகையில் அருணாசலத்தின் கண்களிலிருந்து நீரருவி பெருகுகிறது. புட்டும் பயற்றங் கஞ்சியும், பழமும் பப்படமுமாக மாமி அவர்களுக்குக் காலை விருந்தளிக்கிறாள். 

மாமியின் காலைக் கும்பிட்டுப் பணிகையில் புதிய தாலியை எடுத்துக் காட்டவில்லை. முனிசீஃப் வீட்டாச் சியை, இன்னும் தெரிந்தவர்களைக் கும்பிடுமுன் மாகாளி யம்மன் கோயிலையும் வலம்வந்து பணிகின்றனர். பின்னர் எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு தூத்துக்குடி பஸ்- ஏறுகின்றனர். 

தெரு முனையில் இவர்கள் வருவதை வாயிலிலிருந்தே.. சரசி பார்த்து விடுகிறாள். அக்கா வந்திற்று…அக்கா… அல்லாம் வந்திட்டாவ…!” என்று உள்ளே ஓடுகிறாள். சொக்கு வருகிறாள்; பவுனு வருகிறாள். சொக்குவின் புருசன் கூட எழுந்து நிற்கிறான். 

செங்கமலத்தாச்சி எங்கே?

“ஆச்சியில்ல சரசு?” 

“ஆச்சிய, அந்தப் பெரிய கணக்கவுள்ள ரிச்சாவில கூட்டிட்டுப் போனாவ!” 

பொன்னாச்சி கேள்விக் குறியுடன் அவள் முகத்தைப் பார்க்கிறாள். 

“பெரி… முதலாளிக்கு ரொம்ப ஒடம்பு சாஸ்தியாயிருக்குன்னு கூட்டிப் போனா. படுத்த படுக்கயா இருக்காவளா…” என்று மெல்லிய குரலில் சாடையாகச் சேதி தெரிவிக்கிறாள் சொக்கு. 

பொன்னாச்சி சட்டென்று நினைவு வந்தவளாகச் சொக்குவையும், அவள் புருசனையும் அடி தொட்டுப்பணிகிறாள். 

அவர்களுக்கு ஒரே மகிழ்ச்சி; பவுனுவும் சொக்குவும் குலவையிட்டு வாழ்த்துகின்றனர். இலைகளில் இட்டிலியுடன் சீனியும் சட்டினியும் வைத்து அவளுக்கும் ராம சாமிக்கும் உண்ணக் கொடுக்கிறாள் சொக்கு. 

“நாங்க அங்கயே உண்டாச்சு. இப்ப வாணாம்…” என்றால் அவள் விடுகிறாளா? 

“இருக்கட்டும்… உண்டுக்கடீ… உங்கப்ப, ஆயி, சின் னம்மா, ஆருமே பாக்க இல்லாம போயிட்டாவ…” என்று கண் கலங்குகிறாள். சிவந்தகனி பழமும் கலரும் வாங்கிக் கொண்டு ஓடிவருகிறான். சிவந்தகனியின் பெண்சாதி அவள் புடவையைத் தொட்டுப் பார்த்து மகிழ்கிறாள். குழந்தை பழத்துக்குக் கை நீட்டுவனத விலக்கிக் கொண்டு அவளுக்கு இலையில் பழத்தை வைக்கிறாள். சேவுப் பொட்டலத்தை அவிழ்த்து வைக்கிறாள். “அக்காவுக்கு ரொம்ப ஆசை…கலர் குடிச்சிக்கும் மாப்பிள! பொன்னாசிசி! கலர் குடிச்சிக்க….!” என்று சிவந்தகனி உபசரிக்கிறான். 

“என்னத்துக்கு இப்படிச் செலவு பண்ணுறிய?” என்று பொன்னாச்சி கடிந்து கொள்கிறாள். “சரசி! கிளாசெடுத்திட்டு வா” 

“இருக்கட்டும். கலியாணம் கட்டி வாரவங்களுக்கி ஒரு விருந்தாக்கிப் போட இல்லாத போயிட்டம். நீங்க ஆருக்கும் குடுக்க வாணா. நா அவியளுக்கு வேற வாங்கிக் குடுப்ப..” 

இந்த அன்புப் பொழிவில் திளைத்து பின் ராமசாமி அவளைத் தன் குடிலுக்கு அழைத்துச் செல்கிறான். மாலை மயங்கும் அந்த நேரத்தில் வீடு திரும்பும் அனைவரும் அந்த மணமக்களைப் பார்த்து வியந்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். 

கூந்தலில் தாழையும் மருவும் மணக்க, தன் மகனுடன் வந்து அடி தொட்டுப் பணியும் பெண்ணைக் கண்டு தாய் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்திருக்கிறாள். சிறிது நேரம் பேச்சே எழவில்லை. பிறகு அவன் முகத்தை அவள் கை தடவுகிறது. 

“ஏ ராசா…!…” 

கண்களில் ஒளி துளும்புகிறது. 

“அம்மா, இவதா ஒம் மருமவ… பொன்னாச்சி.” 

தாய் அவளுடைய கழுத்திலுள்ள மஞ்சட் சரட்டைக் கையிலெடுத்துப் பார்க்கிறாள். வெறும் மஞ்சள் சரடு. ஒரு குன்றிமணி பொன்னில்லை. 

“இம்புட்டுநா வேல செஞ்சே! அளத்து மொதலாளி கலியாணத்துக்கு ஒண்ணுமே இல்லேன்னுட்டாவளா? ஒரு மிஞ்சி தங்கமில்ல.” 

“அம்மா இவ பேரே பொன்னாச்சிதா! அம்புட்டும் தங்கம்!” அவனுடைய நகைச்சுவைப் பேச்சு அவளுக்கு ரசிக்கத்தானில்லை. பொன்னாச்சிக்கோ, பாயசத் துரும்பாய் நினைவுப் பிசிறுகள் நெஞ்சில் தைக்கின்றன. 

இரவு, பாய் தலையணையை உள்ளே வைத்துவிட்டு, தாய், தனது துணி விரிப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறாள். அந்தச் சோபன இரவில், பொன்னாச்சி கண்ணீர் தோய்ந்த பனி மலர் போல் விலகி நின்று அவனைப் பணிகிறாள். 

என்னவுள்ள இது?” 

“நீங்க பொறவு மனக்கிலேசப் படக்கூடாது. தாலியத் தங்கபாண்டி எடுத்திட்டுப் போனா. ஒங்கக்குத் தெரியும். அவெ தாலியத்தா கொண்டு போனா. என் ராசா நா எப்பிடிச் சொல்லுவே ஒங்ககிட்ட.” 

ராமசாமிக்கு இதையெல்லாம் கேட்கப் பொறுமையில்லை. 

“நீ ஒண்ணுஞ் சொல்லாண்டா. சொல்லவுடமாட்ட” அவள் கை அவனைத் தடுத்து நிறுத்துகிறது. அவன் திகைத்துப் போகிறான். 

“நா அன்னியே ஒங்ககிட்டச் சொன்ன; அந்தக் கிழக்கில உதிப்பவஞ் சாட்சியா என் அந்தராத்மாவுல துளி அழுக்கு கெடயாது. ஆனா, பாத்திக்கட்டுச் சேறு எம்மேலு பட்டிரிச்சு!…” 

“அட, சே, இந்த நேரத்துல இத்தையெல்லாஞ் சொல் லிட்டு? அந்த நாச்சப்பமூஞ்சில அன்னைக்கே குடுத்தனே?” 

“நாச்சப்ப இல்ல. அவனை நா சமாளிச்சிட்ட அந்தச் சோலப் பய குடிச்சிட்டு தேரிக் காட்டு இருட்டில…” அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள். 

ஒரு கணம் பருக்கைக் கல் குத்திவிட்டாற் போன்று ராமசாமி திடுக்கிட்டுப் போகிறான். ஆனால் மறுகணம் அவன் வென்று விடுகிறான். 

பொன்னாச்சியின் கண்ணீர் கரிப்பில் உதடுகள் அழுந்துகின்றன. 

“நீ பொன்னு… தங்கம் எந்தச் சேறும் ஒம் மேல ஒட்டாது. நீ தங்கம்…” 

அந்தக் கரிப்பு ஈரேழு உலகங்களிலும் கிடைக்காத இனிமையாக இருக்கிறது. 

அத்தியாயம்-23 

செங்கமலத்தாச்சி நிறையப் பன ஓலை சேகரித்து முன்னறை முழுவதும் அடைத்து இருக்கிறாள். 

சரசி அவள் உள்நோக்கைப் புரிந்து கொண்டு விட்டாற் போல் தோற்றும்படி வெடுக்கென்று கேட்கிறது. “ஆச்சி? அவியல்லாம் அளத்துக்குப் போகாம் மொடங்கிட்டா, பொட்டி செலவிருக்குமா? ஆரு வாங்குவா?” அந்தச் சிறுமியை ஆச்சி உறுத்துப் பார்க்கிறாள். 

“பதினைந்து ரூபாய்க்கு வாங்கி வந்து விட்டேன் என்று பெருமிதத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாளே? அட. இந்தப் பொடிசிக்குப் போன புத்தி எனக்குப் போகலியே? உப்பளத்து வேலை ஓய்ந்து விட்டால் ஓலைப் பொட்டிக்கு ஏது அவ்வளவு கிராக்கி? ஆனால் அளத்து வேலை அப்படி ஓய்ந்து விடுமா?… ஒன்றுமில்லாமல் ஓய்ந்து விடலாமா?…” 

“பொன்னாச்சி என்னேயா ட்டீ” 

கத்தியை எடுத்து ஓலையை வாகாக்கிக் கொண்டு ஆச்சி கேட்கிறாள். 

“கூட்டிட்டு வாராட்டுமா ஆச்சி?” 

“கூப்பிடு…!” 

சற்றைக்கெல்லாம் புதிய தாலி துலங்க, பளிச்சென்று முகத்தில் திருநீறும் குங்குமமுமாக, ஈரக்கூந்தல் முடிப்புடன் அவள் வருகிறாள். 

“சாமான மெல்லாம் வாங்கியிருக்கா…ட்டீ?” 

அவள் தயங்கி நிற்கிறாள். 

“நாளக்கிலேந்து வேலயில்ல. தெரியுமில்ல?”

“தெரியும் ஆச்சி?’ 

“ராமசாமி ஆத்தாள இங்க கூட்டியாரன்னு சொன் னானா? அங்க வேற எதுக்கு வாடவை?” 

“வார முன்னா…” 

“சரி, பச்சையைக் கூட்டிட்டுப் போயி, அரிசியும் வெறவும் வாங்கி வச்சிக்க. பொறவு எப்பிடி இருக்குமோ?…” 

அவள் தன் சுருக்குப் பையைத் திறந்து ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுக்கிறாள். 

இந்து ஆச்சி பத்துக் காசுக்கு ஒவ்வொரு சமயம் கணக்குப் பார்ப்பாள். செம்போ லோட்டாவோ கொண்டு வந்து வைத்து விட்டு முடை’க்குப் பணம் பெற்றுச் செல்லும் கூலிக்காரரிடம் வட்டி முனை முறியாமல் வாங்கி விடுவாள். ஆச்சி இப்போது கொஞ்ச நாட்களாக பைசா கணக்கை விட்டு விட்டு இப்படி வந்தவருக்கெல்லாம் செலவழிக்கிறாள். 

பச்சையையும் பாஞ்சாலியையும் சாமானுக்கு அனுப்பி விட்டு அவள் அடுப்பை மூட்டிப் பானையைக் கழுவி உலை போடுகிறாள். பொழுது உச்சிக்கு ஏறுகிறது. அவள் அரிசி யைக் கழுவுகையில் “இங்க இருந்துக்க!’ என்ற குரல் கேட்டு வெளியே வருகிறாள். 

மகன் தாயைக் கொண்டு வந்து அமர்த்துகிறான். 

வெள்ளம் தலைக்குமேல் செல்வது போலும், தான் ஓட்டைப் படகில் தொத்திக் கொண்டிருப்பது போலும் பீதி நிறைந்த முகத்துடன் அந்த அம்மை அவளைப் பார்க்கிறாள். சில தட்டுமுட்டுக்கள், துணி மூட்டை, சைக்கிளில் வைத்துக் கட்டி வந்திருக்கிறான். முற்றத்தில் மரியானந்தம் சைக்கிளுடன் நிற்கிறான். 

“ஆச்சி…? நீங்க சொன்னாப்பில செஞ்சிட்ட…”

“பேச்சு வார்த்தை என்ன ஆச்சி?” 

“தனபாண்டியன், அகுஸ்தின், செல்லையா எல்லா கட்சிக்காரரும் பேசுறாவ பனஞ் சோல அளத்துள நடக்கா துன்னு னு சொல்றா. ஆச்சி,நாங் கேள்விப்பட்டது நிசமா?” 

“என்ன கேள்விப்பட்ட?” 

“ஓங்களப் பெரி கணக்கவுள்ள வந்து கூட்டிட்டுப் போனாவளாம். ஏ அவியள்ளாம் தூண்டிக் குடுக்கேன்ன  கேட்டாவளாம்…” 

“கேட்டாக. நா ஆரு அவியளத் தூண்டிக் குடுக்க? கும்பி காஞ்சு, குலை எரிஞ்சா தானே அதிகமா புகையிதுன்னே…’என்னாடி அதிக்கிரமா பேசுத? மரியாதிய நடக்க’ண்ணா. நீ முதல்ல மரியாதிய நடண்ணே…” 

“பெரிய முதலாளிட்டியா?” 

ஆச்சி தலை நிமிராமல் ‘ஆமாம்’ என்று தலையாட்டுகிறாள். “ஒடனே இந்த ஆண்டி என்னக் கூட்டிட்டு வெளீ
ரூம்புல வந்து பயமுறுத்தினா. “நீ என்ன நினைச்சிட்டு அவியள இப்பிடிப் பேசின? அவிய வயசு காலத்துல ரொம்பக் கிலேசப்பட்டு ஒன்னப் பாத்துப் பேசணுமின்னு பெருந்தன்மையாக் கூட்டு விட்டா நீ மட்டு மரியாதியில்லாம நடக்கே!” அவவ நிலமய நினச்சிப் பேசணும்”ன்னா. “எனக்குத் தெரியும். என்னேவிய? போலீசுல புடிச்சிக் குடுப்பிய. ஆள் வச்சி அடிப்பிய, அம்பிட்டுதான?”ன்ன. எனக்கு இனி என்ன பயமிருக்கி?” 

“நீ அநாசியமாப் பேசுத. ஒனக்கு வூடு பணம் ஒதுக்கி யிருக்கு. இப்ப வேணுன்னாலும் ஆயிரம் ஒதுக்கிறமுன்னா இந்தத் முதலாளி. ‘பேசாம வாங்கிட்டு ஒதுங்கிப் போ. தலத் தெறிப்பு பயகளைச் சேத்துட்டு வம்புல எறங்காத, ஆமாம்…’ன்னு பயங்காட்டினா.” 

“எனக்குப் பணம் வாணா. ஒங்க அந்தூராத்துமாவ தொட்டுப் பாத்துப் பேசும். ஒங்கக்கு உப்பச் சுரண்டிக் குடுக்க ஒழக்கிற பொண்டுவளையும் ஆம்பிளகளையும் புள்ளகளயும் நீங்க குளிரும்படி வச்சிருக்கல. ஒங்ககிட்ட பணமிருக்கி, அந்த வலத்துல போலிசைக் கையில போட்டுக் குவிய. சருக்காரைக் கையில போட்டுக்குவிய, ஏ, சாமியையே கையில போட்டுக்குவிய; ஆனா நீங்க பண்ண பாவம் ஒங்கள் சும்மா விட்டிராது’ன்னு சொல்லிவிட்டு மடமடன்னு எறங்கி வந்திட்ட…” 

ராமசாமி வியப்பினால் சிலையாகி நிற்கிறான். அவன் கண்களில் முத்தொளி மின்னுகிறது. 

“ஆச்சி! ஒங்களுக்கு நாங்க ரொம்ப ரொம்பக் கடமப் பட்டிருக்கிறம். ஒங்க ‘சப்போட்டு’ தா எங்களுக்கு இப்ப தயிரியத்தையே குடுத்திருக்கு. என்ன வந்தாலும் ரெண்டில் ஒண்ணுன்னு துணிஞ்சி நிக்கோம்…” 

பொன்னாச்சி முற்றத்தில் நின்று சன்னல் வழியாக அவன் அவளைக் கூப்பிடுவதைப் பார்க்கிறாள். அவர்கள் சென்ற பின்னர், ஒரு கலியாண வீட்டின் பரபரப்போடு அவள் வீட்டுப் பணிகளில் இறங்குகிறாள். சோற்றைவடித்து முதலில் அவன் அன்னைக்கு வட்டிக்கிறாள். 

“கஞ்சியில் உப்பு போட்டுக் கொண்டாட்டி. இப்ப அது போதும்….” என்று கூறுகிறாள் முதியவள். 

பச்சை விறகு வாங்கி வருகிறான். பாஞ்சாலி பெட்டி. யில் சுமந்து வந்த அரிசியை அந்த அம்மை கொட்டிப் புடைத்துச் சீராக எடுத்து வைக்கிறாள். குழந்தைகள் அனைவரையும் குளிக்கச் செய்து துணிகசக்கி, சோறு போட்டுக் கடையெல்லாம் ஓய்ந்த போது வெயில் சுவரின்மேல் ஓடிவிட்டது. 

ராமசாமி வருகிறானோ என்று அவள் வாயிலில் எட்டி எட்டிப் பார்க்கிறாள். 

திமுதிமுவென்று சிவந்தகனியும் இன்னும் நாலைந்து பேரும் சில தடிகளை மூங்கில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு வந்து நுழைகின்றனர். 

“இதெல்லா என்ன?” 

ஒருவன் அரிவாள் வைத்திருக்கிறான். 

“யார்ல அது?…” என்று ஆச்சி வெளியே வருகிறாள்.

“நாங்கதா ஆச்சி… இதெல்லா இங்க வச்சிருக்கம்…”

“ராமசாமி வரானா?” 

“இல்ல ஆனா நாளேலேந்து வேலக்கி போவ இல்ல. மொத்த அளக்காரரும் வந்தது வரதுன்னிருக்கம். இதபாறம், பனஞ்சோல அளத்து டைவர் சோலை தெரியுமில்ல?” 

பொன்னாச்சி திடுக்கிட்டுப் பார்க்கிறாள். ஆம். சோலை தான்! “பொன்னாச்சி? சொவமா? நானும் சேந்திருக்க. பனஞ்சோல அளத்துல எல்லாத் தொழிலாளியளும் சேர்ந்திருக்கா!”

“உசிரைக் குடுத்திட்டு நீருல முழுகிக் குழாமாட்டுவே, நாளக்கு, ஆறு. ரூவா கூலின்னு சொல்லிட்டு ரெண்டு ரூபாக் கணக்கு சரக்குக்குன்னு புடிச்சிக்கிடுவா கணக்கவுள்ள. எனக்கு சொதந்தர நா, மே தினத்துக்குக் கூட லீவுள்ள, இதெல்லா ராமசாமி சொன்ன பொறவுதா தெரிஞ்சிச்சி. என்ன எம்புட்டு நாளா ஏமாத்திட்டிருக்காவ!'” 

பொன்னாச்சி சிலையாகிறாள். 

“அருவால்லாங் கொண்டிட்டு வந்தியளா? அல்லாம்இங்ஙனமும் இருக்கட்டும்! என்னக் கேக்காம ஆரும் தொடாதிய! பொவு, வம்பு தும்பு ஒங்களால வந்துதுன்னா, அம்புட்டும் வீணாயிரும். அளத்து வாசல்ல நின்று ஆரும் சோலிக்குப் போவாம பாத்துக்கும்…” 

ஒரு கட்டுக்குள் சீராக அடக்கி வைப்பது எவ்வளவு பெரிய செயல்? மாலை தேய்ந்து இருள் பரவுகிறது. மீண்டுமொரு முறை சோறுண்ண நேரம் வந்துவிட்டது. சுற்றிச் சுற்றி வந்த சிறுவர்களும் பச்சையும் திண்ணையில் படுத்ததும் உறங்கிப் போகின்றனர். கிழவி படியிலேயே உட்கார்ந்திருக்கிறாள். 

பொன்னாச்சிக்கு மனம் அலைபாய்கிறது. 

“ஏட்டி? நீ சோறு தின்னிட்டுக் கதவைப் போட்டுட்டுப் படுடீ அவெ வருவா, நாலிடம் போவா – வேலையவுட்டு நிக்கிறமின்னா லேசா? பணம் பிரிப்பா… போ! வந்தா கதவத் தட்டுவா, நா இங்ஙனதான இருக்க. ஒறங்க மாட்ட…” 

பொன்னாச்சிக்குப் படுத்தால் உறக்கம் பிடித்தால் தானே? 

வெகு நேரம் அதையும் இதையும் எண்ணி மனம் அலை பாய்கிறது. பிறகு எழுந்து சென்று பானைச் சோற்றில் நீருற்றி வைக்கிறாள். 

“ஆச்சி, உள்ள வந்து ஒறங்குறியளா?” 

அந்தத் தாய் மறுத்து வாயிற்படியிலேயே சுருண்டு கொள்கிறாள், மிற்றத்தில் நின்று வானைப் பார்க்கையில் அங்கு கோடி கோடியாகச் சுடர்கள் இரைந்து கிடக்கின்றன. 

மணி என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை. சொக்கு புருசன் எழுந்து உட்கார்ந்து இருமுகிறான். அவள் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொள்கிறாள். 

உறக்கம் வந்தது தெரியவில்லை. தங்கபாண்டி மஞ்சள் மஞ்சளாகப் பழக்குலையும் கையில் பிடித்து வருவது போல் ஒரு கனவு. சின்னம்மா பழத்தைப் பிய்த்துச் சிரித்துக் கொண்டு அப்பச்சியிடம் கொடுக்கிறாள். நிசம் போலிருக்கிறது. சட்டென்று விழித்துக் கொள்கிறாள். எங்கோ கோழி கூவுகிறது, ஆளவரம் கேட்பது போலிருக்கிறது. அவள் கதவைத் திறக்கிறாள். இரண்டு வலிய கரங்கள் அவளை வளைக்கின்றன. “வுடும்… வுடும்…ஆச்சி, புள்ளயள்ளாம் முழிச்சிடுவாக….” என்று கிசுகிசுக்கிறாள் அவள். 

அவள் கதவை மெல்லத் தாழிடுகிறாள்.. 

அத்தியாயம்-24 

திங்கட்கிழமை காலையில் சாரி சாரியாக உப்பளக்காரர் தெருக்களில் செல்லவில்லை. கையில் அலுமினியத் தூக்குப் பாத்திரமும், பொங்கிப் பீளை சார்ந்த கண்களும் தலைக் கொட்டைச் சுருட்டுமாகப் பெண்களும் சிறுவர் சிறுமியரும், அடிமிதித்துச் சாலையின் பொடி யெழுப்பவில்லை. கோல்டன் புரம், கிரசன்ட் நகர், ஆகிய எல்லாத் தொழிலாளர் குடியிருப் புக்களிலும் ஆண்களும் பெண்களும் வீடுகளில் கூடி நின்று வானில் மேகங்கள் கூடுவதைப் பார்த்துப் பேசுகின்றனர். சிறுவர் சிறுமியர் வேலையில்லை என்று தெருக்களில் விளையாடுகின்றனர். 

அருணாசலம் முதல் பஸ்ஸூக்கே வந்து இறங்குகிறார். 

“வாரும்!” என்று செங்கமலத்தாச்சி வரவேற்கிறாள். 

“வழியெல்லாம் போலீசப் பாத்த, என்னமோ காதுல விழுந்திச்சி. ஆரோ தலைவரைப் போலீசி பிடிச்சில உள்ள கொண்டிட்டுப் போயிட்டான்னா. ராமசாமி வந்தானா?” 

“விடியக்காலம் வந்திற்றுப் போனா பாத்த…!”. 

பொன்னாச்சி முற்றம் பெருக்குபவள். பேச்சுக் குரல் கேட்டு ஓடி வருகிறாள். 

“என்ன சொல்றிய மாமா? போலீசுல ஆரப் புடிச்சிட்டுப் போனா? 

“பொன்னாச்சியா? எப்பிடிம்மா இருக்கே? ஒம்மாமியா எங்கேருக்கா?” 

“இங்கதா. அவிய காலப் புடிச்சிட்டுப் போவாதேன்னு அழுதாவ. என்னயும் ஏசிட்டிருக்கி…மாமா. ஆரப் போலீசில் புடிச்சிப் போனா?” 

“தெரியலம்மா, சொல்லிக் கிட்டா பஸ்ஸில. இது வழக்கம்தான? நா இங்க வருமுன்ன மூணா நெம்பர், நாலா நெம்பர் தெருவழியாத்தா வர்றே. எந்த அளத்துக்காரரும். வேலய்க்குப் போவல. இன்னிக்கு மானம் கறுத்திருக்கு. இப்ப மழை வந்தா, வாரின உப்பக் காவந்து பண்ணல, முடை போடலன்னா நட்டமாயிடும். மொதலாளி மாரு எறங்கி வருவா. ஒரே வழி தா. ஆனா, கூலிய வாணா பத்து பைசா ஏத்துவானே ஒழிய, ஒரு தொழிலாளிக்குச் சட்டப்படி கொடுக்க வேண்டிய சலுகை, வசதியெல்லாம் குடுப்பானா? இத்தனை நாளக்கி லீவுன்னு பட்டியல் போட்டு இனிஸி பெக் டரிட்டக் காட்டுவானுவ. ஆனா சொதந்தர நாளுக்கும் மே நாளுக்கும் கூட சில அளங்களில் லீவு கிடையாது கூலியோட இத்தினி நா ருசி கண்டவுக இப்ப திடீர்னு எல்லாம் விட்டுக் கொடுப்பாகளா? எத்தினி நா குஞ்சும் குழந்தையுமா பட்டினி கிடப்பாக?” 

செங்கமலத்தாச்சி பேசவேயில்லை. 

மாமன் முன்பு இவ்வாறு வேலை நிறுத்தம் செய்த கதை களைப் பற்றி பேசுகிறார். 

லாரி அளத்துக்குள்ளார வரக்கூடாது. தொழிலாளிகளே சுமந்து வந்து ஏற்றவேண்டும். அதனால் அவர்களுக்கு அதிக மான வருமானம் கிடைக்கும் என்று வாதிட்ட தொழிலாளர் தலைவனை எப்படிக் கொன்று விட்டார்கள் என்று விவரம் கூறுகிறார். 

திடீரென்று செங்கமலத்தாச்சி பட்டாசு சீறுவது போல வெடிக்கிறாள். 

“ஒமக்கு அறிவிருக்காவே?” 

அந்தக் குரலில் அவர் நடுங்கிப் போகிறார். 

“கொல்லுற கதையப் போயி இப்ப சொல்லுறீம்! நாயமா இருக்கற எதையும் வேரோட செல்லிற ஏலாது தெரிஞ்சிக்கும்! ஒரு புல்லுக்கூட எடுக்க எடுக்க முளைக்கிது. அந்தவுள்ள கண்ணுல வுசுர வச்சிட்டுப் பாத்திட்டிருக்கி, ஓமக்கு வயசானதுக்கு தயிரியம் – சொல்லணும்னு தெரியாண்ட?” 

மாமன் பாவம், உமிழ்நீரை விழுங்கிக் கொள்கிறார். “தப்புத்தான், தப்புத்தான். என்னமோ சொல்ல வந்து நெதானமில்லாம பேசிட்ட, மன்னிச்சிக்கும் … “

ஓடி வுந்த ஆறு அணை கண்டு முட்டினாற் போன்று திகைத்துப் போகிறார். 

“பேசத்தான் தெரியும். பேசிட்டே இருப்பிய ; எல்லாம் பேசுறான். படிச்சிவ, படியாதவ, தெரிஞ்சவ, தெரியாதவ, ஆம்புள, பொம்புள அல்லாம் பேசுறாவ. சினிமால ரேடியோல தெருவில, கடயில பேச்சு பேசிய ஏமாத்துரானுவ; பேசியே ஏமாந்தும் போறம், செத்துப் போனவப்பத்தி இப்ப என்ன பேச்சு? இருக்கிறவகளப் பத்தி இல்ல இப்ப நினப்பு” 

‘செவத்தாச்சி’ என்று குறிப்பிடும் செங்கமலமா? புருசனை விட்ட, தரங்கெட்டுப்போன, மகனைப் பறி கொடுத்த ஒரு பெண் பிள்ளையா? 

“நாயம் அம்மா. ஒங்களுக்குத் தெரிஞ்சது எனக்குத் தெரியாமப் போச்சி, மன்னிச்சிக்கும்…” என்று நெஞ்சம் தழு தழுக்க அவளைக் கையெடுத்துக் கும்பிடுகிறார். 

“என்ன ஏங் கும்பிடுறிய? இரியும். பொன்னாச்சி. யானையவச்சி கொஞ்சம் கூடவே போட்டு வடிச்சி வையி. ஒரு குளம்பும் காச்சி வையி. ஆரும் பசி பட்டினின்னு வருவா…” என்று கட்டளை இடுகிறாள். 

பகல் தேய்ந்து மாலையாகிறது. மாமன் சாப்பிட்டு விட்டு வெளியே செல்கிறார். வளைவே கொல்லென்று கிடக்கிறது. ஆச்சி பெட்டி முடைகிறாள். சொக்கு மாவாட்டுகிறாள். பொன்னாச்சி தண்ணீரெடுத்து வீட்டு வேலை முடித்துவிட்டாள். வெளிக்கு இயங்கிக் கொண்டிருந் தாலும் உள்ளத்தில் கருக்கரிவாளின் கூர்முனை ஊசலாடுவது போல் ஓர் அச்சம் நிலைகுலைக்கிறது. வேலை முடக்கம் ஒரு நாள் இரண்டு நாளுடன் முடியுமா? 

“அக்கா!… அக்கா!” என்று பச்சை ஓடி வருகிறாள்.

“எல்லோரும் ஊர்கோலம் போறாக! வாங்க…எல்லாரும் அங்க நின்னு பாக்கறாங்க…!” 

நல்லகண்ணு, சொக்குவின் பையன், மருது, பாஞ்சாலி, சரசி எல்லோரும் தெருவில் ஓடுகின்றனர். அவளும் கூட ஆவலுடன் தொழிமுனைக்குச் செல்கிறாள். அவளுடைய நாயகன் செல்வதைப் பார்க்கத்தான்! 

“உப்பளத் தொழிலாளர் சங்கம் – வாழ்க! எங்களுக்கு நியாயம் வேண்டும்! எங்களை ஆலைச் சட்டத்துக்கு உட் பட்ட பதிவுத் தொழிலாளியாக்குங்கள்! நீதி கொல்லாதீர்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவேலை சமக்கூலி…’ 

கோஷங்கள் காற்றிலே மிதந்து வந்து செவிகளில் அலை அலையாக விழுகின்றன. 

பச்சை, பாஞ்சாலி நல்லகண்ணு எல்லோரும் புரியாமலே ‘ஜே’ கோஷம் போடுகின்றனர். ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் முன்னேறி வருகிறது. காவல்துறையினர் முனையில் ஆங்காங்கு முதுகில் எதையோ சுமந்து கொண்டு நிற்பதை பொன்னாச்சி பார்க்கிறாள். கடலாய் அந்தக் கூட்டர் தெருவை நெருக்கியடித்துக் கொண்டு வருகிறது. அந்தப் பெருங்களத்தில் பூத்த பல வண்ண மலர்கள் போல் வண்ணக் கொடிகள்… மிகுதியும் செவ்வண்ணக் கோலங்கள்… 

கூட்டம் தெருவைக் கடக்குமுன் என்ன நேர்ந்ததென்ற தெரியவில்லை. கோஷ அலைகள் சிதறுகின்றன. கற்கள் பாய்கின்றன. பச்சையின் நெற்றியில் ஒரு கூறிய கல் பாய்ந்து குருதிப் பொட்டிடுகிறது. 

“எலே, பச்சை, வால..எல்லாம் வாங்க… வீட்டுக்குப் போவலாம்!” என்று பொன்னாச்சி கத்துகையில் காவல் துறையினர் கண்ணீர்க் குண்டுகள் வெடிக்கின்றனர். பீதியில் நடுநடுங்கிக் கூட்டம் சிதறுகிறது. பொன்னாச்சிக்கு கண்ணீர்க்குண்டைப் பற்றித் தெரியாது. கண்ணில் எரிய எரிய நீராய் வர, குழந்தைகளை அதட்டி இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடி வருகிறாள். 

“குண்டு போடுறாவ!” 

“ஏலே, வால, போலீசு புடிச்சு அடிப்பாவ!” என்று தாய்மார் விவரம் அறியாத பிள்ளைகளை அழைத்துச் செல்கின்றனர். 

“அக்கா, மாமா கொடி புடிச்சிட்டுப் போனாவ, பாத்தி யாக்கா…?” தன் கணவனைத்தான் அவன் மாமா என்று கூறுகிறான் என்பதைப் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். 

“நிசமாலுமா! எனக்கு ஆரும் ஏதும் புரியல!” என்று கூறியவண்ணம் அவன் காயத்தில் அவள் மஞ்சளும் சுண் ணாம்பும் குழைத்து வைக்கிறாள். எரிச்சலுடன் பொருட் படுத்தாத கிளர்ச்சி அவனுக்கு. 

“குண்டு வெடிச்சாங்களே? அது ஆரையும் சாவடிக்க தாம்! ஆனா கண்ணுல தண்ணியாக்கொட்டுது.. எனக்குக் கூட அவியகூடப் போவணும்னு ஆச, ஏக்கா இழுத்திட்டு வந்திட்ட?” 

”வாணா வாணா, நீ போனா இந்தப் பொடியெல்லாம். போவும்…” 

இந்த அமர்க்களங்கள் எதுவுமே தன் செவிகளில் விழாத மாதிரியில் ஆச்சி கருமமே கண்ணாகப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள். 

நாட்கள் நகருகின்றன. 

மாமனுக்கு. இங்கு நிலைக்கவும் பொருந்தவில்லை. ஊரிலும் இருப்பாக இல்லை. தங்கபாண்டியிடம் சண்டை போட்டுத் தாலியைத் திரும்பப் பெறுகிறார். வாரி வைத்த உப்பை அவன் வண்டியிலேற்றிச் செல்கிறான். 

ராமசாமி எப்போதோ இருட்டில் கள்வனைப் போல் வருகிறான். அவசரமாகச் சோறுண்கிறான்: “வட்டுக் காரர் அளத்துல ஒரு பயல உள்ளவுடுறதில்லன்னு மாமுண்டி நிக்கியா, பனஞ்சோல அளத்துல சோல தொழியத்தெறிந்து உப்பெல்லாம் கலாமுலான்னு ஆக்கிட்டானாம். பய போலீசு. காவலுக்கு மீறி கடல்ல முக்குளிச்சிட்டே போயி மிசினத் தவராறு பண்ணிட்டேன்னா… வேலக்கிப் போவ பயந்திட்டே அல்லாம் நின்னிடுவாங்க ஆனா, வெளியாளவுட்டா, தொலஞ்சம். அதுதா கட்டுக் கோப்பா இருக்கணும். இப்ப அந்தக் கட்சி இல்ல. எல்லாரும் ஒரு கட்சி, நமக்கு ஒரு மனிசன்னு வேண்டிய தேவைங்களுக்கு உரிமை வேணும்…” 

கை கழுவ அவள். நீரெடுத்துக் கொடுக்கையில் சரட்டில் பொற்சின்னம் குலுங்குவதைப் பார்த்து விடுகிறான். 

“மாமா கொண்டாந்தா…” 

இளமையின் தாபங்கள் கட்டவிழ்கின்றன. 

“தயிரியமா இருவுள்ள; நம்ம பக்கம் நியாயம் இருக்கு தா வார….” கதவை திறந்து அவனை வெளியே செல்ல விடுவது மிகக் கடினமாக இருக்கிறது. 

எண்ணெய் விளக்கில் திரிமட்டுமே எரியத் தொடங் கும் நிலை. ஆச்சி வீட்டு முற்றத்தில் கடனுக்குப் பெண்கள் வந்து மொய்க்கின்றனர். ஆச்சி உள்ளே சென்று பெட்டி யைத் திறந்து ஐந்து, பத்து என்று எடுத்துக் கொடுக்கிறாள். 

பச்சையின் நெற்றியில் அன்று கல்பட்ட காயம் வீங்கிச் சீழ்கோத்துக் கொள்கிறது. ஓலைப்பெட்டிகளைச் சந்தை யில் கொண்டு போட்டுவிட்டு வந்து நெற்றியைப் பிடித்துக் கொண்டு உட்காருகிறான். 

ஆச்சி ஒரு ரூபாயை அவனிடம் எடுத்துக் கொடுத்து, “பெரியாசுபத்திரில போயி எதானும் மருந்து போட்டுட்டு வாலே?” என்று அனுப்புகிறாள். 

அன்று காலையில் வான் இருள மழை மணிகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பொட்பொட்டென்று குதிக்கின்றன. பிறகு களிப்பும் கும்மாளமுமாகக் கதிரவ னுடன் விளையாடிக் கொண்டு காய்ந்த மண். வெய்துயிர்க்கப் படபடவென்று பொழிகிறது. தட்டுமேட்டு அம்பாரங்களை இப்போது எந்தக் குஞ்சும் வந்து தொடலாகாது. வங்கிக்கு ஈடுகட்டிய குவைகள் கரைந்து விடக்கூடும். அவற்றை விற்று மூடைகளாக்க ஒரு ஈ காக்கை போகக்கூடாது. 

தங்கள் போராட்டம் வெற்றிப் பாதையில் செல்லும் எக்களிப்புடன் அவர்கள் பசியையும் மறந்து களிக் கின்றனர். 

சிவந்தகனி அன்று மாலை நான்கு மணியளவில் மூச்சி ரைக்க ஓடிவருகிறான். 

“பனஞ்சோல அளத்துல புது ஆள் கொண்டு லாரியோட் ள்ளார போனாவளாம். ஒம்மாப்பிள, இன்னும் மொத்த பேரும் குறுக்க விழுந்து மரிச்சாவளாம். அடிதடியாம். மாப்பிள்ளயைப் புடிச்சிட்டுப் போயிட்டாவளாம்…!’ 

அவனுக்கு மூச்சிறைக்கிறது. 

அப்போது செங்கமலத்தாச்சி பூமி வெடித்துக் கிளம்பும் கொழுந்து போல் வெளியே வருகிறாள். 

“என்னலே?” 

“பனஞ்சோல அளத்துல, லாரியோட ஆள் கொண்டு வந்திருக்கானுவ…”

அவள் முடி பிரிந்து விழுகிறது. “லாரியோட, ஆள் கொண்டு வாராகளாமா?…” 

ஒருகணம் அவள் சக்தியைத் திரட்டிக் கொள்வது போல நிச்சலனமாக நிற்கிறாள். மறுகணம் இடுப்பிலிருக்கும் சாவியைக் கையில் எடுக்கிறாள். 

“ஏட்டி, பொன்னாச்சி? நீதா…. சாவியப்புடிடீ..! எல்லாம் பதனமாப் பாத்துக்க!” என்று முற்றத்தில் போட் டிருக்கும் கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியே பாய்கிறாள். 

கண்மூடிக் கண் திறக்கும் வேகத்தில் நடக்கிறது. சாவியைப் பொன்னாச்சி பெற்றுக் கொண்டு நிமிர்வதற்குள் அவள் ஓடி விட்டாள் 

ராமசாமியின் அன்னை, என்ன நடக்கிறதென்று புரி யாமலே ஓர் தனி உலகத்திலிருந்து யாரையோ வசை பாடத் தொடங்குகிறாள். ஆனால் அவள் அந்தத் தெருவில் நீண்ட கழியுடன் ஓடும் காட்சி, வறண்ட பொட்டலில் தீக்கொழுந்து போல் ஓர் மாங்கன்று துளிர்ந்தாற் போன்று அந்நியமாகத் தெரிகிறது.அவள் ஓடும் போது அள்ளிச் செருகிய முடி அவிழ்ந்து பறக்கிறது. தெருவில் சாதாரணமாகச் செல்லும் சைகிள்காரர், குடும்பக்காரர், கடைக்காரர் எல்லோரும் சட்டென்று திரும்பி நிதானித்துப் பார்க்குமுன் அவள் தெருத் திரும்பி விடுகிறாள். 

குப்பைமேடும் முட்செடிகளுமான இடத்தின் ஒற்றை யடிப் பாதையில் அவள் புகுந்து விரைகிறாள். ஆங்காங்கு. மண்ணில் ஓரமாக விளையாடும் சிறுவர் சிறுமியர் அவளை நின்று பார்க்கின்றனர். 

“ஐயா! எல்லாம் வாரும்! எல்லாம் வாருங்க! பனஞ்சோல அளத்துல ஆளுவளக் கொண்டிட்டு வாராவளாம்! வாங்க! அளத்துக்காரவுக வாங்க!” 

அவள் உப்பளத் தொழிலாளருக்குக் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறாள். ஒரு தீப்பந்தம் புயற்காற்றுச் சூறாவளி யில் பறந்து செல்வது போல் மணல் தேரியில் கம்பும் கையுமாக ஓடுகிறாள். 

“அளத்துப் பொண்டுவள்ளம் வாங்க! வாங்கட்டீ!” டீக்கடைப் பக்கம் சில இளைஞர் நிற்கின்றனர். ஒருவன் கையில் ‘டிரான்சிஸ்டர்” வைத்துக் கொண்டிருக்கிறான். எங்கோ நடக்கும் பாரதிவிழா நிகழ்ச்சிகளை அது அஞ்சல் செய்து கொண்டிருக்கிறது. மாமா அருணாசலமும் அங்கே தான் உட்கார்ந்து இருக்கிறார். 

”அளத்துக்காரவுக வாரும்! அக்கிரமத்தத் தட்டிக் கேக்க வாரும்!” 

சிவப்புச் சேலையும் கம்புமாக யார் குரல் கொடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள்? 

அந்தக் கூட்டம் தேரிக் காட்டில் அவளைத் தொடர், விரைந்து செல்கிறது. மணலில் கால் புதைய அவள் முன்னே ஓட்டமும் நடையுமாகப் போகிறாள்… 

“ஆளுவளைக் கொண்டிட்டா வாரிய? வந்தது, வாரது ரெண்டில ஒண்ணு. பொறுத்திருக்கும் பூமி தேவியும் வெடிச்சிடுவால…! நாசகாலம் ஒங்கக்கா,எங்கக்கான்னு பாத்திடுவம்! நா கற்பு பெசகிட்டேன்னு சாபம் போட்டு மவனவிட்டு ஆத்தாள வெட்டச் சொன்னா. அந்த ஆத்தாதா ஆங்காரத் தெய்வமானா ஆங்காரத் தெய்வம்! எலே வாங்க! பனஞ்சோல அளத்துல ஆளெடுக்கிறாவளாம்! தடுக்க வாங்க!.. வாங்க…” 

அந்த ஒலியைக் காற்று மணல் வெளியெங்கும் பரப்பு அருணாசலம் அங்கேயே நிற்கிறார். உடல் புல்லரிக்கிறது. 

பாண்டியன் அவையில் நியாயம் கேட்கச் சென்ற கண்ணகியோ? பாரதியின் பாஞ்சாலி இவள் தானோ? இந்த அம்மை, இவள் யார்? ஆண்டாண்டுக் காலமாக வெறும் பாவைகளாக, பூச்சிகளாக அழுந்தி இயலாமையின் சின்னங்களாக இருந்த சக்தியின் ஆவேச எழுச்சியோ? 

“ஏய்? யாருலே ? அளத்துல தொழிலாளியளுக்கு எதிரா ஆள கொண்டு வாராகளாம்! வாங்கலே, வந்து தடுப்போம் வாங்க?” 

மாமனின் உள்ளத்திலிருந்து கிளர்ந்து வரும் ஒலி பாறை யின் இடையே பீச்சும் ஊற்றுப் போல் ஒலிக்கிறது. 

பனமரங்களும், முட்புதர்களும் நிறைந்த பரந்த மணற் காட்டில் அந்தக் கூட்டம் விரைந்து செல்கிறது. 

(முற்றும்) 

– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email
ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *